தொடர்கள்
Trending

காகங்கள் கரையும் நிலவெளி; 4 – சரோ லாமா

தொடர் | வாசகசாலை

எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தம்  கடந்த  அக்டோபர் 5ஆம் தேதி காலமானார்.  எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தம் அவர்களுடன் எனக்கு நேரடிப் பழக்கம் உண்டு. எதிரே  இருப்பவர்  காதுகளும் மனமும் காதுகளும் மனமும் மணக்க மணக்கப் பேசும் அரிதான ஆளுமைகளில் இவரும் ஒருவர். கடந்த பத்து வருடங்களின் புழுதி நிறைக்கும் புத்தகக் கண்காட்சியின் கார்பெட் அரங்குகளில் அவரைக் காணாது ஒரு வருடம் கூட நிறைவுபெற்றதில்லை. அநேகமாக சந்தியா பதிப்பக புத்தக அரங்கில்தான் அவரைப் பெரும்பாலும் சந்தித்திருக்கிறேன். பார்த்துவிட்ட பின்பு சேர்ந்து காஃபி அருந்துவோம். ’என்னய்யா…’ என்று பெரும்பாலும் தொடங்கும் அவர் பேச்சு அதன் பிறகு மடை திறந்த வெள்ளம் போல பொங்கிப் பெருகும். டால்ஸ்டாயை நான் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று வலியுறுத்தியவர் அவர். அதற்கு முன்னும் டால்ஸ்டாயின் பல சிறு நாவல்களை, சிறுகதைகளை நான் வாசித்திருந்தாலும் அவர் டால்ஸ்டாயைப் பற்றி பேசிக் கேட்டபின் படித்த கதைகள் வேறுவிதமான அர்த்தச் செறிவுடன் துலங்க ஆரம்பித்தன. Two Old Men என்னும் டால்ஸ்டாயின் மகத்தான சிறுகதையை வாசிக்கும்படி அவர் என்னைத் தூண்டினார். அந்தக் கதையை நான் ஆங்கிலத்தில்தான் முதலில் படித்தேன். ஆங்கிலத்தில் படித்ததால் அதன் நுட்பங்கள் சரியாக எனக்குப் பிடிபடவில்லை. இதை சச்சியிடம் கூறியபோது அந்தக் கதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் நீதான் அக்கதையை தேடிக் கண்டடைய வேண்டும் என்றும் அவர் கூறினார். அந்தக் கதையை ஒரு புதையலைத் தேடுவதைப் போல பல மாதங்கள் தேடினேன். அதன் பிறகு எப்பொழுது சந்தித்தாலும், “டால்ஸ்டாயின் கதை படித்தாயா?” என்றுதான் அவரது உரையாடல் தொடங்கும்.

அவர் சொல்லி சில வருடங்கள் சென்ற பிறகுதான் எழுத்தாளர் என்.ஸ்ரீராம் உதவியால்  அண்ணா நகர் நூலகத்தில் ’டால்ஸ்டாயின் சிறுகதைகள்’ என்னும் சிறிய புத்தகத்தில் அந்தக் கதையை நான் கண்டடைந்தேன். ‘இரண்டு வயோதிகர்கள்’ என்னும் தலைப்புடைய டால்ஸ்டாயின் அந்தக் கதை மனதின் ஆழ்மனதில் துலங்கும் ஆன்மீகத்தின் புலப்படாத ஆழங்களையும் எனக்கு அறியத் தந்த கதை என்று இன்றும் என்றும் என்னால் தயங்காமல் கூற முடியும். சச்சியின் தோளில் எப்போதும் சில புத்தகங்களோடு ஊசலாடிக் கொண்டிருக்கும் ஜோல்னாப் பை அவர் சொந்த வாழ்வின் குறியீடு. ஒரு நல்ல வாசகரின் ஜோல்னாப் பை பொக்கிஷங்கள் நிறைந்தது. இலக்கிய உலகம் தன் பொக்கிஷத்தை இழந்துவிட்டது.

