சிறுகதைகள்
Trending

கரு

-மித்ரா

 

இந்தச் சமூகம் ஆதி காலத்தில் தாய் வழி சமூகமாக இருந்தது. தனக்கான வாரிசை ஈன்றெடுப்பதற்காக எல்லா விதங்களிலும் தகுதியான ஆணைப் பெண்ணே தேர்ந்தெடுத்தாள். அது அவளின் சமூகக் கடமையாகப் பார்க்கப்பட்டது. பெண் தன்னைத் துணையாகத் தேர்ந்தெடுப்பதற்கான எல்லா தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளும் கட்டாயம் ஆணுக்கு இருந்தது. இன்றும் விலங்குகளில் பெண் தான் தனக்கான ஆணைத் தேர்ந்தெடுக்கிறது……………..

என்று பத்து பக்கத்திற்குத் தொடர்ந்தது அந்த முகநூல் பதிவு. ஆமா பெரிய ஆதி காலம், தாய் வழி சமூகம் என அலுத்துக் கொண்டாள் காயத்ரி.

“கல்யாணமாகி 7 வருஷம் தான்டா ஆகுது. எழுபது வருஷம் ஆய்டல. ஏன் இப்டி குடும்பமே என்னைய போட்டு பாடாப் படுத்துறீங்க?” தினமும் அழுகையினூடோ ஆத்திரத்தினூடோ இதைத் தன் கணவனிடம் வெளிப்படுத்தி விடுவாள். 3 வருடங்களாக வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறாள். ஆனால் எதுவும் மாறிய பாடில்லை.

குழந்தை இல்லாமலிருப்பது அவ்வளவு பெரிய கொலைக் குற்றமா என்ன? குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு வருட சிரமம் என்றால் பிறக்கவில்லை என்பது வாழ்நாள் சிரமமாக இருக்கிறது. இந்த 3 வருடங்களில் எத்தனை கோவில்கள், எத்தனை சாமியார்கள், எத்தனை நேர்த்திக்கடன்கள், எத்தனை மூலிகைகள், எத்தனை மாத்திரை மருந்துகள்? இத்தனை சித்திரவதைகளை அனுபவித்து அந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தான் வேண்டுமா என்று தோன்றி விட்டது காயத்ரிக்கு.

இதை எதார்த்தமாக கணவனிடம் பகிர்ந்து கொண்டபோது பெரிய சண்டையே வெடித்தது. அதெப்படி ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்வதை, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை பாரமாக நினைக்கலாம். அவள் பிறவியின் பலனே அது தானே. அதை மறுத்து நீ வாழ்ந்து என்னத்தைக் கிழிக்கப் போகிறாய் என எகிறு எகிறென்று தான் எகிறியதோடு நிற்காமல் தன் அம்மா, மாமியார் என அனைவரிடமும் அதைப் பகிர்ந்தான். அன்று இரவே மொத்தக் குடும்பமும் வண்டி வைத்துக் கொண்டு விடியற்காலையில் வீட்டில் இறங்கியது. அவர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், ”தாய்மையே பெண்மையின் பூரணத்துவம் என்று கிளப்பி விட்டவன் மட்டும் என் கையில் கிடைத்தான்….” என கவுண்டமணி செந்திலை உதைக்கும் டெம்பிளேட்டோடு  முகநூலில் பதிவிட்டு விட்டு லைக் செக் செய்து கொண்டிருந்தாள் காயத்ரி.

இப்படித் தான் ஒருமுறை, திடீரென ஒருநாள் மொத்த குடும்பமும் விசிட் அடித்து, கையைக்  காலை கட்டாத குறையாக புதுக்கோட்டை  பொய்யாளம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அது ஒரு வித்தியாசமான கோவில். அதாவது கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு தாதியாக இருந்து பிரசவம் பார்ப்பது பொய்யாளம்மன் தானாம்.

