இணைய இதழ்இணைய இதழ் 53சிறுகதைகள்

குமிழிகள் – கணேஷ் குமார்

த்தியானத்திலிருந்தே கனத்த மேகாத்து மட்டும் வீசிக்கொண்டேயிருந்தது. பொழுது சாய்ந்த நேரத்தில் மேகாத்துடன் திடீரென சாரல் தூவத் தொடங்கியது. இமைப்பொழுதில் வானிலை மாற்றத்தை எதிர்பாரா என் வெற்றுடம்பு சாரல் பட்டதும் சிலிர்த்தது. வெகு நாட்களுக்குப் பிறகு மனமும் உடலும் ஒன்றிய ஒரு சிலிர்ப்பு அது. இந்தச் சிலிர்ப்பு சாதரணமானதுதான். ஆனால், அநேக நாட்களுக்குப் பின் பிறந்த ஊரில் அடைந்தது இன்னும் புல்லரிக்க வைக்கிறது. அது கிளறிவிட்ட ஞாபகக் குமிழிகள் கொஞ்ச நஞ்சமல்ல

“ஏலேய் கணேசா அந்த வெறகு கட்ட கொண்டு காய்ச்சற வீட்டுக்குள்ள வைடா தூத்தல் போடுது” என்று கத்திகொண்டே வீட்டருகே கழனியில் சேர்த்து வைத்திருக்கும் விறகுக் கட்டுகளை நோக்கிப் பாட்டி ஓடுவாள். பெறத்தாலேயே ஓடிச்சென்று என் பலத்துக்கு எட்ட மட்டும் ஒரு விறகு கட்டை தூக்கிக்கொண்டு ஒரு பக்க வசமாக வைத்தபடி ஓடி வருவேன். அத்துனையும் காய்ந்த வேலிக்குச்சிகளும் மிதமான கட்டைகளும் வைத்து வேலி நாறாலேயே இரண்டு மூன்று வரிசை போட்டு இறுகக் கட்டப்பட்டிருக்கும். முட்கள் வேறு பதமாக நீட்டியபடி இருக்கும். உடம்பில் படாதவாறு கோளாறோடுதான் பிடித்து தூக்கவேண்டும். இல்லையென்றால் உள்ளங்கையிலோ அல்லது தூக்கிச் செல்லும்போது முன்னங் கையிலோ தொடையிலோ எங்கு வேண்டுமானாலும் முட்கள் கீறி விடும்.

“ஒத்த மழய காணோம், ஒரே வெள்ள வெயிலா அடிச்சிட்டு வானோம் பருத்தி பஞ்சா வெடிச்சு கிடக்கே” என வாய்க்கும் கைக்குமாக ஆடுமேய்க்கும்போது இதையேத்தான் சொல்லி அலுத்துக் கொள்வாள்.. அப்ப ஒரு நாலஞ்சு வருசமா காடு கரை, கம்மாயில தண்ணி இல்லாம போக, ‘வயசும் தவந்துபோச்சு. காட்டு மேட்டுல அலஞ்சு திரிஞ்சு இன்னும் ஆடு மேய்க்க முடியாதுனு’ எல்லாத்தையும் வித்தவதான். இப்ப பயர் ஆபிசுல ‘பொது வேல’ பாத்துகிட்டு அவபாட்ட ஓட்டிட்டு இருக்கா. ஆபிசு காம்பவுண்டக்குள்ள இருக்குற செடி செத்தய புடுங்கி போட்டு சுத்தமா தூத்து பெறக்கி வச்சா போதும்.

வேலை நேரம் போக, அங்கு சுற்றிக் கிடக்குற காஞ்ச வேப்பங்குச்சி, வேலி வெறகு, அகத்திகட்ட என எதை எதையொ சேர்த்து செத்த நேரத்தில் லேசுல தூக்க முடியாத அளவுக்கு ஒரு கட்டு சேர்த்து விடுவாள். வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்புவர்களிடம் விறகுக்கட்டை ஏற்றிவிட்டு வீட்டில் போட்டு விடச் சொல்லுவாள். சில நேரங்களில் பயர் ஆபிஸ் வேனில் தூக்கிவிட்டு தானும் ஏறிக்கொள்வாள். இதுபோக வயக்காட்டில் முளைத்துக் கிடக்கும் வேலி மரங்களை ஆள் வைத்து வெட்டிக் காயப் போட்டு விடுவாள். காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக வீடு சேர்த்து விடுவாள்.

