சிறுகதைகள்

கருப்பு வெள்ளை – நாடகம்

கவிஜி

காட்சி 1- கடவுள்சாத்தான்வீட்டுக்குள் 

அந்த வீட்டுக்குள் வித்தியாசமான முகம் மற்றும் உடல் அமைப்பு கொண்ட ஒருவர் சோபாவில் அமர்ந்திருக்கிறார்.

அவருக்கு எதிரே உள்ள சோபாவில் வேறொரு வித்தியாசமான முகம் மற்றும் உடல் அமைப்பு கொண்ட இன்னொருவர் அமர்ந்திருக்கிறார்.

வாய்ஸ் ஓவர் : கடவுளும் சாத்தானும் எதிர் எதிரே அமர்ந்திருக்கிறார்கள். இந்த வீடு இதே சிட்டிக்குள் ஏதோ ஒரு வீதியில் இருக்கிறது. அது உங்கள் வீடாகவும் இருக்கலாம்.

இருவரும் ஒருவரையொருவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கனத்த அமைதி அங்கே நிலவுகிறது. நான்கு கண்களிலும் உலகம் சுழலுவது நன்றாக தெரிகிறது.

கடவுள் மென் புன்னகையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சாத்தான் கடுகடுப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

காட்சி 2 –கடவுள்சாத்தான்வீட்டுக்குள் 

இருவரும் ஒருவரை ஒருவர் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

“எதுக்கு வர சொன்ன….? சீக்கிரம் சொல்லு… வேலை இருக்கு….!” -சாத்தான் உடலை அசைக்காமல் பேச ஆரம்பிக்கிறார்.

“என்ன பொல்லாத புடலங்கா வேலை…! எனக்கு தெரியாத வேலையா….?” -கொஞ்சம் நக்கலாக தானும் உடலை அசைக்காமல் கடவுள் பதில் பேசுகிறார்.

“என்ன தெரியும் உனக்கு…? இப்ப வர்ற மொபைல் போனை யூஸ் பண்ண தெரியுமா…? இல்ல புதுசா வந்த எந்த டெக்னாலஜிய பத்தியாவது எதாவது தெரியுமா…? ச்சும்மா ஊரை ஏம்மாத்திகிட்டு…” -கொஞ்சம் கோபத்தோடு பேசுகிறார் சாத்தான்.

”   ஹா ஹாஹ் ஹா ஹா ஹாஹ் ” கடவுள் தெய்வீக சிரிப்பை உதிர்க்கிறார்.

“நானும் இந்த மாதிரி சிரிச்சவன்தான்.. உன்னாலதான் இப்பிடி சாத்தானா சுத்திக்கிட்டிருக்கேன்….”-கொஞ்சம் நக்கல் கலந்து பதில் பேசுகிறார் சாத்தான். உடல் மொழி பேசுவதற்கு தகுந்தாற் போல அசைகிறது.

உட்கார்ந்திருக்கும் நிலையை விட்டு கொஞ்சம் முன்னால் நகர்ந்து உடலைத் தளர்த்திக் கொண்டு,  “அடப்பாவி….. நீ தான்டா கடவுளா இருக்கறது போர் அடிக்குது.. சாத்தான் பதவியை குடுன்னு கேட்டு வாங்கின….” – ஒரு நண்பனிடம் பேசுவது போல பேசுகிறார் கடவுள்.

“சும்மா கதை விடாதய்யா… சாத்தானா மாறதுக்கு நீ தான பணம் குடுத்த…!” -அதே கோபத்தோடு பேசுகிறார் சாத்தான்.

“பணம் குடுத்தா மாறிடறதா……?” -அதே தெய்வீக புன்னகையில், அதே இடத்தில் அமர்ந்தபடி பதில் கேள்வி கேட்கிறார் கடவுள்.

“அப்புறம்; (இடைவெளி) பணம்னா சும்மாவா……? பணமில்லாம நீ யூரின் கூட பாஸ் பண்ண முடியாது பிரதர்…! பூமி அவ்ளோ கெட்டு கிடக்கு…” கொஞ்சம் சத்தமாக கொஞ்சம் சீட்டை விட்டு முன்னுக்கு நகர்ந்து பதில் சொல்கிறார் சாத்தான்.

“பணம்….?!”  என்று வாய்க்குள்ளாகவே முனங்குகிறார் கடவுள்.

