சிறுகதைகள்

காணாமல் போன மனிதன்

ரமா சுரேஷ்

கோவில் நடை சாற்றுவதுப்போல் அவளும் வீட்டின் கதவைக் காலை எட்டு மணிக்கே சாத்திவிடுவாள். அதன் பிறகு வெளியில் தட்டுபவர்களின் தேவைக்கு ஏற்றாற்போல் கதவு திறக்கப்படாது. இவளின் தேவைக்கு மட்டுமே ஜன்னலும், கதவும் திறக்கப்படும். மூத்த மகன் இராணுவ பயிற்சியில் இருப்பதால் வார இறுதி நாட்களில் மட்டுமே கதவை தட்டுவான். மற்றப்படி அவள் கணவனிடமும் உயர்நிலை படிக்கும் மகளிடமும் வீட்டுச்சாவி இருப்பதால் கதவைத் தட்டமாட்டார்கள். அந்த வீட்டில் அவளுக்கு வேலை என்பது மிக குறைவே. அவளுடைய கணவன் அவன் வேலைகளை, அவனே செய்துகொண்டால்தான் பிடிக்கும். அப்படியே பிள்ளைகளையும் பழக்கிவிட்டான், அதனால், அவளுக்குச் சமைப்பது மட்டுமே வேலை, பரிமாறகூடத் தேவையில்லை. வீட்டுக் கதவை மூடிய கையோடு அவளுடைய அறை கதவையும் மூடிவிடுவாள். அந்த வீடு எப்படி அந்த பகுதியில் உள்ள சாலைகளில் இருந்து துண்டிக்கப்படுகிறதோ அதே போன்று அவளின் அறையும் அந்த வீட்டில் இருந்து துண்டிக்கப்படும். அந்த அறை அவளுக்கு மூன்றாம் உலகம், அந்த உலகம் அவளுக்காக எதையும் கொடுத்ததில்லை, ஆனால், அவளுக்கான அனைத்தையும் அங்குதான் பூட்டி வைத்து இருக்கிறாள். அலுவலகம் முடிந்தும் வீட்டுக்குள் அலுவலகத்தைத் திறந்து வைத்துகொள்ளும் கணவன், அந்த அறைக்குள் அடி வைப்பது அரிது. எப்போதாவது தாய் வீடு வரும் மகள் “உனக்கு போர் அடிக்கலையாம்மா?” என்றபடி மெத்தைமேல் உட்கார்ந்தபடியே அறையைச் சுற்றி வருவாள். நான்கு ஐந்து  வருடங்களுக்கு மேல ஆச்சு,  “தலை கட்டிவிடவா, இந்த டிரஸ் போட்டுகிறியா, இந்தச் சப்பாத்து சைஸ் உனக்குச் சரியா இருக்குமா, என்ன சமைத்து வைக்கட்டும்?” என்று மடத்தனமான கேள்விகளை மகளிடம் கேட்டு. அதனால், இப்போதெல்லாம் அறிவார்ந்த சில விசயங்கள் மட்டுமே இவள் பேசுவாள். நேற்றுக்கூட மகள் அவள் அறை கழிவறையில் கரப்பான்பூச்சி இருப்பதாகக் கூறிக்கொண்டே இவள் கழிவறைக்குள் நுழைந்துகொண்டாள், மகள் வெளியே வரும் வரை இவள் வரவேற்பறையில் காத்திருந்தாள். அதிநவீன வசதிகள் பொருந்திய தனி வீடு அது. தன் உழைப்பாலும் நேர்மையாலும் முக்கியமாகத் தன்னுடைய சுய டிசிப்பிளின்னாலும் சம்பாதித்து வாங்கிய வீடு என்று கணவர் பெருமிதமாகச் சொல்லும் போதெல்லாம் இவள் பேரமைதியுடன் அவன் முகத்தைப் பார்த்தப்படி நீட்டிய கால்களை மடக்கி அமர்ந்துகொள்வாள்.

