தொடர்கள்

காரிருள் நிலவு  04 – தமயந்தி

தொடர் | வாசகசாலை

மெல்ல மெல்ல  கண்களுள் வெந்நீரின் வெப்பம் பரவி சிறு திவலைகளாய் இளகியது. கண்களுள்  ஒரு பாலைவனத்தின் வெயில் அலைந்து அதை உடனுக்குடன் காய வைத்தபடியே இருந்தது. மெல்ல எழுந்து பக்கத்திலிருந்த டைரியை எடுத்தேன். கைகள் தன்னிச்சையாய் ஒரு படம் வரைந்தது. அந்தப் படம் என் அம்மா மாதிரியான உருவைக் கொண்டிருந்தது.

தன்னையறியாமல் என் கைகள் அந்த எண்ணம் தோன்றியவுடேனேயே அப்படத்தின் மேல் கோடுகள் கிழித்தன. அந்தப் படம் கோடுகளால் நிரப்பப்பட்டு பின் நடுப்பக்கத்தில் கிழிந்து அதன் மையப் பகுதியில் தாளில் ஒரு ஓட்டை விழுந்திருந்தது. அதன் வழியாக அடுத்தப் பக்கத்தின் நிர்மல்யமான வெள்ளை நிறம் புலப்பட்டது. நான் அந்த ஓட்டை வழியே தெரிந்த வெள்ளை நிறத்தையே வெறித்தேன்.

அப்போது பதினைந்து வயதிருக்கும். பேருந்தைப் பிடிக்க நின்றிருந்தோம். ஆண்கள் பின்னாலும் பெண்கள் முன்னாலும் ஏறும் வழக்கம்தான் டவுண் பஸ்ஸுகளில் உண்டு. அம்மா என்ன பாவாடை சட்டை வாங்கிக் கொடுக்கிறாளோ அதைத்தான் நான் அணிய வேண்டும். அதுதான் பாசம் என்று சொல்லி வளர்க்கப்பட்டேன்.

முன்னால் ஏறும் பகுதியில் நிறைய கூட்டம் இருந்தது. என்ன செய்யவென தெரியாமல் நான் முண்டியடிக்க, அம்மா என் பின்னால் நகர்ந்தபடி இருந்தாள். எங்கிருந்து ஒருவன் வந்தான் என்று தெரியவில்லை. அவன் முகம் அந்த அரை இருளில் சரியாகத் தெரியவுமில்லை. பின்னாலிருந்து வந்து இடித்து தள்ளுவது போல் என்னை வலப்புறமாகத் தள்ளி அவன் என் மார்பில் கை வைத்து நகர்ந்தான். அத்தொடுதல் மிகப் பெரிய அசெளகர்யத்தை , அவமானத்தை என் உடல் நரம்புகள் எனக்குத் தெரிவித்தபடி இருந்தன. நான் அவனை என் புறக்கையால் தள்ளி “நாயே ..இடிக்கிறியா?” என்று கத்தினேன். ஆனால் அம்மா ஒரு நிமிடம் தாமதிக்காமல் என்னை அறைந்தாள்.  நாங்கள் அன்று ஜங்ஷன் போகவில்லை.

மாறாக வீட்டுக்கு வந்ததும் என்னை முழங்காலிட வைத்தாள். அன்று இரவு எனக்கு உணவு வழங்கவில்லை. நான் தேம்பி அழுதபடி முழங்காலிட்டுக் கொண்டிருந்ததை அப்பா பார்த்துக் கடந்து போனார். அவர் மனதிலிருக்கும் வார்த்தை வாயில் வந்து விடாதா என்று நினைத்தேன். அந்த நேரம் ராஜன் அவன் அம்மா சமைத்த எதையாவது கொண்டு வந்து “ நீ ஏன் முழங்கால்ல நிக்கற? எந்திரி” என்று சொல்ல மாட்டானா  என்று தோன்றியது. ஆனால் அவன் ஒரு போதும் வந்ததில்லை.

