சிறுகதைகள்
Trending

கணக்கும் பிணக்கும் – சுப்புராஜ்

சிறுகதை | வாசகசாலை |

“நீங்க தேர்தலுக்கெல்லாம் ஊருக்கு வரவேண்டாம். பேரு தெரியாத கட்சிக்கு இல்லைன்னா வேட்பாளருக்குத் தான் ஓட்டுப் போடப் போறீங்க. அந்த ஓட்டுக்கு ஒரு பிரயோசனமும் இருக்கப் போறதில்ல. அதனால நீங்க உங்க சைட்டையே கட்டிக்கிட்டு அழுங்க…..” என்றாள் சரோஜினி.

“அதெல்லாம் என்னோட ஜனநாயகக் கடமையிலருந்து ஒருநாளும் தவற மாட்டேன். ஊருக்கு வந்து என்னோட ஓட்டப்போட்டே தீருவேன்….” என்று சிரித்தான் கன்னியப்பன்.

“உங்கள பாப்புக்குட்டியப் பார்த்துக்கிடச் சொன்னா அவளுக்கு ஓவரா செல்லங்குடுத்து அவள் கைநீட்டுறதை எல்லாம் வாங்கிக் குடுத்து அடுத்த நாள் அவளுக்கு உடம்புக்கு ஏதாவது வந்துடும்….” என்றாள் சரோஜினி. ஆனால் கன்னியப்பன் அதெல்லாம் பாப்பாவைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்து சரோஜினி தேர்தல் பணிக்குக் கிளம்புவதற்கு முன்னமேயே ஊருக்கும் வந்து விட்டான்.

“அவள இஷ்டத்துக்கு ஆடவுட்டுட்டு நீங்க லேப்டாப்பை ஆன்பண்ணி உட்கார்ந்துடாதீங்க. ஸ்கூலுல நிறைய ஹோம் ஒர்க் குடுத்துருக்காங்க. எல்லாத்தையும் பண்ண வைங்க. அவளோட ஸ்கூல் டைரியப் பார்த்து மிஸ் என்னென்ன படிக்கச் சொல்லி இருக்காங்களோ, எல்லாத்தையும் படிக்கச் சொல்லுங்க…..” என்று சரோஜினி வேலூருக்குக் கிளம்புகிற கடைசி நிமிஷம் வரைக்கும் கன்னியப்பனிடம் அவன் பாப்புக்குட்டியை எப்படிப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.

“எப்பப் பார்த்தாலும் ஹோட்டலிலேயே வாங்கி சாப்பிடாதீங்க. இராத்திரிக்கு ஏற்கெனவே சமைச்சு வச்சுட்டேன். அடுத்தநாள் காலையில தோசை ஊத்தி சாப்டுக்குங்க; ஃபிரிஜ்ல மாவும் தொட்டுக்க தக்காளி சட்னியும் இருக்கு. மத்தியானம் சாதம் மட்டும் நீங்க வடிச்சுக்குங்க. சுகந்தி அம்மா வீட்டு வேலைக்கு வர்றப்ப, குழம்பு கூட்டெல்லாம் சமைச்சுக் குடுப்பாங்க. அதையே ராத்திரிக்கும் சாப்டுக்குங்க. நான் எப்படியும் ராத்திரியோட ராத்திரியா வீட்டுக்கு வந்துடுவேன்…..” என்று சொல்லி, சரோஜினி கிளம்பிப் போனதுமே, “அம்மா ரொம்ப போர் இல்லப்பா….!” என்றாள் பாப்புக்குட்டி.

“பெரியவங்கள அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுடா செல்லம்….” என்று முகத்தை சீரியசாய் வைத்துக் கொண்டு கன்னியப்பன் சொல்லவும், பாப்புக்குட்டி சிரித்து விடவே அவனும் சிரித்து விட்டான்.

“ஏம்ப்பா அம்மாட்ட இப்படி பல்பு வாங்குற…..!” என்றாள் பாப்புக்குட்டி. “பல்பு வாங்குறதா, அப்படின்னா என்னடா….?” என்று புரியாமல் கேட்டான் கன்னியப்பன்.

“பல்பு வாங்குறதுன்னா திட்டு வாங்குறது, இதுகூடப் புரியாதாப்பா உனக்கு…..” என்று சிரித்தாள் பாப்புக்குட்டி. “ஆமா, இந்த மாதிரியான வார்த்தைகள் எல்லாம் உனக்கு எப்பிடித் தெரியுதுடா…” என்ற கன்னியப்பனின் கேள்விக்கு, “ஸ்கூலுல ஃப்ரண்ட்ஸ் சொல்லுவாங்கப்பா. யாரையாச்சும் மிஸ் திட்டுனா அவள் பல்பு வாங்க்கிட்டாடின்னு பேசிக்குவம்….” என்று அருஞ்சொற் பொருள் விளக்கம் சொன்னாள்.

வெளியில் சிறுவர்கள் விளையாடுகிற இரைச்சல் கேட்கவும் “அப்பா, நானும் வெளியில போயி ஃப்ரண்ட்ஸ்களோட சேர்ந்து விளையாடிட்டு வரட்டுமா….?” என்று ஏக்கமாய்க் கேட்டாள். பொதுவாகவே பாப்பு அதிக சேட்டைகள் பண்ணுவதாலும் மற்ற பிள்ளைகளை அடித்தும் கடித்தும் வைத்து விடுவாள் என்பதாலும் சரோஜினி குழந்தையை வெளியில் போய் விளையாட அனுமதிக்க மாட்டாள்.