மௌனி கதைகளை பதிப்பித்தவர், மொழிபெயர்ப்பாளர், இந்தியாவெங்கும் ஒரு நாடோடிப் பயணியாக சுற்றி அலைந்து இந்த தேசத்தின் ஆன்மாவை தன் நடைவழி அறிந்துகொள்ள முயன்றவர் என்றெல்லாம் அவரைப் பலரும் அடையாளப்படுத்தினாலும் அவர் ஒரு அற்புதமான மனிதர், சஹ்ஹிருதயர், ஆசிரியர் மற்றும் வழிகாட்டி. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாத ஆளுமை அவர். இந்தப் பண்பு அவர் இந்தியா முழுவதும் நாடோடியாகச் சென்ற பயண அனுபவங்கள் தந்தது என்பது என் யூகம். எப்போதும் குறும்பும் உற்சாகமும் கொப்பளிக்கும் உரையாடலில் நம்பிக்கை உள்ள ஒரு ஆசிரியரை நாம் இழந்துவிட்டோம். கி.அ.சச்சிதானந்தம் என்னும் நல் ஆசிரியருக்கு என் வணக்கங்கள்.

தமிழினி வெளியிட்டுள்ள அவருடைய ”அம்மாவின் அத்தை” என்னும் குறுநாவல்களும் நெடுங்கதைகளும் அடங்கிய தொகுப்பு முக்கியமான ஒன்று. ‘அம்மாவின் அத்தை’ அறுபதுகளின் காஞ்சிபுரம், சென்னை நிலப்பரப்புகளின் மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் குறுநாவல். பதின் வயதில் இருக்கும் தாமுவின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. பூவரசம் பூவுக்கும் பூசணிப் பூவுக்கும் வித்தியாசம் தெரியாதவனாக இருக்கிறான் தாமு. மஞ்சள் பூக்களைப்  பார்த்தவுடன் மார்கழி மாதம் நினைவுக்கு வரும் கிராமத்தானாக அவன் இருக்கிறான்.  தாமு ஒரு ஊர்சுற்றியாக இருக்கிறான். ஆதரவு அற்ற தன் குடும்பத்தை தாங்கிப் பிடிக்கும் அம்மாவின் அத்தைக்கு அவன் நெருக்கமானவாக இருக்கிறான். அவன் வாழ்வின் பெரும் பொழுதுகள் அத்தையுடன் கழித்த பொழுதுகளிலும், அத்தை பற்றிய நினைவுகளிலும்  நிறைந்திருக்கிறது.  ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட கதையாக மட்டுமே நகராமல், சுதந்திரத்துக்கு முன்பான நாற்பதுகளின் சமூக அரசியல் சூழல்களும், சாதியப் படிநிலைகளும் ஆங்காங்கே போகிற போக்கில் ஆழத்துடன் சொல்லப்படுகின்றன. பாலாறு கட்டப்படும் சூழலும், அந்த வேலையை பொன்னுரங்கம் [அம்மாவின் அத்தை பெயர் இதுதான்] அண்ணன்கள் செய்ய ஆரம்பிக்கையில் வெள்ளைக்காரன் துரை கண்களில் அழகான பதினோரு வயது பொன்னுரங்கம் கண்ணில் பட்டுவிடுகிறார். அவன் எடுத்த எடுப்பிலேயே பொன்னுரங்கத்தை எனக்கு கட்டிக் கொடுப்பீர்களா என்று நேரிடையாகவே கேட்டுவிட பொன்னுரங்கத்தின் வாழ்வில் புயல் வீச ஆரம்பிக்கிறது. அவசர அவசரமாக பத்து  வயது நிறையாத பொன்னுரங்கத்தை மதராஸில் கட்டிக் கொடுக்கிறார்கள். ஒரே வருடத்தில் விதைவையாக பிறந்தகம் வந்து சேர்கிறார் பொன்னுரங்கம். அதன் பின் அந்த வீட்டின் ஜடப் பொருட்களில் அவரும் ஒருவர். அவர் பின்னர் தாமுவின் வீட்டுக்கு எப்படியோ வந்து சேர்கிறார். தாமுவுக்கும் அத்தைக்குமான அன்பின் கொடிவேர்கள் படரும் உறவு இந்தக் குறுநாவலை அர்த்தமுள்ளதாக்குகிறது. பொன்னுரங்கம் அத்தை பெரும்பாலும் அதிகம் பேசுபவர் இல்லை. ஆனால் அதிகம் தன் உள்ளுணர்வால் வழிநடத்தப்படும் பெண்ணாக அவர் இருக்கிறார். அந்த உள்ளுணர்வு அம்மாவின் அத்தையை ஒரு நாளும் கைவிடுவதில்லை. அந்த உள்ளுணர்வின் வழித்தடம்தான் அம்மாவின் அத்தையை தன் விவசாய நிலங்களுக்கு வேளாண்மை செய்ய உதவியாக இருக்கும் மாமாவின் மரணத்துக்கு முந்தைய நாள் ஊருக்கு கொண்டு சேர்க்கிறது. தன் மரணத்தை முன் அறிந்து தன் பிறந்த வீட்டுக்கு தன்னைக் கொண்டு போகச் சொல்கிறது.

