தொடர்கள்

காதலெனும் முடிவிலி – 5

ஷ்ருதி.ஆர்

உன் அழகினை பாட என் தமிழ்மொழி போதாது – வர்ணித்தல் கலை.

ஆண்டாளுக்கு கண்ணன் மேல் தீராக்காதல். தனது நாட்களில் கண்ணனை நிறைக்க அவள் பாடல்களில் அவனை வர்ணித்தாள். அவன் அங்கங்களை, அழகுகளை, அணிகலன்களை, வர்ணித்தாள். அவைகளை பாரிலுள்ள அற்புதங்களோடெல்லாம் ஒப்பிடச்செய்தாள். நிஜத்தில், காதல் சாதாரணனைக்கூடக் கலைஞனாக்கும்! தலைவன் தனக்கிருக்கும் வழமைகளில் அவனின் இணையின் சிங்காரங்களை வடிக்கத் துவங்குகிறான். அது சில நேரம் ஓவியமாகிறது, சில நேரம் சிலைகளாகிறது, சில நேரம் கவிதைகளாகிறது. காதலின் உன்மத்தம் நிலையில் பிழைகள் தெரியாது அழகை மட்டும் கொண்டாடி களித்தீர்த்துக் கொள்வர் காதலர். நேற்று வரை மிக இயல்பாய் கடந்த அவர்களின் அம்சங்கள் இன்று அழகின் உருவாய் மலரத் துவங்கும். நா.முத்துக்குமார் இம்மாற்றங்களை அழகாய் தொகுத்திருப்பார்.

”உன் நிர்வாணம் கூட அடி சாதாரணம் நேற்று

உன் காலக்கெண்டையின் மென்மை அது தீ மூட்டுதே இன்று”

(வயதே வாவா – துள்ளுவதோ இளமை )

புகழ்பெற்ற உளவியலாளர் சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud) இவ்வித கவர்ச்சியும் அது சார்ந்த வர்ணித்தல் அழகை schaulust எனும் மனப்போக்கு என்கிறார். இணையின் அங்கங்களை தனித் தனியே பார்த்து காமுறுதல், அவைகளைக் கொண்டாடுதல், ஆராதித்தால். சிக்மண்ட் கூற்றுப்படி அங்கங்களை வர்ணிப்பதில் பெண்களை விடவும் ஆண்களுக்கு அதிகம் பிடித்தம். அவனைப் பொறுத்த வரை அவள் தேகமென்பது அவன் வழிபடும் கோயில். அதைப் புனிதமாக பாவிக்கிறான். குறைகள் அவன் கண்களுக்குத் தெரிவதில்லை, அவளை விட இன்னுமோர் அழகைக் கண்டு இன்புற அவன் மனமும் விரும்புவதில்லை. அருங்காதல் அவன் தேடலை தீர்க்கிறது. இது போதும்! இவள் போதும் என சரணாகதியின் உச்சத்தை அடையும் தருணம் தனது மனம் திறக்கிறான். அவளைப் பாருங்கள், அவளின் அங்கங்களை, பாருங்கள் அசைவுகளைப் பாருங்கள், என நம்மிடம் காண்பித்து கர்வம் கொண்டாடுகிறான். இது வெறும் காதல் பிதற்றல் அல்லவா? இணையின் அழகை வர்ணிப்பதை எல்லாம், கலையில் சேர்க்க வேண்டுமா? ஆம் தானே? குலாவும் முதற்பொழுதில் அழகாய் இருக்கிறாய் என்ற ஒற்றைச் சொல் போதுமானதாக இருக்கிறது. பின்பிருக்கும் நாட்களை அதே போதையில் கழிக்க நாயகன் அவளை இயற்கையோடு வர்ணிக்கத் துவங்குகிறான். தான் கண்ட ஆச்சர்யங்களோடும் பிரம்மாண்டங்களோடும் அவளைப் பொருத்தி பார்க்கிறான். இனியொருத்தி உன்னைப் போல் என்னை ஆட்கொண்டு கலித்தீர்த்தல் இயலாது கண்ணம்மா என்று அவள் பாதம் பணிகிறான்.

”உலகத்திலேயே மிகப்பெரும் பூவும் நீயடி

நதிகளிலேயே சின்னச்சிறு நதியும் நீயடி”

– பா.விஜய்  (அனார்கலி – கண்களால் கைது செய் )

