கவிதைகள்

கவிதைகள் -வலங்கைமான் நூர்தீன்

1) இலவச (மனக்) கழிப்பறைகள்
பேருந்து நிலையத்தின் துர்நாற்றம் பீடித்த
இலவச கழிப்பறைக்குள் நுழையுமவன்
அவசர அவசரமாக தன் கையிலிருக்கும் கரிக்கட்டியால்
அழுக்கும், சளியும், வெற்றிலை, பான் எச்சில் கறைகளுடன்
மூத்திர வீச்சமடிக்கும் சுவரில்
ஆண் பெண் அந்தரங்க உறுப்புகளை வரைந்து
அம்புக்குறியிட்டு அங்கங்களின் பெயர்களை
கொச்சைவார்தைகளால் எழுதிவிட்டு வெளியேறுகிறான்.சமீபத்தில் அவனுக்கது முற்றிய நோய்.
ஆண்டிராய்டின் நீலப்படங்களாலும்
ஆன் லைன் சரோஜாதேவி கதைகளாலும்
மர்ம உறுப்புகளின் மன்மத ஓவியனாகியிருந்தான்.பஸ் ஸ்டாண்ட் அருகிலிருக்கும் டாஸ்மாக்கிலிருந்து
தள்ளாட்டத்துடன் மூத்திரத்திற்கு
உள்ளே நுழையும் வேறொருவன்
ஆபாச ஓவியங்களின் கீழே
கெட்ட வார்த்தைகளால் முனகிக்கொண்டே
தன் பால்பாயிண்ட் பேனாவல் ஆவேசமாக எழுதுகிறான்
அவன் இச்சைக்கு இணங்காத, ஆசைக்கு மடங்காத
முகநூல் தோழியின் அலைப்பேசி எண்ணை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2) X Y Z
வெகுகாலம் முன்பு அவனுக்கொரு பெயர் இருந்தது
அதை அவன் இப்போது மறந்திருக்கிறான்
அவன் பெயர் X
அது அவன் பெயர் அல்ல
அவர்கள் அவனை Y என்று அழைக்கிறார்கள்
நீங்கள் அவனை X என்றோ
Y என்றோ அழைத்துக்கொள்ளுங்கள்
அவனுக்கான  பெயரை அவன் வைத்துக்கொள்வதை விட
அவர்களோ நீங்களோ வைப்பதில்
ஒரு சிறப்பும் இல்லைதான்
அவனுக்கு பெயர்கள் இருப்பது போலவே
உங்களுக்கும் அவர்களுக்கும்
வெவ்வேறு முகங்கள் இருந்தன
அவைகள் அவனை பார்க்கும்போதெல்லாம்
வெள்ளை, மஞ்சள், பான் காவி, நிகோட்டின் கறுப்பு- என
நிறங்களில் சிரித்து வைத்தன
மெடூலா ஆப்லங்கேட்டாவில் அடிபடவில்லையென்றாலும்
இளிப்பு கபாலங்களின் பின்புறம்
குருதி ருசிக்க துடித்த கோரப்பற்களை அவன் மறந்திருக்கிறான்
அவைகள் அவன் குரல்வளை கிழித்து உறிஞ்சியதையும் மறந்திருக்கிறான்
செரிபரம், செரிபல்லம் எல்லாமே
சரியாக தங்கள் வேலைகளை செய்கிறது
அவ்வப்போது ஏறி இறங்கும் இரத்தக்கொதிப்பைத்தவிர,
இந்த மெடூலா ஆப்லங்கேட்டாவிற்கு தான்
என்ன ஆனது என்று தெரியவில்லை
ஆங்கில அட்சரங்கள் அனைத்திலும்
அவன் பெயர் தொலைந்திருக்கிறது
வெகுகாலம் முன்பு அவனுக்கொரு பெயர் இருந்தது
அதை அவன் இப்போது மறந்திருக்கிறான்
அவனுக்கு  யாதொரு பிரச்சினையுமில்லை
ஆங்கில அட்சரங்களின் கடைசி எழுத்தை விட்டுவிட்டு
A முதல் Y வரை அவனை விளித்துக்கொள்ளுங்கள்
அவன் அவனைத்தவிர
நம் அனைவருக்கும் பெயர் வைத்திருக்கிறான் ‘Z’.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3) குருதியாறு
துயரங்களை கனக்க வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
அவை சிறு சிறு கத்திகளாக செவிகளில் நுழைந்து
யாழினில் அறுபடும் இழைகளைப் போல
நாடி நரம்புகளை துண்டித்து செல்கிறது.
