சிறுகதைகள்

கொட்டாங்குளத்தான்

முத்துராசா குமார்

‘ஏலேய், எங்க சின்னச்சாமி அப்புச்சிதான் ஆனமலையிலருந்து வந்து காட்டுப்பாதை வெட்டி, கெணறு தோண்டி, வேலி கட்டி, மொதக் குடி போட்டுச்சு. யாரையும் வேத்தாளுகளா பார்க்காம மக்க மனுசங்கள ஒன்னுதெரட்டி வெள்ளாம போட்டு ஊர உருவாக்குச்சு. ஒங்கள மாதிரி பொறந்த ஊர சுடுகாடாக்கிட்டு நூத்தம்பது வருசத்து எளங்கொடிய அறுத்துட்டு என்னால வர முடியாதுடா. வைராக்கியமா வாழத்தெரியாம சொந்த மண்ண விட்டுப்புட்டு வெளியூருகளுக்கு பஞ்சம் பொழைக்க ஓடிப்போன பயலுகளாம் கொட்டாங்குளத்தப் பத்தி பேசுறதுக்கே லாயக்கு இல்லடா’ என்று கேத வீட்டையே ரெண்டாக்கினார் பூவலிங்கம்.

சின்னப்பிள்ளையில் எடுத்து வளர்த்த ராக்கு கிழவி டவுனுக்குள் தவறிப் போனதுக்கு பூவலிங்கத்திற்கு கேதம் சொல்லிவிட ஆள் அனுப்பவில்லை. போன் கூட பண்ணவில்லை. மதியத்திற்கு மேல்தான் ஒத்தக்கடை பங்காளிபய ஒருவன் விஷயத்தைச் சொல்ல, வழியில் வந்த வண்டிகளில் ஏறி அவசரமாக வந்து சேர்ந்தார்.

‘கெழவி செத்ததக் கூட சொல்லிவிடாம இப்படி ஒதுக்கிட்டாய்ங்களே’ என்று வெயிலில் துக்கமும் கோபமும் கொப்பளிக்க வந்து இறங்கியவுடன்,

‘நீ ஒருத்தந்தான்டா கொட்டாங்குளத்தான்னு சொல்லிக்கிட்டு பித்து புடிச்சவன் மாதிரி இன்னும் அலையுற. குடும்பத்த அத்துவிட்டு அழிஞ்சுப்போன ஊர புடிச்சுக்கிட்டு ஏன்டா இப்புடி தொங்கிட்டு கெடக்க. புத்திகித்தி மழுங்கிப் போச்சா கிறுக்குப் பயலே’ என்று சொந்தபந்தங்கள் ஒன்னுகூடி சொன்னதற்குத்தான் பூவலிங்கம் கடுங்கோபமாகி கத்திவிட்டு பாடையைத் தூக்குவதற்கு முன்பே கொட்டாங்குளத்திற்கு கிளம்பினார்.

உச்சகட்ட கடுப்பும் தனிமை விரக்தியும் வாயில் முணுமுணுக்க, ஓடும் பஸ்ஸில் ஏறி

‘கொட்டாங்குளம் ஒன்னுன்னு’ டிக்கெட் கேட்க,

‘அது எங்கயா இருக்கு? எறங்கு எறங்கு’ என்று

கண்டக்டர் பூவலிங்கத்தின் அழுக்குத் தோற்றத்தைப் பார்த்து எளக்காரமாக சொன்னவுடனேயே அவருக்கு அழுகையே வந்துவிட்டது. கண்ணீரைத் துடைத்துவிட்டு மாட்டுத்தாவணிக்கு டிக்கெட் எடுத்தார்.


ஒரு காலத்தில் விவசாயத்தில் செல்வசெழிப்பாய் திகழ்ந்த அந்த ஊருக்கு இப்போது, எங்கிருந்தும் பேருந்து வசதியில்லை. இருபது வருடங்களுக்கு முன்புவரை அந்த ஊரின் பெயரை எல்லோரும் தெரிந்து வைத்திருந்தனர். இப்போது பூவலிங்கம் மட்டுந்தான் அந்தப் பெயரை சொல்லிக்கொண்டு அலைகிறார். மாட்டுத்தாவணியைத் தாண்டி கொடிக்குளம் பாலத்திலிருந்து நொட்டாங்கைப் பக்கம் இறங்கினால் சுற்றிலும் கருவேலங்காடுகள். காடுகளுக்கு நடுவில் நீண்டுகிடக்கும் காய்ந்த ஒல்லி வரப்பில் நடந்தால் இருபது கிலோமீட்டருக்குள் கொட்டாங்குளம் வந்துவிடும்.

