தொடர்கள்

கடலும் மனிதனும் 3 – உலகை மாற்றிய ஒற்றை மீன்

சு.நாராயணி

 

1992ம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி. கனடாவின் தேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறார். பத்திரிக்கையாளர்கள் கூடிய அந்த அறைக்கு வெளியில் கூச்சல், குழப்பம், அடிதடி. பூட்டியிருக்கிற அறையின் கதவை கோபத்துடன் உடைத்துத் திறக்க முயற்சி செய்கிறார்கள் மீனவர்கள். அமைச்சரின் ஒற்றை அறிவிப்பால் முப்பத்து ஒன்பதாயிரம் பேருக்கு வேலை போனது. “கனடாவின் மீன்பிடித் தொழிலின் மிகப்பெரிய தொழிற்சாலை அன்று ஒன்று மூடப்பட்டது” என்று விவரித்தனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

1775ம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஒரு பிரிட்டிஷ் காலனியைச் சேர்ந்த அனைவரும் புரட்சியில் ஈடுபடுகிறார்கள். அமெரிக்கப் புரட்சியின் ஆரம்பம் இது, புரட்சியின் முடிவில் அமெரிக்கா என்கிற நாடு பிறந்தது. “உலகளாவிய பிரிட்டிஷ் ஆதிக்கம் அப்போதிருந்தே சறுக்க ஆரம்பித்துவிட்டது” என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

 

செப்டம்பர் 5, 1972. ஐஸ்லாந்தைச் சேர்ந்த ரோந்துக் கப்பல் ஐஸ்லாந்துக் கடலில் ஒரு புதிய இழுமீன்பிடிக் கப்பலைப் பார்க்கிறது. மீன்பிடிக்கப்பலின் கேப்டன் தனது கப்பல் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க மறுக்கிறார், மிரட்டப்படுகிறார். இறுதியில் தனது கப்பலில் “ரூல் பிரிட்டானியா” என்ற பிரிட்டிஷ் தேசபக்திப் பாடலை ஒலிக்க விடுகிறார். ரோந்துக்கப்பல் உடனே தனது வலை அறுக்கும் இயந்திரத்தை செயல்படுத்துகிறது. இழுவை வலை அறுக்கப்படுகிறது. கோபப்பட்ட மீன்பிடிக் கப்பலின் பணியாளர்கள் கரித்துண்டுகள், கழிவுகள், பற்றியெரியும் கோடாலி என்று கையில் கிடைத்ததை எல்லாம் ஐஸ்லாந்து ரோந்து கப்பலை நோக்கி வீசுகிறார்கள்.

பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு நிலப்பரப்புகளில், உலக சரித்திரத்தை மாற்றி எழுதிய இந்த நிகழ்வுகளுக்குப் பொதுவான ஒரு விஷயம் உண்டு :  இவை அனைத்துமே காட் (Cod) என்கிற ஒற்றை மீன் ஆரம்பித்து வைத்த நிகழ்வுகள்.

“முடிவற்ற எண்ணிக்கையில் காட் மீன்கள்

வலைகளையும்

பசித்திருக்கு ஐரோப்பியர்களின் வயிறுகளையும்

நிரப்பும் வெள்ளை இறைச்சி கொண்ட மீன்.

இந்த மீன் அழியாது என்று நினைத்தார்கள்”

என்று தனது காட் பற்றிய கவிதையைத் தொடங்குகிறார் கனடாவைச் சேர்ந்த செரில் சாவாஜியோ. “கடலின் தங்கமான காட் மீன், வயிற்றையும் சட்டைப்பைகளையும் நிரப்பும்” என்று எழுதுகிறார்.

 

காடிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த காட் மீனில் 200க்கும் மேற்பட்ட இனங்கள் உண்டு என்றாலும் அதில் மிகவும் புகழ்பெற்றது அட்லாண்டிக் காட் (Atlantic Cod) என்ற ஒரு இனம்தான்.  ஆறு அடி வரை வளரக்கூடிய இந்த மீன் 100 கிலோ எடை வரை போகும். பல மீன்கள் கடலில் உண்டு என்றாலும் காட் மீனின் தனிச்சிறப்பு இதன் இறைச்சி. அதிகப் புரதச்சத்து (80%), மிகக் குறைந்த கொழுப்பு இருக்கும் வெள்ளை நிற இறைச்சி . இதன் வேதியியல் அமைப்பினால் இந்த மீனை எளிதில் பதப்படுத்த முடிந்தது. சும்மா காயவைத்தாலே மாதக்கணக்கில் கெட்டுப் போகாமல் இருந்தது. குளிர்சாதன வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் இந்த பதப்படுத்தப்பட்ட மீன் பயணங்களின் பிரதான உணவாக மாறியது.

