தொடர்கள்

காதலெனும் முடிவிலி -3

ஷ்ருதி.ஆர்

  1. காயங்கள் ஆற்றும் தலைக் கோதி தேற்றும் – அரவணைத்தல் கலை

பழங்கால ஜப்பானிய தத்துவம் ஒன்றில் உடைந்த பீங்கான் பானைகளை ஒட்டவைக்க தங்கம் அல்லது வெள்ளியை பயன்படுத்துவார்களாம். தான் கடந்து வந்த வலிகளை மறைத்து வாழ்தல், மறந்து வாழ்தல் வாழவேயன்று, மாறாக அதையும் சுவீகரித்து மேம்பட்ட மனிதனாய் ஒருவன் உருப்பெற வேண்டும் என்பது அவர்களின் தத்துவ விளக்கம். புன்னகைகளை மட்டும் சுமந்து வாழும் உயிரினம் பூமியில் இல்லை. அடிகளையும் வலிகளையும் ஏமாற்றங்களையும் துரோகங்களையும் கடந்தே இவ்வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் சிலர் தானே மீழ்வர் சிலர் மீட்கப்படுவர். சில துர்பாக்கியவான்கள் இரண்டும் கிடைக்காது இருட்டில் உழல்வர்.

கடந்த கால வடுக்களை தாங்கி நிற்கும் ஒருவனை மீட்டெடுக்க பெரும் மன  தைரியமும் பேரன்பும் வேண்டும். காயத்தளும்புகளை விரல்களால் வருடிவிட பெரும்பொறுமை தேவை .

காதலில் பெரிய சிரத்தை இல்லாமலே பொறுப்புணர்ச்சியும் தாய்மையும் தானே வந்தடையும். முன்பில்லாத அக்கறையும் மென்னுணர்வும் அழகே நம்முள் பூத்திருக்கும். உடைந்திருப்பவர்களை மீட்டெடுத்து உள்ளங்கைகளில் கோர்த்து அழகு பார்க்கும் மனிதர்கள் வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

அழ தோன்றும் போது ஒரு தோளும் பித்தம் கொள்ளும் போது ஒரு மடியும் கிடைப்பதில் தான் காதலின் தேவை ஒளிந்திருக்கிறது.

இது போலான மீட்டெடுக்கும் காதலை தீயை போல் எரிபவர்களால் மட்டுமே பேண முடியும் என்கிறார் உலக புகழ்பெற்ற எழுத்தாளர் ஆஸ்டென். உற்றவனின் ஒவ்வொரு சதை துணுக்குகளும் தனதென்கிறாள் பிரோன்டீ. அவனது வேதனைகளும் வலியும் அவனை துன்புறுத்துவதைப்போலவே தன்னையும் இம்சிக்கும் என தனது “ஜேன் ஏர்” நாவலில் சொல்கிறார்.

காலங்களும் நிலப்பரப்புகளை மாற்றம் கண்டென்னை? காதல், நாகரீகம் தொடாத இடத்தில கூட பவித்திரமாகவே பிரவேசிக்கிறது.

அரவணைப்பென்பது அடை  மழையில் நனைந்து வாடும் ஒருவனுக்கு தரும் உஷ்ணம் கொண்ட அணைப்பு. தகிக்கும் காதலனை கூட விரலால் வருடி குளிர்படுத்தும் நுட்பம். காதலென்றில்லை, அன்பின் அத்தனை வடிவங்களிலும் அரவணைத்தல் கலை தான் உச்ச உபசரிப்பு.

நேற்றுவரை தோழியாய் உடனிருந்த சகி திடீரென மனப்பிறழ்வுக் கொண்டு தவிக்கையில் காதலன் அவளை தன் உள்ளங்கையில் வார்த்தெடுத்து பாதுகாக்கும் தருணம் கொண்ட பாடல் வாலியின் கனா காணும் கண்கள் மெல்ல (அக்னி சாட்சி). வெறித்துப்பார்க்கும் அவள் விழிகளை சாந்தப்படுத்தும் நாயகனின் பிராயர்த்தனங்கள் வார்த்தைகள் மிகாது வர்ணிக்கப்பட்டிருக்கும். எதிர்காலமென்று ஒன்று இருக்கிறது, அது உன்னோடு நான் வாழும் நற்காதல் காலமாக இருக்குமென்பதை வாலியின்

“கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்

விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்

வருங்காலம் இன்பம் என்று

நிகழ்காலம் கூறும் கண்ணே” வரிகள் உருவகம் செய்து நம்பிக்கையூட்டும். வாலியிடம் என்றும் மிகைப்படுத்தாத இயல்பான காதலை உணரலாம். தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயவள்” என்று அவன் மடியில் உறைந்திருப்பவளை வர்ணிப்பார்.

தன் இணையவளை காதல் கொண்டு காத்து பத்திரப்படுத்தும் காதலனை கண்டு கலங்கும் காதலியின் உள்ளம் இயலாமையில் சிக்கி சிதறும். அவளை அவன் சிதறாமல் கைகளுக்குள் அடைத்துவைக்கும் நொடி  நெகிழ்ந்து பாடும் வரிகளை “ஏபிசீடி படத்தில் சரவண சுப்பையா எழுதி இருப்பார். தானே உருவாக்கி எழுதி இயக்கிய பாத்திரம் என்பதாலோ என்னமோ  

அவளின் சந்தோஷ ராகங்களில் சோகம் கலந்த மென் உணர்வாகவே எழுதி இருப்பார் .