“இருட்டப் போகுது. இப்பப் போயி என்னத்தம்மா வெளையாடுவ. ஹோம் ஒர்க் பண்ணலாம் வா….” என்று கன்னியப்பன் சொன்னதை சட்டை செய்யாமல், “வெளையாண்டுட்டு வந்து ஹோம் ஒர்க் பண்றேன்ப்பா……” என்று சொல்லிவிட்டு வெளியில் ஓடிப் போனாள் பாப்புக்குட்டி.

பாப்புக்குட்டிக்கு பத்து வயது ஆகிறது. அவள் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள். பாப்புக்குட்டி பிறந்தபோது சரோஜினி குடியாத்தம் என்னும் ஊரில் தங்கி அங்கிருந்த பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். கன்னியப்பனின் அம்மா கிராமத்திலிருந்து வந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டாள்.  ஆனால் மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒத்துப் போகவே இல்லை.

பாப்புக்குட்டிக்கு இரண்டு வயதானதும் கன்னியப்பனின் அம்மா, ‘இனியும் உன் பொண்டாட்டி கூட என்னால மல்லாட முடியாதுப்பா….’ என்று சொல்லிவிட்டு கிராமத்திற்கே போய்விட்டாள். அப்போது சரோஜினி அரக்கோணம் பக்கத்தில் தக்கோலம் என்னும் ஊரில் வேலை மாற்றிக் கொண்டு வந்தாள்.

அவர்கள் சென்னையின் புறநகரான ஆவடியில் புதுவீடுகட்டி குடிபோனார்கள். கன்னியப்பன் சென்னையில் உள்ள தனியார் அலுவலகத்தில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தான். சரோஜினியும் ஆவடியில் இருந்தே தக்கோலத்திற்கு இரயில், ஆட்டோ, பஸ் என்று எல்லாவகையான வாகனங்களையும் பயன்படுத்தி வேலைக்குப் போய்வரத் தொடங்கினாள்.

பாப்புக்குட்டியை ஒரு ப்ளே ஸ்கூலில் சேர்த்து அவர்களே நடத்திய குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திலும் விட்டிருந்தார்கள். பாப்பு மூன்றாம் வகுப்பிற்கு வரவும் அவர்களின் வீட்டில் வேலை செய்த சுகந்தி அம்மாளின் பராமரிப்பிலேயே குழந்தையை விடத் தொடங்கினார்கள்.

சுமார் ஒரு வருஷத்திற்கு முன்பாக கன்னியப்பனை அலுவலக வேலையிலிருந்து நெல்லூரில் தொடங்கிய புதிய பிராஜெக்ட் ஸைட்டிற்கு மாற்றி விட்டார்கள். அவன் அங்கேயே வீடெடுத்துத் தங்கிக் கொண்டான்.

சனிக்கிழமை வேலை முடிந்து வீட்டிற்கு வருபவன், திங்கட்கிழமை வெகு அதிகாலையிலேயே வேலைக்குக் கிளம்பிப் போய் விடுவான்.

விளையாடி முடித்த பாப்புக்குட்டி வீட்டிற்குள் வந்ததும் தொலைக்காட்சியை உயிர்ப்பிக்கவும், “பாப்பு, டீ.வி. போடாத. ஹோம் ஒர்க் பண்ணனும்……” என்றான் கன்னியப்பன் சற்றே கோபமாய்.

அவள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் “நீயும் அம்மா போலவே எப்பப் பார்த்தாலும் படி படின்னு தொணதொணக்காதப்பா. ஹோம் ஒர்க், படிக்கிறது எல்லாத்தையும் நாளைக்கு லீவுதான, அப்பப் பண்ணிக்கலாம்…..” என்று சொல்லி பொம்மைச் சேனலைத் திருப்பி உட்கார்ந்து கொண்டாள் பாப்புக்குட்டி.

கன்னியப்பன் வண்டியை எடுத்துக் கொண்டு போய் இரவு உணவிற்கு அவள் கேட்ட சிக்கன் நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வந்தான். “அப்பா தான் நல்ல அப்பா….” என்று அவனைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தாள். அவனுடைய கழுத்தில் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஊஞ்சலாடினாள்.

அவளுடன் கன்னியப்பனும் உட்கார்ந்து கொஞ்சநேரம் தொலைக்காட்சி பார்த்தான்.  அப்போது சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த பாப்புக்குட்டி திடீரென்று ”அம்மாவை நீ டைவோர்ஸ் பண்ணீடுறியாப்பா…..” என்றாள். அவனுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

அப்போது பார்த்து சரோஜினி போன் பண்ணினாள். பாப்புக்குட்டி தான் போனை எடுத்துப் பேசினாள். சரோஜினி மகளிடம் “அப்பாவும் பொண்ணும் என்னடி பண்றீங்க….” என்றாள்.

