தொடர்கள்

காகங்கள் கரையும் நிலவெளி; 1-சுயபுராணம் – சரோ லாமா

தொடர்கள் | வாசகசாலை

  1. கொஞ்சம்சுயபுராணம்:

கோவிட் 19 புண்ணியத்தால் இந்தப் பிறவியில் காணாததையெல்லாம் நம்மால் காண முடிந்திருக்கிறது. நம்ப முடியாத விஷயங்களெல்லாம் நிகழ்ந்துவிட்டன. முகத்தைத் திருப்பிக்கொண்டு போனவர்களெல்லாம் BE SAFE, STAY SAFE என்று குறுஞ்செய்தி அனுப்பினார்கள். நம்மைப் பிரியவே மாட்டார்கள் என்று நினைத்தவர்கள் ஒரு சின்ன நலம் விசாரிப்பு செய்தி கூட அனுப்பவில்லை. வாழ்க்கையின் எங்கோ ஒரு மூலையில் சென்று ஒளிந்து கொண்டார்கள். வாழ்க்கை ஒரு வினோதம்தான். நம்பினால் நம்புங்கள்.

கோவிட் வீடடங்கு காலங்களில் பழைய ஹாலிவுட் கிளாஸிக் படங்களை திரும்பப் பார்த்தேன். திரும்பத் திரும்பத் பார்த்தேன் என்பதே சரி. காட்பாதர்-1, 2 திரைப்படங்களை ஒரு மாதம் முழுவதும் தினமும் ஒரு பிராத்தனை போல பார்த்தேன். மிகையில்லை. காட்பாதர் தொடர் வரிசைப் படங்களை பார்த்துவிட்டு அது குறித்த பிரான்சிஸ் போர்ட் கொப்போல்லோவின் நேர்காணல்களைப் படித்தேன். தன் படங்களிலேயே அதிக மன அழுத்தத்துடன் வேலை செய்தது காட்பாதர் படத்துக்குத்தான் என்கிறார் கொப்போல்லோ. ஆனால் தனக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்ததும் அந்தப் படம்தான் என்கிறார்  அவர். மூன்றாம் பாகம் என்னை அவ்வளவாகக் கவரவில்லை. எனினும் முதலிரண்டு பாகங்கள் மகத்தான திரைப்படங்கள். காட்பாதர் படங்களிலிருந்து நான் நிறைய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொண்டேன் என்பது மிகை அல்ல. சினிமா கற்க விரும்புபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் காட்பாதர். அப்படியே காட்பாதர் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்டன் வில்லிஸ்ஸின் நேர்காணல்களை தேடிப்பிடித்துப் படித்துப் பாருங்கள். அற்புதம். ஒரு திரைப்படத்தை உருவாக்க எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது புரியும்.கார்டன் வில்லிஸ்ஸின் நேர்காணல் ஒன்று திரை எழுத்தாளர் ஜா.தீபாவின் மொழிபெயர்ப்பில் ஒளிவித்தகர்கள் பாகம்-1 என்ற புத்தகத்தில் இருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு.

 

 

