சிறுகதைகள்

கருக்குவாள் – அண்டனூர் சுரா

சிறுகதை | வாசகசாலை

ப்பெல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க..?

நீங்க கேட்கலாம். நான் பாப்பேன் சார். பெரிய எடத்துப் பிள்ளை நானு. என்னால் சாதி பார்க்காம இருக்க முடியுங்களா? இன்னைக்கும் என்  குடும்பம் ஊர் உலகத்தால மதிக்கப்படுதுனா, அதுக்குக் காரணம் என்னோட தோட்டத் தொறவோ, வசதி வாய்ப்போ இல்லைங்க. என் சாதிதான். என் சொந்த பந்தம் பத்தி உங்களுக்குத் தெரியாது. பத்துத் தலைமுற சொந்தத்த கட்டிக் காத்துக்கிட்டிருக்கேன். என்னையில்லாம என் சொந்தத்துக்குள்ளே யாரும் பொண்ணு எடுக்க, கொடுக்க முடியாது. அப்பேர்ப்பட்ட குடியான சாதியச் சேர்ந்தவன் நானு. சுத்துவட்டார ஊர்கள்ல முத மச்சுவீடு என் தாத்தா கட்டின வீடுதே.  அதிலதான் குடி இருக்கேன். இன்னைக்கும் அந்த வீடுதே சுத்துவட்ட பத்துப்பட்டி கிராமத்துக்கும் பெரிய வீடு. அடித்தளம் ரெண்டாளு உசரம். கருங்கல் சுவரு.  தேக்குச்சட்டம். ஏ வீட்டுக் கதவச் சாத்தத், திறக்க அஞ்சு பேரு வேணும். ஆமாங்க, வீட்டுக் கதவ இழுத்துச் சாத்தி வருசம் முப்பது ஆவுது. எப்பவும் வீட்டுல அடுப்பு எரிஞ்சிக்கிட்டேயிருக்கும். யாரு வந்தாலும் வாசல்லதான் சோறு.

ஏ வீட்டுத் திண்ணையில நாலூரு பஞ்சாயத்து நடத்தலாம். அவ்ளோ பெரியத் திண்ண. சுத்து வட்ட கிராமங்க எங்களச் சொல்றது பெரிய வீட்டு ஆளுங்கனு. சில பேருங்க மச்சுவீட்டுக்காரங்கனு சொல்வாங்க. கீச்சாதி சனங்க எங்களச் சொல்றது, ஆண்டே வீடுனு. ஏஞ்சாதி என்னென்னு தெரியுதுங்களா? அதெ ஏ மீசை சொல்லும். அதெ நான் ஏ வாயால சொல்ல வேண்டியதில்லைனு நெனைக்கிறேன்.

எங்க குடிக்கு மவுசு இந்த மீசதான். இது என்ன மீச, ஏ அய்யாவோட, பெரிய அய்யாவோட மீசய நீங்கப் பார்த்திருக்கனும். அவங்க வச்சிருந்த மீசையில பாதிதான் என் மீச. புலி வாலப் பார்த்திருக்கீங்களா? அப்படியிருக்கும். அய்யானு நான் சொல்றது என்னைப் பெத்த அப்பனை. பெரியய்யா ஏந்தாத்தா. ஊர் அவங்கள இப்படிதான் சொல்லும், அய்யா, பெரியய்யானு. ஆண்ட பரம்பரைங்க நாங்க.  எங்க குடும்பத்துக்கும் பாண்டிய வம்சத்தும் கொடுக்கல், வாங்கல் ஒறவு. அவங்க கூட பொண்ணு கொடுக்க, எடுக்க இருந்தவங்க நாங்க. இதெயெல்லாம் இப்பச் சொன்னா கேட்கிற உங்களுக்கு நாழியாகிடும். அதுக்காக எங்க குடிப் பெருமய உங்கக்கிட்டச் சொல்லாம இருக்க முடியுங்களா?

