சிறுகதைகள்
Trending

கிளைகள் – அகராதி

சிறுகதை | வாசகசாலை

18F என நீலப்பெயிண்டால் சிமெண்ட் சரிவில் எழுதப்பட்டிருந்த இடத்தில் வெள்ளை  நிற ஃபோக்ஸ் வேகனுக்கும்‌ அடர் மஞ்சள்  நிற – இந்தக் கலரிலாமா கார் வாங்குவார்கள் – மாருதி சுசுகிக்கும் இடையில் எனது வெள்ளை  நிற ஹோண்டா ஸிட்டியைச் செருகிவிட்டு இறங்கி நடந்தேன். செக்யூரிட்டி சரியாக நிறுத்துகிறேனா என்று பார்த்துக் கொண்டிருந்தார்- சரியாத்தான்யா நிறுத்தியிருக்கேன்… யாராவது  ஒருத்தர்  குடிச்சிட்டு  ஒரு  ராத்திரி  மாத்தி நிறுத்தினா  இருக்கிற  எல்லாரையும்  சந்தேகப்படறது! – நைட் ஷிஃப்ட் இன்னைக்கு  இல்லை என்று ஒரு தகவலாகக்  கூறி அவசரமாகப்  புன்னகைத்து வேகமாக  லிஃப்டிற்குள் ‌ புகுந்தேன்.

இந்தப் பட்டண வாழ்விற்குப் பழகி இருபது வருடங்களாயிற்று. படித்து முடித்தவுடன் வேலைக்கு வந்தது. பின் திருமணம், குழந்தைகள் என்றான பின்னும் நான் உண்டு என் வேலையுண்டுதான். இடையில் இரண்டு முறை நிறுவனங்கள் மாறியபோதும் இதே முறைமைதான். நண்பர்கள், குடும்பம் என்று போகிறது பிழைப்பு. ஆறாம் தளம் அடைந்து வீட்டிற்குள் நுழைகையில் புத்திக்கு எட்டியது ஏன் இவ்வளவு அவசரமாய் லிஃப்ட் பிடித்து உள் வருகிறோம்!

எதிர் பக்கமிருந்த லிஃப்டில் இருந்து வித்தியாசமான நீலக்கலர் ஷர்ட் பிளாக் பேண்ட்டில் – இவனுக்கென்று ஸ்பெஷல் புளுவெல்லாம் எங்குதான் கிடைக்குமோ – இறங்கிய  பக்கத்து ஃபிளாட் தங்கவேல் என்னை இடிப்பது போல் கடந்து சரக்கென அவன் ஃபிளாட்டிற்குள் நுழைந்தான்.  இறங்கி என்னை இடிப்பது போல் வந்த இடைவெளியில் வெகு விரைவாக ஒரு புன்னகையையும் ஸ்பீட் டெலிவரி செய்திருந்தான். அவனது நான்கு வயது மகள்  கூட அவ்வளவு  அவசரமாய்  இடைப்பட்ட இடங்களைக் கடப்பாள். பெரிய மகனுக்கும் மனைவிக்கும் அந்தக் குட்டிப்பெண் என்றால் இஷ்டம். “பாப்பா.. அண்ணாக்கும் ஆன்ட்டிக்கும் இன்னைக்கு ரெண்டு ஹாய் சொல்லு” என்பான். அது “ரெண்டு ஹாய்” என்று கூறி கைக்காண்பித்துவிட்டு குடுகுடுவென்று ஓடி லிஃப்ட்டிற்குள் தாவும்.

நாமும்தான்  இந்த அவசரத்திற்குள் எப்போது புகுந்து கொண்டோம், இதிலிருந்து வெளிவர யோசித்ததே இல்லையே எனப் பலவாறு சிந்தனை ஓடியது.  நிதானமாக இருக்கப்  பழக  வேண்டும் என்று மனது கூறியது.   குளியல் அறை சென்று வேகவேகமாக உடற்சுத்தம் செய்து வெளிவந்து தேநீருக்காகச் சமையல் அறை நோக்கியபோது என் மனது என்னையே கேலியாய்ப் பார்த்தது. வீட்டில் எல்லோரையும் நினைத்துப் பார்க்கிறேன். ஒருவகையில் எல்லோருமே பரபரவென்றே இருக்கிறோம். இதனால் என்ன பயன்? பாதிப்புதான். நிதானமாக உண்பது இல்லை. அப்பாடாவென்று அசந்து தூங்குவதில்லை.

