சிறுகதைகள்
Trending

ஏலி 222- மித்ரா அழகுவேல்

அவனியெங்கும் இந்நாளைக் கொண்டாடும் ஆர்வத்தோடு மக்கள் விடியலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 1111 வருடங்கள் கழித்து இப்படி ஒரு மகத்தான நாளைக் காணப்போகும் உற்சாகமும் தாளவியலா ஆர்வமும் ஒவ்வொருவர் உடல்மொழியிலும் பொங்கிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் மக்கள் இந்நாளைக் கொண்டாட சூரியன் வருகைக்காகக்  காத்திருக்க, மறுபுறம் எப்போது விடியுமென அதே நாளுக்காக உறங்காமல் விண்ணோக்கி நிலவைப் பார்த்தபடி தவமிருக்கின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் ஒரு கொண்டாட்டத்திற்கு தயாராகிக் காத்திருக்கிறது

1

நாள்; 22.2.2222 

நேரம்; காலை 07.00

இடம்; மதுரை 

சிதிலமடைந்த ஓர் கோவிலின்  வாயிலிலிருந்த வெப்பமேற்று மையத்தில் தங்கள் உடலின் வெப்பநிலையை சீர் செய்யவும், செய்தித்தாள் வாசிக்கவும் மக்கள் கூடியிருக்கின்றனர். வெளிச்சம் வரும் வரையில்தான் இவர்களின் ஆட்டம் பாட்டமெல்லாம். மெதுவாக ஆதவன் மேலெழத் தொடங்கி விட்டால், ஓட்டமாக ஓடி வண்டிகளுக்குள்ளேயோ, வீடுகளிற்குள்ளேயோ அலுவலகங்களிற்குள்ளேயோ அடைக்கலம் பெற்று விடுவர். சூரியக் கதிர்களை நேருக்கு நேர் மேனியில் வாங்கும் மானுடனொருவன் இப்போதைக்கு இப்புவியில் இல்லை

சீக்கிரம் அனுப்பி விட்ற வழியப் பாருங்க சார். வெளிச்சம் வந்துரப் போகுது. நான் வேற வீட்டுக்கு ரொம்ப தூரம் போகனும். அப்றம் கருகிப் போயிருவேன்.”

பொறுங்க சார். சூரியன் வர இன்னும் நாழியாவும். இப்போதான 7 மணி ஆகுது, 10 மணிக்கு மேல தான் இன்னைக்கு சூர்யோதயம்னு நேத்தே சொல்லிட்டாளே..”

அவன் சொல்றது என்னைக்கு சார் நடந்துருக்கு? 10 மணினு சொன்னா 12 மணிக்கு வரும். 12 மணின்னு சொன்னா 6 மணிக்கே வந்துருதே..”

செய்தித்தாள்கள் டிஜிட்டலில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. காலை சரியாக 7 மணிக்கு சப்ஸ்கிரைபர்கள் கைபேசிக்கு செய்தித்தாள்கள் அனுப்பி வைக்கப்படும். சப்ஸ்கிரைப் செய்யாதவர்களுக்கென இது மாதிரியான கடைகளில் பெரிய திரையில் ஒளிபரப்புவார்கள்

உலகெங்கும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள் இன்று வந்தே விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் நாம் சூரியோதயத்தை எதிர்பார்க்கலாம். இன்றைய நாளின் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை பல்வேறு தனியார்  நிறுவனங்களும் அரசும் இணைந்து செய்திருக்கின்றன. இன்று ஒரு நாள் மாத்திரைகளை விடுத்து அனைவருக்கும் ஒரு நேரம் உணவுகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.  

இருந்தாலும், அனைத்துக் கொண்டாட்டங்களையும் சூரிய ஒளி படாத இடங்களிலேயே வைத்துக் கொள்ளுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும், கடல்நீர் மட்டம் உயர வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. ” என நீளமான செய்தி அறிக்கை திரையில் விரிந்து கொண்டிருக்கிறது

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அது திடீரென நழுவி கீழே விழத் தொடங்கியது.

2

நாள்; 21.2.2222 

நேரம்; இரவு, 09.30

இடம்; வாஷிங்டன் 

ரிச்சர்ட்ஸ் உங்ககிட்ட பேசணும்னு சொல்றாரு. ஏற்கனவே நிறைய முறை முயற்சி பண்ணியும் நீங்க பேசவே இல்லயாம். “

ம்ம்ம்…”

எனக்கு என்னமோ அவரு சொல்றத நாம கொஞ்சம் கவனத்துல எடுத்துக்கலாம்னு தோணுது பில். அவரு நமக்கு சீனியர். அவர் வார்த்தையை அப்டியே ஒதுக்கிட வேண்டாம்னு நினைக்குறேன். அவர் சொல்ற மாதிரி நடக்க 10% வாய்ப்பு இருந்தாக் கூட அது நமக்குதான் ரிஸ்க்.”

எதுக்கு வாய்ப்பிருக்குனு சொல்ற ஹாரி? பூமி சுத்தாமப் போறதுக்கா? இல்ல, இன்னியோட உலகமே அழிஞ்சு போறதுக்கா? இதெல்லாம் நடக்குற விஷயமா? கொஞ்சம் சென்ஸிபிளா யோசி. நாம 24 மணி நேரமும் ஆராய்ச்சில இருக்கோம். சூரியன் எப்போ உதிக்குது, எப்போ மறையுதுங்குறது தொடங்கி எல்லாத்தையும் நாம கணிச்சுட்டு இருக்கோம். நம்மளோட தொழில்நுட்பம் பழைய ஆட்களால் புரிஞ்சுக்க முடியாதது ஹாரி. அவுங்களுக்கு உக்காந்து புரிய வைக்கவும் நமக்கு நேரமில்ல. நாளைக்கு ஒரு ஸ்பெஷல் டே. அதுக்கு ரெடி ஆகு.”

