சிறுகதைகள்

காலக் கோப்பு – கயல்

ரோஜா நிறத்தில் பெரிய இறக்கைகளை குடை ராட்டினம் போல விரித்து விரித்து விசிறியபடி கொஞ்ச தூரம் தாழ்வாகப் பறந்து தன் சிவப்புக் கால்களை அங்கிருந்த பெரிய மரத்தின் கிளையில் ஊன்றி அமர்ந்தது பறவை. பிறகு சாக்கிரதையாக பாத்திரத்தை வைத்தது. துணி க்ளிப் வடிவ வாயை அதனுள் நுழைத்து சர்ர்ரென உறிஞ்சியது.  

ஆகா….பருப்புப் பாயாசம்….” 

திடுக் என விழிப்பு வந்துவிட்டது.

கண் விழித்ததும் முதல் உணர்வாக எனக்குப் பாயாசம் சாப்பிடவேண்டும் போல ஆசையாக இருந்தது. நாலு வறுத்த முந்திரி திராட்சையைப் பேருக்குப் போட்டு  சேமியாவுடன் பாலில் சீனியிட்ட வெள்ளை நிறப் பாயசம் எல்லாம் இல்லை. பைத்தம்பருப்பில் பக்குவமாக வெல்லம் சேர்த்து நெய் மணக்கிற, கெட்டியும் இல்லாமல் ரசம் மாதிரி தண்ணீராக ஓடவும் ஓடாமல் செய்த திடமான பருப்புப் பாயாசம். ரெண்டு நாளாக கனவில் பெரிய தூக்குப் போணி முழுக்க பருப்பு பாயாசம் வந்தது. சாப்பிட்டேனா என்று நினைவில் இல்லை.

அம்மி! இங்க பாரு. பாரேன்எனக் கூவியதற்குஎன்ன சொல்லு”  சமையல் மும்முரத்தில் அடுப்பைப் பார்த்தபடி பேசினாள் அம்மா. “எனக்குப் பாயாசம் செஞ்சித் தரீங்களா?” கிளறிக் கொண்டிருந்ததை அப்படியே விட்டுவிட்டு முறைத்தாள். “ஃபரிதா! காலைல படுக்கைய விட்டு நேர வந்து இதான் கேப்பியா? போ. பல்லு வெளக்கு. ஸ்கூலுக்கு போணும் வயசானா கொஞ்சங் கூட மனசாட்சி மிச்சம் வெக்க மாட்டாரு போல கடவுள். “போம்மா! போன மாசம் கேட்டப்ப நடு ராத்திரி எழுப்பி இதான் கேப்பியா ன்ன. இப்ப காலைல கேட்டாலும் பதில் சொல்லலஇதற்கு மேல் பேசினால் வாப்பா இந்த பிரச்சினையில் நுழையும் ஆபத்து தெரிந்து ஏக்கமாக கிளம்பிப் போனேன் மதரசாவுக்கு.

நாங்கள் வசித்த சின்ன தெருவிலயும் அதன் பக்கத்திலிருந்த மூன்று தெருக்களிலும் முழுக்கவே முருகன், சந்துரு, சரவணகுமார் னு வாப்பாவோட நண்பர்கள் வீடுங்கதான். அதைச் சுற்றி இருந்த எல்லாத் தெருக்களிலும் ரஹ்மத்து, மெஹருண்ணிஸா, ஹனீஸ் னு பூராவுமே தெரிஞ்சவங்கமங்கலாக எரியும் தெருவிளக்கும் சில தெருக்களில் எரியாத விளக்குமாய் லக்ஷ்மியோட அம்மா ஒரு நாள் சத்தம் போட்டு வாசித்த பாரதியாரோடஇருள் என்பது குறைந்த ஔிஎன்பது மாதிரி இரவில் கண் சிமிட்டும். பின் மாலையில் ட்யூஷன் முடித்து தனியே நடந்து வரும் பெண் பிள்ளைகளைப் பார்த்ததும் சைக்கிளிலோ ஸ்கூட்டரிலோ வரும் முருகன்சுரேஷ், மதி என யாராவது இறங்கிஎப்படி போகுது படிப்புலாம்எனக் கேட்டபடியே கூடவே நடந்து வீட்டு வாசல் வரை வந்து விட்டுவிட்டுப் பிறகு வண்டியில் ஏறிப் போவார்கள்.

