சிறுகதைகள்
Trending

குளிர்

கி.ச.திலீபன்

குளிர்

பரிட்சயமில்லாத இந்த நகரத்தில் இப்படியொரு சோதனை முயற்சியில் நான் இறங்கியிருக்கக் கூடாது தான். இந்த உண்மை என் புத்திக்கு எட்டுவதற்குள் எனது அறை வெகு தொலைவு சென்று விட்டது. மொபைலை உசுப்பினேன். பளீரென ஒளிர்ந்த திரையில் தட்பவெப்பநிலை 14 டிகிரி எனக் காண்பித்ததும் உடலின் உதறல் மேலும் கூடியது. பற்கள் படபடக்க கைகளைக் குறுக்காக மடித்து இரண்டு அக்குள்களிலும் புதைத்துக் கொண்டேன். மெலிதான சட்டைத்துணியின் வழியே ஊடுருவி தேகத்தைச் சிலிர்க்க வைத்தது குளிர். அவ்வப்போது கைகளைத் தேய்த்துச் சூடேற்றினாலும் உடலைச் சமநிலைக்குக் கொண்டு வர முடியவில்லை. அணிந்திருக்கா விட்டாலும் ஒப்புக்காவது ஜெர்கினை எடுத்து வந்திருக்க வேண்டும்.

அலுவல் நிமித்தமாக இன்று காலையில் தான் கொல்கத்தாவுக்கு வந்தேன். மதியம் மூன்று மணி வரையிலும் மண்டல அலுவலகத்தின் கான்ஃப்ரன்ஸ் ஹாலில் எங்கள் நிறுவனத்தின் வியாபார வெற்றிகளை நோக்கிய வியூகங்களையும், செயல்திட்டங்களையும் வகுத்துக் கொண்டிருந்தோம். குளிரூட்டப்பட்ட அந்த அறையில் நேரம் கூடக்கூட சலிப்பு கூடியது. அவ்வப்போது எழுந்த கொட்டாவியை அடக்குவதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது. எங்களின் செயல்திட்ட அலுவலர் ஒரு வழியாக கான்ஃபிரன்ஸை நிறைவுக்குக் கொண்டு வந்ததும் மனதார அவருக்கு நன்றி சொன்னேன். எனக்கென பதிவு செய்யப்பட்டிருந்த விடுதி அறைக்கு வந்ததும் கட்டிலில் குறுக்காக விழுந்தேன். அநேகமாக 2 மணிநேரம் தூங்கியிருப்பேன் என நினைக்கிறேன். எழுந்து பார்த்த போது மணி 6-ஐத் தாண்டியிருந்தது. விடிந்து விட்டதைப் போலான எண்ணப் பிசகு.

விலகியிருந்த சன்னல் திரை வழியாகப் பார்த்த போது முழுவதுமாக இருட்டியிருந்தது. நாளை மாலை மீண்டும் சென்னைக்குப் பறந்தாக வேண்டும். இன்றைய இரவு மட்டுமே கொல்கத்தாவில் எனக்கானது என்கிற நிச்சயத்தோடு இரவு உலாவுக்குத் தயாரானேன். எல்லாவற்றிலும் அனுபவம் தேட வேண்டும் என்கிற மிகையுணர்ச்சியின் வெளிப்பாடாக இந்தக் குளிரைத் திகட்டத் திகட்டப் பருக வேண்டி ஜெர்க்கினை அணியாமலே விடுதியிலிருந்து கிளம்பினேன். பிரதான சாலையின் நடைமேடையில் எதிர்கண்ட மனிதர்களெல்லாம் ஜெர்க்கின், ஸ்கார்ஃப் அணிந்தபடியும் வெகு சிலர் கையுறையும் சேர்த்து அணிந்தபடியும் நடமாடிக் கொண்டிருந்தனர். வெறும் சட்டையணிந்து வரும் என்னை அவர்கள் விசித்திரமாகப் பார்த்திருக்கக் கூடும். இன்னும் சிலர் ஆச்சரியமாகப் பார்த்திருக்கலாம் என்கிற மிதப்பு என்னுள் உருவானது. புதிய அனுபவத்தை எதிர்கொள்கிற பரவசமெல்லாம் கொஞ்ச நேரத்திலேயே கண்காணாத தொலைவுக்குச் சென்று விட்டது. மூச்சுமுட்டும்படி குளிர் என்னை இறுக்கி அணைத்தது. ஒவ்வாத தீண்டலென அதனை விலக்க நினைத்தும் முடியவில்லை. ஜெர்க்கின் அணியாமல் வந்திருக்கக் கூடாது. இனி ஒருபோதும் இது போன்ற விபரீத விளையாட்டுகளுக்குள் இறங்கக் கூடாது என உறுதி கொண்டேன்.

