சிறுகதைகள்

குர்ஷித்

பிரசாத் சுந்தர்

குர்ஷித்தால் நடந்த நிகழ்வை நம்பவோ ஏற்கவோ முடியவில்லை. ஆனால் விதியின் வேட்கையை எவரால் நிறுத்திவிட முடியும். காலத்தின் தீராத விளையாட்டு இது. இருப்பினும் அவள் கோவத்தை கட்டுப் படுத்திருக்க வேண்டும். இதற்குப் பெயர் தான் விதி என்று கூறுகிறார்கள். இனி வேறு வழியில்லை, கல்பனா வீட்டிற்கு முன் நிற்பதை விட அவளுக்கு வேறு என்ன செய்வதென்று புரியாமல் இருந்தது. ரத்தம் படிந்த கைகள். கலைக்கப்பட்ட நீண்ட தலைமுடி. முகத்தினில் ஏதோ ஒரு கலக்கம். நடுங்கியபடியே அந்தக் கதவுகளைத் தட்டினாள். கல்பனா சமையலறையில் இருக்கக்கூடும். அவள் வருவதற்கு இரண்டு நிமிடங்கள் ஆகக்கூடும். ஆனால் குர்ஷித்தால் பொறுக்க முடியவில்லை. பலமாகவே தட்டினாள். மழைக்கு காத்திருக்கும் குக்கிராமத்தைப் போல, கல்பனாவுக்காக காத்திருந்தாள்.

தப்பு பண்ணிட்டேன் அக்கா.. தப்பு பண்ணிட்டேன்” குர்ஷித் கல்பனாவைக் கட்டிக் கொண்டு கதறினாள். கல்பனாவுக்கு அது புதிதாக இருந்தது. குர்ஷித் அப்படிப்பட்டவள் கிடையாது. அவள் இப்படி அழுபவள் இல்லை. அவள் பார்க்காத துன்பங்களா?  துயரங்களா? அவளா இப்படி அழுவது. இப்படி ஒருபோதும் அவள் அழுதது கிடையாது. ஏதோ ஒரு விடயம் இருக்கும், என்னவாக இருக்கும். கல்பனாவுக்குப்  படபடத்தது. இரண்டு மாதத்திற்கு முன்னே தானே நல்ல காரியத்தை சொன்னாள். அவற்றில் எதுவும் விபரீதம் இருக்குமோ. அவளுக்கு துளியும் விளங்கவில்லை. “என்னடி ஆச்சு… ஏன் இப்படி அழுவுற? ” குர்ஷித்திடமிருந்து பதில் வருவதற்குள் கல்பனா அந்த கைகளைப் பார்த்து விடுகிறாள். ரத்தம் படிந்த கைகள்.

“என்னடி கையில ரத்தம்? தயவுசெஞ்சு சொல்லு குர்ஷி” என்றாள்.

எதுவும் கேட்காதீங்க கல்பனா அக்கா.. என் கூட வாங்க ப்ளீஸ்.”

எங்க?

ப்ளீஸ் வாங்க. நான் சொல்றேன், போகலாம்” என்றாள் அழுத படியே.

அவள் “ப்ளீஸ்” என்றபோதெல்லாம் கல்பனாவுக்கு ஏதோ மாறியிருந்தது .

அவளின் பயம் அதிகரித்திருந்தது. ஏன் இப்படி அழுகிறாள்? எங்கே கூப்பிடுகிறாள். அவளுக்கு ஒன்றும் ஏறவில்லை.

இரு வரேன் ..வீட்டைச் சாத்தணுமா ? ”

ஆமா ” என்றாள் குர்ஷித் .

இருவரும் வீட்டைவிட்டு வெளியேறிய போது. அந்த மாலை நேரத்தில் மழை வருவது போல் இருந்தது. மேகங்கள் மூடி இருந்தன. விரைவிலே இரவு வருவது போல ஆகியிருந்தது. குர்ஷித் கல்பனாவின் கைகளை விடவே இல்லை.

பதற்றமாகவே அவள் இருப்பதை கல்பனா நன்கு புரிந்துக் கொண்டாள். அவர்கள் எதிர் சாலையைக் கடந்த போதுதான் அந்த மாரியம்மன் கோவில் வந்தது . குர்ஷித் அமைதியாகவே அக்கோயிலை நோட்டம் விட்டாள். அவளுக்கு பல நினைவுகள் அக்கோயிலினால் வந்து வந்து சென்றன.

