நேர்காணல்கள்

”கவிதையாகாத ஒன்றை கவிதையாக்க முடியாது” – கவிஞர் சபரிநாதனுடனான நேர்காணல்

நேர்கண்டவர் : க.விக்னேஷ்வரன்

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி  ‘யுவ புரஸ்கார்’ விருதை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான யுவபுரஸ்கார் விருது ‘வால்’ கவிதைத் தொகுப்புக்காக தமிழ் நவீனக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவரான கவிஞர் சபரிநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனது `வால்’ கவிதைத் தொகுப்பின் மூலம் பரவலாக அறியப்பட்ட சபரிநாதன் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்.  இவரது முதல்  கவிதைத் தொகுப்பு  `களம் காலம் ஆட்டம்’ 2011ம் ஆண்டு வெளியானது.

2016ம் ஆண்டு வெளியான வால் கவிதைத் தொகுப்புகாக 2017-ல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் `குமர குருபரன்’ விருதையும் பெற்றிருக்கிறார் கவிஞர் சபரிநாதன்.

வாசகசாலை இணையதளத்திற்காக  கவிஞர் சபரிநாதனுடன் நண்பர் க.விக்னேஷ்வரன்  கண்ட  நேர்காணல்.

சாகித்ய அகாடமியின்  யுவ புரஸ்கார் விருது பெறவிருப்பதற்கு  வாசகசாலையின் வாழ்த்துக்கள் தோழர்.!  விருது பெறுவதை  எப்படி உணர்கிறீர்கள்?

நன்றி ! சந்தோஷமாக இருக்கிறது.

நெகிழ்ச்சியான மற்றும் எளிமையான கேள்வி. ஏன் கவிதை எழுதுகிறீர்கள்?

நினைப்பதைச் சொல்ல வேண்டுமென்றால், இது தேய்வழக்காகவோ அதிகப் பிரசங்கித்தனமாகவோ கூட படலாம், எழுத்தாளனாக இருப்பது விதியின் ஒரு பகுதியாகவே உணர்கிறேன். இதில் ஈடுபடும் போது தான் சந்தோஷமாகவும் முழுமையாகவும் இருப்பதாகவும் படுகிறது.

எல்லாவற்றுக்கும் இங்கு ஒரு தொடக்கப்புள்ளி உண்டு.  இன்று நவீன தமிழ் கவிஞர்களில் ஒருவராக நீங்கள் நின்று கொண்டிருக்கும் இந்த சமகால இலக்கியச் சூழலில் ஒரு கவிஞராக உங்களை நீங்கள் உணர்ந்த கணமும் அதிலிருந்து படிப்படியாக நீங்கள் அடைந்த பரிமாண வளர்ச்சியும்..என மொத்தமாக இவற்றை பற்றி ஒரு பின்னோக்கிய பார்வை நீங்கள் பார்த்தால் அதைப் பற்றி எங்களுக்கு என்ன சொல்ல முடியும்.?

எப்படியோ எனது படைப்புகள் தொடக்கம் முதலே கொஞ்சம்  கவனம் பெற்றன (அதாவது சிற்றிதழ் சூழலில்). அந்த விதத்தில் அது அதிர்ஷ்டம் என நண்பர்கள் சொல்வதுண்டு. என்னைப் பொறுத்தவரை சூழலைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. நமது தேடலில் தீவிரத்துடன் ஈடுபட்டு நல்ல படைப்புகள் அளிப்பதை நமது தனிப்பட்ட பொறுப்பாக எடுத்துக்கொள்வதே நல்லது.

திரும்பி எல்லாம் பார்க்க விருப்பமில்லை. திரும்பிப் பார்த்தால் தோன்றுவது போதாமையும் குற்றவுணர்ச்சியும் தான். இதை விட கூடுதலாகவும் பல வகைமைகளிலும் எழுதியிருந்திருக்க வேண்டும். இதனினும் அதிக தூரம் சென்றிருக்க வேண்டும். அதனால் அடிக்கடி திரும்பி பார்க்க விரும்புவதில்லை. இப்போதைக்கு முன்னால் பார்த்து நடந்து செல்வதே நலம்.

