சிறுகதைகள்
Trending

இருண்மை – ஹரிஷ் குணசேகரன்

சிறுகதை | வாசகசாலை

1

பணியில் சேர்ந்த நாள் முதல் இதுவரை அவன் தங்கியிருந்த மத்திய தர அறைகள் அவனை எரிச்சல் கொள்ளவே செய்தன. தனிமையின் தடங்கள் ஆழமாகப் பதிந்து தனக்குள் வெறுமை உணர்வு நிரம்பிட அதுவும் காரணமென்று நினைத்தான். பெங்களூரில் அவன் தங்கியிருந்த புது ஹாஸ்டல் அறையின் மூட்டைப் பூச்சி தொல்லை, கொச்சியில் போதுமான கிரணம் புக முடியாத அறையின் பூஞ்சை பூத்த துணிமணிகள், தூசியும் அழுக்கும் மண்டிய குளியலறைகள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்து அவனை இம்சித்தன. ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் ஒன்றாகத் தங்கி வாடகையைப் பகிர்வதால் செலவு குறைவாகப் பிடிக்கிறது. இந்த செளகரியத்திற்காகத்தான் அவன் சுத்தமின்மையையும் ஒளியின்மையால் பூக்கும் பூஞ்சைகளையும் சகித்து வந்தான்.

ஒருநாள் மட்டுமே உடுத்திய கொடியில் தொங்க விட்ட சுருக்கம் நிறைந்த புதுச்சட்டை மீது, போன வாரம் வீட்டிற்கு கோவைக்குச் சென்றபோது அம்மா துவைத்துக் கொடுத்த ரெண்டு ஈடு துணிகளில் ஈரமானவை மீது கருப்பும் சாம்பலும் கலந்த பூஞ்சை வளர்ந்ததை கண்டு எரிச்சலுற்றான். ஒரு வகையில் தன்னுள் புரையோடிப் போன சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடாக பூஞ்சையைக் கருதினான். எடுத்து புழங்காமல், வாரா வாரம் தோய்க்காமல் ஒரே இடத்தில் போட்டது போட்ட மாதிரியே விசிறியடித்த துணிகளுக்கு முக்தி தருகின்றன பூஞ்சைகளென வேடிக்கையாக நினைத்து சிரித்துக் கொண்டான். இன்னும் சற்று சிந்தித்து, துணிகளை பொருட்களைத் திண்ணும் ஈர நோக்கம்தான் பூஞ்சைகளை செலுத்துவதாக முடிவுக்கு வந்தான்.

கொச்சியில் காக்கநாட்டில் இருக்கும் அலுவலகத்திற்கு மிக அருகே அமைந்த சொகுசு குடியிருப்பில் ஆறு நண்பர்கள் சேர்ந்து எண்பதாயிரம் முன்பணம் செலுத்தி குடி புகுந்ததை நினைத்துப் பார்த்தான். ஆளுக்கு மூன்றாயிரத்தி சொச்சம் வரும் மாத வாடகை. காற்றோட்டமான வெளிச்சமான மூன்று அறைகள் – கட்டில் மெத்தை‌ கொண்ட படுக்கை அறைகள், இரண்டு பால்கனிகள், பெரிய ஹால், சோஃபா செட்டுகள், டைனிங் டேபிள், பெரிய பிளாஸ்மா திரை, ஆங்காங்கே மர வேலைப்பாடுகள், அலமாரிகள், பொது நீச்சல் குளம், பொது உடற்பயிற்சிக் கருவிகள், காலாற நடக்க பூங்கா என்று நினைவில் தங்கிய கனவு வீட்டைக் கலைத்துப் போட்டது நண்பர்களுக்கு இடையேயான மனஸ்தாபம்.

