தொடர்கள்

இசைக்குருவி-4- “சுகமேது வாழ்வில் வலிகளைச் சுமக்காமல்…”

-சரண்யா தணிகாசலம்

“சுகமேது வாழ்வில் காதல் வலிகளைச் சுமக்காமல்…”

சில பூக்கள் மலரும் அதே வேளையில்தான் சில பூக்கள் உதிர்கின்றன.அது இயற்கை. அதுபோல இந்தக் காதலும் இயற்கையானது.காதல் அன்பையும் கொடுக்கும்,அனாதையும் ஆக்கும்.
இதை  நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போது இந்த உலகில் எத்தனையோ பேருக்கு முதன்முதலாய் காதல் அரும்பியிருக்கலாம்,அதேபோல் எத்தனையோ பேருக்கு காதல் முறிந்திருக்கலாம்.அவையாவும் எங்கோ நிகழ்கிறது.ஆனால் இங்கு ஒரு காதலின் தோல்வியை ஏற்றுக்கொண்ட மனதுடன் அதை மெதுவாய் உணர்ந்து அந்த வலிகளை அனுபவித்து,பின் காதலே வேண்டாம் என்றிருக்கிறான் ஒருவன்.அவன் மீது ஒருத்தி காதல் வயப்படுகிறாள்.ஒரே நேரத்தில் இந்த இருவருக்கிடையில் காதல் வலியாகவும்,சுகமாகவும் இப்பாடலில் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.

படம் : உன்னாலே உன்னாலே
பாடல் :முதல் நாள் இன்று
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : பா.விஜய்
இயக்குநர் : ஜீவா

            நாயகியுடனான காதலில் தோல்வியடைந்த நாயகன்,காதலை விட்டு சற்று விலகி இருக்க முயல்கிறான்.காதல் தந்த இன்பம்,கொண்டாட்டம்,காத்திருப்பு, கோபம், பொறுமை,வலி அனைத்தையும் ஏற்றுக் கொண்டு தனிமையில் இருக்கும் அவனுக்கு,காதல் கசப்பான பிம்பமாக தோன்றுகிறது.அதேநேரம் அவனுடன் பழகி வரும் தோழி தீபிகாவிற்கு  அவன் மீது காதல் உண்டாகிறது. ஒரு கோட்டின் இரு முனையில் இருக்கும் இவ்விருவருக்கும் இடையே காதல் பொதுவானதாக இருக்கிறது,ஆனால் ஒரு புறம் அது ரணமாகவும் மறுபுறம் சுகமாகவும் இருக்கிறது.

“முதல்நாள் இன்று எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனலேற்றலாம்”

 மனிதனுக்குள் காதல் செய்யாத மாற்றங்களே இல்லை என்று சொல்லலாம்.ஒருவனை சட்டென்று தன் இயல்புகளிலிருந்து மாற்றுவது காதலே.அவனுக்குள் காதல் வந்ததும் பின் அந்தக் காதல் பிரிந்ததும்,அவனுக்குள் நிகழ்ந்த மாற்றங்கள், அவனை வெகுவாக மாற்றியிருந்தது.அவனை பக்குவப்படுத்தியிருந்தது.

வலியைக் கடந்து வடுவாய் இருக்கும் காயம் உணர்த்தும் பாடம்,வாழ்வில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள கற்றுத்தரும்.அவனும் அந்த வலியுடன் வாழ பழகிக் கொண்டான்.

“என் உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லிக் கற்றுக்கொண்டது
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா”

இப்பாடலில் மறுமுனையில் அவள்,தனக்குள் வந்த காதலை எண்ணி களிக்கிறாள்.தன்நிலை மறந்து அவள் பாடுகிறாள்.காதல் வந்ததும் தனக்குள் தானாக நிகழும் மாற்றங்கள் அவளை வியப்படையச் செய்கின்றன.இதுவரை இல்லாத மாற்றங்களை அவள் உணரும்போது தன்னைத் தானே கொண்டாடிக்கொள்கிறாள்.

“திசைதோறும் கூறுகின்ற உண்மை
குளிர்போலே காதல் மிக மென்மை
தீண்டுகையில் தித்திக்காதோ சொல் உள்ளம்”

 கண்களால் காணமுடியாத ஒன்று மனதுக்கு தரும் இன்பம் என்றுமே வார்த்தைகளுக்குள் அடங்காது.தன்னைச் சூழ்ந்துக்கொள்ளும் குளிரைப் போல் அவளைத் தீண்டிய காதலும் மென்மையாகவே இருக்கிறது.குளிர் தீண்டி வெப்பம் கேட்கும் உடல்போல காதல் தீண்டி அதன் சுவைகளில் வாழ்கிறாள்.

