கட்டுரைகள்

இமையத்தின் ‘எழுத்துக்காரன்’ சிறுகதை வாசிப்பனுபவம் – இலட்சுமண பிரகாசம்

கட்டுரைகள் | வாசகசாலை

எழுத்தர் – எழுத்தாளர். இந்தச்  சொற்களுக்கிடையில் வேறுபாடுகள் உள்ளன. அவற்றை வரலாற்றின் பின்புலத்தின் அடிப்படையில் புரிந்துகொள்வது அவசியம். உண்மையில், சிலர் எழுத்தர் என்பவர் யார்? எழுத்தாளர் என்பவர் யார் என்ற வேறுபாடின்றி குழப்பிக்கொள்வதை பார்க்கமுடிகிறது.

கவிஞர் நா.விச்வநாதன் அவர்களிடம் ஒரு நண்பர், அவருடைய வீட்டுக்குச் சென்று அவருடைய பெயரோடு ‘எழுத்தாளர்’ என்று அச்சிட்ட `போர்டு’ ஒன்றை அளித்தார். அடுத்த நாள் ஒருவர் அவர் வீட்டுக்குச் சென்று பத்திரம் பதிவு செய்யவேண்டும் என்று நின்றதாக ஒரு நகைச்சுவையைப் பகிர்ந்துகொண்டார். 

சொற்களைப் புரிந்துகொள்வதிலும், பொருள்கொள்வதிலும் எழுத்தர் என்பவர் வேறு. எழுத்தாளர் என்பவர் வேறு. ‘எழுத்துக்காரன்’ என்ற சொல்லுக்குப் பின் இருக்கும் வரலாறு என்ன என்பதை அறிந்துகொள்வது, ‘எழுத்துக்காரன்’ சிறுகதையை வாசிக்க துணை செய்யலாம். பழந்தமிழ்ச் சுவடிகள் பெரும்பாலும் அக்காலத்தில் ஆதீன மடங்களில்தான் பராமரிக்கப்பட்டு வந்தன. அச்சுவடிகளில் உள்ள பழம்பாடல்களை படியெடுப்பதற்கென சிலர் அவ்வாதீன மடங்களில் இருந்தனர். தமிழகத்தில் தஞ்சையில், மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தில் காகிதப் பயன்பாடுகள் அதிக அளவில் நடைமுறைக்கு வந்தன. ஆவணங்கள் அனைத்தும் ‘மோடி எழுத்து’ என்று அழைக்கப்படுகிற மராட்டிய எழுத்தில், தொடர்ச்சியாக எழுதப்படும் எழுத்து முறையைக் கொண்டிருந்தனர், தஞ்சை மராட்டிய ஆட்சியில் எழுத்தராக இருந்தவர்கள்.

இந்த ‘மோடி ஆவணங்களை’ எழுதுபவர்களின் குடும்பத்தினருக்கு, மராட்டிய அரசர்களால் குடியிருப்பு ஒன்று தஞ்சாவூரில் ஏற்படுத்தப்பட்டது. மோடி ஆவணங்களை எழுதுபவர்கள், சுவடியில் இருந்து காகிதத்துக்குப் பிரதி எடுப்பவர்கள், ‘எழுத்தர்’ என்றுதான் அன்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வாழ்கின்ற குடியிருப்புப் பகுதி, காலப்போக்கில் ‘எழுத்துக்காரத் தெரு’ என்று அழைக்கப்பட்டது. இன்றும் தஞ்சாவூரில் ‘எழுத்துக்காரத் தெரு’ உள்ளது.

பின்னர், காலனியாதிக்கத்தின்போது போர்ச்சுகீசிய, பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேயர்களின் கம்பெனி நிர்வாகத்திலும், பின்னர் ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்திலும் படித்த இந்தியர்கள் பெரும்பாலும் அலுவலக உதவி ‘எழுத்தர்களாகப்’ பணிக்கு அமர்த்தப்பட்டனர். சுதந்திர காலத்துக்குப் பின்னரும் நமது ஆட்சியமைப்பு அலுவலக நடைமுறையில், இங்கிலாந்து நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர். அலுவலக எழுத்துப் பணியை மேற்கொள்பவர்கள், ‘எழுத்தர்’ என்றுதான் இன்றும் பயன்பாட்டில் வழங்கிவருகிறது.