எல்லாத்தையும் நாம கணிக்குறது சரி. ஆனா அது எல்லா நேரத்துலயும் சரியா நடக்குறதில்ல பில். அதை நாம ஒத்துக்கனும்.”

அதைத்தான் சரி பண்ண முயற்சி பண்ணிட்ருக்கோம். அறிவியலால முடியாதது எதுவுமே இல்ல..அவருக்கு சப்போர்ட் பண்ணிட்டு என்கிட்ட வராத ஹாரி. அப்றம் எனக்கு உன்கிட்ட பேசவும் நேரமில்லாம போயிரும்.”

சாரி பில்.” 

வெளியே தொலைக்காட்சியில் ரிச்சர்ட்ஸின் நேர்காணல் ஓடிக் கொண்டிருக்கிறது.

நீங்க சொல்ற விஷயங்கள் நம்பும்படியாவே இல்ல மிஸ்டர் ரிச்சர்ட்ஸ்…”

கண்டிப்பா இருக்காது.”

இப்போ இருக்குற ஆய்வாளர்கள் இது பத்தி என்ன சொல்றாங்க? அவுங்ககிட்ட பேசுனீங்களா?”

ஹா ஹா அவுங்க என்கிட்ட பேசவே விரும்பல. “

அப்போ நீங்க நாளைக்கு பூமி தன்னோட சுழற்சிய கொஞ்ச நேரம் நிறுத்திட்டு ஓய்வெடுக்கப் போகுதுனு சொல்றீங்களா?”

நாளைக்கானு எனக்குத் தெரியாது. ஆனா நாளைல இருந்து எப்போவேணாலும் அந்த சம்பவம் நடக்கும்.”

எப்டி இவ்வளவு உறுதியா சொல்றீங்க?”

“200 வருஷத்துக்கு முன்னாடி இந்த பூமி இருந்த நிலைமையே வேற. அப்போ ஒரு மணி நேரம் அப்டிங்குறது 60 நிமிஷமா இருந்தது. இப்ப கடலோரப் பகுதிகளா இருக்குற எல்லா இடங்களும் அப்போ கடலில் இருந்து பல மைல்கள் தூரத்தில் இருந்தன. அப்போல்லாம் மழை பத்தி தெரிஞ்சுக்கத்தான் வானிலை செய்தி கேப்பாங்க. சூரிய உதயத்தைப் பத்தி தெரிஞ்சுக்க இல்ல. நீங்க பெறந்ததுக்கப்றம் மழையைப் பாத்திருக்கீங்களா?”

இதெல்லாம் பாடப் புத்தகத்திலேயே படிச்சதுதான் மிஸ்டர். ரிச்சர்ட்ஸ்.”

அப்போ இது மாதிரி 200 வருஷம் கழிச்சு பூமி இந்த நிலமைல இருக்கும்னு யாரும் சொல்லி இருந்தாலும் அதை யாரும் நம்பி இருக்க மாட்டாங்க.”

அதுக்கு ரெண்டு நூற்றாண்டுகள் இடைவெளி இருக்கு. நீங்க சொல்றது நாளைக்கு. ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு. எதை வச்சு இவ்ளோ உறுதியா சொல்றீங்க?”

முன்னாடி எல்லாம் வானிலை ஆய்வாளர்கள் சொல்ற கணிப்புகள் அப்டியே நடந்துட்டு இருந்தது. இப்போ அப்டி நடக்குதா? எப்பயும் எல்லாத்துக்கும் ஆசான் இயற்கைதான். அதை அறிவியலால ஜெயிக்கவே முடியாது. அறிவியல் அதை ஜெயிக்க நெனைக்க நெனைக்க இயற்கை இன்னும் உக்கிரமாகும். அதை நீங்க வேடிக்கைதான் பாக்க முடியுமே தவிர கட்டுப்படுத்த முடியாது. இயற்கை இப்போ கொதிநிலையில் இருக்கு. எந்த நேரமும் அது தன்னோட கடைசி ருத்ர தாண்டவத்தை ஆடும். அந்த நாள் நெருங்கிருச்சுனுதான் நான் சொல்றேன். உங்க கணிப்புகள் தொடர்ந்து பொய்க்குறது எனக்கு அதைத்தான் உணர்த்துது.”

நன்றி மிஸ்டர் ரிச்சர்ட்ஸ்இப்போ உலகின் மூத்த விண்ணியல் ஆய்வாளர் ரிச்சர்ட்ஸ் ஒரு முக்கியமான அபாய எச்சரிக்கையைக் கொடுத்துருக்காரு. இதுக்கு சமகால ஆய்வாளர்கள் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்.”

ஹாரி அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் சென்று கொண்டிருக்கிறான்.

3

எங்கிருந்து விழுந்ததென்றே தெரியாமல் ஏதோ ஒன்று வந்து விழுந்தது. விழுந்த நொடியில் நிலத்தில் 4 அடி பள்ளம் விழுந்தது. செய்தி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போய் பள்ளத்திற்குள் எட்டிப் பார்க்கின்றனர். சரியாக ஒன்றே முக்கால் அடியில் ஒரு உருவம். துள்ளிக் குதித்து எழுந்து மேலும் கீழும் தவ்விக் கொண்டிருக்கிறது. பார்த்தவர்கள் கூச்சலிட்டுக் கொண்டே பின்னோக்கி நகர்கின்றனர். சிலர் காவல் துறைக்கு தகவல் கொடுக்க அலைபேசியை எடுக்கின்றனர். உள்ளிருந்து அந்த இளமஞ்சள் உருவம், உதவி கேட்டு கூக்குரலிடுகிறது.

