கவிதைகள்
Trending

கவிதைகள் – ச. மோகனப்பிரியா

விழி தேடும் வெளி..!

கோலிக் குண்டுகளினுள்
சூழ்ந்திருக்கும் செடிகளுக்கு
யார் தண்ணீர் ஊற்றுகிறார்களென
மழலையின் மொழியில்
கேட்கத் துவங்குகிறது
குழித்தட்டில் கோலி விளையாடும்
விரல்கள்..

தன் முன்னிருக்கும் குழிக்குள் துழாவும்
காற்றுக்கும் கேட்காது
உரையாட ஆரம்பிக்கிறது
எதிரிருக்கும் பெருவிரல்..

யாதொரு முடிவுகளுமற்ற
உரையாடலைக் கேட்க
ஓடி வந்து அமர்ந்து கொண்டது
வரவேற்பறையில் அதுவரை
உறங்கிக் கொண்டிருந்த
பூனைக்குட்டி!

நீண்ட மௌனத்தினைக் கலைத்த
பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும்
இடையே அகப்பட்ட
நீலம் பாரித்த
விழிகளை உற்று நோக்கியது
கோலிக்குண்டுக் கண் வழியே
அந்தப் பூனை..

சாளரத்தின் வன்காற்றொன்று
அடித்து மூடிய
கதவின் கடைசி கணத்தில்
நுழைந்து உருண்டு கொண்டிருந்தது
ஒரு அரூப விரல் மொக்கு..

விளையாடும் வட்டங்களைக்
கடந்த குண்டு,
தாவிச் சென்று அவ்விரலைத்
தழுவிக் கொண்டது..

வீட்டின் கதவருகில் உருண்டு
வெளியேறும் எண்ணத்தைத்
தூக்கி விழுங்கி
இப்போது மலங்க மலங்க
விழிக்கத் துவங்கியிருந்தது
குண்டு குதப்பும் பூனை..!

கானல் வெளி..!

மணற்கடிகையில்
அடைபட்ட மணலென அறைக்குள்
அடைபட்டுக் கிடக்கிறேன்.
மழை விடுத்த இரவின் கடைசி நிமிடப்
புலர்தலென கனவில் எழும் உன்னை
நெருங்கி முத்தமிட இயலாது
இருளுக்குள் இன்னும் புதையுண்டிருக்கிறேன்..
நீயமர்ந்து காத்திருந்த இடத்தில்
சரக்கொன்றை இன்றும் விழுந்து
என்னைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுதில்
கண்ணாடிக் குடுவையினுள் அடைபட்ட
ஹீலியம் வாயு ஏற்றிய இறகின் மேல்
நான் மிதந்து கொண்டிருப்பேன்..!

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close