சிறுகதைகள்

இரவல் குடம் 

உமா மோகன்

காதோரமாய் முடி இறங்கி வழியும் பெண்ணை தி.ஜானகிராமன் கதையில்தான் பார்க்க முடியும் என நினைத்திருந்த என்னை ஆச்சர்யப் படுத்திய மகேஸ்வரியின் அக்காதான் ராதா.மாங்குடி கணக்குப்பிள்ளை வீட்டுப் பெண் என்ற அறிமுகத்தோடு மகேஸ்வரி என் வகுப்பில் வந்து சேர்ந்திருந்தாள். காதோர முடி அழகினால் அவள் அழகி என்று ஒன்றும் பிரபலமாக முடியவில்லை. அடர்த்தியாகக் கம்பளிப்பூச்சி மாதிரி புருவமும், சாந்தம் நாலு டிகிரி தூக்கலாகவே விளங்கும் கண்களும் ஏனோ அவளை ஒரு அமானுஷ்யப் பிரதியாக்கிவிட்டன. போதும் போதாதற்கு விடலைப்பையன் முகம் மாதிரி மீசை அரும்பு வேறு.

சாரதா சொல்வாள்  ‘நல்ல காபி போட்டு கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டுட்ட மாதிரி இருக்கா மகேசு’ என.மீசை அரும்புக்காக மஞ்சளை அப்பிக்கொண்டே வரும் மகேசைப் பார்த்து சொல்கிறாளா இல்லை புதிய உவமை கண்டுபிடிக்கிறாளா என்றே புரியாமல் பொதுவாகத் தலையாட்டி வைப்போம்.

சாரதாவெல்லாம் ஊரைவிட்டுப் போன ஒரு கட்டத்தில்தான் ராதாவைப்  பார்த்தோம்.  மகேசுக்கு நடந்த அநியாயம் எதுவுமில்லாத திருத்தமான முகம். அவள் எங்கள் பள்ளியில் படிக்காததை எண்ணி வியந்தபோது மகேசு சொன்னாள் “எங்க அத்தைக்கிப் பிள்ளையில்லன்னு அவள சின்ன வயசுலேயே தத்துக் குடுத்துட்டாங்க “ என்று. சென்னையில் படித்தாளாம்.

சுங்கடிப்பாவாடையும் பார்டர் நிறத்தில் அரக்கு தாவணியும் ரவிக்கையுமாக முத்துமாரியம்மன் கோயிலில் அவள் அம்மாவோடு வந்து நின்றபோது மகேசு மட்டும் எங்கள் வீட்டுக்கு வந்து நின்றாள். எப்போதோ ஏதோ ஒரு அரட்டையில் நான் சொன்னதை நினைவு வைத்துக் கொண்டு “உங்க அப்பாதான அந்தக் கோயிலுக்கு நெலம் குடுத்தாங்கன்னு சொன்ன..செத்த அவுங்கள சொல்ல சொல்லுந்த பூசாரிகிட்ட” என்று. 

“தலையும் வாலும் புரியாமல் அப்பாகிட்ட என்னத்த சொல்ல …”

 “ராதாவுக்கு ஏதோ தோஷமாம். மாரியம்மனுக்கு ஒரு மண்டலம் தண்ணி ஊத்தி , தெனம் நாப்பத்தொரு சுத்து சுத்தணுமாம் ”

“.நாப்பாத்தொன்னா …கேக்கவே தல சுத்துதேந்த…”

 “அதெல்லாம் அம்மா பாத்துக்கும். நீ ஒங்க அப்பாட்ட சொல்லு …”

ஆத்தாவிடம் சொல்லி,அம்மாவிடம் சொல்லி, அவர்கள் அப்பாவிடம் பேசி, அவர் புரிந்து கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டுப் போனபோது, ராதாவின் முகம் பார்த்து பூசாரிவீட்டு மக்களே அவர்களுக்கு வேண்டியதைச் செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.