ஏன் எல்லாரும் ஓடுறீங்க? என்னை மேல தூக்கி விடுங்க ப்ளீஸ். என்னைத் தேடிட்டு வருவாங்க இப்போ

அது தங்கள் மொழியில் பேசுவதைக் கேட்ட மக்கள் குழப்பத்துடன் மெதுவாக உள்ளே சென்று எட்டிப் பார்க்கின்றனர். குட்டையாக இளமஞ்சளும் நீலமும் கலந்த நிறத்தில், மூன்று விரல்களைக் கொண்டு கைகளும் கால்களுமாக ஒரு உருவம்

ஒருவர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்கிறார், “யாரு நீ? ஏன் வித்யாசமா இருக்க?”

யாருன்னா. நானும் உங்கள மாதிரி மனுசன்தான் வானத்துல இருந்து விழுந்துட்டேன்.” என்று இரைந்தது அது.

என்னது வானத்துலருந்து விழுந்தியா?”, ” வானத்துலருந்து விழுந்துச்சாமே..” என ஆளாளுக்கு ஒன்றைப் பேசத் தொடங்குகின்றனர்

அதற்குள் காவல்துறையினர் வந்து அதனைக் கயிறு கட்டி இழுத்து, ஆளுக்கொரு கையைப் பிடித்து தூக்கிச் செல்கின்றனர். வானத்திலிருந்து வந்தேன் எனச் சொன்னதைக் கேள்விப்பட்ட காவல்துறையினர் விண்வெளி ஆய்வு மையத்தில் தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். இதற்கிடையில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் ஒரு மஞ்சள் உருவத்தை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அந்த உருவத்தை வேற்று உலகத்து விருந்தாளிகளாக பாவித்த காவல்துறையினர் அதை ஏலி என்றழைத்து அமரச் சொல்கின்றனர்.

உட்காருங்க ஏலி.”

உட்காருறதா அப்டினா என்ன? எனக்கு அதெல்லாம் தெரியாது. ஆமா ஏலினா என்ன?”

சரி உங்க பேர் என்ன?”

எனக்கு பேர் எல்லாம் இல்லைங்கஎனக் கடுப்பாக பதில் சொல்கிறது அவ்வுருவம்.

அப்றம் உங்களை எப்படி கூப்டுவாங்க ?”

“222 னு

‘ஆகா என்னாவொரு கோ இன்சிடென்ஸ்’ என தங்களுக்குள் பார்த்துக் கொண்ட அதிகாரிகள், ” சரி உங்க கிரகம் பேர் என்ன?”

யோவ் லூசா நீங்க எல்லாம்..நானும் உங்கள மாதிரி மனுஷன்தான்யா.” காவல் துறை அதிகாரிகள் அதிர்ந்த அதே நேரத்தில்… 

தமிழ் பேசும் ஏலியன். கிரகங்கள் தாண்டி பரவியிருக்கும் ஒரே மொழி. எங்கள் தங்கத் தாய்மொழிபோன்ற கேப்சன்களோடு பள்ளத்திற்குள் ஏலி உதவி கேட்டுக் கதறிய காணொளி பரவிக் கொண்டிருக்கிறது

வானியல் நிபுணர்கள் மதுரைக்கு வந்து இறங்குகின்றனர். நேரம் காலை 10.40. 

4

ரிச்சர்ட்ஸ் தன் நேர்காணலை முடித்து விட்டுக் கிளம்ப, அவர்கள் பில்லை தொலைபேசி வழியே தொடர்பு கொள்கின்றனர்

இந்த நேரத்திலும் எங்களுடன் பேச நேரம் ஒதுக்கியதற்கு நன்றி மிஸ்டர் பில்.”

நேரம் ஒதுக்கலைனா விட்ரப் போறீங்களா?”

மூத்த விண்வெளி ஆய்வாளரான மிஸ்டர்.ரிச்சர்ட்ஸ், நாளைக்கு உலகம் அழியப் போகுதுனு சொல்றாரே..!”

பொறுங்க. அவர் நாளைக்கு அழிஞ்சுரும்னு சொல்லலநாளையில் இருந்து அழியத் தொடங்கும்னுதான் சொல்லிருக்காரு. இங்க இத்தனை பேர் விண்வெளியோட சின்னச் சின்ன அசைவுகளையும் கண்காணிச்சுட்டு இருக்கோம். அப்டியெல்லாம் திடீர்னு உலகம் வெடிச்சுறாது. இது ஒன்னும் புராணக் கதைகள் கிடையாது.   மீடியா ஹைப்க்காக எதையாவது பேசி மக்கள் மத்தில பயத்தை உண்டாக்க வேண்டாம்னு கேட்டுக்குறேன்.”

இப்போ இந்தியால இருந்து எங்களுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்குஆயிரம் வருடங்களுக்கு முன்னாடி எழுதப்பட்ட குறிப்புகளில் நாளைக்கு ஒரு பேரழிவை பூமி சந்திக்கும்னு இருக்கிறதா சொல்றாங்க. இதுவும் பொய்னுதான்னு சொல்றீங்களா?”

புல் ஷிட்…. நாளைக்கு சூரியன் எப்போ வரும்னே சரியா கணிக்க முடியல.. ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி சொல்லிருக்காங்களாம். அப்போ மொத இந்தியன்ஸ்க்கு எழுத படிக்க தெரியுமா? என் நேரத்தை வீணாக்காதீங்க மிஸ்டர். வாடேவர். பாய்

பில் கடுப்புடன் கால் கட் செய்த சத்தத்தை தொலைக்காட்சியில் பார்த்து மென்மையாக அதே நேரத்தில் விரக்தியாக சிரிக்கிறார் ரிச்சர்ட்ஸ்.

பில், ரெண்டு முக்கியமான விஷயம். ரெண்டுமே இந்தியால இருந்து.”

என்ன பஞ்சாங்கத்துல வேற ஏதும் சொல்லிருக்காங்களா…. ?”

இப்போ அங்க மணி மதியம் 12. இன்னும் சூரியன் உதிக்கல.”

