சிறுகதைகள்
Trending

அந்தக் கோடை விடுமுறை [மொழிபெயர்ப்பு சிறுகதை]- ஜான்ஸி ராணி

மூலம்: சமியா அடுட்

தமிழில்: ஜான்ஸி ராணி

அவள் அந்தப் பழைய குறுகிய நடைபாதையில் அக்கம்பக்கத்தைச் சேர்ந்த குழந்தைகளுடன் விளையாடும்போது, அந்தக் குழுவின் முக்கிய அங்கமாகவே தன்னை உணர்ந்தாள். தனது பள்ளித் தோழர்களிடம் அதனைப் பற்றிச் சொல்லிச் சொல்லி அவள் ஓயாமல் பெருமைப்பட்டுக் கொண்டே இருப்பாள். குழந்தைத்தனமான ரகசியங்களைப் பகிர்ந்தபடி அவர்கள் கோலி, ஏழுகல், கால்பந்து என விளையாடினாலும், அவளுக்குப் “போர் விளையாட்டு” மிகுந்த விருப்பத்திற்குரியதாக இருந்தது. வேகமாக ஓடும் திறனுடன் போக்கிரியைப் போன்ற உடல்பலமும் முரட்டுத்தனமும் அதற்குத் தேவைப்பட்டது.

கோடை விடுமுறை ஆரம்பிக்கும் நாளென்பதால் பள்ளியிலிருந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள். ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் நிகழும் வழக்கமென்பதாக, அவள் தனது பள்ளிச் சீருடையைக் களைந்து பூப்போட்ட சட்டையும் வெள்ளை நிறக் காற்சட்டையும்  அணிந்து கொண்டாள். மெல்லிய உடல்வாகுடன் ஆரோக்கியமான ஒன்பது வயதுக்குரிய சிறுமியின் கச்சிதமான தோற்றத்தில் அவள் மிளிர்ந்தாள். அவளின் சகோதரர்களும் அவளுடன் வெளியில் சென்று விளையாடத் தயாரானார்கள். இளைய சகோதரன் தான் முன்பே சேகரித்திருந்தக் கற்களைக் கொண்டு வந்தான். மூத்த சகோதரன் குச்சிகளுடன் கவண் வில்லையும் எடுத்துக் கொண்டு வர மூவரும் தாழ்வாரத்திற்கு ‘போர்’ விளையாடப் புறப்பட்டார்கள்.

அம்மா அவர்களின் இளைய சகோதரியை அனுப்பி வீட்டிற்கு அழைக்கும் வரையில் நேரம் கடந்ததே தெரியாமல் உற்சாகத்துடன் சந்து பொந்துகளில் நுழைந்து, பொழுது சாயும் வரை விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

உடம்பெல்லாம் புழுதி அப்பிக் கிடக்க மிகுந்த களைப்புடன் வீடு திரும்பினார்கள். மகிழ்ச்சியுடன் ஆரவாரக் கூச்சலிட்டபடி வீட்டினுள் நுழைந்த அவர்களின் தலைமுடி பரட்டையாகக் கிடந்தது, உடைகளின் மீதும் முகம் மற்றும் கை கால் எங்கும் அழுக்கு அப்பிக் கிடந்தது. வழக்கத்திற்கு மாறாக அவர்களின் தந்தை வரவேற்பறையில் இருந்தார். ஆழ்ந்த சிந்தனையில் அமிழ்ந்திருப்பது போல் அமைதியாகத் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தார். அவர்கள்  கழுவிக் கொண்டு இரவு உணவு உண்டபின், சகோதரர்கள் படுக்கை அறைக்குள் மறைந்தனர். அம்மா அவளை வரவேற்பறைக்கு வரும்படி அழைத்ததும், அப்பா எழுந்து சமையலறைக்குள் புகுந்தார்.

“உங்களின் இன்றைய விளையாட்டு எப்படி இருந்தது?” அம்மா இணக்கமாகக் கேட்டார்.

“மிகவும் ரசித்தோம்.  நாங்கள்தான் ஜெயித்தோம். ஃபதிக்கு அடிபட்டுத் தலையில் ரத்தம் வந்தது. சமீர் என்னைத் தரையில் தள்ளி விட்டான். நான் கண்டு கொள்ளவில்லை. நாளை கால்பந்து விளையாட்டின் இறுதிச்சுற்று உள்ளது. நாங்கள் அந்த ஆட்டத்தை முடிக்க வேண்டும்” ஆர்வம் பொங்க பதிலுரைத்தாள்.