பொதுக் கணக்கில் வாங்கிய பொருட்களின் விலை குறித்து இவன் பேச்செடுக்க, சிறிதாக ஆரம்பித்த சண்டை தனிமைப்படுத்தலில் முடிந்தது. பெருந்தன்மையாக மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆன பின்னும் குடித்துவிட்டு அடிக்க இருவர் கதவைத் தட்ட, பயந்துபோய் நடுக்கத்துடன் உறங்குவதுபோல நடித்தான். மனிதர்களின் குழு மனப்பான்மையால் பெரும்பான்மை சிந்தனைப் போக்கினால் சிறுபான்மை தரப்பு அச்சுறுத்தப்படுவதை வெறுத்தான். அந்த வார இறுதியில் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் பொலிவிழந்த, ஆனால் இணக்கமான நபர்கள் வாழும் வீட்டிற்கு மாறினான். வாழ்ந்து கெட்ட அறைகள், அழுக்கான நாற்காலிகள், கைவிடப்பட்ட சமையலறை என்று பரிச்சயமில்லாத வேறு உலகத்தில் தான் உந்தப்பட்டதாய் நினைத்தான். என்றாலும் தன்னுடைய சுயமரியாதைக்காக அதைச் செய்ததாய் சமாதானம் அடைந்தான்.

பிராஜெக்ட் இல்லாததால் வெட்டியாக படுத்தே கிடப்பது, ஆஃபிஸ் வளாகத்துள் சென்று வெறுமனே வருகையை மட்டும் பதிவு செய்வது, பொழுதன்னைக்கும் தூங்குவது என்று நாட்களைக் கழித்தான். அப்போது தங்கிய அறையில் அடுக்கி வைத்த துணிகளில், ஜில் தரையில் கடாசப்பட்ட போர்வையில் பூஞ்சைகள் வேண்டா விருந்தாளிகளாக வந்தன. வியர்வையும் ஈரமும் கலந்த அந்த பூஞ்சை நெடியை வெறுத்தான். அறைவாசிகள் இருவரிடம் வீட்டில் நிலவும் சுத்தமின்மை, ஒழுங்கின்மை குறித்து  முறையிட்டும் காலையில் ஆஃபிஸ் போய் இரவு தூங்க மட்டும் வருபவர்கள் அவர்கள் என்பதால் எதுவும் மாறவில்லை.

அவரவர் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி நிறுவனத்திற்குள் நுழைந்து ஒரே துறையில் அமைந்ததால் அந்த ஆறு பேரும் நண்பர்கள் ஆனார்கள். வெளிப்படையாகத் தெரிந்த மனக்கசப்பை  உணர்ந்து அழைத்துப் பேசி, பிரச்சினையைப் போக்க மெண்டார் முயன்றார். உணர்ச்சி வேகத்தில் அவர்கள் இருந்ததால் எதுவும் எடுபடவில்லை.

*****

சென்னையில் பயிற்சி முடித்ததும் அவனது குழுவை நேரடி கண்காணிப்புக்காக கொச்சி கிளைக்கு அனுப்பியிருந்தார்கள். ஆறு பேருக்கு இரண்டு மெண்டார்களை நியமித்து அவர்களின் நிழலில் கற்க வாய்ப்பு தந்தார்கள். மெண்டாருடைய கேபினுக்கு அருகிலேயே சிஸ்டம் அமைத்துத் தந்து வாரா வாரம் வகுப்பீடு கொடுத்தனர். ஆறு நண்பர்களும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்து நல்ல முன்னேற்றம்‌ கண்டனர். மற்ற ஐவரோடு சண்டையிட்டதும், அவன் வகுப்பீடுகளில் கற்றலில் திணறத் தொடங்கினான். அவன் அடித்த கோடிங் பிசகி எதிர்பார்த்த அவுட்புட் கிடைக்கவே இல்லை. நண்பர்களாய் இருந்து விரோதியானவர்கள் முன்னால் தான் தோற்பதை நினைத்து அவன் வருந்தினான். அவனுக்கு பெருத்த அவமானமாகக் கூட இருந்தது.

