இணைய இதழ்இணைய இதழ் 53சிறுகதைகள்

எடைக்கு எடை – கா. ரபீக் ராஜா

சிறுகதை | வாசகசாலை

நேரம் அதிகாலை ஐந்து மணி. கடந்த முப்பது வருடமாக அலாரம் அடித்ததே இல்லை. எழுவதில் அத்தனை துல்லியம். மெல்லிய வெளிச்சம் கலந்த இருட்டில் நெட்டி முறித்து புறஉலகை பார்ப்பதில் அப்படி ஒரு திருப்தி. ஆனால், இன்று அப்படி ஒன்றும் திருப்தி இல்லை. மாறாக நெஞ்சை அழுத்தும் துயரம்தான் என்னைச் சுற்றி இருந்தது. காலை எழுந்ததும் இப்படி நின்றதேயில்லை. காலைக்கடன் தொடங்கி ஒவ்வொரு வேலையும் துரிதமாக நடக்கும். இதற்கு ஏற்றாற்போல் மனைவி காலை, மதியம் என இருவேளைக்கான உணவு தயாரிப்பில் ஆழ்ந்திருப்பாள். கடுகு தாளித்து தெறிக்கும் சப்தத்தில் இருந்து, கரண்டியால் தானியங்கள் வறுபடும் சப்தங்கள் வரை அனைத்தும் எனக்கு வெகு பரிச்சயம். இந்த நிகழ்வுகள் அனைத்தும் இன்று மட்டுமே. யோசனையில் திரும்பும்போதுதான் மனைவி பேசினாள், “ஏங்க, நாளேலருந்து மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்துருவீங்கள்ல?”

குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வெகு நாட்களுக்கு முன்பாக எடுத்த முடிவை ஒருநாள் குடும்பத்துக்கு அறிவிக்கவேண்டிய நிலையில் இருந்தேன். இது எனக்கு அப்பா சொல்லிக்கொடுத்தது. எந்த முடிவாக இருந்தாலும் குடும்பத்தைக் கலந்து ஆலோசிக்கவேண்டும். இல்லையேல் எடுத்த முடிவை எல்லோர் முன்னிலையிலும் தெரிவிக்கவேண்டும். இப்படித்தான் ஒரு இரவில் அப்பா எங்களை எழுப்பி ஒன்று சொன்னார், “டவுனில் ஒரு மளிகைக்கடை விலைக்கு வந்துருக்கு. வாங்கலாம்னு இருக்கேன்!” அதுநாள் வரை ஒரு பெரிய கடையில் வேலைபார்த்துக்கொண்டிருந்த அப்பா இன்று ஒரு கடைக்கு முதலாளி. அவர் வேலை பார்க்கும் கடையைக் கடந்து போகும்போதெல்லாம் ஒரு சோப் நிறுவனத்தின் விளம்பரதூதர் போல பனியனுடன் அழுக்காகக் காட்சியளிப்பார். பார்க்கும்போதே எங்களுக்கு பாரமாக இருந்தாலும் எங்களைப் பார்த்ததும் சிரிப்பார். 

அன்று அப்பா அப்படிச் சொன்னதும் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை. பள்ளியில் எல்லோரிடமும் சொல்லி மகிழ்ந்த தருணம் இப்போதும் நினைவில் வந்து போகிறது. இப்போது என் முடிவையும் இப்படி ஒரு பின்னிரவில்தான் சொல்லி முடித்தேன். “வியாபாரம் சுத்தமா குறைஞ்சு போச்சு. நம்ம மளிகைக்கடையை தொடந்து நடத்த முடியல. கடையைக் குடுத்துட்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு போகலாம்ன்னு இருக்கேன்”. இந்த முடிவை ஏற்கனவே அறிந்துகொண்டவள் போல மனைவி முகத்தில் எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளவில்லை. குழந்தைகளுக்கு பெரிய ஏமாற்றம். தந்தையின் மரணத்தையும், வீழ்ச்சியை காணும் குழந்தைகள் பெரும் துரதிர்ஷ்டசாலிகள். 