இது யூசுவல்தான உதிச்சுரும் கொஞ்ச நேரத்துல

இல்ல பில்அதுக்கான அறிகுறிகளே இன்னும் தெரிய ஆரம்பிக்கல. இந்நேரத்துக்கு கொஞ்சமாவது வெளிச்சம் வந்திருக்கனும்.”

இன்னொரு விஷயம் என்ன?”

அங்க வானத்துலருந்து ஒரு உருவம் வந்து விழுந்திருக்கு. அதோட ஃபோட்டோஸ் இப்போ வைரல் ஆகிட்ருக்கு. அதுகிட்ட விசாரணை நடந்துட்டு இருக்காம்.”

வாட்? வானத்துல இருந்து விழுந்ததா? ஏலியனா ஹாரி? போட்டோஸ் காமி.”

புகைப்படங்களைப் பார்த்த பில் ஆச்சர்யத்தில் விழிகளை அகலப்படுத்துகிறான். “மை குட்னெஸ்ஏலியன்தான் போலயே..”

இல்ல பில். அது நல்லா தமிழ் பேசுதுமனுஷன்தான்னு சொல்லுதாம்.”

சரி, நீ அவுங்கள வீடியோ கால்ல பிடிக்கப் பாருஎல்லாத் தகவலையும் அவுங்க வாங்குறதுக்கு முன்னாடி நம்ம கிட்ட பேச அனுமதிக்க மாட்டாங்க. ஆனா முயற்சி பண்ணு. நான் இந்த சூரியன் இடியட் ஏன் இன்னும் வரலன்னு பாக்குறேன்.”

                                                               5

அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு

வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு

படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே..!!

காலம் எவ்வளவோ மாறிருச்சுகோவில் சாமியெல்லாம் வழக்கொழிஞ்சு போச்சு. மத்த வீடு பொண்ணுங்க  எல்லாம் நிம்மதியா இருக்காங்க. எனக்கு ஒரு விடிவு காலம் வர மாட்டேங்குது. இந்தக் குடும்பம் இன்னும் பழைய பஞ்சாங்கமாவே இருக்கேதெரிஞ்சிருந்தா இங்க வந்திருக்கவே மாட்டேனே. ஏய் தாத்தாஎன்ன பல்லாண்டு பத்தாண்டுனு கத்திட்டு கெடக்கதெனைக்கும் இதே வேலையா போச்சு உனக்கு.”

என்னாது…?”

காது எழவும் கேக்காது. ச்சை. “

பசிக்குதுடியம்மா அந்த மாத்தரைய தாரயா ?” 

ஆமா பசிச்சுரும்பல்லாண்டு பாட வேண்டியது, பசிக்குதுனு கேக்க வேண்டியது, இதே பொழப்பு.

இன்னைக்கு மாத்திரை வேண்டாம். சோறு திங்கலாம். கொஞ்சம் இருங்கஎன கோவிந்தனின் காதருகில் சென்று  கத்தினாள் தாரா.

எது சோறா? சோறு ஏது?”

அது வந்து….. இன்னைக்கு ஒரு பண்டிகை. அதான் எல்லாருக்கும் சோறு தராங்க.”

பண்டிகையா என்னாது தீபாளியா?”

ஆமா தீபாவளி…  இன்னும் ஆதிகாலத்துலயே கெடங்கஅதெல்லாம் இல்ல தாத்தா. இன்னைக்கு மாசம் தேதி வருஷம் எல்லாம் ஒரே நம்பர்ல வந்திருக்கு. ஆயிரம் வருஷத்துக்கு ஒருவாட்டிதான் வருமாம். அதான் இன்னைக்கு பண்டிகை மாதிரி.”

தாரா சொன்னதை சிறிது நேரம் கழித்தே உள்வாங்கிக்கொண்ட கோவிந்தன், பதற்றமாக படுக்கையிலிருந்து எழுந்து தடுமாறி கீழே விழுகிறார்.

தாத்தா ஏன் இப்டி படுத்துறீங்க? அமைதியாதான் இருங்களேன்.” என்றவாறே அவரைக் கட்டிலில் அமரவைத்து கைகால்களை நீவி விடுகிறாள் தாரா

அதை கவனிக்காத கோவிந்தன்…”என்ன தேதி, என்ன தேதி, இன்னைக்கு என்ன தேதி?” எனப் பதறுகிறார்.

இருபத்தி ரெண்டுதான் தாத்தா… 22.2.2222.”

நாராயாணாபெருமாளேஎந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில் அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை….”

தாத்தா…. இப்போ எதுக்கு இதை ஆரம்பிக்குறீங்க? நேரங்காலம் இல்லாம…” சலித்துக்கொள்கிறாள் தாராஅது துல்லியமாக கோவிந்தனின் காதில் விழுகிறது.

நேரங்காலம் வந்திடுச்சுடியம்மா…. இது என் பகவான் இப்பாவப்புவியில் அவதரிக்கப் போகும் நாள். இந்நேரம் அவதரித்திருக்கலாம். இவ்வுலகம் அவனின் ஒற்றைச்சுட்டு விரல் நுனியில் அழியப் போகிறது. இதற்குத்தான் காத்திருந்தேன். இதற்குத்தான் தவமிருந்தேன்.” இதுவரை தாரா கண்டிராத ஒரு கணீர் துல்லியம் அவர் குரலில் வெளிப்பட்டது.

கதவைத் திறந்து வை.என ஆணையிட்டார்

தாரா மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல கதவைத் திறக்க, திடுதிடுவென ஓடி வந்து வீட்டிற்குள் விழுகிறது ஏலி. வீரென்று அலறுகிறாள் தாரா. நேரம் மதியம் 12.26.

6

பில் பில் ….. ” அலறியவாறே ஓடி வருகிறான் ஹாரி.

ஹாரி நானே உன்ன கூப்பிட நெனைச்சேன்..”

