கட்டுரைகள்

கேடி என்கிற கருப்புதுரை – திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – சி.சிலம்பரசன்

                           தமிழில் தரமான குறைந்த பட்ஜெட் படங்களின் வருகை வரவேற்கத்தக்கது.அப்படியாக சமீபத்தில் வெளியான தரமான படங்களுள் கேடி என்கிற கருப்புதுரையும் ஒன்று.
                          குறும்புத்தனமாக தொடங்குகிற முதல் காட்சியைப் போலவே பின்வருகிற   காட்சிகள் போகிறபோக்கில் அன்பையும்,பாசத்தையும்,கருத்தையும் அள்ளித் தெளித்து விட்டுப் போகிறது.
                          பல ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் முதியவர் கருப்புதுரையை மொத்தமாக வழி அனுப்ப கிராமத்தில் செய்யும் எண்ணெய் தேய்த்து இளநீர் வார்க்கும் முறையைக் கையாள குடும்பம் யோசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மயக்கம் தெளிந்தெழும் கருப்புதுரை வீட்டைவிட்டு வெளியேறி வேறு ஊருக்குப் போகும் போது தன்னைப் போலவே ஆதரவற்று இருக்கும்  சிறுபையன் குட்டியோடு சேர்ந்துகொண்டு செய்யும் சேட்டைகளையும் அதன் பின்னான பாசப் போரட்டங்களையும் குழந்தைத்தனம் கலந்து விவரிக்கிறது திரைக்கதை.

                          குட்டியாக வரும் சிறுபையனின் நடிப்பும் கருப்புதுரையாக வரும் ராமசாமி ஐயாவின் நடிப்பும் திரைக்கதையை வேறு கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது என்றே சொல்ல வேண்டும்.
                         குழந்தைத்தனம் நிறைந்த கேடியும் பெரிய மனிதர் போல பேசும் குட்டியும் மாறி மாறி சிரிக்க வைத்து கதையை குதூகலத்துடன் எடுத்துச் செல்வது கதைக்குள் நம்மை எளிதாக பிணைத்துக் கொள்ள வைக்கிறது.  இதுவரை அடையாத ஆசைகளை முதுமையின் வெறுமையில் அடையத் துடிக்கும் வேட்கையை அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளார் இயக்குநர்.அதிலும் பால்ய காதலியை தேடிச் செல்லும் காட்சிகள் எத்தனை அழகானது.

                         வடிவேலு சார் டயலாக்குகளை அள்ளித் தெளிக்கும் குட்டியின் வசனங்கள் தூள் பறக்கிறது. எனக்கு நானே ரிமோட்டு ,மண்ட பத்திரம், இன்னும் பல வசனங்கள் மனதில் நிற்கிறது.கருப்புதுரையின் வசனங்கள் ஆங்காங்கே சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது.அதுவும் அந்தப் படத்தில் நடிக்கப் போவதாக கூட்டிப் போகும் போது
கொடும கொடுமனு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடுதாம்என்று சொல்லும் போது அனுதாபத்தையும் வாங்கிக் கொள்கிறார்.


                        ஒவ்வொரு ஆசையும் நிறைவேறும் போது காட்டுகின்ற முகபாவனையில் மனித உணர்வுகளை சுமக்கும் மனங்களில் கேடி உயர்ந்து நிற்கிறார்.  தீடீரென வரும் பிரிவை சிறுபிள்ளையைப் போல மறுக்கும் கேடி பின் குட்டியின் எதிர்காலம் கருதி முடிவெடுக்கும் காட்சிகள் கலங்கச் செய்கின்றன.குறிப்பாக வள்ளியின் வீட்டிற்குச் சென்று விட்டு திரும்பும் போது இருவருக்கும் இடையேயான காட்சிகள் என்னை அழச் செய்து விட்டது என்று சொல்வதில் எனக்கு எவ்விதக் கூச்சமும் இல்லை.ஒரு கலைஞனின் அதிகப்பட்ச பாராட்டு சில கண்ணீர் துளிகள் தான்.அதை இப்படம் பெற்று நிற்கிறது.

 

                     

                        கருப்புதுரையைத் தேடி அலையும் வில்லத்தனமான துரையின் தேடுகின்ற காட்சிகள் லாஜிக்காக பொருந்துகிறது.நல்லவேளை, அவரை மை போட்டு கண்டுபிடிக்கும் மந்திரவாதியாக காட்டாமல் கொஞ்சம் வேறு மாதிரி காட்டியுள்ளார் இயக்குநர்.


                       முதுமையை அடைந்தவர்களுக்கும் நிறைய ஆசைகள் இருக்கும்.அவற்றை கேட்காவிட்டாலும் பரவாயில்லை அவர்கள் மனதைப் புண்படுத்தாமல் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போவதே மனிதத்தன்மை என்பதை அழகாக உணர்த்துகின்ற கேடி என்கிற கருப்புதுரை படக்குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றி.இது போன்ற படங்கள் தமிழில் அதிகம் எடுக்கப்பட வேண்டும் என்ற ஆசையில் ஒரு பேரன்பு ரசிகன்.
                       

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close