கவிதைகள்
Trending

கவிதை- கனகா பாலன்

கனகா பாலன்

**எனக்குள் அவள்**

நினைவுக் கூடுக்குள்
நுழைந்து கொண்ட நாட்கள்
துருவி எடுத்தன
சில நிஜங்களை…

இளமையின் வனப்பில்
மிதந்து கிடந்த
அவற்றின் மணம்
நுகர நுகர
திரும்பிப் போகிறது காலங்கள்…

பள்ளி செல்வதற்கு முன்னே
அண்டை வீட்டுத் தோழியோடு
குட்டிக் கவுனும் மட்டிச் சிரிப்புமாய்
சுட்டித்தனம் செய்வேனாம் நான்…

அடம்பிடித்து அழும் எனக்கு
அவசரத் தேவையாய்
அவள் முகம் மட்டுமே இருக்குமாம் எப்போதும்…

நெடுநெடுவென்று வளர்ந்து
தளைய தளைய தாவணி கட்டி
பொடுபொடு பேச்சினில்
கட்டிப் போடுவாள் பலநேரம்…

அறிவியலும் கணக்கும்
இணக்கம் கொள்ளா பாடங்கள் அவளுக்கு
-அதனாலே
தேர்ச்சி பெறும் என்னோடு
பிணக்கம் கொள்வாள் சிலநேரம்

தெற்றுப்பல் எட்டிப் பார்க்க
கன்னக்குழி கவிதை சொல்ல
நீண்ட தலைமுடியில் சுருண்ட இரண்டு
நெற்றி தவழ அழகியென்றே ரசிப்பதுண்டு நான்…

என்
மென்மை குணங்களுக்குத்
தீவிர ரசிகை அவள்
என்
பொறுமை மனதுக்கு
உருகிடும் பனித்துளி அவள்…

தோளில் கைபோட்டு
தொணத்தொணவென பேசியே-ஓயாமல்
நடந்து சென்ற பாதையில்தான்-மகள்
மிதிவண்டி பழகி மகிழ்கிறாள் இன்று…

ஓலைப்பெட்டி சொப்போடு
ஒதுங்கி போய் சமைத்து
காக்கா குருவிக்கெல்லாம்
பந்தி வைத்து உறவாடிய பொழுதோ
மகன் தூங்க
கதையாகிப் போனது இன்று…

அவள்
வீட்டு ரோஜா-என்
கூந்தலில் சிரிக்கும்

என்
வீட்டுக் குழம்பு-அவள்
உண்ண ருசிக்கும்…

வட்டமடிக்கும் சிட்டாய்
கொட்டமடித்த விழாக்களில்
கட்டிப் போட்ட மனதோ
விட்டபாடில்லை இன்றுவரை…

என்
நிரம்பிய சோகங்களை
தள்ளிவிடும் கண்ணீரில்
உப்பளம் ஆகியிருக்கும்
அவள் முந்தானை…

என்
விரும்பிய நேரங்களில்
சொல்லோடிய உரையாடலில்
சுகம் கொண்டிருக்கும்
அவள் இதயம்…

கல்லூரி படிப்பு
வில்லனாக நுழைய
கண்ணீர் பெருக்கி
அழுத கதை ஆறலையே இன்னும்…

வெளியூருக்காரன்
கணவனாக அமைய
நெஞ்சு வெடிக்க
கனத்த கணம் தொலையலையே இன்னும்…

எங்கே இருக்கிறாளோ?
எப்படி இருக்கிறாளோ?
என்னை நினைப்பாளோ?-இல்லை
எல்லாம் மறந்தாளோ…?

ஆன்ட்ராய்டுக்குள்
ஆராய்ச்சி செய்து
‘யுரேகா’ வென கூவும் வேளை
பக்கம் இருப்பாளோ என் ரேகா…

எனக்குள் ஒருவளல்ல அவள்-என்
மனக்கண் தேடலெல்லாம் தோழியே
உயிர்ப்பொன் வருடலாக அவள்-என்
தினத்தின் ஆறுதலெல்லாம் தோழியே…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close