ஒரு கவிஞனை உங்களிலிருந்து விலக்கி வைத்து விட்டு உங்களுக்குள் இருக்கும் அந்த எளிய அல்லது தீவிர வாசகனைப் பற்றி எங்களுக்கு கூற இயலுமா?.. இரண்டாவது அந்த வாசகன் எத்தகைய படைப்புகள் மற்றும் ஆசான்களின் வழியே தன்னை சிறந்த ஒரு கவிஞனாக  தகவமைத்துக் கொண்டார்?

வாசகனாக இல்லையென்றால் எழுத்தாளனாக ஆகியிருக்கவும் முடியாது, நீடிக்கவும் முடியாது. பிராயத்தில் கவிதைகள் மட்டும் தான் படிப்பேன். கதைகள் சிறுவர்களுக்கானது என ஓர் எண்ணம். பிறகு அபுனைவு நூல்களின் மீது ஆர்வம் கொண்ட காலம் இருந்தது. கல்லூரிக்குப் பிறகு புனைவிலக்கிய வாசிப்பு பிரதானமானது. உண்மையில் கண்டதையும் கண்ட மேனிக்கு படிப்பது தான் எனது இயல்பு. வாசிப்போ எழுத்தோ எதற்கும் வாழ்வின் மீதும் உலகின் மீதும் நமக்கிருக்கிற கியுரியாசிட்டி தானே தூண்டுதல். பிரமிள், விக்ரமாதித்யன், தேவதச்சன், தேவதேவன் கலாப்ரியா, சுகுமாரன் போன்றோர் எனக்கு பிடித்தமானவர்கள்.

இரண்டு கவிதை தொகுப்புக்களில் (களம் – காலம் – ஆட்டம் மற்றும் வால்) முதல் கவிதை தொகுப்பான ‘களம் -காலம்ஆட்டம்’த்தில் சற்று துடுக்குத்தனமான ஒரு இளம் கவிஞர் தெரிந்தார்.  பின்பு வந்த ‘வால் தொகுப்பில் சற்று இந்த துடுக்குதனம் மறைந்து நவீன கவிஞர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு பாய்ச்சல் இருந்தது. இந்த இரண்டு தொகுப்பும் எழுதப்பட்டப்போது இருந்த மனநிலை குறித்து?

நீங்கள் சொல்வதே சரியானது தான். களம் காலம் ஆட்டம் ஒரு மிக நீண்ட விடுமுறை பருவத்தில் எழுதிய புத்தகம் என்று சொல்லலாம். அப்போது தான் படிப்பு முடித்திருந்த நான் வீட்டில் சில பொய்களைக் கூறிவிட்டு கிறுக்கி கொண்டு, வாசித்து விட்டு, ஊர்சுற்றி கழித்த காலத்தில் எழுதியது. புது எழுத்து மனோன்மணி கேட்காமல் இருந்தால் அப்போது அப்படி ஒரு நூலே வந்திருக்காது. ஆனால் அந்நூல் வெளிவரும் சமயமே அக்கவிதைகளில் இருந்து ஒரு விலக்கம் உருவாகி விட்டிருந்தது எனக்கு. இது போதாது என்று தோன்றியது. வால் எனது அடிப்படையான அக்கறைகள் உருக்கொண்ட காலத்தில் எழுதப்பட்டது எனலாம். அதை குறித்து மையமாக இப்போதைக்கு எதுவும் கூறமுடியுமா தெரியவில்லை. அது வாசகர் விமர்சகர்களின் வேலை. அத்தொகுப்பில் பல பருவங்கள் உள்ளடங்கியும் அதற்குள் ஒரு பயணம் உள்ளதெனவும் நினைக்கிறேன்.முதல் தொகுப்பில் பிரதானமாக விவரணைத் தன்மை மிகுதி. வாலில் லிரிக் அம்சமும் கணிசமாக இருப்பதாக சொல்லலாம்.

