சிறுகதைகள்
Trending

இதயம்

பானுமதி.ந

கண்ணாடி இழைகளால் ஆன தடுப்புச் சுவரின் மறுபுறம் தெள்ளெனத் தெரிந்தது. படுக்கையில் சற்று சாய்ந்து படுத்தவாறு அவன் அந்த எலி என்று சொல்லப்படும் கருவியினையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்காக அது இதயத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது. நேற்று எடுக்கப்பட்ட நுண்ணிய இதய இயங்குப் படத்தில், மருத்துவர் அபே அவனுக்கு அதன் தினசரி வளர்ச்சியைப் பற்றி எடுத்துச் சொன்னார். எலியைப் பார்த்தாலே அருவருத்து ஓடிய காலங்கள் அவன் நினைவில் எழுந்தன. .சிறு வயதில் நல்வயல் என்ற அவன் தாத்தாவின் ஊரில் தான் அவன் எலிப்படையையே பார்த்தான். வீட்டினுள்ளே மறைவிடத்தில் பொந்துகள். பாட்டி மளிகை சாமான்கள் சேர்த்து வைத்த இடத்தையே ‘எலி ரூம்’ என்று தான் சொல்வாள். அவன் பயப்படுவான்; ’சிந்தினத சாப்டுட்டு சிவனேன்னு இருக்கு, உன்ன என்ன பண்ணித்து?’ என்று அவன் அவற்றை அடித்துக் கொல்ல முயல்கையில்,பொறி வைத்துப் பிடிக்க நினைக்கையில் எல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாள். அவன் பயந்த, வெறுத்த எலி தான் இப்போது உயிர் தரப் போகிறது. ஆனாலும், இதெல்லாம் கனவா என்றும் அவன் நினைத்தான். எங்கிருந்து எங்கே வந்திருக்கிறேன், ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது, இதில் நான் உயிர் பிழைக்கும் சாத்தியம் எவ்வளவு, குழலியுடன் என் திருமணம் நடக்குமா, அவள் என்னை வெறுக்காமல் இவ்வளவு செய்கிறாளே, அவளை மேலும் துயரப்படுத்துவதைப் போல் கல்யாணமும் செய்து கொண்டு அவள் வாழ்வையும் அழிக்க வேண்டுமா, கடவுளே, அந்த ஏலக்காய் தீவுகளிலேயே என் உயிர் போயிருக்கக் கூடாதா? அவன் தன்னை மறந்து அந்த நினைவுகளுக்குள்ளேயே மீண்டான்.

நீலப் பச்சையில் கடலின் உட்புறம் ஜொலித்தது. கரையோரம் நின்று பார்க்கையில் பெரும்பாலும்     நீல நிறத்தில் தான் அவனுக்குத் தென்பட்டது. பச்சையும், நீலமுமான இந்த நிறம் இத்தனை துல்லியதாக தூய்மையானதாக இருக்கும் என்பதில் சீனிவாசனுக்கு பெரும் வியப்பு ஏற்பட்டது. கடலுள் நுழைந்த கணத்திலிருந்து அவன் உலகமே மாறிவிட்டது. கடற்படுகையின் வெண்மணல், பவழப் பூச்சிகள் பாறைகளெனப் பட்டு அலையில் ஆடுவது, வண்ண வண்ண மீன்கள் உடலிலே துடுப்பினைச் சுமந்து  செல்லும் இலாவகம், கண்களாலேயே சிரிக்கும் தோற்றத்தைத் தந்த கடல் ஆமைகள், சுருளென உடலைச் சுருட்டி விரித்துச் செல்லும் பாம்புகள், ஒளி சிதறுவதைப் போல் பரவி ஓடும் பல் வேறு உயிரினங்கள், அவன் இதுவரை இப்படிப் பார்த்ததில்லை. குழலிக்கு, ஏலவார் குழலிக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் என்று அன்று நினைத்தது இன்னமும் பசுமையாக  எத்தனை ஏக்கத்தைத் தருகிறது? அந்த ஏலக்காய் தீவுகளை  அன்றைய மறு நாள் நடக்க இருக்கும் அவர்களது திருமணத்திற்குத் தேர்வு செய்தவளே அவள் தானே.

கடலினுள் இருக்கும் போதும் மனிதனால் நிலத்தின் வாழ்க்கையை நினைக்காமல் இருக்க முடியாது போலும் என அவன் சிரித்துக் கொண்டான். இப்போது மருத்துவமனையில் எலி வளர்க்கும் தன் இதயத்திற்காகக் காத்திருக்கையில் கடல்  கண் முன்னே விரிவதில் இவை இரண்டுமே தன் வாழ்வின் திருப்பு முனைகள் என்று அவன் நினைத்துக் கொண்டான். புண்ணைக் கிளறும் சிறுவனைப் போல் அவன் ஏலக்காய் தீவுகளையே மீண்டும் மீண்டும் நினைத்தான்.