——

‘எழுத்துக்காரன்’ 2005ல் புதிய பார்வை இதழில் இமையம் எழுதிய சிறுகதையை மேற்சொன்ன வரலாற்று பின்புலத்தில் படிப்பது ஒரு சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன். ‘எழுத்துக்காரன்’ சிறுகதைகக்கும், மேற்சொன்ன வரலாற்றுத் தகவலுக்கும் நேரடியான எந்தத் தொடர்பும் இல்லை. என்றாலும், மேற்சொன்ன கதைக்கு உள்ள தளம் என்று சொல்லக் கூடிய ‘ஸ்டோரி ப்ளாட்’டுக்கும், இதற்கும் அடிப்படையில் ‘எழுத்தர்’ என்ற சொல்லும் அது தருகிற பொருளோடு தொடர்ச்சி காணப்படுகிறது.

இமையத்தின் கதைகள் பெரும்பாலும் வட்டாரமொழித் தன்மையோடு கிரமாங்களைச் சுற்றிய கதையைக் களமாகக்கொண்டு பயணிக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது. எனினும், அவருடைய மற்ற சிறுகதைகள் பற்றிப் பலரும் பேசியிருந்தாலும், இக்கதை குறித்து பலரும் பேசியதாகத் தெரியவில்லை. இக்கதையை மேற்சொன்ன வரலாறோ, அல்லது ‘எழுத்துக்காரன்’ என்ற சொல்லை அவர் இக்கதையில் பயன்படுத்திய விதம் குறித்து முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாததன் காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது. இமையத்தின் பிற கதைகளில் இருந்து ‘பட்டென’ வித்தியாசமான ஒரு கதை கிடைக்குமா என்று பார்த்தால், ‘எழுத்துக்காரன்’ கதை, தற்காலத்தில் மாற்றுக் களத்தை மையமிட்ட கதை இது என்று யாரும் ஏற்றுக் கொள்வார்கள்.

‘எழுத்துக்காரன்’ கதை அவ்வளவு சுவாரசியமான கதை என்று கூற முடியாவிட்டாலும், பலர் எழுதிப் பார்க்காத, அல்லது தொடாத களம் என்ற அடிப்படையில் வாசிக்க வேண்டிய கதை என்று சொல்லலாம்.

கதை மிக எளிது. சிறு கிராமத்தைச் சேர்ந்த பெண், தன்னுடைய மகனுக்கு தங்கிப் படிக்கும் விடுதியில் இடம்பெறுவதற்காக, வட்டாட்சியர் அலுவலகத்துக்க்ச் செல்கிறார். சான்றிதழ் வாங்குவதற்கு யாரேனும் மனு எழுதித் தருவதற்குக் கிடைக்கமாட்டார்களா என்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விழித்துக் கொண்டிருக்கும் அவ்வளவாக படிப்பறிவு இல்லாத கிராமத்தைச் சேர்ந்த பெண்.

வட்டாட்சியர் அலுவலகத்தின் வெளியே, கூலிக்காக இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, சாதிச் சான்று எனப் பல மனுக்களை எழுதித் தரும் ‘எழுத்துக்காரன்’ என்ற தொழிலைச் செய்யும் சிலர். அவர்களில் ஒருவன் சிவராமன். மண்தரையில் பாயைப் போட்டு வாடிக்கையாளர்கள் யாராவது இன்று கிடைத்தால்தான் காலை வேளைப் பொழுதுக்கு ‘டீ’ செலவுக்காவது கொஞ்சம் பணம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு வருவோர், போவோர்களை எதிர்பார்க்கும் கூலி ‘எழுத்துக்காரன்’ சிவராமன். இவர்கள் இடையே நடைபெறும் நிகழ்ச்சிகள் கதையாக எழுதப்பட்டுள்ளது.

