கட்டுரைகள்

‘கவிச்சக்கரவர்த்தியின் பணிவு’; நூல் அறிமுகம் – விஜயராணி மீனாட்சி

கட்டுரை | வாசகசாலை

அன்பையும் அறத்தையும் எப்போதும் பேசுவது இலக்கியம். பேரிலக்கியமான இதிகாசங்கள் அடுத்தவருக்குச் சொந்தமான மண்ணின் மீதும் பெண்ணின் மீதும் ஆசை கொண்டால் அழிவாய் என்பதைச் சொல்கின்றன.

பொதுவாக ஆய்வுநூல்கள் ஆய்வு மாணவர்களுக்கு வரப்பிரசாதமேயன்றி என்னைப்போல் வாசகர்களுக்கு அயர்ச்சியைத் தருபவை என்பது எனது எண்ணம். ஆனால் நான் வாசித்த ஆய்வு நூல்களில்,  ‘கண்ணகி கோவிலும் வைகைப்பெருவெளியும்’ என்ற ஆய்வுநூல் எழுதிய, ‘பாவெல் பாரதி’யாகிய தோழர் மோகன் குமாரமங்கலம் அதை அத்தனை ஈர்ப்போடு படைத்திருந்தார். அத்தனை சுவாரஸ்யமாய் இருந்தது.

அது எழுதுகிறவரின் திறமை என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன். எவ்வாறெனில், அன்பிற்கினிய தோழர் பாரதி கிருஷ்ணகுமார் (அடடே இருவரும் பாரதி பெயரிலேயே!!!) அவர்களின் ஆய்வுநூலான “கவிச்சக்கரவர்த்தியின் பணிவு” எனும் நூல் அத்தகைய ஈர்ப்பையும் அநேக ஆச்சர்யங்களையும் ஆகப்பெரும் அவரது தகவல்திரட்டுக்கான உழைப்பையும் ஒருங்கே பறைசாற்றுகிறது கவிச்சக்கரவர்த்தியின் அதே பணிவோடு,  பணிவன்போடு.

உலகெங்கிலும் ஏறக்குறைய முன்னூறு இராமாயணக் கதைகள் இருக்கிறதாம். வடமொழியிலேயே வசிஷ்ட இராமாயணம், அத்யாத்ம இராமாயணம், அற்புத இராமாயணம், ஆனந்த இராமாயணம் என நான்கு வகையான இராமாயணங்கள் முழுமையாக உள்ளனவாம். 80-களின் இறுதியில் தொலைக்காட்சித் தொடராக ஆனந்த சாகர் தயாரித்த இராமாயணத்தைப் பார்த்தவர்கள் அறிந்திருக்கலாம். வாரந்தோறும் ஒளிபரப்பின்போது யார்யார் எழுதிய இராமாயணங்களை ஆதாரமாகக் கொண்டதெனக் குறிப்பிடப்படும்.

இங்கே தோழர் BK பௌத்த இராமாயணம் மூன்றும், பிராக்கிருத/சமஸ்கிருத மொழிகளில் எழுதப்பட்ட ஜைன இராமாயணங்களையும்  தெலுங்கு கன்னட மலையாள ஹிந்தி அசாமிய ஒரிய மராத்திய… ஏன், திபெத்திய தாய்லாந்திய மலேய சிங்கள மொழி இராமாயணங்களையும் எடுத்தியம்புகிறார்.  இன்னும் பல்வேறு நாடுகளிலும் உள்ளதையும் குறிப்பிடுகிறார்.

நம்காலத்திய புகழ்மிகு கம்பநேசன், கம்பரின் காதலன் இலங்கை ஜெயராஜ் குறிப்பிடும் நுட்பம், “உலகைத் தமிழுக்கும், தமிழை உலகுக்கும் தன் ஒரே நூலால் அறிமுகம் செய்தவன் கம்பன்” என்பது எக்காலத்திற்கும் மறுக்க முடியாத உண்மை.

இன்னும் ஏராளமான ஆன்றோர்கள் கம்பனில் களித்தவர்கள் கூறும் புகழுரைகளையெல்லாம் திரட்டுப்பாலென தீஞ்சுவையோடு அள்ளித்தருகிறார்.

