தொடர்கள்
Trending

காகங்கள் கரையும் நிலவெளி;7 – சரோ லாமா

தொடர் | வாசகசாலை

2020 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு ‘Shuggie Bain’ நாவலுக்கு அளிக்கப்பட்டது. பரிசு பெற்ற டக்லஸ் ஸ்டுவர்ட் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். 51 வருட புக்கர் பரிசு வரலாற்றில் பரிசு பெ றும் இரண்டாவது ஸ்காட்லாந்து நாட்டவர் டக்லஸ் ஸ்டுவர்ட். இதற்கு முன் 1994ஆம் ஆண்டு ஜேம்ஸ் கெல்மென் புக்கர் பரிசைப் பெற்றார். இந்த வருடம் டக்லஸ் ஸ்டுவர்ட்.

கணவர் இல்லாமல் தனித்து வாழும் அம்மா, குடிநோயால் பீடித்துள்ள அவரை மீட்க போராடும் ஓரினசேர்க்கை பழக்கம் உள்ள ஆண் மகன் என்கிற கதைப் பின்னலூடே பொருளாதாரத்தில் வீழ்ந்த ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ நகரம் நாவலின் துயரார்ந்த கதாபாத்திரம் போல் வருகிறது. இந்நாவலை ‘சுயசரிதைத் தன்மையுடைய நாவல்’ என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். நிஜத்தில் குடிக்கு அடிமையான தன் அம்மாவை மீட்கப் போராடியவர்கள் டக்லஸ் ஸ்டுவர்ட்டும் அவரது சகோதரரும். ஆடை வடிவமைப்பாளராக அமெரிக்காவில் வேலை செய்துகொண்டே தனது ஓய்வு நேரத்தில் அல்லது கிடைத்த நேரத்தில் நாவலை எழுதி முடித்தார் டக்லஸ் ஸ்டுவர்ட். ஸ்காட்லாந்தில் இருந்து புலம்பெயர்ந்து தூர தேசத்தில் வசிப்பது நாவலை விரிவான பரந்துபட்ட பார்வையுடன் எழுதி முடிக்க அவருக்கு உதவியாக இருந்தது. ‘’ஒருவேளை அப்படிப் புலம்பெயர்ந்து வாழாமல் இருந்திருந்தால் இந்த நாவலை எழுதியிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்’’ என்று அவர் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

