தொடர்கள்

காதலெனும் முடிவிலி – 1

ஷ்ருதி.ஆர்

கலித்தொகை குறுந்தொகை காலங்களில் இருந்து கலை இலக்கியங்களில் காதல் வளர்த்த ஆதி சமூகத்தை சேர்ந்தவர்கள் நாம்.

காலங்கள் எவ்வளவு கடந்தும் அன்பின் தூய்மையை ஆவணங்கள் செய்வதில் மனிதனுக்குள்ள ஆர்வமும் வேட்கையும் குறைந்தாய் இல்லை. நாகரீகங்கள் வளர்ந்த நாட்கள் தொட்டு காதலின் குணங்களும் வடிவங்களும் மாறவுமில்லை அதைக் கலைகளில் சொல்லிப் போற்ற நாம் தவறவுமில்லை. நேசமெனும் விதை  முளைக்க ஆரம்பித்து வளர்ந்து தழைத்து மரமாகி கனிகள் காய்க்கின்ற வரையிலான நுண்ணுணர்வுகள் ஆயிரம், அதை இசையிலும் மொழியிலும் பேரழகியலோடு பதிவு செய்தவர்களை பற்றி இதில் வரும் கட்டுரைகள் பேசும்.

பிறந்ததிலிருந்து தமிழ் பாடல்கள் கேட்காது ஒரு நாளும் கழிக்காத ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வில் அடைந்த இன்பத்தை எழுத்தில் வடிக்கச் சிறு ஆசைகொண்டு எழுத முயலும் தொடர்  இது. நுண்ணுணர்வுகளையும் ரசனைகளையும் நூறாண்டு கண்ட திரைப்பாடல்கள் எப்படி அணுகின என்பதையும் அதன் மேன்மைகளையும் இத்தொடரின் வழியே பார்ப்போம்.

  1. மையலில் மருகி நின்றேன் முழுவல் சுவை

காதல் எவ்வாறு தொடங்குகிறது என்பதற்கான விளக்கத்தை அறிவியலும் தத்துவவியல் சொல்ல முற்பட்டுத் தோற்று கொண்டே தான் இருக்கின்றன. சரி, எந்தப் புள்ளியில் தான் காதல் ஆரம்பமாகிறது?

எழுத்தாளர்  சுஜாதா அதற்கோர் விளக்கம் தருகிறார்.

“இயற்கை நம்மை ஒரு வகையான நபருக்கு மட்டும் தான் தயார்படுத்தி வைத்திருக்கிறதாம். உங்கள் ஒவ்வொருவர் மனத்திலும் ஆழத்திலும் ஒரு பிரத்யேக நாயகன் அல்லது  நாயகி இருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட காதல் வரைபடம். ‘தனிப்பட்ட முகம், சுருள் முடி, அழுத்தமான உதடு  தனிப்பட்ட…’. இந்த உருவம் உங்கள்  ஆரம்ப இளமைக் காலத்தில் உருவாகிறது. அந்த முகத்தைச் சந்திக்கும்போது ஒரு கை சொடக்கில் – காதல் “ – காதல் என்பது ….

எளிமையாக இருக்கிறது தானே? ஆனால் காதலை  உணர்பவர்களுக்கு இது யாவும் அவ்வளவு எளிதாகத் தெரிவதில்லை. ஒரு மென் சித்திரவதையிலேயே பேரின்பம் கண்டுகொண்டிருப்பார்கள். விடியும் விடியாத  காலைப் பொழுதுகளில் புதுவெள்ளம் பாயுகின்ற சிறிய ஓடைகளின் பக்கம் அமர்ந்திருக்கிறோம் அல்லவா? நிம்மதியும் மகிழ்ச்சியும் யோசனைகளும் கேள்விகளும் ஒரு சேர ஆட்கொண்டு ஆர்ப்பரிக்கும். சலனமில்லாமல் சுற்றி திரிந்த இளம் மனதில் பிரவாகமெடுக்கும் காதலுக்கும் இதே குணங்கள் உண்டு. காதலை ஆக்சிடோசின் ஹார்மோனின் வேலையென்று அறிவியல் சொன்னாலும்  மனித மனதினுள் முதலும் முற்றிலும் ஆரம்பமாகும் தீவிர உணர்வு காதலாக தான் இருக்க முடியும். இந்தத் துள்ளலை, கவலையை, மலரினும் மெல்லிய வலியை உணரும் நுட்பத்தை அதீத அழகியலோடு கையாண்டதில் வைரமுத்துவுக்கு பெரும்பங்கு உள்ளது.