சரியான நேரத்தில் வகுப்பீட்டை சமர்ப்பிக்காதது, சொல்லாமல் சீட்டை விட்டுக் காணாமல் போவது, மென்பொருள் கற்றலில் கவனம் செலுத்தாமல் இருப்பது என்று காரணங்களை அடுக்கி அவனை எச்சரித்தார், மெண்டார் – ஜோசஃப். நாற்பது வயதைத் தொட்டவர்; மலையாளி; உதவும் குணம் கொண்டவர்.

ஆங்கிலத்தில் “ஸீ.. ஓஃபிஸ் வர்றது உன் டியூட்டி. உன் ஃப்ரெண்ட்ஸ் கூட சண்டைன்னா, அது வெளியே. மத்த அஞ்சு பேர் நல்லா பண்றாங்க, உனக்கு என்ன?” என்றார் ஜோசஃப்.

“நல்லா பண்ணதான் ட்ரை பண்றேன். அடுத்த தடவை கண்டிப்பா…”

“அவங்க கூட உனக்கு என்னதான் பிரச்சனை? ஒண்ணா வந்தீங்க, ஒரே செட் வேற.. பேசுனா தீராத சண்டை எதாவது இருக்கா?”

அவன் பதில் அளிக்காததால், “சின்னச் சின்ன விஷயத்துக்கு கணக்குப் பாத்தா, பணம் செலவாகுதேன்னு நெனச்சா ஃப்ரெண்ட்ஸ் கூட சந்தோஷமா இருக்க முடியாது” என்றார். அவர் சொன்ன அறிவுரை பிற்காலங்களில் அவனுக்கு உதவியது.

*****

2

கடைசியாக நண்பர்கள் குழாமோடு செராய் கடற்கரை போனதைத் தவிர, அவன் வேறு எங்கும் செல்லவில்லை. ஊர் சுற்ற நினைத்தும் வேறு நண்பர்கள் இல்லாததால் வீட்டிலேயே முடங்கிப் போனான். ஈர மணலில் கால்கள் ஜில்லிட, நண்பர்கள் வாங்கிய பழ பஜ்ஜியையும் மிளகாய் பஜ்ஜியையும் ரசித்து ருசித்து நிமிடத்தில் காலி செய்ததை நினைத்துப் பார்த்தான். நண்பர்கள் ஒவ்வொருவராக கிளைண்ட் இண்டர்வியூவில் தேர்ச்சி பெற்று பிராஜெக்ட் கிடைத்து காக்கநாட்டிலேயே தங்கிவிட, தன்னுடைய வாய்ப்புக்காக காத்திருந்தான். ஆனால் அவனுடைய முறை வருவதாகத் தெரியவில்லை. ஒருவேளை நண்பர்களோடு நல்ல உறவில் இருந்திருந்தால் சொகுசு குடியிருப்பில் சுகமாக இருந்திருக்கலாம். லிவிங் கம்யூனிட்டியில் இரண்டறக் கலந்திருக்கலாம். ஏன், பிராஜெக்ட் கூட கிடைத்து இருக்கலாம்! ஒரு சின்ன விஷயம், சஞ்சலம் தன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டதாய் நினைத்துப் பெருமூச்சு விட்டான்.

சரியாக சாப்பிடாமல் தூங்காமல் சமநிலை குலைந்து வீட்டிலிருந்தபடி படம் பார்த்துத் தள்ளுவது, ஃபேஸ்புக்கில் அரட்டையடிப்பது, எதுவும் செய்யாமல் சும்மாவே படுத்துக் கிடப்பது என்று நேரத்தை வீணடித்தான்.