தீவே அவர்களது சொந்தம் என்பது போல் ஆகிவிட்டது. அவர்கள் அவர்களது தனிப்பட்ட விமானத்தில் வந்தார்கள். மற்றவர்கள் கப்பலில் வந்து கொண்டேயிருந்தார்கள். எங்கிருந்து தான் வந்ததோ, கமுகும், பாளையும், தென்னங்கூந்தலும்; கூடை கூடையாய் வாசனை மலர்கள், பழவகைகள், இரவிலும் அணையாத அடுப்பு, உலகின் அனைத்து வகை உணவுகள், மது பானங்கள், கடற்கரையில் அமைக்கப்பட்ட கூடாரங்கள், சிறுவர்களுக்கான சிறு விளையாட்டு அரங்கங்கள், பெரியவர்களின் அந்தரங்க அரங்கங்கள், மறக்காமல் நாதஸ்வரக் கலைஞர்கள், வேத விற்பன்னர்கள்; இந்தத் திருமண அமைப்பாளர்கள் இரசனை மிக்கவர்கள் என அவன் நினைத்தான்.

மிகப்பெரிய செல்வந்தர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், அவனுடைய மற்றும் அவளுடைய சொந்தங்களும், நண்பர்களுமாக இந்தத் திருமண நிகழ்வு பல காலம் பேசப்படும், அவர்களது தோற்றப் பொருத்தத்தையும் இதுவரை பாராட்டாதவர் யாருமில்லை. அழகு, பணம், இளமை, நல்ல சுற்றம்…கடவுளே உனக்கு நன்றி. அன்று தான் மிதந்து கொண்டிருந்த பெருமையினையும், இன்று பாழ்பட்ட இதயத்தோடு மாற்று இதயத்திற்குக் காத்திருக்கும் அவலத்தையும் எண்ணி அவனுக்கு சிரிப்பு வந்தது.

அன்று கடலில் ஆடியவன் சிறிது நேரத்தில் ஏதோ சரியாக இல்லை என உணர்ந்தான். சற்று மூச்சுத் திணறுகிறதோ? குழலி கரைக்கு மீண்டிருப்பாளோ? அவன் கரையை அடைந்து தன் கவசத்தை அகற்றுகையில் இதயம் தாறுமாறாக அடித்தது. Hypertropic Cardiomyopathy (இதயத் தசை நோய்) என உணர்ந்தான். அவனுடைய குடும்பத்தில் சித்தப்பாவிற்கு அந்தக் குறைபாடு இருந்தது. இதயத்தசை நார்கள் ஒழுங்கற்றுப் பிணைந்து அதனால் ஏற்படும் உயிர் கொல்லும் நோய். ஆனால், அவனுக்கு அத்தனை ஆபத்தில்லை என்றும் அவன் எல்லோரையும் போல் வாழலாம் என்று மருத்துவம் சொல்லி விட்டது. சில மருந்துகள் மட்டும் எடுத்துக் கொள்கிறான். இதுவரை அவனுக்கும் பிரச்சனைகளில்லையே? ஆனால், மூக்கில் ஏன் இரத்தம் வருகிறது?

மூச்சு…மூச்சு. உயிர், மூச்சிற்கு ஏங்கித் தவித்தது. அவன் நண்பன் மருத்துவர் ரமேஷ் அவன் மார்பின் தசைகளை கைகளால் அறைந்தும், வாய் மூலம் மூச்சுக்குழலுள் காற்றைச் செலுத்தியும் போராடினான். இருபது நிமிடங்களில் உடல்  சீரானது.மூச்சு இயல்பானது, ஆனால், அவனால் காலடி எடுத்து வைக்க முடியவில்லை.குழம்பும் எண்ணங்கள் பிரதிபலிக்க கண்ணீரோடு நிற்கும் குழலிக்கு அவன் என்ன சொல்ல முடியும்? இந்தக் கல்யாணம் வேண்டாமென்றா, எல்லாவற்றையும் நிறுத்தி விடலாமென்றா, நாளை ஓய்வு எடுத்துக்கொண்டால் சரியாகி விடுமென்றா, அவளுக்கு விருப்பமானால், அந்த முகூர்த்தத்திலேயே ஒரு நல்ல வரனை தன் நண்பர்களுக்குள் அவன் தேர்வு செய்து தருவானென்றா, இல்லை அவளே தேர்ந்தெடுக்கலாமென்றா, இல்லை அவள் இக்கணமே இந்தியா திரும்ப வேண்டுமென்றால், தங்களது விமானத்தை எடுத்துச் செல்லலாமென்றா? அவனையும் அறியாமல் அவன் அழுதான்.

