தொடர்கள்
Trending

கடலும் மனிதனும்:8- ஒளியின் மொழி- நாராயணி சுப்ரமணியன்

சிறு சிறு ஒளித் துகள்களால் கடல் ஜொலித்துக்கொண்டிருந்தது. பால் நிறத்திலான ஒளி. அந்தக் கடல்நீரை எடுத்து நாங்கள் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டோம், அது மின்னியது

பரிணாமவியலின் கோட்பாடுகளை விவரித்த சார்லஸ் டார்வின், தன் அறிவியல் ஆராய்ச்சிக்காக பீகிள் கப்பலில் பயணித்தபோது எழுதிய முதல் குறிப்பு இது. 1832ல் எழுதப்பட்ட இந்தக் குறிப்பிலிருந்து ஆரம்பித்துப் பல ஆண்டுகள் இந்த ஒளியின் பரிணாமத்தைத் தேடித் துரத்தியிருக்கிறார் டார்வின். பல்வேறு விலங்குகளில் இந்த ஒளிர்வுத் தன்மை தனித்தனியாக, கிட்டத்தட்ட 40 முறை பரிணாம வளர்ச்சி அடைந்ததைக் கண்டுபிடித்து வியந்துபோனார்!

2019 ஆகஸ்ட் மாதம் சென்னையின் திருவான்மியூர் கடற்கரையில் கடல்நீர் நீல நிறத்தில் ஒளிர்ந்தது நினைவிருக்கலாம். சமூக வலைதளங்கள் முழுக்க இந்த நீல ஒளி பரவியது, பல்வேறு விவாதங்கள், ஆச்சரியப் பகிர்தல்கள் தொடர்ந்தன. சமீபத்தில் 23.4.2020ல் கலிஃபோர்னியாவின் கடற்கரைகளில் இந்த நீல நிற ஒளிக்குள் புகுந்து செல்லும் ஓங்கில்களை (டால்ஃபின்) புகைப்படக்காரர் பேட்ரிக் கோய்னே கண்டு வியந்தார், அதுவும் பெருமளவில் பேசப்பட்டது.

Milky seas என்று ஒரு நிகழ்வு உண்டுநடுக்கடலில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பரப்பளவில் கடலே பாற்கடல் போல ஜொலிக்கும் ஆச்சரியம் இது. 1915ல் தொடங்கி இன்று வரை 235 நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இது பண்டைய மாலுமிகளுக்கு அச்சத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது. சமீபத்தில் இது செயற்கைக் கோள்களாலும் படம்பிடிக்கப்பட்டது

திருவான்மியூர் கடற்கரை

கடற்கடவுள் பொசைடனின் ஆற்றல் வெளிவருவதால்தான் இதுபோன்று கடல் ஒளிர்கிறது என்று நம்பினார்கள் பண்டைய கிரேக்க மாலுமிகள். கடல் ஒளிர்வதை தூரத்திலிருந்து பார்த்த கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் நிலத்துக்கு வந்துவிட்டோம் என்று நம்பிக் கப்பலை வேகமாக செலுத்தினாராம்!

முதல் உலகப் போரின்போது இதுபோன்ற ஒரு ஒளிரும் கடலின் அலைகளுக்கு நடுவே ஒரு ஜெர்மானியக் கப்பல் கவிழ்க்கப்பட்டது. தூரத்திலிருந்து கப்பலைக் கண்காணித்த ராணுவ அதிகாரிகள் கப்பல் கவிழ்க்கப்பட்ட நிகழ்வை இந்த ஒளியின் உதவியாலேயே கண்டுபிடித்தார்கள்.

எல்லா விளக்குகளும் செயலிழந்தபின் இதுபோன்ற கடல் ஒளியின்மூலம் விபத்திலிருந்து தப்பித்த விமானங்களும் உண்டு!