ஜெரால்ட் வெந்நீர் ஊற்றி அந்த புண் காயும் வரைக்கும் அவன் எதுவும் செய்ததில்லை. அதன் பிறகு எழுதி வெளியான கவிதை அடுத்த பிரச்னையை உருவாக்கியது. அது இடதுசாரிகளை விமர்சிக்கும் கவிதை என்பதால் எதிர்வினைகள் அதிகம் வந்தது. அப்பா ஆசிரியர் சங்கத்தில் இருந்தார். சங்கத் தலைவர் அவரை அழைத்ததாக அப்பா சொன்னார்.

“ அவனுக சூடா இருக்கானுக”

“இருக்கட்டும்” என்றேன். என் கையில் இன்னும் லேசாக மூடாமல் இருந்த புண்ணின் ஓரத்தில் சேலை நுனி பிடித்து இழுத்தது. என்னை அறியாமல் ஸ்ஸ்ஸ் என்றேன். அப்பா ஒரு நொடி நாற்காலியிலிருந்து எழுந்து பின் தன்னாலே கீழே உட்கார்ந்தார்.  அவர் முகம் ஒரு நொடி ஒளிர்ந்தது. அவர் ஆசிரிய சங்கத்தில் இருந்தார்.  சங்கத்து செயலாளர் அப்பாவிடம் ஃபோன் பேசியிருந்தார்.

“உங்க பொண்ண இப்டிலாம் நம்ம கட்சிக்கு எதிரா எழுத சொல்லாதீங்கன்னு ராமராஜ் சொன்னார் மதி..”

அப்பா என்ன பதில் சொன்னார் என்பது போல் நான் பார்த்தேன். “ நா அவ என்ன எழுதனும்னு சொல்ல முடியாதில்லன்னு சொன்னேன்.”

“ஃபோன வச்சிட்டாரா?”

“எப்டி சொல்ற?”

நான் சிரித்தேன். “உப்மா கிண்டப் போறேன்ப்பா… சூடா ஒன் சைட் ஆம்லெட்.. சாப்டுறீங்களா?” என்றேன்.

அப்பா என்னிடம் அதிகம் பேசாதவர் போல் தலையசைத்தார். அப்பாவுக்கு என்னிடம் சொல்ல சிறு வயது முதலே ஏராளம் உண்டு. அப்போது நாங்கள் ஒரு வாடகை வீட்டில் இருந்தோம். ராஜன் வீடு பக்கத்தில். அப்பா என்னிடம் வாசலில் இரவு நேரங்களில் உட்கார்ந்து பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருப்பார்.

அப்பாவின் அப்பா திண்டிவனத்தில் டிஎஸ்பி. அவ்வளவு நல்ல மனிதர் சின்ன வயதிலேயே மாரடைப்பில் இறந்து போக அப்பா மீதுதான் குடும்பப் பொறுப்புகள் வந்து விழுந்தன. அப்பா அந்த வாழ்க்கையை என் பள்ளிப் பருவத்திலேயே சொல்லி இருக்கிறார்.  தேவையான சாப்பாட்டை வாங்குவது, அதை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டது எல்லாமே அப்பாவின் பேச்சைக் கேட்டதால் மட்டுமே.

அதன் பிறகு கட்சிக்காரர்கள் ஜெரால்டிடம் பேசி இருக்கிறார்கள். “ உங்கட்ட கவிதை காட்ட மாட்டாங்களா?”

“ஏன்?” என்று கேட்டிருக்கிறான் அவன்.

”தெரியாதா? அதான் நம்ம சங்கத்த..நம்ம கட்சிய.. நம்மள விமர்ச்சிச்சு எழுதிருக்காங்க.. அவங்கப்பாட்ட சொன்னேன்… அவர் கேக்கல”

”ம்”

“நீங்களும் ஒத்த வார்த்தைல சொன்னா எப்டி தம்பி”

அந்த ஒற்றை வார்த்தைதான் அன்றிரவை வேட்டையாடியது. வலது கை விரல்கள் முறுக்கப்பட்டு ஒடிக்கப்பட்டன. அலறல்கள் எல்லாமே சுவர்கள் கேட்டன. உயிரற்றவை எப்படி கை நீட்டி என்னை அணைத்துக் கொள்ள முடியும்? ஒவ்வொரு விரலும் ஒரு கை சைஸுக்கு வீங்கி இருந்தன.

