இணைய இதழ்இணைய இதழ் 59சிறுகதைகள்

கண்ட கனவு – கா. ரபீக் ராஜா

சிறுகதை | வாசகசாலை

ப்போது திருமணமானது என இருவருக்கும் பரஸ்பரம் நினைவிலில்லை. இவள் மட்டும் திருமணமான அன்றைய நாளை காலண்டரில் இருந்து கிழித்து வைத்துள்ளாள். வருடத்தில் ஒருநாள் அதை எடுத்துக்காட்டுவாள். அதை பார்க்கும் அவன் காறை படிந்த பல் கொண்டு சிரித்துக்கொள்வான். பதிலுக்கு அவளும் சிரித்துக்கொள்வாள். அவ்வளவுதான் முடிந்தது திருமணநாள் கொண்டாட்டம். இதுவரை எட்டுமுறை காலண்டரை அவனிடம் காண்பித்து இருக்கிறாள். அவன் எழு முறை சிரித்திருக்கிறான். இதுவரை குழந்தை உண்டாகவில்லை. அரசாங்கம் எடுக்க நினைத்து முடிக்காத திட்டங்கள் அவ்வப்போது குடிமக்களுக்கு பெருத்த சாதகமாக மாறிவிடும். அப்படித்தான் மேலக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இன்னும் கட்டிமுடிக்கப்படாமல் இருக்கிறது. இப்போதைக்கு அந்த மேம்பால அடிவாரம்தான் இருவருக்கும் வாழ்விடம். இருவரும் வாய் பேச இயலாதவர்கள். இருவருக்கும் நினைவு தெரிந்தவரை பிச்சைதான் எடுக்கிறார்கள். ஒருமுறை யாரோ ஒரு வெளிநாட்டுப் பிரதமர் தமிழகம் வருவதன் காரணமாக ஊரை துப்புரவு செய்தார்கள். அவர் செல்லும் இடமெங்கும் வெள்ளை அடித்தார்கள். வறுமையான வாழ்க்கை நடத்திவரும் மக்களின் வாழ்விடங்களை வரவேற்பு பதாகை கொண்டு மூடினார்கள். இந்தவகையில் ஊரில் ஓரளவு வறுமை நீக்கினாலும் முழுமையாக நீங்கிய பாடில்லை. அதிகாரக்குழு இறுதியாக ஒரு முடிவெடுத்தது. அதாவது வெளிநாட்டுப் பிரதமர் வந்து போகும் வரையில் நகரத்தில் ஆங்காங்கே சுற்றித்திரியும் பிச்சைக்கார்களை ஒரு இடத்தில் போட்டு அடைப்பது என்று. நகரத்தில் உதிரியாகத் திரிந்த பிச்சைக்கார்களை ஒரு பெரிய மண்டபத்தில் போட்டு அடைத்தார்கள். மூன்று வேளைக்கும் நல்ல சாப்பாடு என்பதைக் கேள்விப்பட்ட பிடிபடாத பிச்சைக்கார்கள் கூட மண்டபம் நோக்கி குவிந்து தானாக சரண்டரானார்கள். எதோ சங்க மாநாடு போலக் காட்சியளித்த அன்று தான் இவளை அங்கு வைத்துப் பார்த்தான். இருவரும் பேச முற்பட்டார்கள். பேச இயலவில்லை என்றதும் காதல் வயப்பட்டர்கள். பிரதமர் வந்து போனதும் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என்ற முடிவின் படி இருவரும் தங்களது குழுவில் இருந்து பிரிந்தார்கள். 

