கட்டுரைகள்
Trending

‘எரியும் பனிக்காடு’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – சாய் கார்த்திக்

எரியும் பனிக்காடு. 

1969-ம் ஆண்டு, மருத்துவரும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளருமான பால் ஹாரிஸ் டேனியல் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “ரெட் டீ” என்ற நாவல், 38 ஆண்டுகளுக்குப் பின்னர் 2007-ல் வழக்கறிஞரும் எழுத்தாளருமான இரா.முருகவேள் அவர்களால் மிக நேர்த்தியாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

பி.எச். டேனியலின் மகளிடம் முறையான அனுமதி பெற்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நாவல் ‘எரியும் பனிக்காடு’.

[இரா. முருகவேளின் பிற படைப்புகள்: மிளிர் கல், செம்புலம், முகிலினி, தூக்கிலிடுபவனின் குறிப்புகள், பொருளாதார அடியாளின் ஓப்புதல் வாக்குமூலம், நீலத்தங்கம், கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும், இன்பமயமான தமிழக வரலாறு]

பால் ஹாரிஸ் டேனியல்.

பி.எச். டேனியல்.  ஆரம்பத்தில் இந்தப் பெயரைக் கேட்டவுடன், ஆங்கிலேயர் என்றே நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது பி. எச். டேனியல் நாகர்கோவிலைச் (அகத்தீஸ்வரம்) சேர்ந்தவர் என்று. 

1941-ல் இருந்து 1965 வரை வால்பாறை காரமலை எஸ்டேட்டில் தலைமை மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். அந்த நேரத்தில் 1900-ல் இருந்து 1930 வரை தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த பலரைப் பேட்டி கண்டு, அவர்களின் எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து, தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அவற்றில் வேலை பார்த்தவர்களின் நிலைமைகள் குறித்து துல்லியமான உண்மைகளையே நாவலாக படைத்துள்ளார். அங்கு நிலவிய சகிக்க முடியாத மனிதத்தன்மையற்ற சூழலைக் கண்டு அதை எதிர்த்துக் குரல் தந்ததோடு ‘தென்னிந்திய தோட்ட உத்தியோகிஸ்தர்கள் சங்கம்’ என்ற ஒன்றையும் நிறுவி தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக துணை நின்றிருக்கிறார்.

ரெட் டீ தவிர பிளான்டேஷன் பனோரமா என்ற கட்டுரைத் தொகுப்பையும் ‘டாக்டர்ஸ் டேல்ஸ்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார் பி.எச். டேனியல்.

எரியும் பனிக்காடு.

334 பக்கங்களில் ஐந்து பாகங்கள், பல்வேறு அத்தியாயங்களுடன் நாவல் பயணிக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் வரும் மேற்கொள்கள் அடுத்து நடக்க இருப்பவற்றை சுருக்கமாகவும், பகடியாகவும் சொல்லிச் செல்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கயத்தாற்றிக்கு அருகில் 30 வீடுகளை மட்டுமே கொண்ட கிராமம் ‘மயிலோடை’. அக்கிராமத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் தாழ்த்தப்பட்டவர்கள். பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களின் நிலங்களில் கூலிகளாக வேலை செய்கிறார்கள். மழை பொய்த்துப் போனதால் வேலையில்லாமல் தவிக்கும் அவர்கள், ஏறக்குறைய ஊரில் உள்ள அனைத்து சேவல்களையும் பலி கொடுத்த பின்பும் அம்மனின் கோபம் தணிந்து ஏன் இன்னும் மழை வரவில்லை என்று குழம்பிப் போயிருந்தனர்.  

1925-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கொஞ்சம் மிச்சமிருக்கும் ராயி மாவை வைத்து, மனைவி வள்ளி மற்றும் அம்மாவை கஞ்சி காய்ச்சி சாப்பிட சொல்லிவிட்டு, வேலை தேட கயத்தாறு சென்று ஒவ்வொரு கடையாக வெளியே நின்று வேலை கேட்கிறான்‌‌, கருப்பன். சாதிய மேலாதிக்கம் தலைவிரித்து ஆடிய அந்தக் காலத்தில்   

[இப்ப மட்டும் என்னவாம்???] தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்று தெளிவாக விவரிக்கப்படுகிறது. 