“செரிம்மா…எங்க வீட்ல வந்து தங்கிக்கலாமே…. காலங்கெட்டுக்கெடக்கு… ரெத்தினமாட்டம் புள்ளைய வெச்சிகிட்டு கோயில்ல படுக்கறதெல்லாம் செரிவருமா. இதுவும் ரொம்ப சின்ன எடந்தான…பூட்டு தெறப்பு பெருசா ஒன்னும் கெடயாதுங்க… ..” அப்பா இழுத்தார்.

மகேசின் அம்மாவையும் அப்போதுதான் பார்த்தேன். அவரும் மாந்தளிர் போலத்தான் இருந்தார்.

“இல்லைங்க தேனு அப்பா..அவள நம்பித்தான இவ்ளோ தூரம் வந்திருக்கோம்.அவ பாத்துக்குவா…ஜனம் சாமி கும்புட வர்றப்ப எடஞ்சலா இஞ்ச ஒக்காந்திருக்கக் கூடாது. ஒருவா கஞ்சி காச்ச எடம் வேணும். பூசாரி வீட்டுல ரொம்ப நல்லவுங்களா இருக்காங்க…அவுங்க திண்ணையிலேயே ஒரு மறைப்ப வெச்சுக்கலாம்னு சொன்னாங்க. சாமி கும்புட்டு  மத்தநேரம் நானும் பாப்பாவும் அங்கனக்குள்ள இருந்துக்குவோம். ராத்திரி அவ காலடி இருக்கவே இருக்கு…”

இவ்வளவு கடுமையான நோன்பு எதற்கு என்று யாரும் கேட்கவுமில்லை.அவர்களும் சொல்லவுமில்லை.

கையில் கொண்டு வந்திருந்த துணிப்பையில் இருந்து ஒரு மஞ்சள் சுங்கிடிச் சேலை எடுத்து பூசாரியிடம் நீட்டிவிட்டு ”நாளக்கி வெடியிறமுன்ன வந்துடறேன்….நாளக்கே தொடங்கிருவோம் “என்று அப்பாவுக்கும் பூசாரிக்கும் பொதுவாக சொல்லிவிட்டு இறங்கி நடந்தபோது இதோ இப்போது சற்றுமுன் ராதாவைப் பார்த்தேனே அதே போல்தான் அவர்கள் அம்மாவின் முகம் இருந்தது.

என்னால் மறுநாள் அவர்களைப் பார்க்கப் போக முடியவில்லை. ஆசிரியப் பயிற்சியில் சேர அழைப்பு வந்திருந்தது. விடுதியிலிருந்து மீண்டும் வந்தபோது பதினைந்து நாட்கள் ஓடிவிட்டிருந்தது.

நான் மறந்தே போயிருந்த ராதாவையும் அம்மாவையும் என் ஆத்தாதான் நினைவூட்டினார்.

“ஆனாலும் நொம்ப தயிரியம்டி….எங்கேருந்து இந்தக் கோயிலைப் புடிச்சாவளோ ..ஒரு பூட்டு இல்ல..தொறப்பு இல்ல…லைட்டு இல்ல..ஆம்பள தொணை இல்ல…அதுவோ பாட்டுக்கு சுத்தியிட்டு கெடக்குதுவோ…”

“போவமா கோயிலுக்கு “

“ஒன்ன மாரின்னு நெனச்சியா..காலம்பற வெடியவெடிய தலையில தண்ணிய ஊத்தியிட்டு இந்நேரம் மாரியாத்தாவுக்கு நாப்பத்தொரு கொடம் தண்ணி மொண்டு ஊத்தியிட்டுருக்குங்க ..அப்பறம் நாப்பத்தோரு சுத்து சுத்தும் அந்தப் பொண்ணு…அப்பறம் வந்து ஒல வெச்சிதான் ஒரு பயத்தம்பருப்பு கஞ்சி …”

ஈருளியைச் சடக்கென்று இழுத்து இழுத்துவிட்ட எரிச்சல் “அவளுக்கென்னமோ தோசம்னு சொன்னாவோ..அதுக்கெதுக்கு என்ன சேத்து பேசுறீங்க “

“ஒன்ன ஒடத்த  வயசுப் பொண்ணு  என்னதான் செய்யிராவோன்னு பாக்க சேந்தாப்புல நாலுநாளு போயிட்டு வர என்னால முடியில தெரியிமா…யாரயிம் அலச்சியமா பேசாத தேனு …”

“ஆத்தா நா ஒன்னும் அலச்சியமா பேசல….”