பஞ்சமுக விநாயகர் கோவில் ஒன்றில் விமரிசையாக திருமணம் நடைபெற்ற ஜோடிக்கு அருகிலேயே இவர்களும் தங்களது திருமணத்தை நிறைவு செய்தார்கள். அன்றிலிருந்து மேலக்கோட்டை ரயில்வே மேம்பாலம்தான் இவர்களது வீடு. இவர்களது பந்தமே எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் நிரப்பப்பட்டது. எப்பொழுதாவது சமைப்பார்கள். இவர்களின் உடைமைகளை சேலை கொண்டு ஒரு மூட்டையாகக் கட்டிவிடலாம். அன்று பெரும் மழை. பாலத்தில் கீழ் மழை நீர் சேரத்தொடங்கியது. எல்லாவற்றையும் கட்டிக்கொண்டு கிளம்புவதற்குள் மழை இன்னும் அதிகமாகிவிட்டது. இருவரும் மழையில் நேரடியாக நனையவில்லை என்றாலும் காற்று கொண்டு வந்த இரசல் அவர்களை முழுமையாக நனைத்து வைத்திருந்தது. அவன் காலருகே நின்ற தவளை எப்போது வேண்டுமானாலும் குதிக்கத் தயாராக இருந்தது. அவனுக்கு குளிர். அவளுக்கும் தான். வேறு ஏதாவது உடை இருக்கிறதா..? அவள் மட்டும் புரிந்துகொள்ளக்கூடிய சைகையில் கைகளை அழுத்தி மூடிப் பிசைந்தான். மழைக்கு ஒதுங்கிய ஒரு பைக் ஓட்டி மழைச்சூழலலை மறந்து இவர்களை வேடிக்கை பார்த்தான். கையில் உடமையை மூட்டையாகக் கட்டியிருந்தாள். இருந்தாலும் கணவனுக்கு பதில் உரைப்பதற்காக மூட்டையை தோளில் மாட்டிகொண்டு ஒரு கையில் விரல்களை அகல விரித்துகொண்டு இன்னொரு கையில் அதை மூன்று முறையாக சுற்றி இல்லை என்பது போல தன் வாயை மடித்தாள். மழையில் எல்லாம் நனைத்துவிட்டது என்பதை உணர்ந்த அவன் இன்னும் குளிர் போல உடலை நடுக்கினான். பதிலுக்கு அவளும் நடுங்குவது போல நடித்துக்காட்டிச் சிரித்தாள். பைக் ஓட்டி தன் ரசனையை மீட்டடுத்தாற் போல இன்னும் சுவாரசியமானான். தன் வீட்டுக்குள் இன்னொருவன் வந்து எட்டிப் பார்ப்பதை விரும்பாமல் அவள் முறைத்தபோது மழை நின்றது. நேற்றுவரை காய்ந்து கட்டாந்தரையாக கிடந்த பாலத்தின் அடிவாரம் அன்று நீர்சகதியாக இருந்தது. மழை நின்றிருந்தாலும் அவ்வப்போது ஈரக்காற்று ஊடுருவி தேகங்களை இன்னும் சூடுபடுத்தியது. 

இருவரும் இன்னொரு இடம் தேடி அலைந்தார்கள். பசி வேறு வாட்டி வதைத்தது. மதியம் ஒருவர் காரில் வந்து ஹாரன் அடித்தார். இருவருக்கும் காதும், வாயும் வராது என்பதை அறியாத கார் முதலாளி இன்னும் அழுத்தமாக அடிக்க இவன் வேறு பக்கம் உட்காந்து வேடிக்கை பார்த்தான். இவள் கண்ணில் விழுந்த தூசியை கசக்கி இன்னும் உள்ளே செலுத்திக் கொள்வது போல கையை அழுத்தமாகத் துடைத்தாள். வண்டியில் ஹாரன் அடித்தால் ஓடிச்சென்று அல்லது திரும்பி பார்க்கும் நாகரீகம் கூட இவர்களுக்கு இல்லையே என்று காரில் வந்தவர் விசனப்பட்டார். அவர் எல்லா இடத்துக்கும் சென்று விநியோகம் செய்து களைத்துப் போனவர். ஆகவே எஞ்சியிருக்கும் இரு பொட்டலத்தை எப்படியாவது இவர்களிடத்தில் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் வேறுவழியில்லாமல் காரில் இருந்து இறங்கினார். ஆனால், உணவு பொட்டலம் காரில் தான் இருந்தது. இருவரையும் தன் காருக்கு அருகே அழைத்து அங்கு வைத்துக் கொடுத்தால் தான் தன் கௌரவத்துக்கு பங்கம் வராது என்று நினைத்துக்கொண்டார். அழுக்கே படாத தேகம் கொண்டவர் தங்களை நோக்கி வருவதை இருவரும் அறிந்தனர். ‘ஹாரன் அடிச்சா காது கேக்கதா?’ என்று சத்தமாகப் பேசினார். இருவரும் ஒன்று சேர்ந்தாற் போல வாயிலும், காதிலும் கை வைத்து செங்குதாக விசிறினார்கள். பதறிப்போன அவரை பார்த்து இருவருக்கும் சிரிப்பு வந்தாலும் சிரிக்கவில்லை. தனக்கு சகாயம் செய்பவர்களைப் பார்த்து சிரிக்கக்கூடாது என்று அவள் அவனிடம் அடிக்கடி சொல்வதுண்டு. 