“ஆமா பணம் தான்….வீட்லருந்து கடைக்கு போகணும்னா பணம் வேணும். கருமாதிக்கு போகணும்னா பணம் வேணும். முகநூல் பாக்கணும்னா பணம் வேணும். செல்போன் வாங்கணும்னா பணம் வேணும். சொந்த பந்தம் வேணும்னா பணம் வேணும். ஊர்ல உறவுல மரியாதை வேணும்னா பணம் வேணும். நல்ல இடத்துல கல்யாணம் ஆகணும்னா பணம் வேணும். சிசேரியன் பண்றதுக்கு பணம் வேணும். எல் கே ஜி அட்மிஸன்க்கு பணம் வேணும். கத்திரிக்காய் வாங்க பணம் வேணும். விவசாயி பூச்சி மருந்து குடிச்சு தற்கொலை பண்றதுக்கு கூட பணம் வேணும். பக்கத்துக்கு வீட்டுக்காரன் உன்கூட பேசணும்னா பணம் வேணும். பணம் இருந்தா தான்  நீ பொணமாக கூட லாயக்கு. பணம் தான் இங்கே இந்த வாழ்க்கைய ஷேப்பாக்குது…” ஒரு பிரச்சாரக்காரனைப் போல படபடக்கிறார் சாத்தான்.

“சரி விடு விடு…. பாத்துக்கறேன்” – கொஞ்சம் தடுமாறிய கடவுள் தொண்டையை சரி செய்து கொண்டே சமாளிக்கிறார்.

“என்ன பாத்துக்கற….? (இடைவெளி) ஆமா இங்க எவ்ளோ பிரச்சனை போயிட்டு இருக்கு…  அதையெல்லாம் விட்டுட்டு நீ எங்கயாவது மேகத்துக்குள்ள மலைக்குள்ள கோபுரத்துக்குள்ள ஓடிப்போய் ஒளிஞ்சுக்கற…. ” – சாத்தான் கடுப்போடு பதில் பேசுகிறார்.

தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்பது போல சுற்றும் முற்றும் வேகமாய் பார்க்கிறார் கடவுள்.

“வந்து பீல்டு ஒர்க் பண்ணிப் பாரு… அப்போ தெரியும்.. உன்னையும் என்னையும் சுத்தி எவ்ளோ பிரச்னை போகுதுன்னு…” – ஒரு புரட்சியாளனைப் போல பேசுகிறார் சாத்தான்.

“என்ன மாப்ள… நேத்து நைட்டு புரட்சிகரமான தமிழ் படம் எதுவும் பார்த்தியா…. ஹா ஆஹ் ஹா… ஹா… ஹா…”- நக்கலாக பேசிவிட்டு நக்கலாக சிரிக்கிறார் கடவுள்.

“உன் கூட கூட்டணி போட்டேன் பாரு.. என்ன உதைக்கணும்….” – நொந்து கொண்டு பேசுகிறார் சாத்தான்.

“கூல்… கூல்….. என்ன சாப்பிடற ப்ரோ….?”- என்கிறார் கூலாக கடவுள்.

காட்சி 3 –கடவுள்சாத்தான்வீட்டுக்குள் 

“ஆமாய்யா …. எவனோ ஒருத்தன் வீட்டுக்குள்ள உக்காந்துகிட்டு என்ன சாப்பிடறன்னா கேக்கற…. “- உக்கார்ந்திருந்த சாத்தான் எழுந்து கொண்டே பேசுகிறார்.

“யாதும் ஊரே யாவரும் கேளீர்… மை டியர் சாத்தானே… அதுமில்லாம நான் கடவுள்டா…. “- புருவங்களை தூக்கி, உதட்டை ஒரு பக்கமாக மேல் நோக்கி வைத்துக் கொண்டு பதில் அளிக்கிறார் கடவுள். அவரின் கைகள் காற்றினில் விரிந்திருக்கின்றன.

“அட முட்டாள் கடவுளே, பூட்டியிருக்கிற வீட்டுக்குள்ள கடவுளே இருந்தாலும் அவன் திருடன் தான். அப்படித்தான் நம்ம மக்கள் செட்டாகிருக்காங்க. அவன் திருடனா இல்லையா….எதுக்கு வந்திருக்கான் எது பத்தியும் யோசிக்க மாட்டாங்க. கட்டி வெச்சு அடி அடின்னு அடிச்சு காமெரா பண்ணி யு டியூப்ல போட்டு தன் இயலாமைக்கெல்லாம் வடிகால் தேடிக்குவாங்க…”- ஏதோ சிறுவனுக்கு சொல்வது போல சொல்கிறார் சாத்தான்.

சாத்தானை உற்றுப் பார்த்துவிட்டு, ” நானே திருடன்னா…! அப்போ… நீ…? ஹா ஹா ஆஹ் ஹா……” பயங்கரமாக சிரிக்கிறார் கடவுள்.