அங்கமாலி டைரீஸ் படத்தில் எனக்குப் பிடித்தமான காட்சி உண்டு. கதை நாயகன் வின்சென்ட் பெப்பே தன்  மனதுக்கு நெருக்கமான கால்பந்து வீரர் பாபு இறந்துவிட்ட பிறகு சொல்லும் ஓர் உரையாடல், “துக்கங்கள் பெருகும்போது நமக்குப் பிராயம் கூடி விடுகிறது”. இந்தக் குறுநாவலில் தாமு தனக்குப் பிடித்தமான அம்மாவின் மரணத்தை அருகேயிருந்து பார்க்கிறான். அம்மாவின் அத்தை இன்னும் மூன்று நாட்களில் தான் இறந்துவிடுவேன் என்று நிச்சயமாகச் சொல்லிவிட அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற தாமுவின் அம்மா மற்றும் அண்ணனின் பேச்சைக் கேளாமல் மதராஸிலிருந்து அத்தையின் சொந்த ஊருக்கு வாடகை ஆஸ்டின் காரில் கொண்டு போகிறான். அத்தை அவள் சொன்ன மாதிரியே மூன்றாம் நாள் இறந்துபோய் விடுகிறாள். அத்தையின் நிலத்தில் வேலை செய்யும் தலித் மக்களின் உதவியோடு நல்லடக்கம் செய்கிறான். அத்தை இறந்துவிட்ட பின்பு மழை அடித்துப் பெய்கிறது. பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. தூரத்தில் அத்தையை எரித்த ஆலமரத்தை ரயில் நிலையத்திலிருந்து வெறித்துப் பார்ப்பதோடு இந்தக் குறுநாவல் முடிகிறது.  நமக்குப் பிடித்தமான ஒருவரின் மரணத்தை நாம் உணரும் தருணம் நாம் நமதேயான குழந்தமையை வீசி எறிந்து அடுத்த கட்ட பிராயத்துக்கு தாவுகிறோம். இதைக் கடந்து வராத மனிதர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். தாமு அவர்களில் ஒருவன்.

நட்சத்திரங்களை ரசிக்க ஆந்தையின் ஒலி தடையாக இருக்கிறது‘,

அவளின் உடல் அழகின் சௌந்தர்யத்தை பல்வரிசைக் காவி விரோதமாக ஆக்கியது‘,

ரயில் புறப்படும்போது ரயில் பெட்டி தடதடவென்று ஆடியது, அதற்கும் கிழடு தட்டிவிட்டிருந்தது‘,     

பசித்து வீடு திரும்புகிற விளையாட்டுப் பையனுக்கு வெல்லமும் அவலும் வாழைப்பழமும் தந்து பசிபோக்கும் அத்தை அவள்‘,

எங்கிருந்தோ புறப்பட்ட பறவையின் ஒலி காற்றில் மிதந்தபடி இருந்தது‘, 

மிக உயரத்துக்கு நீண்ட பச்சை இலைகள் பட்டாக்கத்தி போல குத்திட்டு நின்றன‘,

அத்தையைப் பார்க்கும்போதெல்லாம் பெருமாள் கோயில் யானைதான் தாமுவுக்கு நினைவுக்கு வந்தது.’  என்பது போலான நுட்பமான கதாபாத்திரங்களின் குணாதிசியங்களை சொல்லும் வர்ணனைகள் இக்குறுநாவலில் ஏராளம் உண்டு.