டக்லஸ் ஸ்டுவர்ட்டுக்கு நான்கு வயதிருக்கும்போதே அவரது அப்பா குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு அவரது அம்மா குடிக்கு அடிமையானார். ஆனால் அவரது அண்ணனும் தங்கையும் டக்லஸ் ஸ்டுவர்ட்டுக்கு உதவியாக இருந்தார்கள். டக்லஸ் ஸ்டுவர்ட்டுக்கும் அவரது தங்கைக்கும் 15 வயது வித்தியாசம் உண்டு. க்ளாக்ஸோ நகரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான அவருடைய தங்கையின் நினைவுகள் வேறு மாதிரியானவை. தன் பதினாறு வயதில் அம்மாவின் மரணத்துக்குப் பின்பு அவரது சகோதரன் ஸ்டுவர்ட்டுக்கு உதவியாக இருந்தார். சகோதரனும் இறந்துவிட்ட பிறகு கிட்டத்தட்ட தனியனானார் ஸ்டுவர்ட். பள்ளிப் படிப்பின்போதே பகுதி நேர வேலைக்கு ப் போனார். ஒரு குளிர்சாதனப் பெட்டியும் கட்டிலும் மட்டுமே வைக்க முடிகிற சிறிய அறை அது. புத்தகங்கள் வைக்க இடம் இல்லாத அறை. அவ்வளவு நெருக்கடியில்தான் பள்ளிப்படிப்பை அவர் நிறைவு செய்தார். கல்லூரிப் படிப்பின்போதுதான் அவருக்கு பள்ளிப் படிப்புக்கு அப்பாலான புத்தகங்கள் படிக்க வாய்ப்பு கிடைத்தது. டென்னஸி வில்லியம்ஸின் நாடகங்களும், தாமஸ் ஹார்டியின் நாவல்களும் வாசித்ததில் அவருக்கு விருப்பமானவை. ஸ்டுவர்ட்டுக்கு நாவலை எழுதி முடிக்க பன்னிரெண்டு வருடங்களானது. எழுதி முடித்த பின் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட எடிட்டர்கள் நாவலை நிராகரித்தார்கள். இதில் நிராகரித்த பதிப்பகங்களின் எண்ணிக்கை கணக்கில் வராது. நிராகரிப்பு பல வகைகளில் எழுத்தாளனுக்கு உதவவே செய்கிறது என்று அவர் பின்னாட்களில் நினைவு கூர்ந்தார். ஆனால் பதிப்பாளர்களுக்கு அனுப்பும் முன்னமே நாவலைப் படித்த அவரது தங்கை நாவல் பற்றிய அவரது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘’இந்த நாவலை எழுதும்போது நாவல் பிரசுரம் ஆகுமென்றோ அல்லது நாவலுக்கென்று தனிப்பட்ட வாசகர்கள் உருவாகி வருவார்கள் என்றோ நம்பவில்லை. நாவலுக்கான கரு மனதில் உதித்ததும் நாவலின் கதாபாத்திரங்கள் மெல்ல மனதில் வடிவம் கொள்ள ஆரம்பித்தார்கள், நான் என் கதாபாத்திரங்களை வளர்த்தெடுத்தேன் அவ்வளவே. நாவலை முடிக்க எனக்கு பன்னிரெண்டு வருடங்கள் ஆனது.’’ என்று சொல்லும் ஸ்டுவர்ட்டின் முதல் நாவல் இது. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் மார்கெரெட் தாட்சர் கொண்டுவந்த நடவடிக்கைகள் ஸ்காட்லாந்து தொழில்துறையின் முதுகெலும்பை முறித்துப் போட்டது. பல தொழிற்சாலைகள் அடுத்தடுத்து மூடப்பட்டன. 1980ஆம் வருடம் ஏறக்குறைய 2,50,000 தொழிலாளர்கள் வேலை இழப்பைச் சந்தித்தார்கள். கடும் நெருக்கடியை ஸ்காட்லாந்து தொழில்துறை எதிர்கொண்டது. டக்லஸ் ஸ்டுவர்ட் இந்தப் பின்னணியையும் தன் நாவலில் சேர்த்துதான் எழுதியுள்ளார்.

டக்லஸ் ஸ்டுவர்ட் பதின் பருவத்தில் வளர வளர தன் பாலுணர்வு குறித்த எண்ணங்கள் அவருக்கு மேலோங்கியிருந்தது. பிற வளரிளம் ஆண்களிலிருந்து அவருடைய பழக்க வழக்கங்கள் வேறுபட ஆரம்பித்தன. அது அவருக்கு பெரிய தொல்லையாக வளர்ந்து நின்றது. சக ஆண்களின் முரட்டுத்தனமான வம்பிழுத்தல்கள் கேலி கிண்டல்களை தாண்டித்தான் ஓரினசேர்க்கையாளர் என்கிற அவரது முடிவில் உறுதியாக அவர் நின்றார். தற்போது அமெரிக்காவில் தன் ஆண் துணையுடன் வசித்து வருகிறார் 44 வயதான எழுத்தாளர் டக்லஸ் ஸ்டுவர்ட். டக்லஸ் ஸ்டுவர்ட் வாழ்க்கையை வாசிப்பின் வழியே அறிந்துகொண்ட பிறகு எனக்குத் தோன்றியது இதுதான். சமயங்களில் புனைவை விடவும் சுவாரசியங்களும் திடுக்கிடும் திருப்பங்களும் கொண்டது யதார்த்த வாழ்வு.

***

சமீபத்தில் கவிஞர் ராஜசுந்தர்ராஜனின் ’நாடோடித்தடம்’ [வாசகசாலை வெளியீடு] என்ற புத்தகத்தை படித்தேன்.  சில புத்தகங்கள் நாம் இழந்துவிட்ட தூக்கத்தை நமக்கு திரும்பவும் பரிசளிக்கும். ஒருவகை எதிர்மறை நன்மை இது. சில புத்தகங்கள் கொட்டாவியை வரவழைக்கும். அப்படியான புத்தகங்களை ஐம்பது பக்கங்கள் கூட தாண்ட முடியாது. ஆனால் வெகு சில புத்தகங்கள் மட்டுமே நம்மை விடாமல் வாசிக்க வைக்கும். உறக்கம், உணவு மறந்து அதில் லயித்துப்போக வைக்கவும் செய்யும். சிந்தனையை ஈவு இரக்கமின்றி ஆக்கிரமிக்கும். அப்படியான ஓர் புத்தகம்தான் ‘நாடோடித்தடம்’.