சிறுகதையைப் பொறுத்த அளவில், கதையின் மையச்சரடை ‘கண்ணாடியில் எறிந்த கல்லைப் போல’ உடைத்துப் போட்டுச் சொல்வது, அந்த எழுத்தாளனை அல்லது அக்கதையைத் தூக்கிப் போடுவதற்கோ? அல்லது அவனது (அக்கதையின்) மரணத்துக்கோ ஒப்பானது என்று சொல்லலாம். எனினும், ஓர் எழுத்தாளனின் புதிய களத்தை வாசிப்பவர்களுக்கு எடுத்துக்காட்டுவதற்கு, இந்த உத்தி சில நேரங்களில் தேவைப்படுகிறது. இது அந்தச் சிறுகதையாசிரியனினுடைய திறத்தை எடுத்துக் கூறுவதாக கருதவேண்டுமே அல்லாது, மையச் சரடை உடைத்ததற்காக எதிர்வாதம் புரிவது சிறந்ததாக அமையாது.

முன்னர் சொன்ன வரலாறையும், இக்கதையில் ‘எழுத்துக்காரனான’ சிவராமனுடைய காலத்தில் எழுத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்களின் அதிகாரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இக்கதையைப் பொறுத்தவரைசரசு அலுவலகத்துக்குச் சான்றிதழ் கேட்டு வருபவர்களுக்கு உரிய வழியைக் காட்டுபவானாக சிவராமன் இருக்கிறான். இது அவனுடைய கதாப்பாத்திரத்தின் செயல்பாடு. அரசு அலுவலகத்தில் இருப்பவர்களோடு நட்புறவில் இருந்து, தனக்குரிய வருமானத்தை தேடிக்கொள்கிறவன். அரசு அலுவலர்களின் தொடர்பு கிடைத்தவர்களுடைய அதிகார தோரணை எப்படியிருக்மென்று நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதேபோல, அரசு அலுவலகத்துக்கு வருகின்ற பாமர, அதிகம் விவரம் தெரியாத, ஓரளவுக்குப் பள்ளிப்படிப்பை படித்தவர்களின் நிலையை, இக்கதையில் நாம் ஓர் அனுபவமாக உணரமுடியும்.

இக்கதையப் பொறுத்தவரை, படிப்பு ஏதும் இல்லாத பெண்ணின் பாத்திரம் நுணுக்கமான அளவு எடுத்துக் காட்டப்படவில்ல. ஆனால், ‘எழுத்துகாரனான’ சிவராமனின் பாத்திரச் சித்தரிப்பு நுணுக்கமாக இடம் பெற்றுள்ளது என்பதில் இருந்தே, ‘எழுத்துக்காரன்’-யை, அல்லது அத்தொழிலை மேற்கொள்ளக் கூடியர்களுடைய அன்றாட வாழ்க்கை நிலையை எடுத்துக்காட்டவே இக்கதை எழுதப்பட்டிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. அது சிறுகதையாசிரியரின் எண்ணக் கருத்து என்பதாகக் கொள்ளலாம். எழுத்துக்கார பாத்திரங்கள் இப்படித் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன…

“காலையிலேருந்து டீக்கு, பீடிக்குக்கூட வயிமானம் பொறக்கலியே’ என்று சொன்ன சிவராமனுக்கு, சுரத்தில்லாமல் “வெரப்புக் காலத்திலே அப்படித்தான் இருக்கும்” என்று சொன்ன சின்னசாமி, பாயின் மீது விழுந்திருந்த வேப்ப இலைகளை எடுத்து விட்டெறிந்தான்.

பெரும்பாலான கிராமத்தைச் சார்ந்த கதைகள், அல்லது புறநகர் வட்டாரத்தைச் சார்ந்த கதைகள் தற்போது எல்லோராலும் எழுதப்படுகின்றன. அவற்றுள் சில முந்திய எழுத்தாளர்களின் சரடைப் பிடித்துக்கொண்டு செல்வதாகவே எழுதப்படுவதைக் காணமுடிகிறது. வாசகர்களுக்குப் புதிய களத்தை, அம்மனிதர்களின் வாழ்வை தரிசனமாக்கிக் காட்டுவதில் சிலர் தோல்வியடைவதையும் பார்க்கலாம். இமையத்தின் ‘எழுத்துக்காரன்’ கதை வெளிவந்தது 2005 புதிய பார்வை இதழில். இக்காலத்தை ஒட்டிதான் கிராமப்புறத்தைச் சார்ந்தவர்கள், மேல் கல்விக்காக நகரங்களை நோக்கிப் பயணித்தது.