நாவலில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம் வேளாண் குடிகளான வேளாள  முதலியார்களுக்கும் தலித்துகளுக்குமான விவசாய உறவை சச்சு அபாரமாக சொல்லிப் போகிறார். ஒன்று, அறுவடை முடிந்து பணியாட்கள் எல்லாருக்கும் கையைக் குவித்து கூழ் ஊற்றும் காட்சி. அப்படி குடிக்க விரும்பாத தலித் பெண்ணொருத்தி மண் சட்டியில் கூழ் வாங்கிக் குடிக்கிறார். அதே வேளையில் அறுவடைக் காலங்களில் வயல்களில் எலி பிடிக்க வரும் இருளர்களை, தலித்துக்கள் வசை மொழி பேசி அங்கிருந்து விரட்டுகின்றனர். கிராமங்களின் அறுவடைக் காலங்களில் நிகழும் சாதியப் படிநிலை ஊடாட்டங்களைக் காட்சிப்படுத்தும் இப்படியான நுட்பங்கள் நிறைய உண்டு. நாவலின் ஒரே குறையாக நான் நினைப்பது தலித்துகளை வர்ணிக்கும்போது கவிச்சி நாற்றம் அடிக்கிறது என்று சச்சி எழுதுகிறார். ஒருமுறை அல்ல, இரண்டு முறை. மேலும் எலி பிடிக்க வரும் இருளர்களைப் பற்றிச் சொல்லும்போதும் இதே போல் கவிச்சி நாற்றம் அடிக்கிறது என்று எழுதுகிறார். தலித்துக்கள் அழுக்கானவர்கள், சுத்தம், சுகாதாரம் பேணாதவர்கள் என்னும் மனநிலை ஒரு வகையான மேட்டிமை நிலை. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் கவிச்சியை மீறியும் அந்த பறையர் பெண்ணின் கட்டுக்கோப்பான முலைகள் கதைசொல்லியின் கவனத்தை ஈர்க்கவே செய்கின்றன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

***

”குயில் கூட்டுக்கு மேலே பறக்கும் பறவை”

“One flies east,

one flies west,

and one flies over the cuckoo’s nest”

-From a nursery rhyme.

இணையத்தை தோராயமாக மேய்ந்து கொண்டிருந்தபோது ஓர் செய்தி கண்ணில் பட்டது. அமெரிக்க மனநல சங்கத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் மிலோஸ் ஃபோர்மனின் ‘One Flew Over the Cuckoo’s Nest’ திரைப்படம் திரையிடப்பட்டது என்கிற செய்திதான் அது. அமெரிக்காவின் பல முன்னணி மனநல மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ஒரு திரைப்படம் திரையிடப்பட்டது என்கிற செய்தி என்னை மிகவும் ஈர்த்தது. திரையிடல் முடிந்ததும் சமூக மனநலம் என்கிற கருத்தாக்கத்தையொட்டி விவாதமும் நடந்தது.

அமெரிக்காவில் அறுபதுகளில் வேரூன்றிய ஹிப்பி கலாச்சாரம் உலகளாவிய அளவில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது எனலாம். வில்லியம் பர்ரோஸ், ஜாக் கெரோக், ஆலன் கின்ஸ்பெர்க், டெட் ஜோன்ஸ் என்கிற படைப்பாளுமை வரிசையில் இடம்பெறும் இன்னொரு பெயர் கென் கெஸ்ஸி. One Flew Over the Cuckoo’s Nest இவரது முதல் நாவல். நாவல் வெளிவந்த ஆண்டு 1962. தன்னுடைய 25ஆவது வயதில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த கென் கெஸ்ஸி இரவு நேரங்களில் பகுதி நேரமாக ஒரு மனநல விடுதியில் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் அங்கு சிகிச்சைக்கு ஆட்பட்டிருந்த நோயாளிகளிடம் பேசிய அனுபவங்களை தொகுத்து நாவலாக்கினார் கென் கெஸ்ஸி. நாவல் வெளிவந்தவுடன் பெரும் கவனிப்பும் வெற்றியும் பெற்றது.