எத்தனை முறை கோயிலுக்கு வெளியவே குர்ஷித் இருந்திருக்கிறாள். வீட்டில் இருந்து ஒன்று கிளம்பியிருக்கக்கூடாது,  கிளம்பியிருந்தால் உள்ளே சென்று இருந்திருக்க வேண்டும். அதன் விளைவுகள் தான் இதுவோ. ஒரு கடவுளை அவமதிப்பதா? ஆனால் அவள் கடந்த ஒரு மாதமாகவே உள்ளே சென்றுக் கொண்டிருந்தாள். அவளுக்கு அது ஆறுதல் தந்தது. அந்த கடவுள் தன்னை மன்னித்திருக்கலாம். என்றெல்லாம் நினைத்தபடியே கோவிலைக் கடந்து சென்றாள். சிறிய தூரம் சென்ற பின் வலப்புறத்தில் இருந்த காவல் நிலையம்,  அவளின் முன் தோன்றும் போது அவளுக்கு பழைய பல நினைவுகள் மீண்டும் வந்தபடியே இருந்தது.

அங்கு வைத்துதான்  குர்ஷித்தின் அப்பா,  அப்துல்லா அவளை முதன் முதலில் கன்னத்தில் அறைந்தார். அம்மாவும் “நீ என் பொண்ணே இல்ல” என்றதும் அங்குதான். குர்ஷித்தின் வாழ்க்கை நினைவுகள் ஒவ்வொன்றும் அவளின் முன் தோன்றுவது அவளுக்கு மிகுந்த வலியைத் தந்தது. அது ஒரு கூர்மையான கத்தியைப் போல் அவளைக் வாட்டிக் கொண்டிருந்தது. கண்களில் நீர் தேங்கிக் கொண்டிருந்தது. முழு உடம்பே வலிப்பது போல இருந்தது. அவளின் நீண்ட புடவை அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அவளால் அவளது கண்களை துடைத்துக் கொள்ள முடிகிறது.

அந்த படர்ந்த தெருவானது முடிவைப் பெற்ற போது கல்பனாவின் நம்பிக்கை குறைந்துக் கொண்டிருந்தது. அவளின் சந்தேகங்கள் நிரம்பிக் கொண்டிருந்தது. அப்போது குர்ஷித்தே,  

தண்ணி தாகமா இருக்கு அக்கா ” என்றாள். கல்பனா, ” சரி இரு” என்றபடி பக்கத்தில் இருந்த, மயில் அண்ணாச்சியின் மளிகைக் கடைக்குள் நுழைந்தாள். குர்ஷித்திற்கு ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு மனிதர்களும் எதையோ நினைவூட்டுவது போல,  மயில் அண்ணாச்சியும் அவள் வாழ்க்கையை பின்னோக்கி நகர்த்துகிறார். ரிகானாவை நினைவூட்டுகிறார்.

குர்ஷித்தின் பால்ய காலத்தில் அவளுக்கு இருந்த நெருங்கிய தோழிதான் ரிகானா. அத்தெருவின் இரண்டாவது சந்தில்தான் அவர்கள் படித்த பள்ளிக்கூடம் இருந்தது. தினமும் பள்ளியின் முடிவில் அவர்கள் மயில் அண்ணாச்சியின் கடையில் தான் எதையாவது வாங்கி உண்ணுவார்கள். அவள் வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்பத்திற்கு ரிகானாதான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறாள். அது ரிகானாவின் தவறில்லை. எவையுமே விதிதான். வாரம் ஒரு முறை மட்டும் ரிகானாவின் வீட்டிற்கு குர்ஷித் செல்வாள். பால்ய கால சிநேகிதி என்பதால் உரிமையாக ரிகானா இல்லாத போதிலும்,  அவளே ரிகானா வீட்டிற்குச் சென்று பல

ரஷ்ய இலக்கிய நாவல்களை எடுத்து வீட்டிற்குக் கொண்டு  செல்வாள்.