திரும்ப அறைக்குச் சென்று ஜெர்க்கினை எடுத்து வருவது பற்றிய யோசனைக்குள் செல்வதற்குக் கூட சலிப்பாக இருந்தது. விறைத்துச் செத்துப்போகிற அளவுக்கொன்றும் குளிரில்லை என என்னை நானே தேற்றிக் கொண்டு நடந்தேன். விசாரிப்புகளின் வழியே எஸ்பிளேனட் மெட்ரோ ரயில் நிலையத்தை வந்தடைந்தேன். விமானநிலையம் அமைக்கப்பட்டிருக்கும் பகுதி என்பதால் டம்டம் என்கிற பெயர் மட்டும் பரிட்சயமாகியிருந்தது. ஆகவே டம்டம்க்கு டிக்கெட் வாங்கினேன். கருப்பு நிறத்தில் வட்ட வடிவிலான ப்ளாஸ்டிக் காயினைக் கொடுத்தார்கள். திரையரங்கக் கேண்டீனில் டீக்கென வழங்கப்படும் டோக்கனை நினைவுபடுத்தும் விதமாய் இருந்த அந்தக் காயினை வைத்ததும் எனது முதல் மெட்ரோ பயணத்துக்கான வாசல் திறந்தது.

நடைமேடையில் ஓரளவு கூட்டம் நிறைந்திருந்தது. அன்றைய நாளின் அலுவலகச் சலிப்பையும், கூடடைதல் நிமித்தமான சிறு பரவசத்தையும் தாங்கிய முகங்களோடு நானும் ரயிலின் வரவுக்காகக் காத்து நின்றேன். அதைக் காத்திருப்பு என்று கூட சொல்ல முடியாதபடி அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ரயில், தளத்துக்கு வந்து நின்றது. தானியங்கிக் கதவு திறந்ததும் இறங்குபவர்களுக்கு வழி விட்ட பிறகு ஏறி பிடிமானக் கம்பியைப் பற்றியபடி நின்றேன். இருக்கைகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டிந்தாலும் நெருக்கியடித்தபடி நின்று போகுமளவு கூட்டம் இல்லை என்பது ஆறுதலைத் தந்தது. கதவு மூடப்பட்டு, ரயில் விரையத் தொடங்கிய போது குளிரூட்டப்பட்ட அப்பெட்டியினுள் பார்வையைச் சுழல விட்டேன். சட்டென மின்னல் வெட்டிச் சென்றது போல அக்கணத்தின் அதிர்வு என் குருதியோட்டத்தின் வேகத்தைக் கூட்டியது. எதிர்பார்த்திராத அத்தருணத்தின் அதிர்ச்சியிலிருந்து ‘அவள் தானா இது?’ என்கிற வினா மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டேயிருந்தது. பெருமூச்செறிந்ததற்குப் பிற்பாடு பார்வையைக் கூர்மையாக்கி மீண்டும் அவளைப் பார்த்தேன். இளஞ்சிவப்பு நிறத்திலான ஜெர்க்கினும், கருப்புநிற கால்சராயும் அணிந்திருந்த அவளது இடது தோள்பட்டையில் கருமை படர்ந்த ரெக்ஸின் கைப்பை தொங்கிக் கொண்டிருந்தது. இடக்கையில் கம்பியைப் பிடித்தபடி குனிந்தபடியே தன் கவனம் முழுவதையும் வலது கையில் வைத்திருக்கும் செல்போனிடம் ஒப்புக் கொடுத்திருந்தாள். அவளது முகத்தை கூர்நோக்கினேன். இளமையின் பொலிவு சற்று மங்கிப் போன நிலையில் தோற்றம் தந்த அவள் நிவேதாவே தான். இவள் இங்கு எப்படி? எனக்கு இது தற்செயலானதாகத் தோன்றவில்லை. யாரோ என் கதையை முன் கூட்டியே எழுதி அதன்படி என்னை இயக்கிக் கொண்டிருப்பது போலான பிரம்மை. அந்நியப்பட்ட ஓர் நகரில் பரிட்சயமான முகத்தை யதேர்ச்சையாகக் காண நேரும்போது ஏற்படும் பரவசம் கூட அப்போது எனக்கு இல்லை. மனதின் அடியாழத்தில் இன்னமும் அந்த உறுத்தல் கொஞ்சம் இருக்கவே செய்தது. ஆறு ஆண்டுகளாகி விட்ட போதிலும் அந்நிகழ்வும், அதன் தொடர்ச்சியாய் எழுந்திட்ட பதைபதைப்பும், மீள முடியாத குற்ற உணர்வும் இன்னும் என்னை விட்டு முழுமையாக அகன்றிருக்கவில்லை. நினைவின் அடுக்குகளில் துருவேறியதைப் போல் அதன் தாரைகள் நீங்காமல் இருந்தன.