வால்மீகி இராமாயணம் துன்பியல் காப்பியம்.  இராமன் சரயு நதியில் மூழ்கி இறந்து போவதோடு முடிகிறது. ஆனால் கம்பனின் இராமாயணத்தில் இராமன் முடிசூடும் காட்சியோடு நிறைவடையச் செய்து இன்பியலாகிறது.  “தொகுத்தல், விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடனை மரபினவே” என்ற தொல்காப்பியரின் வரையறையைக் கைக்கொண்டு மொழிபெயர்ப்பாக (Translation) அல்லாது மொழியாக்கமாக்கி (Transcreation) இருப்பதை எளிமையாக  உணர்த்துகிறார்.

பிறமொழி இலக்கியங்களைக் கொண்டாடிப் புகழும் ஆன்றோரென அறியப்படும் பெருமக்கள் தத்தமது மொழியில் சமகால படைப்பாளிகளைக் கொண்டாடுவதில் சாதி மத பாகுபாடு காட்டுவது அவர்புகழ் பரவாமல் தடுப்பது என்பதெல்லாம் பன்னெடுங்காலமாகத் தொடரத்தான் செய்கிறது. இங்கே கம்பன் பட்ட துயரங்கள் அமுக்கிவைக்கப்பட்ட அவரது புகழ்போல சற்றே சுருக்கி வரையப்பட்டிருக்கும்.  கம்பன் பெற்ற வசவுகளை எதிர்ப்பை கம்பனே தரும் கவிதை வாக்குமூலமானது ஆகப் பெருந்துயரம்.  காலந்தோறும் எழுத்தாளனை ஒரு தேர்ந்த கவிஞனைக் கொண்டாட இந்த தேசம் ஏற்புடையதல்ல போலும்.

தமிழிலக்கிய மரபில் கடவுள் வாழ்த்திற்குப் பிறகு ‘அவையடக்கம்’ எனும் பகுதியைமுதன்முதலில் அறிமுகப் படுத்தியதே கம்பர்தான் என்கிறார் நூலாசிரியர்.  நூலின் தலைப்பிற்கேற்ப  83-ம் பக்கம் தொடங்கி 140 வரை நூலின் முக்கிய சாராம்சம். அவையடக்கத்தில் ஆறு பாடல்களை கம்பனின் மனக்கிலேசத்தை உள்ளம் உருக்கச் சொல்லும் வித்தை நான் சொல்லக்கூடாது.

அவையடக்கத்தில் என்போன்று ஆரம்பக்கட்டத்தில் கம்பனை அறிவோர்க்கு ஒரு ரகசியம் சொல்கிறார். அதாவது நாள்தோறும் கம்பன் கவிதைகளில் சிலவற்றையேனும் தொடர்ந்து படித்தால், கவிச்சுவை உணர்வும், சொல்வன்மையும், தமிழறிவும் பெருகுமென திண்ணமாக உறுதியளிக்கிறார்.

‘அசுணம்’ என்ற பறவை பற்றிய செய்தி அற்புதம்.

பிறகு ‘மராமரப்படலம்’  குறிப்பிட்ட பாங்கு  அதிலும் வில்லுக்கு ஒப்பானது தன் சொல் என்று சொல்லாமல் சொன்ன கம்பனது திறம்….. இவற்றையெல்லாம் மிக அற்புதமாக  நூலாசிரியர் சொன்னவிதம்……

இராம காவியம் படித்தது போல வாசித்து நேசியுங்கள்.

முதலிலேயே கூறியது போல நூலின் இறுதிப் பக்கங்களில் ‘வழித்துணையாய் நின்ற நூல்கள்’ என்று அந்தப் பட்டியலையும் கருணையோடு தந்திருக்கிறார் நூலாசிரியர்.  இது ஆய்வு மாணவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியன்றோ!?

கம்பனை பாடப்புத்தகம் தவிர்த்து அறியாத எனக்கெல்லாம் அந்தக் கடல், இல்லையில்லை, சமுத்திரக் கரையினில் கால் நனைத்தாற் போன்ற களிப்பே பேரின்பமென்றால் நீந்திக்குளித்தல் பெரும்பேரின்பம் போலும்.

கம்பனின் கவிதைகளில் மூழ்குவோம்.

***

கவிச்சக்கரவர்த்தியின் பணிவு (ஆய்வுநூல்)
நூல் விமர்சனம் : விஜயராணி மீனாட்சி
ஆசிரியர் : பாரதி கிருஷ்ணகுமார்
பரிதி பதிப்பகம்
வெளியீடு : THE ROOTS
விலை ரூ.200/-

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close