அந்த ஏலி ஓடிப் போயிருச்சாம். தேடிட்டு இருக்காங்க. அப்றம் அங்க இன்னும் சூரியன் வரலயாம்.”

அதை விடு ஹாரி…  நாம ரொம்ப ஆபத்தான ஒரு சூழல்ல இருக்கோம். பூமி ரொட்டேட் ஆகுற ஸ்பீட் பாதியா கொறஞ்சுருக்கு. என்னால நம்பவே முடியல. இது எப்டி நடந்துச்சு?”

அதிர்ந்த ஹாரி அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ” இதைத்தான ரிச்சர்ட்ஸ் சொல்லிட்டு இருந்தாரு…” என்கிறான்.

இப்போ என்னைய வார நேரமில்லை ஹாரி. நாம ஏதாச்சும் பண்ணனும். உடனே மீடியாக்கு தெரியாம எல்லா ரிசர்ச் சென்டர்ஸ்க்கும் அலெர்ட் கொடுத்துரு. இப்டியே போச்சுன்னா நமக்கு இன்னைக்கு ராத்திரி விடிய 2 நாள் ஆகும்.”

சரி எனத் தலையாட்டி ஹாரி கிளம்புகிறான்.

அப்றம் ஹாரி….”

என்ன என்பது போல அவன் திரும்ப, ” நான் ரிச்சர்ட்ஸை பாக்கணும் ஏற்பாடு பண்ணு.” எனக்கூறி விட்டு ஹாரியை எதிர்கொள்ளாமல் வெடுக்கெனத் திரும்பி தன் வேலைகளைத் தொடர்கிறான் பில்

மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமி இப்போது 550 மைல் வேகத்தில் சோம்பேறியாக நகர்ந்து கொண்டிருக்கிறது. பூமியின் சுழற்சி வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருவது அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் ஒரே நாளில் பாதியாகக் குறைந்திருப்பது குறித்து பில் குழம்பிப் போய் அதிர்ச்சி ஆகிறான். பெரும் பயம் அவனைப் பீடிக்கிறது.

சற்று நேரத்தில் திரும்பி வரும் ஹாரி, “ரிச்சர்ட்ஸ் இந்தியா கிளம்பிக் கொண்டிருக்கிறாராம் பில். நம்மை வேண்டுமானால் அவர் வீட்டிற்கு வந்து சந்திக்கச் சொல்கிறார்.”

‘எல்லாம் நேரம்’ என்பது போல் முகத்தை வைத்துக் கொண்ட பில், ” சரி போலாம் கிளம்பு.என்கிறான்

இங்க நடந்தது எதும் சொல்லிடலையே…”

இல்ல பில். சும்மா சந்திக்க விரும்புறதாதான் சொன்னேன். “

நல்லது.” 

7

மதுரையில் இறங்கிய விண்வெளி ஆய்வாளர்கள் காவல் நிலையத்தை அடைந்தபோது மணி பதினொன்றைத் தொட்டிருந்தது. உடன் மருத்துவர்களும் வந்து சேர்ந்தனர்.

ஏலி அங்குமிங்கும் உலாத்திக் கொண்டிருந்தது. யார் என்ன கேட்டாலும் கடுப்படித்தபடி பதில் சொன்னது. அது என்ன உயிரினம், எப்போது என்ன செய்யும் என்று தெரியாததால் அதை யாரும் நெருங்காமல் அதன் போக்கில் விட்டிருக்கின்றனர். அவர்கள் தன்னையும் மனிதன் என நம்பாததே ஏலிக்கு பெருத்த அவமானத்தையும் கோபத்தையும் உண்டு பண்ணி விட்டிருக்கிறது

உள்ளே வந்த ஆய்வாளர்களுக்கு காவல்துறையினர் ஏலி இருக்கும் திசையை கை காட்டினர்.

சார் உக்கார சொன்னா அப்டினா என்னனு கேக்குது சார். என்ன கேட்டாலும் திமிரா பதில் சொல்லுது. கடிச்சுருமோனு பயமா இருக்கு சார். அது பேர் 222 ஆம்

விடுங்க நாங்க பேசிக்குறோம்.” என்று ஏலியிடம் செல்லும் ஆய்வாளர்கள், “ஹே 222…எப்டி இருக்கீங்க ?” என்றபடி கை நீட்டுகின்றனர்.

இப்போ என்ன, நானும் கை கொடுக்கணுமா ?”

இல்ல விருப்பமில்லைனா விடுங்க. உங்க இஷ்டம்தான். “

அப்போ எனக்கு விருப்பமில்ல.”

ஏன் கோபமா இருக்கீங்க?”

நான் யாரு?”

அதை நீங்கதான் சொல்லனும்.”

பாத்தீங்களா அப்போ நீங்களும் என்னைய மனுஷன்னு நம்பல. நீங்க நம்புங்க நம்பாமப் போங்க. அதைப்பத்தி எனக்கு கவலையில்ல. என்னைக் கொண்டு போய் நான் விழுந்த இடத்துல விடுங்க. என்னைத் தேடிட்டு வருவாங்க.”

எங்கேருந்து தேடிட்டு வருவாங்க.”

எங்க விண்கலன்ல இருந்து.”

விண்கலனா?”

ஆமாநாங்க ஒரு ஆய்வுக்காக வானத்துல சுத்திட்ருந்தோம். நான் தெரியாம கீழ விழுந்துட்டேன்.”

எந்த கிரகம் உங்களை ஆய்வுக்காக அனுப்பினாங்க?”

டேய், அவ்ளோதான்டா உங்களுக்கு மரியாதைபூமியில இருந்துதான்டா போய் தொலஞ்சேன். உங்க லாங்க்வேஜ் பேசுறேனே அது கூடவா தெரியல?” எனக் கத்தியது ஏலி

சரி, இங்க வாங்க ஒரு மெடிக்கல் செக்கப் செஞ்சுக்கலாம்.”

