இணைய இதழ்இணைய இதழ் 56சிறார் இலக்கியம்

ஜானு; 4 – கிருத்திகா தாஸ்

சிறார் தொடர் | வாசகசாலை

“அந்த ரோட்டுக்குப் போகாத ஜானு” 

(குறிப்பு : இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. யாரையும் எதையும் எப்போதும் குறிப்பிடுபவை அல்ல)

ஜானுவின் வகுப்புத் தோழியான ரக்ஷிதாவுக்கு இன்று பிறந்தநாள்.

ஜானு தனக்குப் பிடித்த ஆலிவ் க்ரீன் நிற லெஹெங்கா அணிந்துகொண்டு ரக்ஷிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தாள்.

லெஹெங்காவை ரசித்தபடி கண்ணாடியைப் பார்த்துக் கம்மல் அணிந்து கொண்டிருந்தபோது, அம்மா இவளுடைய வளையல்களோடு அறைக்குள்ளே நுழைந்து மெத்தை மேல் உட்கார்ந்தார்.

அம்மாவிடமிருந்து வளையல்களை வாங்கி அணிந்துகொண்டாள் ஜானு.

அம்மா எதுவும் பேசாமல் இருந்ததைக் கவனித்தவள், “ஹே ஹே .. நான் தனியாப் போய்ட்டு வரப் போறேனே” என்றாள் குதூகலமாக.

அப்போதும் அம்மா ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

அதனால் அம்மாவின் அருகில் வந்து உட்கார்ந்த ஜானு, “அம்மா …”

“பத்திரமா போயிட்டு வந்துடுவியா ஜானு?”

“போய்ட்டு வந்துடுவேன் மா “

“துணைக்கு ராகுலைக் கூட்டிட்டுப் போலாம்ல”

“ராகுல் பிராக்டிஸ் போயிருப்பான் இந்நேரம். மணி 5.30 ஆகுதுல்ல. நானே போய்ட்டு வந்துடுவேன் மா. பக்கத்துல தான இருக்கு ரக்ஷிதா வீடு”

“விடாப்பிடியா அடம்பிடிச்சு சாதிச்சுட்ட இல்ல. துணைக்கு யாருமில்லாம நீயே தனியா வெளிய போகணும் போகணும்ன்னு”

ஜானு சிரித்தாள்.

அம்மா கவலைப்பட்டார்.

“சரி. ஆனா நீ அந்த ஏரியால இருக்……”

“இருக்குற முதல் ரைட் கட்ல போகக்கூடாது. அந்த ரோட்டுப்பக்கம் திரும்பவே கூடாது..அதானம்மா”

“விளையாட்டா இருக்கா ஜானு நான் சொல்றது”

“இல்லம்மா நிஜமாவே அந்த ரோட்டுக்குப் போகமாட்டேன். அந்தப் பக்கம் திரும்பமாட்டேன்”

“ம்ம்”

“ம்ம்”

“எல்லாம் உங்கப்பா கொடுக்குற தைரியம். நீயும் கேட்கிறன்னு அவரும் சரிங்கிறார். எனக்குத்தான் பயமாருக்கு. அவர் வேற ஊர்ல இல்ல. நைட்டு தான் திரும்பி வர்றார்”

“அப்பாக்கு ரக்ஷிதா வீடு தெரியும். பக்கத்துலதான இருக்கு போயிட்டுவான்னு சொன்னார் இல்லம்மா. ரக்ஷிதா அம்மாவோட நம்பர் கூட உங்ககிட்ட இருக்கு. அப்புறம் என்ன கவலை மா உங்களுக்கு. ஸ்மைல் பண்ணுங்கம்மா ப்ளீஸ்”

கொஞ்சம் சமாதானம் ஆகிப் புன்னகைத்தார் அம்மா.

“சரி.. போய்ட்டு வா”

புன்னகை.

“ஆனா நீ அந்த ரோட்டுப்பக்கம் மட்டும் போகக்கூடாது”

“போகவே மாட்டேன் மா.. ட்ரஸ்ட் மீ “

“ப்ராமிஸ் ?”

“ப்ராமிஸ்”

**

ரக்ஷிதாவுக்கான பிறந்தநாள் அன்பளிப்பை எடுத்துக்கொண்டு ஜானு, ரக்ஷிதா வீடு நோக்கி நடந்தாள்.

பதினைந்து நிமிட நடைதூரம் தான் இருவர் வீட்டுக்கும்.

யோசனைகளோடே நடந்தாள் ஜானு.