டீக்கடையில் சந்திக்கும் சங்கரபாண்டி என்ற கங்காணி/மேஸ்திரி, இங்கே சோறில்லாமல் பட்டினி கிடந்து சாவதற்கு பதில், தேயிலைத் தோட்டத்திற்கு வந்து உழைத்தால் சில வருடங்களில் ராஜ வாழ்க்கை வாழலாம் என தனது சர்க்கரை தடவிய வார்த்தைகளால் கருப்பனை முளைச்சலவை செய்கிறான். தான் அடுத்த வாரம் வால்பாறை செல்வதால், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்தால் தன்னோடு வரலாம் என்றும் அவனை அழைத்துச் செல்லும் செலவையும் ஏற்று இங்குள்ள கடனை அடைக்க முன்பணமாக 40 ரூபாய் (கணவன்&மனைவிக்கு) தருவதாகவும் குடுபத்துடன் கலந்து பேசிவிட்டு நாளை வந்து முடிவு சொல்லும்படியும் வலைவிரிக்கிறான். 

(‘நரி ஆட்டுக்குட்டியை நக்கிக் கொடுப்பதைக் காண்பது ஒரு கெட்ட அறிகுறி’ என்ற பழமொழி நாவலின் வேறொரு பகுதியில் மேற்கொள் காட்டப்படுவது நினைவிற்கு வருகிறது).

முன்பின் தெரியாத இடத்திற்கு எப்படி செல்வது எனத் தயங்கி, கலந்தாலோசித்துக் கொண்டிருந்த மாலை வேளையில், (கங்காணியால் அனுப்பப்பட்ட) குடுகுடுப்பைக்காரன் வந்து, பயணம் குறித்தும் அதனால் அவர்கள் அடையப் போகும் பலன்கள் குறித்தும் குறி சொன்னதும், குழப்பங்கள் நீங்கி அம்மையை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு வால்பாறை செல்வதென கருப்பனும் வள்ளியும் முடிவு செய்தனர்.  மறுநாள் சங்காரபாண்டியன் கருப்பனை, அங்கிருக்கும் எஸ்டேட் ஏஜென்ட்டிம் அழைத்துச் சென்று, வெள்ளைத்தாளில் கைரேகை வாங்கிக்கொண்டு நாற்பது ரூபாய் பெற்றுக் கொடுத்தான். 

‘விடையளிக்கிறோம் ஒருவேளை என்றென்றைக்குமாக’ என பக்கம் 39-ல் அவர்கள் கிராமத்தை விட்டுப் புறப்படும்போது வரும் மேற்கொள் ஆழம் நிறைந்தாக, தேயிலைத் தோட்டத்தில் அவர்கள் வாழ்வு எப்படி இருக்கும் எனக் குறி சொல்லிச் செல்கிறது.

கருப்பனும் வள்ளியும் கயத்தாறு சென்று கங்காணியுடன் இணைந்திருந்த மற்ற கூலிகளுடன் சேர்ந்து கொண்டனர். அங்கிருந்து அவர்கள் அனைவரும் கோவில்பட்டிக்கு பேருந்தில் சென்றனர்.  கோவில்பட்டியிலிருந்து சாத்தூர், விருதப்பட்டி, மதுரை வழியாக திண்டுக்கல் வரையும், திண்டுக்கலில் இருந்து பழனி, உடுமலைப்பேட்டை வழியாக பொள்ளாச்சி வரையும் இரயில்களில் பயணித்தனர். பெரும்பாலான கூலிகளுக்கு அதுவே அவர்களது முதல் பேருந்து மற்றும் இரயில் பயணம்.  அவர்களின் பயண அனுபவம் அசலாக விவரிக்கப்பட்டுள்ளது. பின்பு பொள்ளாச்சியில் இருந்து நடந்தே சமத்தூர், அங்கலாகுறிச்சி, அட்டக்கட்டி, ஐயர்பாடி வழியாக வால்பாறை குமரிமலை எஸ்டேட்டை அடைகின்றனர்.  

மூன்றாம் பாகத்தில், “இங்கே கால் பதிக்குமுன் துறந்து விடுங்கள் எல்லா நம்பிக்கைகளையும்” என்ற மேற்கொளுடன் அவர்களின் எஸ்டேட் வாழ்க்கை தொடங்குகிறது. அங்கு சென்ற முதல் நாளிலேயே தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்து கொள்கிறார்கள். அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் நரகம்தான் என்றும் திரும்ப ஊர்செல்வதற்கான சாத்தியம் குறைவு என்றும் புரியத் தொடங்குகிறது.

சனவரி மாதம் வேலைக்குச் சேரும் அவர்களை பிப்ரவரி மார்ச் மாதத்தில் மலேரியாவும், அடுத்த மூன்று மாதங்கள் விடாது பெய்யும் மழையும் இரத்தத்தைக் குடிக்கும் அட்டைப் பூச்சிகளும், அடுத்தடுத்த மாதங்களில் நிமோனியா, மர்ம காய்ச்சல், வாந்தி பேதியும் அடுத்த இரண்டு மாதங்கள் மீண்டும் மழையும் மாறி மாறி வாட்டி வதைக்கின்றது. மேலும் சமாளிக்கவே முடியாது என எண்ண வைக்கும் இரண்டு நிறந்தர வில்லன்கள். முதலாவது இத்தனை இயற்கை இடர்களை உருவாக்கும், இடைவிடாது பனியால் வாட்டும் ‘மலைப்பகுதி’. இரண்டாவதாக, அட்டையை விட மோசமாக இரத்தத்தை உறிஞ்சி, கொழுத்த லாபத்திற்காக அனைத்து தளத்திலும் உழைப்பைச் சுரண்டும் ஆங்கிலேய ஏகாதிபத்திய தொரைமார்கள். 