இது ஒரு பக்கம் என்றால், உயிரினங்கள் ஏன் ஒளிர்கின்றன என்ற அறிவியல் தெரிவதற்கு முன்பே நாம் இந்த ஒளியை நமது தேவைகளுக்காகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.ஒளிரும் பூஞ்சைக்காளான்களை விளக்குபோல் பயன்படுத்தி,இரவு நேரக் காடுகளில் வழி கண்டுபிடித்தார்கள் இந்தோனேசியப் பழங்குடிகள்

Honk Kong

கடல் மின்மினிகள்என்று ஒரு இனம் உண்டு, கணுக்காலிகள் இனத்தைச் சேர்ந்த இந்தப் பூச்சிகள் மிகச்சிறிய அளவில் ஒளிரக்கூடியவை. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய ராணுவ வீரர்கள் இவற்றைக் கையில் பிடித்துக்கொண்டுதான் வரைபடங்களைப் படிப்பார்களாம். அருகில் இருக்கும் ஒரு தாளைப் படிக்கும் அளவுக்கு வெளிச்சம் கிடைக்கும், அதே நேரத்தில் எதிரிகளாலும் இதுபோன்ற சிறிய வெளிச்சத்தை வைத்து இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாது!

அது பாதுகாப்பு விளக்கு கண்டுபிடிக்கப்படாத காலம். நெருப்பு இருக்கும் விளக்கை நேரடியாக நிலக்கரிச் சுரங்கங்களுக்குள் எடுத்துச் சென்றால் வெடித்துவிடும், உயிருக்கே ஆபத்து. பூமிக்கடியில் இருக்கும் இருட்டுக்கு வழிகாட்டவும் விளக்கு வேண்டுமில்லையா? சுரங்கத் தொழிலாளர்கள் மின்மினிகளை ஒரு கண்ணாடிக் குடுவையில் போட்டு எடுத்துச் சென்றார்கள். சில நேரங்களில் ஒளிரும் நுண்ணுயிரிகளை மீன் தோலில் தடவி அதையும் விளக்காகப் பயன்படுத்தினார்கள்

நிலத்தைப் பொறுத்தவரையில் மின்மினிகள், பூஞ்சைகள் போன்ற ஒரு சில உயிரிகள் மட்டுமே இயற்கையாக ஒளிர்கின்றன. ஆனால் கடலில் இந்த ஒளிர்விலங்குகளின் எண்ணிக்கை அதிகம். அதிலும் ஆழ்கடலில்  75% விலங்குகளுக்கு இதுபோன்ற ஒளிரும் தன்மை உண்டு.

லூசிஃபெரின், லூசிஃபெரேஸ் என்ற இரு வேதிப் பொருட்களின் வேதி வினையால் இயற்கையாகவே ஒளி உருவாகிறது. இது  உயிரொளிர்வு, உயிர் ஒளிர்தல் (Bioluminescence) என்று அழைக்கப்படுகிறது. கடலில், நிலத்தில் என எல்லா உயிரொளிர்வுக்கும் இந்த லூசிஃபெரின் வேதிவினைதான் அடிப்படை. சூழலைப் பொறுத்து நீலம், பச்சை, மஞ்சள், வெளிர் நிறம் என்று பல நிறங்களில் ஒளி இருக்கலாம். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, இணை தேட, வேட்டை விலங்குகளைக் குழப்ப, இரை பிடிக்க என்று பல காரணங்களுக்காக இந்த ஒளி பயன்படுத்தப்படுகிறது.

Noctiluca Scintillans

சரி…. கடல் ஒளிர்வும் இதுபோன்ற ஒரு நிகழ்வுதானா? அதன் அறிவியல் அடிப்படை என்ன?

கண்ணுக்குத் தெரியாத, கோடிக்கணக்கான மின்மினிகளைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவை எல்லாமே மிகச்சிறிய மங்கலான ஒளியை ஒரே நேரத்தில் வெளியிடுகின்றன என்று வைத்துக்கொள்ளுங்களேன்…. எல்லா ஒளியும் ஒருசேர வெளிப்படும்போது என்ன ஆகும்? கடலே ஜொலிக்கும், இல்லையா?!