இருவரும் அவரை நோக்கிப் போனார்கள். அந்த பண்புள்ள மனிதர் இரண்டாம் முறையாக மன்னிப்பு கோரியபடி காரை நோக்கிச் சென்றார். உள்ளே சென்று காரை சாத்திக்கொண்டவர் எஞ்சியிருந்த இரண்டு பார்சலை எடுத்தார். அவர் கையை நீட்டும் போது அவனது கரங்கள் கொஞ்சம் காருக்குள் போயிருந்தது. காருக்குள் இருந்த குளிர்சாதன வசதி அவனது கையையும் கொஞ்சம் குளிர வைத்தது. வெப்ப சலனத்தில் வெந்து கிடந்தவனுக்கு அது பேரானந்த அனுபவமாக இருந்தது. உணவை கொடுத்தவருக்கு இருவரும் நன்றி கூறினார்கள். ஏற்கனவே சாப்பிட்டுவிட்டதால் அதை இரவுக்கு வைத்துகொள்ளலாம் என்பது உணவை வாங்கும் போதே எடுத்த முடிவு. நல்லவேளையாக மதியம் எடுத்து வைத்த உணவு கைவசம் இருக்கிறது. இல்லயென்றால் வெகுதூரம் நடந்து சென்று கடையில் வாங்கிச் சாப்பிடவேண்டும். இந்த மழை இரவில் இன்னொரு தேவை ஒண்டிக்கொள்ள ஒரு பாதுகாப்பான, காய்ந்த இடம். பாலத்தின் நேர் எதிரே அமைந்த சாலையில் சிறிதுநேரம் நடந்தால் ஒரு பேருந்து நிறுத்தம் உண்டு. அதை நோக்கிதான் இருவரும் பயணப்பட்டுப் போகிறார்கள். மழை நின்றாலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. அரிதாக சாலையைக் கடக்கும் இரண்டு மூன்று அரசுப்பேருந்துகளும் அசுர வேகத்தில் பறக்கிறது. அடிபட்டு சாகவே பிறந்தாற் போல தவளைகள் சாலையில் நட்டநடுவில் நின்று சாவை அழைத்துக்கொண்டிருந்தன. அவளின் சுமையை அவன் வாங்கிக்கொண்டான். சுமை நீங்கி அவனைப் பார்த்து அவள் சிரித்தது ஒரு இருட்டான இடம் என்றாலும் அவள் புன்னகையை வீசும் கணங்களை அவன் துல்லியமாக அறிவான். ஆகையால் அவனும் சிரித்தான். இருவரும் சிரித்துக்கொள்ளும் தருணங்கள் பரஸ்பர பரிச்சயம். சாலையில் தவளைகள் நைந்து போய் ஒருவிதமான வீச்சத்தைக் கொடுத்தது. கைகளில் சுமை இல்லாததால் அவள் சுதந்திரமாக மூக்கை பொத்திக்கொள்ள முடிந்தது. இவளால் சகித்துக்கொள்ள முடியாதது இதுபோன்ற துர்நாற்றங்கள் மட்டுமே.