பிராஜெக்ட் அனுபவமின்றி பெஞ்சில் வெகு காலம் இருப்பதால் தன்னுடைய வாழ்க்கை வீணாகிறது என்பதை திடீரென உணர்ந்து வருத்தமுற்றான். செயல்பாட்டோடு சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட பங்கு சம்பளத்தை இழக்க நேரிடுவதையும் நினைத்துக் கவலைப்பட்டான். அவனை கொச்சிக்கு வர வைத்த சீனியர் டெலிவரி மேனேஜருக்கு வாரம் ஒரு மின்னஞ்சல் அனுப்பியும், பதிலேதும் வராததால் கோபம் புகைந்தது. எதுவும் செய்ய முடியாத ஆற்றாமை அவனை இன்னும் விரக்தியில் தள்ளியது.

தான் தோற்றுக் கொண்டிருப்பதை, மென்பொருள் கற்றல் என்பதே இல்லாது போனதை, பழக நண்பர்கள் கூட இன்றி வெறுமை அண்டியதை, காலம் விரயமாவதை உணர்ந்து கொச்சியை விட்டுப் புறப்பட தீர்மானித்தான். கேஃபெடிரியாவில் தேங்காய் எண்ணெய்யில் சமைத்த உணவை, கொட்டை அரிசியை சாப்பிட்டு வயிற்று வலியால் அடிக்கடி அவதிப்படுவதாய் ஜோசஃபிடம் பொய் சொன்னான்.

“ஓ.. அப்ப சமைச்சு கொண்டு வந்து சாப்பிட வேண்டியதுதான? வாட்ஸ் ஸ்டாப்பிங் யு..?” கேட்டார்.

“எனக்கு சமைக்கத் தெரியாதே..”, முகத்தை பாவமாக வைத்து சொன்னான்.

“தேங்கா எண்ணெய்ல‌ நல்ல கொலஸ்ட்ரால்தான் இருக்கு. நீ அப்ப அதுக்கே பழகிக்கோ. குட் ஃபார் யு..”

“ஆனா எனக்கு டேஸ்ட் புடிக்கலை சார்.. ஜோசஃப்”

“கண்ணை தெறந்து பாரு.. உனக்கு நெறைய ஆப்ஷன்ஸ் இருக்கு. மை ஃப்ரெண்ட், பக்கத்துல வாழக்கலால நல்ல தமிழ் ஹோட்டல் இருக்கு!”

‘அடப் போங்கப்பா.. அப்ப கடைசி வரைக்கும் என்னை உட மாட்டீங்க’ – நினைத்து‌ அலுத்துக் கொண்டான்.

மாலை நேரத்தில் அலுவலக வளாகத்தில் ஒன்றாக கேரம் விளையாடும் நண்பருக்குப் பரிச்சயமான மேனேஜரைப் பிடித்து சென்னை கிளையில் பிராஜெக்ட் வாங்கினான். பிணக்கு வந்த நண்பர்களிடமிருந்து சொகுசு குடியிருப்புக்காக செலுத்திய அட்வான்ஸ் பங்கு – பதிமூன்றாயிரத்தி சொச்சத்தை வாங்காமல் கம்பெனி செலவில் விமானம் ஏறினான். பணத் தேவை இருந்தும் அவர்களிடம் பேசத் தயங்கினான் என்பதே உண்மை. கேட்டாலும் அவர்கள் உடனே தர மாட்டார்கள் என்பதை ஊகித்தான். அவர்கள் எல்லாரும் அறையை காலி செய்ததும் வீட்டின் உரிமையாளர் தன் போக்கில் பிடித்தம் செய்து தரும் தொகையில் ஒரு பங்கு பின்னாளில் அவனுக்கு கிடைக்கும்.

புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக ஜோசஃபை சந்தித்து சென்னையில் கிடைத்திருக்கும் வாய்ப்பு பற்றிக் கூறினான்.

“பரவால்லயே.. ஹேப்பி ஃபார் யு. நீ என்கிட்ட டிரான்ஸ்ஃபர் கேட்ட. ஆனா தானா உனக்கு பிராஜெக்ட் கெடச்சிருக்கு.”

“ஏதாவது அட்வான்ஸ்?”

“வாட் யு மீன்.. அட்வான்ஸ் ஃபார் வாட்?”