எனக்கு மீசை அரும்பிக் கொண்டிருந்த காலம். பெரும்பாலும் என்னைத்தான் சைக்கிளில் போய்க் கட்டிகொண்டு வரச் சொல்லுவாள். அதுவும் சைக்கிள் காடு வரை செல்லாது. ஓடைப்பாதையில் தான் நிப்பாட்டிச் செல்வேன். ஒவ்வொன்றாய் அடுக்கி கட்டுகட்டி காட்டிலிருந்து பாதைக்கு தூக்கி வருவதற்குள் நாலைந்து இடங்களிலாவது, முக்கியமாக துண்டு கொண்டுபோகாத நாட்களில் தலையில் ஒரு முறையாவது குத்திவிடும். தலையைத் தடவிக் கொடுக்க கை அனிச்சையாக, விறகுக் கட்டை கீழே போட எத்தனிக்கும் முன், கீழே போட்டால் வேலி நாரோ கயிறோ இறுக்கம் தளர்ந்து விடும். சில நேரம் போடும் வேகத்தைப் பொறுத்து கட்டு அறுந்து விறகு சிதறிவிடும். பிறகு திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பித்து மல்லுக்கட்டி தூக்கவும் வேண்டும் என்றெண்ணம் உதித்துவிடும்.

கட்டிய விறகுக் கட்டை செங்குத்தாக நிற்க வைத்து, குத்துக்காலிட்டு சும்மாட்டுத் தலையை கட்டின் நடுப்பகுதியில் முட்டக் கொடுத்து உந்தி எந்திக்கும் அதே வேளையில் சும்மாடு கீழே விழாமலும் கைகளில் முட்கள் கீச்சாதவாறும் தானாக தன் தலையில் தூக்கிவைக்கும் லாவகம் பழக்கப்பட்டவர்களுக்கே வாய்க்கும். வலியைப் பொறுத்துக்கொண்டு ‘எப்படா சைக்கிள் வருமென்று’ கால்தடம் பார்த்தபடி வாய்க்கால் வரப்புகளில் நடக்க, ஒளிந்திருந்த செந்தட்டிச் செடி காலில் பட்டுவிடும். அந்தச் செடியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் போலிருக்கும். இறுகப் பற்களை கடித்துக் கொள்வேன். கடந்து கேரியரில் வைப்பதற்குள் ”ஏந்தான் பாட்டி நம்மல இப்படி கொடும படுத்துறா” என்று தோன்றும். இருந்தும் கேரியரில் கட்டை வைத்துவிட்டு சும்மாடு துண்டை அப்படி ஒரு உதறு உதறும் போது மனமும் தலையும் கனமின்றிக் கூத்தாடும்.

கேரியரில் வைத்ததோடில்லாமல் கட்டு விழாதவாறு கொச்சைக் கயிற்றையோ நூல்க் கயிற்றையோ வைத்துக் கட்ட வேண்டும். ஏறி சீட்டில் அமர்ந்து செல்லலாமென்றால் விறகின் முட்கள் நீட்டியபடி காத்துக்கொண்டிருக்கும். ஏற்றவாறு நுனி சீட்டில் உட்கார்ந்தபடியோ, பெரிய கெட்டு என்றால் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள வீட்டிற்கு சைக்கிளை உருட்டியபடியோ கொண்டுவந்து ஒரு வழியாக கழனியில் சேர்த்து விடுவேன்.

இப்படி கொஞ்ச கொஞ்சமாக கழனியில் சேர்த்தது, வைத்தது போக அடுப்பாங்கரைக்குள் ஆள் உயரத்துக்கு விறகை அடுக்கி வைத்திருப்பாள். ஆனால் மழைவரும்போது மட்டும் விறகே இல்லாதது போல வீட்டில் யாருடைய பேரையாவது சொல்லிக் கொண்டே கழனிக்கு ஓடுவாள். அந்தப் பெயர்க்காரர்கள் அவள் பின்னாலேயே ஓடுவார்கள்.