எனக்கெதுக்கு மெடிக்கல் செக்கப் ? ஒழுங்கா ஓடிப் போயிருங்க. வர கோவத்துக்கு கடிச்சுக் கொதறிருவேன்.”

வந்தவர்கள் தங்களுக்குள் கூடிப் பேசத் தொடங்க, ஏலி அங்கிருந்த ஒரு சுவற்றில் சாய்ந்து வானத்திலிருந்து தன்னைத் தேடி யாரேனும் வருகிறார்களா எனப் பார்க்கிறது.

இதை நல்லா ட்ரெயின் பண்ணிருக்காங்க. யாரு கேட்டாலும் எதும் சொல்லக் கூடாதுனு. தம்மாத்தூண்டு இருந்துகிட்டு நமக்கிட்டயே மனுஷன் மனுஷன்னு சொல்லுது. இதுகிட்ட நேரடியா பேசுனா வேலைக்காகாது. அது ஒரு எடத்துல நிக்குற நேரமாப் பாத்து இன்ஜெக்ஷன ஷூட் பண்ணுங்க. மயங்குனதும் மெடிக்கல் டெஸ்ட் எடுத்தரலாம்.”

எல்லாம் சரி ஆனா தமிழ் பேசுதே எப்டி?”

ஏலியன்சோட டிசைன் பத்தி நமக்கு இன்னும் எதுவும் தெரியாது. எனக்குத் தெரிஞ்சு யாரு பேசுறாங்களோ அவுங்களோட அலைவரிசையை வச்சு அவுங்க மொழியை அடாப்ட் பண்ணி இதுவும் பேசுற மாதிரி இருக்கலாம். இல்லைனா ஏற்கனவே நம்மளைப் பத்தி ஆய்வுகளைப் பண்ணி நம்ம மொழிகளை ஃபீட் பண்ணி அனுப்பிருப்பாங்கஇது உண்மைனா அவுங்க கிரகத்து ஆட்கள் நம்மளை விட அறிவியலில் பலமடங்கு முன்னேற்றமடைஞ்சவங்களா இருப்பாங்க.”

ஏலி ஒரு ஓரமாக சாய்ந்து நின்று கொண்டிருப்பதைக் கண்ட மருத்துவர் குழுவினர் மயக்க ஊசியை ஷூட் செய்யத் தயாராகின்றனர். ஊசி வெளியேறிய 40 நொடிகளில் ஏலியின் தோள் மீது பட்டுத் தெறிக்கிறது. அந்த உராய்வினால் தீப்பொறி பறக்க, ஏலி ஒரு நொடிக்கும் மற்றொரு நொடிக்கும் இடைப்பட்ட ஒற்றை நேனோ நொடியில் ஜிவ்வென விரிந்து சுருங்குகிறது. ஊசி வந்த திசையைத் திரும்பிப் பார்த்த ஏலிக்கு இவர்கள் துப்பாக்கியுடன் நிற்பது தெரிய, இதற்கு மேல் இவர்களுக்கு மரியாதை இல்லை என சுவற்றில் ஏறி வெளியே குதிக்கிறது.  

இன்னும் சூரியன் வரவில்லை என்பதால் சாலையில் ஆங்காங்கே மக்கள் தலைகள் தென்படுகின்றன. இன்னும் சிலர் முன்னெச்சரிக்கையாக 10 மணிக்கே வீடுகளுக்குள் முடங்கி விட்டிருந்தனர். ஓடும் உருவத்தை மற்றவர்கள் பார்க்க முடியாத வேகத்தில் ஏலி ஓடிக் கொண்டிருந்தது. எங்கு செல்கிறோம், எப்படி இத்தனை வேகமாக ஓடுகிறோம் என அதற்கே தெரியவில்லை. ஓடிய வேகத்தில் சட்டென ஒரு கதவில் மோதி, அது அந்த நேரத்தில் திறக்கப்படவும் உள்ளே தொப்பென்று விழுகிறது.

இங்கே ஏலியைத் தேட ஆட்களை அனுப்பி விட்டுக் காத்திருந்த ஆய்வாளர்களுக்கு அலைபேசியில் அவசரச் செய்தி வருகிறது. உடனே ஏலியைக் கண்டால் பிடித்து வைத்து விட்டு தகவல் தருமாறு சொல்லி விட்டு மீண்டும் தலைமையகத்திற்குப் பறக்கின்றனர்

அனைவரும் பணிகளுக்குத் திரும்புங்கள். உலக வானியல் ஆய்வாளர்களுக்கான காணொளி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பூமி சுழலும் வேகம் பாதியாகக் குறைந்திருக்கிறது.”

8

ஹெலோ மிஸ்டர். ரிச்சர்ட்ஸ். மன்னிச்சுருங்க. நீங்க பேச நெனைச்சப்போ நான் கொஞ்சம் வேலையா இருந்தேன்.”

நீங்க வருவீங்கன்னு தெரியும் பில். ஆனா, இவ்ளோ சீக்கிரம் வந்துருக்குறதுதான் எனக்குப் பதற்றமா இருக்கு. எல்லாம் சரியாத்தான போயிட்டு இருக்கு.”

ஆக்சுவலா இல்ல மிஸ்டர். ரிச்சர்ட்ஸ். “

மை காட் .. என்னாச்சு?”

நீங்க சொன்ன மாதிரிதான்….. பூமியோட ரொட்டேஷனல் ஸ்பீட் பாதியாக் கொறஞ்சுருக்கு.”

நாம செய்றதுக்கு எதுவும் இல்ல பில். நான் இந்தியா கிளம்புறேன்.”

என்ன ரிச்சர்ட்ஸ், இப்டி நழுவுறீங்க? நீங்க தான இவ்ளோ நாள் இது பத்தி பேசனும்னு சொல்லிட்டு இருந்தீங்க?”