“ஹய்யோ.. சாரி ஜோசஃப். அட்வான்ஸ் ஞாபகமாவே இருக்கு. ஏதாவது அட்வைஸ், ஃபீட்பேக் இருக்கான்னு கேக்க வந்தேன்” என்று இளித்தான்.

“ஆல்ரைட்.. ஃப்ரம் நவ் ஆன், யு ஆர் ஆன் யுவர் லெக்ஸ். இனி, நீ யாரையும் குறை சொல்ல முடியாது. இது ஒரு நல்ல லெர்னிங் கர்வ். ஒரு நாள் முடியுறப்ப, அன்னைக்கு என்ன கத்துக்கிட்ட.. அதுதான் ரொம்ப முக்கியம்”

“அது ஷரி சேட்டா..”

“போய்க்கோடா.. ஈ.. ஈ..”

3

புது மேனேஜர் ஒப்புதலில் தரமணி ஆசியானா ஹோட்டலில் ஒரு வாரம் தங்க ஏற்பாடு செய்தார்கள். நல்ல குளிரில், அகன்ற மெத்தையில், தடிமனான பஞ்சு போர்வைக்குள் ஒடுங்கி, பெரிய திரையில் மிலானோ ஃபேஷன் ஷோ பார்த்து ரசித்தான். பத்தாவது படிக்கும்போது ஃபேஷன் டிவியில் பிகினி அணிந்து வளைந்து நெளிந்து நடை போட்ட மாடல்களை திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருக்கையில் மின்வெட்டு குறுக்கிட, திரும்ப மின்சாரம் வரும்வரை  படபடப்புடன் தொலைக்காட்சி பெட்டியின் அருகிலேயே காத்திருந்ததை நினைத்து சிரித்துக் கொண்டான்.

காலையில் எட்டு மணிக்கே பேக்கேஜில் அடங்கிய பஃபே சிஸ்டத்தில் விதவிதமான டிஃபன், பழங்கள், முட்டை, காஃபி என்று ஒரு பிடி பிடித்தான். தன்னுடைய வாழ்க்கை மாறத் துவங்குவதை நினைத்து ஆறுதல் அடைந்தான். பிரேக் ஃபாஸ்ட் மட்டும்தான் கம்பெனி பேக்கேஜில் வரும். மீதி நேரம் பசித்தால் பக்கத்தில் தள்ளு வண்டி கடையில் சாப்பிட்டான். ஹோட்டல் அறைக்குள் இருந்த பிரத்யேக மினி பாரின் சிறிய ஃப்ரிட்ஜை அவன் தொடவே இல்லை. அதிலிருந்த லிக்கரின் விலை அவன் பட்ஜெட்டில் நிச்சயம் அடங்காது.

ஐந்து நாட்கள் கழிந்ததும்தான், இன்னும் இரண்டு நாட்களில் ஹோட்டலை காலி செய்ய வேண்டும் என்பதே ஞாபகத்திற்கு வந்தது. ஆஃபிஸ் இண்ட்ரா நெட்டில் அறையைப் பகிர்ந்து கொள்ள செய்யப்பட்ட விளம்பரங்களைத் தேடி, சோழிங்கநல்லூர் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அருகே ஒரு ஃப்ளாட்டை கண்டடைந்தான். இருந்தும் பியர் வாங்கிக் கொண்டு ஹோட்டல் அறைக்குச் சென்று குடித்து பொழுதை சில்லென அனுபவித்தான். அன்று மாலை ஜோடியோடு வருபவர்கள் டிஜே பார்ட்டியில் இலவசமாக உள்ளே நுழையலாம் என்கிற அறிவிப்பை முகப்பில் கண்டதும் பெண் துணைக்காக ஏங்கினான். போகிற வருகிற பெண்களை, அவர்களின் உடல் கட்டமைப்பை வெகுநேரம் பார்த்துக் கொண்டே இருந்தான்.

