சிறுகதைகள்

இணைநடனம்

சுரேஷ் பிரதீப்

பிடித்த பெண்களுடன் பிடித்த  பாடல்களுக்கு நடனமாடிப் பார்ப்பது குணாவின் அன்றாடப் பழக்கங்களில் ஒன்று. அவனுக்குப் பிடித்த பெண்கள் எல்லோருரிடமும் இரண்டு பொது அம்சங்கள் இருந்தன. ஒன்று அவர்கள் அனைவருமே ஒல்லியானவர்கள். பருத்த மார்புகள் கொண்டவர்கள் இல்லாதவர்கள் என இரு வகையினரும் இதில் அடக்கம். இரண்டாவது அனைவருமே வெள்ளையாக இருப்பார்கள். ஒல்லியான உடல்வாகு காரணமாக அவர்களால் நடனத்தின் அத்தனை அசைவுகளையும் கச்சிதமாக செய்ய முடியும். அதேநேரம் பார்க்கும் கண்களுக்கும் ஆபாசமாகத் தெரியாதல்லவா. உங்கள் சந்தேகம் புரிகிறது. குணாவும் அவனது காதலியும் பலர் முன்னிலையிலேயே ஆடிக்கொண்டிருப்பார்கள் சினிமாவைப் போலவே. தங்களுடைய இணைநடனம் பார்க்கிறவர்களையும் மகிழ்விக்கிறது என்ற மகிழ்ச்சி அவர்களில் பூரிப்பாக கூட இன்னும் ஒத்து ஆடுவார்கள்.

குணாவுடன் முதலில் நடனமாடியவள் மீனா. ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது மீனாவை குணா ஆட்டத் துணையாக சேர்த்துக் கொண்டான். காக்கிச் சட்டைப் படத்தில் வரும் வானிலே தேனிலா பாடலுக்கு. பாடல் தொடங்கும் முன் வரும் நீளமான இசையின் போது இருவரும் தனித்தனியாக ஆடிக்கொண்டிருப்பார்கள். பாட்டுத் தொடங்கியதும் மீனா சிரிப்பும் பதற்றமுமாக கால்களால் ஆடியபடியே குணாவை நெருங்குவாள். அவனும் அப்படியே அவளை நெருங்குவான். ஆனால் தொட்டுக்கொள்ளமாட்டார்கள். பெண்களின் முலைகளில் கையுரசினாலே குழந்தை பிறக்கவோ எய்ட்ஸ் வரவோ வாய்ப்பிருக்கிறது என்ற தீவிர நம்பிக்கையின் காரணமாகவும் பெண் உடலைத் தொடுவது “ச்சீ அசிங்கம்” என்று சொல்லி வளர்க்கப்பட்டிருந்ததாலும் நெருங்கினாலும் தொடுவது போல பாவனை செய்து ஆடுவார்களே தவிர தொட்டாடமாட்டார்கள். மீனா இறுக்கமான ஒரு மஞ்சள் சுடிதாரும் கழுத்தைச் சுற்றி துண்டு போல ஒரு ஷாலும் போட்டிருப்பாள். இவன் ஒரு முழுங்கை வரை மடித்துவிட்ட முழுக்கை டிஷர்ட்டும் ஜீன்ஸும் அணிந்திருப்பான். ஆடும்போது வணங்காத கோரைமுடி முன்வந்து விழும்படியாக தலையை குறைந்த நேரத்தில் வலுவாக அசைத்து அசைத்து ஆடுவான். மீனாவுக்கு பெரிய கண்கள். வாய் திறந்து பற்கள் பளீரிடும் போதெல்லாம் அந்தப் பெரிய கண்கள் அதிகதிகமாக சிரிக்கும். எண்ணெய் அப்பி  ஜடைபோட்டு தாவணியணிந்துதான் பள்ளிக்கு வர வேண்டும் என்றாலும் பாடல்களில் மீனா ஈரப்பசையற்ற பளபளப்பான அவிழ்ந்து நீண்ட கூந்தலுடன் கூந்தல் அவிழ்ந்திருப்பதற்கு நியாயம் செய்யும்படி அக்கூந்தலாலும் ஆடுவாள். குணாவுடன் படித்த அவள் அத்தை மகனான சதீஷ் அவளை உயிருக்குயிராய் காதலிப்பதாவும் தங்கள் காதலுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் குணாதான் உதவ வேண்டும் என்று சொல்லி அழுத பிறகும் கூட மீனா இவனுடன் ஆடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.