நார்வே நாட்டின் புகழ்பெற்ற வைக்கிங் என்ற இனத்தாருக்கு மிகவும் பரிச்சயமான மீன் இது. எட்டாம் நூற்றாண்டு தொடங்கி பதினொன்றாம் நூற்றாண்டு வரை இவர்கள் கொடிகட்டிப் பறந்தார்கள். பல நாட்கள் பயணம் செய்து பல்வேறு தூரதேசங்களிலும் வைகிங் மக்கள் தங்கள் வெற்றிக்கொடியை நாட்டியதற்கு இந்த பதப்படுத்தப்பட்ட காட் உணவுதான் காரணம். காட் மீனை மட்டுமே உணவாக உட்கொண்டு பல நாடுகளைக் கைப்பற்றினார்கள்!

அப்போது வைட்டமின் டி குறைபாட்டால் உலங்கெங்கிலும் நோய்கள் பரவியிருந்த காலம். தீவிர வைட்டமின் டி குறைபாட்டால் எலும்பு நோய்கள் வந்து பலர் முடங்கிப்போனார்கள். ஆனால் வைகிங்குகளை இந்த நோய்கள் ஒன்றும் செய்யவில்லை! எளிதில் பதப்படுத்த முடிகிறது என்பதற்காக இவர்கள் போகுமிடமெல்லாம் எடுத்துச்சென்ற காட் மீனில் இயற்கையாகவே இருந்த வைட்டமின் டி இவர்களைப் பாதுகாத்தது!

சில வருடங்கள் கழித்து உப்பு சேர்த்து கருவாடு செய்யும் முறை கண்டறியப்பட்டது. அது பதப்படுத்தும் முறையை இன்னும் எளிதாக்கியது. காட் கருவாடு பல நாடுகளில் முக்கிய உணவாக ஆனது, ஏற்றுமதி செய்யப்பட்டது.

 அமெரிக்கா பிறக்கிறது!

கரீபியன் தீவுகளில் கரும்புத் தோட்டம் என்பது ஒரு பெரிய வணிகமாக உயர்ந்திருந்த நேரம். வேலை செய்ய நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள். “குறைந்த சம்பளம், இடுப்பொடியும் வேலை” என்ற உடன் காலனியாதிக்க முதலாளிகளுக்கு முதலில் நினைவு வருபவர்கள் அடிமைகள்தானே? பெரிய கப்பல்களில் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகள் கொண்டுவரப்பட்டார்கள்.

இத்தனை பேருக்கும் உணவு வழங்க வேண்டுமென்றால் அதற்காகத் தனியாக விவசாயம் செய்ய வேண்டும்…. அரைக்காணி நிலம் கிடைத்தால் கூட அதில் கரும்பு பயிரிடும் பேராசை கொண்ட முதலாளிகளுக்கு தனி உணவு விவசாயம் பெரிய விரயமாகத் தோன்றியது. எளிதில் கிடைக்கிற காட் மீன்களைக் கருவாடுகளாக்கி அனுப்புமாறு சக காலனியாதிக்கவாதிகளுக்கு அழைப்பு விடுத்தார்கள். நியூ இங்கிலாந்து என்ற அமெரிக்க காலனியாதிக்க மாகாணம் அப்போது காட் கருவாடு ஏற்றுமதியில் புகழ்பெற்று விளங்கியது.

பொதுவாக ஏற்றுமதிக்குப் போகிற பொருட்களின் தரம் மிக உயர்ந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட தரக்கட்டுப்பாடுகளுக்குள் வராத எதையும் ஏற்றுமதி செய்ய முடியாது. உப்பு அதிகம்/உப்பு கம்மி/சரியாகக் காயவில்லை என்று பல காரணங்களுக்காக ஏற்றுமதி செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த் கருவாடுகள் கரும்புத் தோட்ட அடிமைகளுக்கு உணவாக அனுப்பப்பட்டன. ஏற்றுமதி ஆகாமல் வீணாய்ப் போகும் பொருளைத் தள்ளிவிடுவதற்கு ஒரு இடம் என்று தொடங்கி சில நாட்களிலேயே தரக்குறைவான காட் கருவாட்டுக்கென்றே ஒரு தனி வணிகம் உருவானது.