ரம்ஜான் என்றால் அம்மா பெரிய பெரிய கேரியர்களில் பிரியாணி கொட்டி பத்தாததற்கு கத்திரிக்கா, முட்டை, தயிர் ரைத்தா, பாயாசக் கஞ்சி னு தனித்தனியா வச்சுபோ மொதல்ல குடுத்துட்டு வா. அப்புறந் தான் உனக்கு சாப்பாடுஎன்பார்கள். ரெண்டு தெரு தள்ளி இருக்கும் அப்பாவின் நண்பர்கள் வீடுகளுக்கெல்லாம் ஒரு சிட்டு போலப் பறப்பேன் இவ்ளோ வெயிட்டையும் சைக்கிளில் வைத்து. “எப்புடி ஃபரிதாக்குட்டி அநியாத்துக்கு இவ்ளோ செவுப்பு நீ?” எனக் கேட்டபடியே பாத்திரத்தில் பிரியாணியை மாற்றுவார்கள் நெற்றியில் பெருசு பெருசாக குங்குமம் வைத்த அப்பாவின் நண்பர்களின் மனைவிகள். வீடுகளின் பொடிசுகள் சின்னப் பொறாமையோடுஇந்த பர்தாக்குள்ளேயே இருக்கறதால தான!” என்பார்கள் ஒவ்வொரு முறையும். “வெவ்வெ வெவ் வேஎன அழகு காட்டுவேன் பெருமையாக.

பாயாசக் கனவை அடைய வழியென்ன என யோசித்தபடியே நடந்த போது சட்டெனத் தோன்றியது. வழியில் தான் லக்ஷ்மி வீடு. அவங்கம்மா தமிழ் டீச்சர். எப்ப போனாலும் பாசமாவா வா ஃபரிதா என்ன சாப்பிடற? ” பதில் சொல்றதுக்கு முன்ன பெரிய லோட்டாவுல காபியும் ஒரு தட்டுல நெய் முறுக்கும் தருவாங்க. ஆனா இப்ப காலைல ஸ்கூலுக்குக் கிளம்பிட்டு இருப்பாங்க. சாயந்திரம் போகலாம்னு முடிவெடுத்து சாயந்திரம் போய் அப்படியே இம்மி பிசகாமல் காலை அம்மாவிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்டேன். லக்ஷ்மி அம்மாஅவ்ளோ தானே! அதுக்கு போய் ஏன் இப்படி தயங்குற. இப்ப காபி போட்டு தரேன். சமத்தா குடிச்சிடு. அப்புறமா அஸ்மா அண்ணிக்கு, உங்க வாப்பாவுக்கு, ஜாவீத்து எல்லாருக்கும் தந்து அனுப்புறேன்.” வழக்கமா லக்ஷ்மி வீட்டிலிருந்து வரும் நான்கு அடுக்கு பாத்திரங்களை எனக்கு நன்றாக அடையாளம் தெரியும். பாயாசம் வந்ததும் கீழடுக்கு பெரிய பாத்திரத்த எடுத்து முதல்ல நாம குடிச்சிடணும் னு மனசில கணக்கு போட்டபடிசரி லக்ஷ்மிம்மாஎன்றேன் பவ்யமாக.