“இங்க பாரு கடவுளே, சும்மா சும்மா சிரிக்காத… வயிறெல்லாம் எரியுது… இந்த சாத்தான் பொழப்பு நமக்கு செட் ஆகாது….” -கை  நீட்டி நீட்டி பேசுகிறார் சாத்தான்.

“ஏன் வயிறு எரியுது…. நேத்து நைட்டு நீ என்ன பண்ணிருப்பன்னு தெரியும் சாத்தானே…! பச்சைக்கடைக்கு போயிருப்ப. உன்ன மாதிரி சாத்தானுங்க எல்லாம் அங்க தான குடி இருப்பானுங்க. கொண்டாட்டமா குத்தாட்டம் போட்ருப்ப. இப்போ வயிறு எரியுது வாய் எரியுதுன்னு சொன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்….?” -கைகளை கட்டிக் கொண்டு ஒரு கார்பரேட் மனிதனைப் போல பேசுகிறார் கடவுள்.

“ஓஹ்… அந்த அளவுக்கு யோசிக்கிறியா…. அப்போ எல்லாம் தெரியுதுதான…. அந்த பச்சைக் கடையெல்லாம் மூட வேண்டியது தான….? என்ன பாக்கற…! நீதான் கடவுளாச்சே… சாத்தாங்கள காப்பாத்தறது தான… நீ சுயநலவாதி கடவுளே……உன்ன எல்லாரும் கும்படனும்னா, கும்பிடறவனுக்கு பிரச்னை இருந்துகிட்டே இருக்கனும்.. அதுக்கு இதெல்லாம் ஒரு வழி……! இல்லையா….? “- என்று தலையில் கை வைத்த சாத்தான் எங்கோ சூனியத்தை வெறித்துப் பார்க்கிறார்.

” ஹா ஹா… ஹா.. ஹாஹ்.. ஹா…. ஹா…”- அதே தெய்வீக சிரிப்பை உதிர்க்கிறார் கடவுள்.

காட்சி 4 –கடவுள்சாத்தான்வீட்டுக்குள் 

“சும்மா சிரிச்சிட்டே இருக்காத…. நீ கவனிக்கிறயா இல்லையான்னு தெரியல…இந்த பசங்க எல்லாம் பாவம்யா…சின்ன சின்ன பசங்கெல்லாம் குடிச்சே சாவுதுங்க… இல்ல… பரீச்சையில பெயில் ஆனதுக்கெல்லாம் பொசுக்குன்னு தூக்குல தொங்கிடுதுங்க…” நேர்மையாய் பேசுகிறார் சாத்தான்.

“ஹே… நிறுத்து நிறுத்து…. நிறுத்து…. ஒரு சாத்தான் மாதிரி பேசு.. பெரிய கடவுள் மாதிரி பேசற… உனக்கு ஒரு வேலை தான்… எனக்கு ஆயிரம் வேலை இருக்கு.. உனக்கும் தெரியும் தான…. நீயும் முன்னால கடவுளா இருந்தவன் தான…” கொஞ்சம் சீரியஸாகவே பேசுகிறார் கடவுள்.

“அட, நான் சாத்தான்தான்ப்பா.. நீ தான் கடவுள்… இப்போ யாரு இல்லன்னு சொன்னா… உனக்கே சந்தேகம் வந்திருது போல நீ கடவுள் தானான்னு. அதான் நான் கடவுள் நான் கடவுள்னு கத்திகிட்டே இருக்க. வாழ வேண்டிய பசங்களுக்கு இங்க இருக்கற கல்வி திட்ட குளறுபடிகளால தப்பு தப்பான புரிதல் நடக்குது. அது தப்பு தப்பா முடிவு எடுக்க வெச்சிடுது… அதைக் கொஞ்சம் கவனின்னுதான சொல்றேன்….”-  நியாயமாக தன் வாதத்தை முன் வைக்கிறார் சாத்தான்.