சாலையின் நடுப்புறம் பதிக்கப்பட்டிருந்த ஒளிரும் பட்டைகள் ஒளியை வாங்கி இன்னும் நளினமாக ஒளிர்ந்தது. அவள் அவனின் கைகளை பிடித்து தோளில் சாய்ந்து கொண்டாள். ஏற்கனவே கனமான மூட்டையோடு வந்து கொண்டிருந்த அவனால் மேற்கொண்டு சாயும் அவளை நிராகரிக்காமல் இருக்க முடியவில்லை. தோளில் நெட்டித் தள்ளினான். மெல்லிய தடுமாற்றத்துடன் அவனை கோபமாகப் பார்த்தாள். சுமையின் சிரமத்தைக் காட்ட தலையைச் சுழற்றி ஒரு கையில் காற்றை குத்தினான். அதை அவள் கவனித்தாலும் கவனிக்காதது போல அவனை முந்திச் சென்று நடந்தாள். அந்த இடைவெளி இருவருக்கும் சம்பந்தமில்லை என்பது போல நிர்ணயம் செய்தாள். 

இருவருக்கும் குழந்தை இல்லாததை ஒருநாள் தீவிரமாக விவாதித்துக்கொண்டார்கள். முடிவில் ஒரு அரசு மருத்துவமனைக்கு சென்று தங்களின் குழந்தையின்மை குறித்து விளக்குவதற்கு அதிகாலையில் ஒரு சீட்டை வாங்கி வரிசையில் நின்றார்கள். வரிசை நெருங்கி வரவே அவர்களுக்கு கொஞ்சம் அச்சமாக இருந்தது. சீட்டு வாங்க பெயர் கொடுப்பதற்கே நிறைய உழைக்க வேண்டி இருந்தது. அப்படி உழைத்தே OP சீட்டுல் பெயருள்ள இடத்தில் ஒரு கோடுதான் போடப்பட்டது. இந்த மருத்துவர் பார்ப்பதற்கு மருத்துவர் போல இல்லை. கண்ணியமே அல்லாத காவல்துறை அதிகாரி போலத்தான் இருக்கிறார். ‘என்ன உடம்புக்கு?’ என்றதும் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தாற் போல வயிற்றை சைகையில் காட்டியதும். மருத்துவரின் முகமே மாறியது. என்றோ விட்டெறிந்த கனிவு அவர் முகத்தில் மீண்டும் கூடியது. அவரே மகப்பேறு பிரிவில் ஒரு பெண் டாக்டருக்கு எழுதிக் கொடுத்தார். தேடி அலைந்து பெண் மருத்துவரைப் பார்த்தனர். இவர்கள் சைகையில் சொல்வதை வைத்து அவர் என்னவாகப் புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. வரிசையாக ஒரு வெள்ளை காகிதத்தில் மருந்துகளை எழுதிக்கொடுத்தார். அதை நீண்ட வரிசையில் நின்று பெற்றுக்கொண்டு ஒரு மாதம் தவறாமல் மாத்திரையை சாப்பிட்டிருப்பாள். அந்த வைட்டமின் மாத்திரைகள் வயிற்று வலியை மட்டும் கொடுத்ததால் நிறுத்திவிட்டாள். வயிற்று வலியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மாத்திரை போட்டிருந்தால் இந்நேரம் குழந்தை தவழ்ந்து விளையாடியிருக்கும் என்பது அவனின் ஆதங்கம்.

அவனை முந்தி அவள் செல்ல, உடனே இவனும் அவளை முந்திச்சென்றான். இரண்டு முறை இப்படியே சென்றதும் இது ஒரு வினோத விளையாட்டு போல இருந்தது இருவருக்கும். விளையாட்டில் சண்டை மறந்து மீண்டும் ஒன்று சேர்ந்து நடந்தார்கள். இன்னும் ஒரு ஐம்பது தப்படி நடையில் அந்த பேருந்து நிறுத்தம் வந்துவிடும் எனும் எண்ணமே இருவருக்கும் பசியைத் தோற்றுவித்தது. 

