கட்டுரைகள்

தோப்பில் முகம்மது மீரானின் ‘கூனன் தோப்பு’ நாவல் வாசிப்பு அனுபவம் -சி. சிலம்பரசன்

                                 நீண்ட நாட்களுக்குப் பிறகான நீண்டதொரு வாசிப்பு கூனன் தோப்பு. தோப்பில் முஹம்மது மீரான் அவர்களின் சிறுகதைகள் சிலவற்றை படித்ததுண்டு. கூனன் தோப்பு நாவலினைப் பற்றி கேள்விப்பட்டதுண்டு. அதைத் தாண்டிய வேறெந்த அறிமுகமும் இன்றி இந்த நூல் நூலகத்தில் கிடைத்தது .முதல் பக்கத்திலும் பின் பக்க அட்டையிலும் இடம்பெற்றிருந்த சில வரிகளை வாசித்துப் பார்த்த போதே நிச்சயம் வாசித்திட  வேண்டும் என்று பேராவலோடு எடுத்து வந்து படித்து முடித்து விட்டு, இதைப் பற்றி எவ்வாறு எடுத்துரைப்பதென்று பல கட்ட சிந்தனைகளுக்குப் பிறகு கூனன் தோப்பினைப் பற்றி இதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். புரிந்துக் கொள்ள சற்றுக் கடினமான புதுப்புது வார்த்தைகள். மலையாளம் கலந்த தமிழ்.  

“பதினான்கு வயதுடைய பெண்ணின் சடலம். முழு நிர்வாணமாக மல்லாந்து கிடக்கிறது. மேல் நோக்கி நிற்கும் சிறு குசங்களில் பல் பதிந்த வடுக்கள். இழுத்துக் கிழித்த ஜம்பர் பாடி. இரு பக்கமாக விரிந்த கைகள். தொடையில் காய்ந்து ஒட்டிய ரத்தம்…

யார்?

 மௌனம்.

 எப்படி அடையாளம் சொல்ல முடியும்?

 எதைக் கண்டு அடையாளமாக சொல்ல முடியும்?

 துறையில் உள்ளதா ? மேகரையில் உள்ளதா?”

 என்ற முதல் பக்க வரிகளின் கீறல்களோடு தொடங்குகிறது வாசிப்பு.

                         அரபிக்கடல் ஓரத்தில் புத்தானற்றின் பக்கத்தில் கூனன் தோப்பு என்னும் தென்னம் தோப்பு அமைந்திருந்தது. அதன் தென்பகுதியில் துறைமக்களின் சிறு குடிசைகளும் வட பகுதியில் வலியாற்றில் வள்ளம் ஊன்றி வாழும் வள்ளத் தொழிலாளர்களும் வாழுகின்றனர். இரு வேறு மதங்களைச் சார்ந்த மக்களாக இருப்பினும் ஏதோவொரு பிணைப்பில் பல காலங்களாக வாழ்ந்து வருகின்றனர். சிறு கோழி திருட்டும், அதன் பின்னால் கட்டவிழ்த்து விடப்பட்ட வதந்திகளும் அந்தப் பிணைப்பை வேரறுக்கிறது.அறுந்த பிணைப்பு அருவமற்று கலவரத்தை எதிர்நோக்கிச் சென்று விட மக்களிடையே கத்தியும் ரத்தமுமாய் எட்டிப் பார்க்கிறது குரூர எண்ணங்கள். வள்ளத்து மக்கள் மேகரைக்காரர்கள் எனவும் துறையில் வாழும் மக்கள் துறைக்காரர்கள் எனவும் அழைக்கப்படுகிறனர்.

                     துறையில் உள்ள லில்லி உடைய கோழியை மேக்கரையைச் சேர்ந்த கோழி அலி திருடி விட தொடங்குகிறது பிரச்சனை.கோழி திருடியதோடு அப்பெண்ணை மானபங்கம் செய்தாக எழப்பட்ட வதந்தி லில்லியை நினைத்துக்vகொண்டிருக்கும் புல்பாஸை ஆத்திரமடையச் செய்கிறது‌. பதிலுக்கு புல்பாஸ் மேக்கரையிலுள்ள பீருக்கண்ணை தாக்க பீர்க்கண்ணுடைய அண்ணன் மம்மகண்ணு ஆட்களை சேர்த்து வந்து பதிலுக்கு துறைக்காரர்களை தாக்கி விட வன்மம் காட்டுத்தீயைப் போல் பரவி துறைக்காரர்கள் ஊரேறி வந்து வெட்டிக் கொண்டு வீழ்வதாகக் கதை நகர்கிறது.

