தொடர்கள்

காகங்கள் கரையும் நிலவெளி;12 – சரோ லாமா

தொடர் | வாசகசாலை

‘பனித்துளியில் சூரியனை தரிசித்தேன்’ என்கிற தாகூரின் புகழ் பெற்ற வரி ஒன்று உள்ளது. பெரும் படைப்பாளிகள் அவர்தம் இளம்வயதில் பெரும் புயலென புறப்பட்டு வந்து தம் படைப்பாளுமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணுவார்கள். ரவீந்திரநாத் தாகூர், பாரதி, புதுமைப்பித்தன் என இலக்கியத்திலும் தார்க்கோவ்ஸ்கி, அகிரா குரோசோவா, இங்க்மர் பெர்க்மன், சத்யஜித் ரே, என சினிமாவிலும் எடுத்துக்காட்டாக சொல்லலாம். அவர்கள் படைப்பு மனம் முதிர முதிர அவர்கள் எளிமையை நோக்கி நகர்கிறார்கள். இளம்வயதின் துடிப்பும் வேகமும் பிரம்மாண்டமும் அவர்களிடமிருந்து விடைபெற்று முதிர்ச்சியும் வாழ்வின் அசலான சாரமும் அவர்களிடம் படைப்பின் வழியே வெளிப்படுகிறது. அதற்கு எளிமையான எடுத்துக்காட்டு தார்கோவ்வ்ஸ்கியின் த சாக்ரிபைஸ் (THE SACRIFICE) படமும் குரோசோவாவின் மடாடாயோ (MADADAYO) என்கிற படமும்தான். மேலே சொன்ன இரண்டு படங்களும் கலை வாழ்வில் உச்சத்தை எட்டிய படைப்பாளிகள் இருவரின் கடைசித் திரைப்படங்கள் என்பதும் அவர்கள் அடைய விரும்பிய எளிமையை இந்த திரைப்படங்களில் அடைந்திருக்கிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை.

த சாக்ரிபைஸ் படத்தின் ஆரம்பம், முதன்மை கதாபாத்திரமான அலெக்சாண்ட்ரியா நதிப்படுகையில் ஒரு மரத்தை நடுவதில் தொடங்குகிறது. அப்போது தன்னுடன் இருக்கும் சிறுவனுக்கு புத்த மடாலயத்தில் ஒரு மரத்தை நட்டு மூன்று வருடம் தொடர்ச்சியாக இடைவெளியேதுமில்லாமல் நீருற்றிவந்த புத்த பிக்குவின் தொடர்ச்சியான  செயல்பாட்டை சொல்கிறார். மூன்று வருடங்களுக்குப் பின் அந்த மரம் பூத்துக் குலுங்குகிறது. அதன் மலர்ச்சியை மலை மேல் இருந்து பார்த்து அகம் மகிழும் புத்த பிக்குவின் கதையை சொல்லிக்கொண்டு போகும் அலெக்சாண்ட்ரியா, ”ஒரு செயலை நம் நடைமுறை வாழ்வில் தினமும் தவறாமல் கடைப்பிடித்து செயல்படுத்தி வந்தால் மாபெரும் மாற்றத்தை இந்த பூமியில்  உருவாக்க முடியும்” என்று சொல்லி முடிக்கிறார். வாழ்வில் நாம் எதை எதையோ அடைய விரும்புகிறோம், சாதிக்க விரும்புகிறோம், ஆனால் வாழ்வு கோரும் அன்றாடங்களின் எளிய ஒழுங்குமுறையை வாழ்வின் அசலான சாரத்தை நாம் தவற விட்டுவிடுகிறோம். தார்கோவ்வ்ஸ்கி தன் படத்தில் சொல்லவந்தது இந்த மகத்தான பேருண்மையைத்தான் என்பது என் புரிதல்.