வீட்டின் வெளிக்கதவை வெகுநேரம் யாரோ தட்டிக்கொண்டிருந்தார்கள். சில நேரம் இப்படி நடப்பதுதான், அவர்களே எரிச்சல் அடைந்து சென்றுவிடுவார்கள். ஆனால், இன்று ஏனோ இவள் எரிச்சல் கொள்ளும் அளவிற்கு யாரோ தட்டிக்கொண்டிருந்தார்கள். இந்த உலகில் அவள் அதிகம் ரசிப்பதும், அவளுக்கான ரகசியம் என்று நினைப்பதும் அவளின் நடுத்தொடையை. தன் தொடையை மட்டும் நிர்வாணமாக்கி அதை தட்டித் தட்டி அது குலுங்குவதைப் பல வருடமாக ரசித்துக்கொண்டு இருக்கிறாள். நடுதொடை வரை சுருண்டு கிடந்த டவுசரை இழுத்துவிட்டப்படி வாசலில் பொருத்தி இருக்கும் கேமராவை மொபைலில் ஓடவிட்டாள். நீல நிற உடையணிந்த காவலர்கள் இரும்புக்கதவைக் கனிவுடன் ஆட்டியப்படி நின்றார்கள். இவள் நிதானமாக வெளியே வரும் வரை காவலர்கள் காத்து நின்றனர். இவளைப் பார்த்தவுடன் அவர்களுடைய அடையாள அட்டையைக் காண்பித்து அறிமுகம் செய்துகொண்டார்கள்.

“உங்களுடைய பெயர்?”

“நீலி!”

“மேடம் நீலி, உங்களுடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் மிஸ்டர். ப்வூ வைத் தெரியுமா?” காவலர் நேரடியாகக் கேள்விக்கு வந்தனர்

“நீங்கள் எந்தப் பக்கத்து வீட்டை கேட்கிறீர்கள்? வலது புறமா அல்லது இடது புறமா?”

காவலர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு இடது பக்கம் என்றார்கள். அவளுக்கு இடது பக்கமாக எட்டிப்பார்த்தவள் “பெயர் என்ன சொன்னீர்கள்?” என்று கையில் சுற்றி இருந்த ரப்பர் பேண்டை கழட்டிக் கழுத்துக்குள் குழைந்துக்கொண்டிருந்த முடியை அள்ளி கட்டிக்கொண்டாள்.

“மிஸ்ட்டர்.ப்வூ.”

 காவலர் ப்வூ வின் நகல் அடையாள அட்டை எடுத்து அதில்  இருந்து புகைப்படத்தைக் காண்பித்தார். அந்த காவலர் அனுபவமற்ற சிறுவயது காவலராக இருந்தார். அடையாள அட்டையில் டேட் ஆப் இசிவ்  பல வருடங்களுக்கு மேல் கடந்திருந்தது. ப்வூ இளமையாகவும் அழகாகவும் இருந்தார். “ஓ! இவர்தான் என் இடது பக்க அண்டைவீட்டுக்காரரா, ஆச்சரியத்துடன் விழிகளை உயர்த்தினாள். இதுபோன்று பலரைக் காவலர்கள் பார்த்து இருந்ததால் அவர்கள் விழி உயர்த்தாமல் தலையாட்டினார்கள்.

“ஏன் இவருக்கு என்னவாயிற்று?” கேள்விகளை இவள் கேட்க துவங்கினாள்.

“இவரைக் காணவில்லை என்று இவருக்கு கடன் கொடுத்த வங்கியில் இருந்து புகார் கொடுத்து இருக்கிறார்கள்.”

“ஓ! அப்படியா? அவர்கள் வீட்டில் வேறு யாரும் இல்லையா?” சந்தேகத்துடன் காவலர்களைப் பார்த்தாள்.

“இல்லை! என்றுதான் நினைக்கிறோம். நீங்கள் அந்த வீட்டில் வேறு யாரையேனும் பார்த்ததுண்டா?” அந்த அனுபவம் அற்ற காவலர் மீண்டும் கேள்வி கேட்டார்

காவலரின் கையில் இருந்த பேப்பரில் ப்வூ சிரிப்பை அடக்க முடியாமல் இவள் என்ன சொல்ல போகிறாள் என்று பார்த்துக்கொண்டிருந்தார்.

புருவங்களை மேலும் கீழுமாக நெளித்து, வாயைக் கோணலாக வைத்துக்கொண்டு யோசித்தவள் “எத்தனை நாட்களாகக் காணவில்லை?” நீலி அடுத்த கேள்வியைக் கேட்டாள்

“நாட்கள் இல்லை, மாதங்கள் ஆச்சு என்று சந்தேகப்படுகிறோம்” அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே வலது பக்க வீட்டில் இருந்து யாரோ அடி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இருமினார்கள். மூவரும் சிறிது நேரம் இருமல் சத்தம் ஓயும் வரை அமைதி காத்தனர். “மேடம் நீலி, சொல்லுங்கள்” என்று அவளின் முகத்தை ஆர்வத்துடன் அவர்கள் பார்த்தார்கள்.