பதினொன்றாம் வகுப்பில் நந்தினி குணாவின் ஆடலிணையாள். சிலசமயம் இருவருடன் ஆடினால் என்ன என்று தோன்றும். ஆனால் குணாவால் அப்படிச் செய்ய முடியவில்லை. நந்தினியுடன் ஆடுவதில் ஒரு சிக்கல் இருந்தது. குணாவும் நந்தினியும் ஒரே உயரம். இடுப்பை வளைத்துக் குனிந்து முகம் நோக்குவதற்கும் ஆட்டத்தின் இடையே வரும் மெல்லிசையின் போது மார்பில் சாய்த்துக் கொள்ளவும் கால்பிண்ணி இணையாக நடக்கும் போது நந்தினி அவன் கையைத் கோர்த்துக் கொண்டு தோளில் சாய்ந்தபடி நடந்து வரவும் இந்த சம உயரம் சிக்கலாக இருந்தது. குணா இப்போது நடன இணையைத் தொட்டு ஆடுமளவு முன்னேறியிருந்தான். ஆனால் நல்ல பையன்.  முத்தமெல்லாம் கொடுக்கமாட்டான். நந்தினியோடு ஆடுவதற்கு முதலில் தில்லுபருஜானே பாட்டினைத் தேர்ந்தெடுத்திருந்தான். அதில் நடன அடவுகள் மென்மையாக இருக்கவே பின்னர் வலையோசை கலகலவென பாட்டினை தேர்வு செய்தான். ஆனால் அந்தப்பாட்டினை அதுவரை கேட்டு மட்டுமே இருந்த குணா  பார்க்க நேர்ந்தபோது அதிர்ச்சி அடைந்துவிட்டான். அதன்பிறகு நெரிசலான பேருந்தில்  குணாவும் நந்தினியும் படியில் நின்று அந்தப் பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தனர். என்ன காரணத்தாலோ அதை நடனம் என்றே குணா நம்பினான்.  நந்தினி வெள்ளைப்புடவை அணிந்திருந்தாலும் குணா கலர் கலரான சட்டையில்தான் அப்பாடலில் இருந்தான். எப்போதும் நெற்றியில் குங்குமம் இட்டிருப்பவளும் மர்மமான விழிகள் கொண்டவளுமான நந்தினி அந்தப் பாடலுக்கு மிகப் பொருத்தமாக இருந்தாள். விக்ரம் நந்தினிக்கு காதல் கடிதம் கொடுத்து அவள் ஊர் கூட்டி ஒப்பாரி வைத்து வேதியியல் வாத்தியார் அவனை எக்காரணமும் சொல்லாமல் நடுவகுப்பில் அறைந்து சொல்லாத அக்காரணத்தை நந்தினியின் அழுத கண்களை பார்த்து வகுப்பே தெரிந்து கொண்ட மறுநாள்தான் குணா தெரிந்து கொண்டான். விக்ரம் உடனாடினால் நந்தினிக்கு உயரப் பிரச்சினை வராதென்பதால் குணா விட்டுக்கொடுத்துவிட்டான். ஆனாலும் பன்னிரெண்டாம் வகுப்பில் விடிகாலையில் கிளம்பி டியூஷன் வரும் சமயத்தில் மடப்புரத்துக்குள் நுழையும்போது சீமை ஓடுகள் வேய்ந்த பழமையான பெரிய வீட்டின் முன் குளித்த ஈரம் காயாது கோளம்போடும் பெண்ணைக் கண்டு அவளுடன் என்னவளே அடி என்னவளே பாட்டுக்கு ஆடும்வரை குணாவும் நந்தினியும் பஸ்ஸில் பயணித்துக் கொண்டுதான் இருந்தனர். இருந்தாலும் வலையோசை அனுபவத்துக்குப் பிறகு குணாவுக்கு வெறும் நடன அசைவுகள் போதுமானதாக இருக்கவில்லை. பெயர் தெரியாத அந்தப் பெண்ணுடன் அப்பாடலிலேயே வேறு சில விஷயங்களிலும் குணா ஈடுபட்டான். அவளுக்கு மருதாணி வைத்து விடுவது சமையல் வேலைகளில் உதவுவது இப்படி.  ஒருமுறை வெங்காயம் வெட்டும்போது விரலை வெட்டிக் கொண்டாள். அப்போது குணா அவளுக்கு உணவூட்டிவிடவும் செய்தான்.