நிவேதா, நான் முன்பு பணியாற்றிய அலுவலகத்தில் ஹெச்.ஆர் பிரிவில் வேலை பார்த்தவள். சிற்பத்தின் நேர்த்தியை ஒத்திருந்த அவளது தேக வளைவுகளின்பால் ஈர்ப்பு கொண்ட ஊழியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். கச்சிதமான பிடிப்போடு தைக்கப்பட்டிருக்கும் அவளது சுடிதார் அந்த நெருப்பினை பரவலாக்கும் ஊதுகுழலாய் இருந்தது. அவளது அணுக்கத்தைத் தேடிப் பெறும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் ஒரு கட்டத்தில் சலித்து ஓய்ந்து விட்டனர். அவளுக்கு புற சூழல் குறித்தான ஆழ்ந்த அவதானிப்பு இருந்தது. அதைக் கொண்டு அவ்வளவு எளிதில் அவளை நெருங்கி விட முடியாதபடியான ஒரு சுவற்றை எழுப்பியிருந்தாள். ஆரம்பத்தில் அவளை நான் பொருட்படுத்திக் கொண்டதே இல்லை. அலுவல் நிமித்தமாக மட்டுமே அவளோடு உரையாடியிருக்கிறேன். பக்கத்து இருக்கைக்காரன் பிரவீன் பெண்களைப் பற்றிப் பேசுவதில் தீவிர ஈடுபாடு காட்டுவான். சராசரி ஆண் மனம் கொள்ளும் வெற்றுப்பரவசம் அது. எந்தப் பெண்களை பற்றிப் பேசினாலும் இறுதியில் நிவேதாவிடம் வந்து தான் நிறைவு செய்வான். நிவேதாவைப் பற்றிய உருவகத்தை அவன் தான் எனக்குள் ஏற்படுத்தினான்.

தற்செயலாக ஒரு நாள் தேநீர் இடைவேளையில் அவளுடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றது. ஓய்வு வேளைகளில் அவள் புத்தக வாசிப்பையே தனக்குத் துணையாக்கிக் கொள்கிறாள் என்பதை அந்த உரையாடல் வழியாக அறிந்தேன். சிட்னி ஷெல்டன், அகதா க்றிஸ்டி ஆகியோரது கதைகளைப் பற்றிக் கதைத்தாள்.அவள் வழியாகவே நான் அவர்களை அறிந்தேன். எனது கோரிக்கையின் நிமித்தம் அவள் வாசித்த நூல்களை எனக்குப் படிக்கக் கொடுத்தாள். அதற்கு கைம்மாறு செய்யும் விதமாக எனது அலமாரியில் நித்திரை கொண்டிருந்த சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளை அவளுக்கு வாசிக்கக் கொடுத்தேன். அதனைத் தொடர்ந்து டான் பிரவுனின் ‘டாவின்சி கோட்’ நாவலை அவள் கொடுக்க, நான் பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்களைக் கொடுத்தேன்.

புத்தகப் பரிவர்த்தனை மற்றும் அதனூடான உரையாடலின் வழியாக எங்களுக்குள்ளான அண்மையை உணர்ந்தேன். பிறகு மதிய வேளைகளில் உணவுகளையும் பரிமாறிக் கொள்ளத் தொடங்கினோம். தியாகராய நகரில் உள்ள விடுதியொன்றில் அவள் தங்கியிருந்தாள். விடுதிச் சாப்பாட்டினை டிபன் பாக்ஸில் திணித்து எடுத்து வருவாள். சுவை நரம்புகளில் எவ்விதத் தூண்டுதலையும் நிகழ்த்தாத அவ்வுணவை சலிப்போடுதான் தின்பாள். அம்மா சமைத்துக் கொடுத்த உணவை அவளுக்குப் பகிர்ந்தளித்தேன். தனது வீட்டுச் சாப்பாட்டினை நினைவுறுத்தியதாக அன்றைய நாள் முழுவதும் அதனைச் சிலாகித்துக் கொண்டிருந்தாள். அவளுடன் பகிர்ந்துண்ணும் பொருட்டு அன்றிலிருந்து அளவில் பெரிய டிபன் கேரியரில் உணவை நிறைத்து எடுத்து வந்தேன். பெருமகிழ்வோடு அதனை ஏற்றுக் கொண்டவள் எனக்கு நன்றி சொன்ன போது அது அந்நியமாக இருந்தது. எங்களுக்கு இடையில் நிலவிய சகஜத்தன்மையைப் பார்த்த கண்கள் எல்லாம் பல விதமான கற்பனைகளுக்குள் தன்னை உட்செலுத்திக் கொண்டன. பிரவீன் என்னிடம் ஒரு நாள் அதைக் கேட்டே விட்டான். “என்னடா… உஷார் பண்ணிட்டியா” என்றதும் அவன் மீது சினமுற்றேன். ஒரு பெண்ணுடனான அணுக்கத்தை வேறு எந்த வகையிலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிற பிடிவாதத்தின் மீதான கோபம் அது. ஆனால் மறைபொருளாய் அதனுள் ஓர் பொய்க்கோபமும் உறைந்திருந்ததை அறிந்து சிலிர்ப்புற்றேன்.