காட் கருவாடுகளை ஏற்றிவரும் கப்பல்கள் கரீபியன் தீவுகளின் சர்க்கரை, வெல்லப்பாகு ஆகியவற்றை வாங்கி ஏற்றிக்கொண்டு திரும்பப் புறப்பட்டன. ஒரு வணிகப் போக்குவரத்து உருவானது. சில நாட்களிலேயே கரீபியனில் இருக்கும் பிரெஞ்சு முதலாளிகள் குறைந்த விலைக்கு நிறைய சர்க்கரை தருகிறார்கள் என்று நியூ இங்கிலாந்து காலனிவாசிகள் புரிந்துகொண்டார்கள். அதிகமான கருவாடுகளை பிரெஞ்சுக் காலனிகளுக்கே தரத் தொடங்கினார்கள்.

பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு இது பிடிக்கவில்லை. வெல்லப்பாகு சட்டம் (1733), சர்க்கரை சட்டம் (1764) போன்ற பல சட்டங்களால் பிரெஞ்சு சர்க்கரையின் வணிகத்தைத் தடுக்க முயற்சி செய்தார்கள். “எங்கிருந்தோ வந்த நீங்கள் எங்கள் வணிகத்தில் ஏன் குறுக்கிடுகிறீர்கள்?” என்று நியூ இங்கிலாந்து மக்கள் எதிர்க்குரல் எழுப்பினார்கள். பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணித்தார்கள். இருபக்க உறவில் விரிசல் விழுந்தது.

1775ல் காலனியாதிக்கத்தின்கீழ் நியூ இங்கிலாந்தில் வாழ்ந்த மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக போர் செய்யப்போவதாக அறிவித்தார்கள். அமெரிக்கப்புரட்சி தொடங்கியது. தொடர்ந்த சண்டைகளில் காட் மீன் வணிகத்தில் உள்ளவர்கள் உத்வேகத்துடன் பங்கெடுத்துக்கொண்டார்கள். மீனவர்கள் தங்களது மீன்பிடிக்கப்பல்களை போர்க்கப்பல்களாக மாற்றினார்கள். கருவாடு கொண்டு செல்லும் கடல் பாதைகளை காட்மீன் வணிகர்கள் ராணுவப் பாதைகளாக மாற்றிப் போரிட்டார்கள்.  தொடர்ந்து நடந்த புரட்சி ஒருகட்டத்தில் வெற்றி பெற்றது. அமெரிக்கா பிறந்தது.

அந்தக் காலத்தில் நியூ இங்கிலாந்து மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்ததுதான் தற்போதைய அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணம். இதன் தலைநகரமான பாஸ்டனில் உள்ள சட்டசபைக் கட்டிடத்தில் இந்த பெரிய வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக 4.11 அடி நீளத்தில் ஒரு மர காட் மீன் சிற்பம் தொங்கவிடப்பட்டிருக்கிறது!

ஒரு பொருளாதாரத்தின் அழிவு!

1492ல் கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் என்ற இடத்தில் வந்து இறங்குகிறார் ஜான் கேபாட். வலைகள் எதுவுமின்றி கூடைகளைக் கடலுக்குள் இறக்கினாலே மாட்டுகிற அளவுக்குக் காட் மீன்கள் கூட்டமாக இருப்பதைப் பார்க்கிறார். செய்தி பரவுகிறது. ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்தும் அங்கு வந்து பலர் குடியேறுகிறார்கள். மீன்பிடித்தொழில் அந்த இடத்தின் பொருளாதாரத்தையே உயர்த்த ஆரம்பித்தது.

காட் தொழில் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து செழிப்புடன் நடந்தது. 1951ல் மிகப்பெரிய தொழிற்சாலைகளைப் போன்ற அளவில் இழுவை வலை கொண்ட மீன்பிடிக் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தக் கப்பல்கள் மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையில் மீன்களைப் பிடித்தன. சாதாரணக் கப்பல்கள் 100 வருடங்களில் எத்தனை மீன்களைப் பிடிக்குமோ, இழுவைக் கப்பல்கள் அந்த அளவை 15 வருடங்களிலேயே பிடித்துத் தீர்த்தன.  1969களில் மீனவர்கள் “காட் மீன்களின் அளவு குறைகிறது” என்று அரசாங்கத்திடம் புகார் அளித்தார்கள். அது கண்டுகொள்ளப்படவில்லை.