குரோசோவாவின் மடாடயோ திரைப்படமும் நாம் அடைய வேண்டிய வாழ்வின் சாரத்தை  வேறு விதத்தில் சொல்கிறது. இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் ஜப்பானில் ஜெர்மன் மொழி போதிக்கும் பேராசிரியர் ஒருவரின் கதையின் வழியே மனித வாழ்க்கையை ஆன்மிகத் தளத்தில் வைத்து மதிப்பிடுகிறார் குரோசோவா. மனிதர்களின் சுயநலம், அதிகாரப்போட்டி, அதன் உப விளைவான போர், போரின் வழியே வெளிப்படும்  மனிதர்களின் தன்னகங்காரம், அந்த அகங்காரம் சமூகத்தில் ஏற்படுத்தும் மனிதர்களின் வீழ்ச்சி என இந்த உலகத்தை வாழத் தகுதியில்லாததாக மாற்றிக்கொண்டிருக்கும் மனிதர்களின் தகுதியின்மையை குரோசோவா காட்சிப்படுத்தியிருக்கிறார். படாடோபம், பணம், அதிகாரச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு மாற்றாக எளிமை, தேவைக்கு மட்டுமே தேவைப்படுகிற பணம், மனிதர்கள் இயற்கையை சுரண்டாமல் அனுபவிக்க வேண்டிய வாழ்வின் நியதிகள் போன்றவற்றை ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையின் வழியே முன்வைக்கிறார். பல்கலைக்கழகத்தை ஒரு அதிகார மையமாக நாம் உருவகித்துக் கொண்டால் அதைவிட்டு வெளியேறி ஒரு எழுத்தாளனாக எழுதி நான் வாழ்ந்துவிடுவேன் என்று நம்பும் பேராசிரியரை பிராதானப்படுத்துவதின் மூலம்  எளிமையை வாழ்வின் சாரத்தை நோக்கி நகர வேண்டிய மனித யத்தனத்தை தான் தன் கடைசி படத்தின் வழியே குரோசோவா சொல்ல விரும்பியது என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.

படத்தில் இரண்டு பிரதான காட்சிகள் என்னை அதிகம் கவர்ந்தன. ஒன்று போருக்குப் பின்பான  சிதிலமைடைந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கிடையில் பேராசிரியரும் அவருடைய மாணவர்களும் முழு நிலவைப் பார்க்கும் காட்சி. இது ஸென் மனநிலையை நேரடியாகவே வெளிப்படுத்துகிறது. ஜப்பானிய கலாச்சாரத்தில் நிலவுக்கு முக்கியமானதோர் இடம் உண்டு. நிலவு வெவ்வேறு அர்த்தப்பாடுகளுடன் பொருந்தி மூதாதைகளின் நினைவுத் தொடர்ச்சி போல அவர்களின் படைப்புகளில் இடம் பெறுகிறது. ஸென் படைப்புகளில் இடம்பெறும் நிலவு வெறும் நிலவு மட்டுமே அல்ல. அது ஒரு மீள் நினைவு. ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் மீது பொழிந்து கொண்டிருக்கும் நம் மூதாதைகளின் அளவற்ற கருணை.

இன்னொன்று, குதிரை இறைச்சி வாங்க கடையில் பேராசிரியர் நின்று கொண்டிருக்கும்போது குதிரை ஒன்று அவரை நின்று பார்த்துவிட்டுப் போகும் காட்சி. பேராசிரியர் ராணுவத்தில் சிறிதுகாலம் பணியாற்றிய போது அந்தக் குதிரையுடன் பழகியிருக்கிறார். குதிரையுடனான கடந்தகாலத்தின் அப்பழக்கம் நிகழ்காலத்தில் ஒரு அர்த்தப் பார்வையை வீசச் செய்கிறது. குதிரை இறைச்சி வாங்க நின்று கொண்டிருக்கும்போது எப்படி அந்தக் குதிரை அங்கே வருகிறது? அல்லது அது பேராசிரியர் முன்பொருகாலத்தில் பழகிய அதே குதிரைதானா? இப்படியாக பலவிதமான சலனங்களை நம்முள் எழுப்பும் காட்சி அது!