அவன் அறைக்குள் பூட்டி விட்டு வெளியே போனான். ரணம். பயங்கர ரணம். பாதி மயக்க நிலையில் அந்த இரவு எப்படிக் கழிந்ததென இப்போது வரை தெரியவில்லை.

”இந்த வெரலாடி? ” ராஜன் அன்று ஹோட்டல் அறையில் நடுராத்திரி அந்த விரல்களை நடுக்கத்துடன் பிடித்துக் கொண்டான். அவன் குரல் மின்விசிறியின் சத்தத்திற்கு கீழே நசுங்கிக் கிடந்தது. நான் பதில் சொல்லாமல் இருக்க விரல்களை சேர்த்து வைத்து நீவினபடியே இருந்தான்.

எனக்குத் தொண்டை கமறிற்று. அவனுக்கு என் கையும் விரல்களும் மிகவும் பிடிக்கும். அவன் விரல்களில் ஒரு நடுக்கம் இருந்தது. அவன் மனதில் என்னவெல்லாம் தோன்றும் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு நான் மெல்ல என்  கைகளை விலக்கினேன்.

“என்ன… என்ன… என்ட்ட நீ ஏன்டி எதும் சொல்லல?”

நான் அமைதியாய் இருந்தேன். வாழ்நாள் முழுக்க பேசினாலும் தீராத வலிகளை ஒற்றை மெளனத்தில் சவுகர்யமாய் மடித்து வைத்துக்கொள்ள முடிகிறது. இரவு விளக்கின் மினுமினுப்பு  ஒரு சிறுத்தை கண்ணை விழித்துப் பார்த்த மாதிரி இருந்தது.

“உண்மய சொல்லட்டுமா? ”

“என்ன மூதேவி.. என்ன சொல்லப் போற?”

“இல்ல..ஒண்ணுமில்ல..வேணாம்”

“என்ன வேணாம்?”

”அன்னிக்கு ராத்திரி உன்ன நினச்சிட்டே தான் படுத்திருந்தேன்.”

“குதிர ஓட்டிட்டு வந்து உன்னக் கூட்டிட்டுப் போயிருவேன்னு நினைக்கலயே”

“அதொன்னுதான் மிச்சம்”

நான் பக்கென சிரித்தேன்.

“ சிரிச்சேன்னா பல்லக் கழட்டிருவேன்”

அவன் சொன்னபோது அதில் ஒரு தகப்பனின் பரிவும் கரிசனமும் இருந்தது. ஒரு தகப்பனின் பரிவை இன்னொரு ஆணிடம் காணும்போது எல்லாப் பெண்களும் இப்படித்தான் நெக்குருகிப் போவார்களா எனத் தெரியவில்லை.

”அப்பமாச்சும் ஒரு ஃபோன் செஞ்சிருக்கலாமில்ல மதி?”

“இல்ல.. சும்மா நினச்சேன்.. எனக்கு கம்ஃபர்டபிளா இருந்துச்சு.. வலி தெரில.. ஈரத்துணிய சுத்திட்டுக் கெடந்தேன்.”

“லூசு..லூசு…நெஜமாவே புரில.. கற்பனைலயே வாழ்ந்தியா?”

நான் சட்டென எழுந்து உட்கார்ந்து, “ஆமா.. அதான் எனக்கு விதிக்கப்பட்டுச்சுன்னு நினச்சேன்.” என்றேன். அவன் என்னை மறுபடி கட்டிலில் மல்லாக்க தள்ளினான்.

“மதி” என்றான். அவன் குரல் தேய்ந்திருந்தது. இயலாமையின் கூட்டில் முளைத்த ஒரு சிறு துளிரின் பேரன்பு அதன் அத்தனை லிபிகளிலும் உரசினபடி இருந்தது.