கடல் ஒளிர்வி என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு நுண் பாசி உண்டு. Noctiluca scintillans என்பது இதன் அறிவியல் பெயர். Scintillans என்றால்மிளிரக் கூடியஎன்று பொருள். கோடிக்கணக்கான கடல் ஒளிர்விகள் சில நேரம் ஒன்றுகூடும். மிகச்சிறிய உயிரிகள் என்பதால் இந்த ஒளிதான் அவற்றுக்குப் பாதுகாப்பு. கடல்நீரைக் கையால் அளையும்போதோ குறுக்கே வேறு மீன்களும் விலங்குகளும் வரும்போதோ இவை அச்சம் கொள்ளும், தப்பித்துக்கொள்ள ஒளியைத் துப்பும். இவற்றை வேட்டையாட வரும் விலங்குகள், இந்த ஒளியைப் பார்த்து பயந்து ஓடிவிடும். வீட்டில் யாராவது நுழைந்துவிட்டால் நாம் உடனே விளக்கைப் போடுவது போன்றதுதான் இதுவும். ஒளிரும் பாக்டீரியாக்கள், வேறு நுண்பாசி இனங்களும் சில நேரம் இதுபோன்று கடல் ஒளிர்வுகளை ஏற்படுத்தும்.

லைஃப் ஆஃப் பை திரைப்படத்தில் இது மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். திடீரென்று கண்விழிக்கும் கதாநாயகன் நீல நிறத்தில் கடல் ஜொலிப்பதைப் பார்த்தவுடன், கையால் கடல்நீரைக் கலைக்க கலைக்க ஒளி அதிகமாகும், கையின் வடிவம் ஒளியால் சூழப்பட்டதுபோலத் தெரியும். இந்த ஒளிக்குள் மீன்களும் திமிங்கிலங்களும் நீந்தும்போது அவையும் ஜொலிக்கும்!

Tasmania

ஒரு குடுவையில் இந்த நுண்ணுயிரிகளை சேகரித்து வைத்துக் கொண்டு, இருட்டான ஆய்வகங்களில் ஒரு சின்ன ஸ்பூனால் இந்த திரவத்தைக் கலக்கினால், ஒளி மின்னி மின்னி மறையும். அற்புதமான அனுபவம் அதுஎன்பார்கள் கடல் ஆராய்ச்சியாளர்கள். மீனவர்களுக்கு இது ஒரு வழக்கமான நிகழ்வுதான். “வண்டல் காலம்என்று அழைக்கப்படும் ஆனி/ஆடி மாதங்களில் இது அதிகமாக நிகழலாம் என்கிறார்கள் மீனவர்கள். இந்த ஒளிர்தல் நிகழ்வு வட தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் “கமருஎன்றும் தென் தமிழகத்தில்கவர்என்றும் அழைக்கப்படுகிறது.

இதுபோன்ற உயிரொளிர்தலுக்காகவே புகழ்பெற்ற கடற்கரைகள் உண்டு. போர்ட்டோ ரிக்கோ, சில பசிபிக் தீவுகள், மாலத்தீவுகள் போன்ற இடங்களில் உள்ள சில கடற்கரைகளில் இதைக் காணவே சுற்றுலாப்பயணிகள் கூட்டமாக வருவார்கள்

ஒளிரும் நுண்பாசிகள் சில நேரங்களில் சூழலியல் சிக்கல்களையும் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறதா, கடல் மாசுபாட்டுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்பதையும் அறிவியலாளர்கள் ஆராய்ந்துவருகிறார்கள்.