“நான் உங்கூட கா விட்டுருக்கேன். அதனால அப்பாகிட்டயே பேசிக்கோ….” என்று சொல்லி போனை கன்னியப்பனிடம் கொடுத்து விட்டு தொலைக்காட்சி பார்ப்பதைத் தொடர்ந்தாள் பாப்புக்குட்டி.

போனை வாங்கிய கன்னியப்பன் மனைவியிடம் ”சொல்லும்மா….” என்று சொல்லவும் “என்ன நீங்க ஊர்லருந்து வந்ததும் உங்க பொண்ணுக்கு செல்லம் சிந்துது போலருக்கு…..” என்றாள் சிரித்தபடி.

அப்புறம், “அப்பாவும் பொண்ணும் என்ன பண்றீங்க…..?” என்றாள்.

“டீ.வி பார்த்துக்கிட்டு இருக்கிறோம்…..”

“அதான பார்த்தேன். அவள் இஷ்டத்துக்கு ஆடுங்க….”

“சரி விடும்மா. நீ அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்குற?”

“என்ன பண்றது? நாளைக்கு ஓட்டுப் போடுறதுக்கு வேண்டிய பேலட் மெஷின், அது இதுன்னு எல்லாம் வந்துருக்கு. அதைக் காவல் காத்துக்கிட்டு இருக்குறோம்….” என்று அலுத்துக் கொண்டவள், “உங்க பொண்ணுக்கு என்னவாம்? திடீர்னு எங்கூட கா விட்டுருக்காளாம்….” என்றாள்.

”உன்னை டைவோர்ஸ் பண்ணச் சொல்றாள்…..” என்றான் கன்னியப்பன்  சிரித்தபடி.

“சீக்கிரம் அதைச்  செஞ்சு தொலையுங்க. நானாச்சும் நிம்மதியா இருந்துக்கிறேன்…..” என்றாள் அவளும் ஒரு செல்லக் கோபத்துடன்.

அவளே தொடர்ந்து ”உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் எவ்வளவு பண்ணுனாலும் நான் வேண்டாதவளாகவே இருக்குறேன். அப்பா தெய்வமாம்; ஆனா அம்மா நான் ராட்சசியாம். எப்பயும் இப்படித்தான் சொல்றாள். வாரம் ஒருதடவை தான் லீவுக்கு வர்றீங்க. ஒரே ஒருநாள் தான் அவகூட இருக்கீங்க. மத்த எல்லா நாளும் அவளுக்கு வேண்டியத நான்தான் பார்த்துப் பார்த்து செய்றேன். ஆனால் வீட்டுக்கு வர்ற யாராச்சும் அம்மா புடிக்குமா அப்பா புடிக்குமான்னு கேட்டா, கொஞ்சமும் தயக்கமோ யோசிக்கிற மாதிரி பாவனையோ எதுவும் கிடையாது. உடனேயே அப்பா தான் புடிக்குமுன்னு பொட்டுல அடிச்ச மாதிரி சொல்றாள்…..” என்றும் அலுத்துக் கொண்டாள்.

“நான் எப்பவாவது தான் வீட்டுக்கு வர்றேன். அப்ப அவள அடிக்கிறதோ திட்டுறதோ கிடையாது. அவள் கேட்குறதை எல்லாம் வாங்கிக் குடுத்துடுறேன். அதான் அப்பன புடிக்கிதுங்குறாள். குழந்தைகளோட சைக்காலஜியே புரியாம நீ எப்படித்தான் டீச்சரா இருக்கியோ….!” என்ற கன்னியப்பன் “டைவோர்ஸ்ங்குற வார்த்தையெல்லாம் குழந்தைக்கு எப்படித் தெரியுது …..?” என்றான் மனைவியிடம் இலேசான கோபத்துடன்.

“இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு எல்லா வார்த்தைகளும் புரியும். அதான் ஒரு சீரியல் விடாமப் பார்க்குறாங்களே…!” என்றாள் அவளும் வெடுக்கென.

“நீ சீரியல் பார்க்காம அவள் எப்படிப் பார்ப்பாள்…..”

”ஆமா உங்க பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாதாக்கும். நான் டீ.வி.யில செய்தி பார்க்குறதோட சரி. உங்க பொண்ணு தான் ஒரு சீரியல் விடாம பார்க்குறா. பார்க்க விடலைன்னா பாடம் படிக்க மாட்டேன்; ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு அடம் பண்ணுறாள். அதையும் சமாளிச்சா ‘இப்பவே எனக்கு அப்பாவப் பார்க்கனும்னு ‘ அழத் தொட்ங்கீடுறாள். கண்டுக்காமல் இருந்தால் இராத்திரிக்கு அவளுக்குக் காய்ச்சல் வந்துடுது. என்ன தான் பண்ணச் சொல்றீங்க….?” என்று கோபமாய்க் கத்தத் தொடங்கி விட்டாள் மனைவி.

”அவள் குழந்தையா இருக்கும் போதே தொலைக்காட்சி பிம்பங்களக் காட்டித்தான் சோறூட்டி பழக்குன. அதான் இப்பவும் டீவியே கதின்னு கெடக்குறாளோ என்னவோ…..” என்றான் அவனும் கோபமாய்.