எப்போதாவது இது போன்ற சிந்தனைகள் எட்டிப் பார்த்து விலகும். இன்று கொஞ்சம் கூடுதலாக அலைக்கழித்தது. கிச்சனில் ரெடியாக நிரப்பப்பட்டு வைத்திருந்த தேநீர் கோப்பையுடன் போய் முன்னறையில் அமர்ந்துகொள்கையில் குடும்பத்தினர் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன்.

அப்பாவும் மகனும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மகன் கண்கள் இடுங்கி வாயைப் பொத்திச் சிரித்துக் கொண்டிருந்தான். அப்பா சிரித்துக் கண்டித்தார். இப்போது ஒருவாறாய் சிரிப்பை நிதானப்படுத்தி வலது கையை உயர்த்தி ஹைஃபைவ் செய்து கொண்டனர். பையன் இப்போது தோளுயரத்திற்கு வளர்ந்து விட்டான். மிகச்சிறிய வயதிலேயே அவனுடன் எதெதுவோ  பகிர்ந்து கொள்ளும் அப்பாவைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இத்தூணூன்டு பேரனிடம் இவ்வளவு பெரிய மனிதர் பேச என்ன இருக்கிறது! ஆனால் நிறைய இருந்தது என்பதைத் தெரிய வைத்திருந்தனர் இத்தனை நாட்களில்…. அப்பா இங்கு வந்த ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக மந்திரித்து விட்டது போல் இருந்தார். மகன் பிறந்து ஒரு வருடத்தில் நிறைய மாற்றங்கள். சில பொழுதுகளில் மகன் பேசுவது அப்பா பேசுவது  போலவே  இருக்கும்.  இப்போதும் இருவரும் நெருக்கமான நண்பர்கள். அம்மா மட்டும் அவ்வப்போது ஊர் ஞாபகம், ஃபிளாட் சிஸ்டம், அடைபட்டுக் கொள்ளுதல் என புலம்பிக் கொண்டிருந்தார். ஆனால் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளின் வருகை புலம்பலை நிறுத்தியிருந்தது.

மனதாரப் பேச, பழக‌ முடியாமல் என்ன வாழ்விது என்னும் அம்மாவை செல்போன் கொடுத்து அமைதிப்படுத்தியிருந்தேன்.

சில நேரங்களில் வார்த்தைகளைக் கட்டிப்போடாமல் மனதுவிட்டு சலிக்கச் சலிக்கப் பேசும் பேச்சு  நமக்கு ஒரு உரம்  என்பது  அம்மாவின் வாதம். ஃபோனில் அவ்வப்போது ஊர்க்காரர்களிடம் மணிக்கணக்கில் பேசுவார். ஒரு உறவிடமோ நட்பிடமோ பேசினால் பேசுபவரின் அக்கா, அண்ணன், தங்கையிலிருந்து அவர்களின் பிள்ளைகள், பேரன் பேத்திகள், தெருவில் வசிப்பவர்கள் என்று தெரிந்த ஒருவரையும் விடாமல் விசாரிப்பார்.  இங்கு எல்லாம் அளவாகத்தான் பேசுவது வழக்கம். ஃபோனில் பேசும்போது மட்டும் எப்படி இவ்வளவு நினைவும் உற்சாகமும் வருகிறது என்று ஆச்சரியமாக இருக்கும். மனைவி கூட ஆச்சரியப்பட்டிருக்கிறாள்.

அம்மாவும் அப்பாவும் உறவினர்களின்  சுப துக்க நிகழ்வுகளுக்கென்று வெளியூர் போய் வருவார்கள். கோவில் குளம் என்று பக்திப் பயணங்களையெல்லாம்  கூட போன வருடத்தோடு நிறுத்தி விட்டார்கள். உடல் அசந்து வருகிறது.

இப்போது இவர்கள் பேசிக்கொள்வதை வைத்துப் பார்த்தால் உறவுப் பெரியவர் ஒருவர் வைகுண்டப் பதவி அடைந்து விட்டார் என்பது புரிந்தது.

பிறகு,

அப்பாவின் முறைப்பு , அம்மாவின் வேண்டுகோள், மனைவியின் முனகல், பிள்ளைகளின்  வியப்புக்  கேள்விகளுக்கிடையே  அடுத்த நாள் காலையில் நான் போக வேண்டுமென ஒருமனதாக முடிவாயிற்று.  அப்பாவிற்கு நெருக்கமானவராம்.