கோவிட் வீடடங்கு தினங்கள் கொடுத்த இன்னொரு வாய்ப்பு ஆங்கிலத்தில் கவிதைகள் வாசிப்பது. ’கோணங்கள்’ ஆனந்த் ஸாரின் தூண்டுதலின் பேரில் நிறைய மின் புத்தகங்கள் கண்டடையவும் வாசிக்கவும் வாய்த்தன.  தினமும் ஒரு ஆங்கிலக் கவிஞரின் பத்திருபது கவிதைகளைப் படிப்பது ஒரு அர்த்தம் நிறைந்த பழக்கமாகிவிட்டது. கவிதை பற்றிய எனது புரிதல்களை ஆங்கிலக் கவிதைகள் மாற்றி அமைத்தன. ஒவ்வொரு கவிதையும் எனக்கு ஒரு புதிய ஆங்கிலச் சொல்லையும் அதன் அர்த்தத்தையும் எனக்குப் பரிசளித்தது என்றுதான் சொல்லவேண்டும். கவிஞரின் உலகம் நமக்கு லேசாகப் பிடிபட்டுவிட்டால் அல்லது அவர்களின் உலகில் நம்மால் பிரவேசிக்க முடிந்துவிட்டால் அதைப்போலொரு நல்வாய்ப்பு வேறெதுவுமில்லை. நீங்கள் வாசிப்பின் பெருங்கடலில் காணாமல் போய் மனம் மணக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.  அப்படி வாசித்து எனக்குப் பிடித்த, மொழிபெயர்க்க எளிமையான சில கவிதைகளை மொழிபெயர்த்து முகநூலில் பதிவேற்றினேன். நான் மிகவும் மதிக்கும் மொழிபெயர்ப்பு ஆளுமையான ஆர்.சிவகுமார் ஸார் படித்துவிட்டு நிறைய ஊக்கம் கொடுத்தார். நண்பர்கள் தொடர்ச்சியாக மொழிபெயர்க்கத் தூண்டினார்கள். அப்படியாக நூறு கவிதைகளுக்கும் மேலாக ஒரு வேகத்தில் மொழிபெயர்த்தேன். விரைவில் அவையெல்லாம் தொகுப்பாக வரவிருக்கின்றன. இப்படியாக தமிழ் கூறும் நல்லுலகில் நானும் மொழிபெயர்ப்ப்பாளனாகி விட்டேன். எல்லாம் கோவிட்-19 செய்த மாயம். நண்பர்களுக்கு நன்றி.

  1. சமையல்குறிப்புகள்:

கோவிட்-19 வீடடங்கு காலத்தில் கற்றுக்கொண்ட இன்னொரு அற்புதமான விஷயம் சமையல். பேச்சிலர் ‘வாலிப வயது’ காலங்களில் பெங்களூரு நண்பர்கள் பெரும்பாலும் சமையலை  கவனித்துக் கொள்வார்கள். அவர்கள் என்னுடன் படித்த கல்லூரி நண்பர்கள் என்பதால் கொஞ்ச காலம் வண்டி பிசிறில்லாமல் பசியில்லாமல் ஓடியது. நான் கொஞ்சமாய் அவ்வப்போது அவர்களுக்கு உதவி செய்வதோடு சரி. நண்பர்களிடம்தான் சாம்பாருக்கு துவரம் பருப்பு சேர்க்க வேண்டும் என்பதையும் வெந்நீருக்கும் ரசத்துக்குமான நுண்ணிய வேறுபாட்டையும் அறிந்துகொண்டேன் எனலாம். +2 வரை வீட்டில் சாப்பாடு சரியில்லையென்றால் பெரும்பாலும் தட்டை விசிறி அடித்துவிட்டு எழுந்துவிடுவேன். இதைக்கண்டுகொண்ட அம்மாச்சி என் வாழ்க்கையில் நான் பயப்பட்ட ஒரே நபரான தாத்தா இருக்கும்போது எனக்கு சாப்பாடு போட ஆரம்பித்தார். வேறுவழியில்லாமல் பூனையிடம் சிக்கிய எலிபோல முகத்தை வைத்துக்கொண்டு சாப்பிட்டு முடித்துவிடுவேன். பின்னாட்களில், குறிப்பாக தங்கை சமையல் செய்து நான் சாப்பிடுகிற கடும் சோதனையெல்லாம் கடவுள் எனக்குக் கொடுத்த பிறகு என் அம்மாச்சி சமையலின் அருமை புரிந்தது. அதன் பிறகு உப்பில்லாமல் கூட சாப்பிடப் பழகிக் கொண்டேன் என்பதையும் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். அதுவும் மனைவியின் உப்பில்லாத சமையல் என்றால் ‘என்ன ருசி, என்ன ருசி’ என்றே சாப்பிட்டு முடித்துவிடுவேன். ஆனால் இந்தக் கோளாறையெல்லாம் என் மகன் செய்வதில்லை. அவனுக்கு அவன் அம்மா சமைத்த உணவு பிடிக்கவில்லை என்றால் உடனே தட்டைக் கீழே வைத்துவிட்டு என்னிடம் வந்துவிடுவான். ‘அப்பா எனக்கு பூரி வாங்கிட்டு வரியா’ என்றால் வீட்டில் சாப்பாடு சரியில்லை என்று அர்த்தம். கொடுத்து வைத்தவன். என்னால் சொல்ல முடியாததை எவ்வளவு எளிமையாக ஆனால் ஆணித்தரமாக சொல்லிவிடுகிறான் இந்தப் பயல். ம்ம்ம்ம்… எல்லாவற்றிக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்தான் போல… சமையலில் நான் கத்துக்குட்டி. ஆனால் நான் சமைத்ததை, ”நல்லாருக்கு சரோ” என்று சொல்லி சாப்பிடும் நண்பர் ஒருவர் எனக்கு உள்ளார். அவர் பொருட்டு நான் உளப் பெருமிதம் அடைகிறேன். என் சமையலையும் புகழும் நீங்கள் ‘வாழ்க நீ எம்மான்!’

