கட்டுரைகள்

கங்குலி என்னும் சிற்பி…

சுதி

இந்திய கிரிக்கெட்டில் 1983 மறக்க முடியாத வருடம் என்பது அனைவரும் அறிந்ததே.
முதல் முறையாக இந்தியா உலக கோப்பையை வென்ற ஆண்டு அது. இந்தியாவில் கிரிக்கெட் காலூன்ற மிக முக்கியக் காரணம் அதுவாகத் தான் இருக்க முடியும். அதிலும் குறிப்பாக கபில் தேவின் பங்கு அளப்பரியது. அதன் பிறகு மக்களிடம் கிரிக்கெட்டை கொண்டு போய் சேர்க்க ஒவ்வொரு கால கட்டத்திலும் சிறந்த வீரர்களை இந்தியா உருவாக்கத் தவறியதில்லை. கவாஸ்கர், சச்சின், தோனி என்று இன்று விராட் கோஹ்லி வரை அப்படித் தான். இது மக்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் இடையே உள்ள உறவு. ஆனால், கிரிக்கெட்டை உள்ளிருந்து அதை வீழாமல் தாங்கிப் பிடித்து அதில் புதிய புரட்சியையும் மறுமலர்ச்சியையும் உருவாக்கிய வெகு சிலரில் ஒருவர் தான் சௌரவ் கங்குலி. கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக Dada என்று அழைக்கப்பட்டவர்.

அப்படி என்ன செய்தார் இந்த dada.?

2000 – ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் ஒரு இருண்ட காலம். கிரிக்கெட் இந்தியாவில் சற்று வீழ்ச்சியை சந்தித்தது. 1999 உலக கோப்பை தோல்வி இந்திய ரசிகர்களுக்கு அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாத ஒன்றாகவே இருந்தது. அதன் பிறகு 2000ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய கேப்டனாக இருந்த முகமது அசாருதீன் match fixing புகாரில் சிக்கி இந்திய அணியில் இடம்பெற வாழ்நாள் தடை அளிக்கப்பட்டது. அவருக்கு உதவியதாக முக்கிய வீரர்களான அஜய் ஜடேஜா மற்றும் மோங்கியாவிற்கும் அணியில் இடம் பெற தடை விதிக்கப்பட்டது. இது இந்திய ரசிகர்களுக்குப் பேரிடியாக விழுந்தது. இந்திய அணியின் கேப்டனே இப்படி செய்தது கிரிக்கெட்டில் மக்களுக்கு இருந்த நம்பிக்கையை வெகுவாக பாதித்தது.

இந்த நிகழ்வு இந்திய அணியில் இருந்த மற்ற வீரர்களுக்கும் பெரிய மனஉளைச்சலாக மாறியது. இந்தியா, கிரிக்கெட்டின் மிக இக்கட்டான நிலையை எட்டி இருந்தது. எந்த மாதிரியான விளைவுகள் எந்த மாதிரியான முடிவுகள் இருக்க போகின்றன ?என்ன செய்வது என்று யாரும் அறிந்திருக்கவில்லை. அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த சச்சின் சிறப்பாக செயல்படாமல் போக கேப்டன் பொறுப்பு கங்குலி வசம் வந்தது. 2001ம் ஆண்டு பிசிசிஐ தலைமை அதிகாரியாக ஜஃமொஹன் டால்மியா பதவி ஏற்றார். இந்திய அணியில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய அவர் கங்குலிக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.

மிக முக்கியமான பல மாற்றங்கள் அணியில் நடக்க இது வாய்ப்பாக அமைந்தது. அதுவரை பேட்டிங் மற்றும் பௌலிங்கை மட்டுமே பெரிதாக நினைத்த இந்திய அணியில் ஃபீல்ட்டிங்கை மெருகேற்றுகிறார். இதன் காரணமாக பல முக்கிய இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறுகிறார்கள். அதில் யுவராஜ் மற்றும் முகமது கைப் தங்களுடைய ஃபீல்ட்டிங்கிற்காகவே பேர் போனவர்கள். 2001ஆம் ஆண்டு இந்தியா இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகள் பங்கேற்ற முத்தரப்புத் தொடரில் சச்சின் காயம் காரணமாக விலக சேவாக்கை ஓப்பனிங் இறக்குகிறார் கங்குலி. அந்த தொடரில் நியூஸிலாந்துடனான ஆட்டத்தில் சேவாக் 69 பந்துகளுக்கு சதமடித்து இந்தியாவின் மூன்றாவது அதிவேக சதத்தைப் பதிவு செய்கிறார். பிறகு சச்சின் அணிக்கு திரும்பியதும், கங்குலி தனது இடத்தையே சேவாகிற்கு கொடுக்கிறார்.