‘அம்மா ஏன் இவ்ளோ கவலைப்படுறாங்க’

‘நம்ம நிச்சயமா அந்த ரோட்டுக்குள்ள போக மாட்டோம்’

‘இதுக்கு முன்னாடி அப்பாகூட ரக்ஷிதா வீட்டுக்கு நிறையவாட்டி போயிருக்கோம் . நமக்கு வழிகூட நல்லாத்தெரியுமே’

‘அப்புறம் ஏன் அம்மாவுக்கு இவ்ளோ பயம்?’

இன்னும் ஐந்து நிமிடத்தில் ரக்ஷிதா வீடு வந்துவிடும். ஆனால், அம்மா சொன்ன அந்த வலது திருப்பச் சாலையைத் தாண்டித்தான் ரக்ஷிதாவின் வீட்டுக்குச் சென்றாகவேண்டும். அந்தச் சாலையைத் தாண்டி நடந்து போனாள் ஜானு. அந்தப்பக்கம் திரும்பாமல்..

இவள் திரும்பிப்பார்க்கவில்லை என்றாலும் அந்தச் சாலைக்குள் என்ன இருக்கிறதென்பது இவளுக்குத் தெரியும்.

அதற்குள் திரும்பினால் இடது பக்கத்தில் மைதானம் போல் வெட்ட வெளியாய் இருக்கும். வலது பக்கத்தில் மரங்கள் அடர்ந்து காடுபோல் இருக்கும். மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதி அது.

**

ரக்ஷிதாவின் வீடு.

“Hi ரக்ஷிதா”

“வாவ். பியூடிஃபுல் டெக்கரேஷன்”

“ஹே ட்ரெஸ் ரொம்ப அழகா இருக்கு”

“பூஜாவும் தீபாவும் இன்னும் வரலியா?”

“ச ர் ப் ரை ஸ்…”

“கிட்ஸ் எல்லாரும் ஸ்வீட்ஸ் எடுத்துக்கோங்க”

“இவங்க என்னோட கசின் மாலினி அக்கா”

“Happy birthday to you . Happy birthday dear rakshitha”

“அங்கிள் நீங்க பண்ண ஐஸ்கிரீம் சூப்பர்”

கேக்குகள்.

பலூன்கள்.

அன்பளிப்புகள்.

விளையாட்டுகள்.

பாடல்கள்.

“டான்சர் மீனாவோட ஸ்டெப்ஸை ஃபாலோ பண்றேன்”

“ஆன்ட்டி, டின்னர் ரொம்ப நல்லா இருந்துது”

“ஹே வா செல்ஃபி எடுக்கலாம்”

“பாட்டி தாத்தாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ”

” சரி ஓகே நேரம் ஆச்சு . கிளம்பறேண்டி . பை ஆன்ட்டி.. பை அங்கிள்”

“பை டி. நாளைக்கு ஸ்கூல்ல மீட் பண்ணலாம்”

**

மகிழ்ச்சியாகக் கழிந்தது பிறந்தநாள் கொண்டாட்டம்.

ரிட்டர்ன் கிஃப்டான டிராயிங் புக்கோடு தன் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தாள் ஜானு.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் நினைத்துக்கொண்டே..

இன்னும் பத்து நிமிடங்கள் நடந்தால் வீடு வந்துவிடும்.

அதற்கும் முன்பு அந்தச் சாலைத்திருப்பம் இடது பக்கத்தில் வரும்.

ம்ம் அந்தப்பக்கம் திரும்பவிடக்கூடாது என்று ஞாபகமாய் நடந்தாள்.

ஆனால், இல்லை. அது அவ்வாறு நடக்கப்போவதில்லை. அப்படியே முடிந்துவிடப் போவதுமில்லை இந்த நாள்.

இன்னும் சொற்ப அடிகளில் அந்தத் திருப்பம் வந்துவிடும்.

அப்போது…

இவளின் பின்னாலிருந்து ஒரு கருப்பு நிற கார் அதிவிரைவாய் வந்து சர்ரென இவளைக் கடந்து சென்றது.

அந்தக் காரின் வேகம் உருவாக்கிய தாக்கத்தில்.. ஒரு நொடி நிலை குலைந்து தடுமாறி.. பின் சுதாரித்து நின்றாள் ஜானு.

சுற்றும் முற்றும் திரும்பிப்பார்த்தாள்.

பின் நேராகத் திரும்பி நின்று.. கடந்து சென்ற அந்தக் காரைக் கவனித்தாள்.