“உனக்கும் புரிய மாட்டேங்குது சாத்தான்…. நான் ஒருத்தன் என்ன பண்றது… எனக்கு கீழ இருக்கற அத்தனை டிபார்ட்மென்ட்லயும் உன் ஆளுங்க தான் நிறைஞ்சு இருக்காங்க. மாத்தி மாத்தி எத்தனை பேரைத்தான் நான் கவனிக்க முடியும்? நான் பகுத்தறிய அறிவை குடுத்துருக்கேன்.. ஆனா எவன் ஒழுங்கா யூஸ் பன்றான்… இப்போ பாரேன்… ஒரு உதாரணம் சொல்றேன்…. ரோட்ல போற வழில ஒரு கோயிலை பாத்திடக் கூடாது. உடனே வண்டி போக போகவே திரும்பி கன்னத்துல போட்டுக்குவானுங்க. கேட்டா ஒரு நிமிஷம் வண்டிய நிறுத்திட்டு வந்து கும்பிட அவுனுங்களுக்கு நேரம் இல்லைன்னு சொல்வானுங்க. ஆனா போனை எடுத்து காதுல வெச்சானுங்கனா விடிய விடிய பேசுவானுங்க. போற போக்குல கும்புடறதுல வண்டில கவனம் இல்லாம முன்னால போறவன் மேல முட்டி சண்டை போட்டு டிராபிக் பண்ணி பழிய தூக்கி என் மேலே போட்ருவானுங்க. செல் போன் பேசிட்டே வண்டி ஓட்டி ஆக்சிடெண்ட்ல மாட்டி செத்து அந்த பழியும் என் மேல தான். கடவுளே உனக்கு கண்ணில்லையான்னு  அழுவானுங்க. நான் என்ன தான் பண்ண. சொல்லு. நான் கேட்டனா.. வண்டி ஓட்ட ஓட்ட  கவனம் சிதறி என்னை கும்பிடுனு நான் கேட்டனா. நீ தான் காத்துகிட்டு இருக்க. கொஞ்சம் இடம் கிடைச்சாலும் தூக்கிட்டு போயிடற. இதுல நீயே நல்லவன் மாதிரி வந்து என்கிட்ட புலம்பற..” தன் வாதத்தை எடுத்து வைக்கிறார் கடவுள்.

“சும்மா ஓவரா  பீல் பண்ணாத கடவுளே. என்ன பழிய போட்டாலும்.. காலையிலும் சாயந்தரமும் உன் கால்லதான விழறானுங்க. என்னை சும்மாவே திட்றானுங்களே. நான் இதுவரைக்கும் பார்க்காத ஆளுங்கல்லாம் திட்றானுங்கப்பா. இந்த லவ் பண்றவங்க கூட, செல்ல பிசாசு…..குட்டி பிசாசு…..குட்டி சாத்தான்….பிசாசுக் குட்டி.. அப்டின்னு என்னை வெச்சுதான கலாய்க்கறாங்க. என்னய்யா வாழ்க்கை இது. சகிக்கல. படத்துல கூட எங்களை அசிங்கமாத்தான காட்றானுங்க….”- பதிலுக்கு சாத்தானும் புலம்புகிறார்.

காட்சி 5 –கடவுள்சாத்தான்வீட்டுக்குள்

“என்னடா இவ்ளோ புலம்பற” – பாவமாய் கேட்கிறார் கடவுள்.

“புலம்ப விட்டுட்டியே கடவுளே, நீயும் நானும் ஒன்னு தான.. நீ ஒளின்னா நான் துகள். உன் ஆழ்மனசோட வெளிப்பாடுதான நானு. பின்ன ஏன்யா, அடி திட்டு நக்கல் நைய்யாண்டின்னு எல்லாமே எனக்கு மட்டும். ஒரு அம்மா குழந்தைக்கு சோறு ஊட்றதுக்கு எல்லாம் பேய்ட்ட புடிச்சு குடுத்துருவேன்னு சொல்லுது. நியாயமா கடவுளாரே….” – குடித்தவன் முதல் பத்து நிமிடங்க்ளில் பேசுவது போல பேசுகிறார் சாத்தான்.

“சும்மா புலம்பாதடா…. யாருக்கு தான் கஷ்டம் இல்ல. நான் என் கஷ்டத்தை சொல்லவா…?” – பெருந்தன்மையோடு ஒரு பெரியவர் போல பேசுகிறார் கடவுள்.

நன்றாக அமர்ந்து கொள்கிறார் கடவுள். சாத்தான் அங்கும் இங்கும் குட்டி போடப் போகும் பூனை போல நடந்து கொண்டிருக்கிறார். அந்த அறையில் இருளும் ஒளியும் மாறி மாறி மின்னிக் கொண்டிருக்கிறது.