படத்தின் காட்சிகளுக்கு அப்பாற்பட்டு என்னைக் கவர்ந்த இன்னொரு பிரதான அம்சம்  பேராசிரியரின் மனைவியின் இருப்பு. படம் நெடுக அவர் ஓர் கவனம் பெறாத நிலவின் இருப்பைப் போல சுடர்ந்து கொண்டிருக்கிறார். வாழ்வின் எல்லாவிதமான நெருக்கடி காலகட்டங்களிலும் அவர் பேராசிரியரின் இணை பயணியாக, ஒரு கணம் கூட முகம் சுளிக்காமல், புன்னகையுடன் பேராசிரியரின் மாணவர்களை உபசரிக்கிறார். சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார். குழந்தைமையும் பித்தநிலையும் ஒருங்கே கொண்ட பேராசிரியரின்  ஆன்ம ஒளியூட்டும் உயிர்ப்பாக அவர் மிளிர்கிறார். உண்மையில் அவர்தான் படத்தில் குரோசோவா வெளிப்படுத்த நினைத்த ஆன்ம உயிர்ப்போ என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

படத்தைப் பற்றி இன்னும் விரிவாக எழுத நான் விரும்பவில்லை. படத்தின் உள்ளடுக்குகள்  ஏராளம். நான் அகிரா குரோசோவா ரசிகன் இல்லை. ஆனால் அவருடைய படங்களை பலமுறை திரும்பத் திரும்ப பார்த்திருக்கிறேன். கென்ஜி மிஸோக்குச்சி எனக்கு விருப்பமான இயக்குனர். குரோசோவாவின் படங்களில் மேற்கத்திய தாக்கம் உண்டு. ஆனால் மிஸோக்குச்சியின் படங்கள் ஜப்பானிய சாராம்சத்தில் ஊறியவை. மேற்கில் குரோசோவா அதிகம் கொண்டாடப்பட்டதற்கும் மிஸோக்குச்சி அதிகம் கவனம் பெறாமல் போனதற்கும் இதுதான் காரணம் என்றே தோன்றுகிறது. இது இரண்டு இயக்குனர்களை பற்றிய ஒப்பீடு அல்ல – என் புரிதல்.  செவன் சாமுராய், ராஷமோன், இகிரு, ஹை அண்ட் லோ, த்ரோன் ஆப் ப்ளட், டெர்ஸு உஸ்லா, ரான் என குரோசோவாவின் புகழ்பெற்ற படங்களை விடவும் மடோடயா சிறந்த படம் என்பது என் நிலைப்பாடு.

மனிதர்களுக்கும் வளர்ப்பு மிருகங்களுக்குமான உறவு இலக்கியத்தில் தொடர்ச்சியாக பதிவு  செய்யப்பட்டிருக்கிறது. மனித வாழ்வு வெறுமை கொள்கிறபோது அல்லது மனிதர்கள் சலித்துவிடுகிறபோது நாம் வளர்ப்பு மிருகங்களிடம் சரணடைகிறோம் என்றே தோன்றுகிறது. இந்த ஒருவகை சார்பு மன நிலையை அல்லது கொடுக்கல் வாங்கலை சரியான கலவையில் பேசியிருக்கிறது ஜெகன் நடராஜனின், ’புஷ்பராணியின் பூனைகள்’ என்ற சிறுகதை. ‘புஷ்பராணியின் பூனைகள்’ நான் சமீபத்தில் வாசித்த ஒரு நல்ல சிறுகதை. பூனைகளின் அக உலகம் மற்றும் புஷ்பராணியின் அக உலகம் இரண்டும் சரியாக கதையில் பொருத்தப்பாடுடன் சொல்லப்பட்டிருந்தன. ஒரு கட்டத்தில் மனிதர்கள் பூனையாகவோ அல்லது பூனைகள் மனிதர்கள் போலவோ நடந்துகொள்கிறார்கள். உறவு பலப்படுகிறது, பின்னர் பலவீனப்பட்டுப் போகிறது. வாழ்க்கை நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொள்கிறது. புஷ்பராணியையும் அவர்தம் பூனைகளையும் ஒருசேர மௌனமாக சகித்துக்கொள்ளும் அல்லது அவர்களின் உலகைத் தொந்தரவு செய்யாமல், சுடுசொல் உதிர்க்காமல் கடந்துபோகத் தெரிந்த அந்த பெயரில்லாத கணவனையும் நான் அன்போடு நினைத்துக் கொள்கிறேன். அவருக்கு நான் ”சகிப்புத்தன்மை கொண்ட மனிதர்” என்று பெயரிட்டுக் கொண்டேன். கதையின் பிரதான சரடான மனித – மிருக உறவு அழகாக மிளிர, முடிவின்மையின் காலத்துள் சென்று வீழும் அற்ப மனித வாழ்வுக்கு ஒரு சிறிய அர்த்தத்தை நேர நிரவலை வளர்ப்பு மிருகங்கள் அளித்துவிடுகின்றன.