கிட்டத்தட்ட இடிந்துகொண்டிருக்கும் அந்த பேருந்து நிறுத்தத்தின் பெயர்ப்பலகை மேலே ஐந்து பூஜ்ஜியம் கொண்ட தொகை திட்டமதிப்பீடாக குறிப்பிடப்பட்டு இருந்தது. பத்துக்கு பத்து அளவு கூட இல்லாத அந்த நிறுத்தத்தில் ஒரே இருட்டு மட்டுமே கூடியிருந்தது. பூச்சிகளின் ரீங்காரம் இருவரது மௌன உலகத்தில் பிரவேசிக்க வாய்ப்பில்லாத காரணத்தில் வேறு யாருக்கோ கத்திக்கொண்டிருந்தன. மூட்டையைக் கீழே இறக்கினான். ஒருவழியாக பொட்டலத்தை பிரித்து உட்கார இடம் தேடினால் இருக்கையில் குடித்துவிட்டு உடைக்கப்பட்ட மதுபாட்டில்களில் துகள்கள் கிடந்தது. அதையும் மீறி அடித்த சிறுநீர் கவிச்சி பசியை வேறு பக்கமாகத் திருப்பியது. இவள் ஒரு கையில் உணவு பொட்டலத்தை பிரித்தும் இன்னொரு கையில் மூக்கை பிடித்தவாறு நின்றாள். அவன் வாய் வழி சுவாசித்து உணவை உள்ளே தள்ளினான். இருட்டிலும் அவள் சாப்பிடாமல் நிற்பதை அவதானித்து இரண்டு வாய் ஊட்டிவிட்டான். நிச்சயம் அவள் சிரித்திருப்பாள். பசி இருந்தும் அவர்களால் இறுதிவரை ஒரு பொட்டல உணவை மட்டுமே சாப்பிட முடிந்தது. மீண்டும் நடக்கத்தொடங்கினார்கள்.

ஈரச்சாலையும் வாகனத்தின் சக்கரங்களும் ஒன்றோடு ஒன்று உரசுகையில் நீர் கிழியும் சப்தம் வினோத ஒலியை எழுப்பியது. இரவு தங்குவதற்கு ஒரு இடத்தை அடைந்தே ஆகவேண்டும். இப்போதைக்கு அருகில் இருக்கும் கைவிடப்பட்ட காவலர் குடியிருப்பு தான் பாதுகாப்பானது. நேரத்தோடு செல்லவில்லை என்றால் அதற்கும் ஆட்கள் வந்துவிடுவார்கள். பிறகு இந்த இரவும் தூங்காத பல இரவுகளில் ஒன்றாய் சேர்ந்துவிடும். அவளை விரைவாக நடக்கச் சொன்னான். வேகமாக நடந்தாலும் முன்பு போல முடியவில்லை அவளால். இடத்தை அடையும் வரை இனி சிரிக்கமாட்டான் என்பது அவளுக்கு தெரியும். மழை முற்றிலுமாக நின்று வானத்தில் நட்சத்திரம் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்த உலகத்தில் இவர்கள் மட்டுமே நடக்கிறார்கள் என்பது போல பிரபஞ்ச பேரமைதி அது. தூரத்திற்கும் துயரத்திற்கும் ஒரே அளவுகோல் போல இருவரும் நடந்தே தீர்த்தார்கள். கைவிடப்பட்ட குடியிருப்பு என்றாலும் ஒரு குடிலில் வாட்ச்மேன் வைத்திருக்கிறார்கள். எப்போதும் அவன் இருக்க மாட்டான் என்பது தெரியும். தவிர ரவுடிகள், குடிகாரர்கள், குடித்ததால் ரவுடியாகுபவர்கள் என யாருடைய தொந்தரவும் இருக்காது. ஒரே தொந்தரவு சக பிச்சைகாரர்கள் மட்டுமே. இடம் பிடிப்பதில் தொடங்கி, படுப்பது வரை பண்பற்ற முறையில் போட்டி போடுவார்கள். இருவரும் குடியிருப்பை அடைந்த போது தவளைகள் ஓய்வெடுக்கத் தொடங்கியிருந்தன. அதிர்ஷ்டவசமாக குடியிருப்புக்குள் யாரும் இல்லை. இருந்திருந்தால் அடையாளமாய் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருக்கும். ஆனால், துரதிஷ்டவசமாக வாட்ச்மேன் என்றுமில்லாமல் இன்று இருக்கையில் சாய்ந்து உட்காந்திருக்கிறான். கையில் புகைந்து கொண்டிருக்கும் பீடியை அவன் இழுக்கும் போது முகத்தில் லேசான உக்கிரம் தெரிந்தது. நெஞ்சோடு சேர்ந்திருந்த தொந்தி அவனுக்கு. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அது இரவு குறித்த கவலை. 