வீட்டின் முகப்பின் குறுகலான சந்தில் இருந்து வண்டியை பின்னோக்கி நகர்த்தி தெருவில் நிற்கிறேன். எப்போதும் என்னைப் பார்த்ததும் வாலாட்டும் தெருநாய் வாஞ்சையாக நின்றது. அதற்கு ஒரு காய்ந்த ரொட்டித்துண்டு கூடப் போட்டதில்லை. இருந்தாலும் சக தெருவாளன் என்கிற பாசம் அதற்கு. எப்போதும் அதன் முகத்தைக் கூடப் பார்த்ததில்லை. இன்று நானும் நாயும் சில நொடிகள் ஆழ்ந்து ஊடுருவிக்கொண்டோம். கொஞ்சம் அழுகை கூட வந்தது. எப்போதும் வெளியே வந்து வழியனுப்பி வைக்காத மனைவி இன்று வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தாள்.

மளிகைகடைக்காரனுக்காகவே பிரத்யோகமாகத் தயாரிக்கப்பட்ட என் இருசக்கர வாகனத்தைக் கிளப்பினேன். வண்டி உதறிக்கொண்டே கிளம்பியது. வழியெங்கும் யோசனைக்கும் கவலைக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு எண்ண அலைகள் வந்து போனது. அப்பா வம்பாடுபட்டு உருவாக்கிய கடை அது. அப்பா கடையில் இருந்தபடி வியாபாரம் பார்க்கும் செய்கையே தனித்துவமாக இருக்கும். ரெண்டு கிலோ அரிசி என்றாலும் அதை கூம்பு வடிவ பொட்டலத்தில் நுட்பமாகக் கட்டி, அதில் கயிறு சுற்றும் பாணி எல்லோருக்கும் வாய்த்திடாது என்று நினைத்துக்கொள்வேன். பொட்டலத்தில் இருந்து ஒரு அரிசி, பருப்பு கீழே சிந்த விடமாட்டார். கடையில் எவ்வளவுதான் கூட்டம் நின்றாலும் அதை இலகுவாக சமாளித்துவிடுவார். நிறைய பொருள் வாங்கினால் அதை அப்பா ஒரு தாளில் எழுதி அதை கிழித்துக் கொடுப்பார். அதுதான் பில். அந்த பில்லை விட அவர் எழுதும் பேனா வித்தியாசமாக இருக்கும். அது முழுக்க மரத்தால் ஆனது. அப்பா இல்லாத போது அந்தப் பேனாவில் போலியாக கணக்கு எழுதி இல்லாத வாடிக்கையாளருக்கு கிழித்துக் கொடுப்பது எனக்கு பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்று. அப்பா, காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மனம் நோகாமலிருக்க சுவாரசியமாகவும், வேடிக்கையாகவும் பேச்சுக்கொடுப்பார். வழக்கமாக வருபவர்கள் வராமல் மறுநாள் வந்தால் மிகுந்த அக்கறையாக விசாரிப்பார். மிகுந்த பழக்கமாகிவிட்டால் உறவுமுறை சொல்லியே அழைப்பார். அப்பாவின் விசாரிப்புக்காகவே வியாபாரம் ஜரூராக இருந்தது. நிலம் வாங்கி வீடு கட்டியது முதல் அனைத்துமே இந்த மளிகைக் கடை வருமானத்தில்தான்.

எல்லா மளிகை கடைகளுக்குமென்று ஒரு வாசம் இருந்தது. மளிகைக் கடையில் நின்று பொருள் வாங்கும் அனைவரும் இதை நுகர்ந்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த குறிப்பிட்ட நெடி வீசினால்தான் அது மளிகைக்கடை என்றே மதிக்கப்படும். அந்த நெடி சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு, மற்றும் பிற தானிய வகைகளின் கூட்டுத்தயாரிப்பில் உருவானது. அப்பா கடை திறந்து ஒரு மாதத்துக்கு பிறகுதான் அந்த வாசம் எங்கள் கடைக்கு வாய்த்தது. அந்த கணத்திலிருந்து தான் நானும் மளிகைக்கடை நடத்த வேண்டும் எனும் முடிவை அடைந்தேன். ஆசிரியர்களும் என்னை மளிகைக்கடையின் வாரிசாகவே பேசி வந்தார்கள்.