இதைக் கவனித்துக் கொண்டிருக்கும் தாத்தா “அந்தானக்கி வெள்ளம் வருதாக்கும், அதியப்பிடிச்ச முண்ட இப்போ எதுக்கு ஒரு சொம வெறக வீட்டுக்குள்ள வைய்க்கா… அவள வச்சி எரிக்கவா.?” என்று சத்தம்போட்டு வைவார்.

“வச்சு எரிச்சா பெறவு ஒங்களுக்கு எவ கஞ்சி ஊத்துவா” என்று தன் இருப்பின் நிதர்சனத்தை போகிறபோக்கில் சொல்லிவிட்டுச் செல்வாள் பாட்டி.

ஒரு வகையில் அதுவும் உண்மைதான். பாட்டிக்குப் பிறகு கஞ்சி ஊற்றுவதற்கு ஆள் இருந்தாலும், தாத்தாவின் பின்பலம் பாட்டிதான். அது இருவருக்கும் தெரியும். காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

பாட்டி வாய்த்தாட்டிக்கான ஆள். தாத்தா பேச்சுல அலம்பல் சலம்பல் வச்சுக்க மாட்டார். காடு கரைல மாடா உழப்பாறேத் தவிர பாட்டியோட பேச்சுத் தாற்பரியம் தாத்தாவுக்கு வராது. ஆக வேண்டிய இடத்துல அதுக்குத் தக்கன பேசுவா. ஆகாத இடத்துல, முகம் கூட பாக்காம குந்தக்காடா வஞ்சி விட்ருவா. சமயத்துல எதுக்கும் துணிஞ்சு நிப்பா.

ஒருமுற தாத்தா வயக்காட்டு தரிசுல அறஞ்ச மொளக்குச்சில மாட்டக்கட்டி மேயவிட்டுட்டு, மஞ்சனத்தி மர நிழல்ல செத்த கண்ணசந்துட்டாரு. எந்திரிச்சுப் பாத்தா மொளக்குச்சி உருவிக்கெடக்கு. மாட்டக் காணும். பின்னாலருந்து ”ஏய்ய்.. ஏய்.. போ அங்குட்டு”.. என்று அரட்டல் சத்தம் கேட்க, எழுந்தபாட்டில் ஓடினார். மிளகாய்க்கு தண்ணி பாய்ச்சிக் கொண்டிருந்த காட்டுக் காரர், தன் காட்டில் பொழியோரம் நாத்தை மேய்ந்து கொண்டிருந்த மாட்டை விரட்ட, அரண்ட மாடு மிளாகாய்ச் செடிக்குள் ஓடியது. அவரும் பின்னால் விரட்டிக் கொண்டே ஓட, செடியை மிதித்து ஒடித்து சகதிக் கால்களோடு காட்டைத் தொழி அடித்துக் கொண்டிருந்தது. கோபமான காட்டுக்காரர் கீழே கிடந்த கம்பை எடுத்து மாட்டின் முதுகில் ரெண்டு வப்பு வைத்தார்.  தாத்தா இதைப் பார்த்து விடுகிறார். மாடு ’ம்ம்மா’.. என்று அடித்தொண்டையிலிருந்து கத்த தாத்தா வெலவெலத்துப் போனார். மாடு திக்குதிச தெரியாமல் வடக்காமல் ஓடிக் கொண்டிருந்தது.

”ஏலேய் அருதலி மாட்டை எதுக்கு அந்த அடி அடிக்க… கோட்டி பிடிச்சாப்ல” என்று வந்ததும் காட்டுக்காரனை வைதார்.

”நீர்தான் மாட்டுக்காரரா’ என்று எகத்தாளமாக கேட்டுவிட்டு ’இந்த வயசுல மாட்டச் சமாளிக்க முடியலன வித்துத் தொலைய வேண்டிதான. எதுக்கு அடுத்தவன் வெள்ளாமைல மேய விடனும்?”.

”இந்தா பாருடா இந்த அகராதிப் பேச்சுலாம் நம்மட்ட கூடாது. மாடு அத்துட்டு வந்தா மாட்டக் கட்டிவைய்யி இல்லனா மேஞ்சதுக்கு அவதாரம் போட்டுக்கோ, மாட்ட அடிக்குற சோலிலாம் வச்சிட்ட ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேன்”.