தமிழில் கட்டுரை என்பது தகவல்களின் அடிப்படையில் எழுதப்படுகிறது. கட்டுரைகளில் வெகு அபூர்வமாகத்தான் அனுபவம் வெளிப்படும். ஆனால் ராஜசுந்தர்ராஜன் தன் வாழ்வனுபவங்களை தேர்ந்த புனைவு மொழியில் எழுதுகிறார். தேவைப்படும்போதெல்லாம் சங்கத் தமிழிலக்கிய வரிகள், சமகால இலக்கிய வரிகள் சமயங்களில் அவருடைய சொந்த கவித்துவமான வரிகளையும் கையாள்கிறார். இதனால் வெவ்வேறு இலக்கிய வடிவங்களின் கலப்பியல் ரசவாதம் இவருடைய கட்டுரைகளில் ஒன்று சேர்ந்து ஒரு அபூர்வ வாசிப்பு ருசியைத் தந்து விடுகிறது. வாழ்வில் இருளும் ஒளியும் பகடையாடும் கணங்களின் அகடு முகடுகளின் வர்ண வேறுபாட்டை தன் சொந்த அனுபவங்களின் ஊடே சரளமாக சொல்லிப் போகிறார் ராஜசுந்தர்ராஜன். அந்த அனுபவங்களின் வழி வெளிப்படும் ஞானம் தன்னை முன்னிறுத்தாமல் வாழ்வின் அபூர்வ ஒளிக்கீற்றை ஒரு நீர்வண்ண ஓவியம் போல தீற்றுகிறது. அதன் உள்ளுறை இழைகளைக் கண்டடைய வேண்டியது வாசிப்பவரின் கடமையாகிறது.

பணி நிமித்தம் இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் அவர் வேலை செய்ய நேர்ந்த வாழ்வின் பொருள் சார்ந்த கட்டாயங்கள் அவருக்கு நன்மையே செய்திருக்கிறது. நல்லதும் கெட்டதுமாக தான் வாழ்ந்து தீர்த்த வாழ்க்கையை ஒருவித எளிதில் கைக்கொள்ள முடியாத அபூர்வமான சமநிலையோடு அவர் சாரமான சரளமானதோர் மொழியில் எழுதிச் செல்கிறார். தன்னை, தன் அனுபவங்களைத் தள்ளி நின்று நியாயத் தராசில் நிறுத்துகிறார். அதன்வழி வெளிப்படும் கண்டடைதல்களை ஆற்றின் சீரான போக்கைப் போல நம்முன் காட்சிப்படுத்துகிறார். அதன் மாறும் நிலப்பரப்பின் இருளும் ஒளியும் ஒரு அழகியல் தன்மையை இவருடைய கட்டுரைகளில் உருவாக்கி வைத்துவிடுகின்றன.

”ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழி எத்தனை பெயர்ச்சொற்களை வேண்டுமானாலும் எடுத்தாளலாம்; ஆனால் ஒரு வினைச் சொல்லைக் கூட இயல்பாக எடுத்தாள முடியாது” என பிரமிள் சொன்னதாக கூற்று ஒரு கட்டுரையினையிடையே வருகிறது. மொழி குறித்த ஒரு கூர்ந்த சிந்தனையை எழுப்பும் இப்படியான வரிகள் போல கட்டுரை நெடுகிலும் ஏராளமான பயன்படு தகவல்கள், தொழிற்சார் கலைச்சொற்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் விரவிக் கிடக்கின்றன. மனிதர்தம் வாழ்வியலின் ஊடே வெளிப்படும் பண்பாட்டுத் தகவல்கள், உணவு முறைகள், வாழ்நெறிகள், வாழ்க்கை முறைகள், நிலப்பரப்புகள், மூச்சைப் போல எங்கும் மனித மனங்களில் விரவிக் கிடக்கும் காமம், என எல்லாமும் ஒரு புனைவின் மயக்கத்தோடு சீரான தாள லயத்துடன் கட்டுரைகளில் சொல்லப்படுகின்றன. சொல்ல வந்ததை மொழியின் துணைகொண்டு எப்படிச் சொல்கிறோம் என்பதிலும் எந்த இடத்தில் சொல்கிறோம் என்பதிலும்தான் எழுத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது இல்லையா? ஆம், எனில் இந்தக் கட்டுரைகளின் கலை வெற்றி சாதாரணமான ஒன்றல்ல.