”ஆமா எல்லாத்துக்கும் என்னையே குத்தஞ் சொல்லுங்க….” என்றபடி இலேசாய் விசும்பத் தொடங்கிய சரோஜினி போனைத் துண்டித்து விட்டாள். அவளும் இன்னொரு குழந்தை தான் என்பதால் அவள் ஊருக்கு வந்த பின்பு அவளையும் சமாதானபடுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் கன்னியப்பன்.

பாப்புக்குட்டி எப்போதுமே இப்படித்தான். ஏதாவது அதிரடியாக சொல்லிக் கொண்டிருப்பாள்.

அப்போது அவளுக்கு ஆறேழு வயதுக்குள் இருக்கும். ஒருமுறை பள்ளியிலிருந்து வந்தவள், ஆட்டோவிலிருந்து இறங்கியதும் “நீ உடனேயே பாதிரியாரை தேடிப்போய் வெட்டீட்டு வாப்பா…..” என்றாள் மழலை மாறாத மொழியில்.  கன்னியப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை.

மனைவியிடம் “குழந்தைய ஃபாதர்ட்ட ஏதும் கூட்டிட்டுப் போனியா? அவர் பைபிள் வசனம் ஏதாச்சும் சொல்லச் சொன்னாரா….?” என்று கேட்டேன்.

”இல்லையே, அவளோட பிறந்த நாளுக்குக்கூட வீட்டுக்கு வந்திருந்து ஆசிர்வதிச்சுட்டுப் போனாரே! இவளும் பவ்யமா அவருக்கு முன்னால மண்டியிட்டு ஆசி வாங்கிக்கிட்டாளே! ஃபாதர் உங்களத்தான் திட்டுனார். குழந்தையோட பிறந்தநாளுக்குக் கூட வீட்ல இருக்காம, என்ன வேலைன்னுட்டு…. ” என்றாள்.

”சர்ச் ஃபாதரை ஏண்டா செல்லம் வெட்டனும்? அவரை வெட்டீட்டா அப்பாவை ஜெயில்ல புடிச்சுப் போட்டுருவாங்களே…..” என்றான் கன்னியப்பன் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு.

’மக்கு மக்கு அப்பா; இது கூடவா புரியல உனக்கு…’ என்று தலையில் அடித்துக் கொண்ட பாப்புக்குட்டி, அப்புறம் வார்த்தைகளின் போதாமையை உணர்ந்து அபிநயக்கத் தொடங்கினாள்.

தலையில் முண்டாசைக் கட்டி முகத்தில் பெரிய மீசையை முறுக்கி ஓடி விளையாடு பாப்பா என்று பாடினாள். பாரதியாரா என்றான் கன்னியப்பன். பாசமகளின் முகம் பளிச்சென ஒளிர “அவரோட படத்தைத் தான் சொல்கிறேன். தேடிப்போய் வெட்டிக் கொண்டு வா…..” என்றாள்.

“மிஸ் சொல்லி இருக்காங்க அப்பா. பாட நோட்டுல ஒட்டனும்…..” என்றாள். முண்டாசுக் கவிஞனின் முகமிருக்கும் ஒளிப் படத்திற்கான தேடல் தொடங்கியது அவர்களின் வீட்டில்.

நவீனக்கல்வி பிள்ளைகளைப் படிப்பிக்கிறதோ இல்லையோ பெற்றோர்களை கண்டிப்பாய் நன்றாகவே படிப்பிக்கிறது என்று அன்றைக்குத் தான் அவர்களுக்குப் புரிந்தது.

அதைப்போலவே இன்றைக்கும் டைவோர்ஸ் என்கிற வார்த்தையின் அர்த்தம் புரியாமல் சொல்கிறாளோ பாப்புக்குட்டி என்ற சந்தேகம் வந்தது கன்னியப்பனுக்கு.

”அம்மாவை டைவோர்ஸ் பண்ணீட்டா அவள் வேற வீட்டுக்குப் போயிடுவாளே, அப்புறம் உன்னை யாருடா பார்த்துக்குவா….” என்றான் பாப்புக்குட்டியின் தலையை செல்லமாய் வருடியபடி.

”அவள் போகட்டும். நீ வேலைக்குப் போக வேண்டாம். வீட்டுலருந்து என்னைப் பார்த்துக்கோ….” என்றாள் அவளும். தெளிவாக அர்த்தம் புரிந்து தான் அந்த வார்த்தையைச் சொல்லி இருக்கிறாள் என்று புரிந்தது.

”அப்பா வேலைக்குப் போகலைன்னா சம்பளம் வராதே….! அப்புறம் பூவாவுக்கு என்னடா பண்றது…..?” என்றான் கன்னியப்பன் சிரித்துக் கொண்டே.

”ரெண்டு பேரும் வேலைக்குப் போயிடுறீங்க. என்னை யாருமே சரியாக் கவனிச்சுக்கிறதே இல்ல. அதனால கொஞ்ச நாளைக்கு நீ வீட்டோட இருந்து என்னைப் பார்த்துக்கோ. அப்புறம் நாம வேலைக்குப் போகாத வேறொரு நல்ல அம்மாவைக் கொண்டு வந்துடலாம். அதுக்கப்புறம் நீ வேலைக்குப் போய்க்கோ…” என்றாள் பாப்புக்குட்டி ஏற்கெனவே தீர்மானித்து வைத்திருந்ததைப் போல்.