ஒருசில முள்கடியை தாங்கிக்கொண்டால் பக்கவாட்டில் சென்று குடியிருப்பை அடைந்துவிடலாம். எதுவும் பேசாமல் அவளே புரிந்து கொண்டாள். அவளை கெஞ்சுவது போல பார்த்தான். கைவசமிருக்கும் ஒரே திட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுகொண்டான். சம்மதித்து குனிந்து கொண்டாள். வழியே இல்லாத பகுதியில் மண்டிய செடிகளை மிதித்துக் கடந்தார்கள். மழையில் நனைந்திருந்த தாவரங்கள் ஈரத்தை அப்படியே இருவருக்கும் கடத்தியது. தேக சூட்டில் காய்ந்திருந்த உடைகள் மீண்டும் முட்டிக்கு கீழே நனையத்தொடங்கியது. இருவரும் யாருக்கும் கேட்காமல் மிக ரகசியமாக நடப்பதாக நம்பினார்கள். ஈரச்சகதியோடு ஊறிப்போயிருந்த கால்களை இரக்கமில்லாத முட்கள் குத்தித் தீர்த்தன. அவளும் அவனும் தலா ஒருமுறை கத்தினார்கள். இன்னும் இருபது அடியை சகித்துக்கொண்டால் இடத்தை அடைந்துவிடலாம். ஆவலாய் கடந்த போது கால் சகதிக்குழியில் சிக்கி மீண்டது. அவன் லேசாகத் திடுக்கிட்டான். கால்களை எடுக்கும் போது ஆதாரமாய் விளங்கிய வார், செருப்புடனும் இருந்த தொடர்பை முறித்துக்கொண்டது. அவளைப் பார்த்தான். கழுத்து அழுக்கோடு கலந்திருந்த மஞ்சள் கயிற்றில் இருந்து ஒரு ஊக்கை கழற்றி கொடுத்தாள். அதன் உதவியால் குத்துமதிப்பாக செருப்பை வாரோடு இணைத்துக் கொள்ள முயற்சித்தான். அதில் பாதிதான் வெற்றி. முன்பு போல சுதந்திரமாக நடக்க முடியவில்லை. அறுந்த செருப்பு அறுந்ததுதான்! 