அனுபவங்கள் ஓர் முப்பட்டக ஒளிச் சிதறலாய் வார்த்தைகள் வழி உருண்டோடுகின்றன. அதன் சிதறும் வண்ணங்கள் நம்மை வியப்பிலாழ்த்துபவை. வாழ்வனுபவங்கள் முதிரா வாழ்வை அல்லது மனித மனங்களை செங்கற் சூளையில் வேகும் மண்கட்டிகளை செங்கல் வடிவத்துக்கு புடம் போடுகின்றன. ஒவ்வொரு மனிதனும் நேர்கொள்ளும் அனுபவமும் ஒரு சுட்ட செங்கல்தான் என்பது மிகையில்லை. சுட்ட செங்கற்கள் அடுக்கி ஓர் அழகான வீடு செய்யும் கட்டடிடக் கலையாளன் போல நேர்த்தியுடனும் அழகியல்பூர்வமாகவும் ராஜசுந்தர்ராஜன் தன் கட்டுரைகளை விரித்துக்கொண்டே போகிறார். அனுபவங்களின் அறிதல் வெளியிலிருந்து அறிதலுக்கு அப்பாலான வெளிக்கு நம்மைத் தள்ளுகின்றன அவரது எழுத்துக்கள். தொட்டணைத்தூரும் மணற்கேணி.

‘உருவுக்குப் பொருந்தா பரூஉ முலைகளால் அவள் வழிமறித்தாள்’, ‘வேர்க்கடலை விற்க வந்து இடையிடையே பாற்கடலை விற்கும் பெண்கள்’, ‘ஆயிரங்கால் மண்டபத்தில் உயிர் கொண்டுவந்த சிலைகளில் ஒருத்தி’, ‘வாயில்மணி கூவலுக்கு கதவு திறந்தால் வடிவில் மறுவில்லாதொரு சிலை வந்து நிற்கிறது’ என புத்தகமெங்கும் விரவிக்கிடக்கும் பெண்பால் குறித்தான அழகியல் விவரணைகள் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும் கவிஞரை அதாவது கட்டுரையை எழுதிப்போகும் எழுத்தாளனை நாம் பெண் பித்தர் என்ற முடிவுக்குக் கொண்டுசெல்லும். [அது ஒரு மேலோட்டமான ஒருதலைப்பட்ச முடிவு.] அதற்கான தரவுகளை அவர்தம் கட்டுரைகளில் அவரே எழுதிக்காட்டியுமுள்ளார். முடிவற்ற பிரபஞ்ச இயற்கையின் மனித வடிவமான பெண்ணை அவர் ஆராதனை செய்கிறார் என்றே நான் நம்பத் தலைப்படுகிறேன். ஆனால் அதற்கப்பால் அந்த பெண்சார் அனுபவங்களை பொதுவெளியில் இத்தனை நேர்மையுடனும் ஆத்மசுத்தியுடனும் அவர் எழுத வேண்டியதன் காரணம் என்னெவென்று நாம் யோசிக்கத் தொடங்குவோமானால் அக்கணம் நாம் ஒரு ரஸவாத பயணத்துக்குத் தயாராகிறோம் என்பது என் முடிவு. புத்தகத்தை வாசிப்பவர்கள் பெரும்பாலோனோர் இந்த முடிவுக்கே வந்து சேர்வார்கள். பூமிக்கே தன் நிலை காத்தல் அவசியம் என்கிறபோது மனிதர்கள் எம்மாத்திரம் சொல்லுங்கள்? பரந்து விரிந்த அனுபவப் பெருவெளியில் வாழ்க்கை தத்தித் தத்தி நடக்கும் ஒரு சிறு குழந்தை போல களிநடனம் புரிகிறது. ரத்த சிராய்ப்புகளைப் பற்றிய கவலையேதுமில்லா குழந்தைகளே களிநடனம் பற்றுகின்றன வாழ்வு நெடுகிலும். அறியாமையின் எல்லைக்குள் நின்று எழுதப்படும் வறட்டு கட்டுரைகள் அலுப்பூட்டுபவை. அவ்வாறான கட்டுரைகளுக்கு மத்தியில் அறிதலின் அனுபவப் புரிதல்களுக்கு உட்பட்டு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகள் தமிழ் உரைநடைக்கு ஓர் கொடை எனலாம். அவர் பெற்ற அனுபவங்களின் பெறுமதி நம்மில் ஓர் மிரட்சியையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே கிளர்த்துகின்றன. கூடவே ரகசியமான ஓர் ஆழ்ந்த பெருமூச்சொன்றையும்.