”போயும் போயும் எதுக்குப்பா ஒரு டீச்சரைக் கல்யாணம் பண்ணுன. ஊரு உலகத்துல உனக்கு வேற பொண்ணே கெடைக்கலியா? ஸ்கூலுக்குப் போனா அங்கயும் மிஸ்ஸுங்க பாடாய்ப் படுத்துறாங்க. வீட்டுக்கு வந்தா அம்மாவும் மிஸ்ஸாவே நடந்துக்கிறாங்க. ஒருநாளும் எனக்கு அவங்க அம்மாவாவே நடந்துக் கிட்டதில்ல. நான் ஒருத்தி எப்படிப்பா ரெண்டு எடத்துலயும் சமாளிக்கிறது….!” என்று பெரிய மனுஷியைப் போல் செல்லமாய் அலுத்துக் கொண்டாள் பாப்புக்குட்டி.

”அப்படி அம்மா உன்ன என்னதான் பண்ணுறாள்……” என்றான் கன்னியப்பன் குறுநகையுடன்.

”எப்பப் பார்த்தாலும் படி படின்னு உயிரை வாங்குறாள். வெளியில ஃப்ரண்ட்ஸ் கூடக்கூட விளையாடப் போக விடமாட்றா. தினசரி அடிக்கிறாள்…..” என்று புகார் பட்டியலை வாசிக்கத் தொடங்கியவுடன், “போதும்மா; மிச்சத்த நாளைக்குப் பேசிக்கலாம். இப்ப சாப்பிட்டுத் தூங்கலாம்….” என்றான் அவன்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது,  ”நீ அம்மாவை டைவர்ஸ் பண்ணீட்டு சுஜி அம்மாவக் கல்யாணம் பண்ணிக்கப்பா……” என்றாள் வெடுக்கென்று. ”அது யாருடா சுஜி…..” என்றான் கன்னியப்பன்.

”என் குளோஸ் ஃப்ரண்ட் சுஜிதாப்பா. அவ ரொம்ப பாவம்ப்பா. அவளோட அப்பா வேலை வெட்டிக்கே போறதில்ல. எப்பப் பார்த்தாலும் குடிச்சுட்டு வந்து அவளையும் அவளோட அம்மாவையும் ரோட்டுல போட்டு அடிச்சுக்கிட்டே இருக்காருப்பா.  நீ சுஜியோட அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியின்னா, சுஜியும் நம்ம கூடவே வந்துடுவாள். நாம எல்லோரும் சந்தோஷமா இருக்கலாம்ப்பா…..”

பெரிய பெரிய புரட்சிகளையெல்லாம் சர்வசாதாரணமாக நிகழ்த்த வேண்டுமென்கிறாள். பின்னாளில் பெரிய புரட்சிக்காரியாக வருவாளோ என்னவோ என்று நினைத்துக் கொண்டான் கன்னியப்பன்.

அடுத்தநாள் காலையில் பாப்புக்குட்டி மிகவும் தாமதமாகத் தான் எழுந்தாள். சமர்த்தாகக் குளித்து முடித்து சாப்பிட்டு வீட்டுப் பாடங்களை எழுத உட்கார்ந்து விட்டாள்.

”சர்வாதிகாரின்னா என்னப்பா  அர்த்தம்…?”

”எந்த விவாதத்தையும் அனுமதிக்காம, தான் சொல்றத தான் எல்லோரும் கேட்கனும்;  அதன்படிதான் செயல்படனும்னு அதிகாரம் பண்றவங்களத்  தான் சர்வாதிகாரின்னு சொல்வாங்கடா…..” என்றான்.

“அம்மா மாதிரியாப்பா…..’’ என்றாள். “கிட்டத்தட்ட…..” என்று  சிரித்தான் கன்னியப்பன்.

“அப்பா, நாளைக்கு இங்கிலீஸ் ஸ்பெல்லிங் டெஸ்ட் இருக்கு. கேட்குறியா….?” என்றாள்.

கன்னியப்பன் ஒவ்வொரு வார்த்தையாகக் கேட்டுக் கொண்டு வரும்போது, monkey என்ற வார்த்தைக்கு mankey என்று சொன்னாள். அது தப்பும்மா என்று அவன் சுட்டிக் காட்டியபோது, நோட்டைப் பிரித்துக் காட்டினாள். அதிலும் mankey என்று தான் எழுதி இருந்தாள்.

“வகுப்பிலயும் நீ தப்பா எழுதி இருக்கலாமில்ல…..!” என்றான் கன்னியப்பன். “அதெப்படி, எங்க மிஸ் கரெக்ட் பண்ணி டிக் போட்டுருக்காங்களே…..” என்று பிடிவாதமாக அதுதான் சரி என்று சாதித்தாள்.

“உங்க மிஸ் கவனிக்காம டிக் போட்டுருக்கலாமில்லடா….?” என்றான் கன்னியப்பன் பொறுமையாய்.

“நீ எப்படி எங்க மிஸ் தப்புப் பண்ணியிருப்பாங்கன்னு சொல்லலாம்? அவங்க எவ்வளவு இண்டெலிஜெண்ட் தெரியுமா? அவங்க எவ்வளவு படிச்சிருக்காங்க தெரியுமா….?” என்று சொல்லி அவளின் ஸ்கூல் டைரியை எடுத்து விரித்துக் காட்டினாள்.