காலையில் குடித்த ஒரு சொம்பு நீச்சத்தண்ணீருக்குப் பிறகு எந்த ஆகாரமும் இறங்கவில்லை. உதடுகளின் காய்ந்த தோல்கள் உரிய, பூவலிங்கம் கனத்த நினைவுகளோடு நடக்கத் தொடங்கினார்.

நாற்பது வயதாகப்போகும் பூவலிங்கத்திற்கு ரேக்ளா ரேசுக்குப் போவது, உழவு ஓட்டுவதைத் தவிர வேறேதும் தெரியாது. தாத்தா, அப்பா காலத்திலிருந்தே பூவலிங்கத்தின் குடும்பம் ரேக்ளாவில் பேர் போனது. ‘கொட்டாங்குளம் கொடி மாடுக’ என்று சொன்னால் புதுக்கோட்டை, தேனி பக்கம் வரை நன்றாகத் தெரியும். சிறுவயதிலிருந்தே பூவலிங்கத்திடம் ஊரின் கதைகளையே சொல்லி சொல்லி வளர்த்ததால், பள்ளிக்குப் போகாமல் சம்சாரி பொழப்புகளில் ஊறிப்போனார் பூவலிங்கம். இதுநாள் வரை எங்கும், எதற்கும் யாரிடமும் ஊரை விட்டுக்கொடுத்ததே இல்லை.

தன் காலத்தில் ரேக்ளா ரேசுக்கு தடை விதித்த பொழுதுகளிலும் மாடுகளை விற்காமல் அவைகளுக்கென்று தனியாக காசுகளை சேர்த்துவைத்து செலவு செய்வார். பருவநோய் காலங்களில் என்னென்ன நாட்டுமருந்துகள் தரவேண்டும் என்பதுவரை தாத்தனிடமிருந்து அத்துப்படியாய் கற்று வைத்து மருந்துகளை எப்போதும் தயாராகவே வைத்திருப்பார். பருத்திவிதை, பேரீச்சை, கானப்பயிறு, முட்டை, இஞ்சி, வெங்காயம், கருப்பட்டி உருண்டை ஊட்டி தினமும் உழவு ஓட்டி, நீச்சல் அடிக்க விட்டு, சுடுதண்ணீரில் குளிப்பாட்டி மாடுகளை எடை ஏற விடாமல் படுபதார்த்தமாக பக்குவம் பார்த்து கவனிப்பார்.

அவைகளும் பதினாறு கிலோமீட்டரை ரொம்பவும் வாநீர் வடிய விடாமலும், இளைக்காமலும் அசாதாரணமான பாய்ச்சலில் கடந்து வெற்றி பெறும். விழாக்களில் ‘கொட்டாங்குளம் கொடி மாடுக வெற்றி’ என்ற அறிவிப்புகள் தனிப்பட்ட முறையில் தனக்கான வெற்றி என்பதை விட, ஒட்டுமொத்த கொட்டாங்குளத்திற்கான அடையாளம் என்பதில் விடாப்பிடியான நம்பிக்கை வைத்திருந்தார் பூவலிங்கம். கனக்கச்சிதமாக செய்யப்பட்ட நீலநிற ரேக்ளா வண்டி, ஒரு சோடி வெள்ளை நடுத்தர காளைகள், இளமூங்கிலில் நரம்புகளை இறுகச்சுற்றி பொடியாணி அடித்து அவரே செய்த விதவிதமான தார்க்குச்சிகள், நைலான் பிடி கயிறுகள், பின்புறம் தகரமடித்து மர ப்ரேம் போட்ட வெற்றிவாகைப் புகைப்படங்கள், சால்வைகள், பதக்கங்கள்தான் பூவலிங்கத்தின் ஆகப்பெரும் பொக்கிஷங்கள்.


மழை இல்லாமல் கண்மாய் பாசனம் வறண்டு விவசாயம் செத்ததால் முதலில் யசோதை குடும்பம் வெளியூருக்கு கிளம்பினர். பிறகு, பிரம்மாண்டமான சாலைகளுக்கு பாதி ஊரை வகுந்து எடுக்கையில் வெள்ளையன் குடும்பமும் சொந்தங்களும் உறவினர்களின் ஊர்களுக்கு போனார்கள். அதிகரித்த கல்குவாரிகளின் மெஷின் சத்தங்கள், வெடி சத்தங்களைத் தாங்கமுடியாமல் மிச்சமிருந்த எல்லோரும் டவுனுக்குள் குடியேறினர். இப்படி, இருபது வருடங்களுக்கு முன்பே எல்லா சனங்களும் தங்களது சொந்த வீடு வாசல்களை அப்படியே போட்டுவிட்டு ஆடு மாடுகளையும், இருந்த கொஞ்ச நிலங்களையும் கைமாற்றிவிட்டு கிளம்பிவிட்டனர். பூவலிங்கம் எவ்வளவோ முயன்றும் யாரையும் நிப்பாட்ட முடியவில்லை.