“மாதக்கணக்கா அவரைக் காணவில்லையா? அவரை வேறு யாரும் தேடவில்லையா?” நீலி மூக்கைச் சொரிந்தப்படி இந்த முறை ஆச்சரியப்பாட்டாள் “ஆமாம், மேடம்!” இருவரும் ஒன்றாக தலையாட்டினார்கள்

“ஒருவேளை நிறைய கடன் வாங்கிட்டு தலைமறைவாகிட்டாரா?” காவலர்களின் மேலும் கீழுமாக ஆடிய தலையை நிறுத்தினாள்.

“அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை மேடம். அவர் காணாமல் போகும் முன்பு வரை வங்கிக்குச் செலுத்தவேண்டிய கடனை மாதம் தவறாமல் சரியாகவே கட்டி இருக்கார்” இப்போது காவலர்கள் ஆச்சரியப்படுவதுப்போல் இருந்தது நீலிக்கு

இடது பக்க வீட்டுக்குள் இருந்த மற்றொரு காவலர் இவர்களுடன் இணைந்து கொண்டார். நீலி புதிதாக வந்த காவலரிடம் “ஆமாம், இந்த வீடு வாங்கி எத்தனை வருடம் ஆச்சு?” அவர் தன் கையில் இருந்த குறிப்பேடுகளைச் சரிபார்த்தபடிச் “சரியாகச் சொல்லணும் என்றால் பதினொரு வருடம் இரண்டு மாதங்கள் ஆச்சு மேடம்”

“ஓ! எங்க வீடு வாங்கி ஒன்பது வருடம் ஆகுது, ஆமாம் அவர் திருமணம் ஆனவரா?” நீலி இடது கை மோதிர விரல் நகத்தை உரித்தப்படி நின்றாள். “இல்லை! ஸ்டில் பேச்சுலர்,” என்றார் புதியவர்.

அப்பறம் எப்படி காணாமல் போனார் இந்த கேள்வியை மட்டும் தனக்குள் கேட்டுக்கொண்டவள், காவலர்களிடம் தண்ணீர் ஏதாவது சாப்பிடுகிறீர்களா என்றாள் மூவரும் வேண்டாம் என்று ஒன்றாகாவே ஒரே பக்கத்தில் இருந்து இடது வலதாகத் தலையாட்டினார்கள்

“இங்கு நிறைய நாய்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். சரியாக மத்தியான உணவிற்குப் பிறகு குரைத்துக்கொண்டு இருக்கும் .அவரிடம் நாய் ஏதாவது இருக்கா? அவரிடம் காடி இருக்கா?” என்று ஒன்றோடு ஒன்று சம்மந்தம் இல்லாத இரு கேள்விகளை நீலி கேட்கவே,

அவரிடம் நாய் இல்லை என்று புதிய காவலரும், அவர் லைசன்சே எடுக்கவில்லை என்று மற்றொரு காவலரும் இருவரும் ஒரே நேரத்தில் சொல்லவே அனுபவமற்ற காவலரும் நீலியும் ஒருவரையொருவர் பார்த்தனர்.

“வீடு புகுந்து திருடுவது என்பது நமது தேசத்தில் இல்லை,” அவள் நிறுத்தவே காவலர்கள் மூவரும் பெருமிதத்துடன் நின்றனர். ஆனால், “கொலைகள் நடப்பதுண்டு அப்படி ஏதாவது,” அவள் முடிப்பதற்குள் மூவரும் ஒரே குரலில் மறுத்தனர், “அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம். மிஸ்டர். ப்வூ மிகவும் அமைதியானவர், அவருக்கு நண்பர்களே குறைவு, அப்படி இருக்கும் பட்சத்தில் எதிரிகள் இருக்க வாய்ப்பேயில்லை, அந்த மனிதருக்கு அதிர்ந்து பேசுவதுகூட பிடிக்காதாம், கடந்த வருடம்தான் கட்டாய ஓய்வு பெற்று இருக்கார்.” இந்த முறை மூவரும் ஒருவருக்கொருவர் சிறுது இடைவெளி விட்டு ப்வூவின் சிறப்புகளை வரிசைபடுத்தினர்.