“என் பேரை சொல்லி பூஜையைப் போட்டு ஆடு கோழின்னு சரக்கோட அடி வெளுத்து வாங்கறானுங்க. விடிஞ்சதுல இருந்து தூங்கற வரைக்கும் சீரியல் மாதிரி அதை குடு இதை குடுன்னு அழுது தீக்கறானுங்க. சில பேரு தூங்கும் போது கூட எதையோ கேட்டு உளர்றானுங்க. நான் என்ன நகை கடையா வெச்சிருக்கேன்… ஒரு அம்மா பத்து பவுன் நகை குடு… மொட்டை போடறேன்னு சொல்லுது. முடிய வெச்சிக்கிட்டு நான் சவுரி வியாபாரமா பண்ண முடியும் ! அப்பறம் இன்னொரு மேட்டர் கேளு. ரோடெல்லாம் உச்சா போயி நோயை பரப்பி விட்டுட்டு காப்பாத்து காப்பாத்துன்னு என்கிட்டே வந்து கத்துனா நான் என்ன பண்றது. டெங்கு கூட கூட்டணி போட்டதெல்லாம் யாரு…. நானா…..? அப்புறம் கடவுள் கை விட்டு விட்டார் கால் விட்டு விட்டார்னு கொட்டை எழுத்துல வசனம் வேற பேசுவானுங்க…”

நடந்துக் கொண்டிருந்த சாத்தான் இடைமறிக்கிறார்.

“ஏய்  நிறுத்து.. நிறுத்து… நீ கடவுளு. கடவுளு கஷ்டப்பட வேண்டியது தான். நான் ஏன்யா கஷ்டப்படனும். பைத்தியம் பிடிக்கறதுக்கெல்லாம் பேய் பிடிச்சிருக்குனு சொல்லி என்னை அசிங்கப் படுத்துறானுங்கப்பா. இவுனுங்கள புடிக்கறது தான் என் வேலையா….?”- சற்று கோபத்துடன் பேசுகிறார் சாத்தான்.

கவனித்துக் கொண்டிருக்கும் கடவுள், ” அத அப்படி எடுத்துக்க கூடாதுடா.. நம்ம மக்கள் என்னை விட உன்னை தான் அதிகமா நம்பறாங்க… அது பெருமை தான….” செந்திலிடம் கவுண்டமணி பேசுவது போல பேசுகிறார்.

“வீண்பெருமை வாழ்க்கைக்கு உதவுமா…..?  லவ் பெயிலியர்க்கும், பெத்தவங்க திட்டறதுக்கும், செல்போன் இல்லங்கறதுக்கும், பரிச்சைல பெயில் ஆகறதுக்கும், வாத்தியார் அறிவுரை சொல்றதுக்கும் பொசுக்குன்னு உயிரை விட்டுட்டு சாத்தான் இழுத்துட்டுப் போய்ட்டான்னு பேசறது எவ்ளோ முட்டாள்தனம்….” நிக்க வெச்சு கேள்வி கேட்பது போல சீரியஸாக கேள்வி கேட்கிறார் சாத்தான்.

“ஒரு சாத்தான், உனக்கு இருக்கிற அறிவு இந்த மனுசங்களுக்கு இல்ல……! என்ன பண்றது….? ” சிரித்தபடியே கடவுள் எள்ளி நகையாடுகிறார்.

சாத்தான் நடப்பதை நிறுத்தி விட்டு மீண்டும் எதிரே வந்து அமர்கிறார். அமர்ந்து கொண்டே, ” யோவ்… பாத்தியா….. உன் கடவுள் புத்திய காட்டிட்ட… என்ன; சாத்தான்னா அவ்ளோ இளக்காரமா…?  ஏன் சாத்தானுக்கு அறிவிருக்க கூடாதா…..? கருப்பா இருக்கறவன் படிக்க கூடாது…..படிச்சாலும் அறிவிருக்க கூடாது…… அறிவிருந்தாலும் கேள்வி கேட்க கூடாது.. இல்லையா…! நல்லா இருக்குயா உன் தத்துவம்…”

இடைமறித்த கடவுள், “அடேய்… நான் அப்படி சொல்லலடா…..” அசடு வழிகிறார். அதே கோபத்தோடு சாத்தான் தொடர்கிறார்.

“நான் இருக்கற வரை தான் உனக்கு மதிப்பு. நான் இல்லேன்னா.. உன்ன ஒரு பய மதிக்க மாட்டான். ஞாபகம் வெச்சுக்கோ….”பேசிக்கொண்டே நாற்காலியில் சாய்ந்து அமர்கிறார் சாத்தான்.

“ஞாபகங்கள் தான் இங்க பிரச்னை பிரதர். செத்ததுக்கு அப்புறமும் ஞாபகம் இருக்கும்ன்னா எல்லாரும் சாகறதுக்கு நான் நீன்னு போட்டி போடுவானுங்க….” எல்லாம் தெரிந்த அமெரிக்க அண்ணாச்சி போல பேசுகிறார் கடவுள்.

“சும்மா தத்துவம் பேசிட்டே இருக்காத சாமி….. தத்துவம் பசி போக்காது…” புருவம் சுருக்கி தீர்க்கமாக பேசுகிறார் சாத்தான்.