அப்பாவின் முகத்தில் பதட்டம் அதிகமாகத் தெரிந்தது. நாளை வெளி உறவுத் துறை அமைச்சர் வருகிறார். இவரது பல்வகைத் தொழில்களுக்கு அவர் இன்றியமையாதவர். அவரவருக்கு அவரவர் கவலை.தவிப்புடன் குழலியின் பெற்றோர். ரமேஷ் யாரோடோ அலைபேசிக் கொண்டேயிருந்தான். குழலி தான் முதலில் தெளிந்தாள். மிக இயல்பாக அருகே வந்து கை பற்றி காரில் ஏற்றினாள். அறையில் அமர வைத்து சூடாக ஹார்லிக்ஸ் கொடுத்தாள். படுக்கச் சொல்லி போர்த்தி விட்டாள்.அரை மணியில் வருகிறேன், அம்மா பார்த்துக் கொள்வார்கள் என்று போனாள்.பயம் படர்ந்த முகத்தோடு அம்மா அப்போதே உடைந்து அழுது விடுவது போலிருந்தாள்.

காட்சிகள் அரங்கேறுகையில் சீனிவாசன் தானும் ஒரு பார்வையாளனாகப் பார்த்துக் கொண்டிருந்தான். குழலி, அவன், ரமேஷ், இவனது அம்மா, மற்றும் அவளது அப்பா மட்டும் உயிர்வாயுக் கருவியுடன் பயணத்தைத் துவங்கின நாள் அவனுக்கு நினைவில் எழுந்தது. முதலில் அந்த நாளில் தான் தேன் நிலவிற்கென அவர்கள் இருவர் மட்டும் அங்கிருந்தே சுவிஸ் செல்லத் திட்டமிட்டிருந்தார்கள்; அதைப் பற்றி அவன் கண்ட வண்ணக் கனவுகள், அவளுக்கென அவன் அங்கே டெலிவரி செய்ய ஆர்டர் செய்திருந்த வைர மணியாரம், அதைப் பார்த்து அவள் எப்படித் திக்குமுக்காடிப் போவாள் என்றெல்லாம் கற்பனைகள்.அவனை அவளும், அவளை அவனும் உடலால் தெரிந்து கொள்ளும் அந்த உன்மத்த நிலை! மீள்வானா,இல்லை முடியப்போகிறதா எனப் பயந்ததை எண்ணுகையில் நரம்பு சிலிர்த்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு தான் அவன் அவர்கள் ஜப்பானுக்குப் போவதை அறிந்தான். டோக்கியோவிலிருந்து கிட்டத்தட்ட நூறு கி மீ தொலைவில் அந்த மருத்துவமனை இருந்தது. அதற்குச் செல்லும் உள் பாதையில் பல மரங்கள் போன்சாய் முறையில் வளர்க்கப்பட்டிருந்தன. வரவேற்பறையில் இயந்திரப் பெண் அவர்களை வரவேற்றாள். அவர்களின் பயண வசதிகள், கடைசியாகச் சாப்பிட்ட உணவு, அவர்கள் அணிந்திருந்த உடையின் நேர்த்தி, குழலியின் அழகான விரிந்த கண்கள், அவள் தோலின் நிறம் மற்றும் உயரம் என்பதையெல்லாம் மனிதர்களைப் போலவே விசாரித்தாள். அனைவருக்கும் இந்திய முறைப்படி தயாரிக்கப்பட்ட தேநீர் தந்தாள். சீனிவாசனது நோய் பற்றிய முழு விவரங்களைச் சொல்லி விட்டு ‘திரு.அபே சில நிமிடங்களில் வருவார், அதற்குள் நீங்கள் அடுத்த அறைக்குச் சென்று பார்த்து வாருங்கள்; அதற்கான சுத்திகரிப்புச் செய்த உடைகளை என் தோழி அணிவிப்பாள்,அங்கே உங்களுக்கு மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆகும். மிகக் குளிரூட்டப்பட்ட அறை அது.’ என்றாள்.

வியப்பும் பயமுமாக அவர்கள் அங்கே சென்றனர்.’வருக’ என்று குரல் மட்டும் கேட்டது. ‘இங்கே நைட்ரஜனை திரவமாக்கி  அதனுள் எலி, தவளை, பன்றி ஆகியவற்றின் ஒன்றில் ஒன்று வீதம் அங்கம் நீக்கப்பட்ட கருமுளைகள் தயாரான நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் வலது கைப்புறம் இருக்கும் அந்த  நடு இழுப்பறையில் இதயம் மட்டும் இல்லாத எலியின் கரு முளை உள்ளது. திரு.அபே உங்களிடம் மேற்கொண்டு விளக்குவார்’. பார்த்துக் கொண்டேயிருக்கையில் மறையும் மாயத் திரைக்காட்சி போல் அந்த அறையிலிருந்து அவர்கள் வெளிவந்து மருத்துவர் முன் அமர்ந்திருப்பது கனவோ என்று தோன்றியது. ஒரு சிறு புன்னகை, தாழத் தலை வணக்கம், இடுங்கிய கண்கள், நடுத்தர வயது, மங்கோலிய நிறம், அதற்கேற்ற மஞ்சள் பற்கள்; ஸ்டெத், ஓவர் கோட் போன்ற எந்த அணிகலனும் இல்லை அவரிடம்.

