சிறுகதைகள்
Trending

கோடிட்ட இடங்கள்

கார்த்திகா முகுந்த்

ந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறேன். எங்கே..? எங்கே..?’ யோசித்துக் கொண்டே சீட்டில் அமர்ந்திருந்தாள் சந்தியா. தேநீர் இடைவேளை.

“என்ன சந்தியா… டீ இன்னும் வரலையா…” – விடுவிடென்று நடக்கையிலேயே கேள்விகளை எழுப்பிவிட்டுப் போவதுதான் கேஷியர் செல்வநாயகம் வழக்கம்.

“ஃப்ளாஸ்க் இங்கே கீழே இருக்கு…” – இதற்குள் அவர் பாங்க் வாசலைக் கடந்திருந்தார்.

மேஜை மீதிருந்த காகிதங்களை ஒதுக்கிவைத்துவிட்டு சாவகாசமாக இருக்கையில் சாய்ந்தாள்.

லைட் பிங்க் கலர் சேலையில், மூக்கு நுனியில் உட்கார்ந்திருந்த கண்ணாடியை ஒதுக்கிவிட்டபடி ஏதோ ஒரு ஃபார்மை நிரப்பிக்கொண்டிருந்த பெண்ணை, தேநீர் அருந்தியவாறே மறுபடி மறுபடி பார்த்தாள்.

யாரென்று ஞாபகம் வரவில்லை. பாரதியார்தான் ஞாபகத்துக்கு வந்தார். “ஆசைமுகம் மறந்துபோச்சே… இதை யாரிடம் சொல்வேனடி…” முணுமுணுத்துக் கொண்டாள். .

‘தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளை. இங்கு ஆயிரம்பேர் வருவார்கள்… எல்லோரையும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமா..?’

“எக்ஸ்க்யூஸ் மீ மேம்…”

“யெஸ்… வாட் கன் ஐ டூ ஃபார் யூ..?”

“என்னை ஞாபகம் இருக்கா..?”

“ஸாரி ஸார்… தெரியலை… யார் நீங்க… என்ன வேணும்..?” – சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

“டி.டி. டெபாசிட் பண்ணனும்… செல்லான் வேணும்…”

“அந்த கார்னர்ல ஸ்டாண்ட்ல வெச்சிருப்பாங்க பாருங்க…”

“இதெல்லாம் ஒரு விளையாட்டா அப்பாவுக்கும் பொண்ணுக்கும்… கூட வேலை பார்க்கறவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க..? என்னடி இது ஆஃபீஸ்ல கூட உன் விளையாட்டுத்தனத்தை விடமாட்டியா?”

“ஸாரிம்மா…”

“நாங்க வந்து எவ்வளவு நேரமாகுது தெரியுமா?”

“என்னவோ யோசனைல இருந்துட்டேன்மா… டி.டி. டெபாசிட் செய்யணும்னா எங்கிட்ட கொடுத்துவிட வேண்டியதுதானே…” – கவுன்ட்டரை விட்டு வெளியே வந்து, அம்மா அப்பா அருகே நின்றுகொண்டாள்.

“இதோ இருக்காரே உலகத்துல இல்லாத ஒரு அப்பா… ஷாப்பிங் போய்ட்டு அப்படியே போய் நாமளே டெபாசிட் பண்ணிட்டு வந்துடலாம்னார்… என்னமோ பொண்ணைப் பார்த்துப் பல வருஷம் ஆன மாதிரி…”

“என்னப்பா… நான் என்ன சின்னப் பொண்ணா… புதுசா ஸ்கூல்ல சேர்த்துவிட்ட மாதிரி டெய்லி வந்து வந்து பாக்கறது ஒரு வேலையா..?”

அப்பாவுக்கு எப்போதும் ஆச்சர்யம்தான். பேங்க்குக்குள் நுழைந்ததும் எப்படித்தான் இப்படி மாறி விடுகிறாளோ..? வீட்டில் சின்னப் பெண் போல் எப்போதும் துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பாள். இன்று காலை கூட என்ன நடந்தது..?

 

ம்மா… இந்த ஸீ ப்ளூ கலர் சேலை எங்கேம்மா..?”

