தொடர்கள்
Trending

கடலும் மனிதனும்- 1

சு.நாராயணி

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையின் கடற்கரையை நினைத்துப் பாருங்களேன். கடலை சாட்சியாக வைத்து வாழ்க்கைக்கான திட்டங்களை விவாதிப்பவர்கள், மணல் வீடுகட்டி விளையாடும் குழந்தைகள், அலைகளை வெறித்தபடி கவிதை சமைத்துக்கொண்டிருப்பவர்கள்,கடல் பார்க்க வந்தவர்களிடம் சுண்டலுக்கோ ஜோசியத்துக்கோ பேரம் பேசிக்கொண்டிருப்பவர்கள், கொஞ்ச தூரத்தில் ஒரு படகைக் கடலுக்குள் தள்ளிக்கொண்டிருக்கிற நாலு மீனவர்கள், “ஐயோ கடல்னா பயம்” என்றபடி பாதத்தின் நுனியை மட்டும் அலைகளில் நனைப்பவர்கள், யாரும் கவனிக்காத ஒரு மூலையில் கடலில் திறந்துவிடப்படுகிற கழிவுநீர்க்குழாய், தொடுவானத்துக்கு அருகே நிழலாய்த் தெரியும் ஒரு பெரிய கப்பல்…..


கடலுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு என்னவாக இருக்கிறது என்பதை இந்த ஒற்றைக் காட்சியில் விளக்கிவிடலாம். கடலுக்கு முன் நம்மில் நிறைய பேர் குழந்தையாகிவிடுகிறோம். கடலும் கடல்சார்ந்த இடங்களும் பலருக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. சிலருக்குக் கடல் தீராத வியப்பையோ அச்சத்தையோ தந்தபடியே இருக்கிறது. சிலருக்கு அது பொழுதுபோக்கு மட்டுமே. பெரு நிறுவனங்களுக்கோ கடல் என்று நினைத்தாலே “வளம்” என்கிற ஒற்றைச் சொல்தான் நினைவுக்கு வரும். எண்களும் கணக்குகளுமாக அவர்கள் லாபத்தை நோக்கியே கடலுக்குள் பயணிக்கிறார்கள். சிலருக்குக் கடலே ஒரு பெரிய குப்பைத்தொட்டிதான்.

கடல் என்பதைக் குறிக்க மட்டுமே 60 சொற்கள் இருக்கிற தமிழ் மரபு தொடங்கி “கடல்நீர் ஏன் உப்புக் கரிக்கிறது?” என்பதை விளக்க உலகெங்கிலும் இருக்கும் நாட்டார் கதைகள் வரை எல்லா மரபுகளோடும் கடல் பின்னிப் பிணைந்திருக்கிறது. கடல்கோள் பற்றிய நடுங்கும் நினைவுகள் நம் எல்லோருடைய மூளைகளிலும் ஏதோ ஒரு விதத்தில் படிந்திருக்கிறது. மீன் சாப்பிடுகிறார்களோ இல்லையோ, படகு ஒன்றிலிருந்து வலை இறக்கப்படும்போது எல்லாரும் ஆர்வத்துடன் அங்கே குவிகிறார்கள்.

ஒரு சிறிய கப்பலைக் கட்டிக்கொண்டு மனிதன் முதன்முதலில் கடலில் இறங்கிப் பயணிக்கத் தொடங்கியதில்தான் புதிய தேசங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, வணிகம் வளர்ந்தது, மனிதர்கள் எல்லைகளை விரிக்கத் தொடங்கினார்கள்.பெரும் கடற்போர்களைப் பற்றிய கதைகள் விவரிக்க இயலாத சுவாரஸ்யத்தைக் கொண்டவை. பெரிய ஒரு கடல்விலங்கோடு மனிதன் போராடுவதைப் பற்றிய சாகசக் கதைகளையும் ஒற்றைத் தீவில் மாட்டிக்கொண்டு தேங்காய்களை மட்டும் சாப்பிட்டு உயிர்பிழைத்தவன் பற்றிய புனைவுகளையும் எத்தனை படித்திருக்கிறோம்?! கடல் பூதங்கள், கடற்கன்னிகள் என்று பல மிகுபுனைவுகள்!

நிலத்தில் கோடுகள் போட்டு எல்லைகளை வகுத்த மனித இனம் கடலிலும் கோடுகள் போடுவதற்காக புதிய புதிய சர்வதேச சட்டங்களை இன்றுவரை இயற்றியபடியே இருக்கிறது. கோடிகளில் செலவு செய்து உலக நாடுகளைச் சேர்நத நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் மணிக்கணக்கில் விவாதிப்பார்கள். “இது உள்நாட்டு எல்லை, இது சர்வதேசக் கடல்” என்று வரைபடங்களில் கோடு கிழிப்பார்கள். ஐந்தடி நீளமுள்ள ஒரு சின்ன சூரைமீன் ஒரே நாளில் எந்த ஆர்ப்பாட்டமுமின்றி இந்த எல்லைகளையெல்லாம் நீந்திக் கடந்துபோய் நம் கோடுகளை அழித்துவிடும்.