உங்கள் கவிதைகளில் இழந்து போன பால்யம் வருகிறது, மனதின்ழமான அகம் சார்ந்த சிக்கல்கள், நவீன வாழ்வின் நெருக்கடிகள், இழந்து போன அன்பு, மீண்டும் மீண்டும் நவீன வாழ்விலிருந்து விடுதலை கோரும் மனிதர்களும் அவர்களின் பாலியல் சார்ந்த சிக்கல்கள்இப்படி நிறைய வருகிறது இவற்றை உரைநடை வழியாக தருவதை விட கவிதை வடிவத்தில் எழுதிப் போவது எவ்வளவு கடினமாக உங்களுக்கு இருக்கிறது ?

கடினமாக எல்லாம் இல்லை. விஷயம் சார்ந்து, கருப்பொருள் சார்ந்து இலகுத்தன்மையை எடைபோட முடியும் எனச் சொல்லமுடியாது. தவிர ஒரு கரு கிடைக்கம் போது அதை உரைநடையாக எழுதலாமா கவிதையாக எழுதலாமா என்பது போன்ற தேர்வுகள் எல்லாம் ஒருவருக்கு இருப்பதில்லை. கவிதையாகாத ஒன்றை கவிதையாக்க முடியாது. இவை நம் காலத்தின் அடிப்படையான ஆன்மீகச் சிக்கல்கள். கவிஞனாக இதைப் பேசித்தான் ஆகவேண்டும்.

உங்கள் கவிதைகளில் வரும் பெண்கள்  குறிப்பாக அம்மா, அக்கா, தங்கை, தோழிகள் பற்றி அதிகம் எழுதுவதாக தோன்றுகிறது. இதற்குதாவது குறிப்பிட்ட காரணங்கள் இருக்கிறதா?

தெரியவில்லை. நான் அதிகம் பெண்கள் சூழ வளர்ந்தவனில்லை. தூரத்து உறவுகளில் கூட அக்கா தங்கைகள் குறைவு. வெறுமனே எந்த அரசியல் சரிநிலையும் இன்றி மேலதிக அழுத்தங்கள் இன்றி ஓர் சமகாலத்திய ஆணின் எதார்த்த இருப்பிடம் தான் இது போன்ற கவிதைகளில் எனது vantage point. அதான் சுவாரஸ்யமானதும் இயல்பானதும் என நினைக்கிறேன். ஆண் பெண்ணுக்கிடையேயான மோதல் போராட்டம் எல்லாமும் கூட ஒரு விளையாட்டின் பகுதி தானே. குறிப்பாக அக்கா கதாபாத்திரம் எனக்கு பிடித்த ஒன்று. தோழமையும் இரக்கமும் அறிவும் தொனிக்கும் ஒருவர். அவரை கவிதைக்குள் கொண்டு வருவது  எனக்கு உவப்பானது.

இது முக்கியமான கேள்வி. ஏன் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கிறீர்கள்? இவை உங்கள் படைப்பாற்றலை பாதிக்கும் என்ற பயமா? இல்லை உண்மையில் அவற்றின் மீது ஆர்வம் இல்லையா?

இது தனிப்பட்ட Temperament சார்ந்த விஷயம். பெரிய நிலைப்பாடு எல்லாம் கிடையாது. கல்லூரி வகுப்பின் மின்னஞ்சல் குழுவில் கூட நான் இருந்ததில்லை. பொதுவாக கேட்டீர்கள் என்றால் இது போன்ற சமூக ஊடகங்கள் பற்றி எனக்கு நிறைய சந்தேகங்களும் முரண்பாடும் உண்டு. ஆனால் நான் இயங்காததற்கு அது காரணம் இல்லை. இது எழுத்தாளர்களின் படைப்பாற்ற்லை குறைக்கும் என பொத்தாம் பொதுவாக கூறமுடியாது. முகநூலிலேயே செயல் ஊக்கத்துடன் நிறைய எழுதும் எழுத்தாளர்கள் உள்ளனரே. தவிர இந்த சமூக ஊடகங்கள் இப்போது நமது வளிமண்டலம் மாதிரி. நமது உளவியலில் இருந்து அரசியல் வரை இவற்றின் தாக்கத்தை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். முகநூலில் இருந்து கொண்டே அதை விமர்சிக்கும் நண்பர்களை பார்த்திருக்கிறேன். சிலர் அதை நன்றாக மேனஜ் செய்கிறார்கள், சிலரால் அது முடிவதில்லை. என்னை பொறுத்தவரை இத்தகைய சமூக ஊடகங்கள் எனக்கு தேவை படவில்லை என்று சொல்வேன். ஆக அது உங்களுக்கு தேவையா இல்லையா என்பது தான் கேள்வி. நாம் ஏற்கும் எந்த தொழில் நுட்பத்தையும் கேள்விக்குட்படுத்தும் தொலைவைப் பராமரிப்பதே நல்லது.