 

என் சொந்த சமையலைப் பற்றி சொல்லப்போய் ஏதேதோ சொல்லிவிட்டேன். மனைவி ஊரில் இல்லை. இப்போதைக்கு எந்த பிற விளைவுகளும் இல்லை. எனவே மீண்டும் சொல்கிறேன். வாழ்க கொரோனா!

 

  1. இரண்டு நாவல்கள்:

கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஞாயிறு கடை உண்டு’ நாவலைப்பற்றி திரை இயக்குநர் எழுத்தாளர் ஜெகன் நடராஜன் ஒரு விமர்சனக் குறிப்பை ஆவநாழி மென்-மின் இதழில் எழுதியிருந்தார். அதைப் போலவே சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப்பின் ‘ஆலகாவின் பெண்மக்கள்’ நாவலைப் பற்றி கே.என்.செந்தில் தமிழினி இணைய இதழில் எழுதியுள்ளார். இரண்டு விமர்சனங்களும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நாவலின் கதையை மொத்தமாக எழுத்தில் சொல்லாமல் அதே நேரத்தில் நாவலின் முக்கியமான கணங்களை கோடிட்டுக் காட்டியிருந்தார்கள் இருவரும். பிரபஞ்சன் நினைவு நாவல் போட்டியில் விருது பெற்று கடந்த புத்தகச் சந்தையில் பரபரப்பாக விற்பனையாகியிருந்தாலும் ஜெகன் நடராஜனின் விமர்சனக் குறிப்பை படித்த பின்னர்தான் ‘ஞாயிறு கடை உண்டு’ நாவலை வாங்கினேன். தற்போது வாசிப்பில் இருக்கிறது. மலையாள நாவலை இனிமேல்தான் வாங்க வேண்டும். ஞாயிறு கடை உண்டு – டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு. ஆலஹாவின் பெண்மக்கள் – சாகித்ய அகாதமி வெளியீடு. மொழிபெயர்ப்பு: நிர்மால்யா.  படித்துவிட்டு விரிவாக மீண்டும் எழுதவேண்டும்.

 

 

  1. டாக்சி டிரைவர் – மனிதர்தம் பயணங்களுடன் ஒரு உரையாடல்:

இணையத்தில் தேடல் என்பது நாம் எதிர்பாராத ஒன்றை எப்போதும் தரவல்லது. புதையலைத் தேடினால் பூதம் கிடைக்கும். மூளை சூடாகி பூதத்தைத் தேடினால் புதையலே கிடைக்கும். அப்படித்தான் எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது இந்தப் புத்தகம் கிடைத்தது. புத்தகத்தின் பெயர் Confessions of a New York Taxi Driver. யூஜின் சாலமோன் எழுதியது. இவர் தொழில்முறை எழுத்தாளர் அல்ல. இவர் ஒரு டாக்சி டிரைவர். 1977ஆம் வருடம் தொடங்கி முப்பது வருடங்கள் நியூயார்க் நகரில் டாக்சி ஓட்டுநராகப் பணிபுரிந்துள்ள இவர் தன் அனுபவங்களை எழுதியுள்ளார்.