                     கலவரங்களிடையில் மூர்க்கமாக மோதிக் கொள்ளும் ஆண்களிடையே சிக்கி உயிரையும் உயிருக்கும் மேலான மானத்தையும்  கற்பையும் இழக்க நேரிடும் பெண்களின் நிலைகளைச் சொல்லும் போது மனதைக் கசக்கிப் பிழிவது போன்ற எண்ணம் .மேக்கரையைச் சேர்ந்த சின்னஞ்சிறு சிறுமிகள் கள்ளுக்கடைக்காரரிடமும் துறைக்கார இளம்பெண் காவல்காரரிடமும் சிக்கித் தவிக்கும் நிலையைப் படிக்கும் போது அழுகை தொண்டையை அடைத்து நிற்கிறது. கோழி அலியின் அக்கா சைனாபா கற்பைக் காப்பாற்றிக் கொள்ளப் பரித்தவிக்கும் காட்சிகள் பதற வைக்கிறது.

தோப்பில் முஹம்மது மீரான்

                     ஆண்கள் கலவரங்களில் உயிரற்றுப் பிணங்களாய் இறந்து விட பெண்கள் உயிர் இருந்தும் பிணங்களாய் அலையும் வலி நிறைந்த பகுதிகளை வலியில்லாமல் படிப்பது சற்று கடினம்.

                    பாலுக்கு ஏங்கி பரிதவிக்கும்  பச்சிளம் குழந்தைக்கு மாற்று மதத்தைச் சார்ந்த தேவி என்னும் பெண் பால் கொடுக்கும் காட்சிகள் நெஞ்சை உருக வைத்து விடுகிறது.

                    இதனிடையில் காட்டப்படும் பாறையடி நூஹு ஹாஜியார் அதிகார வர்க்கத்தின் ஆணிவேராகக் காட்டப்படுகிறார். பழி வாங்க வேண்டுமென்ற குரூரம் மனிதாபிமானற்ற செயல்களை செய்ய தூண்டுகிறது. ஒழுங்கீன செயல்களுக்கு வழிவகுக்கிறது.

                    மம்மகண்ணு -சைனாபா காதலும் புல்பாஸ் – லில்லி காதலும் கதையோட்டத்தில் தத்தளித்து நகர்கிறது.

                    கடைசியில் வன்முறை மீதான பற்று அறுந்து மதங்களின் மீதான ஈர்ப்பு கடந்து நான் மனிதன் என்னை என்ன வேண்டுமானலும் செய்து கொள்ளுங்கள் என்று புல்பாஸ் கதறும் போது ஒரு நிகழ்வை நினைவு கூருகிறான்.

 “ஒருமுறை பக்கத்து துறைக்காரர்கள் தாக்க வரும் போது மம்மகண்ணு புல்பாஸைக் காப்பாற்றி ஒரு வார்த்தை கூறுகிறான்.”எங்க தொறைக்காரங்களயாடா அடிக்குற? ” அதை நினைத்து அழுகிறான் புல்பாஸ். அந்த எங்க துறைக்காரர்கள் என்ற வார்த்தை எந்தனை ஒற்றுமை மிக்க சகோதரத்துவத்தை விதைப்பது. கடைசியில் தன்னால் எல்லாம் அறுபட்டதை நினைத்துக் கதறுகிறான்

                 இறுதியாக மம்மகண்ணு இறந்து விட அவனின் கடைசி ஆசையாய் அவன் ஓடம் கடலில் அவிழ்த்து விடப்படுகிறது. அது மெல்ல கடல்களின் அலைக்களுக்கேற்றவாறு நகர்வதோடு முடிகிறது கதைக்களம்.

                   அந்த ஓடத்தினைப் போலத்தான் நம் எண்ணங்களும் புத்திகளும். நிலையற்று முன்யோசனையின்றி எதை எதையோ செய்து விடுகின்றன. பின்னால் வேதனை கடலுக்குள் மூழ்கித் தவிக்கின்றன.

                 மதங்களின் பால் மனிதர்களைப் பிரித்து நிற்கும் குறியீடாகக் காட்டப்படும் கூனன் தோப்பு கடைசியாக கலவரம் உண்ட மிச்சமாய் எஞ்சி நிற்கிறது.

                    மனிதத்தைத் தொலைத்து விட்டு இதைத் தேடி அலைகிறோம் நாம். மனிதன் வாழ்வதற்கே மதங்கள் அன்றி சண்டையிட்டு சாவதற்கா மதங்கள்? எல்லா மதங்களிலும் பெண்களை மதிக்கத்தான் போதிக்கப்படுகிறது .பிறகு ஏன் இந்த அவலங்கள்.

                    மதங்களைத் தூக்கிச் சுமப்பதை விடுத்து இனியாவது மனிதத்தை சுமப்போம் வாருங்கள்

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close