கட்டுரைகள்
Trending

ராஜு முருகனின் ‘ஜிப்ஸி’ நூல் வாசிப்பு அனுபவம்

சிலம்பரசன்

இசை என்ற ஒற்றைச் சொல்லை எப்படி நாம் பார்ப்பது? அது உருவமற்ற உன்னத நிலை. பிரபஞ்சத்தின் பேரன்பு மொழி. இன்னும் எத்தனை எத்தனை வார்த்தைகளால் அழகுப்படுத்தினாலும் அத்தனைக்கும் பொருந்துகின்ற அளவுகள் ஏதுமில்லா அற்புதம் இசை. மதம், இனம், மொழி, நிறம் என அத்தனைக்கும் அப்பாற்ப்பட்ட இசையைத் தேடி தேசாந்திரியாய் அலைந்த ராஜூ முருகனின் கட்டுரைத் தொகுப்பு ஜிப்ஸி.ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகள் புத்தகமாக உருப்பெற்று இருக்கிறது.

எந்தவித நிரந்தர ஆசைகளுக்கும் ஆட்படாமல் கிடைத்ததை உண்டு ஊர் சுற்றி அலையும் நாடோடிகளுக்குப் பெயர் ஜிப்ஸி. இந்திய நாடோடி கூட்டமைப்பின் இசை பற்றிய தேடலில் தான் கண்ட அனுபவங்களை ஒரு ஜிப்ஸியாக விவரிக்கின்றார் ராஜூ முருகன்.

ராஜூ முருகனின் வட்டியும் முதலும் நூல் படித்திருக்கிறேன். ஒரு சாமானிய இளைஞனின் பார்வையில் தான் கண்ட அனுபவங்களையும் மனிதர்களையும் பற்றி விரிவாக தெளிவாக எழுதி இருப்பதைப் படித்த போது எப்படி இந்த மனிதன் இவ்வளவு அனுபவங்களை சேர்த்து வைத்துள்ளார் என்ற ஆச்சரியமும் கொஞ்சம் பொறாமையும் எட்டிப்பார்த்தது.

அதற்கான பதிலை ஜிப்ஸி சொல்லி விட்டது. பயணங்கள் எத்தனை எத்தனை அனுபவங்களை ஒருவருக்கு அளிக்கிறது, எத்தனை மாற்றங்களைத் தந்து வாழ்வினைப் பற்றிய புரிதலைத் தருகின்றது என்பதை ஜிப்ஸி சொல்லித் தருகிறது.

நாடோடி இசைத் தேடலில் தகவல் கிடைக்கும் போதெல்லாம் அந்த இடங்களுக்குச் சென்று நாடோடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் மேன்மையான இசையினையும் நேரில் உணர்வது என்பது எத்தகைய அனுபவமாக இருந்திருக்கும் என்பதைப் படிக்கும் போது உணர முடிகிறது.

காசியின் மூலை முடுக்குகளில் அலைந்து திரியும் போது இடைஇடையே தன்னுடைய நினைவுகளால் தான் சென்ற இடங்களில் தான் கண்ட அனுபவங்களையும் பார்த்து வந்த மனிதர்களின் வேதனைகளையும் ராஜூ முருகனுக்கே உரிய எள்ளலோடும் துள்ளலோடும் எடுத்துரைக்கிறது ஜிப்ஸி. நம் வாழ்வில் எளிதாகக் கடந்து போகும் குடுகுடுப்பைக்காரர்களுக்கும், ரத்தம் சொட்டச் சொட்ட சாட்டைகளால் அடித்துக் கொள்பவர்களுக்கும், சாமி வேடங்களிட்டு அலைபவர்களுக்கும், கயிறு மேல் நடக்கும் வித்தைக்காரர்களுக்கும் இத்தகைய வரலாறுகளும் வலிகளும் இருப்பதை படிக்கும்போது ஆச்சரியமாகவும் ஒருபுறம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

போகின்ற போக்கில் புத்தரை, சே வை, பாரதியை, பெரியாரை, அன்னை தெரேசாவை தன்னுடைய ஜிப்ஸியின் பட்டியலில் சேர்த்துக் கொண்டு பயணிக்கும் ராஜூ முருகனின் எழுத்துக்கள் வாசகனை உள்ளிழுத்து விடுகிறது. வைக்கம் முஹம்மது பஷீர் பற்றிய விவரங்களைப் படிக்கும்போது ஒரு ஜிப்ஸியாக அலைவது எத்தனை அழகானது, அதைத் தாண்டி ஆபத்தானது என்பதை அறிய முடிகிறது. பயணங்களின் வழியே அவர் சந்தித்த மனிதர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வலி நிறைந்து கண்ணீரில் ததும்பி வழிகின்றன.

எழுத்தாளர்களின் சந்திப்பில் தான் கண்ட அனுபவங்களை எழுதும் போது ஜெயகாந்தனுடனான முதல் சந்திப்பில் அவரின் ஒரு பார்வையில் பதற்றம் அடைந்து வெளியேறியதாக சொல்லும் போது அந்த சூழல் கண்முன்னே வந்து போகிறது. வண்ணதாசன், கி.ரா ஆகியோரின் சந்திப்பு அனுபவங்களும் மனதில் நிற்கிறது.மதுரை அய்யாக்கண்ணு ஐயா உடனான சந்திப்பு கேப்டன் பிரபாகரனின் வரலாற்றை விவரித்து மனதில் ஆழமாக பதியச் செய்கிறது.

“எந்தக் கத்தி என்ன குத்திக் கிழிக்கும்னு ஒரு கூட்டமே டிக்கெட் வாங்கிட்டு பாக்க, நான் செத்து செத்துப் பொழைப்பேன். ஆனா பொழைச்சுருவேன் சார்…” என்று சொல்லும் தீபயா,

இயக்குநர் ராஜு முருகன்
இயக்குநர் ராஜு முருகன்

“இங்க பெரிய துயரம் என்னனா குட்டா, நாம யாருக்காக போராடுறோமோ அவங்களே நம்மள காமெடியனா பாக்குறதுதான்” என்று ஆதங்கப்படும் தோழர் ஹரிஹரசுதன் என்று வலி நிறைந்த வார்த்தைகளை வழி நெடுக சேகரித்து வந்து கோர்வையாக்கி தந்திருக்கிறார் ராஜூ முருகன்.

வளரும் இந்தியாவில் இன்றும் ஒருவேளை உணவிற்கு அல்லல்படும் மக்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் வலிகளும் வார்த்தைகளும் இருக்கிறது என்பதை ஜிப்ஸியின் வாயிலாக இசையின் வாயிலாக பதிவு செய்கிறார் ராஜூ முருகன். படித்துப் பகிர வேண்டிய நூல்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. மிக அருமையான பதிவு தோழரே. இந்த உலகத்தில் சாதாரண மனிதர்கள் என அழைக்கப்படும் தினமும் நம்மை கடந்து செல்லும் மனிதர்கள், அவர்களை பற்றின பதிவுகள் நமக்கு விசித்திரமாகத் தான் இருக்கும், அவர்களை பற்றின பதிவுகளும் நமக்கு அதிகமாக கிடைக்கப் பெறுவதில்லை.தேசாந்திரிகளாய் வாழும் மக்களும் அவர்கள் பற்றின தகவல்களும் நமக்கு, ஒரு பயணம் மேற்கொண்ட அனுபவத்தை நமக்கு தருகிறது. குண்டுக்குள் இருக்கும் கிளி பூல் உணர வைக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close