அப்பாவுக்கு நான் நிறையப் படிக்க வேண்டும் எனும் ஆசை. ஆனால், நானும் விதியும் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சியை நிறுத்திவைத்தோம். அப்பாவுக்கு இதுகுறித்த வருத்தம் நிறைய இருந்தது. அப்பாவை பொறுத்தவரை ஒரு டேபிளில் உட்காந்து வேலை பார்ப்பதே கௌரவம் என்று நினைத்தார். மளிகைக்கடையை நான் ஏற்று நடத்தும் போதுதான் நின்றுகொண்டே பொட்டலம் கட்டுவது எவ்வளவு வலி கொடுக்கும் என்று உணர்ந்தேன். அப்பாவின் கால் நரம்புகள் பிடுங்கிய வேர்கள் போன்று ஒழுங்கற்று இருக்கும். அவை அனைத்தும் அவர் வாழ்வில் நின்றே கழித்த தருணங்கள் என்று பின்புதான் தெரிந்தது. அப்பா கடையில் உட்காந்தே பார்த்தது இல்லை. கடைக்கு விடுமுறையும் கிடையாது. தீபாவளிக்கு கூட வீட்டில் புது ஆடை அணிந்துவிட்டு சற்று நேரத்தில் அவரது சீருடைக்கு மாறி வியாபாரம் செய்துகொண்டிருப்பார். ஒருநாள் விடுமுறை கூட கடை வியாபாரத்தை பாதிக்கும் என்பார். ஒரு வாடிக்கையாளர்கள் நம் கடையை தேடிவரும் போது அது பூட்டியிருந்தால் அவர் ஆயுளுக்கும் நம் கடைப்பக்கம் வர மாட்டார் என்பது அப்பாவின் நம்பிக்கை. 

எனக்குத் தெரிந்து அக்காவின் திருமணம் அன்றுதான் கடைக்கு விடுமுறை விடப்பட்டது. அப்பா அன்று முழுக்க வெள்ளை வெட்டி சட்டையில் இருந்தது புதிதாக இருந்தது. அப்பாவின் மளிகைக்கடை வியாபாரம் அன்று மட்டும் திருமண மண்டபத்தில் நடந்தது போல இருந்தது. காரணம் அன்று கல்யாணத்துக்கு வந்தவர்கள் பெரும்பாலும் அப்பாவின் வாடிக்கையாளர்கள்.

கடையை அடைந்தேன். வண்டியின் பக்கவாட்டில் இருக்கும் ஸ்டாண்டை இழுத்தேன், சாய்வாக நின்று கொண்டது. வண்டிச் சாவியுடன் பிணைக்கப்பட்ட கடை சாவியை எடுத்து ஷட்டரை இழுத்தேன். எழுந்த மடமட சப்தம் தெரு முக்குவரை கேட்கும். அந்த கடை வீதியில் ராமசாமி டீக்கடைக்கு பிறகு அடுத்து கடை திறப்பது நான்தான். ராமசாமி எனக்கு எதிர்க் கடை. எனக்கும் அவனுக்கும் சுமார் இரண்டு வருடம் ஆறுமாதம் மூன்று நாட்களாக பேச்சு கிடையாது. இந்த துல்லியகணக்கு எப்படி என்றால், எனக்கும் அவனுக்கும் ஒரு புத்தாண்டு தினத்தில்தான் சண்டை நிகழ்ந்தது. தவறு என் மீதுதான் என்றாலும் அவன் பயன்படுத்திய வார்த்தை எனை வெகுவாக பதம்பார்த்தது.