“சரி விடு..சாயிந்தரமா ஒரு நாலு மணி போலப் போவோம் ..”

நான் தூங்கி, காபி குடித்து, எங்கள் வீட்டிலிருந்து அரைகிலோமீட்டர் தூரத்திலுள்ள கோயிலுக்குப் போவதற்குள் ஐந்தரை ஆகிவிட்டது. மாரியம்மன் தாலாட்டு இன்னும் ஏதோ பாட்டு வைத்துக் கொண்டு பூசாரி வீட்டுத் திண்ணையிலேயே அம்மாவும் பெண்ணும் வாய்விட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். .

எல்லாமே எங்கள் ஊருக்குப் புதுசு. அம்மை போட்ட வீட்டிலேயே தலைக்கு ஊற்றும் வரைதான் மாரியம்மன் தாலாட்டு படிப்பார்கள். அப்புறம் படித்தவை என்னவென்றும் விளங்கவில்லை.

பெரிய கூட்டமொன்றும் வராது எப்போதும். மாசமாயிருக்கும் பெண்ணுக்காகவோ, வியாதி வந்து வீட்டில் யாரும் கிடந்தாலோ,பரீட்சை காலத்திலோ, வருவார்கள். அம்மை வார்த்து தலைக்கு ஊற்றி தேறினால் கஞ்சி காய்ச்சி ஊற்றுவதுண்டு. மற்றபடி வீட்டிலேயே இருக்கும் வயதுவந்த பெண்களுக்கோ அம்மாக்களுக்கோ தோன்றினால் அரைமணி நேரம் ஒரு குட்டிக் கிண்ணத்தில் எண்ணெய் எடுத்துக்கொண்டு அது சிந்தாதபடி ஒரு நாசூக்கு நடையோடு கதைபேசி வந்து திரும்புவதுண்டு. விதைப்பு நேரம் சற்றே கூட்டம் இருக்கும்.

இப்படிப் பாட்டு பாடி சாமி கும்பிடுவது…தண்ணீர் ஊற்றுவது…..எல்லாமே அபூர்வந்தான்….ஆச்சரியந்தான் ..வேடிக்கைதான்…வயலுக்குப் போகும் வழியில் மோவாயில் கையை வைத்துக்கொண்டு இடுப்பை மற்றொரு கையால் தாங்கியபடி சற்றே நின்று  குளத்துக்கும் கோயிலுக்குமாக அந்தப் பெண் நடப்பதை பார்த்துவிட்டுப் போவது அப்படித்தான்.

பூசாரி வீட்டுத் திண்ணை சமுக்காள மறைப்புக்கட்டி இருந்தது. அதற்குள்தான் இவர்களின் துணிமணி.ஒரு மண்ணெண்ணெய் பம்ப் அடுப்பு.சமையல் சாமான் எல்லாம். சமையலும் சாப்பாடும்தான் அங்கே. உறங்குவதற்கு மாரியம்மன் கோயில் கருவறைக்கு வெளியிலுள்ள சிறு நடையில் புடவை விரித்துக் கொள்ளவேண்டியது.  பணம் வசூல் குறைவானதால் வெளி வாசலுக்குத் தட்டிதான் வைத்திருந்தார்கள் .

‘நம்ம சாமிக்கென்ன நவயா நட்டா…நம்மள மாறியே விசேசத்துக்கு கூட ஒரு சந்தனக் காப்பும் ஜிகினாவும் கவுரிங்குந்தான…’ சிரித்துக் கொண்டார்கள் மக்கள்.

இப்போதெல்லாம் என்னவோ ஒரு காற்றாடி மாட்டியிருக்கலாமோ, கம்பிக்கதவாவது பொருத்தியிருக்கலாமோ என்ற குற்ற உணர்வு.  