1972ல் வெளிநாட்டுக் கப்பல்கள் கனடாவின் எல்லைக்குள் உள்ள கடற்பகுதிகளில் காட் மீனைப் பிடிப்பது தடை செய்யப்பட்டது. ஆனாலும் உள்நாட்டு ராட்சத இழுவைக் கப்பல்கள் கடலைத் துடைத்து மீன்களைப் பிடித்தன. கனடா நாட்டு மீன் பிடி எல்லை இதுதான் என்று மாற்றி மாற்றி பலமுறை எல்லைகள் திருத்தி அமைக்கப்பட்டன. உள்நாட்டு மீன்பிடித்தொழில் தொடர்ந்தது.

1990ல் காட் மீன்கள் முழு வீழ்ச்சி அடைந்தன. மீன்களின் அளவு பெருமளவில் குறைந்தது. “மீன் பிடிப்பதை நிறுத்தாவிட்டால் காட் மீனின் அடுத்த தலைமுறை வருவதற்குக் கூடப் போதுமான மீன்கள் இல்லை” என்று அறிவியலாளர்கள் எச்சரித்தார்கள்.

1992ம் ஆண்டு கனடாவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜான் கிராஸ்பி “இனிமேல் காட் தொழில் கிடையாது” என்று தடை விதித்தார். மீனவர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. நேரடியாக 19,000 பேர் வேலை இழந்தார்கள், காட் சார்ந்த தொழில் நின்றதால் மேலும் 20,000 பேருக்கு வேலை போனது. மீனவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகள் கொஞ்சம் தரப்பட்டன என்றாலும் நியூபவுண்ட்லேண்டின் பொருளாதாரமே வீழ்ச்சியடைந்தது. இன்றுவரை கனடாவின் அதிகபட்ச வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள மாகாணங்களில் இதுவும் ஒன்று.

இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

சிறிய படகுகளைக் கொண்ட மீனவர்கள், வெளிநாட்டுக் கப்பல்கள், கனடாவின் இழுவைக் கப்பல்கள் என்று மூன்று பிரிவினரால் இந்த காட் மீன் பிடிக்கப்பட்டது.

இவற்றுள் சிறு/குறு மீனவர்கள் தேவைக்கு மட்டுமே மீன் பிடித்தார்கள், இன்னும் சொல்லப்போனால் அதிகமாக மீன் பிடித்தால் “பேராசைக்காரன்” என்று ஊர்க்காரர்களே தூற்றும் நிலை இருந்தது. வெளிநாட்டுக் கப்பல்களும் துரத்தப்பட்டபின் கனடாவின் இழுவைப் படகுகள் அதிக அளவில் மீன் பிடித்தது ஒரு முக்கியக் காரணம். குறைந்த தரவுகளை வைத்துக் கொண்டு மீன்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்ட அறிவியலாளர்கள், “இந்த வருடத்துக்குள் இத்தனை மீன்களைப் பிடிக்க வேண்டும்” என்று உச்சபட்ச இலக்கை அதிகமாக்கிய அரசு அதிகாரிகள், மீன் குறைகிறது என்று மீனவர்கள் புலம்பியபோது செவிசாய்க்காத அரசாங்கம், சில சூழல் மாறுபாடுகள் என்று பல காரணங்கள் உண்டு. மோசமான வள மேலாண்மையால் ஒரு பொருளாதாரமே வீழ்ந்த சோகக் கதை இது. “இதற்கு கனடா மக்களான நாம் தான் காரணம். மற்ற நாடுகள் இதுபோன்ற பிரச்சனைகளை வேறு விதமாகக் கையாண்டு வெற்றி பெற்றார்கள்” என்று சொல்கிறது காட் மீனைப் பற்றிய கனடா அரசின் அறிக்கை ஒன்று.

காட் போர்:

பொருளாதார வீழ்ச்சி, காலனியாதிக்கத்தால் அடிமைபட்ட மக்களிடையே நிகழந்த மன எழுச்சியும் போராட்டமும் என்றெல்லாம் சின்னச் சின்ன பிரச்சனைகளை ஏற்படுத்திய காட் மீன் தனது விஸ்வரூபத்தைக் காட்டியது ஐஸ்லாந்துக் கடலில்தான். அட்லாண்டிக் கடலின் சிறிய நாடு ஐஸ்லாந்து. இங்கே மீன்பிடித்தொழில்தான் வருமானத்துக்கு அடிப்படை. “கடலின் வெள்ளைத் தங்கம்” என்று காட் மீனைக் கொண்டாடுகிறார்கள்.