வியாபாரம் இல்லாத நேரத்தில் நானும் எதிர்கடை ராமசாமியும் சத்தம் போட்டு பேசிக்கொள்வோம். என்னைவிட வயதில் சிறியவன். அன்போடு அண்ணே என்பான். வியாபாரம் இல்லாத பொழுது நான் அவன் கடைக்கும், அவன் என் கடைக்கும் வந்து குடும்ப விவகாரங்களை பேசி சிரித்துக்கொள்வோம். எப்படி பேசிக்கொண்டாலும் நான் அவன் கடையில் குடிக்கும் டீ, பலகாரத்திற்கும், அவன் என் கடையில் வாங்கும் மளிகைசாமானுக்கு கணக்கு துல்லியமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வோம். மாதம் முடிந்தால் கணக்கை தீர்த்துக்கொள்வோம். இது பலவருடமாக நீடித்துவந்தது. நான் குடிக்கும் டீக்கணக்கை விட அவன் வாங்கும் மளிகைப் பொருள் அதிகம் என்பதால் அவனே எனக்கு பணம் கொடுக்கும்படி இருக்கும். இது அவனுக்கு நீண்ட நாட்களாக மன நெருடலை கொடுத்திருக்க வேண்டும். இனி அன்றைய கணக்கை அன்றே தீர்த்துக்கொள்வோம் என்றான். நான் சரி என்றேன். மறுநாள் வந்து தட்டில் பலகாரம் ரெண்டு குறைகிறதே பழக்க தோஷத்தில் எடுத்துவிட்டாயா? என்று சிரித்துக்கொண்டே அவன் கேட்டதும், உஷ்ணம் தலைக்கு ஏறியது. பதிலுக்கு நான் எதோ கூற பரஸ்பர உஷ்ணம் சண்டையானது. மாறி மாறி கடைக்குள் இருந்து திட்டிகொண்டோம். பக்கத்து கடைக்காரர்கள் நாங்கள் வழக்கமாக பேசிக்கொள்ளும் நிகழ்வு என்று நினைத்துக்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் வார்த்தை முற்றிப்போய் அவன் என் குடும்பத்தை எதோ பழிக்க, நான் பதிலுக்கு அரசு முத்திரை பதித்த அரை கிலோ எடைக்கல்லை அவனது கடை பாயிலர் நோக்கி எறிந்தேன். அவனும் சம்பிரதாயத்துக்கு எதோ எடுத்து எறிந்தான். பக்கத்தில் இருப்பவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அவரவர் கடைக்குள் அனுப்பி வைத்தனர். அன்று நிகழ்ந்த இந்த சம்பவம் இன்று வரை பகையாக இருக்கிறது. ராமசாமியைப் பார்த்தவாறே கடையைத் திறப்பதும் அடைப்பதும் இன்றே கடைசி. 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் போனதும் நான் அப்பாவின் கடைக்கு போவது என்று முடிவானது. அம்மா என் முடிவுக்கு மிக ஆதரவாக இருந்தார். வழக்கமாக தனியாக போகும் அப்பாவின் வண்டியில் அன்று நானும் சேர்ந்து போனேன். அன்று எழுந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சிறிய எடுபிடி வேலைகளையே செய்துவந்த நான், படிப்படியாக பொறுப்பை அதிகரித்துக்கொண்டேன். அப்பாவின் வேலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே போனது. அதற்கு ஏற்றாற்போல் அப்பாவின் கால்களும் ஒத்துழைக்க மறுத்தது. மருத்துவர் நிற்கவே கூடாது மற்றும் தீவிர ஓய்வு தேவை என்றார். எனிலும் அப்படி இருக்க முடியவில்லை. அவரால் மட்டுமல்ல உழைக்கும் எந்த அப்பாக்களாலும் திடீரென்று ஒருநாள் உட்காரவே முடியாது. கடையில் உட்காந்து கொண்டு கணக்கு மட்டும் பார்த்துக்கொண்டார். 

அவர் உட்காந்து கொண்டு அவ்வப்போது கொடுக்கும் கட்டளைகள் எரிச்சலைக் கொடுத்தாலும் எந்தெந்த பொருளை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும், பருவநிலைக்கு ஏற்ப எந்தெந்த பொருட்களை வாங்கிவைத்துக்கொள்ள வேண்டும் எனும் பாலபாடத்தை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். யாருக்கு கடன் கொடுக்க வேண்டும், யாரிடம் கொடுத்தால் திரும்ப வராது என்பதை துல்லியமாகச் சொல்வார். பெரும்பாலும் அவர் சொன்னதுதான் நடக்கும். எங்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத ஒரு கிறிஸ்துமஸ் நாளில்தான் அப்பா இறந்து போனார். நாளை மார்கெட்டுக்கு நானும் வருவேன் என்று அடம்பிடித்து இரவு படுக்கப்போனவர், மறுநாள் மார்க்கெட்டுக்கு அருகே இருந்த இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டார். 