ஊர்ல பாதி எங்களோடது. ஊர்க் கோயிலு எங்களுக்குத்தே சொந்தம். ஊருக்குப் பாத நாங்க விட்டது. நாங்க விட்ட பாதையிலதான், இன்னைக்கும் பஸ், லாரினு ஓடித் திரியுது. இன்னைக்கும் அந்த எடங்களெல்லாம், ஏ பெரியய்யா பேரிலதான் இருக்கு. நான் நினைச்சா பஸ், லாரிகளத் தேக்க முடியும். ஆனா நான் மாட்டேன். ஏன்னா, எனக்கு சாதி, சனம் முக்கியம். ஊர்ப்பாதைக்காக நாங்க விட்ட பாத பல ஏக்கருங்க. ஏன் விட்டோம்? ஊர் வேணும், சாதி வேணும், சனம் வேணுமென விட்டோம்.

ஊர்ல முதல் கரை எங்க குடிதான். தலையில கும்பம் எடுக்கிற குடி. கோயிலுக்குக் கூச்சம் கூட்டுறப்ப, மொதத் திருநீறு எனக்குத்தேன். நான் திருநீறு வாங்கி நெத்தியில பட்ட போட்டப் பிற்பாடுதான் மத்த சாதி சனங்க திருநீறு வாங்கிக்கும். இன்னைக்கும் அப்படித்தான். பொங்கலுக்குப் பொங்குற மொதப் பானை எங்கப் பானைதே. மாட்டுப் பொங்கலன்னைக்கு அவுத்து விடுற மொத மாடு எங்க மாடுதெ. பொங்கலுக்காகவே வீட்ல நாலு காளைங்க விதை அடிக்காம கொம்பச் சிலுப்பிக்கிட்டுத் திரியுது.

ஊர்ல அம்பது வேலி நெலம் எங்களோடது. மேலாத்துத் தண்ணீயத் தொறந்துவிட்டா, சேரி குடிக ஏ அய்யா காலுல விழுற மாதிரி, தலைக்குப்புற பாயும். ஏ வேலில தண்ணி பாஞ்சிதான் மத்த சாதிக்கார வயல்களுக்குப் பாயும். பொண்ணு விளையுற பூமி. வயல், காடு , தோட்டத் துறவு பாதிய ஏ பெரிய அய்யா ஊருக்கு எழுதி வச்சிட்டாரு. அவரு எழுதிவச்ச நிலத்தில விளையுறததான் ஊர் அவிச்சி ஆக்கித் திங்குது.

ஏ அய்யா நடந்துபோனா ஊர் துண்ட எடுத்து கமுக்கட்டுல வச்சிக்கும். ஏ வீட்டு வாசல்ல இதுநா வரைக்கும், ஆளாளுபட்ட யாரும் செருப்பு போட்டு நடந்ததில்ல.  அதிர்ந்து பேசினதில்ல, காறித்துப்பினதில்ல, தடித்த சொல்லு சொன்னதில்ல. அப்பேருப்பட்ட குடும்பத்தச் சேர்ந்தவனுங்க நானு.

ஏ அய்யா முடியாத வயசும் அதுவுமா படுக்கையில படுத்தப் படுக்கையான பொறகு, ஊருக்குப்  பெரிய தல நான்தே.  எந்த கீழ்ச்சாதி சனங்களும், எங்க வீட்டு வாசல மிதிச்சது கிடையாது. மிதிக்க விட்டதும் கிடையாது. கீழ்ச்சாதிகள கீழ்ச்சாதியாகத்தான் இன்னைக்கும் நான் நடத்துறேன். ஏ அய்யாக்கூட அப்படினு , இப்படினு திண்ணை வரைக்கும் விடுவாரு. ஆனா நான் மட்டேன். அந்த விசயத்தில ரொம்பக் கறாரா இருப்பேன். தோளுக்குத் துண்டு போல மனுசனுக்குச் சாதி.