முதலில் ரிகானாவின் வீட்டில் இருக்கும் புத்தகங்களையும் அழகூட்டும் பொருட்களையும் பார்த்தபோது குர்ஷித்திற்கு பொறாமையாகத் தான் இருந்தது. தன் வீட்டில் அப்படிப்பட்ட புத்தகங்களும் இல்லை, பணமும் இல்லை. குர்ஷித் ஒரு திரைப்பட விரும்பி. உலக சினிமாக்களை ரசிப்பவள். அந்த சினிமாவும் அவளுக்கான திருப்பத்திற்கு காரணமாக இருந்தது. .

வார வாரம் ரிகானா வீட்டிற்கு செல்லும் குர்ஷித் அப்படியே ஒரு படமும் பார்த்து வருவாள். ஆனால் குர்ஷித் வீட்டில் அவள் கல்லூரி பாடம் கற்பதற்கு போவதாகத்தான் நினைத்தார்கள். குர்ஷித்தின் அப்பாவிற்கு படம் என்றாலே ஆகாது. வித்தியாசமான மனிதர், “சினிமாக்காரன் , பைத்தியக்காரன்” என்பார்.

சொல்லப்போனால் குர்ஷித்தின் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி கூட இல்லை. அவளின் புத்தக ஆர்வத்துக்கு அதுவும் ஒரு காரணம். ரிகானா வீட்டிற்கு படம் பார்க்க வரும் குர்ஷித், சில முறை பக்கத்தில் இருக்கும் வினய் தியேட்டருக்கு படம் பார்க்க ரிகானாவுடன் செல்வாள். அப்படிப்பட்ட ஒரு நாளில் அறிமுகமானவன் தான் சரவணன். குர்ஷித்தின்  கணவன்.

ரிகானா குர்ஷித்தை அமைதியான பெண்ணாக தான் பார்த்து வந்தாள். குர்ஷித்தின் வீட்டினில் சென்றால் கூட குர்ஷித்தின் அம்மா நன்றாக பேசுவார்கள். வாயடிப்பார்கள் என்றே சொல்லலாம், அப்படி பேசுவார்கள்.  ஆனால் குர்ஷித் அப்படி இல்லை. பெரும்பாலான நேரம் சிரிக்க கூட மாட்டாள். ஆனால் குர்ஷித் அப்படி செய்வாள் என்று ரிகானா எதிர்பார்க்கவே இல்லை.

ரிகானா வீடு இருக்கும் சாலையிலிருந்து வினய் தியேட்டருக்கு செல்வதற்கு ஆட்டோவில் தான் செல்ல வேண்டும். அங்கு பேருந்து நிற்காமல் போய்விடும். ஆகையால் இவர்கள் வழக்கமாக சரவணன் ஆட்டோவில் தான் செல்வார்கள். இரண்டு மூன்று முறை ரிகானாவுக்கு சரவணன் மீது சந்தேகம் வந்திருந்தது. அவன் உள்கண்ணாடியில் ஆட்டோ ஓட்டும்போதிலும் குர்ஷித்தை ஓரக்கண்ணால் பார்ப்பது போல் இருந்திருக்கிறது. அதனைக் குர்ஷித்திடம் கேட்டபோது தான் அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் காதலிப்பது. ரிகானாவுக்கு ஒன்றும் புரியவில்லை அவள் பக்கத்தில்தான் குர்ஷித் இருக்கிறாள் எப்படி காதலிப்பார்கள் என்ற போதுதான், ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் அட்டையிலிருந்து குர்ஷித் சரவணனின் தொலைபேசி எண்ணை மனப்பாடம் செய்து,  அவளே அழைப்பு விடுத்திருக்கிறாள்.

ரிகானாவால் இதனை எவரிடமும் சொல்லவவும் முடியவில்லை மெள்ளவும் முடியவில்லை. அதுவரை படம் பார்க்க வந்திருந்த குர்ஷித் பிறகு காதலிப்பதற்கு அவளைப் பயன்படுத்திக் கொண்டாள். அது அவளுக்கு வருத்தம் அளித்தது. வரவேண்டாம் என்று சொல்லவேண்டும் போல் இருந்தது. ஆனால் சொல்ல முடியவில்லை .

