கவிதைகள்
Trending

கவிதைகள்- திருமூ

1) சியர்ஸ்
__________
அவளின் மெல்லிடைபோல்
வளைந்து நெளிந்த
அக்கண்ணாடித் தம்ளருக்குள்
அடர்சிகப்பில் மிளிரும்
கருந்திராட்சை ரசத்தினுள்
ஒரு இரும்புப் பிடியின் கைக்கொண்டு
சின்னஞ்சிறு பனிக்கட்டியை
‘தொபக்’கென்ற சத்தமெழும்படியாய்ப் போடுகிறேன்
வர்ண விளக்குகள் விட்டுவிட்டு
ஒளிரும் இக்கிளப்பின் பேரோசையில் உதிக்கும்
இன்றைய இரவு ஆட்டத்தின்
குத்தாட்டக் குதூகலத்தில்
உன் சந்தன மேனியில்
சங்கீதக் குரலோசை விரவிப் பூக்க
நீலநிற விளக்கொளியில்
இடமிருந்து வலமாய்
மேலிருந்து கீழாய்
அது நின்று நின்று
எனது கற்பனையில் கரைகிறது கண்ணே..!
இருவரையும் கவிழ்க்காத
ஒருவரிக் கவிதையொன்று சொல்லியணைக்கிறேன்
வா..!
சொர்க்கத்தின் சொப்பனத்திலமர்ந்து
விசிலடித்து விளக்கணைப்போம்!
சியர்ஸ்…… *#*#*#*

2) ஜீவநதி
_______________

அவளது பட்டையான முகத்தின் அழகு
எனது காமிராவின் அருகில் வந்துபோகையில்
கண்களினூடே ஜீவநதி கசிகிறது;
அத்தனை தத்ரூபமாய்
அச்சுப் பிசகாமல்
அப்படியே உள்ளது உள்ளபடியென
இந்தக் காதல் நோயை
படம்பிடிக்கும் காமிரா பாராட்டுதலுக்குரியதென்பேன்;
ஆம்,
அவள் கன்னத்தில் வைத்த
ஃபோக்கஸ் நழுவிப் போகையில்
அவர்களின் சின்னஞ்சிறு செல்ஃபிக்குள்
ஜோடிச் சிற்றிதழ்கள்
கூடிக்கொண்டிருந்தன.

3) தாபம்
_______________

அவன் கையகலப் பேசியில்
முந்தைய நாள் கனவில்
ஜூம்செய்த முத்தத்தின் ஈரம் வழிகிறது
கை படுதலும்
தொடுதலும்
உதடு நனைதலும்
நனைத்தலும்
உடை அவிழ்தலும்
அவிழ்த்தலும்
மடை முறிந்த வெள்ளம்
கட்டிலுடைத்தலும்
அதுவாய் உடைதலும்
சின்னஞ் சிறுதுளி முத்தமும்
செங்கடல் பொங்கும் சப்தமும்
பிறிதொரு கணமின்றி
பிறிதொரு நாளின்றி
பிறிதொரு வாரமின்றி
பிறிதொரு மாதமின்றி
பிறிதொரு வருடமின்றி
அக்கணமே,
அப்பொழுதே,
அத்தனை
தாபத்தையும்
சிலநூறு எமோஜிக்களில்
வெடிக்கச் செய்து மகிழ்கிறான்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close