வருமானச் சான்றிதழ் பெற, மனுக்களை எழுதித் தருபவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடவுளைப் போன்று காட்சி தருவர். அவர் காட்டுகிற அலுவலக ஆளைப் பின்தொடர்ந்தால், அந்த நபருக்கும் அந்த நபர் காட்டும் வேறோரு இடைத் தரகருக்கும் இடையில் கைமாறுகிற அதிகாரம், தொனிக்கும் குரல், இக்கதையில் சித்தரிக்கப்படவில்லை.

இக்கதை முற்றான கதையென்று கூறமுடியாது. என்றாலும், இக்கதையில் சித்தரிக்கப்பட்டிருக்கும் ‘எழுத்துக்காரர்களின்’ வாழ்க்கை, முந்தைய கால நாவல்களில் ஓரிரு இடங்களில் காட்டியிருக்கின்றார்களா என்பதை பார்க்க வேண்டும். எனினும், எழுத்துக்காரர்களைக் குறித்து எழுதப்படும் முதல் சிறுகதை இது என்று கூறலாம்.

தொடக்கப் பத்தியில் குறிப்பிடுவதைப் போல, எழுத்தர் – எழுத்தாளர் என்ற சொல்லுக்குப் பின், ஓர் எழுத்தாளர் தனது கதையில் புதிய தரிசனத்தை, அல்லது புதிய களத்தை எழுத்தின் வழியே காட்டும்போதுதான், அவனுக்கு எழுத்தாளன் என்ற ‘அந்தஸ்து’  கிடைக்கும். எழுத்தர்-எழுத்தாளர் என்ற புரிந்துகொள்ளுதலில், இக்காலத்தில் வாசகர்கள் முழுமையான சொற்களுக்கு பொருளை விளங்கிக்கொள்வதில் சிக்கலை சந்திக்கின்றனர். அதற்கு வாசகர்களை குற்றம் சுமத்தமுடியாது. பிந்தைய எழுத்தாளர்களிடம் உள்ள குறை என்ன என்பதைதான் காணவேண்டியுள்ளது. ‘எழுத்துக்காரன்’ சிறுகதை, ஓரளவு புதிய தரிசனத்தை காட்ட முயன்றாலும்,(?)  வாசகனுக்கு ‘ஸ்டோரி ப்ளாட்’ என்ற கதைக் களம் என்ற சொல்லுக்காகவாவது, எழுத்தர் யார்? எழுத்தாளர் யார் என்ற அர்த்தத்தையாவது தரும். ஒரு பகடியாகவேனும் இருந்துதாலும் அப்பகடியைக் காண்பது வாசக மனத்தைப் பொறுத்தது!

எழுத்தர் -எழுத்தாளர் என்ற சொல்லுக்கு வேறுபாடின்றி சிலர் கதையை எழுதிவருகின்றனர். அவற்றை கதை என்று சொல்வதைக் காட்டிலும், ‘உற்பத்தி எழுத்து’ என்று கொள்வது பொருந்தும். புதிய சிறுகதையாளர்கள் நல்ல கதைகளை எழுதிவருவதைப் பார்க்கமுடிகிறது. சிலர் ‘அரைத்த மாவையே அரைப்பது’ என்ற கதை ரீதியில், சுரத்தில்லாமல் கதையை எழுதிவருகின்றனர். அத்தகைய (எழுத்தர்) எழுத்தாளர்களை, அவற்றை கொண்டாடுவோரை எண்ணி யாரும் இங்கு கவலைகொள்ளவதாலோ, அக்கறைகொள்வதாலோ வாசகனுக்கு ஆகப்போவதில்லை. தற்காலிகப் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருத இடமிருக்கிறது. நல்ல சுரணை என்ற உணர்ச்சி கெடாதவர்களின் கதையை, புதிய களத்தை, வாசகனுக்கு எடுத்துக்காட்டுவதும் இன்றைய சிறுகதைகளின் தேவையாக இருக்கிறது.

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close