போர்ட்டோ ரிக்கோ

ஆழ்கடல் விலங்குகளில் இன்னும் எத்தனை ஒளிர்விலங்குகள் உண்டு, அவை ஒளிர்வதன் அடிப்படைகள் என்ன என்பது இன்னுமே முழுவதுமாகத் தெரியவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆழ்கடலுக்குச் செல்வதிலும் அங்கே இருக்கும் விலங்குகளின் மாதிரிகளை சேகரிப்பதிலும் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் இதற்கு ஒரு முக்கியமான காரணம். விண்வெளியில் இருக்கும் வேற்று கிரகங்களை அறிந்த அளவுக்குக் கூட ஆழ்கடலை நாம் தெரிந்துகொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனம்

சூரியன் பகல் பொழுது முழுக்க தனது ஒளியைக் கடலின் சிறு பூதங்களுக்குள் இறக்கி வைக்கிறது. அந்த ஒளியை உறிஞ்சிக்கொண்ட எண்ணிலடங்காத பூதங்கள் இரவில் கோபமாக ஒளிர்கின்றனஎன்று 1688ல் கை டாச்சார்ட் எழுதினார். அப்போது இந்த ஒளியின்மீது அச்சமும் ஆச்சரியமும் மட்டுமே இருந்தது. இன்றைக்கோ இந்த உயிரொளிர்தல் மருத்துவ ஆராய்ச்சியில் கேன்சர் செல்களின் இயல்பைப் புரிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. உயிரொளியின்மீதான வியப்பிலிருந்து அதைப் புரிந்துகொள்ளும் இடத்திற்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.

இயற்கை ஒளிஎன்பது மனிதனுக்குப் புதிதல்ல, சூரிய ஒளியால் நடக்கும் ஒளிச்சேர்க்கை இல்லாவிட்டால் விவசாயமே சாத்தியமில்லை. ஆனால்இருட்டில் ஒளிர்வதுஎன்பதும்தானாகவே உள்ளிருந்து ஒளியை உருவாக்குவதுஎன்பதும் மனிதனுக்குத் தீராத ஆச்சரியம்தான். கடவுளர்களின் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் இருக்கிறது என்று பல மதங்கள் சொல்கின்றன. “அவருக்குள்ளிருந்து ஒளி வந்ததுஎன்று கடவுளர்ளும் தேவதைகளும் ஜின்களும் வர்ணிக்கப்படுகிறார்கள். இன்றும் ஒளிக்குள்ளிருந்து வெளிவந்து கைத்தட்டல் அள்ளுகிறார்கள் கதாநாயகர்கள். பகல் முழுக்க இருக்கும் சூரிய வெளிச்சத்திலும் ஆயிரம் வாட்ஸ் விளக்குகளிலும் இல்லாத ஒரு கவர்ச்சி, சின்னஞ்சிறிய மின்மினிப் பூச்சியில் இருக்கத்தான் செய்கிறது. “மனிதனால் என்றைக்கும் இப்படி ஒளிர முடியாது, அதுவே இந்த ஆச்சரியத்துக்குக் காரணம்என்பது உளவியலாளர்களின் கருத்து.

வியட்நாம்

தானாகவே ஒளிர்கின்ற கடலைப் பார்க்கும் நவீன மனிதன், நெருப்பின் முதல் பொறியைக் கண்டுபிடித்த கற்கால மனிதனைப் போலவே ஆச்சரியப்படுகிறான், சிலிர்க்கிறான்.பூமியின் மிகவும் பழைய, மிகவும் பரவலான ஒரு மொழி என்று இந்த உயிரொளிர்வைச் சொல்லலாம். பல உயிரினங்கள் ஒளியின் மூலமாகத்தான் பேசிக்கொள்கின்றன. ஆனால் மனிதனுக்கு அந்த ஒளியின் மொழி இன்னும் கைவரவேயில்லை, அதனால் அந்த வசீகரமும் குறைவதேயில்லை

மனிதனுக்குப் புரியாத மொழியில் பேசிக்கொள்ளும் விலங்குகள் ஒருபக்கம் என்றால், “இருக்கு, ஆனா இல்லைஎன்று நம்மிடமே கண்ணாமூச்சி ஆடிய மீனைப் பற்றித் தெரியுமா?

தொடரும்….

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close