1950களில் ஐஸ்லாந்துக்குப் பக்கத்திலிருந்த பிரிட்டன் கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்லாந்தின் எல்லைகளுக்குள் காட் மீன்களைப் பிடிக்கத் தொடங்கியது. பிரிட்டிஷ் கப்பல்கள் வரக்கூடாது என்று ஐஸ்லாந்து தடைவிதிக்க, ஐஸ்லாந்து மீன்களை இறக்குமதி செய்யபோவதில்லை என்று பிரிட்டன் அறிவித்தது. சோவியத் யூனியன் “நாங்க இருக்கோம்” என்றபடி ஐஸ்லாந்தின் காட் மீன்களை வாங்க முன்வந்தது. சோவியத் யூனியன் கதைக்குள் நுழைந்த உடனே அமெரிக்காவுக்கும் மூக்கு வியர்க்க ஆரம்பிக்க “நாங்களும் மீன் வாங்குவோம்” என்று அமெரிக்கா அறிவித்தது. ஐரோப்பாவின் மற்ற நாடுகளும் ஐஸ்லாந்துக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ ஒரு நிலைப்பாடு எடுக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன.

1950 முதல் 1970 வரை நடந்த நான்கு காட் போர்களின் ஆரம்பப் புள்ளி இதுதான். நான்கு போர்களிலும் ஐஸ்லாந்து தொடர் வெற்றி பெற்றது. ஒவ்வொரு போரின் முடிவிலும் ஐஸ்லாந்து தனது கடல் எல்லையை விரித்துக்கொண்டே போனது. நான்காவது போரின் முடிவில் தரையிலிருந்து 200 மைல் தூரம் வரை உள்நாட்டுக் கடல் எல்லை என்று ஐஸ்லாந்து அறிவித்தது. பிறகு அது உலக நாடுகளுக்கே பொது விதியாக மாறியது! இன்றுவரை இந்த விதி தொடர்கிறது!

போர் என்று சொல்லப்பட்டாலும் இது பெரும்பாலும் “யார் பெரியவன்?” என்கிற போட்டியாகத்தான் இருந்தது. பிரிட்டனின் சாதாரண மீன்பிடிக்கப்பல்களுக்குப் பாதுகாவலர்களாக  37 ராணுவக் கப்பல்கள் அனுப்பப்பட்டன…. கோடிக்கணக்கில் பிரிட்டனுக்குப் பண விரயம் ஏற்பட்டது. மீன்பிடி வலைகளை அறுக்கும் இயந்திரத்தால் பல விலை உயர்ந்த பிரிட்டிஷ் வலைகள் அறுக்கப்பட்டன. போரின்போது நடந்த தற்செயல் விபத்தால் மொத்தமே இரண்டு பேர் தான் இறந்தார்கள்.

இப்போது பிரெக்சிட் பிரச்சனையால் பிரிட்டன் அரசாங்கம் மீண்டும் தனது கடல் எல்லைகளை, மீன்பிடி எல்லைகளை மறு சீரமைப்பு செய்யும் யோசனையில் இருக்கிறதாம்! மீண்டும் காட் போர் வரலாம் என்கிறார்கள்!

உண்மையில் சொல்லப்போனால் கால இயந்திரத்தில் ஏறிப்போய் காட் மீன் என்ற ஒரு மீனை மட்டும் வரலாற்றிலிருந்து தூக்கிவிட்டால் வேறு ஒரு புது உலகம்தான் கிடைக்கும்! “உலக வரலாற்றையே மாற்றிய மீன் இது!” என்று எழுதுகிறார் பத்திரிகையாளர்  மார்க் கர்லான்ஸ்கி.

மனித வரலாற்றையே மாற்றிய மீன் உண்டு என்றால், மனிதர்களால் மாற்றப்பட்ட வரலாறு உடைய ஒரு மீனும் இருக்கும்தானே! அது என்ன மீன்?

  

தொடரும்…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. மனிதர்களால் மாற்றப்பட்ட வரலாறு உடைய ஒரு மீனும் இருக்கும்தானே
    I need this article please. Send the link to my email netbabji@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close