அதில் அன்புக்கரசி என்னும் ஆசிரியை B.A, B.Ed, PGDCA படித்திருப்பதாகப் போட்டிருந்தது. “பார்த்தியா? நீ பி.இ.ன்னு ரெண்டே ரெண்டு எழுத்துத்தான் படிச்சிருக்க. அவங்க பத்து எழுத்துக்கு படிச்சிருக்காங்க.  அவங்க மட்டும் தான் இங்கிலீஸ், கம்யூட்டர் சயின்ஸ்ன்னு ரெண்டு பாடம் நடத்துறாங்க. அவங்க தான் எங்களுக்குக் கிளாஸ் மிஸ். அவங்களப் போயி தப்பாச் சொல்ற?” என்று சாமியாடினாள் பாப்பு.

தன்னுடைய ஆசிரியையின் மீது அவளுக்கு இருந்த பிரியமும் நம்பிக்கையும் கன்னியப்பனை பிரமிக்க வைத்தது. புத்தகத்தை அல்லது அகராதியை எடுத்து அந்த வார்த்தை தவறென்று அப்போதே அவனால் நிரூபித்திருக்க முடியும். ஆனால் மகள் ஆசிரியையின் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கையைச் சிதைக்க விரும்பவில்லை கன்னியப்பன்.

ஐந்தாம் வகுப்பு மாணவி ஒரு வார்த்தையைத் தவறாகப் புரிந்து கொள்வதால் உலக இயக்கம் எதுவும் குலைந்து விடப் போவதில்லை. மேலும் குரங்கிலிருந்து தானே மனிதன் வந்திருக்கிறான். அதனால் குரங்கில் கொஞ்சம் மனிதன் (man) இருப்பதில் தவறொன்றுமில்லை என்றும் நினைத்துக் கொண்டான் அவன்.

“சரிம்மா; உங்க மிஸ் சரியாத் தான் சொல்லிக் குடுத்துருப்பாங்க. எதுக்கும் நாளைக்கு நீ மிஸ்கிட்டயே போய்க் கேட்டு அவங்க என்ன சொல்றாங்களோ, அதுதான் சரின்னு வச்சுக்கோ……” என்று சொல்லவும் தான் பாப்புக்குட்டி சமாதானமானாள்.

ஓட்டுப் போட்டுவிட்டு வந்து விடலாம் என்று பாப்புக்குட்டியையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான் கன்னியப்பன். மெதுவாக நடந்தே போய்விட்டு வந்து விடலாம் என்று அப்பனும் மகளும் முடிவுசெய்து வீட்டிலிருந்து இறங்கினார்கள்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைக் கடந்து நடந்து போய்க் கொண்டிருந்த போது ஓரிடத்தில் நாயொன்று நான்கு குட்டிகளுடன் படுத்திருந்தது. குட்டிகள் ஈனப்பட்டு மிகச்சில நாட்களே ஆகியிருக்கும் என்று தோன்றியது கன்னியப்பனுக்கு.

பாப்புக்குட்டி, “அப்பா நாம ஒரு குட்டி எடுத்துட்டுப் போகலாம்ப்பா. நான் நாய் வளர்க்க ரொம்ப ஆசைப் படுறேன்ப்பா…..” என்று சொல்லியபடி பிடிவாதமாக அந்த இடத்தைவிட்டு நகர மறுத்தாள்.

“வேண்டாம்மா. குட்டியத் தூக்குனா நாய் கடிச்சிடும்…..”

“அதெல்லாம் கடிக்காதுப்பா. அது ஏழெட்டுக் குட்டி போட்டுருந்துச்சு. ஆளாளுக்கு எடுத்துட்டுப் போயி, இப்பப்பாரு கொஞ்சம் குட்டிகள் தான் இருக்கு…..”

“உன்னை வளர்க்குறதே எங்களுக்குக் கஷ்டமா இருக்குடா. இதுல நாயவேற எப்படிடா வளர்க்குறது….?” என்றான் மிகவும் பரிதாபமாக.

“நீங்க வளர்க்க வேண்டாம்ப்பா. நானே வளர்த்துக்கிறேன்….”

“அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போயிடுறோம். நீயும் ஸ்கூலுக்குப் போயிட்ட பின்னாடி நாய யாரு பார்த்துக்குவா? நாயி பாவம் இல்லயா? அதுக்கு பசிக்குமே…..”

“நான் ஸ்கூலுக்குப் போறப்ப, அதையும் ஸ்கூல் பேக்குல போட்டு எடுத்துட்டுப் போயிடுறேன். நான் சாப்பிடும் போது அதுக்கும் குடுத்துடுறேன்ப்பா. ப்ளீஸ்ப்பா…..”

“சொன்னாப் புரிஞ்சுக்கோ பாப்பு. ஸ்கூலுக்கெல்லாம் கொண்டு போனீன்னா, உங்க மிஸ் திட்டுவாங்க. அதோட அது ஆய் போகும்; உச்சா போகும். அதையெல்லாம் யாரு கிளீன் பண்ணுவா…..?”