நீங்கக் நினைக்கலாம், இந்த கம்ப்யூட்டர் காலத்திலேயும் இப்படி இருக்கேனெனு. உலகம் கம்ப்யூட்டர்க்குள்ள சுத்துதுங்கிறதுக்காக, எனக்குக் கெடச்சாக வேண்டிய மரியாதைய வேண்டான்னு உதறித் தள்ளிட்டு போக முடியுங்களா? சாதி விசயத்தில, உடும்புப்பிடி நானு. ஊரே சொல்லும், எந்தக் காலத்திலே இவன் இருக்கானு? சொன்னாச் சொல்லிட்டு போகட்டும். எனக்கு அதைப்பத்தி கவல கிடையாது. எனக்கு நெருங்கமானவங்க உலகம் அப்டி, இப்டி இருக்கெனச் சொல்லி என்னை மாத்தப் பார்ப்பாங்க. யார் யார மாத்துறது?, என்கிட்ட அவங்க பாச்சா பழிக்காது. நான் அவங்க சொல்றதுக்குக் காதக் கொடுப்பேனே தவிர,  தலையக் கொடுக்கிறதில்ல.

ஏ தோட்டத் துறவுல, ஏ ஊர் சாதிச்சனங்க எப்பவும் மண்ண மிதிச்சிக்கிட்டே இருப்பாங்க. இப்ப போனாலும்  பார்க்கலாம். அஞ்சுப்பத்து பேரு வரப்பு வெட்ட, கொத்த, அரிக்க, ஆயனு இருப்பாங்க. உங்க அரசாங்கத்தினாலே நூறு நாளு வேலய நூறு நாளைக்கு கொடுக்க முடியுறதில்ல. கசானாவில காசே இல்லேனு கைய விரிச்சிடுறீங்க. நான் இன்னைக்கும் வருசம் முந்நூத்து சொச்சம் நாளும் வேல கொடுத்துக்கிட்டு இருக்கேன்.

என்னடா சொல்ல வேண்டியச் சொல்லாம,எதெஎதெயோ சொல்லிக்கிட்டே இருக்கேனு நிறுத்திச் சொல்லிறாதீங்க. நேரா விசயத்துக்கு வாறேன். இதுநாளு வரைக்கும் சேரி குடி ஆளுங்க ஏங்குடிப்பக்கம் வந்தது கிடையாது. ஏந்தோட்டத் துறவுக்குள்ள எறங்குனது கிடையாது. இத்தனெக்கும் சேரிய ஊர்ல கொண்டுவந்து வச்சது ஏ பெரிய அய்யாவோட அய்யாதான். அதாவது ஏ எள்ளுத்தாத்தா. உங்களுக்குத் தெரியுமென நினைக்கிறேன். எள்ளுத்தாத்தானா கொல்லுத் தாத்தாவோட அப்பா, மேலச்சீமையிலேருந்து நாலு குடியக் கொண்டு வந்து வச்சாரு. அதுதான் இன்னைக்கு நாற்பது குடியாயிருக்கு. தெருவாயிருக்கு.

ஒவ்வொரு ஊர்லயும்  சேரிப்புள்ளைங்க படிக்குதுங்க, பட்டணம் போகுதுங்க. தாட், பூட்டென இங்கிலீசு பேசுதுங்க. குழாச்சட்டைகள மாட்டிக்கிட்டு சரட்,புரட்டென நடக்குதுங்க. ஆனா ஏ ஊர்ல நான் அப்படியாக அனுமதிச்சதில்ல. ஏ ஊரும் சேரியும் அப்படியா மாறிடவுமில்ல.

ஏ ஊரு சேரி  சனத்த நான் நிமிர்ந்துப் பார்த்தது கூட  கிடையாது. பார்த்தாலும் சகிக்காது. அவங்களப் பார்த்தா ரெண்டு நாளைக்கு என்னால சோத்துல கை நனைக்க முடியாது. குடலோட வாய்  குமட்டிக்கிட்டு வந்திடும். வாந்தி வரும். அவங்களப் பார்க்கவே அருவறுப்பா இருக்கும். குளிக்கிறதில்ல, துணியத் துவைச்சி கட்டுறதில்ல. பல்லு விளக்குறதில்ல. தலையில எண்ணெ வக்கிறதில்ல. மழைக்கால செம்மறி ஆடாட்டம்தான் இன்னைக்கும் அவங்க.