நான்கு ராசியான எண் போல.. நாலாம் நம்பர் என்று இருட்டு வட்டத்தில் வெள்ளை எழுத்தில் எழுதியிருந்த கதவைத் தள்ளினான். இதற்காகவே காத்திருந்தது போல கதவு தள்ளியதற்கு மிகுதியான ஒலியுடன் திறந்து கொண்டது. சொந்த வீடு போல செருப்பை வெளியே கழற்றி வைத்தார்கள். கைலியில் பாலித்தின் போட்டு சுற்றியிருந்த தீப்பெட்டியை கவனமாக வெளியே எடுத்தான். அதற்குள் அவள் மெழுகுவர்த்தியோடு தயாராக இருந்தாள். சரியாக ஒரே தீக்குச்சியில் உருவான வெளிச்சம் அரைநொடிக்குள் அதிகமாகி பின் குறைந்தது. அவள் முகத்துக்கு நேராக இருந்த மெழுகில் தீயைப் பொருத்தினான். கொண்டுவந்த மூட்டையை ஒரு ஓரமாக வைத்தான். ‘கொஞ்ச நேரம் பொருத்திருந்தா இங்கயே சாப்ட்டு இருக்கலாம்’ என்றான் அவன். அவள் பதிலுக்கு சிரித்துவிட்டு, ‘அதற்குள் நான் செத்து போயிருப்பேன்’ என்று சிரித்தாள். அவளை இன்னும் ஆழமாக ஊடுருவிப் பார்த்தான். அவளை அருகில் அழைத்து தலையில் இருந்த சிறிய வண்டை சுண்டிவிட்டான். அவள் அதை வேறு அர்த்தத்தில் புரிந்து கொண்ட தவறை எண்ணி வெட்கப்பட்டாள். அவனும் அதை அறிந்திருந்தான். 

மடியில் கட்டியிருந்த சில்லறையை எண்ணத்தொடங்கியிருந்தாள். அவன் அவளையே பார்த்திருந்தான். சில்லறையை மதிப்பு வாரியாக அடுக்கி வைத்தாள். எப்படியும் அது நாற்பது ரூபாய்க்கு மேல் இருக்காது. எனிலும் அடுக்கி வைத்து பார்ப்பது அவளுக்கு பிடித்தமான ஒன்றாகும். மெல்லிய வெளிச்சம் அவளுக்கு இன்னும் அழகாய் இருந்தது. குறைவாய் காய்ந்திருந்த கைலியை அவனிடம் நீட்டினாள். உடனே மாற்றிக்கொண்டான். பழைய கைலியும் இதே அளவு ஈரமானது தான் என்றாலும் இந்த ஈரம் கொஞ்சம் அருவெறுப்பு இல்லாமல் இருந்தது. மூட்டையைப் பிரித்து அவளும் தனக்கு வேறு ஒரு உடையைத் தேடி எடுத்தாள். அது காலையில் தான் ஒரு பெண் அவளுக்கு கொடுத்தது. அவனுக்கு நேராகவே அவனைத் தூண்டும் விதமாக வேறு உடைக்கு மாறிக்கொண்டிருந்தாள். அவனும் அதற்கு தயாராகிக் கொண்டிருந்தான். உடையை மாற்றிவிட்டு முடியை அள்ளிக்கட்டி கொண்டை போட்டுக்கொண்டு அவன் அருகில் நெருக்கமாக வந்து உட்காந்துகொண்டாள். அவன் அவளது தோளில் கை போட்டுக்கொண்டான். இருவருக்குமிடையே குறுகலான தூரத்தில் ஒரு வவ்வால் பறந்து சென்றது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவளும் அவன் தோள்களில் கையை படரவிட்டு நெருடினாள். ஆங்காங்கே ஒழுங்கின்றி வளர்ந்திருக்கும் தாடியை மட்டும் இன்னும் இதமாய் தடவிக்கொடுத்தாள். அவளை சாய்த்துப்போட எத்தனித்த போது அவள் அவனை உட்கார்ந்த வாக்கில் நெற்றியில் முத்தமிட்டாள். அந்த சப்தத்தை காதில் வாங்கியவன் போல செல்லமாக திடுக்கிட்டான். இப்போது அவள் அவனின் மீது படரும்போது தான் வெளியே ஒரு அசாதாரண சூழல் நிலவியதை இருவரும் உணர்ந்தார்கள். 