***

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் முதல் ஐந்து நாள் போட்டித் தோல்வி கடும் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் நம்மிடையே உண்டாக்கியது. பொதுவாகவே இந்தியத் துடுப்பாட்ட அணி என்பது பெரும்பாலான நேரங்களில் ஒரு குழுவாக செயல்படாமல் தனிநபர் ஆட்டக்கார ரட்சகர்களின் பங்களிப்பைக் கோரி நிற்பது. இந்திய அணியின் கடந்த கால வெற்றி தோல்விகளை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் நான் சொல்வதன் அர்த்தம் புரியும். அதனால்தான் இந்தியாவிலிருந்து அதிகப்படியான தனிநபர் துடுப்பாட்ட சாதனைகளோடு ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த இந்திய அணியின் செயல்பாடுகள் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கும். டெண்டுல்கர், தோனி, விராட் கோலி என தனிநபர் துதியை உச்சத்தில் வைத்திருக்கும் போக்கு இந்திய கிரிக்கெட்டுக்கு எப்போதும் நல்லதல்ல.

ஐந்து நாள் போட்டி, ஒருநாள் போட்டி, இருபது-இருபது போட்டி என கிரிக்கெட்டின் ஒவ்வொரு வடிவத்துக்கும் வெவ்வேறு வகை ஆட்டக்காரர்கள் உருவாகிவிட்ட பின் ஐந்து நாள் போட்டி கிட்டத்தட்ட குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கப்பட்டதை கண்கூடாக நாம் கண்டு வருகிறோம். ஐ.பி.எல் எனப்படும் தொழில்முறை வணிகநோக்கு இருபது ஓவர்கள் போட்டிகள் இந்நிகழ்வுக்கான ஒரு பிரதான காரணம். வணிக நோக்கு இருபது இருபது போட்டிகள் வழியே பெருகும் ஆயிரக்கணக்கான கோடிகள் இன்னொரு பிரதான காரணம். என்னைக் கேட்டால் வணிக நோக்கு இருபது இருபது போட்டிகளை ஐந்தாண்டுகளுக்கோ அல்லது நிரந்தரமாகவோ தடை செய்வது கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு நல்லது. அப்போதுதான் ஐந்துநாள் துடுப்பாட்டப் போட்டிகளுக்கு ஒரு மறுமலர்ச்சி வரும். ஆனால் இந்தியப் பெருமுதலாளிகளின் [நான் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர்களைத்தான் சொல்கிறேன்] விருப்பம் கிரிக்கெட்டை வளர்ப்பதாகவோ அல்லது காப்பாற்றுவதாகவோ இருக்காது. வருங்காலத்தில் இன்னும் பல்லாயிரம் கோடிகளைப் பெருக்குவதாக மட்டுமே இருக்கும் என்பது வெளிப்படை. கோடிகளைப் பெருக்கும் கற்பக விருட்சமான வணிக நோக்கு இருபது ஓவர்கள் போட்டிகள் வந்த பிறகு ஐந்து நாள் துடுப்பாட்டப் போட்டியில் நிலைத்து ஆடும் போக்கு ஒப்பீட்டளவில் குறைந்து வருகிறது என்பது என் எண்ணம். இரண்டு மூன்று நாட்களிலேயே ஐந்து நாள் துடுப்பாட்டப் போட்டிகள் முடிவுக்கு வந்துவிடுகின்றன. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற முதல் ஐந்து நாள் போட்டியும் அப்படியாக பாதியில் முடிந்துபோன போட்டிதான். இந்தியத் துடுப்பாட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத மோசமான சாதனையாக இந்திய அணி 36 இலக்கு எண்ணிக்கைக்கு ஆட்டம் இழந்தது. அணியில் ஒரு ஆட்டக்காரர் கூட இரண்டு இலக்கு எண்களை எட்டவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஐந்து நாள் போட்டிகளில் குறைந்தபட்ச ஸ்கோர் 350 ஆகும். போட்டி ஐந்து நாட்களும் குறைவில்லாமல் ஆடப்பட வேண்டும். மிகப்பெரிய வெற்றி மதிப்பெறு எண்ணிக்கையை உருவாக்கி எதிரணியை திணறச் செய்ய வேண்டும். அப்படியான ஒரு ஆட்டம்தான் கோல்கட்டாவில் லஷ்மணும் டிராவிடும் விளையாடி வெற்றி பெற்றுத் தந்த ஆட்டம். தொடர்ச்சியாக 16 ஆட்டங்களில் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக வலம் வந்த ஆஸ்திரேலிய அணியை டிராவிட்-லட்சுமண் இணை மண்ணை கவ்வச் செய்தனர். இத்தனைக்கும் முதல் தடுப்பு ஆட்டத்தில் [இன்னிங்சில்] இந்தியா சொற்ப ஓட்டங்களுக்கு [171] ஆட்டக்காரர்களை இழந்தது. இரண்டாவது தடுப்பு ஆட்டத்தில் நிதானமாகத் தொடங்கி வலுவான வெற்றி மதிப்பெறு எண்ணிக்கையை 657 ஆக உயர்த்தினார்கள் அவர்கள் இருவரும். அந்த போட்டியில் இந்தியா பெற்ற வெற்றி மறக்க முடியாதது.