நடிகர், தயாரிப்பாளர் மைக்கேல் டக்ளஸின் அப்பா கிர்க் டக்ளஸ்தான் இந்தநாவலின் உரிமையை முதலில் வாங்கினார். பிராட்வே நாடகமாகத் தயாரித்து மெக் மர்பி கதாபாத்திரத்தில் அவர் நடிக்க விரும்பினார். பின்னாட்களில் அந்த நாவலைப் படமாக்கும் முயற்சிகளில் கிர்க் டக்ளஸ் வெற்றி பெறவில்லை. இப்படியான அலைக்கழிப்புகளுக்குப் பின்னர்தான் அந்த நாவல் மகன் மைக்கேல் டக்ளஸின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. அறுபதுகளின் தொடக்கத்தில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மகன் மைக்கேல் டக்ளஸ் வியட்நாம் போருக்கு எதிரான அமெரிக்கப் போர் எதிர்ப்பு இயக்கங்களில் பங்கு பெற்றிருந்தார். ”அமைப்புக்கு எதிரான ஒரு மனிதனின் கதை” என்கிற  இந்த நாவலின் மையச்சரடு மைக்கேல் டக்ளஸ்க்கு மிகவும் பிடித்திருந்தது. நாவலைப் படமாக்கும் முயற்சிகளில் அவர் தீவிரமாக இறங்கினார். 1967ஆம் ஆண்டு வெளியான The Firemen’s Ball என்னும் மிலோஸ் ஃபோர்மனின் படம் மைக்கேல் டக்ளஸுக்கு பிடித்திருந்தது. ஒரு பொது நண்பர் மூலம் மிலோஸ் ஃபோர்மனின் அறிமுகமும் கிடைத்தது. நாவலைப் படமாக்கும் முயற்சிகள் வேகம் எடுக்கத் தொடங்கின. இயக்குநர் ஹல் அஸ்பி, படத்தின் மெக் மர்பி கதாபாத்திரத்துக்கு ஜாக் நிக்கல்சனைப் பரிந்துரைத்தார். ஜாக் நிக்கல்ஸன் இதற்கு முன் இதைப்போல மனநலம் குன்றிய கதாபாத்திரம் ஏற்றதில்லை. ஆனால் ஜாக் நிக்கல்ஸன் இந்தப் படத்துக்குள் வந்த பிறகு படம் வேறு ஒரு இடத்துக்கு நகர்ந்தது. இரண்டு மில்லியன் டாலர்கள் பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட படம் அதையும் மீறிப் போனது. நான்கு மில்லியன் பட்ஜெட்டில் படம் முடிந்தது. அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் உண்மையான மனநல மருத்துவமனையில் மொத்தப் படமும்  படம்பிடிக்கப்பட்டது. சக நடிகர்கள், உள்ளிட்ட தொழில்நுட்ப பங்கேற்பாளர்களை ஜாக் நிக்கல்ஸன் பெரிதும் உற்சாகப்படுத்தினார். ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு படப்பிடிப்பின் ஆரம்ப கட்டத்தில் இயக்குநர் மிலோஸ் ஃபோர்மன் மேல் சுத்தமாக நம்பிக்கையில்லை. மைக்கேல் டக்ளஸ் தனிப்பட்ட முறையில் மிலோஸ் ஃபோர்மனிடம் இதைத் தெரிவித்த பின்னர் ஃபோர்மன் கொஞ்சம் ‘படம்’ காட்டத் தொடங்கினார். பின்னர் எல்லாம் சரியானது. அதன் பிறகு படம் முடிந்து வெளியாகி பெரும் பெயரும் புகழும் பணமும் குவிந்தது. ஒரு வெற்றிப் படத்துக்குப் பின்னால் உள்ள வலி நிறைந்த கதைச் சுருக்கம் இதுதான்.

செக்கோஸ்லோவியாவைச் சேர்ந்த மிலோஸ் ஃபோர்மனின் பெற்றோர்கள் ஹிட்லரின் யூத வதை முகாமில் கொல்லப்பட்டவர்கள். அப்போது அவர் பள்ளிச் சிறுவன். ”குயில் கூட்டுக்கு மேலே பறக்கும் பறவை” என்கிற படிமம் மிலோஸ் ஃபோர்மனுக்கு மிகவும் உவப்பாக இருந்தது. எதிர்ப்புணர்வின் தள்ளாட்டம் அல்லது ஆழ்மன அறத்தின் வீழ்ச்சி. தன் பால்யகாலத்தின் இழப்பின் படிமத்தைச் சுட்டுவதாக அந்த நாவல் இருந்தது. குயில் ஒரு வினோத ஒலி எழுப்பும் பறவை. நாவலின்/திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான மெக் மர்பி அப்படித்தான் பல வினோத குணாம்சங்களின் கலவையாக இருக்கிறான். இவ்விதம் பலவித கூறுகள் கொண்ட நாவலின்/திரைக்கதையின் சுவையூட்டிகள் மிலோஸ் ஃபோர்மனின் படத்தின் மீதான ஈடுபாட்டுக்கு முக்கியக் காரணிகளாக அமைந்துவிட்டன.