பெரும்பாக்கம் செல்லும் வழியில், சாலையிலிருந்து சற்று தள்ளி அமைந்த முதல் மாடி ஃப்ளாட்டுக்கு இடம் பெயர்ந்தான். இரண்டு சயன அறைகள், இரண்டு பாத்ரூம்கள், சிறிய சமையலறை என்று சுமாராக இருந்தது. அவனையும் சேர்த்து நான்கு பேர் தங்கினர். பெரிய வசதிகள் எதுவும் இல்லாதபோதும், துணி துவைப்பி இல்லாதபோதும், பக்கத்தில் கடைகள் இல்லாதபோதும் அட்வான்ஸ் கேட்காததால் அங்கு வசிக்க முடிவெடுத்தான். அந்த அறையின் இருட்டில் படர்ந்த பூஞ்சைதான் சமீபத்திய கடந்த காலத்தை அவனுக்கு நினைவூட்டியது.

அலுவலக வாழ்க்கையும் அத்தனை மகிழ்வானதாய் இல்லை அவனுக்கு. இண்டர்வியூ வைக்காமலேயே தன்னை ஏன் எடுக்க வேண்டும், என்கிற கேள்விக்கு முதல் நாளிலேயே விடை கிடைத்தது. கிளைண்டுக்கு குறித்த நேரத்தில் பிராஜெக்டை முடித்து ஒப்படைக்காததால் எஸ்கலேட் ஆன சூழலில், புது ரத்தம் பாய்ச்சி வேகத்தைக் கூட்டுவதே அவர்களின் நோக்கம். சேர்ந்த அடுத்த நாளே, அவனுக்கான மாடியூலை தந்து எரர் ஃபிக்ஸ் செய்யச் சொன்னார்கள். வடிவம் பெற்ற ஜாவா கோடிங்கை என்ன ஏதென்று படித்துக் கொண்டிருக்கும்போதே, சில சீட்டுகள் காலியாகின. சரியாக ஜாவா தெரியவில்லை, கோடிங் ஒழுங்காக அடிக்கவில்லை என்று காட்டு கத்து கத்தி டெலிவரி மேனேஜர் அவர்களை வேலையை விட்டுத் தூக்கினார்.

‘என்னடா இது.. வம்புல மாட்டிக்கிட்டோமே. தானா இங்க வந்து சிக்கிட்டோமே. கொச்சிலயே இருந்திருக்கலாமோ?’ நெருக்கடியில் தனக்குள்ளேயே கலங்கினான். ஜோசஃபை அழைத்து தான் புட்டும் கடலைக்கறியும் உடனே சாப்பிட வேண்டும் போலிருக்கிறது என்று ஆரம்பித்து இறுக்கமான சூழலை சொல்லி புலம்பினான். தான் இனிமேல் எதுவும் செய்ய இயலாது என்கிற எதார்த்தத்தை சொல்லி ஆற்றுப்படுத்தினார்.

நல்லவேளையாக குழுவில் இருந்தவர்கள் உதவ, சீக்கிரத்தில் கோடிங்கை பழக்கப்படுத்திக் கொண்டான். ஆனால் அது எஸ்கலேட் ஆன பிராஜெக்ட் என்பதால் இரண்டு, மூன்று மேனேஜர்களை நியமித்து யாராவது ஒருவராவது முதுகுக்குப் பின்னால் நின்று கண்காணிக்கும்படி செய்தார்கள். தான் போடும் கோடிங் தவறாக இருக்குமோ என்கிற பயத்திலும் பதற்றத்திலும் அவனுடைய விரல்கள் நடுங்கின. சூழலை சமாளித்து ஒருநாளைக்கு குறைந்தது பன்னிரெண்டு மணிநேரம் வேலை செய்தான். சரியாக சொல்வதென்றால், வேலையைக் காப்பாற்றிக் கொள்ள அந்த நிலைக்குத் தள்ளப்பட்டான். எந்த மாடியூல் எங்கு சென்று இணைகிறது, அதற்கான கோடிங் எந்தப் பாதையில் இருக்கிறதென்று அனுபவஸ்தர்களைக் கேட்டறிந்து வேலை செய்ய நேரம் பிடித்தது.