கதை படித்து முடித்தபின் மனம், வீட்டின் வளர்ப்பு மிருகங்களை நெகிழ்ச்சிக் கணங்களை  அசை போட்டுக் கொண்டது.  யாரை யார் பிரதி செய்கிறார்கள் எந்த சூழ்நிலையில் பிரதி செய்கிறார்கள் என்பது ஓர் தத்துவார்த்தக் கேள்வி. இந்தக் கேள்வியின் ஏதோ ஓர் முனையை தொட்டுச் செல்கிறது புஷ்பராணியின் பூனைகள் சிறுகதை. புஷ்பராணியின் பூனைகள் கதையைப் படித்து முடித்தவுடன் அதன் தாக்கம் மடோடயா திரைப்படத்தை பார்க்கும் உந்துதலை எனக்குள் உண்டாக்கியது. படத்தில் பேராசிரியருக்கு பூனைக்கு மான உறவு ஒருவித காவிய சோகத்துடன் சொல்லப்பட்டிருக்கும். பூனை காணாமல் போய்விடுகிற பிறகு நிகழும் சம்பவங்கள் உணர்ச்சிப் பூர்வமானவை. இறுகிக் கிடைக்கும் மனங்களை நெகிழ்த்துபவை.

***

அசோகமித்திரனின், ’தண்ணீர்’ நாவலை மீண்டும் படிக்க நேர்ந்தது. அளவில் மிகச் சிறிய நாவலான இது மிகப்பெரிய அனுபவங்களை வாசிப்பவர்களுக்குத் தரவல்லது. நாவலை ஆரம்பிப்பது, சரியாக ஆரம்பிப்பது  ஒரு கலை. அதில் அசோகமித்திரன் விற்பன்னர். தண்ணீர் நாவல் கதையின் நாயகியான, ‘ஜமுனா படுத்துக்கொண்டே அடிப்பம்பு சத்தத்தை கேட்டுக்கொண்டிருக்கிறாள். அந்த சத்தத்தில் மாறுதல் கேட்டவுடன் தண்ணீர் பாத்திரங்களை தூக்கிக்கொண்டு கீழே ஓடுகிறாள்’ என்று ஆரம்பிக்கிறார் அசோகமித்திரன்.

மேலோட்டமான வாசிப்பில் தண்ணீர் பிரச்சினையை மையமாகக் கொண்ட நாவலாக இது  தோற்றம் கொண்டிருந்தாலும் நாவல் அது மட்டுமேயல்ல. பாத்திரங்களுக்கு ஏற்ப தோற்றம் கொள்ளும் தண்ணீரைப் போல சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன் சுயத்தை, சுபாவத்தை மாற்றிக்கொள்ளும் மாற்றிக் கொண்டேயிருக்கும் மனிதர்களைப் பற்றிய கதையாக இது விரிவு கொள்கிறது. இது என்னுடைய புரிதல். சுரண்டல் என்று தெரிந்தும் மனிதர்கள் சக மனிதர்களை சுரண்டுகிறார்கள். அன்பின் பெயரால் அதிகாரத்தின் பெயரால் உறவுநிலைகளை சாக்காக வைத்து சக மனிதர்கள் சுரண்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தான் சுரண்டப்படுகிறோம் என்று தெரிந்தும் மனிதர்கள் தன்னை சுரண்டலுக்கு ஒப்புக் கொடுப்பது ஏன்? எல்லாவிதமான பழக்கங்களுக்கும் அடிமையாகும் மனிதன் சுரண்டல்களுக்கும் அடிமையாகி அதிலிருந்து வெளியே வர விரும்பவில்லையா? அல்லது சுரண்டல் தரும் ஒரு வித சுய பச்சாதாபத்தை அவன் மனதளவில் விரும்பி நேசிக்க ஆரம்பித்து விடுகிறானா? தெரியவில்லை. ஆனால் நாவல் வெவ்வேறு கதாபாத்திரங்களை வைத்து மனிதனின் கீழ்மைகளை சரளமானதோர் மொழியில் சொல்லிப்போகிறது.