அப்போது.. காரின் பின் பக்கக் கண்ணாடியைத் திறந்து ஒரு பெண் தலையை வெளியே நீட்டி ஜானுவைப் பார்த்து “Help help…” என்று கத்தினாள்.

ஜானு உற்றுக் கவனித்தாள்.

அந்தப் பெண் கையை வெளியே நீட்டியபடியே கத்திக்கொண்டிருந்தாள்.

அப்போது யாரோ அந்தப்பெண்ணின் வாயைப் பொத்தித் தலையை உள்ளிழுத்து கண்ணாடியை மூடினார்கள்.

பின் அந்தக் கார் அந்தச் சாலையில் திரும்பியது.

இவை அத்தனையும் சில நொடிகளில் நடந்து முடிந்திருந்தன.

ஜானு அதே இடத்தில் நின்றிருந்தாள்.

ஒரு நொடியில்.. நடந்த அத்தனையையும் மீண்டும் யோசித்துப் பார்த்தாள்.

ஏதோ தவறென்று புரிந்தது இவளுக்கு.

மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தவள் அந்தச் சாலையில் திரும்பிச்சென்ற காரின் பின்னே.. ஓடத்தொடங்கினாள்.

கார் கொஞ்சம் தூரம் உள்ளே சென்றது.

ஜானு காரின் பின்னே இருட்டுக்குள்ளேயே ஓடினாள்.

கார் வலது புறமாய் மரங்கள் அடர்ந்திருந்த பக்கத்தின் ஒரு ஓரத்தில் நின்றது.

கார் நின்றதைக் கண்டதும் சட்டென்று அருகிலிருந்த புதருக்குள் மறைந்து கொண்டாள்.

அப்போது ஒரு பைக்கில் இரண்டு பேர் வந்தார்கள். 

பதட்டத்தில் கை கால் நடுங்கத்தொடங்கியது ஜானுவுக்கு.

இவளின் சத்தம் கேட்டு விடாதபடி கையை வைத்து வாயை இறுக மூடிக்கொண்டாள். 

காருக்குள்ளிருந்து நான்கு பேர் இறங்கி ஒரு பெண்ணைத் தூக்கிக்கொண்டு அடர்ந்த மரங்களுக்குள் போனார்கள். பைக்கில் வந்த இரண்டு பேரும் அவர்களின் பின்னாலேயே போனார்கள்.

ஜானு அதிர்ந்தாள். அங்கேயே பார்த்துக்கொண்டிருந்தாள் என்ன நடக்கிறதென்று.

சில நொடிகளுக்குள் எல்லாரும் மரங்களுக்குள் சென்று மறைந்து விட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு மெல்ல இருட்டுக்குள்ளாகவே ஓடி அந்தத் தெருவுக்குள்ளிருந்து வெளியே வந்தாள்.

அப்போது கையிலிருந்த டிராயிங் புக் புதருக்கருகில் விழுந்தது.

வீடுகள் மட்டும் கொண்ட பகுதி என்பதால் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது.

ஒன்றிரண்டு பைக்குகளும் கார்களும் கடந்து போனபோது இவள் உதவிக்காகக் கை அசைத்ததைக் கண்டுகொள்ளாமல் போயின.

இரண்டு பெண்கள் இரு சக்கர வாகனத்தில் கடந்து சென்றனர். அப்போது ஜானு அவர்களை அழைக்க அவர்கள் இவளைப் பார்த்து..

“ஹே கியூட் லிட்டில் பிரின்சஸ்” என்று சொல்லிக்கடந்து போனார்கள். அவர்களுக்கு இவள் உதவிக்கு அழைக்கிறாள் என்று புரியவே இல்லை. 

‘ச்ச’

‘என்ன பண்றது இப்போ’

பதட்டத்தில் உருவான நடுக்கம் குறையவே இல்லை. 

சுற்றி யாருமே உதவிக்கு இல்லை.

நிலைமையின் வீரியம் புரிந்தது ஜானுவுக்கு.

அந்தக் காரையும் பைக்கையும் ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு .. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாய்த் திரும்பி மின்னல் வேகத்தில் ஓடினாள்.

அங்கிருந்து சில தெருக்களைத் தாண்டிச் சென்றால்.. வலது புறத்தில் காவல் நிலையம் இருப்பது ஜானுவுக்குத் தெரியும்.

அவளால் இயன்ற அத்தனை வேகத்தையும் சேர்த்து ஓடிப்போய் .. காவல் நிலையத்துக்குள் நுழைந்தாள்.

காவல் நிலையத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. அந்தப் பகுதி மக்கள் கூட்டம். 

அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை. இரண்டு காவலர்கள் அதைப் பேசித் தீர்த்து வைக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று தேடினாள். 

இன்னுமிரண்டு காவலர்கள் அந்த அறையின் மறுபுறத்தில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் ஓடிய ஜானு, “சார் சார் .. அங்க அந்த முதல் ரைட் கட் இருக்குல்ல … அங்க … சார் சார் …”

…..

“சார்”

இவளை அவர்கள் இருவரும் கவனிக்கவே இல்லை.

என்ன செய்வது.

யோசித்துக்கொண்டே சுற்றிலும் பார்த்தாள்.

இன்ஸ்பெக்டர் அறை தெரிந்தது.

வேகமாக இன்ஸ்பெக்டர் அறைக்குள் ஓடினாள்.

உள்ளே சேரில் இன்ஸ்பெக்டரைக் காணவில்லை.

டேபிள் மேல் இருந்த பெயர்ப்பலகையைப் பார்த்தாள். 

கீதா சுப்ரமண்யம்.

சத்தமாக அழைத்தாள்.

“கீதா சுப்ரமண்யம்”

எந்த சத்தமும் இல்லை. யாரையும் காணவில்லை. 

இன்னும் சத்தமாக அழைத்தாள்.

“கீதா சுப்ரமண்யம்”

ஜானுவின் குரல் கேட்டு அந்த அறையின் மூலையில் இருந்த அலமாரியின் கதவுக்குள் இருந்து எட்டிப்பார்த்தார் இன்ஸ்பெக்டர் கீதா சுப்ரமண்யம்.

ஜானுவைப் பார்த்த இன்ஸ்பெக்டர் கீதா, பார்த்துக்கொண்டிருந்த ஃபைலை அலமாரிக்குள் வைத்து அலமாரியைச் சாத்திவிட்டு ஜானுவிடம் வந்தார்.

“யாரும்மா நீ. இங்க உள்ள எதுக்கு வந்த?”

கேட்டுவிட்டு அறைக்கதவைத் திறந்துபார்த்தார். ரொம்ப நேரமாய்ப் பேசிக்கொண்டிருந்த கூட்டம் இன்னும் கலைந்திருக்கவில்லை.

“அதுல உங்க அம்மா அப்பா இருக்காங்களா?”

“இல்ல இல்ல நான் தனியாத்தான் வந்தேன் . ..”

பதட்டம் அதிகரித்துக்கொண்டே போனது ஜானுவுக்கு.

“தனியா வந்தியா”

“ஆமா… “

இன்ஸ்பெக்டர் கீதா அடுத்து ஏதோ கேட்க முனைந்தபோது ஜானு இடைவிடாது தொடர்ந்தாள்.

“நான் ஜோதி நகர்ல இருக்குற என் ஃப்ரெண்டோட பர்த்டே செலிபிரேஷன்க்கு போய்ட்டுத் திரும்பி என் வீட்டுக்குப் போயிட்டு இருந்தப்போ ..”

ஓடி வந்ததாலும் பதட்டத்தாலும் ஜானுவுக்கு மூச்சு வாங்க.

“தண்ணி குடிக்கிறியா …..”

“இல்ல இல்ல வேண்டாம் … அந்த ஏரியாவோட முதல் ரைட் கட் இருக்குல்ல”

முதல் ரைட் கட் என்ற வார்த்தையைக் கேட்டதும் உன்னிப்பாகக் கவனித்தார் இன்ஸ்பெக்டர் கீதா.

“ஆமா ….. சொல்லு “

“ஒரு காருக்குள்ள இருந்து நாலு பேர். அப்புறம் ஒரு பைக்ல ரெண்டு பேர். ஒரு அக்காவைத் தூக்கிட்டு.. அங்க மரம் நிறைய இருக்கும்ல காடு மாதிரி அதுக்குள்ள போனாங்க”

“என்ன சொல்ற …”

“ஆமா … அந்தத் தெருவுக்குள்ள அந்தக் கார் நுழையறதுக்கு முன்னாடி அந்த அக்கா கார் கண்ணாடியைத் திறந்து தலையை வெளிய நீட்டி’help help-’ – ன்னு கத்தினாங்க. அதுக்கு அப்புறம் தான் அந்தக் கார் அந்த ரோட்டுக்குள்ள போச்சு. நான் பின்னாடியே ஓடிப்போய்ப் பார்த்தேன். ஆறு பேர் அந்த அக்காவைத் தூக்கிட்டுக் காட்டுக்குள்ள போனாங்க. அந்த அக்கா ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டிருந்தாங்க”

“ohhh myyy goddd …..”