அப்பா இல்லாத ஆரம்ப நாட்கள் எனக்கு கொஞ்சம் தடுமாற்றத்தைக் கொடுத்தாலும் அவர் சொல்லிகொடுத்த தொழில் நுணுக்கம் என்னைக் கைவிடவேயில்லை. அப்பா போலவே கடைக்கு விடுமுறை இல்லாமல் உழைத்தேன். அப்பாவின் மரப்பேனா ஒன்றை நூலில் கட்டித் தொங்கவிட்டு அப்பா போலவே மாறினேன். இறுக்கம் நிறைந்த மனம் இலகுவாகி, நானும் வாடிக்கையாளர்களை உறவுமுறை வைத்து அழைத்தேன். வியாபாரத்தில் அப்பாவை மிஞ்சினேன். ஆகையால் வீட்டுக்கு மேலே ஒரு மாடிவீடு எடுத்தேன். மூத்த ஆண் வாடிக்கையாளர்கள் அனைவரையும் மரியாதையாக மாமா என்று அழைப்பேன். அதில் ஒருவர் எனக்கு மாமனாராகிப் போனார். வெளியூரில் பெண் எடுத்தால் நல்லது கெட்டதுக்கு கடையை அடைக்கமுடியாது என்பதால், பெண்ணை உள்ளூரில் எடுக்க வேண்டும் எனும் கொள்கை முடிவு சாத்தியமானது. தங்கைக்கும் உள்ளூரில் மாப்பிள்ளை பார்த்தது அதனால்தான். முடிந்தளவு உறவுகள் யாவும் ஒரே தெருவில் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற என் ஆசை நிறைவேறாவிட்டாலும், ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் அடங்கியது திருப்திகரமாக இருந்தது. 

என் வீட்டுக்கும் கடைக்கும் வெளிப்பட்ட உலகத்தை பற்றி எனக்கு கவலையே இருந்ததில்லை. என் சுகதுக்கம் அனைத்தும் பத்துக்கு பதினைந்து கடைக்குள் சுருங்கிப்போனது. பக்கத்துக்கு மாவட்டத்துக்கு பயணப்பட்டே பத்து ஆண்டுகள் ஆகியிருக்கும். பருவநிலை மாற்றம் முதல் ஆட்சி மாற்றம் வரை எதுவும் என்னை பாதித்ததேயில்லை. மனைவியும் ஆரம்பத்தில் எனை மாற்ற விரும்பினாள். அதைச் செயல்படுத்தவும் செய்தாள். ஆனால் மற்றம் எதுவுமில்லை. உலகம் குறித்த கவலை எழுந்ததால் தினத்தந்தி வாங்க ஆரம்பித்தேன். ஆனால், அதைப் பிரித்துப்பார்க்க நேரம் கூடியதில்லை. நான் இறக்கும் வரை இப்படித்தான் தினமும் கடைக்கு சென்று வருவேன் என்று நினைத்திருக்கும் போதுதான் வியாபாரம் படிப்படியாய் சரிய ஆரம்பித்தது. கடையை மூடிவிட்டு கையில் பணத்துடனும் மனதில் பயத்துடனும் சென்ற நான் கடந்த சில நாட்களாகவே பையிலும் மனதிலும் வெறுமையோடுதான் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தேன். கையில் இருக்கும் பணத்துடன் கடையில் பல மாற்றங்கள் செய்தும் பலனில்லை. நிரந்தர வாடிக்கையாளர்கள் என்று கருதும் ஆட்கள் கூட இப்போதெல்லாம் கடைக்கு வருவதில்லை. அதோடு அவர்களை எங்காவது பார்த்தால் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்வது கூடுதல் வலியைத் தந்தது.