ஒன்று விட்ட – இரண்டும் விட்ட?! – முகம் தெரியாத உறவுக்கார முதியவரின் மரணத்திற்காக தந்தையின் பூர்வீக பூமிக்கு… பயணத்திற்குத் தயாரானேன். அந்த ஊருக்குப் போக பள்ளிப் பருவத்திலேயே பிடிக்காது. கடைசியாகச் சென்று வந்த நாள் கூட நினைவில் இல்லை. அப்பாவிற்கு மெடிக்கல் செக்கப் இருக்கிறது.  உபத்திரவம் இருக்கிறது. சற்று தேறினால்தான் போய்வர முடியும். வேறு வழி…

சிறுவயதில் போனது. ரூட் நினைவிருக்கிறது. படிக்கிற பிள்ளைகள், படிக்கிற பிள்ளைகளென எல்லா விசேஷங்களுக்கும் அம்மா அப்பா இருவர் மட்டுமே சென்று வந்து விடுவார்கள். சில சமயங்களில் எவரேனும் ஒருவர் போய் வருவர்.  இரண்டு முறை  குலதெய்வ  வழிபாட்டுக்குச்  செல்கையில் நெருங்கிய உறவினர்களைக் கண்டதுண்டு. ‘நல்லா படி’ என்பதாக சந்திப்பு முடிந்துவிடும். கிடைக்கும் ஆறேழு நிமிடங்களில் அந்தக் கூட்ட நெரிசலில் என்னப் பேசிவிட முடியும்! ஒரு சிலர் முகம் மட்டுமே மங்கலாய் நினைவில் இருக்கிறது. எப்படி யாரென்று அடையாளம் கண்டு பேசி வருவதோ தெரியவில்லை…

இரு பேருந்துகள்  மாறி  கிராமத்திற்கான அனைத்து சாயல்களையும் ஒருங்கே பெற்ற ஊருக்குள் செல்வது ஒரு தெருவிற்குள் செல்வது போல இருந்தது. ஊருக்குள் சென்ற மினி பஸ் பயணம் மரம், செடி, கொடிகளின் ஊடே இருந்தது குறுகிய சாலை‌. செடி, கொடிகளை விலக்கியபடியே ஓட்டுநர் வண்டியைச் செலுத்தினார்.  அனைவருக்கும் அறிமுகமான, தண்மையான உள்ளூர்வாசிகள், நடத்துநர், ஓட்டுநர் என்பதால் அதட்டல்,  உருட்டல், சில்லறைச் சத்தம், பேருந்து நிறுத்தம் தாண்டி நிறுத்தும் அசெளகரியங்கள் என எதுவுமின்றி அமைதியாக  வேண்டிய நிறுத்தங்களில் சிறுவனே நின்றாலும் நிறுத்தி ஏற்றி அழைத்துச் சென்றது மினிபஸ்.  “போன  ட்ரிப்புக்கே வருவனு பாத்தேன் ஏங்க்கா  லேட்டு” உரிமையுடன் அக்கறைக் கேள்விகள் அக்கா அண்ணன் என்று பறந்தன.

பேருந்து நகர்ந்ததும் ஓடிவந்த பாட்டியைக் கண்டு பிரேக் பிடித்த ஓட்டுநர், “பஸ்ஸு நிக்கறப்ப ஏறுறதில்ல, பதினாறு வயசு பொண்ணு நீ! எப்பப் பாரு ஓடியாந்துதான் ஏறுறது” என்றார். முகச்சுருக்கங்களெங்கும்‌ வெட்கம் ஏறியிறங்கியது.  பேருந்தே ஒரு கணம் ரசித்துச் சிவந்தது.

உட்கார்ந்திருப்பவர்கள் குறும் புன்னகையை இழைய விட்டனர். பாட்டிக்கும் ஓட்டுநருக்குமிடையேயான சம்பாஷணை இன்னும் நீடித்தது. சின்னச் சின்ன நல விசாரிப்புகளும் வெள்ளாமை நிலவரமுமாக மினி பஸ், பேச்சுக்களைச் சுமந்து கொண்டு ஊர் வந்து சேர்ந்தது.