அவனை நினைத்தபடி இப்போதும் கிடப்பதில் ஒரு மமதையும் உன்மத்தமும் இருக்கிறது. எத்தனை முறை யார் யாரெல்லாமோ சொல்லி இருக்கிறார்கள். உயிரும் உயிரும் கோர்த்த பாசிமணி போல, அத்தால் மொத்தமாய் அற்றுப் போகும் ஒரு பிணைப்பென்று யாருக்குமே புரிய வைக்க முடியவில்லை.

அப்பாவிடம் கல்யாணத்திற்கு முந்தினநாள் கூட கெஞ்சும் போது – “ இங்க பாரு மதி… இதெல்லாம் வெறுமன இன்ஃபாஷுவேஷனா இருக்கும்.. புரிதா? ஒண்ணா வளந்துட்டீங்க இல்ல.. அதான்.. போயிறும்..”

      என்ன கல்யாணம் ? நீங்களாக  ஒரே சாதியாகப் பார்த்து செய்து வைத்தால் அன்று இரவே கதவை சாத்திக் கொள்ளலாம். ஆனால் தாங்களே பார்த்து கொண்டால் சாதி ஸ்டேடஸ் எல்லாமே குறுக்கே நிற்கும். எது தோற்றுப் போகாது இந்த உலகில்? எது நிச்சயமுள்ளது ? எது நிச்சயமற்றது – யாருக்குத் தெரியும்? எல்லா அன்பும் ஜெயிக்குமென யார் சொல்வார்? பிரிவை ஏன் ஏற்றுக் கொள்ள இயலவில்லை? விவாகரத்து ஆனால் எதிரிகள் போல முறைத்துக்கொண்டு ஏன் அலைய வேண்டும்? ஆனால் அதுவே இங்கு உண்மை.

      எல்லாமே சமூகம் என்னும் மாயப்பிசாசு செய்யும் மோசமான வித்தை. யாரோ அவன் புத்திக்குத் தக்க எழுதி வைத்த சட்டம் இங்கு இன்னும் கடைப்பிடிக்கப்படுகிறது. யார் வாழ்க்கையை யார் வாழ்வது?

எப்போதோ கிறுக்கி வைத்ததை சுட்டை ஒரு நாள் தற்செயலாக பிரபஞ்சனின் சிறுகதைத் தொகுப்பை எடுக்கும்போது பார்த்து விட்டான்.

”யக்கா.. இதெல்லாம் இப்டி துண்டுச் சீட்டுல எழுதி வச்சா வேலைக்காகுமா? எங்காச்சும் நல்ல நோட்டா எழுதி வச்சா எங்காச்சும் நம்ம படைப்புலயே யூஸ் பண்ணிக்கலாம் இல்லயா?”

“மனசுல இருக்கதுதான? எங்க எழுதி வச்சா என்ன? ஆனா… எழுதுன பிறகா ஒத்த வார்த்த கூட  என்னோடது இல்லன்னு தோணும் சுட்டை”

“ஓம்.. வந்ததுக்குப்புறம் அது எங்கட நாடில்லன்னு சொல்ல முடிமா? இல்ல… யாழ்பாணத்துல ஷெல் வெடிச்சி செத்தது எங்கப்பார் இல்ல.. அதிலே சிதஞ்சி போனது எங்க வீடில்ல.. எங்க குசினி இல்லன்னு சொல்ல முடிமா?”

நான் என் கண்கள் விரிய அவனையே  பார்த்தபடி இருந்தேன். அவன் என் விரல்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்

“ஏன் உங்கட விரலெல்லாம் நொண்டியடிக்குதுக்கா?”

“அப்டின்னா..?”

“ஏன் வளைஞ்சிருக்க?”

“அது வளையல… ஒடஞ்சிருக்கு..”

“ஆக்சிடெண்ட்டா…”

”ஆமா…”

“காரா பஸ்ஸா?”

“ஆளு?

சுட்டை என் முன் வளைந்தாற் போல் உட்கார்ந்து “ என்னக்கா சொல்றியள்? ஆக்சிடெண்ட் ஆளாலயா?” என்று புருவம் சுழித்து கேட்டான். ”ஆமாம்” என்று சிரித்தேன்.

“சிரிக்காத .. கொல வெறி ஆகுது. “ என்றான்.