”கர்ப்பமான பொண்ணுக பிரசவ காலத்துக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே இந்த ஊருக்கு வந்துருவாங்க. எந்த டாக்டர் கிட்டயும் யாரும் போக மாட்டாக. இந்த ஆத்தாளோட துன்னூறு தான் மாத்தர மருந்து. வலி புடிச்ச ஒடனே வவுத்துப் புள்ளக்காரியை கொண்டு வந்து ஆத்தா சன்னிதியில தனியா வுட்டுட்டு எல்லாரும் எல்லாரும் போயிருவாகலாம். கோவில் கதவுகளைக் கூட சாத்திருவாகலாம்.

யாரு பிரசவம் பாப்பாங்குற ? ஆத்தா தான். பின்ன யாருமில்லாத கோயில்ல தன்னந்தனியா ஒருத்தி பிள்ளை பெத்து தொப்புள் கொடி அறுத்து குளிச்சு சுத்தமாக முடியுமா? பிள்ளை பெத்த மொத நாளு தாயையும் பிள்ளையையும் யாரும் போய் பாக்க மாட்டாக. அடுத்த நாள் தான் பூசாரி மட்டும் போவாரு. அப்போ ஒரு கீத்து தீட்டுக் கறை கூட கோவிலுக்குள்ள இருக்காதுன்னா பாத்துக்க. அப்புறம் 9 நாளு கோவிலுக்குள்ளே இருக்க குடிசைல தான் பச்சை ஒடம்புக்காரி தங்கியிருப்பாளாம். வெயிலுனாலும் மழைனாலும் எல்லாத்தையும் ஆத்தா பாத்துக்கிடுவா. அந்த ஒம்போது நாளு முடிஞ்சப்புறம் தான் குடும்பத்து ஆளுக பிள்ளையை பாக்க முடியும்.”

பொய்யாளம்மனின் வரலாறை மாமியார் சொல்லி முடித்த போது காயத்ரிக்கு தூக்கி வாரிப்போட்டது. ஒரு ஹீலர் பாஸ்கரை தானடா அரெஸ்ட் பண்ணுவீங்க. இங்க ஊரே இருக்கே என நினைத்துக் கொண்டாள்.

” அப்போ சாப்பாடெல்லாம் அத்த? அதுக்கென்ன பண்ணுவாங்க. கோயில் பிரசாதம் தானா?”

” அதெல்லாம் ரெண்டாவது நாள் குடும்பத்துல இருக்க கல்யாணமான பொம்பளைக யாரோ ஒருத்தர் போய் குடுத்துட்டு வரலாம்.”

” நல்லவேளை எங்க அதையும் அம்மனே சமைச்சு குடுக்கும்னு சொல்லிருவீங்களோ என்னமோன்னு பயந்துட்டேன். ” என சொல்லி முடிக்கவில்லை. ” யாத்தே … துடியான அம்மன் சன்னிதியில வச்சு இப்டிலாம் துடுக்கா பேசுறாளே எப்படி இவளுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும்?” என ஆரம்பித்தாள் மாமியார். அன்று அந்த கோவிலை  ஈரச்சேலையோடு முட்டி போட்டு  108 சுற்று சுற்றி, தான் உண்டாகினால் அதே போல கோவிலில் வந்து பிள்ளை பெற்றுக் கொள்வதாக காயத்ரியை வேண்டிக் கொள்ள வைத்தனர். 3 மாதத்தில் பலன் கிடைக்குமாம். ”இங்க முட்டி போட்டு சுத்துனதுக்கு 6 மாசத்துக்கு என்னால எந்திரிக்கவே முடியாது. இதுல மூணு மாசத்துல பிள்ளையாம்…ஃபன்னி காய்ஸ் ” என போஸ்ட் போட டைப் செய்துவிட்டு பிறகு வேண்டாம் என அழித்து விட்டாள்.

இது கூட பரவாயில்லை, ஏதோ சாமியார் தன் வாயில் வாழைப்பழத்தை வைத்து  ஊட்டுகிறானாம். அதை வாங்கி சாப்பிட்டால் பிள்ளை பிறக்குமாம். உன் ஏரியா க்கு பக்கத்துல தான் போயிட்டு வா என நாத்தனார் ஃபோன் செய்து சொன்ன போது வந்த சண்டை இதை விடப் பல மடங்கு பெரிதானது. அந்த சண்டையில் தான் கணவன் ஒரு வாரமும், மாமியார் மூன்று மாதங்களும் காயத்ரியுடன் பேசாமல் இருந்தனர். நாத்தனார் இன்னும் பேசுவதில்லை.