மிக சக்திவாய்ந்த டார்ச் வெளிச்சம் ஆங்காங்கே வந்து போனது. சில நேரம் இவர்கள் கதவிடுக்கின் வழியே வருவது போன்ற உணர்வில் இருவரும் திடுக்கிட்டு எழுந்து மெழுகுவர்த்தியை அணைத்தார்கள். உள்நுழையும் போது ஏற்பட்ட பரபரப்பு மீண்டும் தொற்றிக்கொண்டது. மெதுவாக கதவருகே வந்து எட்டிப்பார்த்தான். வாட்ச்மேன் சிதிலமடைந்து கிடந்த ஒவ்வொரு வீடாக டார்ச் அடித்து பார்த்துக்கொண்டிருந்தான். அவளின் கை நடுக்கத்தை இறுகப்பற்றி கட்டுப்படுத்த அவன் முயற்சித்தான். ஆனால், அவனது கையும் நடுங்கித் தொலைத்தது. பின்வழியில் இருந்த துருப்பிடித்த கதவை லேசாக நெட்டித்தள்ளினான். திறந்தது, முழுமையாக அல்ல. ஒரு கை போகும் அளவிற்குத் தான் இருந்தது. இன்னும் பலமாகத் தள்ளினால் எளிதாய் திறந்துகொள்ளும் ஆனால், அது எழுப்பும் சப்தம் வாட்ச்மேன் கவனத்தை இங்கு திருப்பும். உலகமே ஏன் நம்மைப்போல இருந்திருக்க கூடாது என்று அப்போது நினைத்தான். டார்ச் வெளிச்சம் எந்த நேரத்திலும் இந்தக்கதவை தட்டலாம். பலத்தை பிரயோகித்து மெதுவாய் கதவைத் தள்ளினான். சப்தமே இல்லாமல் கனிவுடன் திறந்துகொண்டது. நிம்மதியாக இருவரும் வெளியேறினார்கள். செருப்புக்கு இன்னொரு ஊக்கு கொடுத்தாள். அதற்கு செருப்பு கொஞ்சம் கட்டுப்பட்டது போலத் தோன்றியது. 

இருவரும் சாலையில் இறங்கி நடந்த போது உலகமே தூங்கிக்கொண்டிருந்தது. நட்சத்திரம் மறைந்து முக்கால்வாசி நிலா வெளியே தெரிந்தது. அது தன் கருமேகங்களை கையால் விலக்கிவிட்டு மாடத்தில் இருந்து பெரிய முதலாளி தன் அடிப்பொடி தொழிலாளர்களை பார்ப்பது போல இருந்தது. இனி விடிவது மட்டுமே இலக்கு என்பதால் இருவரும் மெதுவாக நடந்தார்கள். சாலை கொஞ்சம் காயத்தொடங்கியிருந்தது. எப்போதோ எஞ்சியிருந்த சிறிய மின்னல் லேசாக மின்னியது. அந்த வெளிச்சத்தில் ஒரு பாம்பு அவர்களைக் கடந்து சென்று மறைந்தது. அவளை தன் அருகே அழைத்து தோளில் சாயச்சொல்லி சைகை செய்தான். சிரித்து மறுத்தாள். இருமாதிரியான முகம் காட்டி பொய்க்கோபம் காட்டினான். இதை எதிர்பார்த்தவள் போல அருகில் வந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். சாய்ந்து கொண்டபடி நான்கு அடிகூட எடுத்து வைக்கமுடியவில்லை. இருவருக்கும் அசௌகரியமாக இருந்தது. நீண்டு நெளிந்த பாதை அவர்களுக்காகவே காத்திருந்தது போல திறந்து கிடந்தது. மீதமிருந்த இன்னொரு மின்னலும் தோன்றி மறைந்தது. புதிய யோசனை வந்தது போல அவனது கரங்களை இறுக பற்றிக்கொண்டாள். அவளது வெட்பம் அவனது கையிலும் பரவியது. அந்த நிலையிலேயே இருவரும் நடந்தார்கள். தூரத்தில் ஒரு வாகனம் ஒளியை அசுரத்தனமாக பாய்ச்சியது. அவளை பாதுகாப்பாய் தன் பக்கம் இழுத்துக்கொண்டான். 

******

rabeek1986@gmail.com

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close