”ஓ.. இல்லன என்ன செய்வீரோ?”

“என்ன செய்வாக மாட்ட அடிச்ச கணக்கா உன்ன அடிக்க வேண்டிதான்”.

“ஓ.. அப்படியா.. சரி வாரும் போட்டு பாத்துருவோம்” என்றவன் மம்பட்டியை கீழே விட்டுவிட்டு சாரத்தை தொடைக்கு ஏத்திக் கட்டினான்.

தாத்தா முன் வந்து நின்றவன் ”ஒம்மர அடிச்சியெடுத்து இந்த மொளகா காட்டுக்குள்ள போட்டா ஏன்னு கேக்க நாதியில்ல.. கெழட்டுக் கழுத என்ன அடிக்க வாரீறாக்கும்.. போயா வெளக்கென்ன”.. என்றவன் பாத்தி நிறைந்ததைப் பார்த்து ஓடினான்.

அவனின் இந்தப் பதிலை தாத்தா எதிர் பார்க்கவில்லை. ’நாதியில்ல’ என்ற வார்த்தை தாத்தாவின் நெஞ்சில் ஈக்கியாய் குத்தியது. ஒரு நிமிடம் ஆள் தளதளத்துப் போனார். அவன் குனிந்தபடி அடுத்த பாத்தியின் அடப்பை எடுத்துவிட்டுக் கொண்டிருந்தான். ஓடிப்போய் அவன்மீது தாவி குப்புறத் தள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் முடியாது. உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தார். தன் வயதின் இயலாமையால் அங்கேயே நின்று கொண்டிருந்தவர், மாட்டைத் தேடிப் புறப்பட்டார். குனிந்திருந்தவன் எழுந்து பார்க்க, தாத்தா வடக்கு நோக்கி வலது காலைத் தாங்கியபடி நடந்து போய்க் கொண்டிருந்தார்.

பாட்டி பயர் ஆவுசிலிருந்து வீடு நுழைந்ததும் நார்க்கட்டிலில் தலையைத் தொங்கப்போட்டு உட்கார்ந்திருந்தவரைக் கவனித்தாள். பின் குளித்துவிட்டு வந்தவள் ”எதுக்கு இப்படி ஒக்காந்திருக்கீக? அடஞ்சதும் பொழுதுமா”.. பதிலில்லை.

குனிந்தபடி முசுமுசுவென்று அழத் தொடங்கினார். பாட்டியின் முகம் மாறியது. எதற்கும் லேசில் கலங்காதவள் புருசன் அழுததும் பதறிப் போனாள். என்னாயிப் போச்சு? என்றவள் முகத்தைப் பார்த்தபடி கீழே அமர்ந்தாள்.

வார்த்தையை முழுங்கி முழுங்கி ’என்னப் பாத்து ஒரு பய, கெழட்டுப் பய ஒன்ன அடிச்சிபோட்டா கேக்க நாதியில்லன்ட்டான்’.

“அது எந்தச் சிறுக்கி மயன்”. ”அவன அங்கனையே நாக்கப் புடுங்க கேக்கவா. இங்க வந்து பச்சப்புள்ளையாட்டம் மூக்கச் சிந்துனா சரியாப் போயிருமா”. துண்டால் கண்ணைத் துடைத்தவர் ”பரமசிவம் காட்ட பொறுப்புக்கு புடிச்சிருக்காம்ல தெக்காட்டுக்காரன்” என்று ஆரம்பித்து நடந்ததைச் சொல்லி முடித்தார் தாத்தா. எழுந்தவள் முந்தியை இடுப்பில் சொருகினாள்.

தாத்தா ”நீ பேயாம கெட ஒன்னுஞ் செய்ய வேண்டாம்”, என்று கையை இழுக்கிறார். ”பேசாம கிடையா..? அந்தப்பயல அங்கனயே ஈரக்கொலைய வகுறவா.. சும்மா விடவா” என்று விறு விறுவென்று வீட்டை விட்டுப் புறப்பட்டாள்.