மீனவர்கள் பாடுகிற அம்பா பாட்டு, “என்னைக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிற ஓதங்களின் அழைப்புக்காக நான் மீண்டும் கடலுக்குச் செல்லவேண்டும், தட்டிக்கழிக்கவே முடியாத தெளிவான அழைப்பு அது” என்று கடல் ஜுரத்தில் எழுதிய ஜான் மேசிஃபீல்டின் வரிகள், எத்தனையோ நெய்தல் இலக்கியங்கள், அலைகளின் அழகை சிறைவைக்க முயலும் ஓவியங்கள் என்று கடலுக்கு மேல் இருக்கிற தீராத மயக்கத்தை எப்படியாவது எங்காவது இறக்கி வைக்க முயல்கிறோம். புதிய புதிய தொழில்நுட்பங்களின் உதவியால் ஆழ்கடலில் என்னதான் இருக்கிறது என்று முழுக்கத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்.

சமீப காலங்களில் இந்த உறவு கொஞ்சம் சிதறத் தொடங்கிவிட்டது என்றே சொல்லவேண்டும். “கடற்கரையில் இருக்கிற சங்கைக் காதில் வைத்துக் கேட்டுப்பாருங்களேன், உங்கள் சுயநலங்களை சுட்டிக்காட்டி வசைபாடும் கடலின் குரல் கேட்கும்” என்று மீம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.பூமிப்பந்தின் பரப்பளவில் 70 சதவிகிதம் இருக்கிற கடல் தீராத நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கிறது.

புவியின் தட்பவெப்பநிலை, நீர்சுழற்சி, நாம் சுவாசிக்கும் பெரும்பங்கு ஆக்சிஜன் எல்லாவற்றுக்கும் கடல்தான் அடிப்படை. “பூமியில் இருக்கிற நீலம் இல்லாவிட்டால் பூமியில் இருக்கிற பச்சை இல்லை” என்று எச்சரிக்கிறார் அறிவியலாளர் சில்வியா ஏர்ல். உயிர்வலைகள் எவ்வளவு எளிதில் அறுபடக்கூடியவை என்பதை உணராமல் மனிதர்களின் பேராசையால் எடுக்கப்பட்ட பல முடிவுகளின் விளைவுகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பார்த்து வியந்துபோகிற, பார்த்து பயப்படுகிற ஒன்றைக்கூட காலுக்குக் கீழே வைத்து நசுக்குவது மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

இவை எல்லாமே கடல் கதைகள்தான். கடலுக்கும் நமக்குமான உறவு சிக்கலானது, அழகானதும்கூட. நிலத்தில் நின்றுகொண்டு கடலைப் பார்ப்பதாகட்டும், கடலுக்குள்ளிருந்து நிலத்தைப் பார்ப்பதாகட்டும், நிச்சயம் நம் வரலாறு கடலோடு இணைந்ததுதான். கடல்வாழ் உயிரினங்களையும் கடலின் சூழலியலையும் முன்வைத்து, மனிதர்களுக்கும் கடலுக்கும் இருக்கிற நுண்பிணைப்பை அறிந்துகொள்ளப்போகிறோம்.

பண்டைய கடல் பயணிகளின் கப்பலைக் கவிழ்க்கும் கடல் பூதம், அழிந்துவிட்டது என்று நினைத்தால் ஃபீனிக்ஸ் பறவையாகத் திரும்ப வந்த மீன், சிறுபிள்ளைகளின் கனவுகளில்கூடப் புகுந்து எல்லோரையும் அலறவிட்ட கடல் மிருகங்களின் புனைவும் நிஜமும், அரசர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மட்டுமே சாப்பிடலாம் என்று அந்தஸ்தின் அடையாளமாக இருந்த கடல் உணவு, சர்வதேச உறவில் விரிசல்கள் ஏற்படுத்திய ஒற்றை மீன் என்று விதவிதமான கடல் உயிரினங்களை முன்வைத்துக் கடலை அணுப்போகிறோம். அறிவியலாளர்கள், மீனவர்கள், அரசர்கள், உலக நாடுகளின் அதிபர்கள், அருங்காட்சியகப் பணியாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கடற்பயணிகள் என்று பலருக்கும் இந்தக் கதைகளில் பங்கு உண்டு.

பயணமோ, கதையோ…. ஏதோ ஒரு இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பார்கள். நம் பயணம் நார்வேயிலிருந்து தொடங்குகிறது.

 

தொடரும்…

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close