திடீரென்று ரிகானா வீட்டிற்கு வருவதை குர்ஷித் நிறுத்திக் கொள்கிறாள். கல்லூரிக்கும் அவள் வருவதில்லை. ரிகானா குர்ஷித்தைத் தேடி அவள் வீட்டிற்குச் சென்றாள். வீட்டின் முன் சென்றபோது அவர்கள் பேசிக் கொள்வது,  இவள் காதில் விழுந்தது. “அவனை கட்டிக்கிட்டிட்டாதான் நீ  நிம்மதியா இருப்ப, என் கோவத்த கிளப்பாத மரியாதையா உள்ளே போஎன்ற குர்ஷித்தின் அப்பாவின் குரல் அது. அதற்கு குர்ஷித் அழுவதும் ரிகானாவிற்கு கேட்டது. குர்ஷித்தை ஆறுதல் படுத்த வேண்டும் போல் தான் ரிகானாவிற்கு இருந்தது. ஆனால் இப்போது செல்வது சரியாக அவளுக்குப் படவில்லை. வீடு திரும்பி விட்டாள். குர்ஷித்தை நினைத்து வருந்துவதை விட ரிகானாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குர்ஷித்தின் அப்பாவிடம் ரிகானாவால் போராட முடியாது. அவர் கோவக்காரர். அதற்கு பிறகு குர்ஷித்தை ரிகானா பார்க்கவேயில்லை.

ஒரு மாதத்தில் ஒரு நாள் நள்ளிரவு ஒன்றில் ரிகானாவின் வீட்டிற்கு குர்ஷித்தின் அப்பா குர்ஷித்தைத் தேடி வந்தார். ரிகானாவிடம் அழுதபடியே, ” எதாவது தெரிஞ்சா சொல்லிடுமா” என்றார். ரிகானாவுக்கு என்னதான் தெரியும். குர்ஷித் யாரிடமும் எதையும் சொல்ல மாட்டாள். எங்கு சென்றிருப்பாளோ? . ரிகானாவுக்கு அப்துல்லா அய்யாவைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. ஒரே பெண் பிள்ளைப் பெற்றவர். பாசத்தில் கதறி அழுகிறார் .

ஆட்டோக்காரன் சரவணன் -னு ஒரு பையன லவ் பண்ணிருக்கா ” என்று ரிகானாவின் அப்பாவிடம் அவர் புலம்பிக் கொண்டிருந்தார். ரிகானாவின் அப்பா தடுமாற்றத்துடன் ரிகானாவைப் பார்த்து, ” உண்மையா உனக்கு தெரியாதா?” என்றார்.

“சத்தியமா தெரியாது அப்பா, என்ன நம்புங்க” என்றாள் ரிகானா, நொறுங்கிய கண்ணாடி கூர்களைப் போல. ஒரு வழியாக வீட்டிற்குப் பக்கத்தில் குர்ஷித்தும் கல்பனாவும் வந்து விட்டார்கள். கல்பனாவுக்கு அந்த வீடு புதிதாக இருந்தது. இதுவரை அவள் அதை அந்தப் பகுதியில் பார்த்ததே இல்லை. யார் வீடாக இருக்கும்?   இங்கே எதற்கு அழைத்து வந்திருக்கிறாள். அவள் குழப்பத்திலே குர்ஷித்தின் வயிற்றைப் பார்க்கிறாள். ஒன்றும் பெரிதாகவில்லை, இரண்டு மாதம் முன்தான் அவளாக வந்து அதைச் சொன்னாள். கல்யாணமான இரண்டு மூன்று வாரத்தில் குர்ஷித் தெருவில் யாரிடமும் எதுவும் பேசுவது இல்லை. கடைகளுக்குச் செல்வது, தண்ணீர் எடுப்பது போன்ற அனைத்து வேலைகளையும் சரவணன் தான் செய்து வந்தான். சரவணன் குர்ஷித்தை விட நான்கு , ஐந்து ஆண்டுகள் மூப்பாகத்தான் இருக்க வேண்டும். பார்க்க அவன் அப்படித்தான் இருந்தான். முதன் முதலில் குர்ஷித் வீட்டை விட்டு கல்பனா வீட்டிற்குத் தான் வந்தாள். “அக்கா , போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் அவங்க (சரவணன்) கூப்பிடுறாங்க கொஞ்சம் வரீங்களா?.  எனக்கு தனியா போக பயமா இருக்கு” இன்றும் அந்த வார்த்தைகள் கல்பனாவிற்கு  நினைவில் இருக்கிறது. அப்படித்தான் குர்ஷித் அவளிடம் பேசினான் .