காட்டுக்காரன் தண்ணீர் பாய்ச்சி விட்டு கைகால்களை கழுவிக் கொண்டிருந்தான். போனதும், ”ஏண்டா சிறிக்கிவுள்ள” என்றவள் கையில் வைத்திருந்த பருத்திமாரைக் கொண்டு நாலு இழுப்பு இழுக்க, தொட்டித் திண்டிலிருந்து தாவிக் குதித்தான். இதை எதிர்பாராதவன்  தன்னால பதறி ‘திட்டுகட்டுப்’ போயிட்டான்’.

”இன்னும் ஏழு மாடுனாலும் சமாளிப்பாரு.. என் புருசன ஏச்சுப் பேச நீ யாருடா?”..

சற்று சுதாரித்த அவன் கீழே கிடந்த அகத்திக் கட்டையைத் தூக்க, ”உனக்கு ஈரக் கொல ரெண்டுனா? கிட்ட வாடா”.. என்று இடுப்பில் சொருகியிருந்த தொரட்டிக் கத்தியை எடுத்தாள். அவன் அப்படியே நின்றான்.

”மாட்ட அத்தத்தண்டி அடி அடிச்சிருக்க, அதுக்கே உன்ன இன்னும் ரெண்டு இழுப்பு இழுத்துருக்கனும்”.

“என்னடா சம்சாரித்தனம் பாக்குறா. என்னதான் வெள்ளாமய மேஞ்சாலும் நல்ல சம்சாரின்னா மாட்ட அடிக்க மாட்டான். ரெண்டு நாளானாலும் அவன் வீட்ல கெட்டி கெடக்கும்.  அவதாரத்த குடுத்துட்டு மாட்ட அவுத்துட்டு போகச் சொல்லுவான். சீமைல இல்லாத சம்சாரியாக்கும் நீயி”.

”இதே கணக்கா உங்க தோட்டத்துல”

“உன் தொண்டைய மூட்ரா எடுவட்ட பயலே”. சொல்லிக்கிருக்கேன். திரும்ப அதயே பேசுற. நாதில்லன்னயாம்.. உன்ன சங்குலயே ரெண்டு கொத்து கொத்துனா தெரியும். யாருக்கு நாதில்லனு”. பதில் பேச முடியாமல் பாட்டியின் காளியாட்டத்தை பார்த்தபடி நின்றான்.

“அசுலூர்க்காரனா போயிட்ட.. வந்து தண்ணி பாச்சினமா போனாமானு இரு. மாட்ட அடிக்கிற சோலிய இன்னையோட விட்ரு. எவனும் உங்காட்ல விடனுனு மேய விடமாட்டான்”.. என்றவள் பருத்திமாரை கீழே போட்டுவிட்டு தொரட்டியை இடுப்பில் சொருகியபடி நடையைக் கட்டினாள். வேகுவேகுவென்று பாட்டி தன் வயக்காட்டை நோக்கிப் போவதையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

வயக்காட்டின் மேக்கரையிலிருந்த பருத்த வேலிமரத் தண்டில் தொரட்டியால் ஒரு வெட்டுப் போட்டாள். வெட்டுப்பட்டு வாய் பிளந்த வேலி நாரை உறித்தாள். ரெண்டு வரிசை போட்டுக் கட்டுமளவுக்கு நாரை உறித்துச் சேர்த்துக் கொண்டாள்.

வயக் காட்டிலிருந்து திரும்பியவள் கழனியில் ’மொந்தென்று’ ஒரு விறகு கட்டை போட்டு விட்டு வீடு நுழைந்தாள். தாத்தா கட்டிலில் கண்ணயர்ந்திருந்தார். எழுப்பி விட்டவள் ”அஞ்சாறு கஞ்ச குடிச்சிட்டுப் படுங்க” என்றாள்.

இதையும் பாட்டிதான் சொன்னாள். மின்சாரம் போன ஒரு மழைக்கால இரவில், மடியில் படுத்தபடி கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படி தாத்தாவிற்காக தான்பட்ட பாடுகளை அடிக்கடிச் சொல்லுவாள். அந்த உண்மை தெரிந்தே, தாத்தா பாட்டியை முந்திக் கொண்டு போய்ச் சேர்ந்தார்.