எத்தனையோ நாளு அவங்க பிள்ளைங்கக் கல்யாணத்துக்குத் தாலி எடுத்துக்கொடுக்கச் சொல்லி கூப்பிட்டிருக்காங்க. ஆசி வழங்க அழைச்சிருக்காங்க. மத்த சாதி சனம் போகும். அவங்களோட குலாவும். மாமன் மச்சான்னு உறவாடும், கொண்டாடும். அள்ளி முடியும். ஆனா நான் மாட்டேனே.

சேரி சனத்த விடுங்க. மத்த சாதிச்சனத்துக்கே நான் கூலி கொடுக்கிறப்ப, ஏங்கை அவங்களத் தீண்டியதில்ல. அப்பேர்ப்பட்ட நான் போய், சேரிப்பொண்ணத் தொடுவேனா,  தொட்டாத் தீட்டுங்க. எந்தக்குளத்துல போய் நான் குளிச்சு, தீட்டக் கழுவிக்கிறதாம், சொல்லுங்க. சேரித் தீட்ட குளிச்சிப் போக்கிக்கிற தண்ணீ எங்கே இருக்கு. கங்கைக்குப் போகனும் இல்ல, தீயில எறங்கி என்னையே எரிச்சிக்கிறனும்.

நா விரல் நீட்டி அழைச்சா ஓடி வந்து, முந்தி விரிக்க ஆயிரம் பொம்பளைங்க உண்டு. ஊருக்கு ரெண்டென்ன, பத்து சின்னவீடு வச்சிருக்கே. அத்தனயும் கிளிப்பிள்ளைங்க, சுண்டிவிட்டா ரத்தம் வருமுங்க.

நான் வச்சிருக்கிற பொம்பளைகள உங்களுக்குத் தெரியாது. சும்மா தங்கக் கட்டிங்க மாதிரி இருப்பாள்வ.  பல்லு என்ன, மூக்கு, வாய் என்ன? அப்பேர்ப்பட்ட  என்னைப் போய் உங்கப் போலீஸ்க்காரங்க?

என்னெ வெளியே விட்டுப்பாருங்க. எத்தன பொம்பளைங்க ஏங்கால்ல வந்து விழுறாங்கனு. அப்பறம் சொல்வீங்க. இதெயெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா, என்னைய நீங்க முழுசா புரிஞ்சிக்கிறனும். அதுக்காகச் சொல்றேன்.

நீங்க நினைக்கிற மாதிரி கண்டக்கண்ட கழனிப்பானைக்குள்ளே கைய விடுறவன் நான் இல்ல. ஏஞ்சாதிக்கென ஒரு பெருமையிருக்கு, கவரிமான் பரம்பரை. என்னெய நீங்க வீணா சந்தேகத்தின் பேர்ல பிடிச்சு வந்து அடைச்சிருக்கீங்க. ஏஞ்சொத்து என்ன, ஏஞ்செல்வாக்கு என்ன? நீங்க என்னெ ஜாமீன்ல வெளியே விட்டுப்பாருங்க. அப்பறம் தெரியும். நான் யாரென.

இப்பவும் சொல்றேன்ங்க, நான் சேரித் தெருவுக்குள்ளே போனது கூட கிடையாது. அதுக்கான தேவையும் எனக்குக் கிடையாது. அவங்க கண்டத்தச் சுட்டு, உரிச்சி, அவிச்சி, வெந்தும், வேமாகத் திங்கிறவள்ங்க. அவள்வ நாத்தம் பெரு நாத்தம், அவள்வ எட்ட வந்தாலே நாத்தம் மூக்க அறுக்கும். இந்தக்காலத்திலயும், ஏன் இப்டி இருக்கீங்கனு அவங்கக்கிட்டேயே நான் கேட்கிறவன். அப்பேற்பட்ட நானா அதைச் செஞ்சிருப்பேன்.