கிளம்பிப் போய் வாசல் பக்கம் இருக்கும் கூடத்தில் என்ன புத்தகம் என்றே கவனிக்காமல் ஒன்றை எடுத்து கையில் வைத்து உட்கார்ந்து கொண்டாயிற்று. “சாயா குடி, வாஎன்ற அம்மாவிடம்போம்மி. ஹேம்வொர்க் செய்றேன்என்றேன் வாசலில் இருந்து கண்களை எடுக்காமல். இந்த கடிகாரம் ஓடுதா இல்லையா எனப் பொறுமை இழந்தேன். ஏழு மணிக்கு வந்த லக்ஷ்மி தெருவில் சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டதும் ஓடிப் போய்மி பாருங்க யாரு வந்துருக்கறதுனுஎன இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதது மாதிரி கூவியபடி நான் லக்ஷ்மியைப் பார்க்க இருவரும் கண் சிமிட்டிக் கொண்டோம் ரகசியமாக. “அடடா வா லக்ஷ்மி. அம்மா அப்பா எப்படியிருக்காங்க?” என்று கேட்டபடியே சாயாவும் வெண்ணெய் பிஸ்கட்டும் தந்தாள் அம்மா. “எல்லாரும் நல்லாருக்காங்க ஃபரிதாம்மா. வீட்ல பருப்புப் பாயாசம் செஞ்சாங்க. அதான் தந்து விட்டாங்க”  ஒரக் கண்ணால் அம்மா எனைப் பார்ப்பதைக் கண்டுகொள்ளாமல்சரி சரி. தா!” என்று என் திட்டத்தைச் செயல்படுத்தி, அளவில் பெரிதான கீழடுக்கைக் கைப்பற்றினேன். “பாத்திரங்களை அப்புறம் எடுத்துக்கிறேன். வரேன்டி ஃபரிதாஎன்று சிரித்தபடி கிளம்பிப் போனாள் லக்ஷ்மி.

ஆஹா அடடடா அடடடடாஇது போல் தினம் சாப்பிட்டா எப்படி இருக்கும்!” என்று மொத்தமும் குடித்து விரல்களை நக்கியதைப் பார்க்கச் சகிக்காமல்வேறென்ன? வயித்தால போவும்!” என்று சொன்ன அம்மா கூடப் பரவால்ல; தனக்குக் குறைவான பாயாசம் மட்டுமே கிடைக்கப் போகிற பொறாமையில் கீ கீ எனச் சிரித்த ஜாவீதைத் தான் பிச்சிடுவேன் என்று சொல்லி முறைத்தேன். அன்றிரவு கனவில் பாயாசம் வராமல் நிம்மதியாகத் தூங்கினேன்

அப்போது தான் கேட்கத் துவங்கியது தம் தம் னு கதவுகளை இடிக்கும் சத்தம். கட்டிலில் இருந்து குதித்து ஓடிப் போய் ஜன்னல்ல எட்டிப் பார்க்க முயற்சிக்கிறேன். ஒரு பெரிய கல் கூரை மேல் வந்து விழுது. எங்கயோ ஒரு கண்ணாடி ஜன்னல் உடையுது. சிலீர்……. சத்தம். மறுபடி கதவை யாரோ இடிக்கிற சத்தம். உடம்பு நடுங்குகிற அம்மாவை உலுக்கிமா என்னமா என்னமா?” என்கிறேன். என் கேள்வியை அப்படியே வாயோடு சேர்த்து அழுத்திஉஷ்! வாஎன்று உள்ளே அழைத்துப் போய் படுக்கையில் இட்டுஒன்னுமில்ல ஒன்னுமில்ல. பயப்படாதஎன தலைமுடியை வருடித் தூங்க வைத்துவிட்டார்கள். காலையில் எழுந்ததும்நான் தான் புத்திசாலினு எல்லாத்துக்கும் மார் தட்டும் ஜாவீதை  அப்படியே நகர்த்திக் கொண்டு போய்க் கேட்கலாம்னா அவன் முழியிலயே தெரிந்துவிட்டது அவனுக்கும் எதும் தெரியலனு.

அன்னிக்கு மதராசாவில் எங்க சீனியர் அக்கா முகங்களும் சோகமா இருந்துச்சி. “என்னக்கானு கேட்டாஇதெல்லாம்  உனக்குப் புரியாதுனு சொல்லிட்டாங்க. அங்கேயே உட்கார்ந்து அவங்க பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டபடி இருந்தேன். அடிக்கடி பாபர் மசூதி என்ற பெயர் அடிபட்டது. அக்காங்க சொன்னது உண்மைதான். எனக்கு எதும் புரியல. ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்குப் போய்விட்டேன்.