அன்றிலிருந்து அவளுடனான எனது அணுக்கம் வேறொரு கட்டத்துக்கு பரிணமித்திருந்தது. முற்றிலும் புதிய உணர்வு நிலைகளுக்குள் ஆட்பட்டிருந்தேன். அவள் இறுக்கமான உடைகளை அணிந்து வருவதை நான் விரும்பவில்லை. சதைத்திரட்சிகள் ஒருங்கமைந்த அத்தேகத்தினை மூர்க்கப் பார்வை கொண்டு புணரத் துடிக்கிற கண்களைப் பற்றியான பதட்டம் அப்போது என்னுள் உருவானது. தளர்வான ஆடைகளை அணியும்படி அவளிடம் சொல்ல நினைத்தேன் அல்லது நினைக்க மட்டுமே முடிந்தது. அவளது முகநூல் சுவற்றை தேடுதல் அதிகாரியின் கூர்மையோடு அலசி ஆராய்ந்தேன். அவள் பதிவிட்ட புகைப்படங்களை கால வரிசைப்படி பார்த்துக் களிப்புற்றேன். எத்தனையோ விதமான பாவனைகளில் அவளது வதனம் தன் நிறத்தினை மாற்றிக் கொண்டிருந்தது. ஒரு புகைப்படத்தில் இரண்டு மேசை விளக்குகளின் நடுவே மங்கலான ஒளியின் மஞ்சளேறிய அவளது முகத்தில் லயித்தேன். அதில் அவள் புன்னகைக்கவில்லை. ஏதோ ஒன்றைச் சொல்ல முன்வந்து தயக்கத்தில் அவ்வார்த்தைகளை விழுங்கிவிட்டவளைப் போன்றிருந்தாள்.     கலீல் ஜிப்ரான், வில்லியம் வேர்ட்ஸ்வர்த், ஷேக்ஸ்பியர் போன்றோரது மேற்கோள்களை அதற்குப் பொருத்தமான புகைப்படங்களோடு பதிவிட்டிருந்ததில் அவளது தெரிவு பற்றி அறிந்தேன். இறுதியாக அவளது பிறப்பாண்டினைப் பார்த்த போது சரவெடியின் கடைசிப் பட்டாசு வெடித்து அடங்கியதும் உண்டாகும் நிசப்தத்துக்கு ஆட்பட்டேன்.

என்னை விட அவள் மூன்று வயது மூத்தவள் என்பதை பிறப்பாண்டு சொல்லியது. தடகளப் போட்டியில் கண்ணுக்கெட்டிய வெற்றியை இறுதி நொடியில் தவற விட்டதைப் போல இருந்தது. புரிந்து கொள்ள முடியாத ஓர் தாழ்வுணர்ச்சி என்னை பீடித்தது. அதற்குப் பிறகு சில நாட்கள் அவளிடமிருந்து காரணமில்லாமல் விலகியிருந்தேன். டிபன் கேரியரில் சாப்பாடு எடுத்து வராமல் உணவகத்துக்குச் சென்றேன். எனது நடவடிக்கை பற்றிய விசாரணை அவளிடத்திலிருந்து எழும் என நினைத்தேன். எதிர்பார்த்தேன் என்றும் சொல்ல முடியும். ஆனால் இது பற்றி ஏதும் வினவாமல் அசட்டையாக இருந்ததிலேயே அவள் தன் ஆங்காரத்தை எனக்கு அறிவித்தாள்.

அந்நாட்களின் வெறுமை, தாளாத துயரினை என் மீது ஏற்றி விட்டிருந்தது. பிரபஞ்சப் பெருவெடிப்பினைப் போல சிந்தனை சிதறிப்போயிருந்தது. நித்திரை கொள்ள முடியாத இரவொன்றில் மொட்டை மாடியில் உலவிக் கொண்டிருந்தேன். பிரக்ஞையில் உறைந்திருக்கும் வயது வேறுபாடு குறித்தான பதட்டத்தை முழு விசை கொண்டு வீசியெறிந்தேன். அது எங்கோ ஓர் வீட்டின் கூரை மேல் சிறு சலனத்தை ஏற்படுத்தியபடி வீழ்ந்திருக்கும்.

அடுத்த நாள் மதிய வேளையில் அவள் கேபினுக்குச் சென்று சாப்பிட அழைத்தேன். எந்தக் கேள்வியும் இல்லாமல் டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு கேண்டீனுக்கு வந்தாள். சமீப நாட்களில் மாற்றம் கண்டிருந்த என் போக்கினைப் பற்றி அவளாக எதுவும் கேட்க மாட்டாள் என்பது எனக்கு தெரிந்திருந்தது. நானும் அதைப் பற்றி பேச விரும்பாமல் இயல்பாய் இருப்பதாய்க் காட்டிக் கொள்ளும் முயற்சியில் வழக்கமான விசாரிப்புகளிலிருந்து எனது உரையாடலைத் துவங்கினேன். தன் இயல்பிலிருந்து தன்னை ஒரு போதும் விலக்கிக் கொள்ளாதவளாய் எப்போதும் போலவே பேசினாள். அவளது சொற்களின் மீது படர்ந்து இளைப்பாறினேன்.