தொடர்ச்சியாக துடுப்பாட்டம் பார்க்க ஆரம்பித்தது கல்லுரிப் படிப்பின்போதுதான். ஐந்துநாள் துடுப்பாட்ட போட்டிகளின் போது கல்லூரிக்கு கட்டாய விடுமுறை எடுத்துக்கொள்வேன். எனக்கு மிகவும் பிடித்த இரண்டு துடுப்பாட்ட ஆட்டடக்காரர்கள் ராகுல் டிராவிட்டும் வங்கிபுரப்பு வெங்கடசாய் லட்சுமணும் [வி வி எஸ் லட்சுமண்]. சக விடுதியறை வாசிகள் அப்போதைய நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு வெளியேறியதும் கூடாரத்தை காலி செய்துவிடுவார்கள். ஆனால் நான் டிராவிட், லட்சுமண் ஆடும் வரைக்கும் முழுப் போட்டியையும் பார்த்துக்கொண்டிருப்பேன். என் தனிப்பட்ட குணாம்சத்தில் டிராவிட், லட்சுமண் ஆகிய இருவரும் செலுத்திய தாக்கம் பெரிது. நிதானம், கவனக்குவிப்பு, நிலைப்புத்திறன், வெற்றி தோல்வி குறித்து கவலையில்லாத தொடர் செயல்பாடு என வாழ்வின் மிக முக்கியமான குணவியல்புகளை கற்றுக் கொடுத்த ஆசான்கள் அவர்கள் இருவர்தான். ஐந்துநாள் துடுப்பாட்டப் போட்டியை ஆழ்ந்து பார்ப்பது என்பது ஸென் தியானத்துக்கு ஒப்பானது. மற்றவர்களுக்கு என்னுடைய இந்தக் கருத்து நகைச்சுவையை வரவைக்கலாம், ஆனால் ஐந்துநாள் துடுப்பாட்டப் போட்டிகள் பார்ப்பது என்பது ஒருவகையான உருப்படியான அகப் பயிற்சிதான். முக்கியமாக அலைபாயும் எண்ண அலைகளால் கவனம் ஒரு நிலையில் இல்லாத என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு.