நான் சொல்றத நீதிபதி நம்பல. எனக்காக வாதாடுன வக்கீலும் நம்பல. அந்தாளு ஒழுங்கா வாதாடியிருந்தா, நான் ஏன் இந்த ஜெயிலுக்குள்ளே அடைஞ்சிருக்கப் போறேன். நான் தெரியாமக் கேட்கிறேன். உங்கச் சட்டம் எவனோ கொடுத்தச் செல்போன நம்புது. அதில இருக்கிற படத்த நம்புது. அதில பதிவாகியிருக்கிற குரலை நம்புது. என்னைப்போல ஒருத்தன் அதில இருக்கான், அவன் நான்தான்ங்குது உங்கப் போலீஸ் துற. வாய் பேச முடியாத செல்போன, போட்டோவ, குரலை நம்புற உங்கச் சட்டம், வசதி வாய்ப்பா, ஊர்ல பெருந்தலயா இருக்கிற நான் சொல்றத நம்ப மாட்டேங்குது.

செல்போன்ல ஒரு குட்டி இருக்காளே, நீங்க கூட பார்த்திருப்பீங்களே, அதுல இருக்கிறது நானாங்க?, என்னெப்போல முகத்தில தழும்பு இருந்தா, முடி இருந்தா, மூக்கு மொகற இருந்தா அது நானாகி விடுவேனா?

நான் குடியானவன்க, ஆண்டப் பரம்பரை சாதிங்க. ஆனா அவ, சேரிங்க. அவளப்போயி நான். அவக்கிட்ட நான், நெனைக்கவே குடல் பிறட்டுதுங்க.. மூக்கு, நாசி இல்லாத வெறும் பிண்டமாங்க நானு…?.

சேரியத் தொடுறதே…. பாவமுனு சொல்றவன் நானு. அவங்களத் தொடுறது பச்சத் தீட்டுங்க. பார்த்தாத் தீட்டு. பேசினாத் தீட்டு. சேரி நிழல் ஏ மேலப் பட்டுறக்கூடாதுனு நினைக்கிற நான்போய் அவளை…

நான் என்ன, காஞ்சிப்போன கருவாடாகவா இருக்கேன். கார் வச்சிருக்கேன். தோட்டம், துறவு வேலிக் கணக்கில இருக்கு. மாசத்துக்கு லட்சம் கணக்கில வரவு செலவு செய்றவன். அப்பேர்ப்பட்ட நானா, அர்த்தராத்திரியில சேரிக்குடிக்குள்ளே, தனியா இருக்கிற குடிசைக்குள்ளே நுழைஞ்சிருப்பேன்? நுழைஞ்சு அப்பன், ஆயி இல்லாத வீட்டுப் புள்ளையத் தூக்கிருப்பேன்? நானா அவ மொகம், அங்கே, இங்கேயென கண்டக் கண்ட கண்றாவி எடத்தில காயம்படுற மாதிரி கடிச்சி வச்சிருப்பேன்? பதினெட்டு வயசு ஆகாதப் பிள்ளையாம் அவ. அவளை என்னால பலாத்காரம் செய்திருக்க முடியும்ங்களா? அவளைக் கொன்னுப் புதைச்சிருப்பேனு நீங்க நம்புறீங்களா? என்னோட ஒத்தச் செருப்பு, அவளப் புதைச்சிருந்தக் குழிக்குள்ளாகக் கிடந்தா, புதைச்சது நானாகிவிடுமா? என்னைப் பார்த்து சொல்லுங்க சார், ஏங்கலரப் பார்த்துச் சொல்லுங்க? என்க்கிட்ட இருக்கிற கார் வசதி, சொத்து சுகத்தைப் பார்த்துச் சொல்லுங்க? என்னைப் பார்த்தா அப்படியாத் தெரியுது? நான் செய்திருப்பேனு நீங்க நினைக்கிறீங்களா, இதை நம்புறீங்களா? சொல்லுங்க சார், சொல்லுங்க….?

                                               

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close