அதன் பிறகு அலுவலக நாட்கள் தவிர விடுமுறை தினங்களிலும் சந்தித்துக் கொள்ளத் தொடங்கினோம். திரைப்படங்களுக்குச் செல்வது எனது தேர்வாக எப்போதும் இருந்தது. அவள் வேறுபட்ட புதிய அனுபவங்களில் தன்னை மூழ்கடித்துக் கொள்ளவே விரும்பினாள். எதனையும் வாடிக்கையாக்கிக் கொள்வதில் அவளுக்கு சலிப்பே இருந்தது. மெரினா கடற்கரை, கிழக்குக் கடற்கரைச்சாலை, அண்ணா நூற்றாண்டு நூலகம், எக்ஸ்பிரஸ் அவின்யூ, ஹிக்கின்பாதம்ஸ், பாரி முனை, எழும்பூர் அருங்காட்சியகம், லிட்ரரி சொசைட்டி என அவளது தெரிவுகளின்படி உலவித் திரிந்தோம். அந்நாட்களில் எந்த ஒரு கட்டத்திலும் அவள் மீதான எனது முன்நகர்வுக்கான வெளியை உருவாக்கிக் கொடுத்து விடக்கூடாது என்பதில் ஆழ்ந்த பிரக்ஞை கொண்டிருந்தாள். அது தந்த ஏமாற்றம் என் சமநிலையைக் குலைத்தது.

அன்றொரு நாள் மாயாஜாலில் ‘வாரணம் ஆயிரம்’ படம் பார்த்து முடித்து விட்டுப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நல்ல வேளையாக பேருந்து ஏறியதற்குப் பிற்பாடு மழை பெய்ய ஆரம்பித்தது. ஜன்னலை அடைத்து விட்டிருந்தாலும் குளிர்க்காற்று அடித்துக் கொண்டிருந்தது. அந்த சனிக்கிழமை இரவில் பேருந்து அரவமற்றுக் கிடந்தது. பேருந்தின் நடுவே வலப்புற இருக்கைகளில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அன்றைய நாளுக்கான சம்பாஷணைகள் ஓய்ந்து விட்ட பொழுதில் எங்களுக்குள் மௌனம் நிலவியது. ஓட்டுநருடன் பேச்சுக் கொடுத்தபடி நடத்துனரும் முன்பக்க இருக்கையில் உட்கார்ந்திருந்தார். அடுத்தடுத்து வந்த நிறுத்தங்களில் இருந்த சொற்ப எண்ணிக்கையிலானவர்களும் இறங்கிக் கொள்ளவே நாங்கள் மட்டுமே பயணிகளாக இருந்தோம்.

ஹெட்செட்டைப் பொருத்தி மேற்கத்திய இசைக்கோர்ப்புகளில் லயித்திருந்த  அவள் அத்தனிமையை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. வலது புறம் திரும்பி அவளைப் பார்த்தேன். தியான நிலையில் இருந்தவள் போல கண்களை மூடியிருந்தாள். காற்றின் விசைக்கேற்ப அவளது மயிர் கற்றைகள் மேலே எம்பி நடனமாடிக் கொண்டிருந்தன. அவளது காது மடலுக்குப் பின்புறம் இறங்கும் மயிர்களில் சில மெல்ல அலையாடிக் கொண்டிருந்தன. நறுமணத் திரவியத்தின் நாற்றத்தினுள் கலந்திருந்த அவளது வாசனையை மட்டும் பொறுக்கி நுகர்ந்தேன். அக்கணத்தில் எங்களுக்குள் அந்தரங்கமான நெருக்கத்தை உணர முடிந்தது. திறந்திருந்த ஜன்னல்கள் வழியே உட்புகும் மென்குளிர் அவளது அண்மையை மேலும் பற்றிக் கொள்ளத் தூண்டியது. அவளை அப்படியே எடுத்து உடுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றிய அக்கணத்தில் அவளது ஆங்காரத்தின் நமட்டுச் சிரிப்பொலி எனக்குள் கேட்டது. சட்டென என்னுள் வயது வேறுபாடு பற்றியான தாழ்வுணர்ச்சி வந்து மறைந்தது. எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் எனது வலது கையை அணைப்பது போன்று அவளது தோள்பட்டை மீது வைத்தேன். மெல்லிய அதிர்ச்சியோடு ஹெட்செட்டை அகற்றி விட்டுத் திரும்பியவள் மீது அப்படியே சாய்ந்து உதட்டைக் கவ்வினேன். எனது ஆற்றாமை முழுவதையும் அந்த முத்தத்திலேயே கரைத்து விடும் மூர்க்கத்தோடு கீழ் உதட்டைக் கடித்து இழுத்தேன். சுதாரித்துக் கொண்ட பிறகு இரு கைகளாலும் என்னை அடித்து விலக்கி விட்டு எழுந்து கொண்டாள். சற்றும் எதிர்பார்த்திராத இத்தருணத்தின் அதிர்வு அவளுக்குள் பதட்டத்தைக் கூட்டியிருந்தது. கொஞ்சம் விட்டால் அழுது விடத் தயாராக இருந்த அக்கண்களை எதிர்கொள்ள சங்கடமாயிருந்தது. அப்போது வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கி விடலாம் என்று யத்தனித்தேன். அதற்குள் அவள் முன்பக்க இருக்கைக்குச் சென்று தனியே அமர்ந்து கொண்டாள்.