தமக்கு வேண்டிய குறைந்தபட்ச பொருட்களை ஊரிலிருந்து கொண்டு வந்த போது ஒரு குடமும் கொண்டு வந்திருந்தார்கள். குளத்தின் கீழ்ப்படியில் நின்று கொண்டு அம்மா மொண்டுதர, முதல் முறை முங்கிக் குளித்தபின் ஈரத்துணியோடு குடம் சுமப்பாளாம் ராதா.

கொண்டுபோன நீரை அம்மனுக்கு வார்த்து திரும்ப மீண்டும் அடுத்த குடம்…

ஒரு நாள் வயலுக்குப் போகும்போது தற்செயலாக இதைப் பார்த்த ஆத்தா வீட்டில் பரண் மேல் கிடந்த பித்தளைக் குடத்தை எடுத்துக்கொண்டு சாயந்தரமே போனது.

 “எவர் சில்வர் கொடமெல்லாம் வந்த பின்னாடி இத யாரு சீண்டுறா..பரணியில கெடக்குது…ஒரு கொடந்தண்ணிய ஒங்க மொவ கொண்டோய் அம்மனுக்கு ஊத்திட்டு வாரதுக்குள்ள மறுநட நீங்க எடுத்துட்டுப் போயி குடுத்தா செத்த சல்லுசா இருக்குங்கறன்..”

சற்றே தயங்கியபின் ராதாவின் அம்மா வாங்கிக் கொண்டாராம்.

இவர்களோடு சேர்ந்து பூசாரிக்கும் காலை ஆகாரம் தடைப்பட்டுப் போயிருந்தது போலும். இரண்டு நாள் கழித்து வார விடுமுறைக்கு வந்திருந்த நானும் அம்மாவும் கோயிலுக்குப் போனோம். கோயிலுக்கு என்ன கோயிலுக்கு…ராதாவைப் பார்க்கத்தான். வழக்கம்போல அம்மாவும் பெண்ணும் மாரியம்மன் தாலாட்டு படித்துக் கொண்டிருந்தார்கள்…அப்புறம் ஏதோ வழிபாட்டுப் பாடல் தொடர்ந்த போது கற்பூரம் காட்டிவிட்டு வந்து வெற்றிலை போடவந்த பூசாரிதான் சொன்னார்.

 “ஆத்தா கொடத்த கொண்ணாந்து குடுத்த பெறவு ஒரு அரைமணி மிச்சம். தண்ணி தூக்க சல்லிசாப் பூட்டு …அவ்வோ அம்மா ஒரு கொடம் மொண்டு வெச்சியிட்டு நின்னா பாப்பா இங்க ஆத்தாவுக்கு அவுசேகத்தப் பண்ணிட்டுப் போயி எடுத்துட்டு வந்துருதுல்லா …இன்னம் பத்து நாளானாதான் என்ன பண்ணப் போவுதுவோளோ.. தண்ணி வத்திப் போயிரும் சுத்தமா…

தெரு பைப்பில் தண்ணி ஊத்தி ஊத்தி அடிக்கணும் …நாலு கொடம் பத்து கொடம் வூட்டுக்குத் தூக்கவே புள்ளவோ தவதாயப் பட்டுப்போவும்….”

 மிகுந்த வருத்தத்துடன் சொல்லிவிட்டுப் புதிதாக வந்து நிற்பவர்களுக்கு சூடம் காட்ட எழுந்து போனார்.

அடுத்து வந்த நாட்களில் எனக்கு விடுமுறை சரியாக அமையவில்லை என நினைவு.

அன்று பூசாரிவீட்டுத் திண்ணையின் மங்கிய வெளிச்சத்தில் ஒரு சமுக்காளத்தைக் கொண்டு ஏற்படுத்திய மறைவில் இரண்டு சிறு தெய்வங்களைப்போல அமர்ந்து கொண்டு அபிராமியம்மைப் பதிகம் படித்துக் கொண்டிருந்த ராதாவையும் அவள் அம்மாவையும் நான் அதன்பிறகு பார்க்கவுமில்லை. அந்தக் கோலம் மறக்கவுமில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் ஊர் வந்தபோது சொல்ல அம்மாவுக்கும் ஆத்தாவுக்கும் எவ்வளவோ விஷயம் இருந்தது. 