வெளிநாடுகளில் இந்தியாவின் ஆட்டம் மோசமாக உள்ளது என்பதை அறிந்து அதில் அதிக கவனம் செலுத்துகிறார் கங்குலி. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் இந்தியா தோல்வியையே தழுவி தாயகம் திரும்பும் என்பது இங்கு அனைவருக்கும் தெரிந்த விஷயம். கங்குலியின் வருகைக்குப் பின்பு தான் இந்தியா overseas tourகளில் அதிக வெற்றியைப் பதிவு செய்ய ஆரம்பித்தது.

2003ல் பார்டர் கவாஸ்கர் ட்ரோபி ஆஸ்திரேலியாவில் நடந்தது. அந்த தொடரில் ஸ்டீவ் வாக்ஹ் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதனால் எப்படியும் இந்தியாவை வென்று ஸ்டீவ் வாக்ஹ்க்கு சமர்ப்பிக்க ஆஸ்திரேலிய அணி காத்துக்கிடந்தது. இந்திய அணியின் வீரர்கள் பட்டியலில் கும்ப்ளே இல்லையெனத் தெரியவும் கங்குலி, இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் உதவியோடு தேர்வுக்குழுவிடமே நேரடியாக சென்று கும்ப்ளே இருந்தால் தான் ஆஸ்திரேலியா செல்வோம் என்று பிடிவாதமாய் நிற்கிறார். ஒருவேளை கும்ப்ளே சரியாக விளையாடவில்லை என்றால் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும் என்று தெரிந்தும் கும்ப்ளேவை அணியில் சேர்க்கிறார். சொந்த மண்ணில் வெற்றிக்காகக் காத்திருந்த ஆஸ்திரேலியாவின் கனவில் கும்ப்ளே மண்ணை அள்ளிப் போடுகிறார். முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் 1-1 என்று தொடரை சமன் செய்கிறது இந்தியா. கும்ப்ளே 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி மொத்தம் 24 விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார்.


2001ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஆஸ்திரேலிவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து ஆடிய இந்தியா வெறும் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தோல்வியின் அருகிலேயே சென்று விட்டது. follow on ஆகி இந்தியா மீண்டும் பேட்டிங் செய்ய வந்தது. இந்தியா முதல் விக்கெட்டை இழக்க யாரும் எதிர்பார்த்திராத விதமாக vvs.லட்சுமணனை மூன்றாவதாக களம் இறக்குகிறார் கங்குலி. அதன் பிறகு ஆட்டம் மாறுகிறது. ஒருநாள் முழுவதும் லட்சுமணனும், ட்ராவிடும் விளையாண்ட சாதனை எல்லாம் நிகழ்ந்தது. இந்தியா 657 ரன்கள் குவிக்கிறது.
லட்சுமண் 281 ரன்கள் எடுக்கிறார். 383 ரன்களை இலக்காக வைக்கிறது இந்தியா. 212 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலிய அணி தோல்வியைத் தழுவுகிறது..

இன்றும் நமக்கு மறக்க முடியாத ஒரு வெற்றிக் கொண்டாட்டம் எது என்றால் அது இங்கிலாந்திடம் Natwest தொடரில் வென்று கிரிக்கெட்டின் மெக்காவாக கருதப்பட்ட லண்டன் லாட்ஸ் மைத்தானத்தில் dadaவின் கொண்டாட்டம் தான். அதை வெறும் வெற்றி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. “பழிதீர்த்தல்” அது தான் மிகச் சரியான வார்த்தை. இந்தியாவிற்கு வந்து இந்தியாவை வீழ்த்தி மும்பை வான்கடே மைத்தானத்தில் பிளின்ட்ஆஃப் தனது T-shirtஐ கழற்றி சுற்றியதற்கான பழிதீர்த்தலை dada பதிவு செய்தார். இங்கிலாந்தின் முன்னாள் வீரர் பாய்காட், “லாட்ஸ் எங்களின் மெக்கா, அதை கங்குலி அவமதிப்பு செய்துவிட்டார்” என தன் கண்டனத்தை தெரிவிக்கிறார்.
அதற்கு கங்குலி கூறிய பதில்
“லாட்ஸ் உங்களின் மெக்கா, வான்கடே எங்களுடையது”.


கங்குலியைப் பற்றி கூறும் போது அவரின் முதல் டெஸ்ட் பற்றிக் கூறாமல் இருக்க முடியாது. இங்கிலாந்து லாட்ஸ் மைதானத்தில் தனது முதல் ஆட்டத்திலேயே சதம் விளாசுகிறார். லாட்ஸ் மைதானத்தில் சதமெல்லாம் அவ்வளவு எளிதான காரியமில்லை அதுவும் முதல் ஆட்டத்திலேயே. கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலர் லாட்ஸ் மைதானத்தில் சதமடித்ததில்லை. கவாஸ்கர், சச்சின், பாண்டிங், லாரா, கல்லிஸ் என பல ஜாம்பவன்களும் செய்யாத ஒரு சாதனையைத் தன் முதல் ஆட்டத்திலேயே செய்திருந்தார்.