“எங்கூட விளையாட எனக்கு தம்பி, தங்கச்சி, அண்ணா, அக்கா யாருமே இல்ல. ஒரு நாய் கூட வளர்க்க விடலைன்னா எப்படிப்பா…..” என்று அழத் தொடங்கியவளை சமாதானப்படுத்துவது கன்னியப்பனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

“பாப்பு நீ ஐஸ்கிரீம் கேட்டீல்ல; வா போய்ச் சாப்புட்டு அப்புறம் ஓட்டுப்போடப் போகலாம்….” என்று கன்னியப்பன் அவளின் கவனத்தைத் திருப்பவும் அவளும் அழுவதை நிறுத்தி உற்சாகமானாள்.

ஓட்டுப் போட்டுவிட்டு வெளியில் வந்து கொண்டிருந்த போது, ஒரு நடுவயது பெண்ணைக்காட்டி, “அப்பா இதுதான் எங்க கணக்கு மிஸ்…..” என்ற பாப்புக்குட்டி, ஆசிரியையிடமும் அவனை, “இவர் தான் என்னோட அப்பா மிஸ்…..” என்று அறிமுகப் படுத்தினாள்.

கன்னியப்பன் ஆசிரியைக்கு வணக்கம் சொல்லி, “பாப்புக்குட்டி எப்படிப் படிக்கிறா மிஸ்…..” என்றான். ஆசிரியை புருவத்தை உயர்த்தி, “அதாரு பாப்புக்குட்டி….” என்று கேட்கவும் அவன் தன்னுடைய மகளைச் சுட்டிக் காட்டினான்.

“ஓ…. காருண்யாவா? நல்லாத்தான் படிக்கிறா! கணக்குத் தான் வரவே மாட்டேங்குது. அப்புறம் சேட்டையும் தாங்க முடியல. பிரின்சிபால்கிட்ட அனுப்பினாலும் அடங்க மாட்டேங்குறாள். அவருகிட்ட மிஸ்ஸுங்களையே போட்டுக் குடுத்துட்டு வந்துடுறாள். நாட்டி கேர்ள்…..” என்று பாப்புக்குட்டியின் தலையை அளைந்தபடி சொல்லிப் போனாள் ஆசிரியை.

“என்ன பாப்புக்குட்டி உங்க மிஸ் இப்படிச் சொல்றாங்க….” என்று கன்னியப்பன் மகளிடம் கேட்கவும், “எனக்கு கணக்குப் பிடிக்கவே பிடிக்காதுப்பா. கணக்கு மிஸ்ஸையும்…..” என்று முகஞ்சுளித்தாள்.

அவர்கள் வீட்டிற்குப் போய் கொஞ்ச நேரத்தில் சரோஜினி போன் பண்ணினாள். அவளின் குரலில் கோபமில்லை. அவளிடம் தேர்தல் நிலவரம் பற்றி கன்னியப்பன் விசாரித்தான்.

“ஜெயலலிதா தான் ஜெயிப்பாங்க போலருக்கு. எம்.ஜி.ஆரோட ரெட்டை இலைக்கு மவுசு இன்னும் குறையலன்னு தான் தோனுது….” என்றாள். அப்புறம் இருவரும் பொதுவாய் சிலது பேசிவிட்டு போனைத் துண்டித்துக் கொண்டார்கள்.

”படிக்காட்டி மாடு மேய்க்கத்தான் போகனும் உங்க அப்பா மாதிரின்னு அம்மா அடிக்கடி சொல்றாளே, நீ மாடு மேய்ச்சிருக்கியாப்பா……?” என்றாள் பாப்புக்குட்டி அப்பாவியாக.

”கிராமத்துல என்னோட ஏழெட்டு வயசு வரைக்கும் மாடு மேய்ச்சிக்கிட்டுத் தான் திரிஞ்சேன்டா அப்பா. எங்கூரு வாத்தியார் தான் என்னை இழுத்துக்கிட்டுப் போயி பள்ளிக்கூடத்துல சேர்த்து படிக்க வச்சார். அம்மா அதைத்தான் சொல்லி இருப்பாள்….” என்றான் கன்னியப்பனும் சிரித்துக் கொண்டே.

“அப்படின்னா பேசாம என்னையும் கிராமத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயி பாட்டிகிட்ட விட்டுடுப்பா. நானும் மாடு மேய்ச்சுப் பொழச்சுக்கிறேன். மாடு மேய்க்கிறது படிக்கிறதவிட ஜாலியாத்தான இருக்கும்……?” என்றாள் அப்பனுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே.

”இல்லடா. அந்தக் காலத்துல தாத்தாவுக்கு வசதி இல்ல; அதனால அப்பாவ மாடு மேய்க்க அனுப்புனார். உனக்கென்னம்மா என் செல்ல ராஜாத்தி, நீ எதுக்கு மாடு மேய்க்கனும்? அதோட மாடு மேய்க்கிறது ரொம்பவும் கஷ்டமான வேலைடா செல்லம்…..” என்றான் அவளின் தலையை வருடியபடி.

”கணக்குப் பாடத்தைவிட எதுவுமே கஷ்டமா இருக்காதுப்பா….” என்றாள் சிணுங்கியபடி.

”ஏன் கணக்கு உனக்கு அவ்வளவு கஷ்டமாவா இருக்கு….?” என்றான் கன்னியப்பன்.