புது மேனேஜர் நாராயணன் ஒரு வலதுசாரி; அதுவும் துக்ளக்கும் தினமலரும் வாசிப்பவர் என்பதால் தள்ளியே இருந்தான். ஒருமுறை அப்போதைய குஜராத் முதல்வரைப் புகழ்ந்து, “பாத்துட்டே இரு.. இவர்தான் அடுத்த பிரைம் மினிஸ்டர்” என்று ஆரூடம் சொன்னார். அடக்க மாட்டாது, “தமிழ்நாட்ல அவரை ஏத்துக்க மாட்டாங்க சார்…” என்றான். அன்றிலிருந்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் குஜராத் முதல்வரின் பராக்கிரமங்களை கதைத்தார். இவனும் நகைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவான்.

வேலை முடிந்து அறைக்குச் செல்ல சாதாரணமாக நள்ளிரவு தொட்டு விடும். மங்கிய மின் வெளிச்சம் படர்ந்த சாலையில் வாகனங்கள் மோதி விடுமோ என்கிற பயத்தில் ஃபோனில் டார்ச் அடித்தபடி நகர்வான். அதிலும் இரண்டு கம்பங்களில் மின்விளக்கு எரியாததால் இதயத்துடிப்பு அதிகரித்து இருக்கும். அந்த இடத்தில் நகைப்பறிப்பு, கொலை சம்பவம் கூட நடந்தேறி இருக்கிறது!

மழை பொழிந்த ஒரு நாளில் முட்டி வரை தேங்கிய நீரில் மெதுவாக நடந்தபோது வேகமான பாய்ச்சலில் கடந்தது சர்ப்பமென்று உணர்ந்ததும் பயத்தில் அலறினான். காலையில் நடப்பதோ இன்னும் கொடுமை! ரோட்டில் சக்கரம் பட்டு நசுங்கி செத்த தண்ணீர்ப் பாம்புகளை, தலை நசுங்கி மூளை தெரிய உலாத்தும் நாய்களை பார்க்க நேரிட்டு குமட்டிக் கொண்டு வரும்.

பிராஜெக்டை விரைவாக முடிக்க வேண்டி ராத்திரி ஷிஃப்டில் இவனைப் போட்டார்கள். ஷிஃப்ட் அலவன்ஸ் நானூறு ரூபாய் என்பதால், சந்தோஷமாக ஒப்புக் கொண்டு உழைக்கலானான். தூக்க நேரம் மாறியதால் முழித்துக் கொண்டு உட்கூரையை வெறித்தான். ஸ்விக்கி, ஸொமேட்டோ இல்லாத காலகட்டம் என்பதால் மதியம் வயிற்றில் கவ்வும் பசியை சகித்தபடி படுத்திருப்பான். பொறுக்க முடியாமல் மொட்டை வெயிலில் பெரும்பாக்கம் வரை நடந்து பாரதி பவனில் சாப்பிடுவான். ஷேர் ஆட்டோ தென்பட்டால் அதிலேறி சோழிங்கநல்லூர் போய் ஆந்திரா மெஸ்ஸில் ஐம்பது ரூபாய் செலுத்தி வயிறு முட்ட சாப்பிடுவான். திரும்ப இருட்டிய அறைக்குள் படுத்தபடி எதுவும் செய்யாமல் மீதி நேரத்தைக் கழிப்பான். தூக்கத்தை எட்டிப் பிடிக்கும் யத்தனத்தில் கடைசியில் வெல்லவும் செய்வான். அலாரம் அடித்ததும் எழுந்து ஆஃபிஸ் கிளம்பிப் போய் அடுத்த நாள் காலை வரை வேலை செய்வான்.