கங்குலி தனது ஆக்ரோஷத்திற்காகவே பேர் போனவர். அதுனால் வரை அமைதியான கேப்டன்களையே பார்த்திருந்த இந்தியாவிற்கு, குறிப்பாக ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடும் போது, அந்த அணியினர் சிலர் நம்மை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடும் போது, இந்திய அணியைச் சேர்ந்தவர்கள் அமைதியையே பதிலாகத் தந்து வந்தனர். Dada அதையெல்லாம் உடைத்தார்.

ஒரு முறை டாஸிற்க்காக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக்கை காத்திருக்க வைத்தார் கங்குலி. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அனைவருக்கும் உண்மை தெரியும் அது அவர்களின் அகந்தையை உடைப்பதற்காக dada செய்த சேட்டை என்று.

2003 உலகக்கோப்பைக்காக மொத்த இந்திய அணியையும் செதுக்கியது கங்குலி தான். சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில் பல இளம் வேகபந்து வீச்சாளர்களை அணியில் சேர்க்கிறார். அப்போது இந்திய அணியில் விக்கெட் கீப்பர்கள் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்க மாட்டார்கள். இதனால் கீப்பருக்காகவே ஒருவரை இந்தியா சுமக்க வேண்டிய நிலை இருந்தது. இதை உணர்ந்த கங்குலி டிராவிட்டை கீப்பராக மாற்றுகிறார். பந்துவீச்சில் அனுபவ வீரர்கள் இல்லை என்று ஓய்வு பெறும் தருவாயில் இருந்த ஸ்ரீநாத்தை உலகக்கோப்பையில் விளையாட வைக்கிறார். அந்த உலககோப்பையில் பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் இந்தியாவிற்கு 274 ரன்கள் இலக்காக வைக்கப்படுகிறது. ஒருபுறம் சச்சின் விளாசிக்கொண்டிருக்கையில் மற்றொரு புறம் சேவாக் கங்குலி அவுட் ஆக இந்தியா 53 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழக்கிறது. அப்போதுவரை 6 ஆம் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த முகமது கைஃப்பை 4 ஆம் இடத்தில் வரவழைக்கிறார். சச்சினுடன் சேர்ந்து நிதானமாக விளையாடிய கைப் 102 ரன்கள் பார்ட்னெர்ஷிப் கொடுக்கிறார். இந்தியா வழக்கம் போல் பாகிஸ்தானை வீழ்த்துகிறது.

அசுர பலத்தோடு இருந்த ஆஸ்திரேலியாவிடம் இந்தியா இறுதிபோட்டியில் தோற்றிருந்தாலும் dada வரவில்லை என்றால் இந்திய அணி அவ்வளவு தூரம் சென்றிருக்காது என்பதே நிதர்சனம்.

இந்தியா 2011 உலக கோப்பையில் வெற்றி பெற யார் காரணம் என்று பல விவாதங்கள் இங்கு நடந்தது. அதற்கு யார் காரணம் என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், இந்திய அணியில் 17வது ஆளாக
(16 – கேரி கிரிஸ்டன்) கங்குலி இருந்தார் என்பது மட்டுமே உண்மை. அந்த இந்திய அணியில் விளையாடிய முக்கிய வீரர்களெல்லாம் dadaவின் படையைச் சேர்ந்தவர்கள். யுவராஜ், சேவாக், கம்பிர், ஹர்பஜன், ஜாஹீர் கான், தோனி எல்லாம் கங்குலியால் கண்டெடுக்கப்பட்ட முத்துக்கள்.


இந்திய அணியின் பயிற்சியாளராக கிரேக் சாப்பெல் நியமனத்திற்குப் பிறகு இந்திய அணி வேறு பரிமாணத்திற்கு செல்கிறது. கங்குலி கேப்டன் பொறுப்பு பறி போகிறது. கங்குலி வீழ்கிறார்.
கங்குலி புறக்கணிக்கப் படுகிறார்.
2007 ஆம் ஆண்டு உலககோப்பையில் இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறுகிறது. சாப்பெல் மட்டும் இந்தியாவின் பயிற்சியாளராக வராமல் போயிருந்தால் கங்குலி, சச்சின் இடத்தில் சச்சினுக்கு இணையாக இன்னும் பேசப்பட்டிருப்பார். 2007 ஆம் ஆண்டு உலககோப்பையை இந்தியா வென்றிருக்குமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், லீக் சுற்றில் பங்களாதேஷிடம் தோல்வி பெறும் அவமானமெல்லாம் இந்தியாவிற்கு நிகழ்ந்திருக்காது. வங்கதேசப் புலிகளை இந்த வங்காளப் புலி நிச்சயம் வேட்டையாடியிருக்கும்.
கங்குலி எனும் ஒருவனை இந்தியக் கிரிக்கெட் சந்திக்காமல் போயிருந்தால் இந்தியா தற்போதிருக்கும் இந்நிலையை அடைந்திருக்குமா என்பது கேள்விக்குறியே.?

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சௌரவ் கங்குலி….
Dada dada தான் – இன்றும் என்றும்!!

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close