நாவலில் எனக்கு மிகவும் பிடித்த இடம் ஜமுனா தற்கொலை முயற்சியை வீட்டுக்கார அம்மா பார்த்துவிட்ட பின் அவர்களுக்கிடையே நிகழும் உடையாடல்கள். வீட்டுக்கார அம்மாள்  ஜமுனாவைப் பார்த்து, ‘நீ தனியா இருக்க லாயக்கில்லாதவள்’ இரண்டு முறை சொல்கிறாள். ஜமுனா தன் நிலைப்பாட்டை ஒருவித சுய பச்சாதாபத்துடன் வெளிப்படுத்திக்கொண்டிருக்க வீட்டுக்கார அம்மாள் ஜமுனாவின் தற்கொலை நிகழ்ந்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய நடைமுறை அபவாதங்களை அசௌகர்யங்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்பாள். ‘நம்ப ஒரு நிமிஷம் இருக்குற மாதிரி இன்னொரு நிமிஷம் இருக்கோமா மாமி? என்று ஜமுனா கேட்க ‘எனக்கு அதெல்லாம் தெரியாது, இனிமே ஒரு நிமிஷம் நீ இங்கே இருக்கக் கூடாது’ என்று வீட்டக்கார அம்மா பதில் சொல்கிறார். இருவேறு மனநிலைகள், இரு வேறு உலகங்கள் அவரவர் தரப்பு நியாய அநியாயங்களுடன் மோதிக்கொள்ளும் சூழ்நிலை. ஆனால் அச்சூழ்நிலையில் இருவரும் ஒருவித அக்கறையுடன் வெளிப்படுத்திக்கொள்ளும் வார்த்தைகள் உணர்ச்சி வெளிப்பாடுகள் என்னை மிகவும் வியப்பிலாழ்த்தின.

***

எனக்கு இன்னமும் கூட ஒழுங்காய் கேஸ் பதிவு செய்யத் தெரியாது. மிகச் சரியாய் தவறுகளை செய்யக்கூடியவன் நான். இதை தன்னுடைய புத்திசாலித்தனத்தால் தெரிந்துகொண்ட என் மனைவி இது மாதிரியான காரியங்களை என்னைச் செய்யச் சொல்வதில்லை. ஒருமுறை இப்படித்தான் மனைவி ஊருக்குப் போயிருந்த சமயம் கேஸ் தீர்ந்துவிட்டது. போனில் எப்படி கேஸ் பதிவு செய்வது என்று செய்முறை விளக்கம் சொன்ன மனைவி சமையல் எரிவாயு வந்ததும் எனக்குச் சொல்லுங்க என்று போனை வைத்துவிட்டாள். நான் மனைவியின் செய்முறைகளை மிகச்சரியாய் பின்பற்றி கேஸ் பதிவு செய்துவிட்டேன். ஆனால் மூன்று நாட்கள் ஆகியும் சமையல் எரிவாயு வீட்டுக்கு வந்து சேரவில்லை. அலுவலகத்தில் பாதி நாள் விடுப்பு சொல்லிவிட்டு சமையல் எரிவாயு ஏஜென்சிக்கு சென்றேன். புகார் கொடுத்தேன். இன்னும் இரண்டு மணி நேரத்தில் சமையல் எரிவாயு வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் என்று அங்கே  இருப்பவர்கள் உறுதி சொன்னார்கள். நான் வீட்டுக்கு திரும்பி வந்தேன்.

மூன்று மணி நேரம் கழித்து சமையல் எரிவாயு வீட்டுக்கு வந்தது. வெற்றிக் களிப்புடன் வாங்கி வைத்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன். மனைவி ஊரில் இருந்து திரும்பி வந்து எரிவாயு சிலிண்டரை பொருத்த முயற்சித்த போதுதான் என் மகத்தான தவறை கண்டுபிடித்தார். எங்கள் வீட்டில் இருப்பது இண்டேன் நிறுவன எரிவாயு சிலிண்டர். ஆனால் நான் வாங்கி  வைத்திருந்ததோ பாரத் நிறுவன எரிவாயு சிலிண்டர். இந்த மகத்தான தவறுக்குப் பின் நான் இரண்டு விஷயங்களை தெரிந்துகொண்டேன். [முக்கியமில்லாத] ஒன்று – என் பெயருடன் அதே ஆங்கில முதல் எழுத்துடன் ஒரு சரவணன் எங்கள் அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் இருக்கிறார் என்பது. [முக்கியமான] இரண்டு – நேற்று வெளியான ஐரோப்பிய/ஆப்ரிக்க/அமெரிக்க திரைப்பட இயக்குநர்களின் பெயர்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளத் தெரியும் அதே அளவுக்கு வீட்டில் பயன்படும் எரிவாயு நிறுவனத்தின் பெயரையும் தெரிந்துகொண்டு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது.