“அங்கே கப்-போர்ட்லதானேடி இருக்கு…”

“எனக்கு டைம் ஆச்சு… கொஞ்சம் வந்து எடுத்துக் கொடேன்” – அலமாரி அடுக்குகளில் கலைத்தபடி கேட்டாள் சந்தியா.

“நாலு கழுதை வயசாகுது… தன் பொருளைத் தானே ஒழுங்கா வெச்சுக்கத் தெரியாது… ஊருக்கு இளைச்சவ ஒருத்தி இருக்காளே எதுக்கெடுத்தாலும் இந்த அம்மா…” – அருகில் வந்து தேடிய அம்மா, சந்தியா தலையில் ஒரு குட்டு வைத்தாள். அவள் இடது கைக்குக் கீழேயே இருந்த சேலையை எடுத்துக் கொடுத்தாள்.

“ஒக்கல்ல பிள்ளையை வெச்சுட்டு ஊரெல்லாம் தேடினாளாம் ஒருத்தி…”

“நீயாம்மா அது..?”

“ஆங்… உங்க பாட்டி…”

“ஓ… டோட்டல் ஃபேமிலியே அப்படித்தானா…”

“வாய்… வாய்… இந்த வாய் மட்டும் இல்லைன்னா உன்னெல்லாம் நாய் தூக்கிட்டுப் போய்டும்…”

“பாருங்கப்பா அம்மாவை… எப்போ பார்த்தாலும் என்னை ஏதாச்சும் சொல்லிக்கிட்டு…” – காய்கறிக் கூடையோடு உள்ளே நுழைந்து கொண்டிருந்த அப்பாவிடம் ஓடிவந்தாள் சந்தியா.

காலை பேப்பரும் கையுமாக ஈஸி சேரில் சாய்ந்து கொண்டவர் –  “காலங்கார்த்தாலே ஆரம்பிச்சிட்டீங்களா அம்மாவும் பொண்ணும்… சௌ… கொஞ்சம் காஃபி கொடேன்… அப்புறம் உங்க சண்டைய வெச்சுக்கலாம்”

“ஆயிரத்தெட்டு தடவை  சொல்லியாச்சு அப்படி கூப்பிடாதீங்கன்னு… சௌவ்வு…. கிவ்வுன்னுக்கிட்டு… இந்தக் கடன்காரிக்குத்தான் வயசுக்கேத்த கூறு வரலைன்னா, நீங்க ஒண்ணு பிள்ளையில்லாத வீட்டுல கிழவன் மாதிரி…” – சௌந்தரம் ரௌத்ரமானார்.

“நீ மட்டும் பழமொழி சொல்லாம ஒரு நாளாச்சும் கடத்திடு… நான் அன்னைக்கே உன்னை சௌன்னு கூப்பிடறதை நிறுத்திடறேன்…”

நாள் முழுதும் ஓயாது இந்த ஜாலி சண்டை. புன்னகையுடன் பெற்றோரை ஓரிரு நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவள் மணி ஒன்பது அடிக்கும் சத்தம் கேட்டதும் அவசரமாய், ஃப்ரிட்ஜிலிருந்து ஒரு சாக்லேட் பாரை உருவியபடி வண்டிச் சாவியை எடுத்துக்கொண்டு ஓடினாள்.

‘எப்படித்தான் இவ்ளோ உயரம் வளர்ந்தாளோ… இவளுக்கு எப்படித்தான் பாங்க்கில் வேலை கிடைத்ததோ…’ எப்போதும் போல் மகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டார் அப்பா.

அவர் மகள்தான். ஆனால் வங்கியில் பார்த்தால் யாரோ மூன்றாவது மனுஷி போல் தோன்றும்; அவர் அங்கு போனால்கூட அவளும் அப்படித்தான் நடந்து கொள்வாள். வங்கிப் படியைத் தாண்டிய பிறகுதான் அவர் தன் அப்பா என்பதே நினைவுக்கு வந்தது போல், கண நேரத்தில் சிரிப்பும் குறும்பும் தொடங்கிவிடும்.