ஆனால் நான் நினைவுக்குக் கொண்டு வந்து கேட்கும் வரை அவர்களாக ஆரம்பிக்காதது வினோதம்தான்…

 “எம்மா…அந்த ராதாக்காவுக்கு நோம்பு முடிஞ்சிரிச்சா ..மறந்தே போயிருச்சு…வந்ததுலேருந்து ஆத்தா கூட ஒண்ணுஞ் சொல்லல…”

காதில் விழாத மாதிரி திருவைக்கல்லைச் சுற்றிக் கொண்டிருந்தாள் அம்மா.

திரும்பவும் கேட்டபிறகு ..”ஆங்…அதெல்லாம் முடிஞ்சிரிச்சி….

ஊருக்குப் போனப்போ நம்மூட்டுக்கு வந்தாங்களா..நா மயேசுகிட்ட சொல்லியிருந்தனே…”

அம்மாவுக்கு தொண்டையடைத்துக் கண்ணீர் பெருகியதைப் பார்த்தது வித்தியாசமாக இருந்தது…கருங்கல்லுல்ல ஒங்கம்மா என்பார் ஆத்தா.

 “எம்மா என்னாச்சி ..”

“ஒண்ணுமில்ல போ அப்பறஞ் சொல்றேன் …”

இரவு உணவுக்குப்பின் பாய் விரித்தபோது அம்மாவிடம் கிசுகிசுப்பாக  “எம்மா ஏம்மா மத்தியானம் அழுதே?” என்றேன்…

“அவ்வோ நம்ப கொடத்த திருப்பி குடுத்துட்டு போனாவோளா”

 “அடச்சீ களுத அதுக்கா அளுவாவோ”

பின்ன என்னதான் ஆச்சி..எதாச்சிம் சண்டையா ?”

  “அதெல்லாம் கூட வந்திருக்கலாம்டி …”

இப்போதும் அம்மா கண்ணில் கோடாய்க் கண்ணீர் இறங்குவது அவள் முகம் தொட்டிருந்த என் கைகளில் உணர முடிந்தது.

 “ம்மா ..என்னன்னு சொல்லு…நீ சொன்னாதான தெரியும்…இல்லாட்டி நாம யேசுட்ட போயிதான் கேக்கணும்…”

 “அவ எங்கடி இருக்கா…எங்க போயி கேப்ப …”

 “ஏன்..அவுங்க ஊரெல்லாம் தெரியும் எனக்கு…நாங்க என் எஸ் எஸ் கேம்புக்கு அவுங்க ஊருக்குதான போனோம்…”

 “யே லூசு செத்த சும்மா இருக்கியா …மயேசெல்லாம் செத்துப் போயிட்டாடி …”

இப்போது அம்மாவுக்குப் போட்டியாக நானும் அழத் தொடங்கியிருந்தேன்..

மயேசெல்லாம் என்ற வார்த்தையில் ஏதோ பிசிறு தட்டுவதாகத் தோன்றி காலையில் அம்மாவைத் தேடியபோது அவள் எங்கோ வெளியில் போய்விட்டிருந்தாள்.

இட்டிலி ஊற்றிக்கொண்டிருந்த ஆத்தா காப்பித் தம்ளரை எடுத்துக் கொடுத்துவிட்டு  “கரண்டு வந்துட்டுதுன்னா இந்த சட்டினிய அரச்சுக்குடு ஆயி ..” என்றாள்.

மிக்சி வீட்டின் புதுவரவு.தனக்கு ஒத்துவராது என்பது ஆத்தாவின் தீர்க்கமான முடிவு.

 “ஏன் ஆத்தா அம்மா நேத்தி பேசும்போது மயேசெல்லாம் செத்துப் போயிட்டான்னு சொன்னுச்சே நெசம்மாவா…”

 “பின்ன இதெல்லாம் வெளாட்டு சமாசாரமா….அந்த வயித்தெரிச்சக் கூத்த ஏன் காலங்காத்தால ஆரமிக்கிற …வந்த தேரு சேராம வெச்ச பூவு வாடாம குடும்பமே அழுவிப் போச்சே …”

 “என்னதா ஆச்சி ?”