“நல்லது நல்லது” என்று அவளை அமைதிப்படுத்த விழைந்தார் அம்மா. பிறகு சாந்தமாக ஆனால் கறாரான குரலில் தொடர்ந்தார். “இன்று மளிகைக்கடை உரிமையாளர் அபு மம்முத்தும் , காய்கனி அங்காடி வைத்திருக்கும் ஃபாமிமும் உன் அப்பாவிடம் பேசினார்கள்.”

“அவர்களுக்கு என்ன வேண்டுமாம்?”

“நீ இப்போது வளர்ந்து விட்டதாகச் சொன்னார்கள், அது மட்டுமில்லாமல்.”

அம்மா ஒரு கணம் மௌனமானார்.

மகள் கேட்டாள். “என்ன அது மட்டுமில்லாமல்?”

“உன் மார்பகங்கள் வளர்ந்து விட்டன, காற்சட்டையுடன் தெருவில் குழந்தைகளுடன் ஓடுவதைப் பார்த்து அவர்கள் வருத்தப்பட்டார்கள்”

“என்ன?”

“தலால். இனி நீ வெளியில் தெருவிற்குச் செல்லக்கூடாது.இதனை உன் அப்பாவும் வலியுறுத்தினார். காற்சட்டைகளையும் அணியத் தடை விதிக்கப்படுகிறது. அவற்றை எல்லாம் உன் சகோதரர்களுக்கு அளித்து விடலாம் .”

இடி இறங்கியது போல இருந்தது அவளுக்கு. மறுத்துப் பேச முனைந்தாள்.

“ஆனால் அம்மா, விளையாடவும் காற்சட்டை அணியவும் எனக்குப் பிடிக்கும். இதற்கும் அதற்கும் என்ன தொடர்பிருக்கிறது?”

அம்மா உறுதியாகக் குறுக்கிட்டுச் சொன்னார். “உரையாடல் முடிந்து விட்டது. இதற்கு மேல் எந்த வார்த்தையையும் கேட்க எனக்கு விருப்பமில்லை”. அந்த அறையிலிருந்து அவர் வெளியேறினார்.

தலால் அதே இடத்தில் வேர் கொண்டவளைப் போல ஒரு கணம் நின்றிருந்தாள். பின்பு வலுக்கட்டாயமாகக்  குளியலறைக்குள் நுழைந்துத் தாழிட்டுக் கொண்டாள். தரையில் அமர்ந்தவளுக்குச் சிந்திக்கும் திறன்கூட மழுங்கி விட்டதாகத் தோன்றியது. திடீரென எழுந்தாள். தனது மேலாடையைத் தூக்கினாள், கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள். நெஞ்சின் மீது கைகளைத் துழாவ விட்ட அவள் விரல்களுக்குள் உடம்பிலிருந்து தப்பித்து அரும்புவதென இரண்டு வட்டமான சிறு மொட்டுகள் பிடிபட்டன.

கடந்த வாரம் ஒரு நாள் இதனை அந்த அபு மமூத் தொட முயன்றது நினைவில் வந்தது. அவள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மேலாடையால் தன்னை மூடிக் கொண்டாள். சூடான கண்ணீர் வழிய வெடித்து அழத் தொடங்கினாள்.

**********

சமியா அடுட்(1957)

சமியா அடுட்  பாலத்தீனியாவில் உள்ள நாப்லஸ் நகரத்தில் பிறந்தவர். பாக்தாத்திலுள்ள அல்–முஸ்தன்சரிய்யா பல்கலைகழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்றவர்.1986 ஆம் ஆண்டு தன் முதல் சிறுகதைத் தொகுதியை வெளியிட்ட அவர்,  மொத்தம் நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. “அந்தக் கோடை விடுமுறை” ஒரு தாயின் மன உணர்வுகளையும், ஒரு பெண்ணின் வளர்ச்சியை இந்த சமூகம் எப்படி உற்று நோக்குகிறது என்பதையும் அருமையாக சொல்லியிருக்கிறார் கதாசிரியர். இந்த கதையின் முடிவுதான் மிகவும் உணர்ச்சி மிகுந்தது. ஒரு சிறிய கருவானாலும் மிகவும் உணர்வுப் பூர்வமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close