நடந்துகொண்டிருக்கும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இன்ஸ்பெக்டர் கீதா. 

“வா என்கூட …”

ஜானுவின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு அறையை விட்டு அதி விரைவாய் வெளியே வந்தார்.

அங்கே அந்தக் கூட்டத்தின் பஞ்சாயத்து இன்னும் பெரிதாகியிருந்தது.

அதைப்பார்த்த இன்ஸ்பெக்டர் கீதாவுக்குக் கோவம் வர , “சை….லெ….ன்….ஸ்”.

அத்தனை பேரும் அமைதியாகினர்.

“நீங்க எல்லாரும் இங்கயே இருங்க. உங்க பிரச்னையை வந்து தீர்த்து வைக்கிறோம்”

சப் இன்ஸ்பெக்டர் சந்த்ருவிடம் திரும்பிய கீதா, “சந்துரு வேகமா வாங்க. வெங்கடேசன் சார், நீங்க மட்டும் என்கூட வாங்க ..”

ஜானுவை இழுத்துக்கொண்டு வேகமாய் ஓடிப்போய் ஜீப்பில் உட்கார்ந்த இன்ஸ்பெக்டர் கீதா ஜானுவை அவருக்கு அருகிலேயே உட்கார வைத்துக்கொண்டார்.

வெங்கடேசன் சார் ஜீப் ஓட்டினார்.

சப் இன்ஸ்பெக்டர் சந்துரு காவலர்களை அழைத்துக்கொண்டு காவலர் வாகனத்தில் பின் தொடர்ந்தார்.

வெங்கடேசன் சார் ஜோதி நகர் முதல் திருப்பத்தில் ஜீப்பைத் திருப்பினார் .

இருட்டில் தூரத்தில் ஒரு காரும் பைக்கும் நின்றிருந்தன. 

ஜானு கை நீட்டிக் கத்தினாள்.

” அதோ …… அங்க தா ….ன் “

விரைந்து சென்ற ஜீப் அந்தக் காருக்கருகே நின்றது.

கீழிறங்கிய இன்ஸ்பெக்டர் கீதா, ஜானுவை ஜீப்புக்கு அருகிலேயே விட்டு விட்டு, “எங்கயும் போகக் கூடாது. இந்த ஜீப் பக்கத்துலயே தான் நிக்கணும். புரிதா”

“ஓகே அக்கா”

“வெங்கடேசன் சார்… ஆம்புலன்ஸ்”

அதற்குள் காவலர்கள் வந்து சேர்ந்திருக்க..

“சந்துரு come fast “

வெங்கடேசன் சார் ஜானுவோடு துணைக்கு அங்கேயே இருக்க.. அத்தனை பேரும் அந்த அடர்ந்த மரங்களின் ஊடே வேகமாகச் சென்றார்கள். 

உள்ளே போகப்போகக் கொஞ்சம் தூரத்தில் அந்தப் பெண்ணுடைய அலறல் குரல் கேட்கத் தொடங்கியது.

சப் இன்ஸ்பெக்டர் சந்துருவும் கான்ஸ்டபிள்ஸும் அதிர்ந்தார்கள்.

“மேடம்…!!”

அந்தப் பெண்ணின் அலறல் குரல் கேட்கக் கேட்க, கீதாவுக்கு அழுகை வந்தது.

“ச ந் து ரு f a s t…” அழுதுகொண்டே

சில நிமிடத் தேடலுக்குப்பின் அவர்கள் தென்பட்டுவிட, வேகமாகச் சென்ற காவலர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தார்கள். 

அவர்களுள் இரண்டு பேர் தப்பித்து ஓட.. கான்ஸ்டபிள்ஸ் அவர்களை விரட்டிப் பிடித்தார்கள். 

அப்போது புதர்களுக்கு நடுவே அந்தப் பெண் கீழே கிடந்த நிலைமையைப் பார்த்த இன்ஸ்பெக்டர் கீதாவுக்கு ஆத்திரம் கண்களை மறைத்தது. 

அருகில் கிடந்த அவளின் பள்ளிச் சீருடையைக் கையில் எடுத்த கீதா..கொலைவெறியோடு கான்ஸ்டபிள் கையில் வைத்திருந்த லத்தியை வாங்கி ஒவ்வொருத்தனையும் ஓங்கி அடி வெளுக்கத் தொடங்கினார். 

அந்தப் பெண் அலற அலற இன்னும் ஆத்திரம் தலைக்கேறியது கீதாவுக்கு. 