” கண்டவன் வாழைப்பழத்தை வாயில் வாங்கி தான் பிள்ளை பெத்துக்கணும் னு எனக்கு அவசியம் இல்ல. உனக்கு அப்பாயின்மென்ட் வேணும்னா சொல்லு வாங்கி வைக்குறேன்.” என சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டாள் காயத்ரி.

வீட்டிற்கு வந்ததும், ” என் அக்காவை எப்படி அப்டி பேசப் போச்சு?” என சிவந்த கண்களோடு கையை ஓங்கியவனுக்கு அழுது வீங்கியிருந்த காயத்ரியின் கண்கள் தெரியாமல் போயின.

” அப்டி தான் பேசுவேன் உங்க இஷ்டத்துக்கு பிள்ளை வேண்டாம்னுவீங்க. நான் கலைச்சுரனும். இப்போ உங்க இஷ்டத்துக்கு வேணும்ன்னுவீங்க அதுக்கு நீங்க சொல்றதெல்லாம் நான் செய்யனுமா? என் மனசு தாங்குமா ஒடம்பு தங்குமானு எல்லாம் யோசிக்கவே மாட்டிங்களா? அப்டியும் நான் என்ன உண்டாகமலா போனேன். ஆனேனே… கல்யாணம் ஆனா மொத மாசமே கரு தங்குச்சே. நாலு மாசம் போனப்புறம், ஜோசியம் பாத்தோம் இந்த பிள்ளை இந்த மாசத்துல பிறந்தா ஜாதகப்படி அப்பனை தின்றும்னு என்னை பத்தி ஒரு நிமிஷம் கூட யோசிக்காம கலைக்க முடிவு பண்ணீங்க. எப்படி கலைச்சாங்கன்னு தெரியுமா? தெரியுமாடா? ஏதோ மிஷினை உள்ள விட்டு 4 மாச பிள்ளையை மிக்ஸில அரைக்கிர மாதிரி அரைச்சு கூழாக்கி வெளிய எடுத்தாங்க. எவ்ளோ வேதனைனு எனக்குத் தான் தெரியும். உனக்கும் உன் குடும்பத்துக்கும் தெரியாது. இப்போ வந்து பிள்ளை கேப்பாய்ங்களாம். இவிங்க சொல்றதெல்லாம் செஞ்சு தலையாய கடமையா நான் பெத்துக் கொடுக்கணுமாம். தெரியாம தான் கேக்குறேன் பிள்ளை இல்லைனா இப்போ என்ன செத்தா போயிருவ?”  பொரிந்து தள்ளி விட்டாள் காயத்ரி. எதுவும் பேசாமல் வெளியே போனவன் ஒரு வாரம் பேசாமல் இருந்தான். அது கோபமா குற்றவுணர்ச்சியா என அவனுக்கே தெரியவில்லை.

அதற்குப் பிறகு இதை ஒரு குறையாக அவன் காயத்ரியிடம் பேசுவதேயில்லை. ஆனால், தன் அம்மா செய்ய சொல்லும் எதையும் அவன் தட்டுவதில்லை. ”வயசானவுங்க இதை மட்டும் அவுங்களுக்காக செஞ்சுரேன். எவ்ளவோ செஞ்சுட்டோம் இதுனால என்ன கொறஞ்சுர போறோம்?”

”செஞ்சுட்டோம் இல்ல செஞ்சுட்டேன். இதையும் செஞ்சு தொலையுறேன்.”

ஒவ்வொரு விஷயத்திற்கும் ரெகுலர் செட்டப் ஆன இந்த வசனங்களுக்குப் பின் நடந்த விஷயங்களில் ஒன்றே ஒன்று காயத்ரியைப் பாடாய் படுத்தி விட்டது.