ஆமா.. ஆனா இப்போ பேசிப் பயனில்ல. சொல்லப் போனா முன்னாடி பேசி இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இருந்திருக்கப் போறதில்ல. இயற்கை எல்லாத்தை விடவும் பெரியது. அதற்கு எதிரா நாம எதுமே செஞ்சுட முடியாது.”

நீங்களும் அந்தப் பஞ்சாங்கம் மாதிரி பேசாதீங்க ரிச்சர்ட்ஸ். இப்போ இருக்குற அறிவியல் வளர்ச்சில எல்லாமே சாத்தியம். உங்களுக்கு தெரியாதது இல்ல. அதை எப்டி சரி பண்ணனும்னு நாங்க பாத்துக்குறோம். உங்க கணிப்புப்படி அடுத்து என்ன நடக்க வாய்ப்பிருக்குனு மட்டும் சொல்லுங்க. இதையும் நான் அப்டியே நம்பிட போறதில்ல. சும்மா ஒரு ரெஃபெரென்ஸ்க்காக கேக்குறேன்.”

மார்க் மை வேர்ட்ஸ் பில். உங்களால எதுமே செய்ய முடியாது. இயற்கை திருப்பிக் கொடுக்க ஆரம்பிச்சுருச்சு. நீங்க சொல்றதப் பாத்தா இன்னும் நேரமில்லைனு தெரியுது. வேகமா போய் புடிச்சத சாப்பிடுங்க. பொண்டாட்டியை கொஞ்சுங்க. இது தீர்ப்பு நாள்.”

கோபத்தின் உச்சத்தில் பில் அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் கூட கிளம்பினான். மரியாதைக்காக ஹாரி, ” ஸாரி மிஸ்டர். ரிச்சர்ட்ஸ் நான் வரேன். அப்றம் என்ன திடீர்னு இந்தியாக்குஎன்றான்.

உலகத்தோட அழிவு அங்கதான் தொடங்கப் போகுது. அதைத் தெரிஞ்சு பாக்கப் போற ஒரே ஆள் நான்தான். கொஞ்சநாள் காத்திருக்கனும்னு நெனச்சேன். இப்போ சந்தோசமா இருக்கு.” என்று கண்ணடிக்கிறார் ரிச்சர்ட்ஸ்

9

உள்ளே வந்து விழுந்த ஏலியைப் பார்த்து தாரா அலறிய நேரத்தில், சூரியன் இன்னும் உதிக்காததைக் குறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில் எல்லா மொழிகளிலும் விவாதத்திற்குள்ளாகத் தொடங்கியிருந்தன. கடல்களில் ராட்சத அலைகள் கிளம்பி கரைகளை நோக்கி பெரும்படையெடுக்கத் தொடங்கியிருந்தன

ஏய் நீ அந்த ஏலியன்தான? எப்டி இங்க வந்த?” 

ஹையோ நான் ஏலியன்லாம் இல்லமாமனுஷன்தான். நீயாச்சும் நம்பேன்.”

மனுஷன்னா ஏன் இப்டி வித்யாசமா இருக்க?”

என்ன வித்யாசமா இருக்கேன்.”

கொஞ்சம் பொறு…” என்று கைபேசியை எடுத்த தாரா, ஏலியை புகைப்படம் எடுத்து அதனிடமே காட்டுகிறாள்

ஆவ்வ்வ்….” என்று அலறியபடி பின்னால் சென்று சுவற்றை ரெண்டு கைகளில் பிடித்துக் கொண்டு நின்றது ஏலி.

எதுக்கு நான் இப்டி இருக்கேன்.”

அதைத்தான் நானும் கேக்குறேன்அசிங்கமான கொரங்கு மாறி இருந்துட்டு நீ மனுஷனா

அப்போ இத்தனை நாள் என்னைய மனுஷன்னு சொல்லி ஏமாத்திட்டாய்ங்களா?” 

ஓவரா நடிக்காதமூஞ்சிய பாத்ததில்லை. சரி, உன் கை காலைக் கூடவா நீ பாத்ததில்லை?”

ஆமால்ல.. பாத்துருக்கேன். ஆனா என் கூட இருந்தவங்க எல்லாம் என்னை மாதிரிதான் இருப்பாங்க. நீங்கலாம்தான் வித்யாசமா இருக்கீங்க.”

அது சரி, எதுக்கு இங்க வந்த? வெளிய போ…”  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து கோவிந்தன் குரல் கொடுக்கிறார்

யாரும்மா?”

அது ஒரு ஜந்து தாத்தா. பொறுங்க வரேன்.” 

எது ஜந்துவா? சரி, எனக்குப் பசிக்குது சார்ஜ் போடனும்.”

பசிக்குது சார்ஜ் போடனுமா? ரோபோவா நீ ? உன்னைப் போய் ஏலியன்னு பில்ட் அப் குடுத்துட்டு இருக்காங்கசரி, மொத நீ கெளம்பு

ஏன் உங்களுக்கெல்லாம் பசிக்காதா? நீங்கலாம் சார்ஜ் போட மாட்டிங்களா? “

பசிக்கும். அப்போ மாத்திரைதான் போடுவோம். சார்ஜ் எல்லாம் போட மாட்டோம்.”

தாரா……” உள்ளிருந்து குரல் வந்தது.

இந்த தாத்தா வேற…” என்று முனகியவாறே உள்ளே செல்கிறாள் தாரா. பின்தொடர்ந்து போகிறது ஏலி.

யாரும்மா

இந்தா, இதுதான் வானத்துல இருந்து குதிச்சுருக்கு.. ரோபோ.” என ஏலியை கை காட்ட, கோவிந்தன் அதைப் பார்த்துவிட்டுநாராயணா….” என்கிறார்.