இதன்பின்னர் குணாவின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு நடந்தது. பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி விடுமுறையில் கணினிப் பயிற்சிக்கு சென்றிருந்தபோது புணர்வுத் திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு குணாவுக்கு கிடைத்தது. அவனுடன் எந்தத் தீவிரமான காரணமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்கென கணினிப் பயிற்சிக்கு வந்திருந்த அஷ்வத் அவனுக்கு சீருடை அணிந்த ஜப்பானிய மாணவி ஒருத்தியை குணாவைப் போலவோ ஒல்லியாக இருந்த ஒரு ஜப்பானிய ஆள் மல்லாக்கக் கிடத்தி அவள் வாயில் முத்தமிட்டப்படி உடைகளை களைந்து கொண்டிருக்கும் காட்சியை அவனுடைய கனமான அலைபேசியில் காட்டினான். அவள் முலைகள் சிறிதாக இருந்தன. முதலில் பார்க்கும் போது அவள் பயந்து புலம்புகிறாள் என்றே நினைத்தான். அது இன்ப வேதனையில்  முனகுவது என்று குணாவுக்குப் புரிய மேலும் சில வருடங்கள் இருந்தன. ஆனால் சிறிய வாய்கொண்ட அந்த ஜப்பானிய சிறுமி அப்போது அவன் நம்பியதுபோல துயரில் முனகியது இவனுக்குள் வேதனையையும் ஒரு வகையான கிளர்ச்சியையும் அவ்வப்போது தோற்றுவித்துக் கொண்டிருந்தது. அவளுடைய உடைகளைக் களைந்து வெள்ளைநிற உள்ளாடையுடன் அவள் மேலே ஏறியவனின் முகத்திலும் குரலிலும் கூட கடுமையான துயரையே உணர்ந்தான் குணா.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் குணாவின் இணைநடனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனினும் கல்லூரி இரண்டாமாண்டில் ரீமிக்ஸ் பாடலான வசந்த முல்லை பாடலுக்கு நந்தினியுடன் (இவள் வேறு நந்தினி) குணா ஆடத் தொடங்கும்வரை வேறெந்த பெண்ணுடனும் ஆடவில்லை என்பதற்கு வேதனை தொனிக்க முனகிய அந்த ஜப்பானிய மாணவியும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பெண்களின், துயரானதோ குதூகலமானதோ, உணர்ச்சியேறிய குரல் கேட்கும் சில சமயங்களில் அபாயகரமான அளவுக்கு விறைக்கும் குறியால் அவன் எப்போதும் இடுப்புக்கு கீழ் சற்று கவனத்தை செலுத்த வேண்டியவனாக மாறியிருந்த நாட்கள் அவை. அவனிடம் அக்காவாக பழகிய பெண்களாலும் இந்த சங்கடம் நேர்ந்தபோது அவன் இடுப்புக்கு கீழே அதீத கவனத்தையும் தனக்குப் பிடித்த அக்காக்களிடமிருந்து விலகலையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

நந்தினியுடன் மூன்று வருடங்கள் படிக்க நேர்ந்ததால் அவளுடன் வசந்த முல்லை ரீமிக்ஸ் மட்டுமின்றி பல பாடல்களுக்கு நடனமாட முடிந்தது. எகிறி குதித்தேன் வானமிடித்தது பாடலில் இவன் எம்பி முத்தமிடுவதற்கும் அதை பெற்றுக் கொள்வதற்கும் இருவரது உயரமும் அனுமதிக்கவே செய்தது. அதுபோல பாட்டுப்பாடவா பார்த்து பேசவா பாடலுக்கு நந்தினி கோடாலிக் கொண்டை போட்டுக் கொண்டு ஆடும்போதும் இணை கச்சிதமாக பொருந்தியது. காலங்களில் அவள் வசந்தம் பாடலுக்கு பெரிய அசைவுகள் இல்லாமல் திரும்பிச் சிரிப்பது வெட்கப்பட்டு முகம் திருப்புவது என்று நந்தினி ஆட இவன் அவள் முகத்தை பூரிப்பும் பெருமிதமுமாக பார்ப்பதே அப்பாடலை அழகாகிவிட்டது.