பீடி, சிகரெட், புகையிலை விற்கக்கூடாது என்பது அப்பாவின் கொள்கை. அவற்றை விற்றால் வாங்கியவன் வாசலில் இருந்தே புகைப்பான். எந்த கடைக்கும் தயங்கித் தயங்கி வரும் பெண்கள் கூட மளிகைக்கடைக்கு தயக்கமில்லாமல் வருவார்கள். அப்படி வருபவர்களை மறித்துக்கொண்டு புகைவிடுபவர்களால் வியாபாரம்தான் போகும். ஆகையால் புகையிலைப் பொருளை விற்கக்கூடாது என்பதை அப்பா கண்டிப்புடன் சொல்வார். இன்று விதி வசத்தால் அவற்றை விற்க வேண்டிய சூழல். எந்த கெட்டப்பழக்கமும் பழகக்கூட வாய்ப்பில்லாத நான் இன்று புகைக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறேன். நாட்டில் நடக்கும் விஷயங்கள் தனிமனிதனை பாதிக்காது எனும் என் தர்க்கம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விட்டது. ஒருநாள் கடையை சீக்கிரமாக அடைத்துவிட்டு கடைத்தெருவில் நடந்த போதுதான் நிறைய உண்மைகள் புலப்பட்டது. மக்களுக்கு மளிகைச் சாமான்கள் மட்டுமல்ல எந்தப் பொருள் வாங்குவதும் அவர்களுக்கு வேலை அல்ல, பொழுதுபோக்கு என்று! தேவைக்கு வாங்குபவர்களை விட எப்பொழுதாவது தேவைப்படும் என்று வாங்குபவர்களே அதிகம். கடைத்தெருவின் பிளாட்பாரத்தில் செருப்புக் கடை வைத்திருக்கும் அதே செருப்பை கண்ணாடிக் கூண்டின் வெளிச்சத்தில் வைத்தால் கூட்டம் கூடுகிறது. மொபைல் போன் வந்து எப்படி எஸ்டிடி பூத்துகள் ஒழிந்ததோ, அப்படித்தான் சூப்பர் மார்கெட்டுகள் மளிகைக்கடைகளை ஒழிக்க கிளம்பியிருக்கிறதோ என்னவோ! 

கடையில் எவ்வளவு மாற்றங்கள் செய்தும் வரவு குறைந்து கொண்டே சென்றது. கண்ணாடிக்குடுவையில் நிறைத்து வைக்கப்பட்ட பண்டங்களை வாங்க இப்போதெல்லாம் சிறுவர்களே வருவதில்லை. அவையெல்லாம் எறும்புக்குதான் இரையாகிப் போகிறது. எதிர்க்கடை ராமசாமியுடன் எப்போது சண்டை போடுகிறேனோ அப்போதிருந்துதான் வியாபாரம் குறைந்துள்ளது. 

வாங்கி வைத்திருக்கும் பொருள்கள் அனைத்தும் பாழ்பட்டு போவதற்குள் ஒரு முடிவு எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை நடக்கும் வியாபாரம் உணர்த்திவந்தது. கடையை மூடிவிடும் கட்டத்துக்கு வந்துவிட்டேன்.

இன்று கடைசிநாள். கடையில் அமர்ந்திருக்கிறேன். வழக்கம்போல் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பில்டிங் ஓனர் அட்வான்ஸ் பணத்தை கொடுத்துவிட்டு எங்களுடனான நினைவைப் பகிர்ந்துகொண்டார். எஞ்சியிருப்பது இந்த அட்வான்சும், அந்த நினைவும்தான். நான் காலி செய்வதை அருகில் இருக்கும் யாரிடமும் கூறவேண்டாம்; நானே பிற்பாடு சொல்லிகொள்கிறேன் என்று ஒரு வேண்டுகோள் வைத்தேன். மிக அழமாக ஊடுருவிப் பார்த்துவிட்டு சரி என்றார். காலையில் இருந்து இப்போது வரை ஆன வியாபாரம் வெறும் பத்து. அதையும் ஒரு திருநங்கை வாங்கிவிட்டு வியாபாரம் பெருகட்டும் என்று ஆசீர்வாதம் செய்தார். நல்ல வியாபாரம் ஆகும் கடைத்தெருவில் வேடிக்கை பார்ப்பது ஒரு கொடுமையான நிலை. கடந்த இரண்டாண்டுகளாக அதுமட்டும்தான் பெரும்பாலும் வாய்த்திருக்கிறது.

நேரம் மதியத்தை தாண்டிவிட்டது. எப்போதும் சாப்பாட்டை வீட்டுக்கு கொண்டுவந்துவிடுவேன். இன்றும் அப்படியே. சாப்பிடத்தான் மனம் இல்லை. கடக்கும் ஒவ்வொரு நொடியும் கனமாக இருக்கிறது. ஷட்டரை மூடிவிட்டால் எனக்கும் கடைக்கும் இருக்கும் பந்தம் முடிவுக்கு வந்துவிடும். 