தாத்தா செத்து மூனாம் வருசம் இடியும் மழையும் காத்துமா ஊரே அல்லோலப் பட்டுப் போச்சு. அடிச்சப் பேய்க் காத்துல ஊரச் சுத்தி அநேய மரத்த சாச்சிப் போட்டுச்சு. தெருவுல கிடந்த பண்ட பாத்திரம், வீட்டு மேற்கூர, தகரக் கொட்டகனு ஒன்னு விடாம தூக்கி எறிஞ்சிருச்சு. யாரோ வந்து சொல்ல, மேலக்காட்டுக்கு ஓடினாள் பாட்டி. மேலப்பிஞ்சயின் கெணத்து மேட்டில் நங்கூரமாய் நின்று கொண்டிருந்த வேப்ப மரம் கிணற்றுக்குள் தலை கவிழ்ந்து கிடந்தது.

“இத்தப் பெருசு மரத்த சாச்சிப் புடுச்சே பாழாப்போன மழ” – பட்டும் படாமலும் ஒற்றைத் தூர் மட்டும் மண்ணைக் கவ்வியபடி சாய்ந்து கிடக்க, மரத்தை சுற்றிச் சுற்றி வந்தாள் பாட்டி. மரத்தின் ஒரு பக்கக் கிளைகள் கருகிக் கிடந்தன. மரத்தில் இடியும் விழுந்திருக்கிறது. “எல்லாம் ஏம்மரத்துல தான் வந்து விழனுமா”.. பாட்டியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அரை நூற்றாண்டுத் தொன்மமொன்று அமைதியாய் வீழ்ந்து கிடந்தது. அந்த முழுக்கிணற்றுக்கும் மூடாக்கு போட்டாற் போல மூடிக்கிடந்தது அந்த மரம். ஒரு காலத்தில் தாத்தா கமலை பூட்டி தண்ணீர் பாய்ச்சிய கிணறு. இப்போது கிணற்றைச் சுற்றி வேலி முளைத்துக் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

அறுந்த ஆணி வேர்களின் ஈனக் குரல் பாட்டியின் அடி நெஞ்சை அனத்திக்கொண்டிருக்க, மரத்தடியில் கிடந்த சப்பட்டைக் கல்லில் கூடிழந்த பறவையாய் அமர்ந்தாள். மரத்திலிருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. வேப்பங்காய்கள் கொத்துக் கொத்தாக தொங்கிக் கொண்டிருந்தன.

தான் கட்டிக் கொடுக்கப்பட்டு ஊருக்கு வந்தபோது மரம் ஆளுயரத்திற்கு இருந்ததாகச் சொல்வாள். ’நா வச்ச மரம்.. நா வச்ச மரம்னு‘ ’அடிக்கொரு தடவ சொல்லுவாரு உங்க தாத்தா’.. நா சரி சாமினு செனந்து விட்ருவேன்’. இன்னும் அந்த இளவட்டக் குரல் தன் இருதயத்தில் நிரம்பிக் கிடக்கிறது என்பாள். மரத்தையே பார்த்துக் கொண்டிருந்த பாட்டியின் கண்கள் கசிந்து புரையோடியிருந்தன.

மூனு நாலு ஆட்கள் சேந்து கட்டுமளவுக்கு பெருத்த மரம். தாத்தா போனபின் அவரின் மிச்சமாகத்தான் அதைப் பார்த்தாள். பாட்டியும் மரமும் அடிக்கடி சங்கேதித்துக் கொண்டார்கள். இந்த மரத்தடில ’நாங்க பேசாத பேச்சா’ என்று அடிக்கடி பூரித்துக் கொள்வாள். வெள்ளாமை நாட்களில் இந்த மரத்தில் தொட்டில் கட்டித்தான் அத்துனை பேரையும் வளர்த்தேன் என்பாள்.

’அந்த மேக் கொப்புலதான் ஒங்கப்பனுக்கு தொட்டி கட்டுவேன்’. ’இந்த கெழக்க போற கொப்பு இருக்கே, கொல ஒடிக்குறேன்னு உங்க தாத்தா ஒரு வட்டம் தவறி விழுந்தாரு’ என மரத்தின் ஒவ்வொரு கிளைக்கும் சொல்வதற்கு அவளிடம் கதை உண்டு.

