கவிதைகள்
Trending

கவிதைகள் – ச. மோகனப்பிரியா

கவிதைகள் – ச. மோகனப்பிரியா

1. வேடம் தரித்த வீதி

வீதியின் திருப்பமொன்றில்
மாப்பிள்ளைத் தொப்பியுடன்
ராஜராஜ சோழனைத்
தூக்கிக் கொண்டு போனவள்
செங்கோலினைத் தலைகுப்புறப்
பிடித்திருந்தாள்..

கொட்டாவி விட்டபடி
கையில் ஏட்டுடனும்
வெள்ளைத்துண்டுச் சகிதமாய்
தனது முறுக்குத் தாடியைத்
தொட்டுப்பார்த்துப் படியிறங்கிடும்
வள்ளுவரை
காவியுடை அணிந்த
சாமியார் கைபிடித்து
இழுத்துக் கொண்டிருந்தார்..

காவித் தொப்பியில் விவேகானந்தரைத்
தட்டிக் கொடுத்துக் கொண்டே
வண்டியேற்றினார் தந்தையொருவர்..

வீட்டின் முற்றத்தினை நெருங்குகையில்
கழுத்திலிட்ட அரவம் காண
மின்னும் கைச்சூலத்துடன்
புலித்தோல் உடுத்திய சிவபெருமான்
நம்மை நோக்கித் திரும்பிச்
சிரித்து வைக்கிறார்
ஆதியோகியின் சிலையை எண்ணி..

அடுத்த சில
மணி நேரங்களுக்கு
மாறுவேடங்களில் பேசிய
மழலைப் பேச்சுகளை
வீதியெங்கும்
விட்டுவிட்டு ஒலிபரப்பிக்
கொண்டிருந்தது
சிறார் பள்ளி முன் வீற்றிருந்த
அந்த ஒற்றைப்
பவளமல்லி மரம்..!

2. மாலை வெயிலில்
விளையாட்டுப் பிள்ளைகளின்
விரல்களின் வழியே
விடைபெற்று அடங்குகிறது
ஒரு கொட்டாவிச் சோம்பல்..

தார் சாலைச் சீரமைப்பின்
மஞ்சள் தொப்பிகளில்
ஒளிந்து கசகசக்கிறது அவர்களின்
தனித்துவிடப்பட்ட நகரத்து
வெம்மை நினைவுகள்

சாலை கடக்கும்
பாலத்தின் படிகளில்
கடவுளின் நாமத்தில்
மூட்டு வலியை மறக்கும்
மூத்தவரின் முணுமுணுப்புகளில்
விழித்து அசைகின்றன
காகிதப் பூக்கள்..

ஆசுவாசங்களைத் தேடும்
தார்ச்சாலையும் பாலமும்
நடுநிசியில் ஒன்றையொன்று
விசாரித்துக் கொள்ளப்
புரண்டு படுக்கிறது
‘மியாவ்’ சொல்ல மறந்த
பூனை..

3. அலையில் புரளும் தேவதை

அலை துள்ளி விளையாடும்
பாறையின் உப்பரிப்பில்
நுழைந்து நழுவுகிறது ஒரு
குட்டி நண்டு
சிவப்புக் கொடுக்குகளில்
சிக்குண்ட நுரையினை
பிடித்தும் விடுத்தும்
விளையாடி மகிழ்வதென்பது
நிலாவைப் பிடித்து
கைக்குள் வைத்திருப்பதாய்
சொல்லிக் காட்டும்
ராணியக்காவைப் போலே இருந்தாலும்
அவள் புத்தி
சரியில்லையெனப் பேசிக் கொண்டார்கள்..
நன்றாக சிரித்து தானே பேசுகிறாள்
எப்படி இப்படியென ஆராய முற்படும்
சிறார் கூட்டமெல்லாம்
அவள் கொடுத்த நண்டுக்குட்டிகளை
அட்டைப்பெட்டிகளில் அடைத்து
நகர்ந்து கொண்டிருந்தனர்
ஆளுக்கொரு திசையில்..
திக்கு தெரியாமல் வெகு நேரம் நின்ற
ராணியக்கா பின்பொரு நாள்
கரையோரம் பிணமாய் கண்டபொழுது
புரிந்துவிட்டிருந்தது
யாருக்கெல்லாம் அவ்வூரில்
பைத்தியமென..!

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close