கடைக்கு வெளியே இருந்து நவநாகரீக இளைஞன் ஒருவர் அழைத்தார். எனக்குப் பிறகு இந்தக் கடைக்கு வந்து குடியேற இருக்கும் வாடகைதாரர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மிகுந்த மரியாதையுடன் பேசினார். கடை வேறு எங்கே மாற்றமாகிறது என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்பதை தெரிந்துகொண்டு வெகுவாக பேச்சை மாற்றினார். விடை பெற்றுச் செல்லும்போது அவரது கடைக்குத் தேவையான ஒருசில பொருட்களை கடைக்குள் வைத்துகொள்ள அனுமதி கேட்டார். நான் அனுமதி கொடுக்க என்ன இருக்கிறது? தாரளமாக வைத்துக்கொள்ளும்படி சொன்னேன். 

ஒருமாதம் எதையும் பற்றி யோசிக்காமல் செல்லாமல் இருந்த உறவுகளின் வீடுகளுக்கு செல்வதன்று ஒரு திட்டம். எல்லா விசேசங்களுக்கு மனைவியை அனுப்பிவிட்டே பழக்கப்படுத்திவிட்டேன். இனி நானே கலந்து கொண்டு எஞ்சிய தருணங்களை மீட்க வேண்டும். பதிலுக்கு உறவுகள் இனி என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்காமல் இருக்க வேண்டும்.

கடையில் இருக்கும் பொருட்களை நள்ளிரவில்தான் வீட்டுக்கு மாற்ற முடியும். அக்கம்பக்கம் இருக்கும் கடைகளுக்குத் தெரியக்கூடாது. வெளிறிய முகத்தோடு பதில் சொல்வது என்னால் இயலாத காரியம். சுமார் 35 வருடமாக இருந்த செய்த இந்தத் தொழில் அப்பாவால் உருவானது. இந்நேரம் அப்பா இருந்திருந்தால் இரண்டாவது முறையாக இறந்து போயிருப்பார். ஏற்கனவே இருந்த கடைக்குத்தான் நான் முதலாளியானேன். ஆனால், அப்பா தன் கைக்கொண்டு ஒவ்வென்றாக உருவாக்கியவர். இப்போது மட்டுமென்ன அப்பாவின் ஆத்மா எனை காறிதான் துப்பும். வெளியே மெல்லிய தூறல். அடித்த வெயிலுக்கு இந்த மழை ஆற்றுப்படுத்தவில்லை. மனதுக்குள் இருந்த புழுக்கம் இப்போது வெளியிலும்! 

அலைபேசியில் அழைத்து மனைவி சாப்பிடச் சொன்னாள். பெயருக்கு சாப்பிட்டுவிட்டு கல்லாவில் சற்று அமர்ந்தேன். வியர்வை இன்னும் கொஞ்சம் அதிகமானது. கல்லாவைத் திறந்து பார்த்தேன். எப்படியும் ஒரு லட்சம் முறை திறந்து மூடியிருப்பேன். கல்லாவுக்குள் இஷ்ட தெய்வங்களை நாலாபுறமும் ஒட்டிவைத்திருந்தேன். இதில் ஒன்றுக்கு கூட என் தொழிலில் விரும்பமில்லை போல. ‘அண்ணா’ என்று அழைத்த ஒரு குரலைக் கேட்டு, கல்லாவை மூடி வெளியே எட்டிப்பார்த்தேன். ஒரு அழுக்கடைந்த சிறுமி. கடைக்கு பின்னால் இருக்கும் சிறிய பகுதியை ஆக்கிரமித்து குடிசை போட்டுத் தங்கியிருக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவளாக இருக்கக்கூடும். பிஸ்கட் கேட்டாள். இரண்டு மாதமாக தனிமையில் இருந்த ஒரே பிஸ்கட் பாக்கெட்டுக்கு இன்று விடுதலை கிடைக்கப்போகிறது. பிஸ்கட்டை எடுத்து நீட்டினேன். ஆர்வமாக வாங்கி இடதுகையில் வைத்துக் கொண்டு வலது கையில் பணம் நீட்டினாள். பணம் வேண்டாம் என்றதற்கு விசித்திரமாகப் பார்த்தவள் பின்பு சிரித்துவிட்டு போனாள். அவளால் முடிந்த அதிகபட்ச நன்றி சொல்லல் இதுதான். 