சன் டிவியில் ஆனந்தம் என்றொரு சீரியில் வந்தது ஞாபகமிருக்கலாம். அந்தத் தொடரில் வரும் பெண்ணொருத்தி பார்ப்பதற்கு நந்தினி போலவே இருப்பாள். தெத்துப்பல் மட்டுமில்லாமல் ஒருநாள் சிம்போசியத்துக்கு நந்தினி புடவை கட்டி வந்திருந்தபோது அவள் சாயல் அப்படியே பளிச்சிட்டது. கழுத்தெலும்புக் குழிவு கூட இருவருக்கும் ஒன்று போலவே இருந்தது. ஆனால் அவளுக்கு குழந்தை கிடையாது என்பது குத்திக்காட்டப்பட்டு ஒருமுறை அவள் அழ நேர்ந்தது. அவளது சகஜத்தன்மைதான் குணாவுக்கு அவளிடம் மிகப்பிடித்தது.அப்படிப்பட்டவள் அழ நேர்ந்ததை அவள் கணவனைவிட இவனால் அதிகம் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மறுநாளே நந்தினி கருவுற்றாள். வேதனையில் முனகிய பெண்ணை இவன் பார்த்தானே, அது வேதனையல்ல என்று குணாவுக்கு இப்போது புரிந்திருந்தது. இருந்தாலும் நந்தினியைக் கருவுறச் செய்ய அத்தகைய உபாயத்தை அவன் தேர்ந்தெடுக்கவில்லை. அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு தடுமாறிப்  படியிறங்குவதும் அவள் கையை குணா போய் பற்றிக் கொள்வதுமாக அக்காட்சி விரிந்தது.

கருவுற்றிருக்கும் போது நந்தினி காலில் மருதாணி வைத்துவிடச் சொன்னாள் காரணமே இல்லாமல் இவனை கட்டிக்கொண்டு அழுதாள் உப்பு மூட்டை தூக்கச் சொன்னாள் அவன் கைகளையும் தலையையும் அவளை உதைக்கும் கருவைக் காட்டித்தர தன் வயிற்றில் எடுத்து வைத்துக் கொண்டாள். பின்னணியில் இவன்தானா இவன்தானா மலர் சூட்டும் மணவாளன் இவன்தானா பாடல் ஓடிக்கொண்டிருந்தது. பிரசவத்தின் போது நந்தினி குணாவின் கையை விடவே இல்லை. ‘குணு குணு’ என காதுக்கு கேட்காத அளவில் இருந்து காதை கிழிக்கும் அளவு வரை உள்ள டெசிபல்களில் அலறினாள். குழந்தை வெளிவந்தபோது அவளுக்கு மெல்லிய மயக்கம் வந்தது. இறுகப் பற்றிய குணாவின் கையில் அவளது எச்சில் வழிந்த முகம் சோர்ந்து தவழ்ந்தது. குணா நந்தினியின் நெற்றியில் முத்தமிட்டான். அப்போது மட்டும் வேதனையில் முனகிய ஜப்பானிய மாணவி புணர்வு முடிந்தபிறகு களைத்துறங்கிய முகத்தோற்றத்தை நந்தினிக்கு பொருத்திப் பார்த்துக் கொண்டான்.