‘புள்ளையும் பெருசாயிருச்சு. வெளியில போனாதான் பழக்கவழக்கம்லாம் மாறும். ஆத்திர அவசரத்துக்கு எங்கேயும் போக முடியல. இந்த ஊரலாம் உன்னோடேயே போகட்டும். சீக்கிரம் கெளம்புயா’ என்று கடைசியாக பூவலிங்கத்தின் மனைவியும், மகளும், உறவுகளும் அன்றைக்கு காலையில் சாமான்களை வண்டியில் ஏற்றி கிளம்பத் தயாரானார்கள். வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார் பூவலிங்கம்.

‘தவந்து, வளர்ந்து, கல்யாணம் முடிச்சு, எனக்கு நல்லது கெட்டது பார்த்த இந்த ஊருல இப்போ யாருமே இல்லை. ஒன்னுமுன்னா பழகுன கூட்டாளி பயலுகளோட சின்னப்பிள்ளையில வெளையாடுன இந்த தரையெல்லாம் அழியப்போது. ஒழவடிச்ச நெலமெல்லாம் இறுகப்போது. அப்புச்சி உருவாக்குன இந்த ஊருக்கு நாந்தான கடைசி மூச்சு’ என்று பூவலிங்கம் மனதுக்குள் நடுக்கத்தோடு நினைத்துக்கொண்டார்.

எப்பவும் கலகலத்து இருந்த முப்பது ஏக்கர் ஊரில் இப்போது மனித நடமாட்டமில்லாத பூட்டிய வீடுகளும், கட்டுத்தறிகளின் அமைதியும், வெறுமை பஞ்சாரங்களும், காற்றில் சரிந்து பறக்கும் வைக்கோல்படப்பும் அவரை ஒருவித பயத்துக்குள் தள்ளியது. ஓடிப்போய் கண்மாய்கரையிலிருக்கும் பனைமரத்தின் முன்னே விழுந்தார். அதில்தான் கொட்டாங்குளத்தின் ஆதிமுனியாண்டி இருக்கிறார். மரத்தின் கீழிருக்கும் நார்பொட்டியில்தான் ஊரின் பிடிமண்ணும் இருக்கிறது.

‘ஜெயிச்சு வர்ற சோடி காளைகளுக்கு ஆராத்தி எடுக்க ஆளு இல்லாத அனாதப்பய ஊராப் போச்சேப்பா. தை மாச மாவிலைக்கும், கூளப்பூகொத்துக்கும் கொட்டாங்குளம் வக்கத்துப் போச்சேப்பா. கடைசி வரைக்கும் நான் ஒத்தையா நின்னு, ஒனக்கு வருசாவருசம் மண்டகப்படிக எடுக்க முடியலைனாலும், தெனமும் சூடம் பத்தி பொருத்துறேன்யா’ என்று முனியாண்டி முன் ஆங்காரத்தனமாக நேர்ந்துகொண்டு ஒரு முடிவுக்கு வந்தார் பூவலிங்கம்.

‘நீங்க எல்லாம் கெளம்புங்க நான் எங்கேயும் வர்றதா இல்ல’ என்று எல்லோரையும் கிளம்பச் சொல்லிவிட்டு, வீட்டுத்திண்ணையில் அமைதியாக உட்கார்ந்தார். அப்பாவின் மடியில் மகள் ஏறிக்கொண்டாள். எல்லோரும் அதிர்ச்சியானார்கள்.

‘வக்கத்த ஊரக்கட்டிக்கிட்டு அழுகுற நீயெல்லாம், அப்புறம் எதுக்குடா கல்யாணங்காச்சி பண்ணி புள்ளக்குட்டி பெத்த. இங்கேயே கெடந்து ச்சா..’ என்று மனைவி ஆத்திரம் தீர திட்டிவிட்டு மகளை வெடுக்கென இழுத்துக்கொண்டு கிளம்பினார்.

பூவலிங்கம் கிளம்பவில்லை.