வழிந்தோடும் உன்னிசையில் ஆறாக ஓடுகிறது பார் என் குருதி.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4) முனியாண்டி_விலாஸ்_அருகே_குஷ்பு_ஒயின்ஸ்_இருந்த_அதே_இடம்
எழுதப்படாத கவிதைகளுக்கான
பெயரிடப்படாத கவிதை நூல்
அத்தனையும் விற்றுதீர்ந்துவிட்டன.
அதில் எழுதப்படாத அத்தனை கவிதைகளும்
வாங்கியவர்களாலும் வாசித்தவர்களாலும்
கமா முதல் முற்றுப்புள்ளி வரை
ஒவ்வொரு வார்த்தைகளாக அலசப்பட்டு
ஆராயப்பட்டு கிழித்து தொங்கவும் விட்டாயிற்று.
அதில் எழுதப்படாத கவிப்புலியின் அணிந்துரையைத்தான்
அவரின் போட்டியாளர்களைத்தவிர
அனைவரும் சிலாகிக்கிறார்கள்.
அவர் கண்ணாடி அணிந்திருந்தாலும்
அவரின் பார்வை அணிந்துரையில்
அத்தனை துல்லியமாம்.
விருது அறிவிப்பதற்கும்
கவிக்குடிமகன் பட்டம் கொடுப்பதற்கும்
நட்சத்திர மதுபான அறைகளிலும்,
நள்ளிரவு பப் களிலும்
கடற்கரை சாலைகளில் அவருக்கு
வலைவீசிக்கொண்டிருக்கிறார்கள்.
திருவள்ளுவர் தியேட்டருக்கருகே
தெற்கலங்கம் சாலையில்
எனக்கு வலதுப்புறம் உங்களுக்கு இடப்புறம்
“டாஸ்மாக் மதுபானக்கடை” பதாகை தாங்கிய
மூத்திர சந்தின் உள்ளே
முனியாண்டி விலாஸ் ஓட்டலின் அருகிலேயே
(முன்பு ‘குஷ்பு ஒயின்ஸ்’ இருந்த அதே இடம் தான்)
மங்கிய அறையொன்றின் மூலையில்
பிசுப்பேறிய பிளாஸ்டிக் நாற்காலியில் ஜோல்னா பையும்,
மழிக்காத பிசிறடித்த பல நாள் தாடியும்
அழுக்கு உடையுடனும் பரட்டை தலையுடனும்
நடுங்கிய கைகளில் ஒன்றில் பாதி கரைந்த சிகரெட்டும்
மறு கையில் நெகிழி குவளையில் பாக்கெட் நீர் கலந்த மதுவையும்
இடுங்கிய கண்களோடு அடுத்த கட்டிங்கிற்கு
ஆள் தேடும் அவனைத்தான் நீங்கள்
தேடப்படும் கவிஞர் என்கிறீர்கள்.
அது தான் இல்லை.
அரை பாக்கெட் வில்ஸ் ஃபில்ட்டரும்
சிறு நடுக்கமும்
யார் கண்ணிலும் அகப்படாமலும்
அவசர அவசரமாக ஒரு குவாட்டரை வாங்கி
உள்ளே நுழைந்து
சரக்கு உள்ளே நுழையும் முன்னே
மனதில் இக்கவிதையை எழுதிமுடிக்கும் நீங்கள் தான்
வழங்கமுடியாத விருதின் கவிக்குடிமகன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5) துயரத்தின் பாடல்
உன் விழிகளில் வழியும் நீர்த்துளிகள்
என் மரணத்திற்கான அழுகையா
இல்லை ஆனந்தக் கண்ணீரா…?
என் கண்களில் வழியும் நீர்த்துளிகள்
உனைக் கண்டதின் மகிழ்ச்சி திவளைகள்
என் இறப்பிற்கான என் கண்ணீர்
நீ நடக்கும்போதெல்லாம் உன்னைத் தொடர்வது
உன் நிழல் அல்ல
அது நான் தான்
நானும் நம்புகிறேன் என்னைத் தொடர்வதும்
என் நிழலே அல்ல. அதுவும் நானே…!
கல்லறைத்தோட்டம் செல்லும் வழியில்
நீ சூடிய பூக்களை உதிர்த்துவிட்டுப் போ
மிதிபடாமல் அதன் வாசத்தில்
நான் தொலைக்கப்போகும் என் சுவாசம்,
கலந்து கரையும் அந்த காற்றில்
எப்போதாவது கேட்கலாம் ஒரு துயரத்தின் பாடல்.
குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. அருமையான கவிதைகள்! வாழ்த்துகள் சகோதரரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close