“வெள்ளத்தில் நீந்திய நான் நான் நான்

வறண்ட போது மூழ்கினேன்.

இருட்டில் ஓடிய நான் நான் நான்

விளக்கில் இடறி வீழ்கிறேன்.

உனது மடியில் வாழ்கிறேன் என பிடிப்பில்லாத சருகாய் காற்றில் அலைபாய்ந்து உதிர்ந்த இலையொன்று ஒரு புத்தகத்தில் பாதுகாப்பாய் சரணடைதலை சொல்லி இருப்பார்.

காயங்களை கண்ட உள்ளம் நம்பிக்கை இழக்கும். இனியும் எவரையும் நம்ப வேண்டாம் என்ற தன்னையே ஒரு கூட்டிற்குள் ஒலித்துக்கொள்ளும். ஒரு ஆதூர காதலைத்தவிர வேறு யாராலும் உடைக்க முடியாத கூட்டின் முதல் விரிசலில் எழும் பாடல் இது. பலநாள் மனிதர் வசிக்காத அந்த கூட்டிற்குள் எழும் அதிசய மனித ஒளியை

“ஊமை நெஞ்சின் ஊர்வலத்தில் உனது குரலில் கோடி ராகம்” என்று உயிர் பெற வைத்திருப்பார் இயக்குனர்.

பெண்ணின் தேடல் அன்பிலும் பாதுகாப்புணர்விலும் முடியும். தன்னை உயர்வாக உணர வைப்பவன் கைவசம் அவள் தன்னை ஒப்புவிக்கிறாள். அதை உணர்ந்தவன் அவளை பொக்கிஷமென பாதுகாக்கிறான். தன் சிறகுகளால் அவளை ஒளித்துக்கொள்கிறான் . ஆணின் தேடல் கொஞ்சமே விசித்திரமானது. எவளிடம் அவனது நுண்ணுணர்வுகள் தோற்கிறதோ அங்கே வீழ்கிறான். தன்னை புரிந்து கொள்வாள் என நம்பும் ஒருத்தியிடம் மட்டும் கண்ணீர் வடிக்க யத்தனிக்கிறான். காதல் நட்பெனவெல்லாம் பிரிக்காது நேசமென்ற ஒற்றை வார்த்தையில் “நெஞ்சோடு கலந்திடு” (காதல் கொண்டேன்)  பாடலை பார்ப்பது முதிர்வு. தன் துயரங்களை கொட்டித் தீர்த்து தேம்பிக் கொண்டிருக்கும் தோழனை தோளில் அணைக்கும் தோழி. செல்வாவின் பெண்கள் அனைவருக்கும் இந்த உயர் சிரத்தை இருக்கும். உடைந்து விழுந்த பொருட்களில் கலையழகு பார்க்கும் உறுதியான பெண்கள் . நா முத்துக்குமார் அவளது பார்வையை அவ்வாறே எழுதுகிறார்

“கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட

பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்

புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்

இளவேனில் வரை நான் இருக்கின்றேன்.”

பாடலின் ஆரம்ப காட்சியில் நாயகன் சிறுவயதில் இழந்த தோழியின் கண்களை நாயகி கண்களில் பார்ப்பார். என்றோ தொலைத்த இன்பங்களை மீட்டு கொண்டு வந்த தேவதையின் சாயலை இவள் கண்களில் பார்ப்பதை செல்வராகவன் காட்சியாக்கி இருப்பார். தேவதையின் உருவம் எப்படி இருக்கும்? தனிமையின் கூடு தளர்த்தி பதட்டங்களில் இருந்து விடுவித்து அரவணைக்கும் உயிரின் உருவமாக இருக்காதா ?

“என்கிட்டே இது போல யாரும் அன்பு காட்டினதில்ல” என்று ஒருவர் நம்மை பார்த்து ஒரு சொட்டு கண்ணீர் விட மோட்சம் எட்டி விட மாட்டோமா? “நீயும் இல்லனா நான் லாம் இந்நேரம் இப்படி சந்தோஷமா வாழ்ந்திருக்க மாட்டேன்” என்கிற நொடியில் இறைத்துகளாகி இந்த பிரபஞ்ச பெருவெளியில் கலந்து இறப்பிலியாக ஆக மாட்டோமா?

பூமியின் மூலை முடுக்கெங்கும் ஒவ்வொரு நொடியும் தேவதைகள் பிறந்த வண்ணமே இருக்கிறார்கள். காட்டில் தொலைந்த நமக்கு கிடைத்த ஊர் வழி சொல்லும் ஒற்றையடி பாதையாய் நம்பிக்கையும் துணையுமூட்ட. என்றென்றும் அவர்களை நாம் நினைத்துப் பார்த்து சிலிர்த்து கொண்டாட, தேவதைகள் பிறந்து நம்மை அரவணைத்த வண்ணமே தான் இருக்கிறார்கள்.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close