10

உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்களுக்கான காணொளி மாநாடு தொடங்குகிறது. பில் பேசத் தொடங்குகிறான்

இது நமக்கு மிகவும் கடுமையான நேரம். இதுவரை வாழ்நாளில் சந்திக்காத சவாலை எதிர்கொள்ளப் போகிறோம். உங்களுக்குத் தெரிந்திருக்கும். புவியின் சுழற்சி வேகம் பாதியாகக் குறைந்திருக்கிறது. தொடர்ந்து குறைந்து வருகிறது. இது அபாயகரமானது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள அல்லது புவியை மீண்டும் தன் வேகத்தில் சுழல வைக்க ஏதேனும் வழிகள் இருந்தால் கூறுங்கள்.”

இரவு பகல் ஏற்படத் தாமதமாகும் என்பதைத் தவிர, இதனால் புவியீர்ப்பு விசை குறையும். இது கவனத்தில் கொள்ள வேண்டிய சிக்கல். ஆனால் நாம் செயற்கை புவியீர்ப்பு விசை மூலம் தற்காலிகமாக இந்தப் பிரச்சனையை சரி செய்யலாம். அதற்குள் இதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.”

ஆளாளுக்கு ஒவ்வொன்றைப் பேசத் தொடங்குகின்றனர். இறுதியாக ஒரு மூத்த விஞ்ஞானி தொண்டையை கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.

நீங்கள் ஒரு விசயத்தை மறந்து விடுகிறீர்கள். நாம் இயற்கையை கவனித்து அதன் மாற்றங்களை கணிக்கத்தான் முடியும். நம்மால் அதை மாற்ற முடியாது. சுனாமி வருமென்று நமக்குத் தெரிந்தால் எச்சரித்து மக்களை அப்புறப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்தான் முடியுமே தவிர சுனாமியே வராமல் தடுக்க முடியாது. புவியின் சுழற்சி வேகம் குறைந்து விட்டது. அதை நாம் கண்டுபிடிக்கத்தான் முடியும். மாற்ற முடியாது. இன்னும் சற்று நேரத்தில் சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம் அனைத்தும் படையெடுக்கப் போகின்றன. என்ன செய்து விட முடியும் நம்மால்? வேடிக்கைதான் பார்க்க முடியும்.”

11

கோவிந்தன் ஏலியை தானுருகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கண்ணிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறது. வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவில்லை. ஏலி அங்கிருந்த ஜன்னல் வழியே தன்னை அழைத்துச் செல்ல யாரேனும் வருவார்களா என வானையே பார்த்துக் கொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்களில் இன்னும் சூரியன் உதிக்காதது குறித்தும் ஏலியின் வருகை குறித்தும் ஏராளமான கட்டுக்கதைகள் சடுதியில் பரவத் தொடங்குகின்றன. “ஏலி எனும் சாத்தான்என்று தலைப்பிடப்பட்ட கட்டுரை வைரலாகிறது. அது வந்த பின் சூரியன் உதிக்கவில்லை என்ற வதந்தி தீயாகப் பரவுகிறது.

தாரா தன் வீட்டில் ஏலி இருக்கும் தகவலை காவல்துறைக்குத் தெரிவிக்கிறாள். அவர்கள் பெரிய கூண்டு வைத்த வண்டியுடன் விரைந்து கொண்டிருக்கின்றனர்

ரிச்சர்ட்ஸ் மதுரையில் கால் வைக்கிறார். பெரும் ராட்சஷப் பேரலைகள் விண்ணை முட்டி மண்ணைத் தொடத் தொடங்குகின்றன

இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதை வெகு தாமதமாக உணர்ந்த பில், தன்னறைக்குச் சென்று வயிறு முட்ட மதுவருந்தி விட்டு உடைகளைக் களைந்து வெற்றுடலோடு வெறும் தரையில் படுத்து கண் மூடுகிறான்.

பெரும்பசியில் இருக்கும் ஏலியை தூரத்திலிருந்து வலை போட்டுப் பிடிக்கின்றனர் காவல் துறையினர். “நாராயணாநாராயணா…”என்று அரற்றிக் கொண்டே தத்தித் தடுமாறி பின்னே ஓடுகிறார் கோவிந்தன்

12

இருண்ட ஊரில் நூறாண்டுகளுக்குப் பின்னர் கருமேகங்கள் திரளத் தொடங்கின. மொத்த ஊரும் திரண்டு வீதிக்கு வந்து வானத்தை அண்ணாந்து பார்த்தது. ஏதும் புரியாத குழப்பமும் பீதியும் சூழ்ந்துகொள்ள கூச்சலும் குழப்பமுமாக மக்கள் ஏதேதோ பிதற்றத் தொடங்கினர். அனைவரும் ஒட்டுமொத்தமாக குறை சொன்னது ஏலியைத்தான். ஏலி ரௌத்ரத்தின் உச்சத்தில் இருந்தது

அப்போது தோன்றிய பெரு மின்னல் ஒன்றில் பாதிக்கப்பட்ட ஏலி, வலைகளைக் கிழித்துக் கொண்டு விஸ்வரூபம் எடுத்து நின்றது. அல்லது கோவிந்தனுக்கு அவ்வாறு தெரிந்ததுபயத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக இலக்கின்றி ஓடத் தொடங்கினர். ரிச்சர்ட்ஸும் கோவிந்தனும் மட்டும் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்று கண்கொட்டாமல் ஏலியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்

கடலோர நகரங்கள் அரவமின்றி மூழ்கிக் கொண்டிருக்க, தசதசாப்தங்களின் கடைசி மழையொன்று கொட்டித் தீர்க்கத் தொடங்கியிருந்தது. லட்சங்கோடி முரசுகள் ஒன்றாய் முழங்கியது போன்ற பேரிடியில் ஏலி கசிய விட்டுக் கொண்டிருக்கும் மின்சாரத்தின் வீச்சு நீரில் கலந்து தன் பயணத்தைத் துவங்கியது

கோவிந்தனின் உதடுகள் இன்னும் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றன.

“அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை

இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு

தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி

பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே..!”

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close