 

மன்ஹாட்டன் நியூயார்க் அருகில் இருக்கும் ஒரு நகரம். இது பதிமூன்று மைல் நீளமும்  இரண்டு மைல் அகலமும் கொண்ட ஒரு தீவு. மொத்தம் 13237 டாக்சிகள் நியூயார்க் மன்ஹாட்டன் நகரத்தில் இருந்தன என்கிறது ஒரு புள்ளி விவரம். தடுக்கி விழுந்தால் ஒரு டாக்சி என்பது யதார்த்தம். இந்தப் புத்தகத்தைப் படிக்க படிக்க எனக்குள் டாக்சி டிரைவர் என்னும் மார்ட்டின் ஸ்கார்சாசியின் திரைப்படம் மனதுக்குள் காட்சிகளாய் விரிந்தது. பால் ஸ்ராடர் திரைக்கதை எழுதி ரொபர்ட் டி நீரோ நடித்த இன்னொரு முக்கியமான திரைப்படம்.

இந்தப் புத்தகத்தை அவர் டாக்சி பயணத்தின் முடிவில் தன்னோடு கைகுலுக்கிய அன்பான மனிதர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.  பயணத்தின்போது குடி போதையில் இருந்தவர்கள் விலக்கு, அதெல்லாம் கணக்கில் வராது என்கிறார். மேலும் தன் டாக்சியின் முதல் பயணியான டாக்டர் ஹாரி கொங்கோளா என்பவரையும் நினைவு கூர்ந்துள்ளார். சுவாரசியமான சமர்ப்பணம்.

 

தொடக்கத்தில் யூஜின் சாலமோன் ஒரு தொழில்முறை எழுத்தாளர் இல்லை என்று  சொன்னேன் இல்லையா? ஆனால் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த பின் அந்த எண்ணம் உடைந்தே போய்விட்டது. பல தொழில்முறை எழுத்தாளர்களின் உரையாடல்களை விட சாலமோனின் உரையாடல்கள் கச்சிதமாகவும் கூர்மையாகவும் இருக்கின்றன. உதாரணமாக பயணி ஒருவர் சாலமோனோடு பேசிக்கொண்டு வருகிறார். வழக்கமான விசாரிப்புகள். பெயர் என்ன, எத்தனை வருடங்கள் டாக்சி ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள், இத்யாதி இத்யாதி. உரையாடலின் முடிவில் அந்தப் பயணி சொல்கிறார், ”ஓ இத்தனை வருடங்களாக டாக்சி ஒட்டிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படி எனில் உங்களிடம் நிறைய கதைகள் இருக்கும்.” அதற்கு யூஜின் சாலமோனின் பதில் ”ஆமாம், உலகின் அதி உயரமான கட்டிடங்களில் ஒன்றான எம்பையர் ஸ்டேட் கட்டிடத்தை விட என்னிடம் நிறைய கதைகள் உண்டு” என்கிறார். ஆச்சரியம்தான்.

 

நடிகர்கள் லியனார்டோ டி காப்ரியோ, ஸீன் பென், டென்னிஸ் ஹாப்பர், ராபின் வில்லியம்ஸ்,  எழுத்தாளர் நார்மன் மெய்லர், பெண் பாடகி சுசன்னே வேகா, நடிகை டயான் கீட்டன், பாடகரும் நடிகருமான கெவின் பேகன், அமெரிக்க பாப் பாடகர் டோனி பென்னட், டென்னிஸ் நட்சத்திரம் ஜான் மெக்கன்ரோ, என இவரது டாக்சியில் பயணம் செய்தவர்களின் பட்டியல் பெரியது.

 

இன்னும் நிறைய இருக்கிறது.

 

பேசுவோம்…

 

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close