மேற்சொன்ன சம்பவம் நடந்து இரண்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் எழுத்தாளர் அசோகமித்திரனை அவரது வீட்டுக்குச் சென்று  சந்தித்தேன். நண்பர் பிரகதீஷை பலமுறை நச்சரித்து அந்த சந்திப்பை நான் உறுதி செய்திருந்தேன். அசோகமித்திரனை சந்திக்கப் போகும்போது நான் அவரது தண்ணீர் நாவலை வாசித்திருக்கவில்லை. அவரது மணல், இன்ஸ்பெக்டர் செண்பகராமன் உள்ளிட்ட சில குறுநாவல்கள், அவரது நாவல்களான மானசரோவர், கரைந்த நிழல்கள் மற்றும் அவரது புகழ்பெற்ற பெரும்பாலான சிறுகதைகளை [புலிக்கலைஞன், பிரயாணம், காந்தி, காலமும் ஐந்து குழந்தைகளும், பறவை வேட்டை, ரிக்ஷா] நான் வாசித்திருந்தேன். அவரை சந்திக்கும்போது பிரயாணம் கதையைப் பற்றியும் புலிக்கலைஞன் பற்றியும் பேசவேண்டும் என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்திருந்தேன். அவரை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்த போது உண்மையில் எனக்கு பேச்சு வரவில்லை. பிரகதீஸ்தான் பேசிக்கொண்டிருந்தார். அசோகமித்திரன் சன்னமான மௌனத்துடன் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  கேட்டுக்கொண்டிருந்தார்.

நான் மிகுந்த பிரயத்தனப்பட்டு அவரது, ‘பிரயாணம்’ கதையைப் பற்றி பேச ஆரம்பித்தேன். கொஞ்சம் கூர்மையாக நான் பேசியதைக் கேட்ட அவர் என் பேச்சை, பாராட்டுகளையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், ”உங்கள் வீட்டில் சமையல் எரிவாயு தீர்ந்து போனால் யார் பதிவு செய்வார்கள்?” என்று கேட்டார். நான், ‘என் மனைவிதான் பதிவு செய்வார்’ என்று பதில் சொன்னேன். மெல்லிய அங்கதம் தொனிக்கும் குரலில் ”உங்க மனைவிக்கு நீங்க தாஜ்மஹால் எல்லாம் கட்ட வேண்டாம், நல்ல வீடு கட்டிக் கொடுங்க சரவணன்” என்று அவர் சொன்னார். அப்போது எனக்குள் எழுந்த திகைப்பை இப்போதும் நினைவில் கொள்ள முடிகிறது.

நம்மோடு வாழும் சக மனிதர்களின் உதவிகளை நாம் பொருட்படுத்துவதேயில்லை. சக மனிதர்கள் அது மனைவியாக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் நமக்குச் செய்யும் அன்றாட உதவிகளை அவர்கள் கடமை என்றோ அல்லது ஒருவித புகைமூட்டமான கர்வத்துடனோ நாம் கடந்து போய்விடுகிறோம். ஆனால் அது அப்படி அல்ல என்று அசோகமித்திரனுடான சந்திப்புக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது. நான் அவருடைய கதையைப் பற்றி பேசியபோது பதிலுக்கு அவர் ஏன் வீட்டின் அன்றாடங்கள், நடைமுறைகள் பற்றிப் பேசினார் என்பதை  மெல்ல மெல்ல பின்னால் புரிந்துகொண்டேன். அசோகமித்திரனை  அன்றாடங்களின் சாதாரணத்தன்மை மீது ஆன்மிக ஒளி பாய்ச்சிய எழுத்துக் கலைஞர் என்று நான் வகைப்படுத்த விரும்புகிறேன். அவருடைய சந்திப்புக்குப் பின்னர்தான் என் மண்டைக்கனமும் அகந்தையும் மெல்ல மெல்ல தேய ஆரம்பித்தது.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close