“மிஸ்டர். வாசன், உங்கள் உடல் மற்றும் மனநிலையை அறிவேன். என் மீது நம்பிக்கை வைத்து உங்களை இங்கே அழைத்து வந்த மிஸ். லீ மற்றும் மிஸ்டர். ரமேவுக்கு நன்றி. உங்கள் பெயரை என்னால் உச்சரிக்க முடிகிறது; ஆனால், உங்கள் நண்பர் மற்றும் உங்கள் மனைவியாகப் போகிறவரின் பெயர்கள் கடினம். நான் நேரேயே சொல்லிbவிடுகிறேன். உங்களுக்கு இதயத்தசை நோய் மட்டுமல்ல .உங்கள் வென்ட்ரிகளிலும் பிரச்சனை உள்ளது. அதை வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன்ஸ் (ventricular fibrillations) என்று சொல்வோம். அதாவது இதயத்தின் கீழ் அறைகளின் செயல் பாடு ஒழுங்கற்றுப் போய் இரத்தத்தை குழாய்களில் செலுத்த முடியாமல் போகும் ஒழுங்கீனம். உங்களுக்கு இரு வகை பாதிப்பு இருப்பதால் உடனடியாக இதயத்தை மாற்ற வேண்டும்; ஆனால், மாற்று இதயம் கிடைப்பதற்கு மிகக் கால தாமதமாகும். இங்கே நாங்கள் உங்களின் நலமான திசுக்களை எடுத்து அதை இதயமற்ற அந்த எலியின் கருமுளையில் செலுத்துவோம், 21 நாட்களில் உங்கள் இதயம் அதில் வளர்ந்து முழுமை அடைந்து விடும். முப்பதாவது நாளில் நீங்கள் ஆரோக்கிய மனிதர் ஆவீர்கள். நாற்பத்தைந்து நாட்களில் தேன் நிலவுதான்.”

சீனிவாசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ”மிஸ்.லீ நீங்கள் பயோ ஜெனெடிக் எஞ்சினீரிங்க் படித்துள்ளீர்கள். மனிதர்களல்லாத எலி, பன்றி போன்றவற்றினுள் குறிப்பிட்ட அங்கம் வளர்வதற்கான அணுவினை நீக்கிப் பின்னர், நல்ல திடமான மனிதரின் திசுக்களிலிருந்தே ஃப்லூரிபோடென்ட் ஸ்டெம் செல்களை அந்த முளைக்கருவிற்குள் செலுத்தினால், இல்லாத அந்த உறுப்பு  அந்த எலி, பன்றி போன்றவற்றில் வளர்ந்து விடும். அதை அறுவடை செய்து பாதிக்கப்பட்ட மனிதர் உடம்பில் நட வேண்டியதுதான். அவர் உடம்பின் திசுக்கள் என்பதால் மறுதலிக்கப்படும் அபாயம் இல்லவேயில்லை. பணத்திற்காக மனிதன் தன் உறுப்பை விற்கும் கேவலமில்லை. தனக்குக் கிடைக்க வேண்டுமென்பதற்காக விபத்தில் சாவோருக்காகக் கழுகைப் போல் காத்திருக்கும் மனித அவலமுமில்லை.”

எண்ணங்களிலிருந்து அவன் மீள்கையில் அவனுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது தெரிந்தது. அந்த எலிக்கும் கொடுத்திருப்பார்களோ என நினைத்தான். நிழலாக அம்மா, குழலி தெரிந்தார்கள்.

அபே சொன்னது போல் முதலிரு நாட்களில் அவனுக்கான இதயம் எலியில் துடிக்கத் தொடங்கி 21 நாட்களில் அவனுள்ளே துடித்தது. முப்பதாவது நாளில் அவன் ட்ரெட்மில்லில் ஓடினான். இவனது அம்மாவும், அவளது அப்பாவும் மீண்டும் திருமணப் பேச்சு எடுக்கையில் குழலி சொன்னாள்.

“சீனி, நான் உன்னைக் காதலிக்கிறேன். சோ லாங்” அவன் தவித்தான்-தடுமாறினான் ;ஏலக்காய் தீவுகளின் கடல் நிறம் நீலமா, நீலப்பச்சையா, இரண்டுமேயா?

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

Close
Back to top button
Close