பேருந்து திருவான்மியூரில் நின்ற போது மழை பெய்து ஓய்ந்திருந்தது. ஓரளவு மக்கள் திரள் ஏறி இருக்கையை பகுதியளவு நிறைத்துக் கொண்டது. ஜன்னல் கண்ணாடியை ஏற்றிவிட்டு புறக் காட்சிகளுக்குள் கவனத்தைக் குவிக்க முனைந்தேன். எண்ண ஓட்டத்தை ஒரு குவியத்துக்குள் கொண்டு வர இயலவில்லை. அகம் துண்டாட்டப்பட்டுச் சிதறித் தெறிப்பது போல் இருந்தது. என் மேல் எழுந்த அருவருப்புணர்வின் குறுகுறுப்பில் உடலைக் குறுக்கி விரித்தேன். பின்பக்கத்தோற்றத்தில் அவளது அசைவுகளைக் கொண்டு அவள் அழுகிறாள் என்பது புலனானது. அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. எதுவும் செய்யவியலாத இக்கட்டான சூழலுக்குள் சுழன்று கொண்டிருந்தேன். என்ன சொல்லி அவளைத் தேற்றுவது என்கிற கேள்வி பூதாகரமாக முன் நின்றது. அவளை நெருங்கக் கூடத் திடமற்றவனாய் இருந்தேன்.

தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் இறங்கியதும் அவள் ஆட்டோ பிடித்து விடுதிக்குச் சென்று விட்டாள். குற்ற உணர்ச்சியை மிஞ்சும் கடும் தண்டனை ஏதுமில்லை. அதற்குள் சிக்கி உழன்று கொண்டிருந்தேன். அன்றைய இரவு தூங்கவே இல்லை. அடுத்த நாள் அலுவலகத்துக்குச் சென்ற பின் அவளை எதிர்கொள்வது பற்றியான பதட்டம் உருவாகியிருந்தது. என் கன்னத்தில் அறைந்தாவது மீள முடியாத குற்ற உணர்ச்சியிலிருந்து அவள் என்னை விடுவித்திருக்கலாம். ஆனால் அவளிடமிருந்து எந்த மறுமொழியும் இல்லை. அந்த சூழலின் இறுக்கம் தளர்வதற்காக காத்திருந்தேன். அதற்குள் அவள் பெங்களூரில் உள்ள ஓர் நிறுவனத்தில் வேலை பெற்றுச் சென்று விட்டாள். எங்களை இணைத்திருந்த சரடு அன்றோடு முற்றிலும் அறுந்து போனது.

துல்லியமாகப் பதிந்திருந்த இக்காட்சிகளை ஆறு ஆண்டுகள் கழிந்தும் அதே உணர்வோடு நினைவுக்குட்படுத்த முடிந்தது. அப்போது இரண்டு யோசனைகள் என் தெரிவில் இருந்தன. ஒன்று, வருகிற நிறுத்தத்தில் இறங்கி வேறொரு பெட்டிக்கு மாறிக் கொள்வது. இல்லையென்றால் தயக்கத்தை உடைத்தெறிந்து விட்டு அவள் முன் நிற்பது. நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். கால ஓட்டத்தில் இயல்பாகவே உண்டான முதிர்ச்சி அந்த சூழலைக் கையாள்வதற்கான பக்குவத்தைக் கொடுத்திருந்தது. சற்று முன்னகர்ந்து அவளை நெருங்கியதும் பெயர் சொல்லி அழைத்தேன். கைப்பேசித் திரையிலிருந்து பார்வையை விலக்கி விடுக்கென நிமிர்ந்தாள். புதிதாய் என்னை அறிமுகம் செய்து கொள்பவன் போல பற்றுதலின் நிமித்தம் கை நீட்டினேன். அதிர்ச்சியும், வியப்புமாய் புன்னகைச் சிந்தியபடி என்னைப் பார்த்தவள் “கௌதம்…” என்று வினவலோடு கைகொடுத்தாள். வெகு இயல்பாக அவ்வுரையாடலைத் தொடங்க வேண்டும் என்கிற திட்டத்தை எனக்குள் வகுத்திருந்தேன்.

“எப்படி இருக்க நிவேதா” என்றேன்.

“நல்லாருக்கேண்டா… நீ திடீர்னு இப்படி வந்து நிப்பன்னு நெனைச்சுக்கூடப் பார்க்கலை… ”