அவரும் வங்கி ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர்தான். அதே வங்கியில் மகளும் பணி செய்வதில் அவருக்கு ஒரு பெருமை. பொறுப்பும் திறமையும் ஒருசேர இருக்கையில் அமர்ந்திருப்பவள், நொடியில் தன் செல்ல மகளாக மாறிவிடும் தருணங்களை ரசிக்கவே, சில மாலைகளில் ஏதோ வேலையாக வந்தது போல், பழைய நண்பர்களைப் பார்க்க வந்தது போல் அவர் வங்கிக்குச் செல்வார்.

 

ந்தியா அவர்களுக்கு ஒரே பெண். செல்லப் பெண். அவள் விருப்பம்தான் பெற்றவர்களின் சந்தோஷம். அவள் சந்தோஷம்தான் பெற்றவர்களின் விருப்பம். படிப்பில் எப்போதும் முதல் வரிசையில் இருந்தவள்.

“சிவில் சர்வீஸஸ் எழுதேம்மா…”

“இல்லேப்பா… உங்களை மாதிரி பேங்க்ல ஜாய்ன் செஞ்சு நிறைய ப்ரமோஷன் வாங்கி சேர்மன் ஆகப்போறேன்…” – சொன்னதோடல்லாமல் எக்ஸாம் எழுதிய முதல்முறையே தேர்வாகிவிட்டாள். இதிலெல்லாம் பெற்றோருக்கு மிகவும் பெருமை.

பொதுவாக ஒற்றைப் பிள்ளையாகப் பிறந்தவர்களுக்கு பகிர்தல், விட்டுக்கொடுத்தல்… போன்ற குணங்கள் அபூர்வம். சந்தியாவும் சின்ன வயதில் அப்படித்தான். வளர வளர பல விஷயங்கள் மாறிவிட்டன. எப்போதாவது அபூர்வமாகத் தலைகாட்டும் பிடிவாத குணம், தனக்கென்கிற எண்ணம்… என்றாலும் பெற்றோருக்குப் பொன்குஞ்சுதான் சந்தியா.

அனைவரிடத்தும் அன்பு. முன்பின் தெரியாதவர்களுக்கும் உதவும் பண்பு – இதெல்லாம் சந்தியாவைப் பற்றிப் பெருமை கொள்ள பெற்றோருக்குப் போதுமானவை.

ஒருமுறை அப்பாவும் பெண்ணும் வாக்கிங் சென்றுகொண்டிருந்தனர். பை நிறைய காய்கறிகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தவரின் பை அறுந்து காய்கறிகள் எல்லாம் சிதற, ஓடிச் சென்ற சந்தியா காய்கறிகளைப் பொறுக்கி பையில் போட்டு முடிச்சிட்டுக் கொடுத்தாள். அவர் சொன்ன ‘தேங்க்ஸ்’க்குக் கூடக் காத்திராமல் திரும்பி வந்துவிட்டாள்.

“அவரேதான் திரும்பி வந்தாரேம்மா… நீ எடுத்து வைக்கலைன்னா கூட அவரே எடுத்திட்டுருப்பாரு… இதுக்குப் போய் இப்படி நீ ஓடணுமா..?”

“இல்லைப்பா… அதுக்குள்ள ஏதாச்சும் வண்டி வந்திருந்தா ஆக்ஸிடென்ட் கூட ஆகியிருக்கும்… அவ்ளோ காய்கறி சிந்திக்கிடந்தது… அதான்…”

சிறுசிறு உதவிகளில் கிடைக்கும் மனநிறைவை மகளிடம்தான் அவர் கற்றுக்கொண்டார்.

தெரியாமல் சின்னச் சின்ன தவறுகள் செய்துவிடுவாள். திடீர் திடீரென்று நினைத்தாற்போல் அதற்காக வருந்திக் கொண்டிருப்பாள். அதுபோன்ற சமயங்களில் ஆறுதல் வார்த்தைகள் எதுவும் அவளிடம் உதவாது.