அன்றிலிருந்து பூவலிங்கம் மட்டுந்தான் ஊரில் இருக்கிறார். அவரது குடும்பம் மட்டுமல்ல எல்லோரும் பூவலிங்கத்தை ஒரு பைத்தியம் போலத்தான் பார்க்கத் தொடங்கினர். பிறகு அவரது காது படவே பேசத்தொடங்கினர். அவர் எதையும் கண்டுகொள்ளமாட்டார். கிடைக்கின்ற அத்தக்கூலி வேலைகளுக்குப் போய் ஒத்தக்கடையில் மாமியார் வீட்டில் இருக்கும் மனைவியிடம் தவறாமல் செலவுகளுக்கு காசு கொடுத்துவிடுவார். மகளைத் தவிர வேறு யாரிடமும் எதுவும் பேசாமல் உடனே கொட்டாங்குளத்திற்கு திரும்பிவிடுவார்.

மழை, வெயிலுக்கு அவரது வீட்டைத் தவிர எல்லா வீடுகளும் இடிந்து விழுந்தன. வீதிகளில், வீடுகளில் பாம்புகள், பறவைகள், பூச்சிவட்டைகள் அடைந்தன. ஊரே பழந்தின்னி வௌவால்களின் புழுக்கை வாடையால் நாத்தமடித்தது. படிப்படியாக கொட்டாங்குளத்திற்கு வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. கருவேலங்கள் மண்டியதால் ஷேர் ஆட்டோக்களும் வரமறுத்தன. எப்போது உடைந்து விழும் என்று தெரியாத ஒரேயொரு மின் கம்பம், கொஞ்சமாக குடிதண்ணீர் ஒழுகும் தெருக்குழாய் ஒன்று மட்டும் இருக்கிறது. மற்றபடி தேவையானப் பொருட்களை டவுனுக்குள் போகும்போது மொத்தமாக வாங்கிவந்து சமைத்துக் கொள்வார். வங்காச்சியாக வேலை பார்த்தாவது மாடுகளுக்கு இரைகளைக் கொண்டுவந்து வக்கனையாக வைப்பார். தபால், ரேஷன், பஞ்சாயத்து போர்டு தேர்தல் முதல் பெரிய தேர்தல் வரை, எல்லாமும் எல்லோரும் கொட்டாங்குளத்தை கொஞ்சம் கொஞ்சமாக பொறணி பேசி, அதன்பின் அடியோடு மறந்தனர்.

பூவலிங்கம் அதிகமாக வெளியில் எங்கும் போக மாட்டார். அவரைப் பார்க்க யாரும் வரவும் மாட்டார்கள். ஊரில் அவருக்கு இருக்கும் ஒரே துணை மாடுகள்தான். அதனால், எங்கேயும் போய் தங்கவும் மாட்டார். இப்படி நல்லது கெட்டது என்று வெளியில் எப்போதாவது போனால்தான் உண்டு. அப்படி போனால் இன்று கேத வீட்டில் நடந்த கதைதான் நடக்கும்.


இரவு பத்துமணி போல வீட்டிற்கு வந்து விளக்கை ஏற்றிவிட்டு கொட்டத்தில் மாடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்தார். கேத வீட்டில் எல்லா அங்காளி பங்காளிகளும் ஒன்றுசேர்ந்து பேசியது பூவலிங்கத்தை என்றைக்கும் இல்லாமல் ரொம்பவும் படுத்தியெடுத்தது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு, மனைவியும் எதுவும் சொல்லாமல் இருந்ததுதான் அவரை மேலும் நொம்பலப்படுத்தியது.

‘கட்டக்கடைசியா இந்த ஊருக்கான அடையாளமா, இந்த ஊருப் பேர சொமந்துக்கிட்டு இருக்குறது நம்ம மூனுப்பேரு மட்டுந்தான்டா. ஒருவேள ஊர்ல எல்லாரும் சொல்ற மாதிரி எனக்கு கிறுக்குப் புடிச்சிருக்குமோ? அது எனக்கே தெரியாம கூட இருக்கோ…? மனசு வெறுத்து நானே மருந்தக் குடிக்கப் போனாக்கூட, கயித்த அவுத்துக்கிட்டு வந்து தள்ளி விட்ருங்கடா. இங்கேயே செத்து மக்கி கெடந்தாக்கூட வெளியில யாருக்கும் தெரியாது. அப்புறம் நானும் போயிட்டா செல்லமா வளர்ந்த உங்கள சீந்தக்கூட நாதியில்லாம போயிருவீங்க. ஊருப்பேர பொலம்பிக்கிட்டுத் திரியவும் ஆளில்லாம போயிரும். பாவத்த நீங்க என்ன பண்ண முடியும். ஒங்க ரெண்டு பேரு நாக்குளையும் பேச்சாயிருக்கு