கண்ணீரைச் சுருண்டிருந்த முந்தானையால் துடைத்துக்கொண்டபடியே “என்ன ஆச்சி ஆருக்குத் தெரியும்….குடும்பமே பாழுங்கெணத்துல வுழுந்து செத்து மெதந்துச்சு …இங்கன ஒரு மண்டலம் வெரதம் முடிச்சி மாரியம்மன் கோயில்ல பூச முடிச்சி போன ரெண்டாம் நாளு ஆரையும் காணும்னு தேடியிருக்காவோ ஒரு நா களிச்சிதான் தெரிஞ்சிருக்கு…மூங்கி தோப்புக்கு ஆரும் போறதில்லியாம் குத்தவ காரன் போனவன் என்னடா ன்னு பாத்து கண்டுபிடிச்சா பூண்டோட போயிட்டாவோ ..உங்கப்பா மட்டுந்தான் போயிட்டு வந்தான். இந்த வவுத்தெரிச்சல எப்பிடி பாக்கறதுன்னு பொண்டுவோ புள்ளஎல்லாம் வராதீங்கன்னு சொல்லிட்டாவோ நம்மூரு ஆம்பளவோ

போனவ்வோ வந்தவ்வோ எடுத்துப் போட்டுட்டு அவ்வோ அப்பாரு வகைல யாரையோ கூப்டு சேதி சொல்லி காரியம் நடந்துச்சாம்” 

ஆத்தாவோடு நானும் சேர்ந்தழுதேன்…பிறகென்ன …கண்ணைத் துடைத்தபடி சட்டினி அரைக்கப் போனேன்.

என்னதான் காரணமாக இருக்கும்…

கடுமையான ஒரு பிரார்த்தனையை அவ்வளவு சிரத்தையுடன் செய்து வீடு மீண்ட நேரம் நம்பிக்கையல்லவா ததும்பியிருக்க வேண்டும்…எதற்கு எல்லோரும் செத்துப் போனார்கள் ஒரு கடிதம்..குறிப்பு ஒன்று கூடவா எழுதியிருக்க மாட்டார்கள் அப்படி என்னதான் பிரச்னை…

ஏற்கனவே தத்துக் கொடுத்த ராதாவை இவர்கள் ஏன் அழைத்து வந்து பரிகாரம் செய்யவேண்டும் என்ற கேள்வியை சிவன் கோயில்  குளத்தங்கரையில் வைத்துக் கேட்ட வளர்மதியின் நினைவு வந்தது. அப்போது வம்புக்காரி என்ற எரிச்சலோடு விலகிவந்தேன். அவள் இப்போது என்ன சொல்கிறாள் எனக் கேட்கும் ஆர்வம் தோன்றியது.

எதுவும் தெரியாதவள் போல அவள் குளத்துக்கு வரும்  பதினோரு மணியளவில் நாலு அழுக்குத் துணியும் உப்பு சோப்பு டப்பாவுமாகக் கிளம்பினேன். “என்ன இந்நேரத்துக்கு?”  என்று சற்றே சோம்பலாகக் கேட்டுவிட்டு ஆத்தா பலகைக் கட்டையில் திரும்பி தலை வைத்துக் கொண்டாள்.

இதற்காகத்தான் வந்தேன் என்று சொல்லாமல் என்னென்னவோ பேசி வளர்மதியை ராதா விஷயத்துக்கு அழைத்து வருமுன் போதும் போதுமென்றாகிவிட்டது.

கல்யாணம் ஆகாமல் பிறந்தவீட்டின் அறிவிக்கப்படாத வேலைக்காரியாக நிலைத்துவிட்டதால் சற்றே குதர்க்க மனநிலையில்தான் பேச்சும் செயலும்  இருக்கும் என்பது அவளைப்பற்றிய ஊரின் பிம்பம்.

 “அந்த மயேசு ஒங்கூடத்தான பள்ளியோடத்துல படிச்சா…?”

