கட்டுரைகள்
Trending

ஜப்பானியர்களின் திரைப்படவிழாவும் அதன் நோக்கமும்

ப்ரஷாந்த் கார்த்திக்

காலம்காலமாக ஹாலிவுட் படங்களையே உலகப் படமாக பார்த்து பழக்கப்பட்ட இந்தியாவில் ஜப்பான் திரைப்படங்களை திரையிட்டுக் காட்டி ஒரு சிறிய மாற்றத்திற்கான முயற்சியை எடுத்திருக்கிறது ஜப்பான் பவுண்டேஷன். திரையிடப்பட்ட ஜப்பான் திரைப்படங்கள் அந்த நாட்டு கமர்ஷியல் அம்சத்துக்குள் அடங்கும் வகையானவை என்பதை கவனிக்க வேண்டும்.

தற்போது ஹாலிவுட் திரைப்படங்கள் உலகளாவிய வியாபரத்துக்கு ஏற்றபடிதான் தங்கள் படங்களை உருவாக்கி வருகின்றன. 2000களுக்கு முன்னால் இருந்த ஹாலிவுட் படங்களைவிட இப்போது வரும் படங்களில் ஆசியாவில் இடம்பெறும் காட்சிகள் அல்லது ஆசிய நாடுகளின் அரசியல் பேசும் காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன. முன்பெல்லாம் ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் தங்கள் படத்தின் டப்பிங் வெளியீட்டை குறிப்பிட்ட நாடுகளில் உள்ள பட வெளியீட்டு நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு விற்றுவிடுவார்கள். ஆனால் இப்போது அனைத்து ஹாலிவுட் ஸ்டூடியோ நிறுவனங்களும் ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் அலுவலகங்களை திறந்து வைத்துக் கொண்டு தாங்களே படத்தை வெளியிட்டு வருகின்றனர்.

ஹாலிவுட் சினிமாக்களுக்கு ஆசியாவில் மிகப்பெரும் வணிக லாபம் தரும் நாடுகளாக இந்தியா மற்றும் சீனா இருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் குறைந்தது 2 ஹாலிவுட் படங்களாவது தமிழில் வெளியானபடி இருக்கின்றன. ஆனால் தரம் என்கிற வகையில் பார்த்தால் தேறுபவை சில படங்களே…

இப்படி ஹாலிவுட் மயமான சூழலில் ஜப்பான் திரைப்படங்களை இந்தியாவுக்கு அறிமுகம் செய்யும் இந்த முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா முழுவதும் சென்னை, பெங்களூரூ, கல்கத்தா போன்ற 7 முக்கியமான நகரங்களில் நடைபெறும் இந்த ஜப்பான் திரைப்பட விழாவில் 25க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. பொதுவாக ஜப்பான் திரைப்படங்கள் என்றாலே அகிரா குரசோவா, மசாகி கோபயாஷி போன்ற இயக்குநர்களின் திரைப்படங்களே நினைவுக்கு வருவதைத் தாண்டி தற்கால ஜப்பானிய சினிமாவை வெகுஜன மக்களுக்கு அறிமுகபடுத்தியுள்ளது இந்த திரைப்படவிழா.

இந்தப் படங்களை இந்தியா முழுவதும் ஜப்பான் ஃபவுண்டேஷன் திரையிட்டு வருகிறது. வணிகரீதியாக ஜப்பான் திரைப்படங்களை இந்திய மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த திரைப்படங்கள் இலவசமாக திரையிடப்படுகின்றன. அதிலும் சாதாரண திரையரங்குகளில் வெளியிடாமல் PVR போன்ற நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட திரையரங்குகளில் திரையிடுவதன்மூலம் படத்தை உள்வாங்கி உணர்வுப்பூர்வமாக பார்க்க முடிகிறது. பல திரைப்படங்களை சாதாரண மக்களும் கைத்தட்டி ரசித்துப் பார்த்தனர்.

சிறுவயது முதலே போக்கிமான், ட்ராகன் பால்ஸ் போன்ற அனிமே டிவி தொடர்களை பார்த்து பலர் வளர்ந்திருந்தாலும், ஜப்பானிய திரைப்படங்கள் பலருக்கு புதிய அனுபவங்களாகவே இருக்கும். எத்தனை கமர்ஷியல் படங்களாக இருந்தாலும் எல்லாவற்றிலும் ஜப்பானின் சில கலாச்சார சுவடுகள், உணவுப் பழக்கங்கள் இடம்பெறுவதைக் காணமுடியும்.

திரையிடப்பட்ட படங்களில் ‘அனிமே’ என்றழைக்கப்படும் ஜப்பானிய கார்ட்டூன் படங்களும் அடக்கம். மற்ற படங்களுக்கு வந்த கூட்டத்தைவிட அனிமே படங்களுக்கு அதிகமான மக்கள் ஆர்வத்தோடு வந்ததைப் பார்க்க முடிந்தது. ஜப்பானிய படங்களுக்கு இந்தியாவில் உள்ள வரவேற்பை அறியவே இந்த திரைப்படவிழா இந்தியாவெங்கும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த முயற்சியில் அது வெற்றியும் பெற்றிருக்கிறது.

 

இதை ஒருவகையில் ஹாலிவுட் மார்க்கெட்டுக்கு எதிராக ஜப்பான் மோதுவதாகவும் எடுத்துக்கொள்ள முடியும். ஹாலிவுட்டின் பெர்ல் ஹார்பரை மட்டுமே பார்த்துப் பழகிய மக்கள் ஜப்பானின் Grave of the Fireflies படத்தையும் பார்க்க வேண்டும். இந்த இலவச டிக்கெட்டுகளில் படம் பார்க்க வந்தவர்களுக்கு கைப்பை, டீ சர்ட், சிறிய நோட் என அன்பளிப்புகளும் ஏராளமாக வழங்கப்பட்டது. ஜப்பானின் இந்த முயற்சி ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் நிலையை மாற்றக்கூடும். தொடர்ந்து மற்ற நாடுகளில் தங்கள் படங்களை இதுபோல வணிகரீதியாக உலகளவில் கொண்டு செல்ல இது ஒரு முன் முயற்சியாகக் கூட இருக்கலாம்.

மொழி புரியாவிட்டாலும் உணர்வுகளைக் கடத்துவதில் ஜப்பானிய திரைப்படங்கள் பெரும்வெற்றி பெற்றுவிடுகின்றன. ஒவ்வொரு படம் முடிந்து வெளியேறும்பொழுதும் ஒவ்வொரு எண்ணவோட்டங்களை அவை நமக்குள் விதைத்துச் செல்கின்றன. அப்படி எண்ணங்களை விதைத்த படங்களைப் பற்றி தொடர்ந்து அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்…

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close