” எனக்கு தான் கல்யாணம் ஆகி பதினஞ்சு வருசமா பிள்ளை இல்லாம கெடந்து பிறந்தவன் இவன். வயசு போனப்புறம் பேறு காலத்துல நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சமில்ல. அதே மாறி நெலமை உனக்கும் வந்துர கூடாது கண்ணு. ஊரு ஒலகத்துல பிள்ளை இல்லைனா என்னென்ன பேசுவாகனு எனக்குத் தான் தெரியும். எனக்கு இதெல்லாம் செய்ய யாருமில்ல. உனக்கு நான் இருக்கேன். எந்த மாமியா பிள்ள இல்லாத மருமகளை இப்புடி தாங்குவா. எனக்காகவாச்சும் இதை செய் கண்ணு.” என்று புலம்பியவாறே ஒரு சூரணத்தை சோற்றில் கலந்து காயத்ரிக்கு ஊட்டினாள் அவள் மாமியார். கசப்பென்றால் அப்படியொரு கசப்பு. அதுபோன்றதொரு கசப்பை வாழ்நாளில் கண்டதேயில்லை காயத்ரி. கர்பப்பையை சுத்தப்படுத்துமாம். அந்தக் கசப்பு தீரவே ஒரு வாரம் ஆனது. ஒரு வாரத்திற்கு பிறகு தான் தனக்கு வயிறு வலிப்பதை உணணர்ந்தாள் காயத்ரி. நாளாக நாளாக வலி கூடி கொன்றது. சுருண்டு படுத்து மயக்கமாகிக் கண் விழித்த போது மருத்துவமனையில் இருந்தாள்.

அந்த சூரணம் கருப்பையில் அலர்ஜியை ஏற்படுத்தி வீங்க வைத்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட வலி தான் அது என்று பிறகு தெரிந்தது. அன்று மாமியாரும் கணவரும் செமத்தியாக டாக்டரிடம் வாங்கிக் கட்டியிருப்பார்கள் போல. அந்த வலி கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. அதுவரை எந்த பிரச்னையும் இன்று மாதவிடாய் ஆனவளுக்கு, அந்த சம்பவத்திற்குப் பிறகு மாதவிடாய் சமயத்தில் 10 நாட்களுக்குப் பேய் வலி வலிக்காத தொடங்கியது. அது இன்றும் தொடர்கிறது. அன்று முதல் இது போன்ற விஷப்பரீட்சைகளில் மாமியார் இறங்குவதில்லை. கோவில், நேர்த்திக்கடன் ஆகியவற்றோடு நிறுத்திக் கொள்கிறார்.

இப்போது முதன்முறையாக, காயத்ரியின் கணவன் சிகிச்சைக்கு செல்லப் போகிறான். அதன் முதல்நிலைப் படி தான் ஸ்பெர்ம் டெஸ்ட். தானும் வருகிறேன் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவன் மட்டும் சென்றான். திரும்பி வந்து அவன் அழுத அழுகையில் காயத்ரி விக்கித்துப் போனாள். ஒரு ஆணின் அழுகை அதுவும் தான் நேசிக்கும் ஆணின் அழுகை அவளை உலுக்கியெடுத்தது.

அவன் கன்னங்களை கையில் ஏந்திக் கொண்டு, ”என்னமா ஆச்சு? ஏன் இப்டி அழுற?” என கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

” நான் கூட… உங்க வொய்ஃப் க்கே குழந்தை பெத்துக்குறதுல விருப்பம் இல்ல போல. ஆயிரம் டிரீட்மென்ட் பண்ணுனாலும் நாம மனசார நெனைச்சா தான் அது நடக்கும்னு டாக்டர் சொன்னப்போ உன்னை தப்பா நெனெச்சேன். ஏன் இப்டி இருக்கனு எனக்கு புரியவே இல்ல. இப்போ இதுவே என்னால முடியல. நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். என்னை மன்னிச்சுரு காயு.” என அவள் நெஞ்சில் சாய்ந்து கொண்டு மீண்டும் அழுதான்.