“முழுதாக மூழ்கியதும் இல்லை
மூழ்காமல் மிதந்ததும் இல்லை
காதல்கடல் விழுந்தவர் காணும் நிலை”

“ஓ…. வெகுதூரம் வந்தேன்
காதல் கிருமிகள் நெருங்காமல்”

           காதலின் இரு துருவங்களான சுகம்,வலி இவை இரண்டிலும் முழுதாய் மூழ்கி தன்னை வதைத்துக் கொள்ளவும் இல்லை.காதல் அவனுக்குப் பெரிதாய் ஏதும் மாற்றங்களையும் தரவில்லை.சில மாற்றங்கள் அவனுக்குள் நிகழ்திருக்கிறது.அதை அவன் உணருகிறான்.அதை மிகைப் படுத்திக் கூறவோ இல்லை சாதாரணமாக கருதவோ அவன் எண்ணவில்லை.தன் காயம் தான் மட்டும் அறிவதைப் போல், காதல் தரும் உணர்வுகளை அதில் இருப்பவர்கள் மட்டும் அறியக்கூடும் என பாடல் முழுவதும் அவன் காதலை சற்று தொலைவில் வைத்தே பார்க்கிறான்.

“இளம்நெஞ்சில் காதல்விதை தூவு
இல்லையேல் நீ தன்னந்தனித் தீவு
வாழ்க்கை ஒரு சுமையாகாதோ சொல்லு ஹோ”

        தன்னைச் சுற்றி எத்தனை மனிதர்கள் இருந்தாலும் காதல் போல் ஒரு துணை வேண்டும் அவளுக்கு.தன் வாழ்கையும் அதன் நிகழ்வுகளையும் அவள் மட்டுமே சுமந்து செல்வதில் அவளுக்கு விருப்பமில்லை.தன் இன்பங்கள்,சோகங்கள் பகிர காதலெனும் ஒன்று தேவை எண்கிறாள்.

“உதட்டாலே காதலெனும் சொல்லை
உரைத்தாலே கூட வரும் தொல்லை
வாழும்மட்டும் விழிகளின் தூக்கம் கெடும்…”

“சுகமேது வாழ்வில் காதல் வலியை சுமக்காமல்”

காதலில் நடக்கும் சிறு சிறு சண்டை,ஊடல்,பொய்க்கோபம் முதல் பிரிவு வரை சந்தித்த அவனுக்கு காதலெனும் வார்த்தை தொல்லையாக இருக்கிறது. காதலை முதன்முதலாய் உணரும் அவளுக்கோ இவையனைத்தும் சுகமான சுமையாகத் தெரிகிறது.

“உப்புக்கல் வைரம் என்றுதான்
காட்டிடும் காதல் ஒன்றுதான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம்”

எத்தனை இன்பங்கள் கொடுத்தாலும் ,காதலில்  துன்பங்கள் மட்டுமே இறுதியாக மிஞ்சும் என்பது அவன் கருத்து.அவளுக்கோ மாறாக காதல் இன்பங்களின் திரளாக இருக்கிறது.
தான் அவன் மீது கொண்ட காதலை எண்ணி அவள் ஒரு புறம் மகிழ,அவனோ காதலையும் அது சார்ந்த விடயங்களையும் சற்று தள்ளி வைத்து காதல் வேண்டாமெனும் முடிவில் இருக்கிறான்.

 ஒவ்வொருவரின் பார்வையிலும் காதல் என்பது மாறுபட்டு இருக்கும்.இந்தப் பாடலில் இவ்விருவருக்கும் வெவ்வேறாக தோன்றும் காதலின் உணர்வுகளை ஒரே இசைக் கோர்வையில் வைத்திருப்பார்கள்.

 காதல் தரும் வலியையும்,சுகத்தையும் ஒரே அலைவரிசையிலான இசையிலே வெளிப்படுத்தியிருப்பார்கள்.இவ்விருவரின் கருத்தைப்போல் அதற்கு அமைக்கப்பட்ட இசையில் வேறுபாடுகள் கிடையாது.அதே போல் இந்தக் காதல் இவ்விருவருக்கிடையில் வேறுபட்டாலும்,பொதுவாக காதல் என்பது அன்பு,புரிதல்,பறிமாறுதல்,
துணைஇருத்தலே…..

கீச் கீச் தொடரும்……

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close