மறு நாள் காலை நாலைந்து ஆட்கள், படுத்திருந்த மரத்திலேறி ஆட்டுக்கு கொலை ஒடித்துக் கொண்டிருந்தார்கள். வேண்டுமளவுக்கு ஒடித்து விட்டபின் மரம் குச்சிகளாய் நீட்டிக் கொண்டிருந்தது. வேப்பங்காய்களும் இலைகளும் மரத்தைச் சுற்றிச் சிதறிக் கிடந்தன.

ஒரு வாரம் கழித்து, மஞ்சளோடைப் பட்டி ஆட்கள் மூன்று பேர் காலை ஏழு மணிக்கே பிஞ்சைக்கு வந்திருந்தார்கள். பாட்டியும் வந்து சேர்ந்தாள். கூலியாட்கள் மரத்தை வெட்ட ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு கொப்பாய் வெட்டி வீசினார்கள். ’தான் வளர்த்த பிள்ளையை தன் கண்முன்னே பரிகொடுக்கும் அவலம் அங்கு நிறைவேறிக் கொண்டிருந்தது’. பாட்டியின் அத்தனை ஆண்டுகால நினைவுகளையும் துண்டு துண்டாய் வெட்டியெறிந்து கொண்டிருந்தார்கள். அரிவாளால் முடியாததை ரம்பம் கொண்டு அறுத்தார்கள். தான் வாழும் காலத்திலேயே அதன் முடிவு கண்டது பாட்டிக்கு ரணங்களைக் கொடுத்தது. கடைசியாக மரத்தின் அடித்தண்டை அறுத்துக் கொண்டிருந்தார்கள், பாட்டி எழுந்து போய் விட்டாள். கவ்விக் கொண்டிருந்த தூரைத் தோண்டி முடிப்பதற்கும் பாட்டி திரும்பி வந்ததற்கும் சரியாக இருந்தது.

ஒரு மரம் இருந்தற்கான சுவடே இல்லாமல் துடைத்தெடுக்கப்பட்டிருந்தது. பின், கிணற்றைச் சுற்றிலுமிருந்த வேலியையும் வெட்டிக் குமித்தார்கள். மறுநாள் டக்கர் (டிராக்டர்) வரவழைத்து, மொத்த வேப்பம் விறகுகளையும், வேலி விறகுகளையும் வீடு கொண்டு வந்து சேர்த்தாள். தற்போது  கழனியில் கூடுதலாக ஒரு வருடத்திற்குத் தேவையான விறகுகள் சேர்ந்து கொண்டன.

அந்த வருடக் கடைசியிலேயே பாட்டி படுத்த படுக்கையானாள். கடைசிக் கால படுக்கையிலிருக்கும் மனிதருக்குத்தான் தோண்டி எடுக்கும் புதையலாய் தொலைந்து போன அத்தனை நினைவுகளும் அடி மனதிலிருந்து மேலெழும்பும். ஊற்றாய் ஊறி நிரம்பி வழியும். மனம் தன் பேச்சு கேளாது.