இறப்பு வீட்டிற்கு வழி கண்டு பிடிப்பது ஒன்றும் பெரிய காரியமாக இல்லை. பஸ்ஸில் இருந்து இறங்கின உடனே அந்நிய முகம் பார்த்து நெற்றிச் சுருக்கி விசாரித்து துக்க வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இறப்பு நிகழ்ந்த வீட்டில் பிரேதத்திற்கு மரியாதை செலுத்திய பின் இரண்டு நிமிடங்கள் அந்நியமானேன். சுற்றி உழைப்பின் ரேகை உடலெங்கும் பதிவாய் உறவினர்கள்,  ஒபிசிட்டியின் எல்லைக்குள்ளேயே  வராதவர்கள். ஜி ம், ஃபிட்னஸ்  வார்த்தைகளையெல்லாம் அறியாமலேயே ஃபிட்னஸாக இருந்தனர். இறந்தவர் வயதானவர் என்பதால் ஒன்றிரண்டு ரத்த சம்பந்தங்கள் தவிர மற்றவர்கள் இயல்பாக இருந்தனர்.

இளைஞர்கள் மூவர் அழைத்து அமரச்செய்து கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை நீட்டினர். குடிக்கும் மனநிலை இல்லையென்றாலும் தாகமாக இருந்தது. மறுபேச்சின்றி வாங்கிக் குடித்தேன். யார் என்ன ஊரென விசாரித்துப் போய் பெண்கள் கூட்டத்திடம் சொல்லிவிட்டு வந்தனர். வந்ததில் மாநிறமாய் கழுத்தில்  பச்சைத்துண்டு  போட்டிருந்த  பையன், “நீங்க எங்களுக்கு ரிலேஷன்” என்று சிரித்தான்.

பெண்கள் கூட்டத்திலிருந்து முதிய பெண் ஒருத்தி மெதுவாக நெருங்கி பேனாவையும், கம்ப்யூட்டர் எலியையும் மட்டுமே பிடித்து பழக்கப்பட்ட கடின உழைப்புக்கு பழக்கப்படுத்தியிராத மிருதுவான என் கையைப் பெருந் தயக்கத்திற்குப் பின் தொட்டு வருடி வியப்பாய், “நீ நடேசன் அண்ணனோட பேரனாய்யா? சாடை தெரியுது” என என் முகம் ஆழ்ந்து நோக்க என் தலையசைப்பிற்கு பதிலாய் மேலும் கையை இறுகப் பிடித்தபடி, “உன் அம்மாவ கண்ணாலம் பண்ணுன புதுசுல பாத்தது.  அப்பறம் எங்கய்யா… தோது படல.” என எவரையும் விட்டுக்கொடுக்காது பேசினார். ஒவ்வொரு முகமாய் வந்து அறிமுகம் செய்துகொண்டு பட்டணப் பளபளப்பை வியந்தது.  பளபளப்பின் உள் இருக்கும் பட்டுப் போனவை அறியாது…

உழைக்கும் உடலுக்கு ஏற்ற வகையில் முழங்கால் வரை மட்டுமே புடவை உடுத்தியிருந்த பெண் ஒருவர், “உம் பாட்டியும் எங்க அய்யாவோட அத்தையும் அக்கா தங்கச்சிங்க உடம் பொறந்த பொறப்பு. நீ எனக்குச் சொந்தம்” என்றார். என்ன முறை என நினைக்கத் தலைசுற்றத் தொடங்கியது. உங்களைப் பற்றியெல்லாம் பேசிக்கொள்வோம் என்றார், அவர்களின் பேச்சினூடவே புரிந்தது அப்பாவைப் பற்றிய அவர்களது நினைவுகள் வார்த்தைகளாக அவ்வப்போது  சொந்த நினைவுகளின் வடிகாலாய் ஓடிக்கொண்டே இருப்பதை…

பேருந்துகளின் பெயர்களை நேர வரிசைப்படி ஒப்புவித்த சிறுவனின் முதுகில் தட்டிக்கொடுத்த படியே  அதிகம் பேசாமல் புன்னகையும் அளவான பதிலுமாய் நடந்தேன்.

பேருந்தின் ஓட்டத்தினூடே ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டிருந்தது மனம்.

எத்தனையெத்தனை உறவுகள்! ஒன்று விட்ட, இரண்டு விட்ட என்று நாம் விலக்கிக்  கொண்டிருக்கையில்  விடுபட்ட உறவுகள்தான் எத்தனையெத்தனை! என் தாத்தாவின் பெரியம்மா பேரனின் மகன் என்னை நினைவு  வைத்திருக்க  வேண்டிய  அவசியம்  என்ன!?!

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close