“நானும் சத்தியமா இத எதிர்பார்க்கவே இல்ல… என் லைஃப்ல நெறைய விசயம் இது மாதிரிதான் நடக்குது” என்றேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது அவளுக்குப் புரிந்திருக்கும். ஆனால் அதற்கான எந்தத் தடயமுமின்றி அதே இயல்போடு பேச்சைத் தொடர்ந்தாள். கொல்கத்தாவில்தான் தற்போது வசிப்பதாகச் சொன்னாள். நான் அலுவல் நிமித்தம் அங்கு வந்திருப்பதைச் சொன்னேன். வாடிக்கையான விசாரிப்புகளுக்குப் பின் தத்தம் இருவரும் இடைப்பட்ட ஆறு ஆண்டு கால வாழ்வோட்டத்தின் விசேஷ தருணங்களைப் பகிர்ந்து கொண்டோம். காலத்தின் இயல்பில் நிகழ்கிற மாறுதல்களைத் தாண்டி எனது வாழ்வில் பொருட்படுத்திக் கொள்ளத்தக்க மாற்றங்கள் ஏதுமில்லை. அவள் பெங்களூருக்குச் சென்ற ஓராண்டில் எனக்கு சென்னையிலேயே வேறொரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு சில புதிய நண்பர்கள் வாய்க்கப்பெற்றார்கள். அவர்களோடு வார இறுதியில் அவ்வப்போது பாண்டிச்சேரிக்கோ, பழவேற்காட்டுக்கோ செல்வேன். சொற்ப எண்ணிக்கையில் தோழிகள் இருக்கிறார்கள். எனது அன்றாட நடவடிக்கைகள் குறித்தும், அலுவலக சூழல் பற்றியும் அவர்களிடம் சுவாரஸ்யமற்று உரையாடிக் கொண்டிருப்பேன். எனது திருமணத்துக்கான முன்னெடுப்புகள் நடந்து வந்தாலும் அதில் ஈடுபாடு காட்டாமல் இருப்பதைச் சொன்னேன். வாடிக்கையான எனது வாழ்க்கைச் சுழற்சியைப்பற்றி சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ரயில் டம்டம் வந்தடைந்தது. இறங்கி வெளியே வந்தோம். திறந்தவெளியின் குளிர் மறுபடியும் நெஞ்சுப்பகுதியைத் தாக்கி உடலைச் சிலிர்க்க வைத்தது. குளிருக்கு இதமாகத் தேநீர் அருந்தலாம் என்றேன். “ம்..” என்றபடி தலையசைத்தாள். “ஜெர்க்கின் கூடவா போடாம வருவ..” என்றபடியே அவளது கைப்பையிலிருந்து ஸ்கார்ஃப் எடுத்துக் கொடுத்து சுற்றிக் கொள்ளச் சொன்னாள். என் அனுபவத்தேடலின் விபரீத விளைவைப் பற்றிச் சொல்லியபடியே அதனைப் போர்த்திக் கொண்டேன்.

“அப்படின்னா… சூடு எப்படி இருக்கும்னு அனுபவிக்க சுட்டுக்குவியா?” என்றாள். அந்த வார்த்தைகளுக்குள் பொதிந்திருக்கும் வேறொரு பொருளை அவள் அறிந்தேதான் சொல்லியிருக்கக் கூடும். நான் அமைதியாக நடந்தேன். ரயில் நிலையத்தை ஒட்டிய கடைத்தெருவுக்குள் நுழைந்து சென்றோம். ஜனநெருக்கடி மிகுந்திருந்த அந்த சாலையில் கவனத்தோடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டியிருந்தது. அவளிடமும் தான்.

இடைப்பட்ட காலத்தை ஓர் யுகத்தினைப் போல கடந்து வந்ததாகக் கூறினாள். பழைய அலுவலகத்திலிருந்து விடைபெற்று பெங்களூருக்குச் சென்ற பிறகு புதிய நகரம், புதிய பணிச்சூழல் என சிறப்பான தொடக்கம் அமைந்திருக்கிறது. வாசிப்பின் அடுத்த படிநிலைகளுக்குச் சென்றதோடு, இசை, திரைப்படங்கள் மீதான ஈடுபாடும் உருவானதாகச் சொன்னாள். பரிட்சித்துப் பார்க்க அந்த நகரத்தில் எத்தனையோ விசயங்கள் இருந்திருக்கின்றன. எல்லாவற்றையும் தேடிக் கண்டடைந்திருக்கிறாள். அவள் வசம் இருந்த பிடிகயிற்றைக் கொண்டு தனது தேர்வுகளின்படி வாழ்க்கையைச் செலுத்திக் கொண்டிருந்த நாட்களைப் பற்றி விளிக்கையில் டேலியா மலரைப் போல் அவள் முகம் பூத்திருந்தது. “எல்லாம் நல்லாத்தான் போச்சு…” என்று புள்ளி வைத்து நிறுத்தியதும் புருவமுயர அவளைப் பார்த்தேன். தனக்குத் திருமணமாகி விட்ட தகவலைச் சொன்னவள் அடுத்த கணமே வெகு இயல்பாய் மணமுறிவு நிகழ்ந்து விட்டதையும் கூறினாள். அவளது பெற்றோரது நிர்ப்பந்தத்தின் பொருட்டு பெங்களூருக்குச் சென்ற ஓராண்டிலேயே அவளுக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மணமகன் அதே சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதோடு அவனும் பெங்களூரில்தான் வேலை செய்கிறான் என்பது இருவருக்கும் சாதகமான அம்சமாகக் கருதப்பட்டிருக்கிறது. மணமுடிப்பதில் தனக்கான விருப்பத்தேர்வு எதுவும் இல்லாத நிலையில் அதனை பெற்றோரது முடிவுக்கே விட்டிருந்திருக்கிறாள். தஞ்சாவூரில் உள்ள மண்டபத்தில் வைத்து உறுதி செய்யப்பட்ட மணவாழ்க்கை இரண்டே ஆண்டுகளில் நிறைவை எட்டிவிட்டது என்றாள். மணமுறிவுக்கான காரணம் குறித்து வினவியதற்கு “அவனொரு சைக்கோடா… ” என்று மட்டும் சொன்னாள்.