எல்லாத்தையும் விட்டுத்தள்ளுங்கடா. வர்ற தைக்கு மருத சுத்துப்பட்டில நடக்குற எல்லா ரேக்ளாவுளயும் கொட்டாங்குளம் கொடி மாடுக ஜெயிக்கிற அனவ்ன்ஸ்மெண்ட்டு, மைக்குளயும் கொழாய் ஸ்பீக்கர்ளயும் கேக்கப் போது. அப்போ, பூரா பய மண்டக்குள்ளையும் கொட்டாங்குளம் பேரு பதிஞ்சு, நம்ம ஊருக்கு பாத கண்டுப்புடிச்சு தேடி வரப் போறாய்ங்க பாரு’ என்று பூவலிங்கம் சளிவடிய அழுது சொல்லும்போதே, மாடுகளின் மொக்கடா கண்களில் கண்ணீர் கசிந்து நிற்க முடியாமல் குன்னின. என்ன ஏதென்ற குழப்பத்தோடு மாடுகளைத் தடவி தடவிப் பார்த்தார்.

‘கானை’ நோய் தாக்கியதில் கால்களைத் தரையில் ஊன்ற முடியாமல் நின்றன.

‘ஏய்… யாத்தே எம்புள்ளைங்க எப்புடி இந்த கான ரணத்த தாங்கப் போதுகளோ’ என்று கால்களைப் பார்த்து துடித்துப்போன பூவலிங்கம் அவசர அவசரமாக கச்சக் கருவாட்டை தண்ணீரில் ஊறப்போட்டு அந்தத் தண்ணீரை மாடுகளின் கால்களில் அடித்துவிட்டார். நோய்காற்று பரவாமல் இருக்க கருவாட்டை துணியில் முடிந்து கொட்டகையின் எறவாரத்தில் கட்டினார். பன்றி நெய்யை வாழைப்பழத்தில் தடவி வாயிக்குள் தள்ளினார். பொத்துப்போன நாக்குகள் பழத்தை வெளியில் கக்கின. வேறேதும் பிணியா இருக்குமோ என்ற பதட்டத்தில் தாத்தனின் பாடங்களைப் பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தார்.


‘காட்டு கறவமாட்டோட சாணியா இருக்கனும். அருவா அறுப்பு வைக்கோலு, வெசந்தெளிக்காத பச்சையத் தின்னுட்டுப் போட்ட கலப்பில்லாத சாணி. முக்கியமா சாணியில எந்தத் தடமும் பதியாம இருக்கனும்டா. அதையெடுத்து எருவாக்கி எரிச்சு அதுல கம்பிய காய்ச்சி தொடையோட மேத்தோல்ல வட்டக்குறியும், கோடுகளும் இழுத்தா போகாத நோயும் விட்டுப் போகும்டா’ என்ற தாத்தனின் சொற்களை நறுக்கென்று பிடித்தார்.

‘கொஞ்சம் பொறுத்துக்கங்க வந்துறேன்’ என்று ஓடிப்போய் முனியாண்டிக்கு சூடம் ஏற்றி கும்பிட்டு பிடிமண்ணை நெற்றியில் பூசிவிட்டு தேடத்தொடங்கினார். குறுக்கு வலிக்கத் தேடியும் சாணி தட்டுப்படவில்லை. ஊரைத் தாண்டி வெகுதொலைவு போயும் சிக்கவில்லை. விடியலுக்குக் கொஞ்ச நேரந்தான் இருந்தது. அசந்துபோன பூவலிங்கம் என்ன செய்வதென்று தெரியாமல் டார்ச் லைட்டைத் தூக்கி வீசிவிட்டு அப்படியே தலையில் கை வைத்து உட்கார்ந்தார்.

‘ஏலேய்! எந்திரிடா…’ என்ற தாத்தனின் குரல் மனதுக்குள் கேட்டும் எழும்ப முடியாதளவுக்கு அசதி.

மாடுகளின் கண்ணீர் கண்கள் முகத்தின் முன்பு வந்து உருட்டிப் பார்ப்பது போலத் தோன்றியது. அக்கண்களைக் காணமுடியாமல் தவித்தார் பூவலிங்கம். வேட்டியை வாயில் கவ்விக்கொண்டு மனுசப் பாதங்கள் மிதித்திடாத, டயர்கள் ஏறிடாத கலப்பில்லாத சாணி தேடி, தூரத்தில் விளக்குகள் மின்னும் மாநகர் நோக்கி ஓடினார்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close