எல்வின் கண்ட பழங்குடி மக்கள் – நூல் வாசிப்பனுபவம் – அமில்
கட்டுரை | வாசகசாலை

இயல்பிலே மனிதனுக்கு அவனை சுற்றியுள்ள பிணைப்புகள் அதிகம். அவை மிக இயற்கையாகவே அவனுடைய பிறப்பிலிருந்தே பிணைந்து வந்தவை. உதாரணமாக குடும்பம், மொழி, கலாச்சாரம் போன்றவைகள். சுயமான தேடல் ஏற்படாதவரை மனிதன் இவற்றை தாண்டி யோசிப்பது கடினம். தேடல் வந்த பிறகு தான் அவனுள் பயணம் ஆரம்பிக்கும். அந்த அகப்பயணம் அவனை புதிய அந்நியமான பிரதேசங்களுக்கு அழைத்து செல்லும். அது ஒரு நீண்ட பயணம். முன் உணரப்படாத, கணிக்கப்படாத ஒரு அகப்பயணம . இத்தகைய பயணம் ஒருவனை அவன் சார்ந்திருந்த, பழகியிருந்த வாழ்க்கைச் சூழலிலிருந்து முற்றிலும் வேறு ஒன்றிற்கு மாற்றுகிறது. அதற்கு அவன் ஆட்படும் பொழுது அதனால் ஏற்படும் விளைவுகளையும் அவன் சந்திக்க நேரிடுகிறது. அவன் சார்ந்த சமூகத்திலிருந்து அவன் சற்று அந்நியபட்டவனாக கூட உணர நேரிடும். ஆனால், ஆழமாக உண்மையை தேடுபவன், இத்தகைய சிரமங்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன் பயணத்தில் தான் இருப்பான். அப்பயணம் அவனை சீரிய சிந்தனையும் நியாய உணர்வும் உள்ளவனாக அவனை மாற்றும். இதை எழுதுவதற்கான காரணம் புகழ்பெற்ற எல்வின் அவர்களுடைய சுய வரலாற்றை சுருக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்தது தான்.
பிரிட்டனில் பிறந்த எல்வின் அங்கு இலக்கியத்தையும் மதக் கல்வியும் கற்கிறார். அத்தோடு தன்னுடைய கிறிஸ்துவ மதத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு போதகராக செயல்படுகிறார். பின்னர் பல்வேறு சுய தேடல்களுக்கு ஆளான அவர் மானுடவியல் துறையிலும் கல்வி பயில்கிறார். இத்தகைய பின்புலத்தோடு இந்தியாவிற்கு வரும் அவர் காந்தி மீது மிகுந்த பற்று கொள்கிறார். காந்திய கொள்கைகளின் மீது பிடிப்பு கொள்ளும் அவர், காந்தியோடு தங்கி அவருடைய வழிமுறைகளை பின்பற்றுகிறார். அகிம்சை, எளிமையான வாழ்க்கை, எளிய உணவு, தியானம், வாசிப்பு, சுயகட்டுப்பாடு போன்றவற்றிற்கு தன்னை உள்ளாகிறார். அதன் பிறகு அவர் மலைப் பிரதேசங்களில் உள்ள பழங்குடி மக்களோடு தன்னுடைய வாழ்க்கையை கழிக்கிறார். ஒரு மானுடவியலாளர் ஆக, ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையை அவர்களோடு தங்கியே கழிக்கிறார். இந்த ஆராய்ச்சி அவருடைய வாழ்க்கையை முற்றிலும் புதிய கோணத்தில் செலுத்துகிறது. கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் பல்வேறு பழங்குடி மக்களோடு அவர் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார். அவர்களுடைய வாழ்க்கையை மிக ஆழமாகவும் நுணுக்கமாகவும் புரிந்து கொள்கிறார். அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களோடு அவருக்கு நல்ல நட்பு இருந்தது அத்தோடு இந்த ஆய்வு சார்ந்த விஷயத்தில் நேரு அவரை மிகுந்த உற்சாகப்படுத்தினார், அதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்தார்.

பழங்குடியின மக்களின் உரிமைகளை, வாழ்வியலை உயர்த்த வேண்டும் மேம்படுத்த வேண்டும் என்பதற்கான திட்டங்களை வெரியர் எல்வின் மூலம் நிறைவேற்ற முயன்றார். ஆரம்பத்தில் பழங்குடி மக்கள் இவரை ஒரு அந்நியனாக ஒதுக்கினர். அவருக்கு வசிப்பதற்கு வாடகை இடம் தருவதற்கு கூட மறுக்கிறார்கள், பின்னர் ஒருவர் மட்டும் முன்வந்து அவரை ஏற்றுக்கொண்டு அவருக்கான இடத்தை கொடுக்கிறார், பிறகு படிப்படியாக அவர்களோடு பழக பழக அவர்கள் எல்வினை ஏற்றுக்கொள்கிறார்கள். பல்வேறு பழங்குடியின மக்களின் வாழ்க்கையை நேரடியாக கண்டு புரிந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் சொல்லக்கூடிய கண்டுபிடிப்புகள் பல நமக்கு புதுமையானதாக இருக்கும். உதாரணமாக, ஒருகுறிப்பிட்ட பழங்குடியின மக்களிடம் சுதந்திரமான பாலுறவு நிகழ்கிறது. திருமணம் போன்ற எத்தகைய வழிமுறைகளும் அவர்களிடம் இல்லை. சிறுவர் சிறுமியர்கள் கூட இத்தகைய பாலுறவுக்கு மிக இளவயதிலேயே ஆட்படுகிறார்கள். ஆனால் அது வன்முறையாகவும் கட்டாயப்படுத்துதல்களாக இல்லை. மிக இயல்பான ஒன்றாக அவர்கள் வாழ்வில் உள்ளது. சில மதபிரச்சாரகர்கள் அவர்களை அவர்களின் இயல்புக்கு மாறாக கட்டுப்படுத்த முயன்றதை, அவர்களை நாகரீகப் படுத்துவதற்கு முயன்றதையும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் பற்றி எல்வின் குறிப்பிடுகிறார். ஆடை சார்ந்த விஷயத்தில் பழங்குடியினரை நாகரீகப்படுத்த முயல்வதை பற்றிக் குறிப்பிடும் பொழுது, ” நாகரீகம் என்பது ஆடை சார்ந்த விஷயமல்ல , மாறாக அது மனமுதிர்ச்சி சார்ந்தது ” என்பதாக கூறுவார். சில அரசாங்க அலுவலர்கள் பழங்குடியினர்கள் அவர்களின் இயற்கையான தொழிலை விட்டு அப்புறப்படுத்தி விவசாய நிலத்தில் வேலை செய்யச் சொல்லி நிர்பந்திக்க, அதனால் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள் என்று கூறும் எல்வினின் வார்த்தைகள், பழங்குடிகள் மீது அவருக்கு உள்ள ஆழமான புரிதலை காட்டுகிறது.
