சிறார் இலக்கியம்
Trending

காக்காவும் நரியும் – புதுக்கதை

ஞா.கலையரசி

ஓர் ஊரில் பாட்டி வடை சுட்டு, விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தாள்.

ஒரு நாள் காக்கா, அவளிடமிருந்து ஒரு வடையைத் திருடி எடுத்துச் சென்று, ஒரு மரத்தில் அமர்ந்தது. .

அதைத் தின்னப் போகும் சமயத்தில், ஒரு நரி அங்கு வந்தது  காக்காவிடமிருந்து வடையைப் பிடுங்க, நரி ஒரு தந்திரம் செய்தது.

காக்காவைப் பார்த்து, “காக்கா! காக்கா! நீ ரொம்ப அழகாயிருக்கே! ஒரு பாட்டுப் பாடேன்,” என்றது நரி.

இதுவரை யாரும் தன்னை அழகு என்று பாராட்டியதில்லை என்பதால், நரி சொன்னதைக் கேட்டவுடன், காக்காவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை..

காக்கா வாயைத் திறந்து ‘கா… கா…’ என்று உற்சாகமாகக் கத்தியது. அதன் வாயிலிருந்த வடை கீழே விழுந்துவிட்டது.  உடனே நரி அதை எடுத்துக் கொண்டது.

தன்னை ஏமாற்றி, வடையைப் பிடுங்கிய நரியின் மீது, கோபமாக வந்தது காக்காவுக்கு.

“வடை வேணும்னு கேட்டிருந்தாலே, கொடுத்திருப்பேன்.  ஏன் என்னை ஏமாத்துனே?” என்று கோபமாகக் கேட்டது, காக்கா.

“ஏமாத்துனவுடனே, ஒனக்கு எப்படிக் கோபம் வருது? அப்படித் தானே பாட்டிக்கும் வந்திருக்கும்?  வயசான காலத்துல, கஷ்டப்பட்டு உழைச்சுச் சம்பாதிக்கிற பாட்டியை, நீ ஏமாத்தித் திருடலாமா? அது மட்டும் சரியா?” என்றது நரி.

“நான் செஞ்சது தப்பு தான்.  பாட்டியை ஏமாத்தும் போது, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி!  ஆனா நான் ஏமாறும் போது, வருத்தமா இருக்குது. கோபம் கோபமா வருது. இனிமே யாரையும் ஏமாத்தமாட்டேன்,” என்றது காக்கா.

“இந்தா வடை!  எனக்கு வேணாம்! பாட்டியை நீ ஏமாத்துனது தப்புன்னு ஒனக்குப் புரிய வைக்கத் தான், இப்படிச் செஞ்சேன்,”. என்றது நரி.

“சரியான பாடம் சொல்லிக் கொடுத்த, ஒனக்கு ரொம்ப நன்றி! வா ரெண்டு பேரும் வடையைச் சேர்ந்து சாப்பிடலாம்,” என்று காக்கா கூப்பிட்டது.

நரியும், காக்காவும் வடையைப் பகிர்ந்து தின்றன.

மறுநாள் முதல், காக்கா பல இடங்களுக்குப் பறந்து சென்று, அடுப்பெரிக்கத் தேவையான மரக்குச்சிகளையும், சருகுகளையும் சேகரித்து, எடுத்து வந்து  பாட்டியிடம் கொடுத்தது.

அது செய்த உதவிக்குப் பதிலாகத்  தினமும் காக்கா தின்ன, ஒரு வடை கொடுத்தாள் பாட்டி!

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close