இந்திய அணியின் முதல் ஐந்து நாள் துடுப்பாட்டப் போட்டியின் தோல்வி என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய ஒரு தோல்வி அல்ல. இந்திய அணி பல தோல்விகளை அந்நிய மண்ணில் பெற்றிருந்தாலும் இந்தத் தோல்வி என்பது ஏன் முக்கியமானதாக ஆகிறது என்றால் இந்தப் போட்டி வணிக நோக்கு இருபது இருபது போட்டிகள் [IPL] துபாயில் முடிந்தபின் இந்திய அணி கலந்துகொள்ளும் போட்டி என்பதால்தான். பெரும்பாலான வீரர்கள் வணிகநோக்கு இருபது இருபது போட்டிகளில் விளையாடிய செயல்திறனை வைத்துதான் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். புஜாரா மட்டுமே ஓர் அபூர்வமான விதிவிலக்கு. இவ்வகையான அணித் தேர்வுமுறை இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அப்படியான முறையற்ற தேர்வின் எதிரொலிதான் இந்திய அணி 36 ஓட்டங்கள் எடுத்து மோசமான தோல்வியைத் தழுவியது. அந்தத் தோல்வியிலும் சில நன்மைகள் நிகழத்தான் செய்தன. அணியின் நிரந்தர தலைவர் விராட் கோலி தன்னுடைய மனைவியின் பிரசவத்தின் பொருட்டு இந்தியா திரும்ப அஜிங்க்ய ரஹானே அடுத்து வரும் ஆட்டங்களுக்கு அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். மோசமான ஒரு தோல்விக்குப் பின் தலைவராக நியமிக்கப்பட்ட ரஹானே தன்னுடைய தலைமைப் பண்பை நிரூபித்துக் காட்டியுள்ளார். இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஒரு கடும் பின்னடைவுக்குப் பின் ஒரு அணி பெறும் வெற்றி முக்கியமானது. ரஹானே அணிக்குத் தேவையானபோது முதல் தடுப்பு ஆட்டத்தில் நின்று நிதானமாக நிலைத்து ஆடி சதம் அடித்தது ஆகட்டும், பலமான ஆஸ்திரேலிய அணிக்கு பந்து வீச்சின்போது தொடர் அழுத்தங்களை உருவாக்கி கட்டுக்குள் கொண்டுவந்து தோல்வியை நோக்கி அனுப்பியதும், தேவையான நேரங்களில் பந்துவீச்சில் தேவையான மாற்றங்களைச் செய்ததும், களத்தில் சரியான இடத்தில் வீரர்களை நிறுத்தியதும் [Fielding Placement] என அவர் ஒரு முன்மாதிரியாக செயல்பட்டார் என்றே சொல்லவேண்டும். அதன் பலனை ரஹானே வெற்றியாக அறுவடை செய்தார். இந்த ஆஸ்திரேலிய தொடரில் மட்டுமல்ல அடுத்துவரும் டெஸ்ட் தொடர்களிலும் ரஹானே அணித் தலைவராக செயல்பட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்க வேண்டும். களத்தில் ஆவேசமாக செயல்படும் கோஹ்லியை விடவும் நிதானத்துடன் எதிரணியை வியூகத்தால் வெல்லும் ரஹானேதான் அணித்தலைமைக்கு பொருத்தமானவர்.

[துடுப்பாட்ட வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் அவர்களின் நினைவுக்கு…]

*** ***

2020.