ஸ்பெர்ம் டெஸ்ட் என்பது எந்த ஆணையும் அசைத்துப் பார்க்கக் கூடியது தான். ஆல்பாவாகவே வாழ்ந்து பழக்கப்பட்ட ஒரு ஆணுக்கு அது அவன் கௌரவத்தை அசைத்துப் பார்க்கும் செயல். ஏதோ ஒரு மருத்துவமனையின், மருந்து வாடையடிக்கும் கழிவறையில், அவர்கள் சொல்லும் நேரத்தில் விந்தை வெளியேற்றி, அவர்கள் கொடுக்கும் புட்டியில் அடைத்து அவசரமாகக் கொண்டு போய் கொடுக்க வேண்டும். அந்த சூழலில், மன அழுத்தத்தில், ரிசல்ட் பற்றிய பயத்தில் ஒருவன் எதை நினைத்து விந்தை வெளியேற்றுவான். இதில் அது நீர்த்துப் போய் விட்டால், சரி வரவில்லையென்றால், மீண்டும் அதே கழிவறையில் வேறு புட்டியில்…

இனி இந்த சிகிச்சையெல்லாம் யாருக்கும் வேண்டாம். செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. அது எப்படி என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காயத்ரிக்கு தெரிந்திருந்தது. முகநூலில் யாரோ ‘Respect Women’ என்ற ஹாஷ்டேகில்  இதய ஸ்மைலியோடு அந்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். இவர்கள் தரும் மரியாதையால் ஏதாவது மாறி விடப் போகிறதா? அந்தப் பெண்ணுக்கு அம்மஞ்சல்லிக்கு அதனால் பயனிருக்கிறதா? இத்தனை வேதனைப் பட்டு குழந்தையைப் பெற்றுக் கொண்டால் தான் அவர்கள் மதிப்பார்களா? முதலில் யார் அவர்கள்? நம் ஒவ்வொரு விஷயத்திற்கும் கருத்து சொல்ல, மதிக்கலாமா வேண்டாமா என முடிவு செய்ய அவர்கள் ஏன் ஆளாய் பறக்கிறார்கள். நாம் குழந்தை பெற்றுக் கொண்டாலும், பெற்றுக்கொள்ளா விட்டாலும், பெற முடியாமல் போனாலும் இவர்களுக்கென்ன வந்தது? இவர்களை இப்படி நினைத்த போதெல்லாம் டாக்டரிடம் காலை விரித்துப் படுக்க சொன்னால் செய்வார்களா?

முடிந்தது. ஏறத்தாழ நான்கரை லட்சம் செலவானது. காயத்ரி கருவுற்றாள். அவள் தாய் வந்து அவளுடனே தாங்கினார். மாமியார் பொய்யாளம்மன் கோவிலுக்கு கிளம்பினார். நாத்தனார் இரண்டு கட்டப்பை நிறைய பலகாரங்களோடும், முகம் கொள்ளாச் சிரிப்போடும் பார்க்க வந்தாள். எல்லார் மொபைலில் இருந்தும் எல்லோருக்கும் அழைப்புகள் பறந்தன. இவ்வளவு நாள் காத்திருந்ததற்கு இரட்டைப் பிள்ளை வரப் போகிறது என குடும்பமே ஆனந்தக் கூத்தாடியது.

45 நாட்களுக்குப் பிறகான ரெகுலர் செக் அப்பின் போது, கரு கருப்பையினுள் செல்லாமல் குழாயிலேயே தங்கி விட்டதாகவும், அது வளர்ந்தால் தாயின் உயிருக்கே ஆபத்து எனவும் கூறி அதைக் கலைக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். தனியே அறைக்கு அழைத்து, ”5 இல் 2 கேஸுக்கு இப்படி ஆகும் இது பெரிய பிரச்னை இல்லை. அடுத்த முறை சக்ஸஸ் ஆகிவிடும்” என ஆறுதல் சொன்னார் பெரிய மருத்துவர். மேலும் முதல் முறை இப்படி ஆகிவிட்டதால் அடுத்த செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்கு  50% தள்ளுபடி இரண்டரை லட்சம் காட்டினால் போதும் என்றார்.

வெளியே வந்து தன் முகத்தைப் பார்க்க முடியாமல் கலங்கிய கணவனின் கையைப் பிடித்து அழகாகச் சிரித்தாள் காயத்ரி.

 

எழுத்தாளருடைய பிற கதைகள் :

தாகம் 

படுகொலை – சில குறிப்புகள்

நாளொரு கோலம்

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button