சின்னஞ்சிறு கிளியே பாடலொலிக்க மீனு வளர்ந்தாள். அவள் குழந்தைக்கு விளையாட்டாகவே  முதலில் அப்பெயரைச் சொல்கிறாள் என்றுதான் குணா நினைத்தான். ஆனால் தன் மகள் மீனுவாக இருப்பதில் அவளுக்கொன்றும் சிக்கல் இல்லை என்று சொன்னபிறகு குணா முதன்முறையாக நந்தினியின் உதட்டில் தன் உதட்டை மெல்ல  ஒற்றி எடுத்தான். “அப்பா என்னைய இப்படி பண்ணக்கூடாது” என மீனு இடக்கை ஆள்காட்டி விரல் நீட்டி  மிரட்டினாள். அவனும் “சரிடி தங்கம்” என அவள் விரல் நுனியில் முத்தமிட்டான். அவள் “ச்சீ எச்சி” என அணிந்திருந்த பட்டுப்பாவாடையில் விரல் துடைத்துக் கொண்டாள். மீனுவின் ஒவ்வொரு அசைவாலும் குணாவுக்கு கிளர்ச்சியும் துக்கமும் பெருகிக்கொண்டே இருந்தது. உச்சிதனை முகர்ந்து கர்வம் கொண்டான் கன்னத்தில் முத்தமிட்டு களிவெறி கொண்டான் என்றெல்லாம் எழுதினால் காப்பியடித்தது போல இருந்தாலும் குணாவுக்கு அதெல்லாம் நிகழ்ந்தது. அவனால் வேதனையாய் முனகிய ஜப்பானிய மாணவியையும் நந்தினியையும் மீனுவையும் பிரித்தணுக முடிந்தது. ஆனால் மூன்று பெண்களும் எங்கோ ஆழ்த்தில் முடிச்சிட்டு இன்பம் துயர் அலைகழிப்பு ஆற்றாமை என அவனால் எண்ணவே முடியாத நிகழ்தகவில் வெளிப்பட்டு அவனை பரவசத்தில் ஆழ்த்தினர்.

மீனு இறந்தாள். எப்படி நிகழ்ந்ததென்றே தெரியாமல். உறக்கத்திலேயே கண்ட கனவின் சிரிப்பு மிஞ்சியிருக்கும் முகத்துடன் குழந்தைகளின் எண்ணத்தின் நறுமணம் மட்டுமே வீசும் தூய உலகுக்கு குணாவும் நந்தினியும் கஷ்டப்பட்டு தங்களுக்குள் எஞ்ச வைத்திருந்த ஒளியணைத்தையும் உருவிப்போட்டுக் கொண்டு சென்று விட்டாள் சண்டாளி. பேய். எங்கெங்கோ ஒளித்திருந்த இன்பத்தையெல்லாம் எடுத்து எடுத்துக்காட்டி அத்தனையையும் அவள் உட்காரும்போது உப்பும் அந்த பட்டுப்பாவாடைக்குள் பொதிந்து போட்டுக்கொண்டு சென்றுவிட்டாள் பழிகாரி. இறந்தாலும் அவளிடம் சேர முடியாத ஆத்திரத்தில் அழுதழது தவிக்கின்றனர்  ஈன்றோர் இருவரும். அவள் பரிசுத்தத்தை அகன்று நின்று ஆனந்திருத்திருக்காமல் அச்சிறு சிறுக்கியின் பரிசுத்தத்தில் கரைத்துக் கொண்டிருக்கலாமோ? அவள் கண்ணீருக்கு மறுதட்டில் ஆறுதலை வைக்காமல் கண்ணீரையே வைத்து அவள் சென்ற இக்கணத்தில் அக்கண்ணீராலேயே கரைந்து போயிருக்கலாமோ? அவள் கண்கள் வழியாகவன்றி வேறெவ்வகையிலும் இவ்வுலகை காணாமல் ஆகியிருக்களாமோ?

மீனு! அவன் அழுகிறான்.

என் செல்லக்குட்டியே! அவள் அலறுகிறாள்.

இதெல்லாம் கனவென்றாகிவிடக்கூடாதா?

அவள் அலறலின் ஒலி முடிவில் சொடுக்கி நிமிர்கிறான் குணா.

ஆம்! இதெல்லாம் வெறும் கனவுதான். பிசகாது முழுத்த இந்த அன்பெல்லாம் கனவில்தான் சாத்தியம். கவிதைகளில் கூட சாத்தியமில்லை. கனவின் எத்தனத்துக்கும் கவிதையின் தவிர்க்க முடியாமையாகிவிட்ட மொழிக்கும் இடையே எவ்வளவு நெருக்கினாலும் நிரம்பிவிடாத ஒரு இடைவெளி இருக்கிறது. ஒவ்வொரு பொருளையும் ஒட்டியிருக்கச் செய்யும் அவ்விடைவெளியில் கனவும் கவிதையும் நெருங்கி நெக்குருக முடியாமல் பக்கத்துக்கு ஆயிரம் கைகளால் பிடித்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இது கனவுதான். ஆனால் கனவெனும் உணர்வும் கனவின் பரிபூரணத்தை குலைத்தல்லவா போடும்? இது கனவுதான் என உணர்ந்து கொண்டிருக்கிறேனே? அப்படியெனில் இக்கனவை யார் கண்டு கொண்டிருப்பது? நானா? குணாவா?நந்தினியா? மீனாவா? அந்த ஜப்பானிய சிறுமியா? மீனுவா?