“ஏண்டா நாய்ங்களா. என்னடா வேணும் உங்களுக்கு. வெறி புடிச்ச தெரு நாய்ங்களா. எதுக்குடா இந்தப் பொண்ணை இப்படிக் கடிச்சுக் குதறிட்டு இருக்கீங்க”

அவர்களால் அங்கே இங்கே நகர முடியாதபடி அடி தொடர்ந்தது.

“மேடம் மேடம் ப்ளீஸ் ..” சப் இன்ஸ்பெக்டர் சந்துரு கீதாவிடம் இருந்து லத்தியை வாங்கினார்

ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது.

அந்தப்பெண்ணைத் தூக்கிக்கொண்டு புதர் பகுதிக்குள்ளிருந்து வெளியே வந்தபோது அவள் கதறிய சத்தத்தில் அந்த இடமே அதிர்ந்தது. 

காவலர்கள் அந்தப் பையன்களை இழுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.

இன்ஸ்பெக்டர் கீதா அழுது கொண்டிருந்தார்.

இத்தனை காட்சிகளையும் பார்த்துக்கொண்டிருந்த ஜானு பயத்தில் நின்று கொண்டிருந்த இடத்திலேயே பொத்தென்று கீழே விழுந்தாள். 

அந்தப்பெண் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டாள். 

அந்தப் பையன்கள் கைது செய்யப்பட்டுக் காவலர் வாகனத்தில் ஏற்றப்பட்டார்கள்.

ஜானு கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்த கீதா, அவளருகே வந்து அவளுக்குக் கை கொடுத்துத் தூக்கிவிட்டு, “அந்த அக்காக்கு ஒண்ணும் இல்ல. சரியா. அவளைக் காப்பாத்தியாச்சு. நல்லா இருக்கா. பயப்படாத”

ஜானு பலவீனமாய் வியர்த்துப் போய் சரியென்று தலை அசைத்தாள்.

அவளின் நிலையைப் பார்த்த கீதா, “சந்த்ரு, நீங்க ஹாஸ்பிடல் போய் ஃபாலோ பண்ணிக்கோங்க. நான் இந்தப் பொண்ணு யார் என்னன்னு கேட்டு வீட்ல கொண்டுபோய் விட்டுட்டு வந்துடுறேன்”

“ஓகே மேடம் “

ஆம்புலன்சும் காவலர் வாகனமும் அங்கிருந்து கிளம்பின. 

காரும் பைக்கும் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டன.

அந்த இடமே காலியானது.

கீதா அந்த மரங்கள் அடர்ந்த பகுதியைத் திரும்பிப் பார்த்தார்.

அந்தப் பெண்ணின் கதறல் குரல்.. மீண்டும் மீண்டும் நினைவில் ஒலித்து மனம் உடைய வைத்தது.

வெங்கடேசன் சார் தண்ணீர் பாட்டில் ஒன்றை எடுத்து வந்து கீதாவுக்குக் கொடுத்தார். 

தண்ணீரை வாங்கிக் குடித்துக் கொண்டே மெல்ல நடந்த கீதாவின் கண்களில் தென்பட்டது புதருக்கருகே கிடந்த.. டிராயிங் புக். 

அதை எடுத்துப் புரட்டிப்பார்த்தார் கீதா. 

ஜானு அதைப்பார்த்து அவருக்கு அருகில் வந்து,

“அது என்னோடது தான் “

“உன்னோடதா “

“ஆமா “

கீதா அதை ஜானுவிடம் கொடுத்தார்.

அதை வாங்கிக்கொண்ட ஜானு மீண்டும் போய் ஜீப்புக்கு அருகிலேயே நின்று கொண்டாள். 

கீதா ஜானுவையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் அமைதியாகவே கழிந்தன. 

பிறகு கீதாவும் வெங்கடேசன் சாரும்.. ஜானுவை அழைத்துக்கொண்டு.. அவளின் வீடு நோக்கிச் சென்றார்கள்.

ஜானு வெங்கடேசன் சாரிடம் வீட்டுக்கு வழி சொல்லிக்கொண்டிருந்தாள். 

கீதா ஒன்றுமே பேசவில்லை. 

வீடு வந்ததும்,

” இந்த வீடுதான் “

வீட்டின் முன்பு ஜீப் நின்றும்.. சில நொடிகள் எல்லாருமே அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.

பின் தன் மடிமேல் உட்கார்ந்திருந்த ஜானுவை இறக்கி விட்டார் கீதா.

கீழே இறங்கிய ஜானு திரும்பி நின்று இன்ஸ்பெக்டர் கீதாவைப் பார்த்தாள்.