“இன்பசுற்றுலா போயிருக்கலாம் அல்லவா?” நீலியின் கண்கள் சிரித்தது. “இல்லை மேடம் அந்த வகையிலும் விசாரித்துவிட்டோம் அப்படி ஏதும் அவர் நம் தேசம் கடந்து போனதற்கான பதிவு இல்லை” அனுபவமற்ற காவலன் சொல்லிவிட்டு நீலியைக் கூர்மையாக பார்த்தான்.

ப்ளீஸ் வெயிட் என்றவள் வீட்டிற்குள் சென்ற சிறிது நேரத்தில் கையில் குளிர்ந்த தண்ணீர் போத்தலுடன் வந்தாள். அனுபவமற்ற காவலன் முன் நீட்டினாள். மூவரும் குடித்து முடிக்கும் வரை அமைதியாக நின்றாள்.

“வாக்கிங் போகும் பழக்கம் உண்டா அவருக்கு?” நீலி காலி போத்தலை உள்ளங்கைகளின் நடுவே உருட்டி விளையாடிக் கொண்டே கேட்டாள்.

“இல்லை அவர் தொலைந்து போவதற்கு முன்தான் கழிவறையில் விழுந்து வலது காலில் முறிவு ஏற்பட்டு இருக்கு,”

“என்னது அவரால் நடக்க முடியாதா! இதை யார் உங்களிடம் சொன்னது?” நீலிக்கு வியப்பும், ஆர்வமும் கூடிக்கொண்டது.

“உங்களுடைய கணவர் மிஸ்டர் மதியரசன். அவரிடம் நேற்று இரவு விசாரிக்கும்போது சில பயனுள்ள தகவல்களைச் சொன்னார்,” புதிய காவலர் நெற்றியைச் சொறிந்தபடி நின்றார்

“ஓ! என் கணவரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?” அதன் பிறகு நீலி பேசவில்லை. மிஸ்டர் ப்வூவின் முகத்தைச் சற்று முன்தான் காவலர்கள் காட்டிய தாளில் பார்த்தாள். ஏனோ அவளால் மீண்டும் கண்முன் அந்த முகத்தைக் கொண்டுவர முடியவில்லை. எதற்காக அந்த மனிதர் தொலைந்து போயிருப்பார்? அவர் வீட்டிற்குள் யாரும் இல்லாதபோது  ஏன் தொலைந்து போகணும்? அவர் வீட்டிற்குள் வேறு என்னவெல்லாம் வைத்து இருப்பார்? இவ்வளவு பெரிய வீடு அவருக்கு எதற்கு? ஐம்பதா இல்லை அறுபது வயது இருக்குமா? முழுகை சட்டைபோடுவாரா இல்லை அரைக் கை சட்டை போடுவாரா? முகத்தில் சுருக்கம் விழுந்து இருக்குமா? முன் நெற்றி வழுக்கையா இல்லை நரை மட்டும் விழுந்து இருக்குமா? மீசை வைத்து இருப்பாரா? மீசை இருக்க வாய்ப்பே இல்லை, திடீரென பெண் பார்க்க வந்த மதியரசனின் கடாமீசை முகம் வந்தது, அவன் முகத்தில் இப்போதும் அந்த மீசை இருக்கிறதா? மகள் பிறந்தப்போது அவர் முகத்தில் அப்போதுதான் முழு சிரிப்பைப் பார்த்தாள் அதன் பிறகு எப்போது என்று யோசனையுடன் கண்களை மூடியப்போது மிஸ்டர் ப்வூ வின் முகம் தெளிவாக வந்தது. ஆரஞ்சு நிற கை வைக்காத பனியன், அரைகால் டவுசர், சில்வர் வண்ணத்தில் தடிமானான வாட்ச். கண்களைத் திறந்தவளை அனுபவமற்ற காவலார் பார்த்துச் சிரித்தார்.

“இப்போதெல்லாம் மூன்றாம் உலகில் தொலைந்து போனவர்களே அதிகம். தேடிப்பாருங்கள். தொலைந்து போன மனிதர்கள் கிடைக்க வாய்ப்புண்டு நீலியும் ஒரு நாள் மூன்றாம் உலகில் காணாமல் போகலாம்!”

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close