”முந்தாநாள் ஸ்கூலுல கணக்குப் பாடத்துல டெஸ்ட் வச்சாங்கப்பா. அதுல கணக்கு தப்பாப் போட்டுட்டேன்னு மிஸ் திட்டுறாங்க. அம்மா அடிக்கிறாப்பா…..”

”கணக்கு தப்பாப் போடுறது தப்புத் தானம்மா….”

”மிஸ் சொல்லிக் குடுத்தது போலத்தான் போட்டேன். ஆனா அவங்களே நான் போட்ட கணக்கு தப்புன்றாங்க. நீயே பார்த்துச் சொல்லுப்பா…” என்றபடி ஓடிப்போய் புத்தகப்பையைத் திறந்து டெஸ்ட் நோட்டை எடுத்துக் கொண்டு வந்து பிரித்துக் காட்டினாள். ஒரு சிறுமி கடைக்குப் போய் இரண்டு சாமான்கள் வாங்குகிறாள். ஒன்றின் விலை 265ரூ. இன்னொன்றின் விலை 653 ரூ. சிறுமி கடைக்காரரிடம் 1000ரூ. கொடுத்தால் அவர் எவ்வளவு மிச்சம் கொடுப்பார்? என்பதுதான் கணக்கு.

”கணக்குப் போடுறதுக்கு முன்னால மிஸ்கிட்டக் கேட்டேன். எப்படி சால்வ் பண்ணனும் மிஸ்ஸுன்னு.  அவங்கதான் சுமால் பிகர்ஸ் ரெண்டையும் கூட்டி பிக் பிகர்லருந்து கழிக்கச் சொன்னாங்கப்பா…..” என்றாள்.

”சரியாத்தான் சொல்லி இருக்காங்க. ஆனால் நீ 265யையும் 1000யையும் கூட்டி 653லருந்துல்ல கழிச்சிருக்க. அதான் ஆன்ஸர் தப்பா வருது…..”

”ஏம்ப்பா. நீயும் எங்க மிஸ் மாதிரியே ஆன்ஸர் தப்புன்ற? பிகர் பெருசா சிறுசான்னு பார்க்குறதுக்கு முதல் டிஸிட்டத்தான் பார்க்கனுமின்னு மிஸ் சொல்லியிருக்காங்க. ரெண்டையும் ஒண்ணையும் விட ஆறு பெரிசில்லையா?”

”ஒண்ணுக்குப் பின்னாடி மூனு சைபர் இருக்குல்ல. அதனால அது நான்கு இலக்க நம்பர் இல்லையா? அப்ப அதுதான பெருசு…..?”

”சைபருக்குத் தான் மதிப்பே இல்லையே, அதான் நான் கடைசி சைபர டெலீட் பண்ணீட்டேன்….” என்றாள் பாப்புக்குட்டி மிகவும் சர்வ சாதாரணமாக.

”சைபர் தனியா வந்தாத்தான் மதிப்பு இல்ல. ஏதாவது நம்பருக்குப் பின்னால இருந்தா அதுக்கு மதிப்பு இருக்குடா செல்லம்…..” என்றான் கன்னியப்பன் சிரித்தபடி.

”எல்லோரும் சேர்ந்து என்னைக் குழப்புறீங்கப்பா. எனக்குக் கணக்கே வரலையாம். எப்படிப் பொழைக்கப் போறென்னு அம்மா தெனம் தெனம் புலம்புறாப்பா. இந்த கணக்குப் பாடத்தை எவந்தான் கண்டுபிடிச்சானோ? கணக்குப் போடத் தெரியலைன்னா வாழவே முடியாதாப்பா….?”

”அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைடா. கணக்கு வரலைன்னாலும் பரவாயில்ல. பாரதியார் கூட கணக்கு; எனக்கு பிணக்குன்னு சொல்லி இருக்கிறார். அவருக்கும் கணக்கு வராது. ஆனாலும் அவரு பெரிய கவிஞரா உலகம் முழுக்க பேசப்படுற ஆளா வரலையா?”

”ஆனால் எனக்கு கவிதை எழுதவும் வராதே……” என்று அழத் தொடங்கினாள் பாப்புக்குட்டி.

”கவிதை எல்லாம் பின்னாடி எழுத வரலாம். வராட்டியும் பரவாயில்ல; நீ அழாதடா செல்லம். கணக்கு குறைவா இருக்கிற வேற ஏதாவது வேலைக்குப் படிச்சுக்கலாம்….” என்று அவளை சமாதானப் படுத்த முயன்றான் கன்னியப்பன். கண்களைத் துடைத்துக் கொண்டு ”அப்படின்னா கர்நாடக மாநிலத்துல நீதிபதியா இருக்குற குமாரசாமி அங்கிள் மாதிரி என்னையும் ஜட்ஜ் ஆக்கிடுப்பா. தப்புத் தப்பா கணக்குப் போட்டாலும் யாரும் பெருசா தப்புச் சொல்ல மாட்டாங்கள்ள…..” என்றாள் மிகவும் சீரியசாக.

கன்னியப்பன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான். திடீரென்று இது நீதிமன்ற அவமதிப்பாகி விடுமோ என்று மனதுக்குள் இலேசான பயம் வரவும், தன்னிச்சையாக அவனுடைய சிரிப்பு அடங்கி விட்டது.

*** ***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close