கல்பனாவின் வாழ்க்கையும் கசப்பானது எனலாம்.  கல்யாணமான இரண்டு வருடத்தில் கணவன் விபத்தில் இறந்து போனார். குழந்தைகளும் இல்லை. மனம் தனிமையடையும் தருணத்திலெல்லாம் குர்ஷித் தான் ஆறுதலாக இருந்திருக்கிறாள். அன்று போலீஸ் ஸ்டேஷனலில் இவர்கள் நுழைந்தபோது குர்ஷித்தின் அப்பா, சரவணனை அடித்துக் கொண்டிருந்தார். அவர்  ” பாவி ..பாவி” என்றார். குர்ஷித்துக்கு அது வலியாக இருந்தது .

அழத் தொடங்கினாள். குர்ஷித்தைப் பார்த்த அவளது அப்பா,  அவளையும் ஒரு அறை விட்டார். சரவணனின் நண்பர்களும் காவலர்களும் அங்கு அவரைச் சமாதானம் செய்ய பெரும் பாடு பட்டனர்.

அன்னக்கி பெரிய இவமாரி பணம்லாம் முக்கியமில்லன்னு சொன்ன, இப்ப ஏன் நகைய எடுத்துட்டு போயிருக்க. அவ எப்டியாவது போகட்டும் எனக்கு பொண்ணே இனி இல்ல, எனக்கு நகை வேணும்” என்றார்.

உன்ன நம்பனோம் பாரு எங்கள சொல்லணும்… நீ என் பொண்ணே கிடையாது” என்றாள் அவள் அம்மா.

பெரிய சண்டைக்கு பிறகு  குர்ஷித் அங்கு அனைத்து நகைகளையும் கொடுத்துவிட்டு,  நகை தனக்கு சொந்தமில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்தாள். அதன் பிறகு,  அவள் அப்பா, அம்மா உறவு முழுவதுமாய் அறுந்துப் போனது. சரவணனுக்கும் யாரும் கிடையாது.

குர்ஷித் தனக்கான வாழ்க்கையை மகழ்ச்சியாய் மாற்றிக் கொண்டாள். அவளது அனைத்து துன்பங்களையும் துயரங்களையும் அவள் கணவன் உடைத்து விடுவான். குடிப்பழக்கம் கிடையாது .வேற எந்த ஒரு தீய பழக்கங்களும் கிடையாது. அன்பு பொழிவான். அவனோடு மாரியம்மன் கோவில் செல்வாள். முதலில் அவளுக்கு அதில் தயக்கம் இருந்தது. சரவணன் உள்ளே செல்லும் போது இவள், வெளியவே நிற்பாள். பிறகு அவளும் பழகிக்கொண்டு அவன் இல்லாத நேரத்திலும் இவள் சென்றிருக்கிறாள். அவளுக்கு ஒரு ஆறுதலான இடமாகவே அக்கோயில் மாறியிருந்தது. நன்றுச் சென்றுக் கொண்டிருந்த அவளது வாழ்க்கையில் தீபா என்றொரு பெண் குறுக்கிட்டாள்.

ஆமாம் தீபா என்பவள் சரவணனின் தோழியாக இருக்கக்கூடும் என்று நினைத்தாள். ஆனால் அவனது வாட்ஸாப் செயலியில் அவள் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அது முத்தமிடும் சத்தத்தைக் கொடுத்தது. இரவு அவன் முன்பு போல் வருவதில்லை. பணம் இல்லை என்றே கூறுகிறான். போதிய சவாரிகள் இல்லை என்கிறான். காலம் இவளைத் தலைகீழாக தொங்கலில் விடுவது போல கனவுகள் இவளுக்கு வரத் தொடங்கின.