கடவுளே! இது யார் கனவு? எங்கு நடக்கிறது இந்த இணைநடனம்? யார் மனதில் எழுகின்றன இச்சொற்கள்?

நான் உறங்கிக் கொண்டிருக்கின்றேனா? இல்லை. உறக்கமில்லை. இதுவும் ஒரு இணைநடனம். யாரோ ஒருவனின் கனவில் நானும் நந்தினியும் அழுது கொண்டிருக்கிறோம். புற ஒழுங்கு எதுவுமே இல்லாத இது நனவாக இருக்கவே முடியாது. நந்தினி என் பகற்கனவு. மீனு என் கனிவு. இல்லையில்லை இதெல்லாம் அவனுடைய பகற்கனவு. அவனுடைய கனிவு.

ஏற்கமுடியவில்லை. இந்த கனவு அவனுடையதாக இருக்கட்டும். நந்தினியே அவனுடையவளாக இருக்கட்டும். மீனுவும் அவனுக்கானவளாகவே இருக்கட்டும். ஆனால் இக்கனிவு என்னுடையது. இக்கனவில் புகுந்து இதனை களவாடிச் செல்ல அவனை நான் அனுமதிக்கமாட்டேன். எழுந்தால் என்னிடமிருந்து பறித்துக் கொள்வானா இக்கனிவை? ஒருவேளை விழிப்பில் மீனு உயிருடன் இருந்தால்! ஒருவேளை அப்படியொருத்தி இதுவரை நிகழ்ந்திருக்காத தகவாக இருந்தால்! அது மகிழ்ச்சி தருமா எனக்கு?

இல்லை. இனி அவள் எனக்கு வேண்டாம். அவளை இழந்த இந்த துயர் போதும். அவளது தெற்றுப்பல் சிரிப்பும் முகம் கூர்ந்த முறைப்பும் கோபத்தின் நொடிப்பும் துயரின் நடிப்பும் எதுவும் எதுவும் எனக்கு வேண்டாம். என் கனவின் உட்கனவவள். அவள் கலைந்துவிட்டாள். அவளைக் கலைத்துவிட்ட இந்த அந்தகாரத்தின் ஒளியில் நறுமணத்தில் காற்றிசைப்பில் பனித்துமியில் அவள் இருக்கிறாள். இன்னொரு நிகழ்தகவில் நானவளை திரட்டி எடுத்துக் கொள்வேன்.

மீனு! நீ இன்னொன்றாக என்னிடம் வருவாய்தானே?

செல்லமே இதுவரை இருந்த நீ எனக்கு வேண்டாமடி? இன்னொரு முறை நீ பிரிந்தால் நான் நொறுங்கிப் போவேன்.

இன்னொன்றாக வா. நான் விழிக்கவா? நான் உறங்கிக்கொண்டிருக்கிறேனா? உறங்குகிறவன் அவன்.

குணாவின் கண்களில் கோடாக நீர் இறங்குகிறது. சூழலின் வெப்பத்தை உடல் உணர்கிறது. இமைகளுக்குள் கண்கள் துடிக்கின்றன. அவன் படுத்திருக்கும் படுக்கையின் தன்மை வழியாக அவன் இந்த உலகுக்கு இந்தக் கதையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த சுவாரஸ்யமே இல்லாத இந்த உலகுக்கு வந்து கொண்டிருக்கிறான். முன்னே முகங்கள் எதுவுமே இல்லாத மேடையில் வெயில் வரத்தொடங்குகிறது. அலுப்புடன் முடிகிறது இணைநடனம்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. நல்லா இருக்கு எழுத்துகளில் தாளமிடும் நடனம்❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close