“உனக்கு ஏன் கோவம் வருது ?”

“அந்தாளப் போய் அடிக்கனும்னு வருதக்கா.. நான் என்ன செய்வேன்?”

“எங்கிட்ட கோவப்படுற..மறுபடி என்னதான காயப்படுத்துற சுட்ட? கெளம்பு நீ.. அல்லன்னா வேற ஏதாச்சும் பேசு”

“போன்னு சொல்ற…அதான…?”

”அப்டி நான் யாரயும் சொல்ல மாட்டேன் சுட்ட.. வீட்ட விட்டு அனுப்புறதோட வேதன எனக்குத் தெரியும்.”

“இது வேறயா..எப்படியக்கா நீ உயிரோட இருக்க?”

எனக்கு ராஜனின் முகம் நினைவுக்கு வந்தது. ஒவ்வொரு முறையும் அவனை இறுக அணைத்துக்கொண்டு தேம்பிக் கிடந்த பொழுதுகள் நினைவுக்கு வந்தன. அதையெல்லாம் எப்படி நான் யாரிடம் சொல்லுவேன்? ராஜனே கேட்டால் கூட இப்போதிருக்கும் சூழலில் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

சுட்டை என் விரல்களைப் பிடித்துக்கொண்டு “ அன்பான அக்காமார்கள் சந்தோசமாயிருக்கனும் மதியக்கா. அதான் என்ட இஷ்டம், பிராத்தனை எல்லாமே. என் அக்காவ அப்டிதான் நினச்சேன். அவள் இயக்கத்துல சேருவள் என்று நினச்சதில்ல.. என்ன செய்ய.. விதியெண்டு நாஞ் சொன்னேன்.. அம்மையும் அப்பனும் கை விட்டனர். வாசல் ஏறி துணி எடுக்க வந்தவளிடம் கூட  அவியள் யாரும் ஒரு வார்த்த கதைக்கலை. அவளுக்கு கண்ணெல்லாம் கண்ணீர் கட்டி நின்னது. ஆனா ஒரு சொட்டு கீழ விழுந்தாறில்லையக்கா… அதான் எண்ட்ட ஈஸ்வரியக்கா.. “

“சுட்டை… இன்னைக்கு உனக்கு என்ன வேல இருக்கு.. நான் ராயப்பேட்ட வரைக்கும் போனும்”

“நீ பேச்ச மாத்துனா நீ புத்திசாலியெண்டு சொல்லி விடுவேண்டு நினைக்காதேள். நீ ஒரு escapist.. நிஜங்கள்லேருந்து தப்பிச்சிக் கொள்ளத்தான் நீ கதை எழுதுறே.”

நான் அவனையே பார்த்தேன். எங்கோ பிறந்த ஒருவனுக்கு என் மேல் இத்தனை பிரியம் ஏன்? நான் சந்தோஷமாயிருக்க வேண்டும் என்று அவன் நினைக்கிறான். ஆனால் என் அம்மா நினைத்ததில்லை. அப்படியெனில் இந்த ரத்த பந்தம் என்பதும் சமூகம் சலவை செய்து வைத்த கட்டமைப்புதானா? விறுவிறுவென தேள் கொட்டிய உணர்வு ஒவ்வொரு நரம்பிலும் ஏற்பட்டது.

விவாகரத்துக்கு ஒத்துக் கொண்டேன் என்பதில் அம்மாவுக்கு அத்தனை வருத்தங்கள். இன்று வரை ஜெரால்டுக்கு அவள் சமைத்து துணி துவைத்துக் கொண்டிருக்கிறாள். ஊரே அவனைப் பற்றி சொன்னாலும் அவளின் நுனி நாக்கிலிருந்து கூட அவனுக்கு எதிராக ஒற்றை வார்த்தை எட்டிப் பார்க்காது.

”எஸ்கேபிஸ்ட் எண்டு சொன்னதும் அமைதியாயிட்டீங்களக்கா…”

“உண்மய ஒருத்தர் சொல்றப்ப என்ன பதிலிருக்கு சுட்டை?”