முன்னே சொன்னது போல் காதல் ஹார்மோன் கோளாறு என்று விஞ்ஞானம் சொல்லுவதையே கவித்துவமாகியவர் கவிப்பேரரசு. ஆக்சிடோசின் ஒரு ஸ்ட்ரெஸ்- ரிலீவர் ஹார்மோன். பதட்டங்களையும் நிறைவையும் மகிழ்ச்சியையும் ஒருசேரத் தந்து கர்ப்பகாலப் பெண்களுக்கு குழந்தை பிறக்கும்போது சுரக்கும். மையலில் விழுவதும்  பிரசவிப்பது போல் தானே..

வைரம் இந்த பதற்றத்தை.. வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி– என்னவளே ( காதலன் ) என்று உருவகப்படுத்தி இருப்பார்.

புதுக்காதலன் காணும் கனவையும் அவன் காதலிக்கும் பெண்ணை பற்றி தோன்றும் இன்பங்களைப் பதிவு செய்ததில் இப்பாடலுக்கு நிகரான பாடல்கள் குறைவு. என்னவளே பாடலில் வரும் உன்னிகிருஷ்ணன் குரல் மிகவும் பேசப்பட்டாலும் இதில் வரும் புல்லாங்குழல் கலைஞர் கவருவதைப்போல் வேறு யாவரும் கவருவதில்லை. தான் கொண்ட காதலின் ஆழத்தைத் தொழுதலிலும் அவள் அதை ஏற்பாளா என்ற பரிதவிப்பையும் தன் குரலில் படரவிட்டுப் பாடி இருப்பார் உன்னி . “நான் வாழ்வதும்  விடைகொண்டு போவதும் உன் வார்த்தையில் உள்ளதடி” வரிகளின் உச்சங்களில் உருகாத காதலர்கள் காதலிப்பது வீண் என்பேன். இருவர் சேர்ந்து ஒருவராகும் முன்பு வரும் அன்பான தவிப்புகள் பேரழகு. பிரசவ நேரம் வந்து வலிக்காகக் காத்து கிடைக்கும் தாயின் தவிப்பையொத்த அழகு.

புதுக்காதல் முன்பில்லாத நேர்த்தியும் சிரத்தையும் நடத்தையில் தரவல்லது. கொள்கை தளிர்ப்புகளும் மன்னிக்கும்  குணங்களும் அன்புக்கும் காதலுக்கும் அதிகம். காதல் பகுத்தறிவு பேசுகிறவனையும் அடிமையாக்கி வதை செய்ய வல்லது. தன் சுகம் மறந்து இணையின் சுகத்தை பேணுவது காதலில் மட்டுமே சாத்தியம். மென் குணங்களையும் அழகியலையும் உணர்த்த வைரம் வேண்டுமெனில் தீவிரங்களையும் யதார்த்தங்களை மொழியில் கடத்த நா.முத்துக்குமார் வேண்டும். கண்களிருக்கும் காரணம் காதலி முகம் பார்க்க என்பார், மரண நேரத்தில் அவள் மடியின் ஓரத்தில் இடம் கிடைத்தால் இறந்தும் வாழ்வேன் என்பார். (ஒரு தேவதை – வாமனன்)

உயிர் உருக்கி ஒருத்தியை வேண்டி நிற்பதன் கிறக்கங்களை எளிய வரிகளில் சொல்லி இருப்பார். இவ்விரண்டு பாடல்களும் ஆணின் புதுக்காதலயே பேசிக்கொண்டிருப்பதால் அடுத்தொரு பெண்ணின் கண்களின் புகுந்த காதலைப் பாடலில் தேடினால் முன்னே வந்து நிற்பதும் வைரமுத்து தான்.