“எவ்ளோ பெரிய விஷயம் செஞ்சிருக்க தெரியுமா நீ”, இன்ஸ்பெக்டர் கீதா.

அமைதி.

“சரி, வீட்டுக்குப் போ “

“ஓகே . தேங்க்ஸ் தாத்தா . பை கீதாக்கா”

சொல்லிவிட்டு நடந்த ஜானுவிடம் இன்ஸ்பெக்டர் கீதா.

“உன் பேர் என்ன “

” ஜானகி “

“ம்ம் ..”

**

மெல்ல நடந்த ஜானு வீட்டுக்குச் சென்றாள்.

இன்று.. தான் கடந்து வந்தது என்ன மாதிரியான ஒரு நாள்.. என்ன மாதிரியான சம்பவங்கள்.. என்ன மாதிரியான உணர்வுகள்.. என்றெல்லாம் ஜானுவுக்கு முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. 

அவை தனக்குள் என்ன எண்ணங்களை உருவாக்கின என்றும் அவளுக்குத் தெரியவில்லை.

நடந்த எல்லாவற்றையும் பற்றித் திரும்பவும் யோசிப்பதா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது.

கொஞ்சம் நேரம் ஃப்ரெண்ட்ஸோடும் அம்மாவோடும் விளையாடிவிட்டு.. தன் பொம்மைகளுக்கு அருகே படுத்துத் தூங்கிப்போனாள். 

நடந்த எதையும் யாரிடமும் சொல்லி இருக்கவில்லை அவள். 

**

அடுத்த நாள் காலை..

பால்கனியில் தனியாக நின்று பல் துலக்கிக்கொண்டிருந்தாள் ஜானு. 

அப்போது…

வெங்கடேசன் சாரும் அவரோடு இன்னுமொரு காவலரும் கீழே செக்கியூரிட்டி கோபால் தாத்தாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஜானு அவர்கள் இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். 

‘வெங்கடேசன் சார் ஆச்சே இவர். கூட இருப்பது யாருன்னு தெரியலையே’

கோபால் தாத்தா இருவரிடமும் ஜானுவின் வீட்டைக் கைநீட்டிக் காண்பித்தார்.

இரண்டு பேரும் இரண்டாவது மாடியை நிமிர்ந்து பார்த்தார்கள். 

அங்கே பல் துலக்கியபடி நின்றிருந்த ஜானுவைக் கண்ட வெங்கடேசன் சார் மகிழ்ச்சியில் புன்னகைத்தார்.

ஜானுவுக்குப் பயம் பிடித்துக்கொண்டது.

‘அச்சச்சோ’

‘நம்ம வீட்டுக்குத்தான் வராங்க’

‘மாட்னோம் மாட்னோம்’

இத்தனை நடந்தது அப்பா அம்மாவுக்குத் தெரியாது.

அப்பா அம்மாக்கு மட்டுமில்ல. யாருக்குமே தெரியாது.

அப்படியே தெரியாமலே போய்டும்ன்னு நினைத்திருந்தாள் ஜானு.

தெரிஞ்சா அவ்ளோதான். இதுக்கப்புறம் எப்பவும் தனியா வெளிய போக விடமாட்டாங்க. 

ஜானு வேகமாய் ஓடிப்போய் அவளின் அறையில் ஒளிந்து கொண்டாள்.

வெங்கடேசன் சாரும் இன்னொரு காவலரும் ஜானுவின் வீட்டுக்கு வந்தார்கள்.

அப்பா ஹால் சோபாவில் உட்கார்ந்து காஃபி குடித்துக்கொண்டிருந்தார்.

“இது ஜானகியோட வீடுதானே “ வெங்கடேசன் சார். 

நிமிர்ந்து பார்த்த அப்பா சற்று அதிர்ச்சி அடைந்தார்.

“ஆமா … நீங்க ?” என்றபடியே எழுந்து வந்தார்.

சமையலறையில் இருந்த அம்மா சத்தம் கேட்டு வெளியே வந்தார்.

வெங்கடேசன் சார் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு கையில் வைத்திருந்த செய்தித்தாளை அப்பாவிடம் காண்பித்தார்.

அதில் ‘பள்ளிச்சிறுமியின் துணிகரச் செயல்’ என்ற தலைப்போடு முன்தினம் நடந்த சம்பவம் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது.

அப்பா முதல் இரண்டு வரிகளைப் படித்தார்.

‘ஜானகி என்ற பள்ளிச்சிறுமி ஜோதி நகரில் உள்ள தன் பள்ளித்தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்து…..’