அந்த சந்தேகம் என்ற எரிமலை வந்து விட்டால், துப்பறிவது சுலபம் ஆகிவிடும். கண்டிப்பாக அந்த பெண் தொடர்பான ஏதோ ஒன்று வீட்டில் இருப்பதாக அவளுக்கு தோன்றியது. அவள் மனது ஒரு விறுவிறுப்பில் சிக்கிக் கொண்டிருந்தது. வீட்டை அலச முடிவுச் செய்தாள். அவன் காலையில் கிளம்பினதும் வீட்டைப் புரட்டிப் போட்டு தேடலை தொடங்கினாள். அவள் நினைத்தது போல ஒரு பெட்டியைக் கண்டறிந்தாள். பூட்டால் பூட்டப்பட்டிருந்த அப்பெட்டியை, பெரு முயற்சியோடு உடைத்தாள், அவளுக்கு அதிசயம் காத்திருந்தது. தீபாவும் சரவணனும் கல்யாண கோலத்தில் ஒரு புகைப்படத்தில் இருந்தார்கள். இவளுக்கு தூக்கிப் போட்டது. சரவணன் சற்று இளமையாகவே அவற்றில் இருந்தான். சான்றிதழ்கள் ஒன்றும் அந்த பெட்டியில் இல்லை.

அவள் வாழ்க்கையின் மிக பெரிய சறுக்கல் அது. அழுதுக் கொண்டே இருந்தாள். சரவணனிடம் கேட்கவில்லை.  கேட்டால் மட்டும் என்ன ஆகப் போகிறது. இவனை நம்பி வந்துவிட்டோமே. மறுநாள் ஒரு மாலை நேரத்தில் அவனின் ஆட்டோவை ஒரு வீட்டிற்குப் பக்கத்தில் பார்த்தாள். அது இவர்கள் பக்கத்திலிருந்து சற்று தொலைவு. அவள் அங்கு காய்கறிகள் வாங்கச் சென்றபோது பார்த்தாள். யவரின் வீடது?  உள்ளே போகலாமா? அவன் உள்ளே என்ன செய்கிறான்?  எதற்கு மனைவி (தீபா) இருக்கும்போது இன்னொரு கல்யாணம் செய்துக் கொண்டான். பணமும் அவன் எதிர்ப்பார்க்கவில்லை. அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவள் என்னச் செய்ய போகிறாள்? அவளுக்குள்ளே பல கேள்விகள் எழும்பின .   

அப்பொழுது மழை வரத் தொடங்கியிருந்தது. இருவரும் நனையாமல் வீட்டை அடைந்துவிட்டனர். குர்ஷித்தின் நெஞ்சம் இப்பொழுது படபடத்தது. பூட்டப்பட்டிருந்த வீட்டைக் குர்ஷித் திறந்த பிறகு கல்பனாவும் அவளும் மெதுவாக உள்ளே சென்றனர் .நுழைவு வாசலில்  நுழைந்த இரண்டு அடிகளிலே ரத்தச் சொட்டுக்கள் தொடங்கிருந்தன. அந்த சொட்டுக்கள் கல்பனாவை திகைப்படையச் செய்தன.

அவளை அப்படியே வீட்டிலிருந்த ஏதோ ஒரு அறைக்கு அழைத்துச் சென்றன. மிகுந்த பயத்துடன் கல்பனா உள்ளே நுழைந்தாள். அறையின் மெத்தைப் படுக்கையில் சரவணன் தீபாவின் உடல்கள். கொலைத் தான். கல்பனா புரிந்துக் கொள்ள பத்து நொடிகள் எடுத்துக் கொண்டாள்.

குர்ஷித்தா? அவளால் எப்படி முடியும். ஆனால் மற்றொரு பெண்ணைப் பார்த்தவுடனே கல்பனா புரிந்துக் கொண்டாள்.  அவள் பயன்படுத்தியக் கத்தி அங்கேயே கிடந்தது. அதை கையில் எடுத்துக் கொண்டு, கல்பனாவை கட்டிக் கொண்டு ,குர்ஷித் அழத் தொடங்கினாள் ,

“உள்ளே வந்து பார்த்தா சந்தோசமா இருக்காங்க அக்கா, என்னால எப்படி தாங்க முடியும், இந்த மனுஷன நம்பித்தானே எல்லாரையும் விட்டு வந்தே, என்னையே ஏமாத்திருக்கான் அக்கா, நான் வந்த உடனே பெரிய சண்டை வேற போட்டான், கோவத்துல வீட்லயிருந்த கத்தியில குத்திட்டேன் அக்கா. இவங்களுக்கு கல்யாணம் வேற ஆயுருக்கு.” என்று அழுதாள்.