 “ஆமாக்கா….இஞ்ச வந்தப்பகூட மொதோ எங்கூட்டுக்கு வந்தாக்கா…”

 “பாவம்….அதான் அவக்காவ தத்துக் குடுட்டாங்கள்ள …அவுங்க பாத்துக்கட்டும்னு வுட்ருந்தா இப்பிடி ஆயிருக்காதுல்ல….”

 “ஆமா நீ கூட மின்ன ஒருநா சொன்ன ” தான் முன்கூட்டியே சிந்தித்த விஷயத்தை நினைவில் வைத்திருக்கிறாள் என்றதும் என் மேல் வளர்மதி அக்காவுக்கு தனிப்பாசம் வந்துவிட்டது போலும்.

 “ஆருகிட்டயிம் சொல்லப்படாது கேக்கப்பிடாது செரியா ?”

 “ஏங்க்கா?”

 “சொன்னா சரின்னு சொல்லணும் ஏன் எதுக்கு நொட்ட நொள்ளன்னு அநாவசியமா கேக்கப்பிடாது ”

 “மாட்டேங்கா ”

 “அந்த கெணத்துல இருந்து மூணு பொணந்தான் எடுத்தாவோளாம்..என்ன முளிக்கிற”

 “பாவங்கா ..”

 “என்ன பாவம்…மயேசு,ராதா,அவ்வோ அம்மாப்பா நாலு பேரக் காணும்…மூணுதான் கெடக்கிது..என்னா அர்த்தம்…”

“என்னாக்கா ?”

 “மக்கு மக்கு….நீல்லாம் வாத்திச்சியா போயி….”

சுருசுருவெனக் கோபம் வந்தபோதும் அடக்கிக்கொண்டு முகத்தை அப்பாவியாகவோ ஆர்வமாகவோ தோன்றுகிறாற்போல் வைத்துக் கொண்டேன்.

 “அப்பாம்மாவோட ஒருத்திதான் செத்துருக்கா…ஒருத்தியக் காணும் …அதுனால கூட இவ்வோ செத்துருக்கலாம்ல …”

 “க்கா…என்னக்கா ”

 “என்னடி என்னக்கா..வெண்ணக்கான்னுட்டு..”

 “ஆத்தாவும் அம்மாவும் இந்தமாரி சொல்லவேல்லியே….”

 “பின்ன..நா பொய் சொல்றங்கிரியா…”

 “அப்பிடி இல்லக்கா..”

 “ஒனக்குத் தெரியாதுடி..நம்ம பெருசுங்களோட தவுடுதத்தம்லாம்….ஒரு பொண்ணு எங்கியோ போயிட்டா…அட…ஓடிப்போயிட்டான்னு சேதி தெரிஞ்சா நம்மூரு பொண்ணுவோளுக்கும் துளுத்துப் போய்டும்னு நைசா அத முளுங்கிட்டு மிச்சக் கதக்கி மட்டும் அளுவுற கில்லாடில்லா ”

 “அக்கா அப்போ அது மயேசா ….இல்ல ராதாக்காவா ”

 “ஆருக்குத் தெரியும் ..பொணமெல்லாம் அளுவி மூஞ்சி மோற தெரியாம அள்ளியில்ல போட்டாவோ” 

ஆத்தா அந்தக் குடத்தைக் கோயிலிலேயே கொண்டு போய் வைத்துவிட்டதாக பின்னொரு நாள் சொன்னது.

நானும் ஆசிரியர் வேலை கிடைத்து நகரத்துக்கே வந்துவிட்டேன்.

சற்றுமுன் ராதா வந்திருந்தாள் தன் குழந்தையைச் சேர்க்க…

அவளுக்கு என்னைப்பற்றிய நினைவே வரவில்லை போலும். எத்தனையோ மாற்றங்கள் .

அவள் அதே சித்திரம்தான். தி ஜானகிராமன் கதை நாயகிபோல காதோரம் வளைந்து இறங்கிய முடியும் புன்னகையுமாக ..ஆங்..அப்பா சொன்னது போல் ரத்தினமாட்டம்.

ஒரு கணம் அறிமுகப்படுத்திக் கொள்ளலாமா எனத் தோன்றியது.

ஒரு கணம்தான். 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close