ஆணைப்போல் அப்பட்டமாக தன் உணர்வுகளை பெண் சொல்லுவதும் இல்லை அதைக் கேட்டு ஏற்பாரும் குறைவு. சமூக கட்டமைப்பு, பழங்கால கற்பிதங்கள், கற்புடைமை மடமைகளைத் தாண்டி இயற்கையாக உருவான மையலைப் பெண் ரகசியமாக தன் தோழிக்கு மட்டும் சொல்வதுண்டு. அதுவும் வாய்க்கப்பெறாத பேதைகளுக்கு இயற்கையும் சூரியனும் நிலவுமே தோழிகள். அவர்களிடம் அவள் பகிர ஆயிரம் கதைகள் இருக்கும். தான் உயிரற்ற பொருட்களோடு நடத்தும் உரையாடலை அக்கம் பக்கம் யாரும் பார்த்திராத வண்ணம் ரகசியமாகப் பேண வேண்டும். பிரளயங்களை குடுவைக்குள் அடக்கி வைத்திருப்பது போன்ற உணர்வு. இதைக் காற்றும் சூரியனும் நிலவும் அறியும் பாஷையில் சொல்லவேண்டுமெனில் அவர்களின் நண்பர்களைத் தானே வம்புக்கு உவமையாக இழுக்க வேண்டும்?

“மனசின் பள்ளம் தேடி புயல் மையம் கொண்டதென்ன எந்த நேரம் கரையைக் கடக்குமோ?
கடலில் அலைகள் போலே என் உடலில் அலைகள் தோன்றி பூமி சுற்றி கொந்தளிக்குமோ?”

வரிகளைப் போல (சின்ன நெஞ்சிலே – ஜெய் ராம்).

இயக்குநர் பஞ்சு அருணாசலத்தின் பாடலாசிரியர் அவதாரங்கள் அதிகம்  நமக்குத் தெரிய வாய்ப்பில்லை ஆனால் அவரெழுதிய அடி பெண்ணே பாடலின் வரிகள் அவரைப் போகிற போக்கில் ஒரு amature கவிஞரெனச் சொல்ல முடியாத அளவுக்கு உணர்ச்சிப் புதையல் .

“வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன
பூங்காற்றில் ஒரு ராகம் பொன் வண்டின் ரீங்காரம்
  பாடும் பாடல் என்ன”

தன் தேடலை உவமைகளால் நிரப்பி இயற்கையோடு கதைத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் மனம். சில பாடல்கள் கேட்டால் போதும் சரணடைய. சிலது அதற்கும் ஒருபடி மேல். உயிருக்கு நெருக்கமாக வரிகள் இசை காட்சி அமைப்பென்று எல்லாமும் அழகாய் அமையும். பாலு மஹேந்திராவின் கண்களால் காட்சிகளை காணாமல் விடுவதே பிழை. கவித்துவத்தை மொத்த உருவங்களாக இளையராஜா-மகேந்திரன்-பாலுமகேந்திரா கூட்டணியில் கிடைத்த அமிர்தம் – அடி பெண்ணே.

இந்தக் காதலின் முதல் அடி எடுத்து வைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு போலும். ஆண் தனது காதலியைப் புகழ்கிறான், வர்ணிக்கிறான், தொழுகிறேன். அவளின் பார்வைக்காக ஏங்குகிறான் ஸ்பரிசம் கிடைக்காமல் பிணி  கொண்டு வாடுகிறான். பெண் இப்படிச் செய்வதாக தெரிவதில்லை. தனக்கு ஏற்பட்ட புது உணர்வை கொண்டாடுகிறாள். அதை நெருக்கமானவர்களிடம் பேசி மகிழ்கிறாள். இனி வரப்போகும் வாழ்வில் இன்பங்கள் அதிகமென்ற எண்ணம் அவளைப் பாதுகாப்பாக உணரச்செய்கிறது. ஆக ஆண்  கொள்ளும் மையல் பெண்ணின்மீதும் பெண் கொள்ளும் மையல் காதல் தரும் பாதுகாப்புணர்ச்சிகளின் மீதும் தொடங்குகிறது. இவர்கள் காதல் உணர்ந்த போதே இவ்வளவு மாறுகிறார்களெனில் காதலை சொல்லவும், சொல்லி முடித்த பிறகும் என்  செய்வார்களோ . காண்போம்!

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. அருமையான படைப்புகள். மேலும் சிறப்படைய வாழ்த்து.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close