காட்சி 6 –கடவுள்சாத்தான்வீட்டுக்குள்

“தத்துவம் பசி போக்கணும்னு அவசியம் இல்ல தம்பி….” வேகமாய் மறுதலிக்கிறார் கடவுள்.

“தத்துவம் பசி போக்க வேண்டாம். ஆனா ஏதாவது ஒன்னு பசியை போக்கித்தான ஆகணும்….” சாத்தான் கண்கள் சிமிட்டாமல் பேசுகிறார்.

“அந்த ஏதோ ஒன்னு ஏதோ ரெண்டு எல்லாமே இங்க இருக்கு. இங்க எல்லாமே பொன்னு விளையற பூமிடா. கெடுத்து குட்டிச் சுவர் ஆக்குனது யார். எல்லாம் எனக்கு தான் எல்லாம் எனக்கு தான்னு சுயநலமா யோசிச்சது யார். இருக்கற நன்மைகளை வெச்சு சரியா திட்டம் போடலனா அதுக்கு நான் என்ன பண்றது நண்பா….” கடவுளும் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார்.

“திட்டம் போடலன்னு யார் சொன்னா.. எல்லாமே இங்க திட்டம் போட்டுத்தான் நடக்குது…..” பொடி வைத்து பேசுகிறார் சாத்தான்.

“என்ன…., அரசியல் பேசறியா? அரசியல்ங்கிறது நல்ல தத்துவம். அத இந்த மனுஷங்க கெடுத்து வெச்சிருந்தா நான் என்ன பண்றது…தோஸ்து ?” இயலாமையோடு பேசுகிறார் கடவுள்.

“எல்லாத்துக்கும் இப்டி ஜகா வாங்குனா, என்ன இதுக்கு நீ கடவுளா இருக்க….? பேசாம எழுதிக் குடுத்துட்டு போ.. நான் பாத்துக்கறேன்..!” அழுத்தமாக பேசுகிறார் சாத்தான்.

“பார்த்துக் கிழிப்ப…. நான் இருக்கும் போதே இத்தன குளறுபடி. நானும் இல்லனா நீ என்ன செய்வன்னு தெரியும்….” அழுத்தம் திருத்தமாக பதிலளிக்கிறார் கடவுள்.

“ம்ம்ம்… நல்ல கணக்கு வாத்தியார் மாதிரி வாய் கிழிய பேசு…” பேச ஒன்றுமில்லாது போல பேசுகிறார் சாத்தான்.

“ஆமா தம்பி… எல்லாமே கணக்குதான். நீ பெருவெளிய, பால்வீதிய சுத்துற ஆள்தான…?  ஸ்வெட்டர் போடாம போயேன்….. பாக்கலாம்….! முடியாதுல்ல…. அப்பிடித்தான். சிலது காலத்தோட குளிர். ஸ்வெட்டர் போட்டுத்தான் ஆகணும். சிலது காலத்தோட வெயிலு. சட்டைய கழட்டித்தான் ஆகணும்….” – கணக்கு வாத்தியார் போலவே பதில் சொல்கிறார் கடவுள்.

“அப்போ காலத்துக்கு தகுந்த மாதிரி தன்னை மாத்திக்கறவன் தான் புத்திசாலிங்கற…” எதிர் கேள்வியே சமாதானம் போல கேட்கிறார் சாத்தான்.

“புத்திசாலி மட்டுமல்ல… சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்டும்னும் சொல்றேன்… என்ன பாக்கற…! செத்துட்டமேன்னு படுத்துட்டு இருந்தா வேலைக்காகாது.. மரணத்துக்கு அப்புறம் இருக்கற சூனியத்துக்குள்ள ஒரு ஒளி இருக்கு.. அத தேடி ஓடியாகணும். பிரபஞ்சமும் காலமும் தீரவே முடியாத தூரங்கள். ஒவ்வொரு உயிருக்கும் அர்த்தமிருக்கு. அத புரிஞ்சுக்கறதுல தான் சூட்சுமம் இருக்கு. செத்தவனுக்கே இப்டினா வாழ்றவனுக்கு எப்படி இருக்கும்னு யோசி. இங்கே எல்லாமே கைக்கு எட்டற தூரத்துல இருக்கணும்னு ஆசைப்படறாங்க. அப்படி இல்லையே இந்தப் பரிணாமம். எதுவுமே இங்க சும்மா கிடைக்காது. சும்மா கிடைச்சிருந்தா மனுஷன் இவ்ளோ தூரம் வந்திருக்கவே மாட்டான்….!” அறிவுரை சொல்வது சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது, என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு அறிவுரைகளைக் கொட்டுகிறார் கடவுள்.