பிற எஸ்டேட்களை விட குமரிமலை எஸ்டேட்டில் நிலைமை பரவாயில்லை எனக் குறிப்பிடபடுவதை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட முடியவில்லை. குமரிமலை எஸ்டேட்டின் கீழ் இருக்கும் குரங்குமலை மற்றும் கழுகுமலை எஸ்டேட்டுக்கும் சேர்த்து, குரூப் என்ற வார்டுபாய்தான் மருத்துவராக வலம் வந்தார்.

இந்த மூன்று எஸ்டேட்டையும் நிர்வகிக்கும் பொது மேலாளர் வொயிட்.  “அவன் அனைத்தின் விலையும் தெரிந்தவன், ஆனால் எதன் மதிப்பும் தெரியாதவன்” என ஆஸ்கார் வொயில்டின் வரிகள் மூலம் வொயிட்-டை எப்படியானவன் என நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பு. 

பொதுவாக இந்தியாவில் அதிகாரம் செய்த ஆங்கிலேயர்கள் சாதியப் படிநிலை பார்த்ததில்லை என ஒரு கூற்று உண்டு. ஒவ்வொரு முறையும் கூலிகளைத் திட்டும் போது வொயிட் வாயில் இருந்து வரும் வசைகள்:சக்கிலிய நாயே, கழுதைக்குப் பிறந்தவனே எனத் தொடங்கி நீண்…டு செல்லும்.

ஒருநாள் வேலை பார்த்தால் ஆண்களுக்கு நாலாணாவும், பெண்களுக்கு கிள்ளும் ஒரு பவுண்ட் இலைகளுக்கு 0.2 பைசா  எனவும் கணக்கில் எழுதப்பட்டுக் கொள்ளும். ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் ஆண்களுக்கு ஆறு அணாவும், பெண்களுக்கு நான்கு அணாவும் ரேசன் பொருட்கள் வாங்க கொடுக்கப்படும் பணம் ‘செலவு கேஷ்’ எனப்பட்டது. இதுபோல கவாத்து முறை, மேஸ்திரி கமிசன் என ஒவ்வொன்றும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஊரில் வாங்கிய முன்பணம், எஸ்டேட் அழைத்து வர ஆன செலவு, கம்பளிக்கான செலவு இவற்றுடன் ஏனைய அனைத்து செலவுகளையும் கடன்களையும், வருடக் கடைசியில் கணக்கு தீர்த்து முதல் வருடத்திலேயே ஊர் செல்வது நடக்காத ஒன்று. இவ்வாறே கருப்பனுக்கும் நடக்கிறது. உடல் வலிமையும் மன வலிமையும் இழந்து கருப்பனும் வள்ளியும் எஸ்டேட்டில்  இரண்டாவது ஆண்டை தொடங்கும்போது வரும் மேற்கொள் இது,  “இன்னும் எட்டவே முடியாத அந்த நம்பிக்கையை மனதில் கொண்டு…

மேலும், “மனிதனிடம் மனிதன் காட்டும் மிருகத்தனம் ஆயிரமாயிரம் பேரை வாட்டி வதைக்கிறது”

“உயிரியல் ரீதியாகப் பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன்தான். திட்டமிட்டுத் தனது சொந்த இனத்தையே வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன்தான்.”

நாவலில் வரும், இந்த இரண்டு மேற்கொள்கள் போதும் நாவலின் சாராம்சத்தையும் தொடர்ந்து நாவல் எவ்வாறு பயணிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவும்.

வரலாறு படித்த மாணவனாக, இந்த நாவலை ஒரு வரலாற்று ஆவணம் என்றே குறிப்பிட்ட விரும்புகிறேன். ஏனெனில் எந்தவொரு ஒரு வரலாற்று நூலுக்கும் (நிகழ்வுக்கும்) இரண்டு விடயங்கள் மிகவும் முக்கியம். காலவரிசை & புவியியல் (Chronology and Geography). இந்த இரண்டும் இந்நாவலில் நேர்த்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் கதை நிகழும் பகுதியின் புவியியல் சார்ந்த தகவல்கள் மிகத் தெளிவு. 

