கவிதைகள்
Trending

கவிதைகள்- ஆனந்தி ராமகிருஷ்ணன்

கோடை!

இந்த மாநகர சாலைகளின் உச்சிப் பொழுதில்
அங்கும் இங்கும் சூரியக் கற்றைகள்
விக்கித்து அலைந்து
மக்கள் வற்றிய வியப்போடு
கண்திறவா சிசுவானது
பின் யோசித்து ஓர் வீட்டின் சாளரத்தை
ஊடுருவ சங்கேதக் குறிப்புகளோடு
அமர்ந்திருக்கின்றது
அப்போது சட்டெனக் கடந்த மனிதனை
கண்கொள்ளா ஆச்சர்யத்தோடு
பார்த்துவிட்டு மறுதிசை நகர்ந்து
சென்று ஒளிய முற்பட்டது
கொடியிலிருந்து வெயில் கற்றைகளின் மீது
படர்ந்த முல்லைப் பூக்கள்
கண்களில் மிளிரும் காதலாகி மிதக்கிறது
மெல்லிய விசும்பல்
இடையறாது பேசும்
சிலிர்ப்புகள் தழுவல்கள்
பூமியில் நிழலெனப் படர்கிறது
இவையெல்லாம்
முந்தைய
கோடையிலும் நிகழ்ந்தவைதான்.

இறுதி!

செயற்கையாய் குளிரூட்டப்பட்ட
பிண அறைக்குள் நுழைகிறேன்
வெண்ணிற சித்திரம் அசைவற்று
வரிசை கிரமமாய் அடுக்கப்பட்டிருப்பது
மெல்லிய விளக்கொளியில்
காணக்கிடைக்கிறது
கண் திறவா சிசுவாய்
கடந்து போன
வாழ்வின் மிச்சங்களாய் மனம் முழுக்க
அச்சத்தை நிரப்பி வியாபிக்கிறது
சுட்டு வலிக்கின்ற பைத்தியம் பிடிக்கும் நிலை உணர்வெங்கும்
பற்கள் நர்த்தனத்தை நிகழ்த்துவது
இயலாமையின் வெளிப்பாடு
சித்திரவதை கடக்கும்
ஒவ்வொரு முகங்களிலும் பிணவாசம்
சட்டென கைகள் பற்றும்
கூர் நகங்கள் கொண்ட அவளுக்கு
கால் நிச்சயம் இருந்தது
உற்றுநோக்கும் அவன் கண்களோடு
எனது இருப்பிடம் ஊர்ஜிதமானது
தவம் கொண்ட யுவதி ஒருத்தி
வரமாய் திராட்சை ரசம் பருகத் தருகிறாள்
வாதையின் துருவேறிய கண்கள்
வலியூறிய உதடு சுழித்து
உதிரம் உறைந்து
உயிர் இழந்த துன்பவியல் சித்திரம் நான்
சாவின் இறுதித் தடமாய் இப்போது
நான்காம் வரிசையில்
நிறைந்திருக்கிறேன்.

ஞாபகங்கள்!

புகைப்படம் சுவரில் ஞாபகமாய்
படிந்து கிடக்கிறது
யாரும் கவனிக்கவில்லை அதன் இருப்பை
பல ஞாபகங்களை முன்னெடுத்துச் செல்லும்
அதன் யோசனைக்கு அகலிகை பாஷை
வார்த்தைகளால் ஒரு போதும் அதன் தொன்மையை
விவரிக்க இயலாது
ஒவ்வொருவரும் வேண்டப்பட்ட இடத்திலிருந்தே
தவமிருந்து தன் வரத்தை வியாபிக்கும்
வெட்கம் கொள்ளச் செய்யும் அதன் வயதுக்கு
வெவ்வேறு தயக்கங்கள்
உற்றுநோக்குகையில்
அம்பாராமாய்க் குவியச்செய்யும் கவனத்தை
அதன் எதிர்நின்று சதிராடாதவர்கள்
இல்லவே இல்லை
சட்டென வந்துவிட்ட சாமானியர்கள் கவனியாதபடி
அறை கதவடைத்துக் கொள்ளும்
புகைப்பட ஞாபகங்கள் கதவிடுக்கில் கசிந்துவிடாதபடி!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button