ஒரு தேர்த்திருவிழா சமயம் அன்று, தேர் பார்த்துவிட்டு வந்தவள் முகம் வாடிப் போயிருந்தது. போக்குவரத்து நிறுத்தப்பட்ட காலியான ரதவீதிகளில் ‘விர்’ரென்று பைக்கில் பறப்பார்கள் பையன்கள். சாலையைக் கடக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பார்வையற்றவருக்கு சந்தியா அச்சமயம் உதவியிருக்கிறாள். அவர் அவள் பெயரைக் கேட்க, ஏதோ ஒரு தயக்கம்; எதுவும் சொல்லாமல் ஓடி வந்துவிட்டாள்.

“அவர் க்ராஸ் பண்ண முடியாம நின்னப்போ தயங்காம அவரை க்ராஸ் செஞ்சுவிட்டேன். ஆனா பேர் கேட்டப்போ சொல்லாம வந்துட்டேன்பா… ஏதாச்சும் வருத்தப்பட்டிருப்பாரோ… நான் எதுவும் ஹர்ட் பண்ணிருப்பேனோ…?”

“அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டாங்கம்மா…”

சிலநாள் கழித்து, பேருந்து நிலையத்தில் அவரைத் திரும்பச் சந்தித்தவள், தன்னை அவரிடம் நினைவூட்டி அறிமுகப்படுத்திக் கொண்டு வந்தாள். அதன்பிறகுதான் அவள் மனம் சாந்தியடைந்தது என்பதை அவள் முகமெல்லாம் சிரிக்க அந்நிகழ்ச்சியை விவரித்தபோதுதான் கண்டுகொண்டார்.

ப்பா… அப்பா… என்னப்பா… நின்னுக்கிட்டே தூங்கறீங்க..?”

“ஒண்ணுமில்லைம்மா… நீ சொன்னியே… எனக்கும் அதே மாதிரி ஏதோ ஞாபகம்…”

அப்பா சொன்னதும், சந்தியா மறுபடியும் அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தாள். யார் இவள்?

“சரிப்பா… டிடியைக் கொடுத்துட்டுப் போங்க… நானே டெபாசிட் பண்ணிட்டு வந்துடறேன்…”

பெற்றோர் கிளம்பியதும் இருக்கைக்குத் திரும்பினாள்.

“எக்ஸ்க்யூஸ் மீ… புதுசா அக்கவுன்ட் ஓப்பன் பண்ண வந்திருக்கேன். சுப்ரமணியன் சார் இன்னைக்கு லீவுன்னு சொன்னாங்க… அவர் சொன்ன மாதிரி அப்ளிகேஷன் ஃபில்-அப் செஞ்சு கொண்டு வந்திருக்கேன். ஆனா அஞ்சு இடத்துல சைன் போடச் சொன்னார். நாலு இடத்துலதான் மார்க் பண்ணியிருக்கு… கொஞ்சம் செக் பண்ணி இன்னொரு சைன் எங்கே போடணும்னு சொல்றீங்களா…?”

“கொடுங்க…” – அப்ளிகேஷனில் பெயரைப் பார்த்ததும் சந்தியாவுக்குப் ‘பளிச்’சென்று நினைவு வந்துவிட்டது.

சுமதி!

‘எவ்வளவு நாட்கள் இவளை நினைத்தும், நான் செய்த தவறை நினைத்தும் அழுதிருக்கிறேன்! அந்தத் தெற்றுப் பல் சிரிப்பையும், முதுகைத் தாண்டியும் நீண்டிருக்கும் மடித்துப் போட்ட பின்னலையும் எப்படி மறந்தேன்..? கலங்கிய கண்களையும் அழுகையில் சிவந்த அந்த முகத்தையும் கூட எப்படி மறக்க முடியும்..?’

குட்டையாகக் கத்தரித்த தலைமுடி; கொஞ்சம் குண்டாகியிருக்கிறாள். அதனால்தான் அடையாளம் காண முடியவில்லை.

சுமதி, சந்தியாவின் பள்ளித் தோழி. தோழி என்று சொல்லிக்கொள்கிற அளவுக்கு அவ்வளவு நெருக்கமில்லை. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரே பிரிவில் படித்தார்கள். இருவரும் வேறு வேறு பெஞ்ச். கொஞ்சம் கொஞ்சம் புன்னகை, அவ்வப்போது ஓரிரு வார்த்தைகள் தவிர நெருக்கமாகப் பழகியதில்லை. ‘அதனால்தான் அந்தத் தவறைச் செய்துவிட்டேன்.’

ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் நடந்த சம்பவம் அது. நாற்பது பேர் படித்த வகுப்பில் சந்தியாதான் க்ளாஸ் லீடர். தேர்வின் பொருட்டோ வேறு எதற்காகவோ மாணவிகளிடம் சில விவரங்கள் சேகரிக்க வேண்டியிருந்தது. அவரவர் இருக்கையில் இருந்தபடி தகவல்கள் தர, நீலு அடுத்தடுத்த பெயர்களை வாசிக்க, பெயர், தந்தை பெயர், வீட்டு முகவரி, அங்க அடையாளங்கள்… போன்ற தகவல்களை எழுதிக் கொண்டிருந்தாள் சந்தியா.

சுமதியின் முறை வந்தது. நீலு அவள் பெயரை வாசித்ததும், சந்தியா கேட்டாள்.

“எஸ்… யு… ம்… ஏ…ட்டி…ஹெச்…ஐ… கரெக்ட்டா…?”

“ம்…”

“அப்பா பேர்…?”

“அம்மா பேர் நிர்மலா…”

“அம்மா பேர் வேண்டாம்… அப்பா பேர் மட்டும் போதும்…”

“இல்லை… நீ அம்மா பேரையே எழுதிக்கோ…”

“மிஸ் அப்பா பேர்தானே வாங்கச் சொல்லியிருக்காங்க… அப்புறம் திட்டினாங்கன்னா, நீயா வாங்குவே… நான்தானே வாங்கணும்…”

“சந்தியா… பரவாயில்லை… அம்மா பேரையே எழுதிக்கோ…” – நீலு குறுக்கிட்டாள்.

இதற்குள் சுமதி அழத் தொடங்கிவிட்டாள். நின்ற இடத்திலேயே ஏங்கி ஏங்கி அழுதுகொண்டிருந்தாள்.

“ஐயையோ… இப்போ ஏன் அழறே…?” – சந்தியா பயந்துவிட்டாள்.

சுமதி வகுப்பை விட்டு வெளியேறி ஓடிவிட்டாள். மைதானத்தில் இருந்த பூவரச மரத்தடியில் போய்தான் நின்றாள்.

“என்னடி… நீலு… எனக்கு ரொம்ப பயமாயிருக்கு… எதுக்கு இப்படி அழறா… மிஸ் கேக்கச் சொன்னதைத்தானே நான் கேட்டேன்…”

“இன்னும் நீ சின்னப் பிள்ளையாவே இருக்கே… உனக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது…”

“சும்மா திட்டாதே… இப்போ அவ மிஸ்கிட்ட போய் என்னைப் பத்தி எதுவும் சொல்லுவாளா… மிஸ் என்னைத் திட்டுவாங்களா… எனக்கு ரொம்ப பயமாயிருக்கே…”

“அவ கிரவுண்ட்லதான் நிக்கிறா… நீ போய் அவகிட்ட ஸாரி கேளு…”

“நான் என்ன தப்பு செஞ்சேன்… நான் எதுக்கு ஸாரி கேக்கணும்…?” – முரண்டு பிடித்தாள்.

தந்தை என்கிற உறவே இல்லாமலும் குடும்பங்கள் இருக்க முடியும் என்பதை அவளால் எண்ணிப் பார்க்க முடிந்ததில்லை. வயதுக்கு மீறிய பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைகளில் நிற்கும் சின்னஞ்சிறு பிள்ளைகள்; அவர்கள் உருவாக நடத்தையால் காரணமாகிவிட்டு அதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் நடமாடுகிற ஆண்மகன்கள் – இதைப் பற்றியெல்லாம் சந்தியா தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டாள்.

டீச்சரிடம் திட்டு வாங்க வேண்டியிருக்குமோ என்ற பயத்தினால்தான் அன்று, சுமதியிடம் ஸாரி கேட்டாள்.