மேலும் இந்த நாவல் நடைபெறும் காலத்தில்தான், ஆங்கிலேயர்களால் இந்தியாவில் “விவசாய வணிகமயமாக்கல் முறை” (commercialisation of agriculture) நடைமுறைப்படுத்தப்பட்டது. அதாவது, உணவுப் பயிர்களை (food crops such as wheat, paddy, ragi and others) மட்டுமே உற்பத்தி செய்து கொண்டிருந்த நாம் பணப்பயிர்களையும் (cash crops such as tea & coffee, rubber , indigo and etc.) உற்பத்தி செய்யத் தொடங்கிய காலகட்டம் அது.

இதுபோன்ற தேயிலை, காப்பி, ரப்பர், இண்டிகோ தோட்டங்கள் & எஸ்டேட்கள், பல்வேறு வகையான ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளால் நம் நாட்டின் மறைநீர் (virtual water) இன்னமும் தொடர்ந்து களவாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘பரதேசி’ திரைப்படம் பற்றி தனது கருத்தை இவ்வாறு எழுத்தாளர் இரா. முருகவேள் பதிவு செய்கிறார்: 

“எனக்கு ‘பரதேசி’ யில் உடன்பாடு கிடையாது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை முழுமையாக அதில் காட்டத் தவறிவிட்டார்கள். அந்த மக்கள் மலைகளுக்குச் செல்ல வேண்டிய நெருக்கடி ஏன் ஏற்பட்டது? அடிமை வாழ்க்கை, அடக்குமுறைகளுக்கு இடையே எப்படி வாழ்ந்தார்கள்? எப்படிச் செத்தார்கள்? அடிமை வியாபாரம் எப்படி நடந்தது? மலைகளின் சுற்றுச்சூழல், மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல், அதில் சாதியின் தாக்கம் என அனைத்தையும் நாவல் அலசியது. ஆனால், வெறுமனே ஒப்பாரி வைத்து அழுதது ‘பரதேசி’.

ஆங்கிலேயர்களால்தான் தலித் மக்களுக்கு நன்மைகள் கிடைத்ததாக ஒரு சாரார் சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறு. சொல்லப்போனால், தலித் மக்களை அதிகம் சுரண்டியதே ஆங்கிலேயர்கள்தான். தலித் மக்களை இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் மலைகளிலும் அணைகளிலும் சுரங்கங்களிலும் வாட்டி வதைத்தது ஏகாதிபத்தியம். இந்திய நிலப்பிரபுக்களின் நண்பனான ஏகாதிபத்தியம் ஒருபோதும் தலித்துகளின் நண்பனாக முடியாது. தங்கள் நாட்டில் கறுப்பினத்தவர்களிடம் திணித்த அதே அடிமைத்தனத்தை இங்கே தலித் மக்களிடம் திணித்தது ஆங்கிலேயே ஏகாதிபத்தியம்.

இதையெல்லாம் படத்தில் தொடவே இல்லை. மிகையுணர்ச்சியும் செயற்கையான நாடகத்தனமும் மட்டுமே போதும் என்று நினைத்துவிட்டார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை நாவல் மூலம் வெளியே கொண்டுவந்த டேனியலை மதம் மாற்றுபவராக அசிங்கப்படுத்தியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மத துவேஷத்தின் உச்சம் இது. மொத்தத்தில் பரதேசி படம் ஏமாற்றமே.” 

“ஆனைமலைக் காடுகளில் தழைத்திருக்கும்

ஆங்கிலேயரின் தேயிலைத் தோட்டங்களில்

அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்..

நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும்

ஒவ்வொரு துளி தேனீரிலும்

கலந்திருக்கிறது எமது உதிரம்..”

தேநீர் பிரியர்களான நம் அனைவரையும் முன்னுரையில் வரும் ஆதவன் தீட்சண்யாவின் இந்தக் கவிதை மட்டுமல்ல, மொத்த நாவலும் உலுக்கிவிடும். மூணார், வால்பாறை, மாஞ்சோலை போன்ற மலை நகரங்களை வெறும் சுற்றுலாத் தளங்களாக மட்டுமே பார்த்து வந்த நம் பார்வையை, இந்த இரத்தம் தோய்ந்த இருண்ட வரலாறு நிச்சயம் மாற்றும்.

நேர்த்தியான இந்தப் படைப்பிற்காக பி. எச். டேனியல் மற்றும் இரா. முருகவேள் ஆகிய இருவருக்கும் நன்றிகள்.. இத்தகைய நாவலை அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டும்.

எரியும் பனிக்காடு.

பி.எச். டேனியல்,

இரா. முருகவேள் (தமிழில்),

பொன்னுலகம் பதிப்பகம்,

விலை : 250 ரூபாய்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close