இந்நூலில் அவர் பல்வேறு நாடுகளுக்கும் நாடுகளில் அவர் சந்தித்த பழங்குடியின மக்களின் வாழ்க்கை பற்றியும் தொழில் சார்ந்த அவருடைய அனுபவத்தை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். இலக்கியத்தை கல்லூரியில் கற்றிருக்கும் எல்வின், பின்னரும் இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு உள்ளவராகவே இருந்திருக்கிறார். ஓரிடத்தில், காட்டில் உள்ள அலுவலகத்தில் இருக்கும் பொழுது, ஷேக்ஸ்பியரின் கிங் லியரிளிருந்து ஒரு மேற்கோள் காட்டுவதற்காக ஒரு பணியாளரை ஊருக்கு சென்று நூலகத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் தொகுப்பை எடுத்து வர அனுப்புகிறார். நூலகர் பணி நேரத்தில் நாடகங்களை வாசிக்கக் கூடாது என்று அறிவுரை கூறும் பொழுது அந்த பணியாளர் அந்நூலை எல்வின் தான் கொண்டு வரச் சொன்னார் என்று சொல்லும்பொழுது, உடனே நூலகர் மறுவார்தை கூறாமல் அந்நூலை எடுத்துக் கொடுக்கிறார். இலக்கியத்தின் மீது அவருக்கு உள்ள ஈடுபாட்டை, பல இடங்களில் நாம் உணரலாம். கவிதைகள் மீது அவருக்கு மிகுந்த பற்று இருந்திருக்கிறது. இலக்கியத்தையும் கவிதையும் வாசிக்க வாசிக்க மனிதர்களின் இயல்பையும் தன்மையையும் பற்றிய ஆழமான புரிதலை அது தனக்கு ஏற்படுத்துகிறது என்று ஓரிடத்தில் எல்வின் குறிப்பிடுகிறார்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், புத்தகங்கள் வாசிக்காத பழங்குடியின மக்களிடம் இயற்கையாகவே அவர்களுடைய பேச்சில் கவித்துவம் தென்படுகிறது என்கிறார். பல சொற்றொடர்கள் கவித்துவ உவமைகளாகவும், உருவகங்களாகவும் இருப்பதை மிக ஆச்சரியத்தோடு குறிப்பிடுகிறார். தொடர்ந்து பழங்குடியின மக்கள் வாழ்க்கை பற்றி நிறைய நூல்களை எழுதும் எல்வின், வாய்மொழி மரபின் மூலம் அவர்களிடம் காணப்படுகின்ற பல்வேறு நாட்டுப்புற கதைகளையும், ஐதீகங்களையும், வாழ்கை முறைகளையும் பெரும் தொகுப்புகளாக உருவாக்குகிறார். வசதியான ஒரு ஆங்கிலேய குடும்பத்தில் பிறந்த எல்வின் அவருடைய வாழ்க்கை தேடலின் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை அடைகிறார். அத்தோடு அவர்களில் ஒருவராக கலந்து கடைசிவரை வாழ்கிறார். பழங்குடியின பெண்களில் ஒரு பெண்ணை திருமணம் செய்து குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறார்.
பழங்குடிகளின் மீதான நாகரீகமானவர்களின் அத்துமீறல்களை கடைசிவரை எதிர்த்து அவர்களின் உரிமைக்கான ஒரு குரலாக கடைசிவரை ஒலித்தார். எல்விணை பற்றி வாசிக்கும் போது, லாரன்ஸ் ஆப் அரேபியா என்ற உலகப் புகழ்பெற்ற திரைப்படத்தை பற்றிய ஞாபகம் எழுந்தது. அப்படம் லாரன்ஸ் என்ற ஆங்கிலேய அதிகாரியை பற்றிய படம். அது ஒரு உண்மை கதை. ஆங்கிலேயன் ஆக பிறந்த ஒரு மனிதன் பாலைவன அரேபிய மக்களோடு ஒன்றாகி அவர்களின் உரிமைகளுக்காக போராடி அவர்களில் ஒருவராக கலந்து போகும் அற்புதத்தை காட்டிய படம். லாரன்சை போலவே ஆங்கிலேயராக பிறந்து, இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள பழங்குடியின மக்களோடு வாழ்ந்து அவர்களில் ஒருவராக கலந்து போன ஒரு அற்புதமான மனிதர் தான் வெரியர் எல்வின்.
******