கென் கெஸ்ஸி நாவல் வெளியானதும், நாவலைப் படமாக்கும் உரிமையைப் பெற ஜாக் நிக்கல்ஸன் முயற்சி செய்தார். ஆனால் அதற்கு முன்னமே கிர்க் டக்ளஸ் அந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார். ஆனாலும் அங்கே இங்கே சுற்றி மீண்டும் அது ஜாக் நிக்கல்ஸனிடமே வந்தது. 300 மில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டிக் கொடுத்தது இந்தப் படம். ஜாக் நிக்கல்ஸனைத் தவிர உடன் நடித்த எவரும் பெரிய நடிகர்கள் அல்லர். டீன் ப்ரூக்ஸ்[Dr. Spivey] ஓரெகன் மாகாண மருத்துவனையில் சூப்பரிண்டெண்ட்டாக வேலை செய்தவர். வில்லியம் ரெட்பில்ட்[Mr. Harding], சிட்னி ளாஸிக்[Sydney Lassick], வில் சாம்ப்சன்[Will Sampson], நர்ஸ் பில்போ கதாபாத்திரத்தில் நடித்த மிமி சார்க்சியன்[Mimi Sarkisian] உள்ளிட்ட எவரும் தொழில் முறை நடிகர்கள் அல்லர். Mel Lambert தொழில்முறை நடிகர் அல்லர். அவர் கார் விற்பனையாளர். படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் டக்ளஸுடன் விமானத்தில் அருகே பயணித்த அவர் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். Sydney Lassick படத்தின் ஆடிஷனுக்கு வந்தபோது பெல்ட்டுக்கு பதிலாக கயிறு கட்டிக்கொண்டு வந்தார். அந்த விஷயம்தான் அவருக்கு இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. இப்படி இன்னும் ஏகப்பட்ட சுவாராஸ்யங்களை இந்தப் படத்தில் நடித்தவர்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். படம் வெளியாகி பெரும் வணிக வெற்றியைப் பெற்றது. ஐந்து ஆஸ்கர் விருதுகள். ஆனால் இந்தப் படத்தை நாவலாசிரியர் கென் கெஸ்ஸி பார்க்க மறுத்துவிட்டார். அவர் எழுதிய திரைக்கதையை தயாரிப்பு நிறுவனம் நிராகரித்து வேறு ஒருவரை திரைக்கதை எழுத வைத்து படம் பிடித்தார்கள். அதுவே கென் கெஸ்ஸியின் கோபத்துக்கு காரணம். மேலும் ‘தனிமனித சுதந்திரத்துக்கும் கண்காணிப்புக்கும் இடைப்பட்ட போராட்டம்தான் நாவலின் பிரதான களம். அது படத்தில் வீரியமாக வெளிப்படவில்லை’ என்பது கென் கெஸ்ஸியின் வாதம்.

காலத்துக்கு முந்தி வந்த திரைப்படங்களின் வரிசையில் தயக்கமே இல்லாமல் இந்தப் படத்தையும் நாம் கட்டாயம் சேர்க்கலாம். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை என ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் இது. இந்தக் கதையைத் தழுவி மலையாளத்தில் ‘தாளவட்டம்’ என்றொரு திரைப்படம் வந்தது. பிரியதர்ஷன் அந்தப் படத்தின் இயக்குநர். அந்தக் காலகட்டத்தில் ‘தாளவட்டம்’ – மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப்படம் எனினும் அது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியே அல்ல. அதற்கும் பிறகு தாளவட்டம் படத்தைத் தழுவி தமிழில் ‘மனசுக்குள் மத்தாப்பூ’ என்று கொத்து பரோட்டா போட்டார்கள். தமிழர்கள் பரோட்டா அடிமைகள். சொல்வதற்கு ஒன்றுமில்லை. பரோட்டா விஷயத்தில் மலையாளிகள் குறிப்பிடத்தக்க முன்னோடிகள்.

‘One Flew Over the Cuckoo’s Nest’ நாவல் வெளிவந்து 58 வருடங்களாகிறது. திரைப்படம் வெளியாகி 45 வருடங்கள் ஆகிவிட்டன. மனநலம், சமூக மனநலம் மற்றும் சக மனிதர்கள் குறித்த நம் அக்கறை என்னவாக இருக்கிறது என்றுதான் இந்த நாவலும் அதையொட்டி திரையாக்கம் கண்ட படமும் நம்முன் கேள்வி எழுப்புகின்றன. நம்மிடம் அநேகமாக பதில் இல்லை. நாம் ‘பிக் பாஸ்’ பார்ப்பதிலும் அடுத்த நாள் அதைப் பற்றிய விவாதங்களிலும் மூழ்கியிருக்கிறோம். மனநலமாவது மண்ணாங்கட்டியாவது…

தொடரும்…      

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close