மரத்தின் மீதான ஏக்கமும் அதன் ஞாபகங்களும் அவளை மேலும் அமுக்கின. மழை வெறித்த, ஒரு மத்தியான வேளையில் பாட்டி கட்டிலிலே விறைத்துக் கிடந்தாள். தாத்தா சொன்னது போல அவள் சேர்த்து வைத்திருந்த விறகை வைத்துதான் அன்று அவளை எரித்தார்கள். காய்ந்த பரும் வேப்பங் கட்டைகளை படுக்கை மேடை போல அடுக்கிவைத்திருந்தார்கள். அதைச் சுற்றி வேலி விறகையும் வரிசையாகச் சாய்த்து நிப்பாட்டிருந்தார்கள். மேடையில் பாட்டியைக் கிடத்தினார்கள். ”ஏய் அந்த மொங்காங் கட்டைய நெஞ்சில வையப்பா” என்று குரல் கேட்டது. இரண்டு பேர் தூக்கி வைத்தார்கள். அரைகுறைக்கு வேலிக் குச்சிகளையும் சிரட்டையும் அடுக்கினார்கள். பாட்டி விறகுகளால் மூடப்பட்டாள். மண்ணெண்ணெயை விறகெல்லாம் பரவலாக ஊற்றினார்கள். சூடம் வைக்கப்பட்டது. அப்பா கொள்ளியிட நெருப்பு பற்றிக் கொண்டது. பரவிய நெருப்பு வேப்பங்கட்டைகளில் பிடித்து மடமடவென எறியத் தொடங்கியது. விறகுகளுக்கு நடுவில் படுத்திருந்த பாட்டி எந்தச் சலனமுமில்லாமல் எறிந்து கொண்டிருந்தாள். காற்றுக்கு நெருப்பு இரைச்சல் போட்டுக் கொண்டிருந்தது. தான் சேர்த்து வைத்த, விறகோடு விறகாக பாட்டி பொசுங்கிக் கொண்டிருந்தாள். அங்கிருந்து திரும்பிப் பாராமல் நடந்தேன்.

வீசிய ஈரக்காற்றால் உடல் கூதலடிக்க, அந்நினைவிலிருந்து வெளி வந்தேன். ஏழு மணிக்கெல்லாம் கிய்யென்று இருட்டிக் கொண்டது. இன்னும் சாரல் வெறிப்பாதாயில்லை.

பொதுவாக அடைமழைக் காலங்களிலோ அல்லது குற்றால சீசனிலோதான் இந்த மாறியான சாரல் அடிக்கும். அதுவும் சித்திரை கடைசியிலேயே சாரக்கெட்டியிருப்பது இன்னும் அபூர்வம்.

ஒன்றிரண்டு ஆட்கள் மட்டும் கையில் குடையுடன் தெருவிளக்கு வெளிச்சத்தில் தட்டுப்பட்டுக் கொண்டிருந்தார்கள். யாரும் எதற்காகவும் ஓடவில்லை. முக்கியமாக அவர்களுக்கு விறகு பற்றிய கவலையேயில்லை.

அப்பொதல்லாம் மழை வந்தாலே விறகு எடுத்து வைப்பதுதான் மண்டையில் முதலில் உரைக்கும். விறகைப் பத்திரப்படுத்தி வைப்பதே பெரிய பாடாய்ப்படும். இப்போதெல்லாம் எங்கள் வீட்டில் விறகும் இல்லை. விறகு நனைவது பற்றி கவலை கொள்ள பாட்டியும் இல்லை. ஊரே சிலிண்டருக்கு மாறியிருந்த போதும் கடைசி வரை வம்படியாய் விறகைக் கட்டி அழுதாள்.

இது போன்ற இன்னும் எத்தனை எத்தனையோ அமிழ்ந்து போன நினைப்புகளை அந்தச் சாரக் காத்து மெல்ல வருடி வருடி மேக்கிணறு தண்ணீர் போல் என்னை ததும்ப விட்டுக் கொண்டிருந்தது.

விறகுகளால் நிரம்பிக் கிடந்த கழனி இன்று தும்பையும் துத்தியுமாக மண்டிக் கிடக்கின்றது.

தூறல் சற்று குறைந்தது போலத் தெரிகிறது. பாட்டி இருந்திருந்தா “சாரக்கெட்டிகிட்டு கழுத விடுதான்னு பாரேன்” என்பாள்.

தூத்தலின் சத்தத்தோடு பாட்டியின் குரலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

******

ganeshmkumar2@gmail.com

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

4 Comments

  1. ஆறாவது முறையாக வாசித்து முடிக்கும் போது ஜன்னல் வழியே வீசிய ஈர காத்தோடு ” ஏலேய் கணேசா” என்ற குரலும் கேட்டதுபோல் இருந்தது..
    ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது தூத்தல் போட்டு கொண்டிருந்தது..
    விறகு பற்றிய கவலை இல்லை தான்.. ஆனாலும் ஒரு கட்டு விறகின் கனம் கனக்கிறது ஒவ்வொரு குமிழியும்..
    இருள் சூழ்ந்த நேரம்.. பிறந்த மண் வாசனை.. ஆழ் மனதின் அசை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close