இன்று இரவு வழக்கத்துக்கு முன்னதாகவே வந்துவிடும் போல அறிகுறிகள் தெரிந்தது. கடையை அடைக்க இதுவே சரியான தருணம். மிகத் தேவையான பொருட்களை மட்டும் ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டேன். வழக்கம் போல கண்ணாடி ஜாடிகளை ஒவ்வென்றாக கடைக்குள் எடுத்து வைத்தேன். எதிரே இருக்கும் ராமசாமி என்னைக் கவனிப்பது போன்று ஒரு பிரம்மை. அவன் இதை கவனிக்கக் கூடாது என்று என் விருப்பம். எப்படி கவனிக்காமல் இருப்பான்?

எல்லாம் முடிந்தது. ஷட்டடரை இழுத்தேன். நான் போவதில் அதற்கு கவலை ஒன்றும் இல்லை போல.. சரசரவென இலகுவாய் இறங்கியது. எப்போதும் கடை சாவியும், வண்டி சாவியும் ஒரே கொத்தில் இருக்கும். இனி அவசியம் இருக்காது. வீட்டுக்கு போனதும் சாவியை தனியாக பிரித்துவிட வேண்டும். 

ஏனோ ராமசாமியிடம் பேசவேண்டும் போல இருந்தது. இரண்டு வருடத்திற்கு மேலாக முறைத்துக் கொள்வது, முகத்தை திருப்பிக் கொள்வதை இருவரும் தீவிரசடங்கு போல பின்பற்றி வந்தோம். இன்று நான் பேசினால் அவன் பேசுவானா எனும் குழப்பம் இருந்தது. எனவே அவன் கடையில் ஆள் இல்லாத சமயம் பார்த்து போகலாம் எனக் காத்திருந்தேன். அவன் கடையில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த கடைசி முதியவரும் சென்றுவிட்டார். கடையை நோக்கி நடந்ததை அவன் கொஞ்சம் எதிர்பார்க்கவில்லை என அவன் முகம் சொல்லிற்று. 

‘போயிட்டு வாறேன் ராமு’ என்றேன். ‘தினமும் தானே போகிறாய்; இன்று மட்டும் என்ன சொல்லிவிட்டு போகிறார்’ என்பது போல பார்த்தான். விஷயத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு, ‘எதையும் மனசுல வச்சுக்காத ராமு’ என்றதில் அவன் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தது. தான் செய்ததுதான் தவறு என்றும், வயதுக்கு மரியாதையை கொடுத்துப் பேசியிருக்க வேண்டும் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தான். நாம் கொஞ்சம் இறங்கி வந்தால் எதிராளி குதித்துவிடவே தயாராக இருப்பான் போல. டீ குடிக்கச் சொன்னான். மறுக்காமல் குடித்தேன். ஓய்வாக இருந்தால் கடைக்கு வரும்படி கேட்டுக்கொண்டான். நிச்சயம் வருகிறேன் என்றேன். ஆனால், வர வாய்ப்பிருக்காது. எதிரே நான் வாழ்ந்த கடை வேறு முகத்தில் இருப்பதை நான் பார்க்க விருப்பமில்லை. இரவு கடையை காலி செய்ய உதவிக்கு வருவதாகச் சொன்னான். நன்றி கூறிவிட்டு குடித்த டீக்கு பணம் கொடுக்க சட்டை பையில் பணம் எடுத்தேன். கடுமையாக கோபித்துக்கொண்டான் ராமசாமி. விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினேன். கொஞ்சம் பாரம் இறங்கிய உணர்வு!

******

rabeek1986@gmail.com

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

3 Comments

  1. வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாய் உணர்ந்த வலிகளை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள் …
    தந்தையின் மரணத்தையும் வீழ்ச்சயையும் பார்க்கும் குழந்தைகள் துரதிஷ்டசாலிகள் …
    சத்தியமான வார்த்தை ..
    நானும் ஒரு மளிகைக்கடைக்காரரின் மகளாகவே பிறந்து மளிகைக்கடைக்காரரின் மனைவியாகவே என் 30 வயதுகளை கடந்தவள் என்பதால் அதன் அன்றாடங்களும் வாசனையும் வலிகளும் இன்னும் கூடுதலாய் சுளீரென உரைக்க வைக்கிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close