அசையாமல் கவனித்துக் கொண்டிருக்கிறார் சாத்தான்.

“நீ பேச பேச நல்லா தான் இருக்கு. ஆனா பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவுல உள்ள போராட்டம் இருக்கே. அது கோயமுத்தூர் ஒப்பனக்கார வீதி டிராபிக் மாதிரி. சிக்னலுக்கு தெரியாது… சிக்கிட்டு தவிக்கிறவன் வேதனை” -கன்னத்தில் கை வைத்துக் கொண்டு பேசுகிறார் சாத்தான்.

“ஹா ஹா ஹாஹ் ஹா ஹா…” -கடவுள் சிரிக்கிறார்.

காட்சி 7 –கடவுள்சாத்தான்வீட்டுக்குள்

“இப்பிடியே  இருந்தோம்னா நம்மள எவனாவது போட்டுத் தள்ளிட்டு புல் கண்ட்ரோல் அவனுங்க எடுத்துக்குவானுங்க…. (சற்று இடைவெளி விட்டு ) உனக்கு மீ டூ பிரச்னை எல்லாம் தெரியுமா தெரியாதா….” சீரியஸாக கேட்கிறார் சாத்தான்.

“எவனுக்கு அவ்ளோ தைரியம் இருக்கு. இங்க எல்லாரும் கடவுள் சாத்தான் பத்தி பேசுவானுங்க…. ஆனா யாரும் நெருங்க மாட்டாங்க. ஏன்னா எல்லாருக்குமே மரண பயம். அப்பறம் என்ன சொன்ன… மீ டூ பத்தியா… மீ டூவெல்லாம் இந்த கால கட்டத்துக்கு தேவை தான் தம்பி. ஆனா தப்பு எப்போ நடக்குதோ அப்பவே அது பத்தி பேசறது தான் முறை. அது தான் சரியாவும் இருக்கும். அதுல கஷ்டம் இருக்கும். இல்லன்னு சொல்லல. ஆனா.. கஷ்டத்தை பார்த்தா நியாயம் கிடைக்காது இல்லையா. நியாயம் கஷ்டப்படுத்தும். ஆனா நல்ல முடிவு குடுக்கும். இப்படி காலம் தாழ்த்தி கிடைக்கற நிரூபணம் மட்டுமல்ல.. குற்றமும் கூட வலுவிழந்து போய்டும். அதுமில்லாம மீ டூல யூ டூவும் இருக்கு. வி டூவும் இருக்கு. ஆராயணும். எல்லாத்தையும் ஆராயணும். அதுக்கெல்லாம் இங்க நேரம் இருக்கான்னு ஒரு கேள்வியும் இருக்கு. அதெல்லாம் இங்க  சாத்தியமான்னும் ஒரு கேள்வி இருக்கு.” -கை விரித்து காற்றைத் தடவியபடி பேசுகிறார் கடவுள்.

“நீரே இப்படி கை விட்டா என்ன பண்றது..”

“கடவுளே மனுஷன் கை விட்ட ஆள்தானயா….”

“ஐயோ…. குழப்பாத….அப்போ சாத்தான் யாரு..”

அது நான் கை  விட்ட ஆள்யா…”

சாத்தான் தலையில் கை  வைத்து சற்று நேரம் சாய்ந்து விடுகிறார். மீண்டும் அவராகவே ஆரம்பிக்கிறார்.

“சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இப்போ எதுக்கு சம்பந்தமே இல்லாம இந்த வீட்டுக்கு வர சொன்ன…?” குழப்பமான முக பாவனையில் சாத்தான் கேட்கிறார்.

“எல்லாமே சம்பந்தத்தோட தான் நடக்கனும்னா பூமின்னு ஒன்னு இருக்கவே இருக்காது. எல்லாமே தொடர்பற்ற புள்ளிலதான் இணைஞ்சிருக்கு. மெய்ஞ்ஞான மும் விஞ்ஞானமும் வேற லெவெல்ல போயிட்டு இருக்கு. ஆனா இந்த வீட்டுக்காரனா  பாரு…” வீட்டுக்குள் ஒரு பக்கம் பார்த்துக் கொண்டே பேசுகிறார் கடவுள்.

“இந்த வீட்டுக்காரனுக்கு…என்ன…?” உற்றுக் கவனிக்கிறார் சாத்தான்

அப்போது அந்த வீட்டில் கணவனும் மனைவியும் அலுவலகம் செல்லவும் இரண்டு பிள்ளைகள் பள்ளிக்கு செல்லவும் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

காட்சி 8 –கடவுள்சாத்தான்கணவன் மனைவிபிள்ளைகள்சாலையில் 

அவர்கள் நால்வரும் ஒரு பைக்கில் பயணிக்கிறார்கள்.