அவளும் இளகியவளல்ல. இவன் கற்பனைகளை மொத்தமாய் சுவீகரிப்பவளல்ல. வெற்று உவமைகளை புறந்தள்ளுகிறாள். தேர்ந்த உருவகம் தரும் மொழிகளை மட்டும் எடுத்து சூடிக்கொள்கிறாள். உன் பொய்களை ரசிக்கிறேனென அவன் முகத்தில் அறைகிறாள். காதலி அறைவதையும் அவன் கர்வம் குறையாமல் பரிசென ஏற்கிறான். பதிலுக்கு அவள் அவன் பணிகின்ற அழகை வர்ணிக்கிறாள். அவன் இயல்பான  கர்ஜிக்கும் குரலுக்கும், தன்னிடம் மட்டும் கனிந்த காதல் மொழிக்கும் உள்ள  வித்தியாசங்களைச்  சொல்லி  தன்பால் அவன் கொண்ட  மையலைப்  பாராட்டுகிறாள்.  குணங்களை வர்ணித்தல் அவ்வளவு எளிதில்லை.  இளங்காதலை  போல்  ஈர்ப்பின்பால் மட்டும் முளைத்த நேசத்திற்கு அது  மணலால் சிலை வடிப்பது போல்  சுலபத்தில்  இயலாத காரியம். உள்ளூர அவர்களைப் புரிந்து தெளிந்து குற்றங்களை மன்னித்து இயலாமைகளை ஏற்கத் துணிந்து  சிறுமைகளைக்  கடந்தும் நேசத்தில் திளைப்பது. பெண்ணுக்கு இது இயல்பாகவே வருகிறது. அவள் அவனுள் ஊடுருவுகிறாள்அவனின் ஆழத்தில் உள்ள குணங்களை கற்கிறாள். அவனின் நிஜத்தை ஆராய்ந்து இனியவனாக்குகிறாள். அவளுக்கு அவனை ஆட்கொள்ள வேண்டும். ஆட்கொள்ளுதலென்பது அதிகாரம் கொண்டு இணங்க வைப்பதன்று. பேரன்புச் சங்கலியால் கட்டிப்போடுதல்!  யாருக்கும் தெரியாத அவன் ஆழ்மன குரூரங்களைக் கூட அவளிடம் திறந்து காட்டச் செய்தல்!  வெளிப்படுத்த முடியாத குழப்பங்களையும்   வேதனைகளையும் கூட அவளிடம் ஒப்பிக்கச் செய்தல்!  மூர்க்கம் தலைக்கேறி கத்தியுடன் அவன் நின்றால் கூட, ‘இங்கே வா‘ என்ற  ஒற்றை  மந்திரக்  குரலுக்கு அவனை அடிபணியச் செய்தல்! அவளுக்கு அவனை அவ்வளவு தெரியும் என்பதே பெரிய செருக்கு. எல்லோர் கைகளுக்கும் சென்றுவிடும் குழந்தையை விட தாய்மடி நீங்கா குழந்தைமேல் ஒரு பிடிப்பு தாய்க்கு அதிகம் இருப்பதுபோன்ற அன்பின் தனிப்பெருமிதமது.

”கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான்

காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்”

வைரமுத்து ( வான் வருவான் – காற்று வெளியிடை )

இப்படி உள்ளே புகுந்து ரகசியங்களை அறிதலென்பது  ஆணுக்குச் சுலபமன்று. அவனுக்கு அது அவ்வளவு எளிதில் வாய்க்கப்பெறாத குணம். காரணம் அவன் மனதைப் போல் பெண்ணின் மனது ஒரே ஒரு பூட்டு பூட்டிய இருட்டறையில்லை. பல நூறு படிகள் உள்ள  ஆழ்கிணறு.  உள்ளே சென்றால் கூட முடிவை எட்ட இயலாது. ஏன்,  எளிதாக வெளிவர கூட இயலாது. ஆகையால் ஆண் அதுபோன்ற சிக்கலுக்குள் சிக்காமல் தப்பிக்க அவளது புற அழகைப் பாராட்டுகிறான்.

”இளையவள் இடையொரு நூலகம்

படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்”

வாலி ( ரோஜா – காதலர் தினம் )

சில நேரம் வழிபடுதல்களும் பல நேரம் ஆராதனைகளும்  நடக்கும்.

”உளிகொண்டு தீட்டாது உண்டான சிற்பம்

உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்”

கங்கை அமரன்  ( கீதம் சங்கீதம் – கொக்கரக்கோ )

இதையெல்லாம் ஆண் தெரிந்தேதான் செய்கிறான் இல்லையாஇயற்கையாகவே பெண்ணுக்கு பேசப் பிடிக்கும். மொழி ஆளுமை அவளுக்கு அதிகம். வர்ணனைகள் கவித்துவங்கள் அழகியல்களின் மொத்த உருவகம் அவள். அவைகளைக் கொண்டு அவளைக் கவருவது அவனுக்கு எளிதென தெரிந்திருக்கிறது தானே? அவள் குரலை, குழலை, இடையை, நடையை, சிரிப்பை, துஞ்சலை, கொஞ்சலை அனைத்தையும் கவிதையாய் வடிப்பதன் காரணம் அது தானே? அவனுக்குத் தான் அவள் எவ்வளவு பவித்திரமான தெரிய வேண்டும் இப்படிக் கொண்டாட?! அவனுக்குத் தான் அவள் எவ்வளவு அழகாகத் தெரிய வேண்டும் இப்படிச் சரணடைய?!  அவனுக்குத்தான் அவளை எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும் இப்படி அவள் உன்னதங்களை வெளிக் கொணர?!

”தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்”

வைரமுத்து  (அன்பே அன்பே – ஜீன்ஸ் )

வர்ணித்தல் கலையென்பது வெறும் சொல்லின் இன்பமென்று உரைத்தல் பிழை. கேட்பதில் உள்ள இன்பம் பார்பதை விடவும் அதிகம். குரல்கள் வர்ணிக்க மூளை அதை உணர்ந்து கற்பனை வடிவம் தரும் போதை அலாதி. தீண்டலை யாசிக்காத மாமுனியும் கேட்டல் சுகத்தில் மயங்குவான். உற்றவன் வாழ்த்த மேகம் போல் நின்றவள் கூட மடியூறி மழை பொழிவாள்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close