சங்க காலம் தொடங்கி நவீனக் காலம் வரைக்கும் நிறைய கவிஞர்களுக்கு அரசியல் பார்வை இருந்திருக்கிறது அவை அவர்களின் படைப்புகளில் வெளிப்பட்டு இருக்கிறது? ஒரு நவீன கவிஞராக இதை எப்படி பார்க்கிறீர்கள்? உண்மையில் இந்த சமகாலப் பார்வை என்பது ஒரு கவிஞனுக்கு தேவையா? இல்லை அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானது இல்லை என்று நினைக்கிறீர்களா?

சமகாலப் பார்வை கட்டாயம் தேவை. கலைச்செயல்பாட்டின் சட்டகத்தை அவை நிர்ணயிக்கின்றன. அரசியல், சமூக வாழ்வின் தவிர்க்கவியலாத அங்கம் என்பதும் எதார்த்தம். ஆனால் கலைப்படைப்புகள் வெறும் சமகாலத்தின் பண்டங்கள் மட்டுமல்ல. அவை சாரம்சமான சிக்கல்களையும் இருப்பின் அடிப்படையான மர்மத்தையும் பற்றி யோசிப்பவை. எவ்விதமான எளிமைப்படுத்தலுக்கும் எதிரானவை. இலக்கியத்திற்குள்ளே இது, இந்த தரப்பின் அந்த தரப்பின் சார்பு என்பதல்ல மாறாக அறம் மற்றும் எளிய மானுட அக்கறை சார்ந்த விஷயம் என்பது என் எண்ணம். எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது என சிம்போர்ஸ்கா ஒரு பகடிக்கவிதை எழுதியிருப்பார்.  போலந்தில் இருந்த எதேச்சதிகார அரசின் கொள்கைகளுக்கு எதிராக.அக்கவிதையின் ஒரு வரி  தமிழில் தீவிரமான அரசியல் கட்டுரை ஒன்றின் நெற்றியில் மேற்கோளாக அமர்ந்திருந்தது நியாபகம் வருகிறது. சமகாலம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தால் இது போன்ற பிரச்சனைகள் நேரும்.

கடைசி கேள்வி. சிக்கலான நவீன வாழ்வில் எல்லாவற்றையும் சந்தித்து ஒடி தாண்டி திளைக்கும் ஒரு நவீனக் கவிஞனின் மனநிலையில் தொடர்ந்து செயல்படுவது எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது? எதிர்கால திட்டங்கள் என்ன?

இது முன்னை விட distortion ம் பணிப்பளுவும் மிகுந்த காலம் என்பதை மறுக்க முடியாது. மற்றபடி இப்போது ஓர் இளம் எழுத்தாளருக்கு இருக்கும் வாய்ப்புகளில் (இணையம், ஊடக வெளிச்சம், பிரசுரிப்பு, அங்கீகாரங்கள்…) பத்து சதவீதம் கூட  மறைந்த முன்னோடி எழுத்தாளர்களுக்கு இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது. அதனால் நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும் சிக்கல்களை விட புறத்தடைகள் குறைவு என்பதே என் எண்ணம்.

நிறைய கனவுகள் இருக்கின்றன. திட்டம் என்றால் இப்போதைக்கு தாஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் பற்றி ஒரு நூலும் செஸ்லா மிலோஷின் கவிதைகளை மொழிபெயர்ப்பதும் தான் நடந்து கொண்டிருக்கின்றன. மற்றபடி கவிதைகள் அதுபாட்டுக்கு எழுதப்படுகின்றன.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close