சிக்கலான பிரச்னைகளைக் கொண்ட சமூக உறவுகள் பற்றி மனம் பக்குவமடைந்த பிறகு, சுமதியிடம் தான் நடந்துகொண்ட முறையை எண்ணி மிகவும் வருந்தியிருக்கிறாள். அத்தனை மாணவிகளின் முன்னால், அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்த சிக்கலான உலகின் சாட்சியாக சுமதி நின்றாள். வேதனையும், கோபமும், அவமானமுமாக அவள் சந்தியாவைப் பார்த்த பார்வை நெடுநாள் கனவில் கூட வந்துகொண்டிருந்தது.

‘அந்த சுமதியை நான் மறந்துவிட்டேனா… அவளை எப்படியாவது தேடிப் பிடித்து மன்னிப்பு கேட்க வேண்டுமென்று எத்தனை நாள் எண்ணியிருக்கிறேன்… அவளை நான் மறக்க முடியுமா… இது மறதி இல்லை; மயக்கம். பழகாத புதுஇடங்களில் பாதித் தூக்கத்தில் விழித்து எந்த இடம் என்று தடுமாறுவோமே… அதுபோன்ற மயக்கம்.’

ஆனால் அவள் கூட என்னை மறந்து விட்டாளா…

“இந்த தேர்ட் பேஜ்ல மேல சைட்ல திருப்பிப் போடுங்க…”

“ஓக்கே… தேங்க்ஸ்…… அவ்வளவுதானா…?”

“ஆமா… அப்புறம்… எப்படி இருக்கீங்க…?”

புருவத்தைச் சுருக்கினாள் சுமதி.

“நான் சந்தியா…”

ஆச்சர்யம், குழப்பம், கண நேர வெறுப்பு, அதன் மேல் படிந்த புன்னகை… அவள் முகத்தில்.

“ஓ… சந்தியா… எப்படி இருக்கே..?”

“நல்லா இருக்கேன்… நீ எப்படி இருக்கே… எங்கே இருக்கே… என்ன பண்றே…?”

பேசாமல் போய்விடுவாள் என்று எண்ணியிருக்க, அவள் தன்னோடு பேசியதும் மனம் பரபரப்பையும், அமைதியையும் ஒருசேர அனுபவித்தது.

“நல்லா இருக்கேன்… சென்னைல வேலை பார்த்துட்டிருந்தேன்… இப்போ கல்யாணத்துக்குப் பிறகு இங்கேயே வந்துட்டேன்… மதி… இவங்க என் ஃப்ரெண்ட் சந்தியா… என் ஹஸ்பண்ட் மதிவாணன்…” – ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துவைத்தாள்.

“உங்களைச் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்…”

உண்மையான மகிழ்ச்சியுடன் கூறினாள். அறியாமலே ஆனாலும், தான் காயப்படுத்திய தன் தோழிக்கு மன அமைதியும், பாதுகாப்புமான ஒரு வாழ்க்கை அமைந்திருப்பதை அறிந்ததில் வந்த மகிழ்ச்சி. அந்த மதிவாணனிடத்து காரணமில்லாத நன்றியுணர்வும், ஏதோ ஒரு பெருமிதமும் தோன்றியது.

“நீங்க ரெண்டு பேரும் ஒரு சமயம் எங்க வீட்டுக்கு வரணும்… அம்மா, அப்பால்லாம் சந்தோஷப்படுவாங்க…” – சுமதி தன்னை மறுத்துவிடுவாளோ என்கிற பயத்தின் நிழல் அவள் சொற்களில்.

“நிச்சயமா வர்றோம்…” ஈறுகள் தெரிய புன்னகைத்தாள் சுமதி.

காலத்தின் கருணை அளப்பரியது. அது காயங்களை ஆற்றுகிறது. காயப்பட்டவர்களின் காயங்களை ஆற்றுகிறது. அதன்மூலம் காயப்படுத்தியவர்களின் காயங்களும் ஆற வாய்ப்பை வழங்குகிறது.

சுமதியும், மதிவாணனும் கிளம்ப…

“சுமதி… ஒரு நிமிஷம்…”

அவள் திரும்பி வந்தாள்.

“என்ன சந்தியா…?”

“ரொம்ப ரொம்ப ஸாரி…”

சுமதி ஏனென்று கேட்கவில்லை; புன்னகைத்தாள். கலங்கிய கண்களோடு பதிலுக்குப் புன்னகைத்தாள் சந்தியா.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close