அதற்கு அடுத்த நாள் காலையிலிருந்து, “எங்கேயும் போகக் கூடாதுஎன எங்கள்இருவரையும் வீட்டுக்குள் அடைத்தபோது எதோ பெரிய பிரச்சினை தான் போலிருக்கிறது. இல்லைனா இரண்டு பிரச்சினைகளை ஒரே நேரத்துல வீட்டில் வெப்பாங்களா அம்மா னு யோசித்தேன். பிற்பகல் நிலைமை மோசமானது. எல்லா சாளரங்களும் சாத்தப்பட்டன. பக்கத்துத் தெரு முனையில் இருந்த லஷ்மி வழக்கமா சாமி கும்பிடற  இடத்தை  இப்ப இடிக்கிறாங்களாம். டம டமவென சத்தம் வெகு நேரம் கேட்டது. பயம் அப்படியே காத்துல பரவுது. வாப்பா இரவு வீட்டுக்கு வரும் வரைக்கும் மழையில் நனைஞ்ச கோழிக் குஞ்சுகள் போல அம்மாவை ஒண்டிக் கொண்டிருந்தோம்.

முதன் முறையாக வீட்டின் பெரிய க்ரில் கேட்டைப் பூட்டினார் வாப்பா. சாப்பிட்டுப் படுத்தால் தூக்கமே வரல. நள்ளிரவில் தொடங்கியது ‘தண் தண் தண் தண்’ என மழையப்ப வர்ற இடி மாதிரி தொடர் சத்தம். வாப்பா எவ்வளவு தடுத்தும் சன்னலைத் திறந்து எட்டிப் பார்த்தேன் புரியாமல். தெருவோட இரு பக்கங்களிலும் கடப்பாரை வைத்துக் கொண்டு தெருவைத் தட்டியபடி  பூபாலன் அண்ணன் ராமச்சந்திரன் அண்ணன் அப்புறம் பெயர் தெரியாத சில அண்ணன்களின் தொப்பியணிந்த தலைகளும் மங்கிய வெளிச்சத்தில்  தெரிந்தன. தண் தண் தண்…..வாப்பாவிடம் சொன்ன போது வேதனையோடு ஒரு சிரிப்பைத் தந்துதூங்கு போஎன்றார். படுக்கையில் படுத்து வெகு நேரம் தூங்குவது மாதிரியே இருந்தேன். வாப்பா தாழ்ந்த குரலில் அம்மாவிடம்  சொன்னார்

அங்க மசூதிய இடிச்சதும் இங்க கோயிலை இடிச்சதும் மனுசங்கதான். நம்ம வீடுகளை நோக்கிக் கல் வீசுறாங்கனு தெரிஞ்சதும் ராத்திரி பகல் னு பாக்காம மூணு நாளா கடப்பாரையை வச்சுகிட்டு நம்மாளுங்களோட ஒன்னா நின்னு காவல் காக்குற இந்துக்களும் மனுசங்க தான். இறைவன் எல்லையற்ற கருணையாளன்“. அம்மா அழதுகிட்டே இருந்தாங்க. நான் அப்படியே தூங்கிப் போய்ட்டேன்.

**********

 “இப்பலாம் ரம்ஜானுக்கு பிரியாணி, பொங்கலுக்கு சாம்பார், கூட்டு, பாயாசம் னு எதுவுமே ரெண்டு பேரோட வீட்லயும் தந்துவிடறதில்ல. ஏன்ப்பா?”  என்று அதற்குப் பிறகு பல முறை நாங்கள் கனவுகளில் கேட்டுக் கொண்டோம். “தெரிலயேஎன்பது தான் பதில். அதன் பிறகு நான் லக்ஷ்மியப் பார்க்கவே இல்ல. இனியும் பார்க்க முடியுமானு தெரியல. நான் இப்ப தில்லியில் இருக்கேன்

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. காலக்கோப்பு அருமையான கதை.மதப்பிரச்சனை எப்படி ஒற்றுமையான சமூகத்தை கலைக்கிறது என்பதை பாயசத்தில் ஆரம்பித்து கொண்டு போகிற விதம் சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close