“பார்த்தியா சாத்தான்…. என்ன நடக்குதுன்னு…. ஒரு பைக்ல ரெண்டு பேர் தான் போகணும்… இங்க பார் நாலு பேர் போறாங்க…” குற்றம் சாட்டினார் கடவுள்.

“கடவுளே…. உன் மேதாவித்தனத்தை விட்டுட்டு கொஞ்சம் கடவுளபிமானத்தோட பாரு. ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்கன்னா பொருளாதாரத் தேவை இருக்குன்னு  தான அர்த்தம். வீட்டைப் பார்த்தல்ல…. எவ்ளோ சிறுசா இருந்துச்சுன்னு.. அதுவும் வாடகை வீடு தான் போல.  புள்ளைங்க படிக்குதுங்க. வேற வழி இல்ல.. அதனால தான்… இந்த மாதிரி சிக்கல் எல்லாம்…” சாத்தான் தன் சாத்தான்தனத்தைத் தாண்டி பேசுகிறார்.

“அப்பிடி எல்லாம் ரூல்ஸ்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது மவனே. வருமானம் கம்மி… வாழ்க்கையில் பிரச்னை…..இன்னும் ஆயிரம் இருக்கட்டும். ஒரு பைக்ல ரெண்டு பேர் தான் போகணும்னு இருக்கா இல்லையா.. அத இவுங்க மீறறாங்க. என்ன பண்றது…?” கண்கள் மூடி யோசிக்கிறார் கடவுள்.

“பொல்லாத ரூல்ஸ்….! ஏதாவது பண்ண வேண்டியதே நான் தான். நானே சும்மா இருக்கேன்.. உனக்கென்ன…? அதுமில்லாம, நாட்டுல அவனவன் எவ்ளோ பெரிய ரூல்ஸ் மீறல் எல்லாம் பண்ணிட்டு இருக்கான். நீ இத போய் பெருசா பேசிட்டு இருக்க…!” சாத்தான்…. கோபமாக கடவுளை மீறி பேசுகிறார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பிள்ளைகளை பள்ளியில் இறக்கி விட்டு விட்டு அவர்கள் இருவர் மட்டும் கிளம்புகிறார்கள்.

எதிரே ஒரு லாரி, கொடுப்பவருக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டு 7.50 மணிக்கு சிட்டிக்குள் வந்து கொண்டிருக்கிறது. எதிரே இந்த பைக் தம்பதிகள். பைக்கும்  லாரியும் மட்டும் இப்போது போகஸ் ஆகின்றன.

“கடவுளே, என்ன பண்ணிட்டு இருக்க….?” சாத்தான் நடக்க போகும் விபரீதத்தை புரிந்து கொண்டு கத்துகிறார்.

“வேற வழி இல்ல சாத்தான்… அதுமில்லாம நல்லா உத்து பாரு.. நான் தான் சாத்தான்… நீ தான் கடவுள்.. எல்லாமே மாறி மாறி தான் நடக்கும், நடக்க போறது உள்பட என்ற போது தான் சாத்தான் கவனித்தார், தான் கடவுளென்றும் கடவுள் சாத்தானென்றும்.

பட்பட்டென வந்த சத்தத்தில் அந்த கணவனும் மனைவியும் அந்த லாரிக்குள் சிக்கி கண நேரத்தில் விபத்தாகி கூட்டம் கூடி விட்டது.

கடவுளும் சாத்தானும் தலையில் கை வைத்துக் கொண்டு ஒருவரையொருவர் பார்க்கிறார்கள்.

சற்று நேரத்தில் லாரிக்குள்ளிருந்து தலையில் ஹெல்மெட்டோடு கணவன் எழுந்து வருகிறான்.

ஹெல்மெட் போடாத மனைவி லாரி டயரில் தலை நசுங்கி செத்துக் கிடக்கிறாள்.

“சாத்தானா நீ உன் வேலையப் பார்த்த… கடவுளா நான் என் வேலையைப் பார்த்தேன்… நெக்ஸ்ட் மீட்டிங் எப்போன்னு சொல்லு….” பேசிய குரலில் சாத்தானும் கடவுளும் கலந்திருந்தார்கள்.

ஆம்புலன்ஸ் சத்தம் கூட்டத்தை கீறிக் கொண்டு வருகிறது.

சாத்தானும் கடவுளும்.. யார் சாத்தான் யார் கடவுள் என்று சொல்லாமல் காற்றினில் கரைகிறார்கள்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close