“அதுக்கு என்னப் பண்ணிருக்க குர்ஷித். இப்ப என்னப் பண்றது. அந்த பொம்பள என்னப் பண்ணா?”

“அக்கா என்னப் பார்த்து,  இவதான் உன்னோடைய இரண்டாவது மனைவியான்னு இவருக்கிட்ட கேட்டாள் அக்கா… அதான் கோவத்துல”

“ஹையோ …சரி எவளோ நேரம் இருக்கும்? “

“ஒரு மணி நேரம் இருக்கும் அக்கா”

ஒரு மணி நேரம் ஆகியிருக்கிறது. இரண்டு கொலைகள். இரண்டு மாத கர்ப்பிணி கொலையாளி. தனி வீடு,  எவரும் இங்கு இல்லை. எதையோ கல்பனா யோசித்துக் கொண்டேயிருந்தாள். ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

“சரி அத கொடு” என்று கேட்டாள். குர்ஷித்திற்கு புரியவில்லை. கல்பனா அக்காவுக்கு எதற்கு இப்போ இந்த கத்தி. ” எதுக்கு அக்கா?”

  “இப்போ இந்த கொலைகள நான்தான் செய்தேன் என்னையும் சரவணன் ஏமாத்திருக்கான். புரியுதா ? அத கொடு”

“அக்கா அதுலாம் வேணாம், என்னச் சொல்றிங்க?”

“கொடுன்னு சொல்றேன்ல” என்று கத்தியைப் புடுங்கிக் கொண்டாள். “நான் வாழ்ந்து முடிச்சாச்சு ..இனிமே வாழ்ந்து என்ன பண்ண போறேன். எனக்கு யாரும் இல்லை. நீ உன் குழந்தைய வளக்கணும் …புரியுதா ?”

” அக்கா ” என்று குர்ஷித் அழுதாள். கல்பனாவைக் கட்டிக் கொண்டாள் ”

“இதுக்குலாம் இப்ப நேரம் இல்ல …உங்க அப்பாவுக்கு போன் பண்ணு “

“அக்கா ?”

” பயப்புடாத நீ தனியா வீடு வரைக்கும் போக வேணாம்,  நான் அவர்கிட்ட பேசுறேன்… சீக்கிரம் பண்ணு”

அவர்கள் குர்ஷித்தின் அப்பாவிற்கு நடந்தவற்றைப் புரிய வைத்தனர். அவர் குர்ஷித்தை அழைத்துச் செல்ல ஒத்துக் கொண்டார். தீபாவின் முகவரியை அவருக்கு கொடுத்தார்கள் .

குர்ஷித்தை இப்போதைக்கு சரவணன் வீட்டில் விடுவதாக சொன்னார். பத்து நிமிடத்தில் வருவதாக சொன்னார். அந்த பத்து நிமிட இடைவெளியில் குர்ஷித்தும் கல்பனாவும் வீட்டை சுத்தம் செய்தனர். கல்பனா அவளது கைரேகைகளை கத்தியில் பதிய வைத்தாள். இருவரும் அப்பாவுக்காக காத்திருந்தனர்.

வீட்டின் அழைப்பு மணி அடித்தது. குர்ஷித் வேகமாக கதவைத் திறக்க ஓடினாள். கல்பனாவும் பின் தொடர்ந்தாள். அவளது கைகள் பதற்றம் அடைந்தன. அவள் திறக்கச் சென்ற சமயத்தில் ஏதோ ஒரு குரல் கேட்பதை அவள் உணர்ந்துக் கொண்டாள். அது அவளது அப்பாவின் குரலில்லை. அது வேறு ஒருவருடையது. அது ஒரு சிறுவனுடையது. கதவிடமிருந்து இரண்டு அடிகள் பின்னே சென்றாள். கல்பனா நடுங்கினாள்.

“அம்மா , கதவை துற மா..அப்பா வந்திருக்கிறாரா… அப்பா செருப்பு இருக்கு, நான் அவரை பாக்கணும்… ஸ்கூல் போயிட்டு வர நேரம்னு உனக்கு தெரியாதா? அம்மா கதவை திற”   

திகைப்படைந்த கல்பனாவும் குர்ஷித்தும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அப்பொழுது அங்கு பெய்துக் கொண்டிருந்த மழை நின்றுப் போனது. மேகங்கள் விலகிக் கொண்டன.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close