மனிதர்கள் மறக்க முடியாத ஆண்டு இது. அல்லது எல்லோரும் மறக்க நினைக்கிற ஆண்டு என்றும் சொல்லலாம். கோவிட் பெருந்தொற்று நம் வாழ்க்கையை அட்சர சுத்தத்துடன் தலைகீழாக புரட்டிப் போட்ட ஆண்டு. நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டிய ஆண்டும் கூட. எல்லா ஆண்டைப் போலவும் 2020 சனவரியில் தொடங்கியபோது நம்மில் பலரும் அதற்கடுத்த இரண்டு மாதங்களில் எல்லாம் மாறப் போகிறது என்பதை அறிந்தாரில்லை. வழக்கமான அசட்டைத்தனங்களுடன் சோம்பலுடன் நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தன. நவம்பரில் சீனாவில் வின் வுஹான் மாகாணத்தில் வைரஸ் தொற்று பரவுகிறது என்ற சிறிய அளவிலான செய்தியைப் படித்து நாம் கடந்து விட்டோம். சிறுமி வன்புணர்வு செய்து கொலை என்ற செய்தியை எப்படிக் கடப்போமோ அப்படி. ஆனால் எல்லாம் மார்ச் மாதம் வரைதான். மெல்ல மெல்ல சீனாவில் இருந்து கசிந்த காணொளிகள் நோய்ப் பரவலின் தீவிரத்தை நமக்கு உணர்த்தின. நாம் உணரும் முன்னே நம் அரசு அதை உணர்ந்திருந்தால் இதைவிட இன்னும் சிறப்பாக வைரஸ் தொற்றைக் கையாண்டிருக்க முடியும். ஆனால் வர்த்தக வலைப்பின்னல் அரசின் கைகளைக் கட்டிப்போட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நம் மனங்களில் பீதி பரவத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்திகள். உயிர்ப் பயம் நம்மில் பெரும்பாலானோர்க்கு உளவியல் சிக்கல்களைத் தோற்றுவித்தது. பாதிக்கும் மேல் வேலை இழந்தனர். சிறு குறு தொழில்கள் முடங்கின.

பெருந்தொற்று காலத்தில் இரண்டு பெரு நன்மைகள் விளைந்தன. இயற்கை தன்னை புத்துப்பித்துக்கொள்ள அவகாசம் கிடைத்தது. உலக அளவில் கடந்த முப்பதாண்டுகளின் வளர்ச்சியின் பெயரிலான வேகமான சீரழிவு நாம் கற்பனை செய்ய இயலாதது. அதன் உச்சமாக அமேசான் காடுகளில் ஒரு பகுதி தீ பற்றி எரிந்தது. அதேபோல ஆஸ்திரேலியா காடும் எரிந்தது. தீயில் அழிந்த காட்டு விலங்குகளின் படங்கள் மனத்தை வேதனை கொள்ளச் செய்தன. ஆனால் வன விலங்குகளின் ஓலங்கள் கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் காதில் விழவில்லை. இந்த வைரஸ் தொற்றை முக்கியமான காடு அழிப்பின் விளைவுதான் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கையியல் ஆர்வலர்கள் சொன்னார்கள். அவர்கள் குறிப்பாக இயற்கை விவசாயம், நோயில்லா மருத்துவம், தற்சார்பு வாழ்வியல் என இயங்குபவர்கள். அவர்கள் சொன்னது சரிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் பிரிட்டன் அறிவியலாளர்கள் அதே கருத்தைச் சொல்லியுள்ளார்கள்.

கோவிட் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் தமிழக பாரம்பரிய மருத்துவ நிபுணர்கள் கபசுரக் குடிநீர் என்ற மூலிகை மருந்தைப் பரிந்துரைத்தார்கள். அது பெருமளவில் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்தது. வீர பாபு, விக்ரம் குமார் முதலிய சித்த மருத்துவர் குழாம் (ஆங்கில மருத்துவத்தோடு ஒப்பிடுகையில் இறப்பு விகிதம் மிகக் குறைவான) சிறப்பான சிகிச்சை முறையைக் கையாண்டு நோயாளிகளை மீட்டார்கள்.

அளவுக்கு அதிகமான காடழிப்பு, அதிகரித்துக்கொண்டே போகும் நுகர்வு கலாச்சாரம், பெருமுதலாளிகளின் பேராசை, நம் பாரம்பரிய உணவு/வாழ்க்கைமுறையை சிந்தனை அற்று கைவிட்டது, இயற்கை குறித்தான அக்கறையின்மை என எராளமான விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். நாம் நம் வாழ்க்கைமுறையை அவரவர் அளவில் சுய சிந்தனை செய்து சரி செய்து கொள்ளும் ஒரு பெரு வாய்ப்பாகவே இந்த பெருந்தொற்று காலம் 2020 நமக்கு படிப்பினைகளைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது. இயற்கையின் குரலை செவி கேட்பதும் கேளாமல் போவதும் இனி அவரவர் பாடு.

தொடரும்…     

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close