அதற்கும் மேல் படிக்கப் பொறுமை இல்லாத அப்பா, 

“ஜானகி …”

ஆத்திரத்தோடு கத்தி அழைத்தார்.

ஜானு உள்ளிருந்து ஓடி வந்தாள்.

“என்ன இது ஜானகி .. “

ஜானு செய்தித்தாளை எட்டிப்பார்த்தாள்.

‘என்னது பேப்பர்ல நியூஸா .. போச்சுடா’

அம்மாவின் பின்னால் ஓடிப்போய் ஒளிந்து கொண்டாள்.

“என்ன ஜானகி இதெல்லாம். நீ முதல்ல ஒளிஞ்சுக்காம முன்னாடி வா. இதுக்குத்தான் நீ அவ்ளோ அடம் பிடிச்சு நேத் …”

“சார்..சார், ஒரு நிமிஷம். என்ன ஏதுன்னு கூடத் தெரியாம அந்தச் சின்னப்பொண்ணக் கத்தாதீங்க சார். முதல்ல அந்த நியூஸை முழுசாப் படிங்க”

வெங்கடேசன் சார் சொன்னதைக் கேட்ட அப்பா ஜானுவை முறைத்துவிட்டு .. கோபத்தோடே செய்தியை முழுதாகப் படித்தார். 

அம்மாவும் கூட சேர்ந்து கொண்டார்.

வெங்கடேசன் சார் தொடர்ந்தார்.

“பதினாலு வயசுப் பொண்ணு சார். ஆறு பொறுக்கிப் பசங்க. அந்தப்பொண்ணு ஸ்கூல்லேருந்து டியூஷன் போயிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போகும்போது கடத்திட்டு வந்திருக்கானுங்க. அந்தப்பொண்ணு கதறின சத்தம் எங்க எல்லாரோட ஈரக்கொலையே நடுங்குச்சு. இந்தச் சின்னப் பொண்ணு மட்டும் வந்து எங்களைக் கூட்டிட்டுப் போயிருக்கலைன்னா அந்தப் பொண்ணை இந்நேரத்துக்கு அந்தப் புதருக்குள்ள இருந்து பொணமாத்தான் தேடி எடுத்துருப்போம். உங்க பொண்ண ஊரே கொண்டாடிட்டு இருக்கு சார் இப்போ”

ஜானுவின் அம்மா கண்ணீரோடு அவளருகில் வந்து கன்னத்தில் கை வைத்து.

“குட்டி .. சாரி குட்டி”

ஜானு அப்பாவைப் பார்த்தாள்.

அப்பா முகத்தில் கோவம் இல்லை . பெருமிதத்தோடு நின்று கொண்டிருந்தார்.

வெங்கடேசன் சார் தொடர்ந்தார்

“பத்து மணிக்கு உங்க எல்லாரையும் கமிஷனர் சார் அவரோட ஆஃபீஸுக்கு வரச் சொல்லி இருக்கார். அதைச் சொல்லத்தான் நாங்க வந்தோம்”

**

அன்று காலை பத்து மணி.

கமிஷனர் ஆஃபீஸ்.

கமிஷனருக்கு ஜானகி பூங்கொத்து கொடுத்தாள். 

‘இவ்ளோ குட்டிப்பொண்ணா இவ்ளோ பெரிய செயல் செஞ்சுடுச்சு’ என்ற ஆச்சரியத்தில் ஜானகியின் கன்னத்தில் தட்டிக்கொடுத்து வாழ்த்தி அவளிடம் பேசிய கமிஷனர்.. பின் அம்மாவுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

அப்பாவிடம் அவர்களின் குடும்பத்தைப் பற்றிக் கேட்டறிந்து கொண்டார்.

அம்மா அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தபோதும் கமிஷனர் ஜானுவையே கவனித்துக் கொண்டிருந்தார். 

சில நிமிட உரையாடல்களுக்குப் பின்..

ஜானுவிடம் திரும்பிய கமிஷனர்,

“ஜானகி. உனக்கு ஏதாவது ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுக்க நினைக்கிறேன். உனக்கு என்ன வேணும். நீயே கேளு”

ஜானு.. ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் பதில் சொன்னாள்.

“Thank You Sir. இன்ஸ்பெக்டர் கீதா சுப்ரமண்யம் இருக்காங்க இல்ல. அந்த போலீஸ் ஸ்டேஷன்ல நான் போலீசா இருக்கணும். ஒரு வாரம்…”

(ஜானு தொடர்வாள்…)

kritikadass86@gmail.com

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close