”பள்ளிப்பிராயத்துல என் கூட சாரா எண்டு ஒரு சிநேகிதி படிச்சாளக்கா.. அவ்ளோ அழகு.. கடைசில திருமணத்துக்கு முந்தின நாள் செத்துப் போனாள். அவள் யாரயோ காதலிச்சாளெண்டு பேச்சு. இவரோ அவரோயெண்டு சொன்னார்கள். அம்மை ஒரு முறை நீயோயெண்டு என்னைக் கூட பகடி செஞ்சள். ஆனாலக்கா… அவள் செத்து போனது நல்லதெண்டு தோன்றுகிறது. தெனம் சாகாத வாழ்க்கைக்குள்ள அவள் வரவேயில்லை இல்லயா?”

“என்னை செத்துப் போன்னு மறைமுகமா சொல்றியா?”

செத்து போகனும் நீனு நினைக்கிறவன் நீ சந்தோஷமா இருக்கணும்னு சொல்ல மாட்டேனாக்கா..புரிஞ்சிக்க”

அவனுக்கு காப்பி போட சமையலறை வந்தேன். அவன் தண்ணீரை மொண்டு சட்டையின் முதல் பொத்தான் நனையும் வரை குடித்தவன் சட்டையின் வலது கீழ்பக்க ஓரத்தை எடுத்து வாய் துடைத்து பின் மேடையில் ஏறி உட்கார்ந்து, “கொஞ்சம் ஸ்ட்ராங்கா போடு “ என்றான்.

“வெரல எப்படிக்கா சரி பண்ண?”

“அதுவா வளஞ்சி பின்ன சரியாச்சு.. “

“டொக்டர் பாக்கலே?”

இல்லை என்று தலையசைத்து சீனியை டம்ளரில் போட்டேன். அவன் என் விரல்களையே பார்த்தபடி இருந்தது அசூயையாய் இருந்தது

“பாவம்னு நெனைக்காத ..எனக்கு பிடிக்காது.”

“சத்யமா இல்ல.. இதயும் ஜெயிச்சிட்டன்னுதான் நெனைக்கறேன். உன்ன மாரி பாதகியை பாவமெண்டு எப்டி நினைக்க முடியும்? “ என்றான். நான் கோபத்தில் தவலை நீரை அவன் மேல் விசிறினேன். அவனுக்கு அப்படி செய்ததில் யார் ஞாபகம் வந்ததோ அமைதியாகி நகத்தைக் கீறிக் கொண்டே இருந்தான். பின் மெளனமாய் என்னைப் பார்த்து ஒரு வெற்று புன்னகை வீசினான்.

“ நீ ஏனக்கா இன்னொரு மனசுக்குப் பிடிச்ச ஆள கல்யாணம் செஞ்சிக்கக் கூடாது ?” என்றான். நான் மீண்டும் தண்ணீரை விசிறி அடிக்கப் போனவள் அவன் ஞாபகங்களில் அது சிதறி விடக் கூடாதென நிறுத்தினேன்.

“ரொம்ப முக்கியம்”

”ஏன்.. இந்த உலகத்துல நல்ல மனுஷனே.. நல்ல ஆம்பளையே கெடையாதுன்னு நெனைக்கறியா? உங்கதைல வர்ற மாரி”

“அப்டியா எழுதுறேன்..அப்ப நான் ஒரு ஃபோகஸ் எழுத்தாளரில்ல…?”

“அது சொல்லித்தான் தெரியனுமா.. எல்லாத்துலயும் போகஸ் நீ.. கல்யாணம் கட்டிக்கோ எண்டு சொன்னேன்.. பேச்ச மாத்துற?”

“நடக்கவே நடக்காத விஷயத்தப் பேசி என்ன பயன்?”

சொல்லும் போதே காலிங் பெல் அடித்தது. யாரென்று பார்க்க நான் போனபோது சுட்டை மேடையிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கிப் போனான். வாசலில் சத்தம் கேட்க அடுப்பை சிம் ஆக்கி விட்டு எட்டிப் பார்த்தேன் .

ராஜன்.

(தொடரும்)

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close