வார இறுதியில் அழுக்கு சோஃபாவில் சாய்ந்து அறைவாசிகளோடு தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பான். தெலுங்கு, ஹிந்தி சேனல்கள் வைக்கப்படும் போதெல்லாம் தன் கோபத்தைக் காட்ட வெளிநடப்பு செய்திடுவான்.‌ தமிழ் பெரியதா தெலுங்கு பெரியதா என்று வாக்குவாதம் தொடங்கி கடைசியில் சமஸ்கிருதம் தான் பழமையானது என்று மெஜாரிட்டியால் தீர்ப்பு எழுதப்பட்டிருக்கும். இங்கு தான் மொழிச்சிறுபான்மை ஆகி விட்டதை நினைத்து சிரித்துக் கொள்வான். அழுக்கு துணிக் கூடைக்குள் பூஞ்சைகள் போர் தொடுத்ததை அம்முறை இயல்பாகப் பார்த்தான்.

சதுப்புநிலங்களை ஆக்கிரமித்துள்ள மத்திய அரசு நிறுவனங்கள், காற்றாலைகள், குடியிருப்புகள், ஐடி நிறுவனங்கள், குப்பைக் கிடங்குகள் பற்றி அறிந்து கொண்ட பின், அவன் சிந்தனை மாறியது. மேடவாக்கம் பக்கம் வேறு வீடு பார்த்துக் கொண்டு செல்ல முடிவு செய்தான்.

எந்திரத்தனமாக ஒன்றரை மாதத்தை ராத்திரி ஷிஃப்டில் வேலை செய்து கழித்ததும் வாழ்க்கையை வெறுக்கத் தொடங்கினான். இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? ஆக்கப் பூர்வமாக எதுவும் செய்யாதது மாதிரி, செய்ததையே மறுபடியும் மறுபடியும் செய்வது மாதிரி பட்டதால் அலுத்துக் கொண்டான். என்ன செய்தால் இந்த வாழ்க்கை பூரணத்துவம் அடையும் என்று யோசிக்க ஆரம்பித்தான். சரியாக சாப்பிடாமல் தூங்காமல் எடை குறைந்து மெலிந்து காணப்பட்டான். நல்ல ஓய்விற்காக அவனது மனமும் உடலும் ஏங்கியது. தீபாவளி விடுமுறைக்காக வீட்டிற்குச் சென்று குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு, சத்தாக சாப்பிட்டு நன்றாக தூங்கி எழ ஆசை கொண்டான். ஆனால் அகப்பட்ட இந்த சிறையிலிருந்து காற்றும் கூட நினைத்தபடி வெளியேற முடியாத‌ கடுங்காவலில் இருந்து தப்பிப்பது சிரமம்தான். இருந்தும் துணிந்து கோவை செல்லும் தனியார் சொகுசுப் பேருந்தில், அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலித்த பேருந்தில் டிக்கெட் போட்டான். வீட்டிற்கு மட்டும் போக முடியவில்லை என்றால் டிக்கெட் பணத்தையும் மன அமைதியையும் இழக்க நேரிடும்.

நினைத்தது போலவே டெலிவரி மேனேஜர் முரண்டு பிடிக்க, விடுமுறை தினத்தில் தன்னுடைய மடிக்கணினியில் வீட்டிலிருந்தே வேலை செய்வதாக உத்திரவாதம் தந்தான். எல்லாரும் இப்படியே கேட்டால் என்ன செய்வதென்று அவர் கையைப் பிசைந்த போது, இவன் கெஞ்சினான். அவர் அனுமதி தந்ததும், இது வெற்றியா தோல்வியா என்கிற குழப்பத்தில் ஆழ்ந்து தன் இருப்பிடத்தில் அமர்ந்தான். தீபாவளி தினத்தில் ஆஃபிஸ் போய் வேலை செய்பவர்களை விட அதிக நேரத்தை செலவிட்டு வீட்டிலிருந்தபடி உழைக்கப் போவது அவனுக்கு அப்போது தெரியாது.

*** ***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close