நான்கு கிளைச்சாலைகள் கூடும் சந்திப்பின் முனையில் இருந்த தேநீர் நிலையத்தைப் பார்த்ததும் “இங்கயே குடிக்கலாம்” என்றேன். சப்தமெழுப்பியபடி கனன்று கொண்டிருந்த அடுப்பில் தூள் மிதக்க தேநீர்  கொதித்துக் கொண்டிருந்தது. சப்பனங்காலிட்டு அமர்ந்தபடி இஞ்சியைத் தட்டிக் கொண்டிருந்தவர் அதனை சரியான அளவில் தேநீருக்குள் தூவி விட்டார். “தோ சாய்” என்றபடி கைகளை அடுப்பின் அனல் படும்படி நீட்டி எடுத்து முகத்தில் ஒத்திக் கொண்டேன். அதைப் பார்த்தவள் வேடிக்கையாகச் சிரித்தாள். கடுஞ்சூட்டில் கண்ணாடி டம்ளரில் கொடுக்கப்பட்ட தேநீரிலிருந்து ஆவி எழுந்தோடிக் கொண்டிருந்தது. டம்ளரை உள்ளங்கையில் அழுந்தப் பிடித்தேன். தேநீர் ஒவ்வொரு மிடறாய் உள் இறங்குகையிலும் ரத்தம் அதீத பாய்ச்சலில் ஓடுவதைப் போலான உணர்வு. அங்கிருந்து நடந்து செல்கிற தொலைவிலேயே தனது அபார்ட்மெண்ட் இருப்பதாகச் சொன்னாள். தேநீர் அருந்தி முடித்ததும் அவளிடமிருந்து டம்ளரை வாங்கி மரத்தாலான மேடை மீது வைத்தேன். கைப்பையைத் திறக்கப் போனவளைத் தடுத்து நானே சில்லறையைக் கொடுத்தேன். அவளது எண்ணைக் கேட்டுப் பதிந்து கொண்டேன். அடுத்த நகர்வு பற்றிய குழப்பத்துக்குள் இருவரும் ஆட்பட்டிருக்க சில நொடிகள் அமைதி நிலவியது. விடைபெறும் முடிவோடு அவளுக்குக் கைகொடுத்தேன். அடுத்த முறை கொல்கத்தா வரும்போது கூப்பிட சொன்னாள். திரும்பக் கொடுப்பதற்காக ஸ்கார்ஃபைக் கழற்றிய என்னைத் தடுத்தாள். ”நீயே வெச்சுக்க” என்றாள். அந்தக் குளிர் இரவின் நினைவுகள் அப்பியிருந்த ஸ்கார்ஃபை மீண்டும் சுற்றிக் கொண்டேன். தேநீர் நிலையத்திலிருந்து இருவரும் எதிரெதிர்த்திசைகளில் பிரிந்து சென்றோம்.

என்னுள் அழுத்தம் கூடியிருந்தது.

‘Sorry’ என்று வாட்சப்பில் அவளுக்கு செய்தி அனுப்பினேன். இரட்டை நீலக்குறிகள் காண்பித்தது. தீர்மானிக்கப்பட்ட பொறுமையுடன் அவள் மறுமொழிக்காகக் காத்திருந்தேன். ‘its ok, some times situations force to decide the things’ என்று பதில் அனுப்பினாள். அவளது காது மடல்களைப் போன்றே அவ்வார்த்தைகள் எனக்கு மிருதுவாக இருந்தன. சற்று நேர யோசனைக்குப் பின் ‘even, I shouldn’t have emphases so much’ என்று தட்டி அனுப்பினேன். இது மேற்கொண்டு என்னை வெளிப்படுத்திக் கொள்ள எதுவும் இல்லை என்கிற நிச்சயத்தோடு இணைய இணைப்பைத் துண்டித்தேன். நெடுநாளைக்குப் பிறகு சந்திக்கும் பால்யகால நண்பனைப் போல குளிர் என்னை ஆதரவாய் அணைத்திருந்தது. எனக்கு இன்னொரு கோப்பைத் தேநீர் தேவைப்பட்டது.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

 1. அன்பின் திலீபன்,
  உங்களின் இந்த கதையை எதேச்சையாக படிக்க நேர்ந்தது. படித்து முடித்து ஒரு மணி நேரமாக ஒரு வேலையும் செய்யாமல் என் கேபினில் அமர்ந்து இருக்கிறேன். கண்களில் தண்ணிர் வருகிறது. ஏன் என்று தெரியவில்லை.

  என்ன மாதிரியான ஒரு கதை. என்ன மாதிரியான ஒரு எழுத்து.

  இனி நான் கதைகள் எழுதுவதை நிறுத்தி விடலாம் என நினைக்கிறேன்.

  உங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டு.

  வாழ்க வளமுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close